தெய்வநல்லூர் கதைகள் 10

This entry is part 10 of 10 in the series தெய்வநல்லூர் கதைகள்

சங்கீதா வீட்டுப்பாட குறிப்பேட்டில் செய்த விதிமீறலுக்காக தண்டனை பெற்று ஆசிரியர்களும் அதை மன்னித்த சம்பவம் ஒரு திங்களன்று மதியப் பொழுதில் வெளிப்பட்டு அன்றே முடிவடைந்த சம்பவமாக பலருக்கு இருந்தது. ஆனால் சிலருக்கு மட்டும் அந்த சம்பவம் ஒரு மாற்றத்தை, புதிய தொடக்கத்தை உருவாக்கிய முதல் அடிவைப்பு என அமைந்தது. அவற்றை மூன்று விஷயங்களாகப் பகுக்கலாம். 

  1. தெண்டில் அவர் கோஷ்டியாரால் கைவிடப்பட்ட நிலையை அடைந்தார். அந்த அணி அப்படியே நீடித்தாலும் தெண்டிலாரை அவர் அணியினர் முன்பு போல தலைமைப் பொறுப்புக்குரிய மரியாதையுடன் நடத்தவில்லை. தன் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அணியின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும் விதத்தில் அவர் நடந்து கொண்டதாக அவர் அணியினர் கருதினர். அதே நேரம் மாற்று அணிக்கு செல்லும் நோக்கும் இல்லாமல் ஆக்கப்பூர்வ எதிர்கட்சி அரசியல் செய்ய தீர்மானித்தனர். 
  2. ஜான்சிராணி அணியினர் ஆசியஜோதி அணியினருக்கு அளித்து வந்த தார்மீக ஆதரவு மிகக் குறைந்து போனது. குறிப்பாக மெஜூராவும், வள்ளிமயிலும் (குட்டை) தீவிரமாக இயங்கி இனி வகுப்பறைகளை பெருக்கி குப்பை வாரும் பணியினை மாணவர்களின் இரு அணியினரும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென தீர்மானம் இயற்றி கணபதி சார் முன்னிலையில் பேசி முடித்து 3 நாட்கள் ஜான்சிராணி அணிக்கும் இரண்டு நாட்கள் பிற இரு அணியினருக்கும் என பணிப்பகிர்வு செய்யப்பட்டது. 
  3. மிக முக்கிய மாற்றமாக பிரேம் வகுப்பில் முன்பு போல வேகத்துடனும், ஆர்வத்துடனும் இயங்குவது குறைந்து போயிற்று. கணபதி சாரே அவரிடம் என்னடே ஆச்சு உனக்கு? எனக் கேட்கும் அளவுக்கு வெளிப்படையாக பிரேம் ஆர்வமிழந்திருந்தார். கணபதி சாரோ, பிற ஆசிரியர்களோ சங்கீதாவிடம் புத்தகம் வாங்கி பாடம் நடத்துவது, அவரை பிற மாணவியருக்கு கூடுதலாக கற்பிக்கும்படி சொல்வது ஆகியவற்றை நிறுத்தி விட்டிருந்தனர். சங்கீதாவையும் பிற மாணவியர் அளவுக்கே சாதாரண சிறப்புடன் நடத்த ஆசிரியர்கள் முற்படுவது தெரிந்தது. அதற்கு இணையாகவே சங்கீதாவும் ஆர்வம் குறைந்த விதத்திலேயே வகுப்புகளில் இருந்தார். அந்த மாதத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் எவருமே எதிர்பாரா விதத்தில் கு ராமர் முதல் மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆசிரியர்கள் வியப்பையும், சந்தேகத்தையும் வெளிப்படுத்தி பிரேம், சங்கீதா இருவரின் விடைத்தாள்களை பலமுறை பரிசோதித்தனர். இருவருமே தேர்வுகளை சரியாக எழுதாதது தெரிந்தது. ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். 
  4. மூன்றாகப் பகுக்கலாம் என்ற பின்னும் இந்த துணைத்தகவலையும் சொல்லி விடுவது நான் மிச்சமின்றி வரலாறை உரைத்த பெருமையை அளிக்கும் என்பதால் … கிடா தன் வாக்கு மாறாமல் உப்புக் கண்டத்திடம் மூக்குப்பொடி டாங்கனையும், கூடவே ரெண்டு மயில்கண் கோலிகளையும் ஒப்படைத்தார். இந்த டாங்கனால்தான் வகுப்பில்   இபிலீஸின் சாபம் வந்துவிட்டதாக ஹக்கிம் உணர்ந்தார் ( எடே, நல்லா கேட்டுக்க, நீ எதும்மேல ரொம்ப ஆச வைக்கியோ, அது மேலதாம்லா ஒனக்கான சாபத்த இப்லீஸூ எறக்குவான். நம்ம லச்சனத்துக்கு அவனேயா எறங்கி வருவான் பின்ன” – ஹக்கீமின் தாத்தா சகோதரர்களுக்குள் ஒரு சொத்து தகராறை தீர்த்து வைப்பான் வேண்டி வெள்ளி ஜமா அத் முடிந்ததும் பேசியதன் பாதிப்பாக இருக்க 99.99% வாய்ப்பு). ஆகவே ஹக்கிம்  ‌பள்ளிவாசல் உள்ளே  கபர்ஸ்தானுக்கு முன்பாக இருக்கும் கிணற்றில் அந்த டாங்கனை 3 முறை தலையைச் சுற்றி வீசி எறிந்தார். ஆழ்துளை மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு விட்டதால்    அக்கிணறு இன்னும் தூர்வாரப்படவில்லை. ஆகவே ஆதாரம் தேடுவோர் சென்று கிணற்றுக்குள் தேடினால் மூக்குப்பொடி டாங்கன் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் எனினும் இபிலீஸின் சாபத்தையும் கருத்தில் கொள்ளுமாறு தெய்வநல்லூர் மக்கள் சார்பில் பொறுப்புத்துறப்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.  

முழு ஆண்டுத் தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில்தான் வகுப்புச் சூழல் இப்படி ஆகிவிட்டது. அனைவருக்குமே வகுப்புகள் ஆர்வமில்லாத, வண்ணங்கள் வெளிறிய, காய்ச்சல் கஞ்சி சுவைக்கு மாறி விட்டன. இந்த சூழலில் சிவாஜியும், நானும் தனியே பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். பிரேம் எங்கள் குழுவில் சேர்ந்தபோது அவருக்குத் தரப்பட்ட இணைப்பு உறுதிமொழியை மீறி அவர் இன்றி ஒரு ரகசியக் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.  செண்பக விநாயகர் முன்னிலை வகிக்க அவசர ரகசிய கூட்டம் ஆரம்பித்தது. “ நாமதான் இப்ப வகுப்புத் தலைமை அணியா இருக்கோம். நாம தோத்த விஷயத்துல ஜெயிச்சிட்டோம். ஆனா நமக்கு ஜெயிப்பு வாங்கிக் கொடுத்த பிரேம் முன்ன மாதிரி இல்ல. அதுக்கு நாம என்ன செய்யலாம்னு சொல்லுங்கல “ – நான் கச்சிதமாக மனப்பாடம் செய்தது போல விஷயத்தை ஆரம்பித்தேன். ஒவ்வொருவரும் அவரவர் வருத்தத்தை முன்வைத்தனர்.

“கணக்குல்லாம் எனக்கு பிரேம்தானல சொல்லித்தருவான். இப்ப கேட்டா அப்றம் பாக்கலாம்ன்கான். அவங்க அம்மா என்கிட்ட இவனுக்கு என்னாச்சுன்னு கேக்காங்கல. நான் என்னல செய்யட்டும்?” – யக்கா பாட்ஷா

“இங்க்லீஷ்ல அர்த்தம் கேட்டா முன்ன மாதிரி சொல்ல மாட்டேங்காம்ல. பரிச்சைக்கு ரெண்டு நாள் முன்ன முக்கியமான கேள்வில்லாம் குறிச்சி கொடுப்பாம்லா, இந்த மட்டம் செய்யல. கேட்டதுக்கு எனக்கும் தெரியாதுன்னுட்டான்” – கிடா கருப்பசாமி

“பொம்பளப் புள்ளக முன்னமாதிரி பண்டங்கொடுக்கது இல்ல. இப்பதான் நாம பஸ்ட் அணியா ஆயிட்டோம்லா. இனி பொட்டப் புள்ளைக பெஞ்சுலருந்து பண்டம் எடுக்கலாம்னா அதுக்கு மொறைக்காம்ல என்னய. முந்தாநா கூட எசக்கியம்மா புளியங்கொட்ட வறுத்து கொண்டாந்து திங்கால. நான் மொறச்சி பாத்ததுக்கு வளிச்சம் காட்டிட்டு திங்கா. எனக்கு எம்புட்டு கொதியா இருந்துச்சு தெரியுமால ?” – மு மாரியப்பன்

“வன்டபே சீனாமுறை காம்ல. தெண்டில் மண்ட்செய் வெனஓதி சிவைருப்பாம்ல. தாஞ்சொ ணங்கி கெடக்ம்ப்ரேம்.  லாமாரிமன் கோவிலுக்கு போய்தீர் தம்தெளிச்சி வர்வாம்லா ” ( அவன்ட்ட பேசினா முறைக்காம்ல. தெண்டில் மண்ட செய்வினை ஓதி வச்சிரும்பாம்ல அதான் சொணங்கி  கெடக்காம் பிரேம். ஏல, மாரியம்மன் கோவிலுக்கு போய் தீர்த்தம் தெளிச்சி வருவமால?) – சொன்னது யாரென அவையோர் அறிவீர்களாததால்…

சிவாஜி அவரது வழக்கமான தன்னிலை இழந்தார்- “ஏல, ஆடு போட்டா புழுக்க, அப்ப மாடு போட்டா துழுக்கையா ன்ன மாதிரி சலம்பிக்கிட்டு… பிரேம் முன்ன மாதிரி ஆவணும்னா என்ன செய்யணும்னு கேட்டா சாமியாடி செல்லாத்தா, வட்டிக்கு வேட்டிய புடுங்காத ஆத்தா ன்னா மாதிரி அவன் அவன் சொந்தக் கதைய வில்லுப்பாட்டு படிக்கீங்க.. “ சிவாஜி எந்த நிலையிலும் தான் பட்டவாரத்தியின் பேரன் என்ற நிலை மாறியவரில்லை. முந்தைய மூன்று தினங்களில் கோழிக்கொடல் அம்மையின் திருவாக்குகளை சிவாஜி வழியே மறுவாக்காக எங்களால் கேட்கமுடியும் என்பதை 90 களின் குழந்தை வாசகர்கள் “மறுஒளிபரப்பு” அல்லது “மேட்ச் ஹைலைட்ஸ்” என்ற உதாரணம் மூலமாகவும் , 2000 களின் குழந்தை வாசகர்கள் “ஓ டி டி ஸ்ட்ரீம்” என்பதன் வழியாகவும் புரிந்து கொள்க.    

சிவாஜி கூட என்ன செய்வதென சிந்தித்து சிரம் தாழ்த்தி அமர்ந்திருக்கையில் அப்போதைய தமிழ்ப்பட நாயகர்களுக்கு உதவவென்றே அமைக்கப்பட்டிருந்த நடிகர் “திலீப்” போல சேமியா ஒரு யோசனை சொன்னார்.  சேமியா தரும்  யோசனையின் சிறப்பே யாரிடம் யோசனை கேட்டால் சரியாக வரும் என யோசனை சொல்வதுதான். அவர் யோசனைப்படி நாங்கள் இருவர் மட்டும் (நானும், சிவாஜியும்) மெஜூரா ஜெயலட்சுமியை தனியே சந்தித்து கூடுதல் விஷயங்களை அறிய  வேண்டும் என்பது.  இம்முறை சிவாஜியே சற்று குழப்பம் அடைந்தார். கையொப்ப ஊழல் வெளிப்பட்ட அன்றிலிருந்தே வகுப்பின் ஒழுங்குமுறையில் ஏதோ சரியில்லாமல் போனது என்பதை உய்த்தறிய முடிந்த சிவாஜியாலும், என்னாலும் அதில் பிரேம் ஏன் “தவங்கிப்” போகவேண்டும் என்பது புரியவில்லை. அதை பிரேமிடம் கேட்பதற்கும் எங்களுக்கு துணிச்சலில்லை. ஆசியஜோதி அணியில் பிரேம் இணைந்ததுமே தினமும் மாலை நாங்கள் சேர்ந்து விளையாடுவது என்றாகியிருந்தது. பிரேம் அம்மா அவ்வப்போது எங்களுக்கு ஏதாவது திண்பண்டங்கள் தருவதும், நாங்கள் முதலில் வீம்பாக மறுப்பதும், மு மா தாங்க முடியாமல் முதல் ஆளாக எடுத்துக் கொண்டதும் அனைவரும் பாய்ந்து அவரவர் பங்கை எடுத்துக் கொள்வதும் வழக்கமாகியிருந்தன. முதல்முறையாக பிரேம் வீட்டில்தான் நாங்கள் முத்து காமிக்ஸ் பார்த்தோம். கேட்டோம். படித்தோம் என்பது பின்னாட்களில் நிகழ்ந்தது. முதலில் எங்களுக்கு படங்களைக் காட்டி அந்த உரையாடல்களை பிரேம் வாசித்தார். அந்த உரையாடல்கள் வழியே எங்களால் கதையை ஊகித்து அறிய முடியவில்லை என்பதை உணர்ந்த அவர் வேறு ஒரு வழிமுறையைக் கையாண்டு எங்களை வாசிப்பிற்குள் கொண்டுவந்தார். 

அதாவது முதலில் கதைநாயகர்/களை அறிமுகம் செய்வார். (டெக்ஸ் எப்பவுமே மொரட்டு வீரன். ஆனா ரொம்ப நல்லவன். நீதிக்கு போராடுவான். கூடவே வர்ற கார்சன் வயசான ஆள். ஆனா டெக்ஸ் போலவே பலசாலி. டெக்ஸுக்கு எதுவும் ஆக விடமாட்டார் கார்சன்).  அடுத்ததாக அந்த காமிக்ஸ் புத்தகத்தின் கதை என்ன என்பதை சுருக்கமாக விவரிப்பார் (ஒரு அமைதியான குடும்பம் விவசாயப் பண்ணை வச்சிருக்காங்க. ஜெயில்ல இருந்து தப்பிச்சு வர்ற ஒரு போக்கிரி கும்பல் அவங்க எல்லாரையும் கொன்னுட்டு கொள்ளையடிச்சுட்டு அதையெல்லாம் செவ்விந்தியங்க செஞ்ச மாதிரி ஏமாத்து வேலை பண்ணிட்டு தப்பிக்கறாங்க. இது செவ்விந்தியர் மேல வர்ற அபாண்டம்ங்கறதுனால அதைக் கண்டுபிடிக்க டெக்ஸும், கார்சனும் வர்றாங்க. எப்படி கண்டுபிடிச்சு அந்த போக்கிரிகளப் பழிவாங்கறாருங்கறதுதான் கதை. இப்ப புரிஞ்சதா? வாசிக்கலாமா?”). இதுபோக கதையை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும் பண்பாட்டு துணைக்குறிப்புகள், புவியியல் விவரணைகள், வரலாற்று குறிப்புகள், கதைகளில் வரும் பொருட்கள் குறித்த தெளிவுபடுத்தல்கள் ஆகியனவும் உண்டு ( ஞ்செஸ்டர் இல்லடா டொம்ப்ளி, அதை வின்செஸ்டர் ன்னு சொல்லணும். சொல்லு, வின் செஸ்டர் … சரி விடு ஒனக்கு அது ஞ்செஸ்டர்தான். அது ஒரு துப்பாக்கி. அதைத் தயாரிச்ச கம்பெனி பேரயே அதுக்கு வச்சிட்டா. இந்தக் கதையெல்லாம் 1860 க்கு அப்றமா நடக்கறதுங்கறதுக்கு உதாரணமே அந்த துப்பாக்கிதான். அப்ப அதுதான் ரொம்ப தூரம் கரெக்டா குறிபார்த்து சுடற துப்பாக்கியா இருந்ததாம்; அவங்கள்ளாம் நம்மள மாதிரி அரிசி சாதம் சாப்பிடமாட்டாங்க, ப்ரெட்,.. அய்யோ, பெட்டில்லடா, அது படுத்துக்கறதுக்கு, நம்ம ஊர்ல ரொட்டின்னு சொல்லுவோமே அதத்தான் சாப்பிடுவாங்க. … ஜுரம்லாம் கிடையாது அவங்களுக்கு, அதோட (ரகசியமான வேண்டாவெறுப்பான கிசுகிசுப்பான குரலில்) மாட்டுக் கறியும்தான் சாப்புடுவாங்க. … டேய் யக்கா, நீ ஆடு, கோழில்லாம் சாப்பிடுவல்லடா, எனக்காக மாடு மட்டும் சாப்பிடாதடா ப்ளீஸ்…)     –விரிந்த மிதக்கும் கண்களும், எங்கோ ஒரு உலகில் சஞ்சரிக்கும் குரலும், விரைவான கை,உடல் அசைவுகளும் கொண்ட  இயல்புக்கு மாறான பிரேமை அப்போது மட்டும்தான் பார்க்க முடியும்.  

முத்து காமிக்ஸ் தவிர ராணி காமிக்ஸ், பூந்தளிர் ஆகியவையும் எங்களால் வாசிக்கப்பட்டன. நாடாக்கமார் தெருவில் இருக்கும் காமராஜ் வீட்டில் பூந்தளிர் வாங்குவதாக நியூஸ் சந்திரன் சொன்ன அன்று மாலையே என்னையும், சிவாஜியையும் அழைத்துக் கொண்டு பிரேம் காமராஜ் வீட்டுக்கு சென்றார். நாங்கள் வாய் பிளந்து நிற்கும் விதத்தில் காமராஜ் அப்பாவும், உள்ளூர் கூட்டுறவு சங்க செயலருமான தங்கப்பாண்டியன் அவர்களிடம் நேரே சென்று சுய அறிமுகம் செய்துகொண்டு தனக்கு பூந்தளிர் படிக்கக் கொடுக்குமாறும் தான் பத்திரமாக மூன்று நாட்களில் திருப்பித் தருவதாகவும், பதிலுக்கு காமராஜ் வாசிக்க தன்னிடமிருக்கும் காமிக்ஸுகளையும், அணில் அண்ணாவின் வீரப்பிரதாபன் கதைப் புத்தகங்களையும் படிக்கத் தருவதாகவும் சொன்னார். பிரேமின் பேச்சால் கவரப்பட்ட திரு. தங்கப்பாண்டி அந்த ஏற்பாட்டுக்கு காமராஜையும், அவர் அக்காக்களையும் சம்மதிக்க வைத்தார். காமராஜின் அக்காக்களிடமிருந்துதான் பின்னாட்களில் பிரேம் மாலைமதி போன்ற மாதநாவல்களை வாசிக்க ஆரம்பித்தது.  பூந்தளிர் வந்தால் முதல் நாள் பிரேம் மட்டுமே படிப்பார். அன்று அவர் வீட்டுக்கு வர எங்களுக்கு அனுமதி கிடையாது. மறுநாள் அவர் எங்கள் அனைவரையும் வரவழைத்து கதைகளை வாசிக்கச் செய்து கூடவே விவரித்து, விமரிசித்து நிகழ்த்து கலை நிபுணராக மாறுவார்.  இவை தவிர பிரேம் எங்களுக்கு எழுத்துப் பயிற்சி, மனப்பாடப் பகுதியைப் படித்தல், கணக்குடன் எங்கள் பிணக்கை நீக்குதல், ஆங்கிலப் பாகற்காயை அரிசி கழுவிய நீரில் ஊற வைத்து புளி சேர்த்து கொதிக்க வைத்து வெல்லமிட்டு  இறக்கி அம்மொழியின் அன்னியத்தன்மையை நீக்கி அருளுதல் ஆகியவற்றையும் செய்வார், கூடவே ஒவ்வொரு பாடத்திலும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனக்கென ஒதுக்கி வைத்துக் கொண்டு அதை மட்டும் எங்களுக்கு அருளிச் செய்யாது “திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம்” என உள்ளொளித்து புன்சிரிப்பார்.  

நாங்களும் எந்த விலையில்லா சேவையையும் ஏற்றுக் கொள்பவர்களல்லர் என்பதால் பிரேமுக்கு அவர் வாழ்ந்திராத இன்னொரு வாழ்க்கைமுறையை (இன்றைய சமூக ஊடக மொழியில் “வாழ்வியலை”) அனுபவிக்கச் செய்தோம். பம்ப் செட்களில் குளிக்க ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் ஒவ்வொரு கிணற்றுக்கு அழைத்துப் போதல், “பகல் கரண்ட்” இல்லாத நாட்களில் கிணற்றில் குதித்து நீந்துதல்,   மாதம் ஒருமுறையாவது எவராவது போகையில் மாட்டு வண்டியில் ஏறி  ராமர் கோவில்  போதல், அங்கு அருகிலிருக்கும் தாமரைக் குளத்தில் இறங்கி பூப்பறித்தல், ஆறுமாதம் மட்டுமே நீர் வரும், மழைக்காலங்களில் முழங்காலைப் பிடிக்க முயலும் அளவுக்கு கடும்  வெள்ளப்பெருக்கு கொண்ட நிட்சேப நதியாகிய மாட நதியின் இரு கிளைகளிலும் (வடகால், தென்கால்) நீராட அழைத்துச் செல்லுதல், பெரும் கருங்கற்களைக் கொண்டு ஆடும் பேந்தான் ( தெருவோர் எங்கள் கல்லெறி வண்ணம் கண்டு “பகல்பத்து” பாடுகையில் கல் பேந்தான் ஓட்டுப் பேந்தானென மெல் விளையாட்டாகவும் மாறும் என அறிக) ஆடுதல், எவர் வீட்டின் பின்புறமும் காடென வளர்ந்து விறகென தனை ஈனும் சீமைக் கருவேலம் வெட்டப்படுகையில் வெட்டுபவரை நச்சரித்து வீச்சில் மயிர் பிளக்கும் அவர் அரிவாளால் செய்யப்பட்ட செல்லாங்குச்சி எனும் கிட்டிப்புள் எனும் கிட்டிக்கம்பு எனும்  கில்லி எனும் அமெரிக்க ஸாஃப்ட் பால் விளையாட்டின் ஆதி முன்வடிவ விளையாட்டில் சிறப்புப் பயிற்சி அளித்தல், “கம்புத் தள்ளி” எனும் தனித்தன்மை விளையாட்டில் கடும் பயிற்சி அளித்தல், கள்ளம்போலீசு விளையாட்டில் கள்ளனாகவும் காவலனாகவும் உடனே உடனே  மாறிக் கொள்ளும் வித்தையை கற்றுக் கொடுத்தல், “ஆறுகுழி எக்கான், நாலு குழி எக்கான், உச்சு பேந்தான், வெரல் பேந்தான் ஆகிய கோலிவிளையாட்டின் வகைப்பாடுகளை விளக்கி அவற்றில் ஈடுபடுத்துதல் ஆகியவற்றை அவருக்கு அனுபவிக்கக் கற்றுக் கொடுத்தோம். 

மட்டுமன்றி உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனும் சங்கச் சொல்லுக்கு உண்மையாக அவரளித்த பண்டங்களுக்கு மாற்றாக ஈஸ்வரம்பிள்ளை தோப்பில் “மாங்காய உப்பு வச்சு நச்சி “ தயாரிக்கப்படும் பண்டம், இலங்குளக் கரையின் விதைப்புளியங்காய்பழத்தின் சதைப்பற்றில் கொடிக்கா வெள்ள மெளகா ஒண்ணே ஒண்ண மட்டும்  உப்பு வச்சி நச்சி தயாரிக்கப்படும் பண்டம்,  புளியங்காய் கிடைக்கா நாட்களில் புளிய இலைக் கொழுந்து கொண்டு மேற்சொன்ன பத்தியத்தில் தயாராகும் பண்டம், ஆற்று மணலில் காலையில் புதைத்து  வைத்து மதியம் வரை நீராடிய பின் வெளியில் எடுத்து சாறு வழிய சக்கை பிழிய உண்ணும் பனம்பழம் (இந்த கறுப்பும், மஞ்சளும் வேற எந்த பழத்துலயும் இல்லாத கலர்ங்க, இல்லையாடா சிவாஜி? – பிரேம்), இனிப்பு டோக்ளாவிற்கும், வங்கத்தின் ரசகுல்லாவுக்கும்  இயற்கை ஆதார உந்துதலாக அமைந்த {முளை விட்ட பனங்கொட்டையை உடைத்து எடுக்கப்படும்} தவுணு  எனும் பண்டம், தின்று அடைந்த வயிறை மறுநாள் சால மிகுத்துப் பேள வைக்கும் வாசமுள்ள அவித்த/வாட்டிய பனங்கிழங்கு,  கருப்பட்டி இட்டு ஆட்டிய எள்ளுப் பிண்ணாக்கில் கூடுதல் கருப்பட்டி சேர்த்து தின்னும் பண்டம் ( டும்ரீக்கோல், நேத்து சாப்ட்ட கருப்பட்டி புண்ணாக்கு மாதிரியே காலையிலே ஆய் போச்சுடா, வயத்த வலிக்கலங்கறதுனால நான் பயப்படல, வேறொண்ணும் பண்ணாதுல்லயா? – தனியே அழைத்துச் சென்று பிரேம் டும்ரீக்கோலிடம் ஐயம் தீர்த்துக் கொண்ட காதை), பம்ப் செட் குளியலின்போது ஆங்கே விளைந்திருக்கும் பிஞ்சு வெண்டை, தக்காளி, பைத்தங்காய் (- வரப்பின் ஓரம், ஊடு பயிராய் இடப்பட்டிருக்கும் உளுந்துச் செடியின் பிஞ்சுக்காய்), இலைக்குக் கீழ் மறையாமல் பரத்தை மகளிரென பளீரென தனைக் காட்டிக் கொண்டு கிடக்கும் வெள்ளரிக்காய், பாலுறையும் பருவத்தில் பறிக்கப்பட்டு பொரிந்து விடாத பதத்தில் நெருப்பில் வாட்டப்பட்டு உப்பு தொட்ட எலுமிச்சையால் ராமரின் அணில்தொடுகை போல தடவப்பெற்ற வெள்ளை/சிவப்பு சோளக்கொண்டைகள், ராமர் கோவில் போன்ற பரம்புப் பகுதிகளில் நம் நல்லூழ் கொண்டு கிடைக்கும் மிதுக்கம்பழம் (கொடியெனப் படர்ந்து குட்டிப் பாகற்காய் அளவில் இன்றைய தர்பூசணி தோற்றத்தில் இருப்பது; காயெனில் வத்தலாகும், பழமெனில் எமக்குணவாக்கும் என்றறிக), எப்போதாவது அபூர்வமாக மலையடிவார தோப்புகளிலிருந்து கழிவாகக் கொட்டப்படும் கொட்டை பிதுக்கப்பட அண்டிப்பழம் ( ஆபாசமென்போர் அறிக –  இன்று பொதுவில் கேஷ்யூ எனவும் தமிழில் கேஷ்யூ நட் எனவும் அழைக்கப்படும் முந்திரி அன்னாட்களில் தெய்வநல்லூர் பகுதிகளில் அண்டிப்பருப்பு என்றே அழைக்கப்பட்டது என்பதால் நம் மனதின் மாசை வாசிப்பின்மீது படரவிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது) , வேறெந்த பண்டங்களும் கிட்டாத காலத்தில் பஞ்ச கால உணவாக ஏற்றுக்கொள்ளப்படும் கோவைப்பழம் (அதெப்படிடா அமுக்குடப்பா ? இவ்ளோ முள்ளுகாட்டுல கிளியும், மைனாவும் சுத்தற மரத்துலதான் கோவக்காய் இருக்கும்னு கரெக்டா சொன்ன? – பிரேம் அபூர்வமாக வெளிப்படுத்தும் உணர்வான வியப்பை வெளிப்படுத்திய மிக அபூர்வ தருணம்), கார்த்திகை தொடங்கி மாசி வரை வெற்றுமனைகள் எங்கும் கருப்பிலும், சிவப்பிலுமாக விளைந்து கிடக்கும் மணத்தக்காளி பழங்கள், சாதாரண குரலையும் எம் டி ராமநாதன் குரலுக்கு இணையாக ஆக்கிவைக்கும் கன்னியர் கன்னச் சிவப்பை வண்ணத்திலும், அவர்தம் கன்னம் தொட்டிருக்கும் சுருள் குழலை வடிவத்திலும் கொண்டிருக்கும் கொடுக்காபுளி, எலுமிச்சை தோட்டத்திலிருந்து வருவோர் எப்போதாவது எடுத்து வரும் இலந்தப்பழம், நல்லதண்ணி கெணத்து தோட்டத்தில் இருக்கும் நெல்லிக்காய், அச்சந்தி நவாச்சாலையில் அரைக்கிலோமீட்டர் தொலைவுக்கு சாலையின் இருமருங்கும் நெருங்கி வளர்ந்து சாலையை கருநீலமாக மாற்றி வைத்திருக்கும் நாவல் மரங்களின் பழங்கள்   என இன்றைய வெஜ் பேலியோவை அன்றே அவருக்கு அனுபவிக்கக் கொடுத்தோம். 

இவை போக பள்ளிவாசலில் விற்கப்படும் சேமியா ஐஸ், பால் ஐஸ், சீவல் ஐஸ், கல்கோனா, சூடம் மிட்டாய், தேன் மிட்டாய், ஜூஸ்பொரி, குச்சி மிட்டாய், சீனி மிட்டாய், சீரக மிட்டாய், சவ்வு மிட்டாய், கைமுறுக்கு, சுத்து முறுக்கு ஆகியன குழுவில் வசதியுள்ளோர் வாங்கும் காலத்தில் பகுத்துண்ணப்படுவதிலும் பிரேமுக்கான சிங்கப்பங்கு கொடுக்கப்பட்டது.  

முதன்முறையாக பிரேம் தான் வீட்டிலிருந்து பண்டங்களை எடுத்து வந்து இடைவேளைகளின் போது வகுப்பிற்கு வெளியே மரத்தடியில் வைத்து உண்பதை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஆண்டிற்கு இருமுறை பொட்டுக்கடலை கொண்டு வரும் மு மா எதுவுமே கொண்டு வராத அமுக்குடப்பாவை ஒரு நாள் “வாங்கித்தின்னி, தராத்தின்னி, தாந்தின்னி” என்ற வசைபாடல் பாடி கேலிக்குள்ளாக்க அமுக்குடப்பா அழுது விலகினார். முதல்முறையாக பிரேம் கோபமடைந்ததைப் பார்க்க நேர்ந்தது. ( இல்ல பிரேம், அவன் அப்பா எஸ்டேட்ல வேலைக்கு போகையில யான அடிச்சி செத்துட்டாரு, அவம் அம்மாக்கு மேலுக்கு ஏலாது. அதுக்காண்டி அதும் வேலைக்கு போவமுடியாதுன்னுட்டு பீடி சுத்தும். இவனுக்கு ஒரே தங்கச்சி. அவளும் சக்கட்டி (ஒரு காலை சாய்த்து விந்தி நடப்பது). அதனால அவளும் பள்ளிக்கூடம் போவல. அவளும் அம்ம கூட சேந்து பீடி சுத்துவா. இவனும் பள்ளியூடம் விட்டதும் போயி இருந்து எல வெட்டி, கட்டு எண்ணி சுத்தி வச்சிட்டுதான் வருவான். இவனாச்சும் இங்க சத்துணவு சாப்டுட்டு, பெறகு ராத்திரி கஞ்சி குடிப்பாம். அவம் அம்மாவும், தங்கச்சியும்  ராத்திரிக்கு மட்டுந்தான் சுடுகஞ்சி குடிப்பாங்க. அவன் அதான் ஸ்கூலுக்கு லீவே போடமாட்டான் – சிவாஜி பிரேமிடம்). 

மறுநாள் தன் வீட்டிலிருந்து கொண்டுவந்த சீடை, முறுக்கை எடுத்தபோது அங்கே அமுக்குடப்பா இல்லாததைக் கவனித்த பிரேம் வகுப்புக்கு உள்ளே தலைகுனிந்து அமர்ந்திருந்த அமுக்குடப்பாவிடம் சென்றார்- “எழுந்திர்ரா அமுக்குடப்பா, ஒன்ன விட்டுட்டு நாங்கல்லாம் எப்படிடா சாப்புடுவோம்? எதுக்குடா இப்டி ஒக்காந்துருக்க?” அமுக்குடப்பா தலையை நிமிர்த்தாமலேயே மறுப்பாக தலையசைத்தார் – “ஓ, பெரிய ரோஷம் வந்துடுத்தா ஒனக்கு? அவன் கேட்டானாம் , இவன் அழுதுட்டு ஒக்காந்துருக்கானாம். இப்டியேவாடா இருப்ப? படிச்சி வேலைக்குப் போயி சம்பாதிப்பல்லயா. இப்ப நாங்க கொடுத்தத விட அப்ப ஜாஸ்தியா வாங்கிக் கொடுடா. நாங்கல்லாம் வெக்கப்படற மாதிரி வாங்கிக் கொடு. அப்டி கொடுப்பேன்னு தைரியமாச் சொல்லுடா அவங்கிட்ட. தைரியமில்லாம அழுதுண்டு? பெரிசானப்பறம் வாங்கித் தருவல்லடா?” . அமுக்குடப்பாவின் கண்களில் நீர்கட்டியிருந்ததையும் தாண்டிய மினுமினுப்பு எழுந்தது. அமுக்கு டப்பாவின் கையைப் பற்றி இழுத்து வந்தார் பிரேம். “ மு மா, நீ அவங்கிட்ட மன்னிப்பு கேக்கணும், அவன் வீட்ல எப்டி இருக்குன்னு  ஒனக்கும் தெரியுமில்ல, அவங்கிட்ட நீ மன்னிப்பு கேக்கல, நான் இனிமே யாரோடயும் பண்டம் சாப்பிட வரமாட்டேன்”- பிரேம் சொன்னதும் அனைவரும் மு மா வை முறைத்ததாலும், வாரத்தின் 5 நாட்களிலும் பண்டம் கொண்டுவருவது பிரேம் தான் என்பதாலும்  வேறு வழியின்றி மு மா மன்னிப்பு கேட்டார். “மாப்பு மன்னிப்பு, தோப்பு மன்னிப்பு” என மும்முறை மன்னிப்பு கேட்ட பிறகே மு மா வுக்கு பண்டம் வழங்கப்பட்டது. அதிலிருந்து பிரேம்  யார் வேண்டுமானாலும் பண்டங்கள் கொண்டு வரலாம், ஆனால் கொண்டுவராதவர்களை எதுவும் கேட்கக்கூடாது என்ற கடும் நிபந்தனையையும் விதித்தார்.  இருப்பினும் விடிகாலையில் ஊருணிக்குச் செல்கையில் கிடைக்கும் பனம்பழம் , விடுமுறை நாட்களில் பிணையலுக்கு மாடு  பத்த செல்லும்போது  அவருக்கு காப்பியுடன் தரப்படும் காராச்சேவு போன்றவற்றை அவ்வப்போது அமுக்குடப்பா கொண்டுவரத்தான் செய்தார். 

மாட நதியின் கசங்களில் ( ஆற்றின் போக்கில் ஆங்காங்கே இருக்கும் பெரும் பாறைப் பள்ளங்களில் நீர் நிரம்பியிருப்பதால் உருவான ஆழமான இடங்கள்) மீன் பிடித்து சுட்டுத் தின்னல், பாட்ஷா கொண்டுவரும் உப்புக்கண்டத்தை வாட்டித் தின்னல், மிதுக்கம்பழம் தேடிச் சென்று காடை முட்டை கிடைத்தால் சுட்டு உடைத்து தின்னல், கொடைவிழா முடிந்த மறுநாளில் சுட்ட கறி எடுத்து வந்து தின்னல் ஆகிய நாட்களில் மட்டுமன்றி அதற்கு மறுநாளும் பிரேம் எங்களுடன் பகுத்துண்ண வருவதில்லை.  

இதுபோக தெய்வநல்லூர் பள்ளி வரலாற்றில் பல முதன்முறைகளைச் செய்த பிரேம் செய்த இன்னொரு முதன்முறை செயல்  எங்களை வியப்பிலாழ்த்தி ஆசிரியர்களையே பாராட்டும்படிச் செய்தது. பிரேம் நெட்டை வள்ளிமயில் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தினமும் தன் அணியின் பண்டங்களில் ஒரு பங்கை அவர்கள் அணிக்குக் கொடுத்து அவர்கள் அணியினரிடமிருந்து மாற்றாகப் பண்டங்களைப் பெற்றுக் கொள்ளும் ஏற்பாட்டைச் செய்தார். இதன் பயனாக ஒரே நாளில் வெவ்வேறு பண்டங்களை சுவைக்கும் வாய்ப்பு ஆசியஜோதி நேரு அணியினருக்கும், ஜான்சிராணி அணியினருக்கும் கிட்டியது. இந்த ஏற்பாட்டை ஜான்சி அணியினர் தம் முன்னனுபவம் காரணமாக முதலில் மறுத்தாலும் ஊதா சுகுமாரியிடம் முன்பே பேசியிருந்ததன் வழியே எங்கள் நேர்மையைப் புரிந்து கொண்ட சங்கீதா தான் பெண்கள் அணியை சம்மதிக்க வைத்தார்.  மேலும் சங்கீதா வழியாகத்தான் பலாப்பழ அப்பளம் (இன்று அதைச் ஜாக்ஃப்ரூட் சிப்ஸ் என்பார் தமிழர்), வாழைப்பழ அப்பம், குண்டு அப்பம் போன்ற தெய்வநல்லூர் அதுவரை காணாத பண்டங்களும் எங்களுக்குக் கிட்டின. 

பண்டமாற்று காரணமாக அதுவரை பெண்கள் பிரிவு மீதிருந்த மரியாதைக் குறைவு மாறி அவர்களது ஆலோசனைகளின் சிறப்பு எங்களுக்குப் புரியவாரம்பித்தது (1. உப்பு, காஞ்ச மொளவா, வறுத்த உளுத்தம்பருப்பு மூணையும் நல்லா ஒரல்ல இடிச்சு வச்சிக்கிட்டா நெல்லிக்கா, கொய்யாக்கா, வெள்ளரிக்கா  மூணுக்கும் தொட்டு திங்கலாம், கொடுக்காப்புளி, நாகப்பழம் தின்னதும் கடைசி பழத்தோட இந்த உப்பத் தொட்டு தின்னா தொண்ட கட்டாது – பாண்டியம்மாள் –  வகுப்பிலுள்ளோரால்  உள்ளளவும் நினைக்கப்படுபவர்   2. பனங்கிழங்கு தின்னா கடசீல சின்ன துண்டு அச்சு வெல்லம் தின்னுட்டு ரெண்டு பீரியடுக்கு தண்ணி குடிக்காம இருந்தா மறுநா வயித்தால போகாது – குட்டை  வள்ளிமயில்  3. தவுண் திங்கற அன்னைக்கு நெல்லிக்காய் திங்கக்கூடாது; தடுமம் பிடிக்கும் – மூக்குறிஞ்சி பொன்னம்மா 4. எதத் தின்னாலும் கடைசில ரெண்டு வெரல் உப்பை வாய்ல வச்சிக்கிட்டு தண்ணீ குடிச்சு உப்போட சேர்த்து கொப்புளிச்சு துப்பிட்டா வாய்லருந்து வாசம் வீசாது – மெஜூரா ஜெயலட்சுமி ). பண்டபரிமாற்றங்கள் வழியே பண்பாட்டுப் பரிமாற்றங்களும் நிகழ்ந்த வரலாறு இது என்க. 

இவ்வளவு நீண்ட வரலாறு ஏன் சொல்லப்பட்டது என்றால் இப்படி உண்டு, களித்துக் கிடந்த எங்கள் பள்ளி அணியினர்  இரு வாரங்களாக   நிகழ்வுகள் ஏதுமின்றி பஞ்சு பிடுங்கிய பருத்திக் காடு போல வெறித்து கிடப்பதன் துயரம் எவ்வளவு ஆழமானது என்பதை உங்களுக்கு உணர்த்த வேண்டியே. இந்த விளக்கத்தின் வழியே எங்கள் அணியின் ரகசிய அவசரக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை இப்போது உணர்ந்துவிட்டீர்கள் இல்லையா? 

Series Navigation<< தெய்வநல்லூர் கதைகள் – 9

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.