தேடலும் மறத்தலும்

கான்ஜி எழுத்துருக்களில்
あひ見ての
のちの心に
くらぶれば
昔は物を
思はざりけり

கனா எழுத்துருக்களில்
あひみての
のちのこころに
くらぶれば
むかしはものを
おもはざりけり

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் அட்சுததா

காலம்: கி.பி. 906-943. 

பேரரசர் உதாவின் அரசவையில் அமைச்சராக இருந்த ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த தொக்கிஹிரா என்பவரின் மூன்றாவது மகன் இவர். இசை வல்லுநரும் கூட. கட்டுமஸ்தான உடலமைப்பால் பல இளம்பெண்களைக் கவர்ந்த இவரது காதல் விளையாட்டுகள் “யமாதோவின் கதைகள்” மற்றும் அதன் சமகாலப் புதினங்களில் தலைகாட்டுகின்றன. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 30 பாடல்கள் கொசென்ஷூ தொகுப்பிலும் இவரது தனிப்பாடல் திரட்டாகவும் இடம்பெற்றுள்ளன. காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருப்பவர். 

38 வயதிலேயே மரணத்தைத் தழுவினார். இத்தொடரின் 24வது செய்யுளான “செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை”யை இயற்றிய புலவர் மிச்சிஜானே ஃபுஜிவாரா வம்சத்தின் சதியால் இறந்த பிறகு ஆவியாகப் பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தினார் என்று பார்த்தோமல்லவா? இவரது மரணத்துக்கும் மிச்சிஜானேவின் ஆவிதான் காரணம் என்று மக்கள் நம்பினார்கள்.

பாடுபொருள்: பழைய நினைவுகளை மறக்கச் செய்யும் காதல்.

பாடலின் பொருள்: உன்னைப்போல் ஒரு பெண்ணைச் சந்திக்கத்தான் இத்தனை காலம் ஏங்கியிருந்தேன். நேற்று உன் அன்பில் மூழ்கியபின் என் கடந்தகால நினைவுகள் மனதைவிட்டு அகன்றுவிட்டன.

ஜப்பானின் இடைக்கால வரலாற்றில் காதலிக்கும்போது சில வழக்கங்களைக் கடைபிடிக்கவேண்டும் எனப் பார்த்தோமல்லவா? அவற்றில் ஒன்றுதான் தலைவனும் தலைவியும் முதன்முதலில் ஓரிரவு கூடிக் களித்தபின் மறுநாள் காலை காதலைத் தெரிவித்துக் கடிதம் அனுப்புவது. அவ்வாறு அனுப்பாவிட்டால் அது கண்ணியமற்ற செயலாகக் கருதப்பட்டு வந்தது. அக்காலத்தில் பெண்கள்தான் பெரும்பாலும் இத்தகைய கடிதத்தை அனுப்பி வந்திருக்கிறார்கள். கூடலுக்குப்பின் ஆண்களின் காதல் குறையத் தொடங்கியதாலா என்று தெரியவில்லை. இப்பாடலைத் தன்னுடன் இருந்த பெண்ணுக்கு அட்சுததா கடிதமாக அனுப்பியிருக்கிறார்.

அட்சுததாவுக்குப் பல காதல்கள் இருந்ததாக “யமாதோவின் கதைகள்” குறிப்பிடுகிறது. இந்தப் பெண்ணின் வரவால் பழைய நினைவுகள் மனதைவிட்டு அகன்றுவிட்டன என்று மட்டுமே பாடலில் இருப்பதால் உரையாசிரியர்கள் இருவிதமாகப் பொருள் கொள்கிறார்கள். முந்தைய காதல்கள் யாவும் மறக்கப்பட்டுவிட்டன என்றும் இவர்போன்ற ஒரு பெண்ணைச் சந்திக்கக் காத்திருந்த காலத்தில் ஏற்பட்ட இன்னல்களை இக்காதல் மறக்கச் செய்துவிட்டது என்றும் கூறுகிறார்கள். இரண்டையும் இணைத்துப் பார்த்தால், இவர்போன்ற ஒரு பெண்ணைத்தான் தனது முந்தைய காதலிகளிடம் தேடித் தோற்றுப்போய் இன்னல்களை அனுபவித்தாரோ என்றும் தோன்றுகிறது.

வெண்பா:

உண்டு உயிர்த்ததுன் காதலைத் தேடியே
கண்டு விதிர்த்ததும் சாயலது – வேண்டியே
துன்பமிகு சோர்வுறு எண்ணமும் எல்லாம்
மறக்கவே செய்ததுன் அன்பு


பாடல் 45: வெறுமை இறப்புதான் முடிவோ?

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
あはれとも
いふべき人は
思ほえで
身のいたづらに
なりぬべきかな

கனா எழுத்துருக்களில்

あはれとも
いふべきひとは
おもほえで
みのいたづらに
なりぬべきかな

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: இளவரசர் கென்தொக்கு

காலம்: கி.பி. 924-972.

இவரது இயற்பெயர் கொரேததா. ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்தவர். பேரரசர் முராகமியின் வலங்கைப் படைப்பிரிவு அதிகாரியாக இருந்த மொரோசுகேவின் மூத்த மகன். இவரது மகள் பேரரசர் முராகமியின் மகனான பேரரசர் ரெய்ஸெய்யின் அதிகாரபூர்வமற்ற மனைவியாக இருந்தார். பேரரசர் ரெய்ஸெய் தன் தம்பியான என்யூவுக்கு வழிவிட்டு அரசபதவியைத் துறந்தார். பின்னர் என்யூவுக்குப் பிறகு ரெய்ஸெய்யின் மகன் கஸான் அரசரானார். பின்னர் என்யூவின் மகன் இச்சிஜோ சிலகாலம் ஆண்டபின் ரெய்ஸெய்யின் இன்னொரு மகனும் கஸானின் தம்பியுமான சான்ஜோ அரசரானார். இவ்வாறு இரு குடும்பத்தினரும் மாறிமாறிச் சிலகாலம் அரசாண்டார்கள்.

இவர் திறமையும் அழகும் நிரம்பிய இளவரசராக மட்டுமின்றி இலக்கியவாதியாகவும் திகழ்ந்தார். தனது 26ம் வயதில் கொசென்ஷூ தொகுப்பைத் தொகுத்த புலவர் குழுவின் தலைவராகவும் இருந்தார். இவரது தனிப்பாடல் தொகுப்பு இச்சிஜோ செஷ்ஷோ தொகுதி என அழைக்கப்படுகிறது. இச்சிஜோ செஷ்ஷோ என்றால் முதல்நிலை அதிகாரி என்று பொருள். இது தவிர இவரது 37 பிற பாடல்கள் ஜப்பானிய இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றிருக்கிறது. கி.பி 972ல் மரணமடைந்த இவரது உடல் தெனான்ஜி கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது பேரன் யுக்கினாரி பிற்காலத்தில் சிறந்த 3 எழுத்து வரைகலை நிபுணர்களில் (calligraphy masters) ஒருவராகத் திகழ்ந்தார்.

பாடுபொருள்: கைவிட்ட காதலி திரும்ப வரமாட்டாள் எனத் தனிமையில் ஏங்குதல்.

பாடலின் பொருள்: பாவம் என்று பரிதாபப்படக்கூட என்னை நேசிக்கும் மனிதர்கள் இல்லை என்பதை அறிவேன். இப்படியே வெறுமையான வாழ்க்கை வாழ்ந்து இறந்து போவதுதான் என் விதி போலும்.

ஜப்பானிய இலக்கியங்களில் காதலரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இணையாகக் கைவிடப்பட்ட ஆண்களும் காணப்படுகிறார்கள். நேரடியாகப் பொருள்தரும் எளிமையான இப்பாடல் இவரது சொந்த அனுபவமே என ஷூஇஷூ என்ற தொகுப்பின் 950வது பாடலுக்கு எழுதப்பட்ட முன்னுரை பதிவு செய்திருக்கிறது. இப்பாடலை இயற்றுவதற்கு முன்பு இவர் ஒரு காதல் மன்னராகத் திகழ்ந்திருக்கிறார் என்பதை இவரது தொகுப்பான இச்சிஜோ செஷ்ஷோவில் இடம்பெற்றுள்ள பாடல்கள் உணர்த்துகின்றன.

வெண்பா:

பிரிந்தவள் மீண்டல் இலமே பரிவாய்த்
தெரிந்தவர் சொல்லும் இலமே – பிரிவின்
நிலையது நன்றாய் உணர்ந்தே னுறுதியே
வெற்றாய் நிகழும் இறப்பு


பாடல் 46: காதலுக்கு ஏது சுக்கான்?

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
由良のとを
渡る舟人
かぢを絶え
ゆくへも知らぬ
恋の道かな

கனா எழுத்துருக்களில்
ゆらのとを
わたるふなびと
かぢをたえ
ゆくへもしらぬ
こひのみちかな

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் யொஷிததா

காலம்: கி.பி. 10ம் நூற்றாண்டின் பிற்பகுதி. 

தாங்கோ மாகாணத்தில் ஓர் உயரதிகாரியாகப் பணியாற்றினார். பேரரசர்கள் என்யூ மற்றும் கஸான் ஆகியோரின் அரசவையில் புலவராக இருந்தார். நிறையக் கவிதைகளை இயற்றியுள்ளார். இவரது தனிப்பாடல் திரட்டாக யொஷிததா ஹ்யாக்குஷூ என்ற 100 பாடல்கள் அடங்கிய தொகுப்பு இவரது பெயரிலேயே வெளியிட்டிருக்கிறார். ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் 100 பாடல்களைத் தொடராக இயற்றிய முதல் புலவர் இவர்தான். இதுதவிர ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 89 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

இவரது சொற்பயன்பாடுகள் சமகாலத்திலேயே வெகுவாக விதந்தோதப்பட்டன. அப்போதைய கதைகளிலும் புதினங்களிலும் இவரது பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இவரது மனநிலை பிறழ்ந்தவர் போன்ற நடவடிக்கைகளால் பொதுமக்களிடமிருந்து விலகியே இருந்தார். பொதுமக்களும் இவருடன் உறவாட அச்சப்பட்டனர். கி.பி 985ல் பேரரசர் கஸான் என்யூயின் என்ற கோயிலில் ஏற்பாடு செய்திருந்த கவிதைப்போட்டிக்கு இவரை அழைக்கவில்லை. அதனால் கோபமுற்ற இவர் மிக மோசமான ஆடைகளை அணிந்து கவிதைப்போட்டிக் கூடத்தின் வாயிலில் நின்று “இங்குக் கூடியிருப்பவர்களைவிட உன் திறமை சற்றும் குறைந்ததல்ல. உன்னைவிடத் திறமையானவர்களை இவர்களால் அழைக்கமுடியாது” என உரத்த குரலில் தனக்குத்தானே கூறி வெளியேறியிருக்கிறார்.

பாடுபொருள்: தன் காதல் என்னவாகும் எனத் தெரியாமலிருத்தல்.

பாடலின் பொருள்: கடலின் முகத்துவாரத்தில் நுழையும் சுக்கான் இல்லாத தோணி கரைசேருவது எப்படி நிச்சயமற்றதோ, அப்படி இருக்கிறது என் காதல்.

காதலின் நிச்சயமற்ற எதிர்காலத்தை விளக்கும் ஓர் எளிய அகப்பாடல். தற்போதைய கியோத்தோ மாகாணத்தில் மியாசு நகரில் யுரா நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அது கடலில் சேரும் நீரிணைப்பு பேரலைகளைக் கொண்டது. அதில் சுக்கானை இழந்த ஒரு தோணி செல்லுமாயின் கரை ஒதுங்குவது என்பது நிச்சயமற்ற ஒன்று. அதுபோலவே என் காதலும் நிறைவேறுமா என நிச்சயமற்றதாகவே இருக்கிறது. 

A map of a river

Description automatically generated

யுரா நதி

வெண்பா:

தக்கது கொண்டு நெறிக்கா மனமெனச்
சுக்கான் இழந்திடத் தள்ளாடி – அக்கரை
சேர்ந்திடாத் தோணியும் ஒத்ததே காதலின்
பாதை தெரியா முடிவு

Series Navigation<< காதல்வலி விதைக்கும் வெறுப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.