பைசாசத் திருமணமும் ராக்ஷசத் திருமணமும்: கொடியது எது? – ஒரு சிந்தனை

தமிழாக்கம் : கடலூர் வாசு

(கிருத்துவ நாடுகளில் முன்பு நடந்த, இஸ்லாமிய நாடுகளில் வரப்போகும் தசாப்தங்களில் நடக்கவிருக்கும் ஒரு கலாச்சார போர், ‘மறு ஆய்வுத் திருமணம்’ ஆகும். அவ்வப்போது, இவ்வேற்பாடு தலைப்புச் செய்தியாகவும் அதைத் தொடர்ந்து சில வாக்கு வாதங்கள்  ஆதரவாகவும் பெரும்பான்மையானவை எதிராகவும் வருகின்றன)

ட்விட்டரில், எனது பெண் நண்பர் ஒருவர்,ஒரு ஹிந்து பெண்ணை ஒரு முஸ்லீம் நபர் கற்பழித்ததின் விளைவாகப் பிறந்த குழந்தையைப் பற்றிய வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து எழுதியிருந்தார். அவ்வழக்கில், அந்த முஸ்லீம் நபர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் தீர்வை நீதிபதி ஏற்றுக் கொண்டார். குறிப்பிட்ட அவ்விவகாரத்தை இங்கு விவாதம் செய்யப் போவதில்லை. ஆனால், கற்பழித்தவரைப் பாதிக்கப்பட்ட பெண் மணம் செய்து கொள்ள சம்மதம் கொடுப்பதினால் கற்பழிப்பின் விளைவு குறையும் என்ற கருத்துதான் விவாதத்திற்குரியது. 

தந்தை வழிமுறை (PATRIARCHAL):

டிவிட்டர் நண்பர், இதை வகுப்புவாதமாக்க வேண்டாம். ஏனெனில், ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என ஆலோசனை கூறியுள்ளார். ஆனால், இதில் ஒரு வகுப்புவாத கோணம் உள்ளது.  வாழ்க்கை வரலாற்றாசிரியர், இபின் இஷாக் , “முகம்மது நபி நாடோடிக் கும்பலின் கலவரத்தில் பணயக் கைதிகளாக பிடிபட்ட முஸ்லீம் அல்லாதவர்களை அவர்கள்  கற்பழித்ததை வெளிப்படையாகவே மன்னித்தார்” என எழுதியுள்ளார். இஸ்லாமிய விதிப்படி சில சூழ்நிலைகளில் முஸ்லீம் அல்லாத பெண்மணிகள் கவர்ந்து செல்லப்படலாம்.( cfr:இஸ்லாம், பிடிபட்ட காஃபிர் பெண்மணிகளை வலது கையினாலிழுத்துச் செல்ல அனுமதிக்கிறது. Q 4:3, 4:24, 23: 1-6,33:50,70:30). பழைய சமுதாயங்களில்   மேல் மட்ட வகுப்பினர் இழிவாகக் கருதிய வகுப்பினரிடம் இத்தகை உறவை வைத்திருந்தனர் என்பது நிச்சயம். அதைத்தான் இஸ்லாமிய விதியும் குறிக்கிறது. முஸ்லீம் மதத்தினர் தாங்கள் மேல் மட்டத்தினர்; மற்ற மதத்தினர் அவர்களுக்கு அடிபணிய வேண்டும். எனும் ஒரு கோணம் இஸ்லாமில் இருந்தாலும் அது இங்கு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியதல்ல. 

அந்த நண்பர், கற்பழிப்பிற்கு பின் திருமணம் என்பதை நீதிபதி ஏற்றுக் கொண்டார் என்பதை “தந்தையாட்சி முறை”, எனக்   குற்றம் சாட்டுகிறார். அவர் இத்தீர்ப்பை நியாயமற்றது அல்லது, சட்டத்திற்கு புறம்பானது, அல்லது  நீதித்துறை தன கடமையை புறக்கணித்து விட்டது எனக் கூறியிருக்கலாம். மாறாக, இவையெல்லாவற்றையும் விட தற்போது மோசமானதாகக் கருதப்படும் தந்தையாட்சி முறை என்பதை தேர்ந்தெடுத்துள்ளார். 

சமீப காலமாக, இந்து காரணங்களுக்காக உழைப்பதாக உண்மையாகவே நினைப்பவர்கள்-இந்து வெறியாளர்கள் என மதச்சார்பற்ற சக ஊழியர்களால் சீட்டு ஒட்டப்பட்டவர்கள்-கூட இக்கருத்தை உபயோகிப்பதை  பார்க்கிறேன். சென்ற வார ஸ்வராஜ்யா இதழில், முஸ்லீம் மக்கள் தொகை அதி வேகப் பாய்ச்சலில் முன்னேறுவதிற்கு ( 26 விழுக்காடுள்ள முஸ்லீம் சமூகம் 42 விழுக்காடு புதிய பிறப்புகளை அடைந்துள்ளது) பதிலடியாக இந்துக்கள் தங்கள் மனைவியை அதிகக் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கட்டாயப் படுத்துவது தந்தையாட்சி முறையாகும் என்கிறது. அது இந்துத் தாய்மார்களை, முற்போக்காளர்கள் வசனமான,’இனப் பெருக்க இயந்திரங்க’ளாக  மாற்றிவிடும் என்கிறது. இது ஒரு பதத்தைப் ப் பற்றிய  பிரச்சினை மட்டுமல்ல. பெண்கள் கருவிகளாக மாற்றப்படுகின்றனர்; அவர்களுக்கென்று தனியாக ஒரு அமைப்போ, குறிப்பாக முஸ்லிம்களின் மக்கள் தொகை தாக்குதலை எதிர்க்குமளவிற்கான இனவாத அமைப்புகளோ  இல்லை என்ற முன்கணிப்பை ஏற்றுக் கொண்டதினால் கூறப்பட்ட வார்த்தைகள். இந்தப் பெண்கள் சுயமாக எதையும் விரும்புவதில்லை. குறிப்பாக, அவர்களது சமூகம் தொடர்ந்து உயிரோடிருப்பதைப் பற்றி  அவர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதை போலுள்ளது. 

இதற்கும் முன் வாரம், நான் டில்லியில் மஹாபாரத மாநாடு ஒன்றில் கலந்து கொண்டேன். பாரம்பரியவாதிகள் பலரிருந்த ஒரு சந்திப்பில் ஒரு இளம்பெண் திரௌபதியைப் பற்றிய கட்டுரையை வாசித்தார். தாராளவாதிகளின் ஆலையில் போதனையேற்றப்பட்டதினால் , அவரது கட்டுரையில், அமெரிக்க பெண்ணியக்கங்களில் சதா ஒலிக்கும் வார்த்தைகளான,  தந்தை வழிமுறை, சுயாதிகாரம் போன்றவை அதிகமாகவே இருந்தன. இதை விட அறிவுடையதும் இந்திய பெண்களுக்காக வாதிடுவதில் வேரூன்றிய முன்னோடி இயக்கம் மது கிஷ்வார் அவர்களின் “மனுஷி “ என்பதாகும். இவ்வியக்கம் முந்தைய காலத்தியதல்ல. தற்போதைய லோக குருவாகப் பணியாற்றும் வல்லமை படைத்தது. . துரதிருஷ்டவசமாக, கலவர நோக்கத்தையுடைய (மார்க்சீய கலாச்சாரத்தை உள்வாங்கியதால்) வகைக்குதான் இங்கு ஆதரவு அதிகமாகிக் கொண்டு வருகிறது.  எதிரிகளின் இத்தகைய கதைகளை விழுங்கி கொண்டிருக்கும் வரை ஹிந்து மறுமலர்ச்சி அதிக தூரத்தை கடக்காது. 

இதையெல்லாம் விட்டு விடுவோம். கற்பழிப்பிற்குப் பின் திருமணம் எனபதை எவ்வித சொற்களாலோ கருத்துக் கட்டமைப்பாலோ எடுத்துக் கூறினாலும் அது தவறானதுஎன்பதை எவருமே மறுக்க இயலாது. சமூகவியல் வாசகம் வேண்டுமா? ‘பிரச்சினை செய்யப்படவேண்டிய’ (Probelematized)  விஷயம். 

சர்வதேசப் பிரச்சினை (An International Problem)

திருமண சம்ஸ்காரத்தையுடைய பல கலாச்சாரங்கள்  கற்பழிப்பை தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகவே கருதின. அக்கற்பழிப்பு பெண்ணின் சுதந்திரத்தை இழிவு படுத்தியதாகவோ அல்லது ஒரு பெண்ணின் பாதுகாவலர் தனது சொத்தாக நினைத்து அத்து மீறியதாகவும் இருக்கலாம்.  அக்கலாச்சாரங்களுமே கற்பழிக்கப்பட்ட பெண் தானாகவே முன்வந்து கற்பழித்தவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டால் குற்றவாளிக்கு கருணை காண்பித்துள்ளது. இடைக்கால ஐரோப்பாவில் இவ்வாறே நடந்தது. இத்தகைய வழக்குகளில் பல குற்றவாளிகள் இதன் மூலம் தண்டனையிலிருந்து தப்பினர். நான் இதை எழுதும்போது, அவாஸ் என்னும் தாராள சித்தாந்த மன்றம், அரபு நாட்டில் கற்பழித்த நபருக்கு  வலுக்கட்டாயமாக திருமணம் செய்விக்கப்பட்ட லூபினா  என்ற பெண்ணுடன் கைகோர்த்து நிற்க வேண்டும் என்ற மின்னஞ்சலை அனுப்பியுள்ளது.ஜோர்டான்.எகிப்து, டுனீசியா மூன்றும் இவ்வழக்கத்தை சட்டவிரோதமாக்கியுள்ளது என்பதை இப்போதுதான் அறிந்தேன். மற்ற முஸ்லீம் தேசங்களில் இவ்வழக்கம்  தொடர்கிறது. இந்தியாவில், நேருவின் காலத்திலிருந்தே தனிநபர் சட்டம் முஸ்லிம்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. 

ஐரோப்பாவின் பின்தங்கிய பாகங்களில் சமீபகாலம் வரை இப்பழக்கம் இருந்தது. சிசிலி நகரின் கிராமப்புறமான அல்காமோ என்ற  ஊரில், ஃபிராங்கோ வியோலா எனும்  விவசாயின் மகள்,. மாஃபியா கூட்டத் தலைவரின் மருமகனான ஃபிலிப்போ மெலோடியா என்ற நபருக்கு மணமுடிக்க நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. Iஇதன் பின்,சில நாட்களிலேயே  திருட்டிற்காகவும், மாஃபியா அங்கத்தினராகவும் இருந்ததாலும்  கைது செய்யப்பட்டார். இதனால் பெண்ணின் தந்தை திருமண நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தார். குடும்ப நபர்களை பயமுறுத்தியும் அவர் மசியவில்லை. ஃபிலிப்போ, மணப்பெண்ணிற்கு 17 வயது நிறைவேறியபோது அவரை கவர்ந்து சென்று கற்பழித்தார். ஃபிலிப்போவின் குடும்பம்  பரிகார விவாஹம் மூலமாக பெண்ணையும் குடும்ப கௌரவத்தையும் சரி செய்யும் தீர்வுக்காக பெண்ணின் தந்தையை ஒரு சந்திப்பிற்கு அழைத்தது. 1965ல், அமலில் இருந்த இத்தாலியின் தண்டனை குறியீடு 544 பிரகாரம், கற்பழிப்பு திருமணத்திற்கு முன்னர் நடந்த பாலியலாகத்தான் பார்க்கப்பட்டது. தவறானது என்றாலும்  தண்டனைக்குரியதல்ல. கற்பழித்ததாக குற்றவாளியாக ஒருவர் முன்னரே நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால்  கற்பழித்த பெண்ணை அவர் மணக்க சம்மதம் கொடுத்தால் குற்றம் ரத்து செய்யப்படும்.  சந்திக்கப் போகும் இடத்தை பெண்ணின் தந்தை முன்கூட்டியே காவல் துறைக்கு கொடுத்திருந்ததால் அவர் பெண் மீட்கப்பட்டார். கடத்தியவர்களும் கைது செய்யப்பட்டனர். ஃபிலிப்போக்கு எதிரான வழக்கில் அவர் தரப்பு வழக்கறிஞர்கள்  பெண் கடத்தப்படவில்லை. அவராகவே தப்பி ஓடினார் என வாதிட்டனர். வியோலாவும் தன தகப்பனாரிடம் கடத்தப்பட்டதால் குடும்ப மானம் பறி போய்விட்டது.  அதை மீட்பதற்கான ஒரே  வழி கடத்தியவரை திருமணம் செய்து கொள்வதுதான் என எடுத்துரைத்தார். நீதிமன்றத்தில் இது எடுபடவில்லை. ஃபிலிப்போ 10 வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். 

இவ்விவசாரணையும் தீர்ப்பும் பெண்ணுரிமைக்காண சட்ட அங்கீகாரத்திற்கு மேலும் ஊக்கமளித்தது. 1981ல், குறியீடு 544 ரத்தானது. 1996ல் கற்பழிப்பு தனிநபரின் நேர்மையை  பலவந்தமாக பறிப்பதாகும் என வரையறுக்கப்பட்டது. எனது சொந்த நாடான பெல்ஜியத்திலேயே இந்த மாற்றம் 1989ல் தான் நடைமுறைக்கு வந்தது. நீண்ட காலமில்லை. ஜோர்டான் 2017ல் தான் பரிகாரத் திருமணத்தை தடை செய்தது. டுனீசியாவும் அதே வருடத்த்தில்தான் பெண்களுக்கு எதிரான  அனைத்து அத்துமீறல்களையும்  சட்ட விரோதமாக்கியது என்பதனாலேயே இவை பின்தங்கிய நாடுகளுக்கான ஆதாரம் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால் ஐரோப்பாவிலுமேயே இது ஒரு  சமீபத்திய மாற்றம். என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதை சொல்வது இந்தியாவிற்கு சப்பைக்கட்டுவதற்காக அல்ல. பின்தங்கிய நாடோ இல்லையோ, இந்தியா மற்ற நாடுகளை போலவே இம்மாற்றங்களை கொண்டு வந்தே ஆக வேண்டும்.  

உலக மானுடக் கலாச்சாரம் (GLOBAL HUMAN CULTURE)

மதபோதகர்களும் மதச்சார்பற்றவர்களும் ஹிந்து மதத்தை சாடும் இவ்விஷயம், ஒட்டுமொத்த மானுட வர்க்கத்தை சேர்ந்ததாகும்.. ஆனால்  ஹிந்துயிசத்தில் மட்டுமே இது  தொடர்வதாக ஒரு நினைப்பு இருக்கிறது. எனவே, ஹிந்து மதத்தில்  குற்றம் காண  வேண்டி, உடன்கட்டையேறுதலை வசை பாடுகின்றனர். இப்பண்டைய கால வழக்கம் ஹிந்துக்களிடையே ஒரு சிறுபான்மையினரிடம் மட்டுமே  இருந்தது. எப்போதோ நின்று போன ஒன்று. இது க்ஷத்திய குலத்தில் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே புழங்கியது. ரிக் வேதம் இதற்கு எதிராக அறிவுரை செய்கிறது. தீக்குளிக்க முயலும்   ஒரு விதவைப் பெண்ணிற்கு அறிவுரை கூறி மனமாற்றம் செய்கிறது. மற்றொரு விதமாக பார்த்தால், இப்பழக்கம்  சீன,மங்கோலிய, எகிப்திய, கெல்டிக், பிரபு வர்க்கங்களிடையே நடைமுறையிலிருந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஆண்வர்க்கம் பெண்களை கீழ்த்தனமாக நடத்தியதுதான் இதன் காரணமென பெண்ணுரிமையாளர்கள் கூறுவதும் தவறே; ஏனெனில், கிரேக்கநாட்டில், பெண்கள் ஆண்களை விட ஒரு படி குறைந்தவர்களாகக் கருதப்பட்டதால் உடன்கட்டையேறுவது அச்சமுதாயத்தில் அவர்களுக்கு உயர்நிலையை தரவில்லை. ஆனால்,  உயர் ஸ்தானத்தில் இருந்த கெல்டிக் சமூகப் பெண்களிடையே உடன்கட்டையேறுதல் கௌரவமானதாகவும்  அதிக அளவிலும்  காணப்பட்டது. 

 சமுதாய வேறுபாடுகளின் அடிக்கல்லாகவும்  அதன் பின்னணியில் உருவாகிய சாதியமைப்பிற்கு காரணமாக தவறாக எண்ணப்படும்  வேதிய புருஷ சூக்தம் மதச்சார்பின்மையினரால் தாக்கப்படுகிறது. இது போன்ற கட்டுக்கதை  சீனா, ரோம், ஸ்காண்டினேவிய நாடுகளில் இல்லாததுபோல் இவர்கள் பேசுகின்றனர். அவ்வளவு தூரம் போவானேன்? புதிய ஏற்பாட்டிலேயே(New Testament) இவ்வேறுபாட்டை காணலாம். புனித பால், சமூக வகுப்புகளை உடலின் பல்வேறு பாகங்களாகவும், ஏறுமாறானதாகவும்  வேறுவழியின்றி ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்திற்குட்பட்டதாகவும்  விவரித்துள்ளார்.  இதுதான் கத்தோலிக்க மதத்தின் அடிப்படை போதனையாகும். இதுவே, கூட்டுத்தன்மை(Corporatism) அல்லது உடலையொத்த உலகநோக்கு ( Body-like Worldview) எனப்படுகிறது. 19-20ம் நூற்றாண்டு கத்தோலிக்க மதத்தைத் தவிர, மார்ட்டின் லூதர் ஜெர்மானிய விவாசியிகளின் போராட்டத்தை எதிர்த்ததும், ரஷ்ய சமஉறுதி(Orthodox)மதம் கொத்தடிமைத்தனத்தை ஆதரித்ததும்,  தென் பாப்டிஸ மதத்தின்  அமெரிக்க அடிமைக்கொள்கை ஆதரவிற்கும் ஆப்பிரிக்க கால்வினிய மதத்தின் அபார்த்திட் ஆதரவிற்கும் அடிப்படை காரணமாகும். 

கிருத்துவ மதபோதகர்கள் ஹிந்துக்களை மூக்கணாங்கயிறிட்டு இழுத்துச் சென்று இந்து சமுதாயத்திலுள்ள சமூக அநீதிகளை சுட்டிக்காட்டியபோது வசதியாக கிருத்துவ சமுதாயத்தின்  அலமாரியிலுள்ள எலும்புக்கூடுகளை காணவிடாமல் திசை திருப்பி விட்டனர். எனவே, மதச்சார்பின்மையினர்-மதபோதகர்கள் உள்ளெண்ணத்தை  உடைத்தெறிய வேண்டுமென்றால், ஹிந்துக்கள் தங்களுடைய பாரம்பரியத்தை  மட்டுமே அறிந்த கிணற்றுத் தவளைகளாக இருக்கக்  கூடாது.அயல் நாட்டு பாரம்பரியங்களை பற்றிய அறிவு, சமூக அநீதிகள் உண்மையாக இருந்தாலும் கூட இந்து சமூகத்திற்கு மட்டுமே உரியதல்ல என்பதை அயலாரிடம் பிட்டு வைக்க இயலும். 

அதே சமயம், ஹிந்துக்களின் சட்ட பாரம்பரியமாகிய தரும சாஸ்திரங்கள், கற்பழிப்பிற்கு பின் கல்யாணம் என்பதை அறிந்திருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. தர்மசாஸ்திரங்கள் என்பது ஒரு தனித் துறை. சரியான வல்லுநர்கள் இதைப் பற்றி விஸ்தாரமாக பேச  முடியும். எனினும், நமது கட்டுரைக்காக எடுத்துக் கொண்ட விஷயத்தைப் பற்றிய பொதுவான உண்மைகளை இதன் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.