- ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை
- ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்
- ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’
- ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!
- ‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’
- இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்
- அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!
- தனிமையின் பிடியில் புரூரவஸ்
- புரூரவஸ் செய்த பாவம் – அழகு, காதல்
- மாறாத பேரானந்தம்
தமிழாக்கம் : மீனாக்ஷி பாலகணேஷ்

அனைவருக்கும் வாழ்வில் ஒரு கனவு / குறிக்கோள் இருக்கிறது. அதை எதிர்நோக்கியே நமது செயல்கள் அமைகின்றன. எண்ணங்கள் குவிகின்றன. நாம் ஆத்மாவின் விசையால் அதை நோக்கிச் செலுத்தப்படுகிறோம்.
புரூரவஸும் அதுபோன்றே ஊர்வசியைத் திரும்ப அடைவதையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு காடு, மலை, நாடு, நகரம், நதி எனச் சுற்றியலைகிறான். அவளுடன் கழித்த இன்ப வாழ்வின் எண்ணங்கள் திரும்பத் திரும்ப வந்து அவனை அலைக்கழிக்கின்றன. ஒரு உயர்ந்த பதவியை அடைவதும், கல்வியிலோ, கலையிலோ சாதனைகள் செய்வதும், தான் விரும்பிய பெண்ணுடன் இன்பமாக வாழ்வதும் சமமாகவே நோக்கப்பட வேண்டும். இதைப் பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
இங்கு நமக்கு பாரதியாரின்
‘பார்த்த இடத்திலெல்லாம் நின்னைப்போல்
பாவை தெரியுதடீ!’ எனும் பாடல்வரிகள் நினைவிற்கு வருகின்றன. கிடைத்த இன்பவாழ்வு கைநழுவிப் போயிற்றெனில், ஒரு மனிதனுக்கு அனைத்துமே இழப்புதான். இந்த நிலையில் நாம் பலரைக் கண்டிருக்கிறோம், சீதையைப் பிரிந்த இராமன், தமயந்தியைப் பிரிந்த நளன், துஷ்யந்தன்- சகுந்தலை, மற்றும் இதிகாசங்களிலும், புராணங்களிலும் பலர்.
பிரிவால் வருந்தி அலையும் புரூரவஸைச் சிறிதுநேரம் அப்படியே விட்டுவிட்டு ரிக்வேதத்தில் கூறப்படும் அவர்களது உரையாடலைக் காணலாமா?
ரிக் வேதம்: பாடல் 10-095
1. ஓ அங்கே, என் துணையானவளே! சிறிது பொறு, கடின இதயம் கொண்ட பெண்மணியே, சிறிது நேரம் நாம் நியாயத்தைப் பற்றிப் பேசலாம். இது போன்ற நமது எண்ணங்கள், கடந்து சென்ற தினங்களில் பேசப்படாதவை நமக்கு நிம்மதியைத் தரவில்லை.
2. நீர் இவ்வாறு கூறுவதற்காக நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? நான் உம்மிடமிருந்து முதல் காலையைப்போல் சென்றுவிட்டேன். புரூரவஸ், நீர் உமது இருப்பிடத்திற்குத் திரும்பச் செல்லுவீராக: நான், காற்றைப்போல, பிடித்துவைத்துக் கொள்வதற்கு அரிதானவள்.
3. அம்பறாத்தூணியினின்றும் புகழுக்காக செலுத்தப்பட்ட அம்பைப்போல; அல்லது மாடுகளை வெல்ல விரையும் ஒரு புரவி நூற்றுக்கணக்கானவற்றை வெல்வது போல. கோழைகளின் தந்திரத்தால் மின்னல் ஒளி வெட்டியது. அந்த சங்கீதக்காரர்கள் கஷ்டத்தில் அகப்பட்ட ஆடுகளைப்போல் கரைந்தனர்.
4. தன் கணவனின் தந்தைக்கு உயிரையும் செல்வங்களையும் கொடுத்து, பக்கத்திலிருந்த இருப்பிடத்திலிருந்து, அவளுடைய காதலன் விரும்பியபோதெல்லாம், அவள் தனக்குத் தேவையான சுகங்களைத்தரும் வீட்டினை அடைந்தாள், பகலும் இரவும் தன் தலைவனின் அணப்பினை ஏற்றுக்கொண்டாள்.
5. உனது துணையை ஒரு நாளில் நீ மும்முறை அணைந்தாய். இருப்பினும், உனது ஆவலான தழுவல்களை அவள் கல்போல ஏற்றுக்கொண்டாள். உனது விருப்பங்களுக்குப் புரூரவஸ், நான் உடன்பட்டேன். அவ்வாறு நீ எனது உடலுக்கு சொந்தம் கொண்டாடினாய்.
6. தோழிகள் சுஜிர்ணி, ஸ்ரேணி, சும்னே-அபி, சரண்யு, கிராந்தினி, ஹ்ரதெசாக்சுஸ்,- இவர்கள் ஒரே உறவினர் தொகுதியாக விரைந்து வந்தனர், ஒளி மிகுந்தவர்கள், கறவை மா டுகள்போலப் போட்டியிட்டுக் கரைந்தனர்.
7. அவன் பிறந்ததும் அன்னையர் சேர்ந்து அமர்ந்தனர், நதிகள் தமது தாராளமான கருணையால் அவனைப் போஷித்தன; பின்பு புரூரவஸ், கடவுள்கள் உன்னை, தாஸ்யுக்களை அழி ப்பதற்காக வீர யுத்தங்களுக்குப் பயிற்றுவித்தனர்.
8. நான், ஒரு அழியக்கூடியவன், தங்கள் உடைகளை விலக்கிய இந்த சுவர்க்க தேவதைகளை எனது தழுவுதல்களுக்காக நயந்து வேண்டியபோது, தேர் அவைகளைத் தொட்டபோது ஓடும் தேர்க்குதிரைகள்போல, பயந்துபோன பாம்பினைப்போல் அவர்கள் என்னிடமிருந்து அச்சத்தால் விலகி ஓடினர்.
9. இந்த அழிவற்றவர்களைக் காதலிக்கும்போது, அழியக்கூடியவன் அவர்களுடன் அவர்கள் அனுமதிக்கும்வரை உரையாடலாம். அன்னப்பறவைகளைப்போல் அவர்கள் தங்கள் உடலழகைக் காண்பிப்பார்கள், குதிரைகளைப்போல் அவர்கள் கடித்தும் மென்றும் வீளையாடுவார்கள்.
10. தரையில் விழும் ஒளிநிறைந்த மின்னலைப்போன்றவள் எனக்கு நீரினின்றும் அருமையான பரிசுகளைக் கொண்டுவந்தாள். இப்போது வெள்ளப்பெருக்கிலிருந்து ஒரு பலவானான இளமையான மாவீரன் பிறக்கட்டும் ஊர்வசி தனது ஆயுளை என்றென்றைக்கும் நீட்டிக்கட்டும்.
11. உனது பிறப்பு என்னை உலகாயதமான பால்தரும் உறவுகளுடன் ஒன்றாகச் சேர்ந்து அருந்த வைத்தது; இந்த ஆற்றல், புரூரவஸ், நீ எனக்கு அருள்செய்தது.
எனக்குத் தெரியும், உன்னை அன்றே எச்சரித்தேன். நீ அதனைக் கேட்கவில்லை. என்ன சொல்கிறாய், உன்னிடம் ஒன்றுமில்லாதபோது?
12. எப்போது அந்த மகன் பிறந்து தன் தந்தையைத் தேடி வருவான்? துயரப்படுபவன் போல அவன் முதலில் அவனை அறியும்போது அழுவானா?
பொருத்தமான மனைவியையும் கணவனையும் எவர் பிரிப்பர், நெருப்பு உமது துணையின் பெற்றோரிடம் ஒளிரும்போது?
13. அவன் கண்ணீர் வடிக்கும்போது நான் அவனை ஆறுதல் படுத்துவேன்: அவன் தன்னை அக்கறையாகக் காக்கும் கருணைக்காக அழவோ கண்ணீர் சிந்தவோ மாட்டான். எது உம்முடையதோ, நம்மிருவரிடையேயும் உள்ள அதனை நான் உமக்கு அனுப்புவேன். முட்டாளே, நீ வீடு திரும்பச் செல்; நீ என்னை வெற்றி பெற்றடையவில்லை.
14. உமது காதலர் இன்று நிரந்தரமாக விரைந்து சென்று விடுவார், திரும்பாமல், தேடியபடி, தொலைதூரத்திற்கு. அவனுடைய படுக்கை, அழிவின் மார்பில் கிடக்கட்டும், பின் அவனை ஆங்காரமான உயிர் வேட்டையாடுகின்ற ஓநாய்கள் கடித்துக் குதறட்டும்.
15. வேண்டாம், இறக்காதே, புரூரவஸ், மறைந்தும் போகாதே: கெட்ட ஓநாய்கள் உன்னைச் சாப்பிட வேண்டாம். பெண்களுடன் உண்மையான நெடுநாள் நட்பு நிலைக்காது. கழுதைப்புலிகளின் இதயமே பெண்களின் இதயமாகும்.
16. மனிதர்களில் ஆண்களிடையே நான் மாற்று வடிவங்களில் சென்று குறுகிய காலம் தங்கியபோது நான்கு இலையுதிர் காலங்கள் இரவுகளை அவர்களிடையே கழித்தேன்.
ஒவ்வொரு நாளும் ஒரு துளி வெண்ணெயைச் சுவைத்தேன். இப்போதும்கூட நான் அதில் திருப்தி அடைகிறேன்.
17. நான், அவளுடைய சிறந்த காதலன், என்னைச் சந்திக்கும்படி யார் காற்றை நிரப்பி, பிரதேசங்களை அளக்கிறாளோ அந்த ஊர்வசியை அழைக்கிறேன். கடமையுணர்ச்சியால் கொ ண்டுவரப்பட்ட பரிசு உம்மை நோக்கி வரட்டும். திரும்ப நீவிர் எம்மிடம் வருவீராக; எனது இதயம் பரிதவிக்கின்றது.
18. இவ்வாறு கடவுள்கள் உம்மிடம் பேசுகின்றனர், ஓ இளையின் புதல்வனே: இறப்பு உம்மை உண்மையாகத் தனக்கு உடையவனாகக் கொண்டுள்ளது, உனது புதல்வர்கள் நைவேத்தியம் கொடுத்துக் கடவுள்களுக்குத் தொண்டு செய்வார்கள், நீ சுவர்க்கத்தில் மகிழ்ந்திருப்பாய்.
இது ஆங்கில மொழியாக்கத்திலிருந்து என்னால் தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதிலிருந்து தெரிந்துகொள்வது என்னவென்றால், புரூரவஸ் என்னும் மாவீரன் கடவுள்களுக்கு உதவுவதற்காகப் படைக்கப்பட்டவன், ஊர்வசியுடனான அவனுடைய காதல் வாழ்வு, கால வரம்பிற்குட்பட்டது. அவளைத் திரும்ப அடைய அவன் இறந்து சுவர்க்கவாசியாகவேண்டும், ஆகிறான்; பெண்களின் காதல் நிலையானதல்ல (என அக்காலத்தோர் கருதினர்), இன்ன பிற என்பதே.
ஸ்ரீ அரவிந்தர் தமது இந்த நீண்ட கவிதையை ரிக்வேதப்பாடலான இதைத் தழுவியே படைத்துள்ளார் என்பது ஆச்சரியம் விளைவிக்கவில்லை. ஏனெனில் அவர் சாத்திரங்களையும், வேதங்களையும், உபநிஷத்துக்களையும் கரை கண்டவர் எனலாம். நண்பர் திரு இராய. செல்லப்பா முதலில் எனது மொழியாக்கத்தைப் பற்றிய தமது கருத்தைப் பதிவு செய்தபோது, “ஸ்ரீ அரவிந்தர் தன் ஆன்மீகத் தேடலின் ஆரம்ப நாட்களில் ‘மனிதன் மாமனிதன் ஆக உயர முடியும்,’ என்ற கோட்பாட்டை எப்படியாவது தன் கவிதைகளில் கொண்டுவந்து விட வேண்டும் என்ற உந்துதலோடு எழுதிய பல கவிதைகளில் ஊர்வசியும் ஒன்று,” என்று கூறுகிறார்.
ஒருமித்த சிந்தையோடு, ஒரே குறிக்கோளை நோக்கி நகரும் வாழ்க்கை புரூரவஸினுடையது. இத்தகையதொரு சிந்தனையே மனிதனை மாமனிதனாக உயர்த்துமோ?
கவிதையைக் கண்டபின் இன்னும் சிறிது விவாதிப்போம்.
இருளினூடேயும் மிகுதியான மங்கிய இரவினூடும் அவன் சென்றான்
பிசாசு வடிவங்களைக் கொண்ட நெருங்கிவரும் மரங்களினூடும் 1110
பகல்பொழுது முழுதும் பச்சை இலைகளூடும், அவற்றை அடையும்வரை
மனிதர்கள் நிறைந்த கானகங்களூடும் இனிய ஓசையெழுப்பும் நீரூற்றுகளூடும்
அற்புதமான பளிச்சிடும் புல்தரைகளிலும் எங்கெல்லாம் அவன் முந்தைய
காலங்களில்
ஊர்வசியுடன் காதலில் வாழ்ந்தானோ அங்கெல்லாம்.
இவை இல்லத்து இன்முகங்கள் காத்திருப்பது போல் நின்றன.
காற்றால் அலைக்கழிக்கப்பட்ட ஒவ்வொரு மரத்தையும் அவன்
அறிந்திருந்தான், ஒவ்வொரு வயலையும் கூட;
ஓசையிடும் ஒவ்வொரு நதியையும் அதற்கே உரிய ஓசையாலும்,
அதன் தனிப்பட்ட
நீரோட்டத்தினாலும் வேறுபடுத்தி அறிய அவனால் இயலும்.
இந்த சந்தோஷமான நிழல்களில் அவர்கள் கிடந்தனர்
கரங்களில் அணைந்து முணுமுணுத்தபடி, உச்சிப்பொழுதின்
புனிதமான ஓசைகள் 1120
இன்னும் ஒலிக்கும் இந்த பாதி ஒளிரும் சோலைகளில்
இவை அவளுடைய பளிச்சிடும் அழகு ஜ்வலிக்கும் நதிகள்.
அங்கு வெளிகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்தவன்
அவளால் நிறைந்திருந்த ஒவ்வொரு பரிச்சயமான இடத்திலும் பேசினான்,
கரைகளிலும் நினைவின் நிற்கும் மரங்களருகிலும் நின்று தாமதித்தும்.
“ஓ புனிதமான அத்திமரமே, உனதடியில் அவள் நின்று தாமதித்து
அவளுடைய கூந்தற்கற்றைகளிடையே யோசித்தவாறும், அவள் கண்கள்
இனிமையானதாக ஆழ்ந்த சிந்தனையில் இருந்தன. ஆ,
ஓ இனிமை நிறைந்த நிழலே
நீ அவளுடைய பாதங்களின் ஒளியை உணர்ந்திருப்பாய்,
ஓ, குளிர்ந்த அடர்ந்த பசிய தங்குமிடமே, சரியான இடம்! 1130
அந்தோ! பூமிக்குக் கேடு விளைவிக்கும் கிளைகளனைத்தும்
மலர்களுடன். இங்கவள் கிடந்தாள், கரங்களை உயர்த்தியவாறு
என்னைப்பார்த்துப் புன்னகைத்தபடி, மலர்களனைத்தும் சொரிந்தன
அவள் இதழ்கள், கண்கள், திறந்த மார்பகங்களின் மீது.
இங்கொரு ரகசிய துவாரத்தில் அவள் காத்து நின்றாள்
குறுகலான அந்தி வெளிச்சத்தில்; அவளைச் சுற்றி அனைத்தும்
பசுமையாக, மாயமானதொரு ரகசியமாக, பனியால் நனைந்து
மரகதப்பசிய உலகிற்கு ஒரு பாதி அழைப்புபோல.
ஓ நதியே, உன்னிடமிருந்து அவள் காட்டின் வெட்டவெளிக்கு நகர்ந்தாள்
சுவாசித்தபடி, ஈரமாக, ஆடையின்றி புதியதாக மழையில்
நனைந்தவொரு 1140
மலர்போல. நீ, பெரும் புனிதக் காட்டுவழியே, கண்டாய்
அவளின் குழந்தை மீது தாய்மை சிந்தும் முகத்தை.”
பின்பு நிறுத்தி அவன் காத்திருப்பான், உற்றுக் கேட்பான்,
அவளை எதிர்பார்த்து. ஆனால் அனைத்தும் அமைதியே; ஏதேனும்
ஒரு பறவை அதன் பளிச்சிடும் சிறகுகளால் பாய்ந்து பறக்கும்,
அல்லது ஒரு சாம்பல்நிறப் பாம்பு ஒளிநிறைந்த இலைகளூடு ஊர்ந்துசெல்லும்.
இவ்வாறு திரிந்தபடி, ஒவ்வொரு அக்கறையுள்ள இடத்திலும்
பழைய மறந்துபோன காட்சிகள் எழும்போது புதுப்பித்தபடி,
சுடரின் பின் சுடரென, அவனது எண்ணத்தில், நட்சத்திரங்கள்
இரவில் திரும்புவதுபோல்; இவ்வாறு தன் இதயத்திலிருந்து 1150
எங்கு அவை மூடிக்கிடந்தனவோ, பழைய இனிய நிகழ்வுகள்
அவன் கண்முன் வாழ்ந்தன; இவ்வாறு திரும்ப அழைத்து
நிச்சயமற்ற மனோநிலையையும், குறுகிய பொழுதுகளில் அவள் முகத்தையும்,
விநோதமான அழகாகக் காணும் தற்காலிகமான தோற்றங்களையும்,
சந்தோஷங்களையும், உள்ளத்தை விடுதலைசெய்யும் சிறு
மகிழ்ச்சித் தருணங்களின்
கண்ணீர்ப் படலங்களையும், அவன், உண்மையாக
உருவாக்கிக்கொண்ட கனவுகள்
அவளுடைய உடலைப்பற்றி மிகவும் பாதிக்கப்பட்டதனால்.
எப்போதும் ஒரு குறைபாடுள்ள எண்ணம் அவனுக்கும் அந்த
ஆவல்மிஞ்சிய வெற்றிக்கும் இடையே புகுந்தது.
ஆகவே அவன் கடைசியில் திருப்தியின்றி முணுமுணுத்தான்: 1160
“அவள் இங்கு இல்லை; ஒவ்வொரு மாயமான வெளியும்
சூரிய ஒளியால் பிரகாசமான புல்தரைகளும் அவளைப் பற்றியே உயிர்த்து
அவள் இருப்பினால் சிலிர்ப்பது போலிருப்பினும், நான் அவளுடைய
கைகால்களையோ, முகத்தையோ காணவில்லை; இருப்பினும் கனவுகண்டு
அதாவது நிச்சயமாக நான் தடுக்க வேண்டும் அவளுடைய
நிலையற்ற கால்களையோ
அல்லது அவளை ஆடையினைப் பிடித்துப் பற்றிக் கொள்ள வேண்டும்.
ஓ அவள் ஒருகாலத்தில் இவற்றின் ஒளிமிகும் ஆத்மாவாக இருந்தாள்,
அவள் உடலில் வேனிலும் வசந்தமும் வாழ்ந்தன
விதையும் மலர்தலும், பழுத்தலும் உதிர்தலும்,
வனத்தினுடையதும் பள்ளத்தாக்கினுடையதும் ஆகிய அழகை
மறைத்தும் 1170
சூரிய ஒளி படும் பிரதேசங்களில் வாரியிறைத்தும்
எல்லா மலர்களையும் சிரிப்பையும். எல்லா சந்தோஷமான தருணங்கள்
மற்றும் பூமியின் அழகான அனைத்துக் காமமிகுந்த வழிமுறைகள்
அனைத்தும் அவளாயிருந்தாள்; ஆகவே அவை தற்போது அவளால்
விட்டுச் செல்லப்பட்ட அவளது ஆடைகளாகக் காணப்படுகின்றன.
ஆகவே ஓ கடலை நோக்கிச் செல்லும் நதிகளே,
ஓ காடுகளே, நீங்கள் எனது நம்பிக்கையை வீணாக்கி விட்டதனால்,
நான் உங்களிடமிருந்து விலகி, கொடூரமான ஜ்வலிக்கும்
கணவாய்களிடை சென்று
அவளைக் கொடுமையான மலைகளின்மீது தேடப்போகிறேன்.”
இவ்விதம் வடதிசையில் வீசிய நம்பிக்கைப்புயல் சிதைந்து
ஒரு வீரன் தானே முடியிழந்து, புரூரவஸ், 1180
எரியும் சமவெளிகளிலும் சைவாலிக் மலைகளின் வாயில்களூடும்
விரைந்து சென்றான் குறைவான உயரங்களுக்கு, எங்கும் அதிகம்
தங்காமல்,
ஆக்ரோஷமான எண்ணங்கள் அலைக்கழித்தவண்ணம், இருப்பினும்
மிகுதியான ஆசையின் படலங்கள் பூமியைத் தொடுதலால்
எழுச்சியடைந்தபடி;
ஆனால் கடினமான பள்ளத்தாக்குகளில் அமிழ்ந்தும்
குப்புறக்கிடக்கும் கணவாய்களிலும்
மங்கலான சுவர்களிடையே அதிர விழும் நதிகளிலும்,
அளப்பரிய விருப்பத்தால் உந்தப்பட்டு, கடைசியில்
கொடூரமான அமைதியில் ஆழ்ந்த சிகரங்களுக்கு வந்து
அவனது காதலைப் போன்றதும் அகன்றதுமான, தனிமையான
பிரதேசத்தை அடைந்தான். 1190
பின் நம்பிக்கையுடனான பெருந்தன்மையான ஒரு வேண்டுகோளுடன்
கேட்டுக்கொண்டிருக்கும் உச்சிகளை நோக்கிக் கரங்களை
விரித்து நீட்டினான்:
“ஓ தனித்திருக்கும் வலிமையான இமயமே, சிறந்த உனது
சிகரங்கள் மட்டுமே சுவர்க்கத்துடன் கொடூரமான நிசப்தத்தில்
அனைத்துலகின் ஆத்மாவையும் அதில் படைப்பை ஆழ்ந்து
சிந்திப்பதனை உணரலாம்! நீவிர், ஓ மலையே,
எனது பெரிய மணவறையாக இருந்தீர். உம் மீது நாங்கள் கிடந்தோம்
உச்சிகள் நிலவை நோக்க அல்லது கிட்டத்திலுள்ள விண்மீன்கள்
எங்களை ஏதோவொரு காட்டுத்தனமான பள்ளத்தாக்கினின்றும் நோக்க,
உமது நிசப்தம் எங்கள் மீது ஒரு மூடியாகக் கவிந்து 1200
அல்லது ஒரு தூரத்தில் நழுவும் பனிப்பாறை திருமணப் பாடலாக.
அந்தோ, அவள் உம்முடைய நிசப்தத்தில் சென்று நுழைந்து விட்டாள்!
நான் உம்மிடம் வந்துள்ளேன், ஓ மலையே, உம்மைப்போல் தனிமைப்பட்ட
இதயத்துடனும், உம்மைப்போல் பனிபடர்ந்தும், உமது பவித்திரமான
உச்சிகளின் உறவுகொண்ட கரங்களை உம்மை நோக்கி நீட்டியவாறும்.
திரும்பத் தந்துவிடும், ஓ மலையே, அவளத் திரும்பத் தாரும்.” அவன் ஓய்ந்தான் இமயம் அவனை நோக்கி வெண்மையாகக் குவிந்தது.
அந்த மலைகள் தம்மைப்போன்ற ஒரு மிகப்பெரிய ஆத்மாவை
அறிந்து கொண்டன, ஏனெனில் அவைகளைப்போல் சுவர்க்கத்தை
அடையவும்
முடிவற்ற தனிமையில் இருக்கவும் முடிந்தது அதனால். 1210
நெடுநேரம் அவன், ஆழ்ந்து யோசனைசெய்து,
கடினமாக முயன்று தனது ஆத்மாவை அக்குன்றுகளில்
ஊர்வசி பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்து கரைத்துவிட
முயன்றான். பனி
சுவர்க்கத்திலிருந்து வழிந்தோடி அவனது கன்னங்களையும்
தலைமயிரையும் தொட்டது,
புயல் காற்று மலையுச்சியினின்று குதித்திறங்கி மோதியது
ஆனால் அவனை எழுப்பவில்லை, அந்த வெண்மைநிறத்
துளிகள் வீணே
அவன் குழற்கற்றைகளை பனியாக உறைவித்தன, ஆடைகளில்
துகள்களாகப் படிந்தன.
ஏனெனில் அவன் தனது உணர்ச்சிவயப்பட்ட உள்ளத்துடன்
மட்டுமே வாழ்ந்திருந்தான்.
ஆனால் மாதங்கள் காணவியலாத மெதுவான நடையில்
குன்றுகளின் மீது கடந்தோ அல்லது வசந்தத்தின் இனிய மாற்றங்களைக்
கொணர்ந்தோ 1220
இலையுதிர் காலத்தின் ஈரமான பனித்துளியோ, கடைசியில் ஒரு குரல்
நமது ஆகாயத்தில் மட்டுமின்றி தூரத்து சுவர்க்கத்திலும் நகர்ந்தது.
யாரோ உந்தியதுபோல அவன் எழுந்து வந்தான்
மிக உயர்ந்த பெரியதான வடக்கிலிருந்த மலைத்தொடரின்
உச்சியைத் தாண்டி,
உலகின் உயரே இருந்த அந்த அற்புதமான பிரதேசத்திற்கு
மங்கலாக பயமுறுத்துவதும், உலகின் பழமையானவர்களான
வடக்குப் பக்க ‘குருக்கள்’ என்போர் கண்களில் தென்படாது
மறக்கப்பட்ட மூடுபனியில் வாழ்வதுமான இடத்திற்கு.
மூடுபனியூடே அவன் நகர்ந்து
காணாத நகரங்களை உணர்ந்தும், சப்தங்கள் ஒன்றையும்
கேளாமலும் 1230
ஆனால் எல்லையற்ற சம்பிரதாய வாழ்க்கையானது
அவனைச் சுற்றிலும் படபடவென இயங்க, பழமையான கனவுகளுடன்.
ஏனெனில் அவ்வாறவன் செல்லும்போது, பழைய ராஜாங்கச்
சிந்தனைகள் மேலெழும்பின,
அவ்வாறு விரைந்து முன்னோக்கும் முகங்கள், துவக்கங்கள்,
நிலைப்பாடுகள், பெரும் ராஜ்ஜியங்கள்,
பெரும் ஆர்வத்தாலெழுந்த படைப்புகள், ராஜரீக
முனைப்புகள் அனைத்தும் கல்லில் உருக்கொண்டன.
கடைசியில் பனிப்படலம் தூரத்தே உருள
அவன் தனக்குக் கீழே பழங்காலத்திய பாறைகள்
பள்ளத்தாக்கினுள் துருத்திக் கொண்டிருக்க, வானளாவ உயர்ந்து 1240
அகலமான, கவனத்துடன் படைக்கப்பட்ட மாடங்களையும் எண்ணற்ற
அகன்ற கோட்டைப்பகுதிகளையும் ஒளியேற்ற, அவற்றிடையே மாண்புறு
கண்களுடன் மூதாதையர் வெற்றிநடை பயிலுவர்.
அடுத்து அவன் சூரியனை நோக்கி அங்கு கண்டான் அரியாசனத்தில்
உச்சியில் இருந்த அவளை, அவளுடைய ராஜரீகமான கூந்தல்
அவளுக்குக் கிரீடமாக, ஊதா வண்ணத்தில் அலையலையாகக் கால்கள்வரை
புரள, இந்திரா, பெண் தெய்வம், சமுத்திரத்தின் குழந்தை,
பேரரசை அளிப்பவள், யார் எல்லா அழகையும் தன் கரங்களில்
வைத்துள்ளவளோ, எல்லாப் பெருமை, எல்லாச் செல்வம், எல்லா ஆற்றல்.
கண்டிப்பும் அழகுமான முகத்தை அவள் சாய்த்தாள். 1250
“இளையின் புரூரவஸே, என்ன பேரார்வம், உன்னை இங்கு
என் பெருமைவாய்ந்த தலைநகருக்குக் கூட்டி வந்துள்ளது
மறந்துவிட்ட பனிப்படலங்களில் உள்ள புராதன மானிடர்கள்,
ஆரிய வம்சத்தின் தந்தையர்கள்? கீர்த்திவாய்ந்த
மயங்கவைக்கும் நீ வந்துள்ளாய், அல்லது உனது மக்களுக்காக
பேரரசை வேண்டிக்கேட்கவா? ஆனால் மற்ற அழகு
உன் புருவத்தில் உள்ளது, ஒளி இனி என்னுடையதல்ல.
ஆயினும் உனக்காகவல்ல நீ கன்னியிடம் பிறந்தாய்,
குறைவற்ற, காற்றுமண்டலத்துக்குரிய கடவுள்களின் பாதையில்
உன் அடிகள் அனுமதிக்கப்பட்டன; அவர்களுக்காகவுமல்ல, 1260
ஆனால் வேதங்களை இசைக்கும் குரல்களுக்கு
புனிதமாக வைக்கப்பட்டுள்ள அச்சம்தரும் அரச கிரீடங்கள்
நல்ல பாக்கியங்களுக்கும் கொடூரமான தொழில்களுக்கும்.
நீயும், ஓ இளையின் புரூரவஸே,
ஒரு பெரும்விருப்பத்துக்காக நீ உனது தளர்வற்ற பேராற்றலை விட்டுவிட்டு,
ஒரு தேசத்தின் விதிமுறைகளை விட்டு, சோகமான தரம் குறைந்த கங்கை
வதந்தி நிறைந்த சொற்களுடன் நரகத்தின் நிழல்களில் செல்வதைக் காணவில்லையா?”
அப்போது அமைதியான கண்களுடன் மாவீரன் இளைமைந்தன்:
“ஓ பெண் தெய்வமே, ஆரியஸ்தானத்தைப் புரப்பவளே, 1270
ஆலமரத்தையும் தாமரைமலரையும் நேசிப்பவளே, நான்
நரகத்தைப் பற்றிய பயத்தாலோ அல்லது சுவர்க்கம் பற்றிய எதிர்பார்ப்பாலோ
நன்மையோ தீமையோ செய்வதில்லை. ஆண்டபோது நான் என்னையும்
ஆண்டுகொண்டேன்,
ஒரு அரசனுக்குரிய ஆத்மாவுடன் அரசன் செய்யும் செயல்களைச் செய்தேன்.
இப்போது காலவரம்பற்ற ஒரு ஆசையால் செலுத்தப்பட்டு
நான் பனியிலும் தெளிவற்ற நாடுகளிலும் அலைகின்றேன்.”
அப்போது இசைக்கும் குரலில் லக்ஷ்மி அவனிடம் கூறினாள்:
“சந்திரனிலிருந்து உதித்தவனே, உனது கொள்ளுப்பாட்டனின் தவறு
உன்னிடம்
இன்னும் வாழ்கிறது; ஆனால் உனது காதல் ஏகமனதான பெருமையுடையது,
சந்தேகமில்லாமல் நீ உனது பெருவிருப்பங்களை அடைவாய். 1280
ஆனால் நீ எதிர்காலத்தை முடமாக்கிவிட்டு ஆர்ய வம்சத்து மக்களின்
கிரீடத்தை விலக்கிவிட்டாய்; ஏனெனில் எதிர்காலத்து ஊர்களான
யானைகளின் நகரமான ஹஸ்தினாவிலும் இந்திரப்ரஸ்தத்திலும்,
இளையின் மகன்கள் அரசாளுவர்
எனது மக்களை ஒரு செங்கோலின்கீழ் கொண்டுவந்து, கடைசியில்
அவர்களது ஆற்றல் அதீதமான அழகில் விழுந்துவிடும்படி,-
உனது பாவம், புரூரவஸ் – அழகும் காதலும் ஆகும்:
இந்தப் புனிதமான பூமி அசுத்தமான பிடியில் அகப்பட்டு
மற்ற கரைகளிலுள்ள காட்டுமிராண்டிகளிடம் சரணடைந்து விடும்.”
அவள் நிறுத்தினாள் அந்த நிலையுணராத பனிமூட்டம் கீழிறங்கியது. 1290
ஆனால் அந்த வலிமைவாய்ந்த கிரீடமிழந்த மாவீரன், புரூரவஸ்,
கிழக்கை நோக்கி, தனது பெருவிருப்பத்தைப் பற்றிக் கனவுகண்டபடி,
உறக்கத்தினின்றும் எழுந்தவன் இரவினுள் புகுவதுபோல
அலைந்தான், விண்மீன்களின் கீழே
கறுத்த இடங்களில் நகர்வதுபோல, தனது கால்களை அறியாமல்
அவை எங்கே தன்னைச் செலுத்துகின்றன எனவும் அறியாமல்
ஆனால் காணவியலாத ஒரு விசைக்கு பயந்து அவனுடன் நடந்து
அவனது தப்பாத அடிகளை ஒரு விசித்திரமான காட்டினுள்ளோ,
அல்லது மெலிந்ததொரு மலைப்பிரதேசத்திலோ செலுத்தி
அங்கே அவன் விழித்தெழ, ஆத்மாவிலான ஒரு பேரச்சத்துடன்,
வினோதமான இடங்களில் அயலாருக்குரிய நடுக்கத்துடன். 1300
இவ்வாறு திரிந்தான், புரூரவஸ்,
அறியவியலாததோர் ஆற்றல் அவனைச் செலுத்த.
தனிமையும் இழப்பும், அதனாலேற்பட்ட தாங்கொணாத் துயரமும் புரூரவஸை முற்றும் பித்தனாக்கி விடவில்லை. ஒரு அரசனாக நாட்டிற்கும் குடிமக்களுக்கும் உண்டான கடமைகளிலிருந்து அவன் வழுவவில்லை. ஆனால் ஒரு ‘நடைப்பிணம்’ என்பார்களே, அதுபோலச் செயல்பட்டான்.
அவனே ஓரிடத்தில் கடலின் குழந்தையான இந்திரா எனும் பெண்கடவுளிடம்,
“நான் நரகத்தைப் பற்றிய பயத்தாலோ அல்லது சுவர்க்கம் பற்றிய எதிர்பார்ப்பாலோ நன்மையோ தீமையோ செய்வதில்லை. ஆண்டபோது நான் என்னையும் ஆண்டுகொண்டேன், ஒரு அரசனுக்குரிய ஆத்மாவுடன் அரசன் செய்யும் செயல்களைச் செய்தேன்,” என்கிறான். எத்தகையதொரு அறிவுபூர்வமான சிந்தனை, செயல். தன்நிலை பிறழாததோர் உயர்ந்த ஆத்மா; பேரரசன். அதனால்தான் கடவுள்களும் இந்திரனும் மற்ற அரக்கர்களுடன் போரிட அவன் உதவியை அவ்வப்போது நாடுகின்றனர் போலும்! தன் நியாயமான விருப்பங்களனைத்தும் நிறைவேறிவிட்டால் மனிதன் நிச்சயமாக மாமனிதனாகின்றான். இறப்பினில் சுவர்க்கத்தை அடையும் போது அல்ல! நியாயம் என்பது உலகத்தோர் எண்ணப்படியானது. தேவலோகத்தின் நியாயங்கள் முற்றிலும் வேறானவை! என அரவிந்தர் இக்கவிதையில் நமக்கு உணர்த்துகிறார்.
தான் மிகவும் அரிதென்று உணர்ந்து அடைந்த ஊர்வசி சில காலத்தின்பின்பு, தன்னைவிட்டுச் சென்றுவிட்டபோது அடைந்த ஏமாற்றத்தை புரூரவஸால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. தனது மாவீரத் தன்மைக்கு அதனால் பங்கம் வந்துவிட்டதென எண்ணுகிறானா? அரவிந்தர் சுட்டும் சில கூற்றுகள் என்ன சொல்கின்றன?
கடல் தேவதை அவனிடம் சொல்கிறாள்: உனது பாவம் அழகும் காதலும் ஆகும். எது எப்படி?
சுவர்க்கத்தில் வாழ்பவர்கள் வாழ்க்கையை ரசிக்கலாம்; ஆடல் பாடல், அழகிய மங்கையர் முதலியவற்றுடன்; இது பாவமன்று.
மானிடனான புரூரவஸ் செய்தது பாவம், அழகினைக்கண்டு காதல் கொண்டது பாவம் எனில் அது, அழகும் காதலும் மானிடருக்கு மறுக்கப்பட்டதா என்ன?
சில சமயங்களில் ஸ்ரீ அரவிந்தர் இவற்றை எள்ளி நகையாடுகிறாரோ எனக்கூட எண்ணத்தோன்றுகிறது.
(தொடரும்)