பரிசு

குளிர் முகத்தில் உறைத்தது. வெறும் குளிர் அல்ல,  பனிரெண்டாயிரம் அடி உயரத்தில் இமைய மலையில், மூன்று அடி பனி விழுந்திருந்த ஜனவரி மாத இரவில், மைனஸ் ஒன்பது டிகிரி வெப்ப நிலையில், கூடாரத்தின் உள்ளே ,நான் அணிந்திருந்த நான்கு அடுக்கு ஆடைகளையும் தாண்டி ஊடுறுவி உடல் சிலிர்த்தது.  கூடாரத்துக்குள் தரையிலிருந்து ப்ளாஸ்டிக் விரிப்பு, அதன் மேல் தடித்த கம்பளி, தெர்மல் உள்ளாடைகள், அதன் மேல் மூன்று அடுக்கு உடைகள், கம்பளிப் போர்வை, உள்ளே புகுந்து தலை வரை ஜிப் இழுத்து மூடிக் கொண்ட தூங்கும் ஸ்லீப்பிங் பேக், கழுத்தில் காதில் சுற்றிய கம்பளி மஃப்ளர், தலையில் கம்பளித் தொப்பி, கையில் கம்பளி உறைகள், காலில் கம்பளி சாக்ஸ் இத்தனையும் தாண்டி குளிர் இறங்கி இரவு முழுவதும் நான் தூங்கவில்லை, ஜுரம் வந்தது போல ஒரு மாதிரி அரை மயக்கத்தில் படுத்திருந்தேன். 

இரண்டு பேர் படுக்கும் டென்ட் என்று சொன்னார்கள், ஆனால் அதில் ஒருவர்தான் தாராளமாக கை கால் விரித்துப் படுக்க முடியும். இருவர் இடிக்காமல் உட்காரலாம்.  அந்த டென்டில் நானும் அமித்   ஸ்ரீ வாத்சவாவும். திருக்கோவிலூரில் முதல் ஆழ்வார்கள் மாதிரி.  இருந்த இடத்தில் முக்கால் இடத்தை அமித் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான். ஒல்லியாக ஓரமாக அதில்  நான் ஒடுங்கிப்  படுத்திருந்தேன். 

ட்ரெக் ஆரம்பித்த முதல் நாள் காலை உணவின்போது “ஹலோ, மைசெல்ஃ அமித் ஸ்ரீ வாஸ்தவா “ பெரிய புன்னகையுடன் வலுவாகக் கை குலுக்கினான்.

நான் அப்போது ஆறிப் போன தடிமனான ஆலு பராத்தாவை கஷ்டப் பட்டு ஒரு கையால் பிய்த்து ஊறுகாயுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  அடுப்பிலிருந்து எடுத்துக் கொடுத்தாலும் ஒரு நிமிடத்தில் ஆறி விடுகிறது. அதெப்படி காலையில் இவ்வளவு தடியான பராத்தா, அதுவும் கரம் மசாலா சேர்த்த உருளைக் கிழங்கு, தயிர், ஊறுகாய் எனக்கு வாயில் வைக்க முடியவில்லை. நான் வாழ் நாள் முழுவதும் இட்லி அல்லது தோசையை காலை உணவாக சாப்பிட்டு வளர்ந்தவன். கஷ்டப்பட்டு புன்னகை செய்து இடது கையால் கை குலுக்கினேன்

அதற்குள் யாரோ அமித் என்று கூப்பிட்டார்கள். அவன் திரும்பி “ அரே யார், என் பெயரைக் கொலை செய்யாதே, முழுதாக அமித் ஸ்ரீவாஸ்தவா “ என்றுதான் அழைக்க வேண்டும் என்று, ஹிந்தியில், இறுதியில் என்னையும் பார்த்தபடி சொன்னான்.

‘ நான் குமார் , சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி “ என்று மகிழ்ச்சி இல்லாமல் புன்னகைத்தேன்.

‘முகத்தை சற்று சந்தோஷமாக வைத்துக் கொள் கடவுள் போட்ட முடிச்சு, நாம் இருவரும் ஒரே டென்டில்தான் இருக்க வேண்டும் “ என்று ஆரவாரமாக சிரித்து, பராத்தா செய்து கொண்டிருந்தவனிடம் 

“ அரே பாயி, எனக்கு இன்னும் அதிகம்  நெய் போட்டு சூடாகாச் செய்து கொடு “ என்றான்.  அந்தச் சமையல்காரனும் உற்சாகமாக அவனுக்குச் சேவகம் செய்தான்.

இப்படிப் பட்ட அமித் ஸ்ரீ வாஸ்தவாவும்,   அதிகம் பேசாமல் முத்துக் குமார் என்ற பெயரை முழுதாகச் சொல்லாமல் குமார் என்று கவனமாக உச்சரிக்கும் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக் கொள்ளும் பெங்களூர்வாழ் தமிழனாகிய நானும் சில நாட்களுக்கு வாழ்க்கைப் பட்டோம்.

முதலில் இந்த ட்ரெக்குக்கு வந்திருக்கக் கூடாது, அதுவும் ஜனவரி மாதத்தில். பழக்கம் இல்லாததால் முதலில் மலை ஏறுவதற்கு சிரமப் பட்டேன். ஆனால் இது நானாக விருப்பப் பட்டு, பல வருடங்களாக ஆசைப்பட்டு , பணம் சேர்த்து முன்பதிவு செய்து வந்திருக்கும் ட்ரெக். ஏழு லட்சம் கொடுத்து பனிச் சிறுத்தை தேடி இமைய மலைப் பயணம் செய்யும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை.  தட்டுத் தடுமாறி     சி ஏ இன்டர் முடித்து, மேலே முயற்சி செய்து முடிக்க முடியாமல், டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  கிட்டத்தட்ட இரண்டு வருட சம்பளம் பனிச்சிறுத்தைக்குக் கொடுப்பது கனவாகத்தான் இருந்தது. போன மாதம் பதிமூன்றாம் தேதி வேளாங்கன்னி சென்ற மல்டி ஆக்சல் வோல்வோ ஸ்லீப்பர் பஸ்ஸில் எத்தனை பேர் வைத்தீஸ்வரன் கோயிலில் இறங்கினார்கள் என்பது மாதிரி சுவாரசியமான கணக்குகளைப் பார்த்துக் கொண்டு நான் ஏதோ உள்ளூரில் பெங்களூரிலிருந்து  பண்டிபூர் பயணம் செய்து , கிடைத்த மலிவான இடத்தில் தங்கிக் கொண்டு இயற்கையில் ஆழ்ந்து வன விலங்குகளைப் புகைப் படம் எடுப்பேன். 

சில பேர் காட்டுக்குள் நுழைந்தவுடன் மிக நீண்ட டெலி போட்டோ லென்சை எடுத்து இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு 

“ 600 எம் எம் லென்சு இது, அல்ட்ரா வேக ஆடோ ஃபோகஸ் , சற்று விலை உயர்ந்தது, ஜப்பானில் வாங்கினேன். விலங்குகளையும் பறவைகளையும் இந்த மாதிரி உயர்ந்த வகை இல்லாமல் எப்படி படம் எடுக்க முடியும் ?” என்று ஆரம்பிப்பார்கள்  

அடுத்ததாக “ உங்கள் காமிராவில் எத்தனை ரா பிக்செல்கள் ?” இல்லை 

“ இந்தக் காமிரா வைக்கும் பை , தட்ப வெப்ப நிலையயும், ஈரப்பதத்தையும் சமச் சீராக வைத்திருக்கும் “ என்று தொடர்வார்கள்.  

அய்ந்து நிமிடங்களுக்குள் “ நான் மசாய் மரா போன போது, ஒரு ஆப்பிரிக்க யானை, பனிரெண்டு அடி உயரம் இருக்கும் “ என்று கதை வளரும்.

என்னிடம் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காமிரா கிடையாது. என்னுடையது பழைய காமிரா, அதுவும் செகண்ட் ஹாண்டு. 200 மில்லி மீட்டர் லென்சுதான் என்னிடம் இருக்கிறது. மற்றபடி வாடகைக்கு எடுத்துக் கொள்ளுவேன். ஆனால் அதை வைத்துக் கொண்டே நான் மிக நல்ல படங்கள் எடுப்பதாக நண்பர்கள் சொல்லுவார்கள்.

நாங்கள் தங்கியிருந்த இடத்தில் நிலப் பரப்பே வேறு மாதிரி இருந்தது. பகலிலேயே ஏதோ வேற்று கிரகத்துக்கு வந்திருப்பது போல இருக்கும். ஒரு பக்கம் கீழே பள்ளத்தாக்கில் நதி, சுற்றிலும் நம்மை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் பனி படர்ந்த மலைகள் , தூய வானம், படரும் மேகங்கள் எல்லாமே இமாலயத்தில் வேறு அனுபவமாக இருந்தது. கூடவே நான் அபூர்வப் படம் எடுக்கப் போகிறேன் என்ற எதிர்பார்ப்பு வேறு.

  நான் வன விலங்குகள் போட்டோக்ராபராக ஆனதே ஒரு எதிர்பாராத நிகழ்ச்சியினால்.   உடுப்பிக்கு நண்பன் ஒருவனின் திருமணத்துக்காக பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன்.  சக்லேஷ்பூர் தாண்டி ஷிராடி காட்டில் அதிகாலையில் பஸ் ப்ரேக்டவுன் ஆகி நின்று விட்டது. நின்ற இடம்  மேற்குத் தொடர்ச்சி மலையில் நல்ல காடு. வேறு பஸ் வருவதற்கு நேரம் ஆகும் என்றார்கள். மார்ச் மாதம். நேரம் காலை சுமார் ஏழு இருக்கும்.  சுற்றிலும் இளம் தளிர்கள், இளங்காலை வெயிலில் எனக்கு இலைகளே பூ போல வண்ணமாகத் தோன்றின. வானம் மேக மூட்டமாக இருந்தது. ஒரு லேசான தூறல். நான் ஒரு விளிம்பில் பாறைக்கு அடியில் நின்று விட்டேன். கீழே மலை சரிவாக இறங்கிக் கொண்டிருந்தது. ஒரு பள்ளத்தாக்கில் மரங்கள் எல்லாம் சேர்ந்து அடர்ந்த கரும் பச்சை. ஒரு பக்கம் மர உச்சிகளில் தளிர்கள் பொன் நிறப் பச்சை. எல்லாம் வித விதமான பச்சை. ஆரம்பித்த தூரல் விரைவிலேயே நின்று விட்டது. பிரகாசமாக சூரியன் வெளியே வந்தது. சரிகை இட்ட மேகங்களுக்கு  நடுவே இருந்து பொன் ஒளிக் கற்றைகள். மரங்களிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. மழை பெய்த மணம், கூடவே ஏதோ மலர்களின் மணமும். ஒரு மரத்திலிருந்து மயில் ஒன்று பறந்தது. இன்னொரு மரத்திலிருந்து ஏதோ ஒரு பறவை  நீண்ட ஒலி எழுப்பியது. மெல்லிய காற்று வருடியது. எனக்கு அந்தக் கணத்தில் உடல் சிலிர்த்தது. அப்படியே ஆழ்ந்து போய் பறக்கும் மயிலைப் படம் பிடித்தேன். அந்தப் படம் பத்திரிகையில் பிரசுரம் ஆகி,  நிறைய பாராட்டுகளைப் பெற்றது. இத்தனைக்கும் அது சாதாரண காமிராவில் எடுத்த படம்.

 கூட வந்த நண்பன் “ டேய் குமார் நீ பெரிய போட்டோக்ராபராக வருவாய், நானும் விலை உயர்ந்த காமிரா வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறேன், எனக்குக் கிடைக்காத காட்சி, கோணம், உனக்கு எளிதாகக் கிடைக்கிறது “ என்பான். இப்போது எல்லாம் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. சுமாராகப் படம் எடுத்தால் கூட, சாப்ட்வேர் வைத்துக் கொண்டு அழகு படுத்தி விடலாம். ஆனால் நான் எடுக்கும் படங்கள் கதை சொல்லுகின்றன, கவிதை சொட்டுகிறது என்று சொல்லுவார்கள். 

இந்த இமாலயப் பயணத்திலும் நிறைய படங்கள் எடுத்து விட்டேன். டீக்கடையில் கவனிக்காத அம்மாவின் இடுப்பில் கட்டப்பட்டு கம்பளித் தொப்பியில் சிவந்த கன்னங்களுடன் தட்டை மூக்குக் குழந்தை அழுத போது ஒரு பெரிய கதை கிடைத்தது. உறைந்த பனியில் நிறைய கவிதைகள் கிடைத்தன.   விழுந்து கிடந்த பெரிய மரங்களில் கதைக்கும் கவிதக்கும் இடைப்பட்ட வடிவங்கள் தோன்றின.

ஒரு காலத்தில் இயற்கைக் காட்சிகளை மட்டும் எடுத்து வந்தேன். பிறகுதான் காட்டு மிருகங்ளைப் படம் எடுக்க ஆரம்பித்தேன்.  வன விலங்குகளைப் படம் எடுப்பது ஒரு தனிக் கலை. முதலில் அவை கண்களில் படாது. நாம் பார்ப்பதற்குள்  அவை நம்மைக் கண்டு ஒளிந்து கொள்ளும். திரும்பத் திரும்ப புள்ளி மான்கள்தான் கூட்டமாகக் காணக் கிடைக்கும். ஆரம்ப நாட்களில் வித விதமாக புள்ளி மான்களைத்தான்  நிறையப் படம் எடுத்தேன். ஒரு முறை கபினியில் வழக்கமாக புலி தென்படும் இடம் என்று காத்திருந்தோம். ஒரு இருபது முப்பது மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. கொம்புடன் ஒரு பெரிய மான். சின்னக் குட்டிகளுடன் சில மான்கள். அவ்வப் போது வாலை ஆட்டிக் கொண்டு, நாங்கள் சாலையில் ஜீப்பில் இருப்பதைக் கண்டு கொள்ளாமல் அவை மேய்ந்து கொண்டிருந்தன. திடீரென்று குரங்குகளின் கிறீச் என்ற ஓலம். எங்களுடன் வந்திருந்த வன வழிகாட்டி, உதட்டில் விரலை வைத்து ஓசை எதுவும் செய்யாமல் இருக்கச் சொன்னார். அருகே புலி இருக்கிறது என்றார். குரங்குகள் ஒலி எழுப்பி மற்ற விலங்குகளை எச்சரிக்கை செய்கிறதாம். மான்கள் நிமிர்ந்து கழுத்தைத் திருப்பி தலையை எக்கி குரங்குகளின் ஒலி வந்த திசையைப் பார்த்தன. வால்கள் ஆடாமல் நேராக நின்றபடி , தீவிர கவனத்துடன் ஒரே திசையில் பார்த்துக் கொண்டிருந்தன. எல்லோரும் அதே திசையில் புலி  வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். வித விதமான நீள லென்சுகளுடன் காமிராக்கள் அந்தப்பக்கம் பார்த்துக் கொண்டிருக்க, நான் மட்டும் அந்த மான்களைப் படம் எடுத்தேன்.  அழகின் திவலை புலிகளில் மட்டும் இல்லை, அந்தத் தருணத்தில் மான்கள் உறைந்த உயிர்த் துடிப்புடன் ஒரே திசையில் பார்த்துக் கொண்டிருக்கும் படம் மிக அழகாக வந்தது. அதில்தான் கதையும் கவிதையும். நண்பன் ஒருவன்  அதை ஏதோ ஒரு போட்டிக்கு அனுப்பச் சொன்னான். “புலி வருகிறது” என்று தலைப்பிட்டு  அனுப்பிய படத்துக்கு எதிர்பாராமல் பரிசும் கிடைத்தது.

அப்படி ஆரம்பித்து, நான் வன விலங்குகளைப் படம் எடுப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தேன். நிச்சலனமாக அசை போட்டுக் கொண்டு  பார்க்கும் காட்டு எருமை, உச்சாணிக் கிளையில் இருந்து நோட்டமிடும் கழுகு என்று சுலபமாகக் கிடைக்கும் படங்களிலிருந்து, மரக்கிளைமேல் வாலைத் தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் சிறுத்தை, பெண் புலியின் வாடையை மோப்பம் பிடித்து தலையைத் தூக்கி உறுமும் புலி, கால்களுக்கு அடியில் குட்டி இருக்க துதிக்கையைத் தூக்கி பிளிறித் துரத்தி ஓடி வருவது போல பாவனை செய்யும் தாய் யானை, ஆகும்பேயில் பின்னிப் பிணைந்து ஆறு அடிக்கு  எழுந்து  நின்ற ராஜ நாகங்கள் என்று நிறைய எடுத்து விட்டேன். படம் எடுப்பது மட்டும் இல்லை, மிருகங்களின் சுபாவமும் எனக்கு நிறையத் தெரிய வந்தது. 

புலி யானைகளைப் படம் எடுத்து ஒரு விதத்தில் சலித்து விட்டது. நடுவில் பறவைகளை எடுக்க ஆரம்பித்தேன். அதுவும் பறக்கும் பறவைகள். அது பெரிய சவாலாக இருந்தது. அரிதான விலங்குகளைத் தேடி எடுக்க ஆரம்பித்தேன். கபினி காட்டில் ஒரு கருஞ்சிறுத்தை உண்டு. ஒன்றே ஒன்றுதான். ஏதோ ஜீன் பிறழ்வால் கறுப்புப் புள்ளிகளுக்கு பதில் உடல் நிறம் முழுக் கறுப்பு. அந்தக் கருஞ்சிறுத்தயைக் காண்பதே அபூர்வம். அதைப் படம் எடுத்தவர் மிகச் சிலர். நான் கருஞ்சிறுத்தையும் ஜோடியாக ஒரு வழக்கமான சிறுத்தையும் சேர்ந்து இருக்கும் படம் எடுத்தேன். வெறும் அதிர்ஷ்டம் அல்ல. சிறுத்தைகளின் இனச்சேர்க்கை காலம் அறிந்து கொண்டு ஒரு வாரம் கபினியில் தங்கி, காலையும் மாலையும் சபாரி சென்று, அங்கிருக்கும் வனத்துறை ஆட்களை நட்பு செய்து கொண்டு, எங்கு கருஞ்சிறுத்தையைக் காணக் கூடும் என்று  நில வரைபடம் செய்து கொண்டு பொறுமையாக பல மணி நேரம் காத்திருந்து எடுத்தது. அந்தப் படம் தேசிய அளவில் பரிசு வாங்கியது. பரிசுத் தொகை ஒரு லட்சம். அந்தப் பணத்தை அப்படியே சேமித்து வைத்தேன். அடுத்தது என்ன படம் எடுக்கலாம் என்று யோசித்து கடந்த மூன்று வருடங்களாக தீபாவளி போனஸ், இப்படி சிறுகச் சிறுகச் சேர்த்து இந்தப் பயணம் வந்திருக்கிறேன். 

பனிச் சிறுத்தைகளை படம் எடுப்பது மிகக் கடினம். முதலில் கண்களுக்கே எளிதாகத் தென்படாது. அவற்றுக்கு “ மலைப் பேய் “ என்றே பட்டப் பெயர் உண்டு. அவை பனி படர்ந்த மலைகளில் சுமார் ஒன்பதாயிரம் முதல் பதினெட்டாடிரம் அடி உயரத்தில் வசிப்பவை. குளிர் காலத்தில் மலையில் சற்று கீழே இறங்கி வரும். உருவத்தில் புலிகளை விட சிறியவை. உடலில் இருக்கும் சாம்பல்  நிறத் திட்டுகள், பனியிலும் பாறைகளின் பின்னணியிலும் அவை இருப்பதையே மறைத்து விடும். இந்தியாவில் இமைய மலைத் தொடரில் சுமார் நானூறு பனிச் சிறுத்தைகள் இருப்பதாகத் தகவல். நிறைய புகைப் பட நிபுணர்கள் அவைகளைத் தேடித்தேடிப் படம் எடுப்பதற்கு அவை எளிதில் காணக் கிடைக்காததே முக்கிய காரணம். பனிச் சிறுத்தைகளைப் படம் எடுப்பதற்கு என்றே தனியாக குழுக்கள் செல்லும். தனியார் சுற்றுலா அமைப்பாளர்கள் ஒரு பயணத்துக்கு , ஒருவருக்கு பத்து பதினைந்து லட்சம் வரை கூட கட்டணம் கேட்பார்கள். அவ்வளவு செலவழித்தாலும் பனிச் சிறுத்தைகளைப் பார்க்கலாம் என்று உத்தரவாதம் கிடையாது. பார்த்தாலும் படம் எடுப்பது மிகக் கடினம்.  அது எனக்கு ஒரு நல்ல சவாலாகத் தோன்றியது. அப்படிப் பட்ட ஒரு சிறு குழுதான் நான் இப்போது வந்திருப்பது. 

குளிர் காலத்தில்  பனிச் சிறுத்தைகளின் இரையான மலை ஆடுகள் கீழே வருவதால் அவைகளும் கீழே இறங்கி ஆறாயிரம் அடி வரை கூட வருவதுண்டு என்று படித்திருக்கிறேன். ஆனால் நாங்கள் பனிரெண்டாயிரம் அடி உயரம் வந்த பிறகு கூட ஒரு பனிச்சிறுத்தையைக் கூடப் பார்க்க முடியவில்லை. இப்போதெல்லாம் ட்ரெக் செய்ய நிறைய மனிதர்கள் வருவதால், பனிச் சிறுத்தைகள் உயரத்திலேயே மலைச் சரிவுகளில் மறைந்திருப்பதாகச் சொன்னர்கள். நாங்கள் ஏற ஆரம்பித்து நான்கு நாட்கள் ஆகி விட்டன. இது வரை சில வரையாடுகள் பார்த்தோம். அவை இருந்தால் பனிச் சிறுத்தைகளும் இரை தேடி இருக்கும் என்றார்கள். ஆனல் எங்களுக்கு தென்படவில்லை. தினமும் பகல் முழுவதும் பனி மலைகளில் ஏறினோம். இரண்டு மலைகளுக்கு நடுவில் இருக்கும் பல்ளத்தாக்கின் விளிம்புகளில் தேடினோம். அங்கேதான் அவை இருக்க சாத்தியம் அதிகம் என்று கைடுகள் சொன்னார்கள்.

இன்னும் ஒரு நாள்தான், பிறகு கீழே இறங்க ஆரம்பிக்க வேண்டும். இந்த ட்ரெக்கில் இனிமேல் பார்ப்பது சந்தேகம்தான் என்று அமித் இரவு உணவின்போது சொன்னான். எங்கள் குழுவை வழி நடத்திக் கொண்டிருந்த மானேஜரிடம் தகராறு செய்தான். தவிர காஷ்மீரில் இன்னொரு ட்ரெக் பதிவு செய்திருக்கிறானாம். எப்படியாவது பார்த்து படம் எடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தான். இவ்வளவு பணம் சேர்த்து ஆசைப்பட்டு வந்து பார்க்கவும் முடியாமல் திரும்பப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு வருத்தத்துடன் தான் இரவில் படுத்தேன்.

எப்போது எழுந்தேன் என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. நாய் குரைத்த ஒலியாக இருக்கலாம். பேஸ் காம்பிலிருந்து எங்களுடன் ஒரு நாய் கூடவே வந்து கொண்டிருந்தது. பெரிய கருப்பு சடை நாய். திபெத்திய இனம் என்று சொன்னார்கள். அது பாட்டுக்கு வாலை ஆட்டிக் கொண்டு கூடவே மலை ஏறி வந்து கொண்டிருந்தது. இரவு ஆனால் உணவு தயாரிக்கும் சமையல் டென்ட் அருகே அடுப்பின் கதகதப்பில் படுத்துக் கொண்டது. அந்த நாய்தான் குரைத்திருக்க வேண்டும். 

மாலையிலிருந்தே தண்ணீர் குடிப்பதைக் குறைத்தால் இரவு சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டி இருக்காது என்று சொன்ன ட்ரெக்கிங் அனுபவம் வாய்ந்த மூத்தோர் சொல் கேளாததால், இந்தக் குளிரையும் தாண்டி டெண்டுக்கு வெளியே வர வேண்டியதாக ஆயிற்று. குளிரில் எழுந்து வெளியே வருவதே ஒரு தண்டனை. அதற்கு யோகாவில் சூரிய நமஸ்காரம் செய்வது போல தொடர் வரிசையாக உடலை வளைத்து ஆசனங்களுடன் உடற்பயிற்சி மாதிரி செய்ய வெண்டும்.   முதலில் டெண்டுக்கு உள்ளே படுத்த நிலையிலிருந்து எழுந்து  உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு டெண்டின் வாயிலை மெதுவாகத் திறக்க வேண்டும். அந்த ஜிப்பை மிகக் கவனமாகக் கையாள வேண்டும், இல்லா விட்டால் சிக்கிக் கொள்ளும். அதில் வேறு இரண்டு அடுக்குகள். அடுத்தது கால்களை மட்டும் வெளியே நீட்டி ஷூ அணிந்து கொள்ள வேண்டும். கை உறைக்குள் இருக்கும் விரல்களால் அதன் லேஸ்களைக் கட்ட முடியாது. அதற்காக உறைகளைக் கழற்றி விரல்களை வெளிப் படுத்துவது அவ்வளவு நல்லதல்ல. கால்களை ஷூவுக்குள் அப்படியே நுழைத்துக் கொண்டு, லேஸ் தடுக்காமல் சுற்றி வைத்துக் கொண்டு, எழுந்திருக்க வேண்டும். ஒரு கையை ஊன்றி, பக்க வாட்டில் திரும்பி எழுந்து கொள்ள டென்ட் வாயிலின் திறப்பு பற்றாது. ஒரு மாதிரி முன் பக்கம் குனிந்து, தரையில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு, இல்லை அப்படியே ஒரு கோணத்தில் வயிற்றை எக்கி, எல்லாச் சக்தியையும் திரட்டிக் கொண்டு எழுந்திருக்க வேண்டும். 

அப்படி எழுந்தவுடன் கீழே விழாமல் உறுதியாக கால்களை அழுத்தி நிற்க வேண்டும். கூடவே காற்றுக்கு எதிர்த் திசையில் முகத்தைத் திருப்பிக்கொள்வது நலம். தலையில் கட்டி இருக்கும் ஹெட் லாம்ப்பை பட்டனை அழுத்தி எரிய விட வேண்டும். இல்லா விட்டால் இருட்டில் ஏதாவது பள்ளத்தில் விழுந்து வைத்தால், யாருக்கும் தெரியாது, காலை வரை அங்கேயே குளிரில் அடிபட்டுக் கிடந்தால், பிழைப்பது கடினம்தான். அதனால் இரவில் எழுந்து போக வேண்டி இருந்தால் இரண்டு பேராக போவது நலம் என்று சொல்லி இருந்தார்கள். என்னுடன் இருந்த அமித்தை அவ்வளவு எளிதில் தூக்கத்திலிருந்து எழுப்பி விட முடியாது. அதனால் நானே போகலாம் என்று முடிவு செய்து, ஆசனங்களைச் செய்து வெளியே வந்து விட்டேன். 

வெளியே வந்தால்தான், அவ்வளவு வெளிச்சம் இருப்பதைக் கவனித்தேன். அன்று பவுர்ணமி, முழு நிலவு. பெரிய நிலா , மேகங்களற்ற வானத்தில் பெரிதாக ,அமைதியாக மிதந்து கொண்டிருந்தது. அந்த மலைத்தொடர் முழுவதும் ஒளி கசிந்து பரவிக் கொண்டிருந்தது. அப்படி ஒரு காட்சியை நான் இதுவரை வாழ் நாளில் கண்டதில்லை. கண் கொள்ளாத அழகு. பனிமலைகள் முத்து போல சந்திரன் ஒளியைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. எந்தப் பக்கம் திரும்பினாலும் சௌந்தரியம். நான் டென்டுக்கு உள்ளே குளிரில் இருந்த மயக்கத்துக்கு, இது வேறு விதமான மயக்கமாக இருந்தது. சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

மறுபடியும் கருப்பு நாய் லேசாகக் குரைத்தது. எங்கிருந்து ஒலி வருகிறது என்று பார்த்தேன். அது டென்டுகளைத் தாண்டி ஒரு சிறிய ஓடையின் பக்கத்தில் நின்று கொண்டு எதிர்ப் பக்கத்தில் மரங்களுக்கு  நடுவில் இருந்த ஒரு இடை வெளியைப் பார்த்து மெல்லியதாக உறுமியது. உள்ளுணர்வில் ஏதோ தோன்றியது. டென்ட் வாயிலைத் திறந்து குனிந்து என்னுடைய காமிராவை எடுத்தேன். அமித் புரண்டு படுத்தான்.

 நாய் குரைத்த திசையில்  சென்றேன்.  நெற்றியில் கட்டி இருந்த ஹெட் லாம்ப்பை அணைத்தேன். சந்திரன் ஒளியே போதுமானதாக இருந்தது. ஓடைக்கு அந்தப் பக்கம் பார்த்தேன். முதலில் ஒன்றும் தனியாகத் தெரியவில்லை. சந்திரன் ஒளியில் எல்லாம் கருப்பு வெளுப்புப் படம் போல இருந்தது. காற்று நின்றிருந்ததால், மரம் செடி எதுவும் அசையவில்லை. 

மிகக் கவனமாக இடமிருந்து வலமாக மறுபடியும் உற்றுப் பார்த்தேன். கண்டேன். அருகிலேயே சுமார் இருபது அடி தூரத்தில் கீழே விழுந்திருந்த ஒரு பெரிய மரத்தின் மேல் பனிச் சிறுத்தையைக் கண்டேன். அப்படியே நின்று கொண்டு அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் உடல் நிறத்துக்கும் தரையில் விழுந்திருந்த பனிப் பொழிவிற்கும், இருளாகத் தெரிந்த மரம் செடிகளுக்கும் நடுவில் அது ஒரு நிழல் போலத்தான் இருந்தது. கண்கள் மட்டும் பிரகாசமாக மின்னின. அதன் வால் கூட அப்படியே ஒரு கோணத்தில் நின்றிருந்தது. அவ்வளவு நீளமான, தடியான வால் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அசையாமல் இருந்தாலும் அசாத்தியமான உயிர்த் துடிப்பு.

அப்படி ஒரு அழகு, நான் உறைந்து போனேன். வேறு ஒலி கூட இல்லாத அந்தத் தருணத்தில், நான் மட்டும் அந்தப் பனிச் சிறுத்தையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாப் புலன்களும் விழித்துக் கொள்ள , அசையாமல் நின்று கொண்டிருந்தேன். அந்தப் பனிச் சிறுத்தையும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. கண்கள் இமைக்காமல் நானும் சிறுத்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். என்னைப் பார்த்து  பனிச்சிறுத்தை ஒளியவில்லை, ஓடவில்லை. நானும் அசையாமல் நின்றேன். சில வினாடிகளுக்குப் பிறகு, பனிச் சிறுத்தை நிதானமாக கண்களை மூடித் திறந்தது. நானும் அனிச்சையாக இமைகளை மெதுவாக மூடித் திறந்தேன். எனக்கு அது ஒரு மவுன உரையாடல் போல இருந்தது. காலமும் உறைந்து போன அந்தத் தருணத்தில் எவ்வளவு நேரம் இருந்திருப்பேனோ தெரியாது. 

அந்த மவுனத் தருணத்தில் ஒரு ஒலி கேட்டது. காமிரா பட்டனை அழுத்தும் அசிங்கமான ஒலி. பனிச் சிறுத்தை தலையை அசைத்து எனக்கு பின்புறம் பார்த்தது. நானும் திரும்பினேன். அமித் ஸ்ரீவாஸ்தவா அங்கே நின்று கொண்டு படம் எடுத்துக் கொண்டிருந்தான். எதிர்ப் பக்கம் தரையில் விழுந்திருந்த சிறு மரக் கிளை முறியும் மெல்லிய ஒலி கேட்டது. திரும்பி பனிச் சிறுத்தையைப் பார்த்தேன். விடை சொல்லுவது போல வாயை லேசாகத் திறந்து தலையை அசைத்து ஒரே கணத்தில் திரும்பி இருளுக்குள் மறைந்தது. நான் அந்த இருளுக்குள் இன்னும் தெரிகிறதா என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அமித் வரிசையாகப் படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தான்.

ஒரு பெரு மூச்சு விட்டு உடல் தளர்ந்தேன். 

“ நீ மட்டும் தனியாக பனிச்சிறுத்தையைப் பார்த்து படம் எடுக்கலாம் என்று நினைத்தாயா, நானும் எடுத்து விட்டேன் “ என்று கொக்கரித்தான்.

“ நான் படம் எடுக்கவில்லை “ என்றேன் அமைதியாக.

“பொய் சொல்லாதே, எங்கே உன் காமிரா ?”

கையைத் தூக்கிக் காண்பித்தேன் “இதோ என் காமிரா, ஆனால் படம் எடுக்கவில்லை, சரியாகச் சொன்னால் படம் எடுக்க முடியவில்லை“

அமித்துக்குப் புரியவில்லை. என் கையிலிருந்த காமிராவைப் பிடுங்கி நான் படம் எடுத்திருக்கிறேனா என்று சோதனை செய்தான். 

“ ஆ! அப்படியானால் நான் ஒருவன் தான் படம் எடுத்திருக்கிறேன் “ அவனுடைய குரல் ஓங்கியது.  அவனுடைய காமிராவின் திரையில் படங்களைக் காண்பித்தான். படங்கள் அழகாகத்தான் வந்திருந்தன. அதிலும் ஒரு படம், அந்தப் பனிச் சிறுத்தை திரும்பிய படி இருளுக்குள் மறைவதற்கு முன்  வாயைத் திறந்து நேராகப் பார்த்த படி இருந்தது. அது மிக அழகாக வந்திருந்தது.

அமித் “ நான் இதை சர்வதேச வன விலங்கு புகைப் படப் போட்டிக்கு அனுப்பப் போகிறேன். சந்தேகமில்லாமல், எனக்குத் தான் முதல் பரிசு “ என்று கூவினான்.

“ நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துகள் “ என்றேன்

“ நன்றி நண்பா,  நீ எழுந்து வந்ததனால்தான் நானும் எழுந்தேன். இல்லா விட்டால் இந்தப் படம் எனக்குக் கிடைத்திருக்காது. தவிர நீ படம் எடுக்காததற்கு  இன்னொரு நன்றி. எனக்குத்தான் பரிசு “ என்றான்.

 நான் பனிச் சிறுத்தையைப் பார்த்த அனுபவத்திலேயே இன்னும் இருந்தேன்.

மீதி ட்ரெக் முழுவதும் அமித் அதையே பேசிக்கொண்டு, படங்களை காண்பித்துக் கொண்டு இருந்தான்.  எல்லோரும் அவன் மிக அதிர்ஷ்டக் காரன் என்றார்கள். 

இறுதியாக விடை பெறும் போது அமித் “ பாவம் நீயும் படம் எடுத்திருந்திருக்கலாம், ஒரு வேளை உனக்கும் பரிசு கிடைத்திருக்கும் “ என்றான்.

“இனி மேல் படம் எடுப்பேனா என்று தெரியவில்லை “ என்று நான் புன்னகைத்தேன்.  

பி கு : அமித் என்னிடம் தொடர்பில் இருந்தான்.  ஒரு பெரிய மதிப்பு மிகுந்த சர்வதேசப் பத்திரிகையின் போட்டிக்கு படத்தை அனுப்பினான். அவனுக்கு கட்டாயம் பரிசு கிடைக்கும் என்று நானும் நம்பினேன். முடிவு வந்த நாளில், நான் ஆர்வத்துடன் இணையத்தில் தேடினேன். அமித்துக்குப் பரிசு கிடைக்கவில்லை. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த  காட்டு நாய்க் குட்டியின் படத்துக்கு பரிசு. அவை அழிந்து வரும் இனமாம், குட்டிகளைப் படம் எடுப்பது மிகக் கடினமாம். பெரிய காதுகளுடன் அந்தக் காட்டு நாய்க் குட்டிகள் மிக மிக அழகாக இருந்தன. 

8 Replies to “பரிசு”

 1. மிக அருமை. பயண அனுபவத்தைச் சொல்வது சாதாரண கதை. ஆனால் பயணத்தில் கிடைத்த அனுபவத்தால் நாம் பெற்றவற்றை உணரச் செய்வது சிறப்பான நுட்பம். அந்த நிமிடங்களின் அற்புதமான வசீகர மர்மம் அப்படியே கடத்தப்பட்டிருக்கிறது. அன்பும், நன்றியும், வாழ்த்துகளும்.
  ராஜகோபாலன் ஜா

 2. ஸ்ரீ கிருஷ்ணன்..

  கதையின் கோணம், சொல்லிய விதம், மிரள வைக்கும் திடுக் வினாடிகள், என் போன்ற சாமானியனுக்கு ஏற்படும் நிராசையான கதை கரு, அபூர்வமான சொல்லாடல்கள், மழை மணம், மலைப்பேய் போன்ற புதுச்சொற்கள்…

  இப்படி நேரம் போனதே தெரியல.

  கதையின் தருணங்கள் தாம் “தருணாதித்தன்” யார் என்று “பராக்” பாடியது.

  ஒரு சன்னியாசிக்கும் பிடிக்கும் உரையின் நடை. டென்டில் உமது எடையை உள்ளடக்கிய சாதுர்யமான வசனங்கள்….

  மகிழ்ந்தேன்
  நெகிழ்ந்தேன்
  வாழ்த்துக்கள் ஸ்ரீ…. 🙌

  சுரா

 3. As usual, you made us to enjoy your wonderful narration and nice flow of events in yet another superb and thrilling story.

  Even though the whole story was superb, I very much liked the following two parts;

  1. அமித் ஸ்ரீ வாஸ்தவாவும், ….பெங்களூர்வாழ் தமிழனாகிய நானும் சில நாட்களுக்கு வாழ்க்கைப் பட்டோம்.

  2. பனிச் சிறுத்தை நிதானமாக கண்களை மூடித் திறந்தது. நானும் அனிச்சையாக இமைகளை மெதுவாக மூடித் திறந்தேன். எனக்கு அது ஒரு மவுன உரையாடல் போல இருந்தது. கால(மு)ம் உறைந்து போன அந்தத் தருணத்தில் எவ்வளவு நேரம் இருந்திருப்பேனோ தெரியாது.

  Keep it up, my dear friend, Sri Krishnan. God bless you in abundance.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.