
(1) மரத்தோடு உரையாடல்
ஓர் அந்தியில்
மரத்திலமர்ந்து
ஒரு பறவை-
பறவையும் மரமும்
உரையாடுவது போல்
அது அலாதியாயிருந்தது-
அது போல்
மறு அந்தியில்
மரத்தோடு
உரையாடப் போனேன்.
அது
வழக்கமாய்
உரையாடுவது போலில்லை-
எதிரெதிர்
இருவரும் மெளனமாய்-
ஆனால் அது
மெளனமாயில்லாத
மெளனமாய்-
உரையாடலின்
அத்தனை சாத்தியங்களையும்
முடிந்து வைத்துள்ள மெளனமாய்-
மனதின் மொழியாய்
மெளனமாய் மரத்தோடு
உரையாடும் போது, நான்
பறவையாகிக் கொண்டிருக்கிறேன்
என்றுணர்ந்தேன்.
வந்து போகும்
எத்தனை பறவைகளிடம்
எத்தனை விதமாய்
உரையாடியிருக்கும்
மரம்?
ஒரு பறவையும்
மரத்தோடு
சச்சரவு செய்ததாய்த்
தெரியவில்லை.
அப்படித் தான்
உரையாடல்
இருக்க முடியுமோ?
இல்லையென்றால்
எப்படி போகிறேன்
நிதம் அந்தியில்
மரத்தின் மீது அமராது
உரையாடும் ஒரு பறவையாய்
அதன் முன் நான்?
(2) மழையின் பேச்சு
மழையோடு
உரையாடி விடலாமென்று
பார்க்கிறேன்.
ஒரு கணம்
மழை
இடைவிட்டால் தானே.
இடைமறித்துப்
பேசலாம்.
ஆனால்
இடைமறிப்பதற்குள்
இடைமறித்து மழை
இடைவிடாது பேசுகிறது.
வார்த்தையைச் சுட்டும்
வார்த்தையென
வார்த்தைக் கூட்டமாய்
மழைத் துளிகளைப் பொழிந்து
முடிவில்லா அர்த்தத்தை நோக்கிப்
பேசுகிறது.
அதில் ஒரு
த்வனி இருக்கிறது.
அது மெளனத்திற்கு
அழைத்துச் செல்கிறது.
மழையின் பேச்சுக்கு
மறுபேச்சு
மெளனம் என்கிறது.
அதற்கு சாட்சியாய் இப்போது
மழை முன் நின்றிருக்கிறேன்
சும்மா நான்.
(3) என்னைப் பற்றிய விவரங்கள்
பிறந்த தேதி, ஊர்,
பெற்றோரின் பெயர்கள்,
என் பெயர், மொழி,
நிறம், இனம்
என்றெல்லாம்
என்னைப் பற்றிய
எத்தனையோ விவரங்கள்
பகிர உள்ளன-
ஒன்றைத் தவிர-
என் இறந்த தேதி.
பகிரலாம்
உயிரோடு இருந்தால்
இறந்த பின்னால்!
பகிர முடியாத
ஒரு விவரத்தில்
பகிர முடியும் மற்ற
எல்லா விவரங்களும்
பொருளுடையதாய்த் தெரியவில்லை
எனக்கு.
(4) தேர்வு
ஒரு நொடிக்கு
அடுத்த நொடிக்குள்
தீர்மானிக்க எத்தனையோ
தேர்வுகள் உள்ளன.
ஒரு சிறகடித்து
மற்றொரு சிறகடிப்பதற்குள்
தீர்மானிக்க எத்தனையோ
தேர்வுகள் உள்ளன.
எத் திசை செல்லும்?
எவ் விதத்தில் செல்லும்?
நேர்கோட்டிலா?
வட்டமிட்டா?
வளைந்து வளைந்து
விவரிக்க முடியாமலா?
எதிரில் தெரியும் மரக்கிளை
எதிர்பார்த்திருக்கிறதா அதை?
அது அமரலாம்
அமராமலும் போகலாம்
அமர்ந்து
அமர்ந்த கணத்திலேயே
பறந்தும் போகலாம்.
தேர்வில் தன்னைத்
தளைப்படுத்திக் கொள்வதில்லை
பறவை.
தேர்வில் வானம்
சுருங்கிப் போக விடுவதில்லை.
கிளையில்
வந்தமரும் போதும்
வானத்திலிருந்து தூது
வருவது போல் தான்
வருகிறது.
கிளை விட்டுக்
கிளை தாவி
தேர்வைக்
கலைத்துப் போடுகிறது.
அதன் சிறகுகளால்
வானம்
எல்லையின்றி இருக்கிறது.