
மொழியோசை
1
ஆதவி ட்ராயிங் மாஸ்டர் சொன்னதைக் கவனமாகக் கேட்டாள்.
அகலமான ஓவிய நோட்டின் பிரித்த பக்கத்தில்… அரசகுமாரியின் நீட்டிப் பிரித்த கையைப் பிடித்துக்கொண்டு ஒரு குறத்தி. பின்புறத்தில் மாளிகையின் படிகளும் சாளரங்களும். இளவரசியின் அழகு அலங்கரித்த கூந்தலிலும் பொன் அணிகலன்களிலும் பளிச்சிடுகிறது. அவற்றுக்கு மாறாகக் குறத்தியின் சீவிமுடிந்த நரைகலந்த தலைமயிர், பாசிமணி மாலை, புலிப்பல் காதணிகள்.
“குறத்தி முகத்தில கவனமும் சிரத்தையும் இருக்கணும். இளவரசிக்கு நல்லசேதியைக் கேட்கும் ஆர்வம். இதையெல்லாம் கோடுகளாலேயே கொண்டு வரணும்.”
எப்படி என்பதை ஆசிரியர் விளக்கியதும் ஆதவி கூடத்தின் ஒரு மூலையில் அமர்ந்து படத்தில் தீட்டத் தொடங்கினாள்.
அடுத்த வீட்டில் இருந்து கூச்சல். புதிதாகச் சேர்ந்த மாணவி இரண்டு கைகளாலும் காதுகளை மூடிக்கொண்டாள்.
“பையன் கச்சேரி ஆரம்பிச்சுட்டான்” என்று மாஸ்டர் ஜன்னல் கதவுகளை சாத்திவிட்டு வந்தார்.
கலாசாகர் ஓவிய வகுப்பிற்கு ஆதவி வரத்தொடங்கி மூன்று ஆண்டுகளாவது ஆகியிருக்கும். அவளை அந்தப் பையனின் கத்தல் பாதித்தது இல்லை.
விதவிதமான குரலோசைகள். சில நாட்கள் ஒரே சப்தம், சுலோகம் போலத் திரும்பத்திரும்ப.
தப்பி பப்பி கப்பி சொப்பி டப்பி
தர்ர்ர்றி கர்ர்ர்றி செர்ர்ர்றி பெர்ர்ர்றி
வேறு சிலநாளில் இரட்டை சப்தங்கள்.
தட்டிபெட்டி சட்டிமட்டி சுட்டிவெட்டி கட்டிமெட்டி கெட்டிசட்டி
தக்கைசக்கை மக்கைவக்கை
டக்கர்மக்கர் ஜக்கர்லக்கர்
அவனுக்கு ஒன்றையே கத்தி அலுத்துவிட்டால், இல்லை கற்பனை வறண்டுவிட்டால், இடைவெளி விட்டு அட்டகாச அசட்டுச்சிரிப்பு.
அதைக் கேட்டு ஆதவிக்கு சிரிப்பை அடக்க வேண்டி வரும்.
அன்று அவன் குரல் சற்றே ஓங்கி இருந்தது. வித்தியாசமான ஓசை.
கர கர தகமல கதமல
ஆதவியின் மனதில் இனிய அலைகளை எழுப்பியது. அந்தப் பின்னணியில் அவள் மூளை கொடுத்த ஆணைகளைக் கைகளில் பிடித்த வண்ணக்குச்சிகள் நிறைவேற்றின.
ஒருமணிப்பொழுது முடிந்ததும்,
“பிரமாதம்” என்று சொல்லி ஆசிரியர் ஓவியத்தை மேஜை விளக்கின் கீழே வைத்துப் படம்பிடித்தார்.
நோட்டை ஆதவியிடம் திருப்பிக்கொடுத்து,
“இப்ப நீ எத்தனாவது?”
“ஒன்பது.”
“எப்ப ஃபைனல்?”
“செவ்வாய்லேர்ந்து.”
ஆதவிக்குத் தேர்வுகளைச் சந்திக்க பயம் இல்லை. மற்ற குழந்தைகள் போல நின்றுவிடாமல் அந்த சமயத்திலும் அவள் வகுப்புக்கு வருவது வழக்கம்.
“நான் ஒருவாரம் ஊர்ல இருக்க மாட்டேன். அடுத்த வெள்கிக்கிழமை வந்தா போதும். அதுவரைக்கும் மத்த பாடங்களைக் கவனமாப் பண்ணு!”
உடன்பாடாகத் தலையசைத்தாள்.
நோட்டும் பென்சில் பெட்டியும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வாசலில் காத்திருந்தபோது அடுத்த வீட்டில் அவள் பார்வை புகுந்தது.
கூச்சலின் சொந்தக்காரன் எப்போதும்போல ஒரு கிழிந்த நைலான் ஷார்ட்ஸில். சட்டையின் இரண்டு கைகளில் சாப்பிட்டதும் வாயைத்துடைத்து வந்த கறைகள். இழுத்து இழுத்து இடது கை மற்றதைவிட நீளம். வகிடு எடுக்காத தலைமயிர். யாரோ தன்னைக் கவனிப்பதை உணர்ந்து வெளியே வந்து நின்றான். அவளைவிட அவள் அணிந்திருந்த சட்டையின் சூரியகாந்தியின் மேல் அவன் பார்வை குத்திட்டு நின்றது. அதைக் கவனித்த ஆதவி,
“கர கர தகமல கதமல”
ஆச்சரியத்துடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். அவளை முன்பே பார்த்திருக்கிறானா? கும்பலில் தனித்துக் கவனித்ததாக ஞாபகம் இல்லை. ஆனால், பாட்டி, அம்மா, கோமதி மாமி இவர்களுக்கு இல்லாத முகம். என்ன அழகு! என்ன வெள்ளை!
அவன் வாய் முணுமுணுத்தது.
“கர கர தகமல கதமல”
“போலாமா?”
அவள் தெருவில் நடந்துசெல்ல அவன் பார்த்தபடி நின்றான்.
2
நிஷாந்த்துக்குக் காரணம் தெரியவில்லை. காரணம் இருக்கட்டும் யாராவது என்ன நடந்தது எப்போதில் இருந்து என்று கேட்டால் பதில் தெரியாது. அவனுக்குள் ஏதோவொரு மாற்றம் என்ற உணர்வு. அதனால் வருத்தமா சந்தோஷமா? அவன் உலகில் இரண்டிற்கும் அதிக வித்தியாசம் இல்லை.
சில நாட்களுக்கு முன்னால் வரை மாறுதல்கள் இல்லாத அவன் உலகம்.
நடமாட்டம் வீட்டின் எல்லைகளுக்குள். தெருவைக் கடந்தால் எதிர் வீட்டில் கோமதி மாமி. அவள் அவனுக்குப் பிடித்த ‘டோவ்’ சாக்லேட்டின் துண்டுகளை ஒரு தட்டில்வைத்துக் கொடுப்பாள். ஒவ்வொன்றையும் நாக்கில் வைக்கும்போது ஒரே மாதிரியான சுவை வெள்ளம்.
அதையும் தாண்டி வெளியே போவது என்றால் சான்டோரோவை அப்பா ஓட்ட அவன் இடப்பக்கத்தில். போவதற்கும் நிறைய இடம் கிடையாது. வாரத்தில் ஒன்றிரண்டு முறை உடற்பயிற்சிக்கூடம். எப்போதாவது பாண்டுரங்கன் கோவில்.
சுவர்களில் அவன் வளர்ச்சியைக் காட்டும் படங்கள். அவன் அகலமும் உயரமும் அதிகரித்து இருக்கின்றன. அதற்காக அவன் மாறிவிட்டான் என்று அர்த்தம் இல்லை. அவன் போட்டிருக்கும் சட்டையைப் போல. அளவுதான் அதிகம். அவன் எப்போதும் ஒரே நிஷாந்த். முன்பு ஒரு தோசை. அது இரண்டாகி இப்போது மூன்று.
அவனுக்குத் தெரிந்து அந்த வீட்டில் மாறுதல்கள் நிகழ்வது உண்டு. ஆனால் எல்லாமே ஒரு சுழற்சியில். சுவரில் மாட்டியிருக்கும் கடிகாரத்தைப் போல. பெரிய முள் வேகமாகவும் சிறிய முள் மெதுவாகவும் நகர்ந்தாலும் மறுபடி பழைய இடத்துக்கு வரும் என்கிற நிச்சயம்.
வாரத்தின் நாட்கள் அப்படித்தான்.
“அப்பாடா! இன்னும் இரண்டு நாள் ஹாய்யா இருக்கலாம்” என்று அப்பா சொல்லிக்கொண்டே வரும் மாலை நேரம். அம்மா நிறைய சமைப்பாள். அப்பாவின் தங்கை குடும்பத்துடன் சாப்பிட வருவாள். அதில் இருந்து ஆரம்பித்தால் அடுத்த இரண்டு நாட்கள் அப்பாவுடன் நேரம் போகும். பிறகு அடுத்தடுத்து ஒரே மாதிரியான நாட்கள். அப்புறம் மறுபடி அத்தை சாப்பிட வரும் நாள்.
தனியாக ஒரு நாளை எடுத்துக்கொண்டால் அதுவும் ஒரு வட்டம். காலை வெளிச்சம் கண்ணில் விழுந்து எழுந்ததும் தோசை. அம்மா மெல்லிசாக வார்க்க வேண்டும்.
அம்மா தடியான நோட்டில் வார்த்தைகள் வாக்கியங்கள் எழுதச்சொல்வாள். எண்களை வைத்து கூட்டிக்கழித்து மூளையைக் குழப்புவாள். எத்தனையே வருஷங்களாக அதையே திருப்பிச் செய்கிறான். முடிந்ததும் சாப்பாடு. பாட்டி சமையலில் அதிக வித்தியாசம் இருக்காது.
பிற்பகல் தூக்கத்தில் இருந்து விழித்ததும் காப்பி. அத்துடன் காரப்பொரி.
அப்போது தான் கத்தலுக்கு உந்துதல்.
“டிராயிங் மாஸ்டர் வந்ததிலேர்ந்து தான் இவன் கத்தறான்” என்று பாட்டி அவர்மேல் பழி போடுவாள். அது நிஜமா?
அடுத்த வீட்டுக்கு சிறுவர்கள் வருவார்கள். அவர்களுக்குத் துணையாகப் பெரியவர்கள். சத்தமான இருசக்கர ஊர்திகள் அவர்களைக் கொண்டுவந்து இறக்கிவிடும். பிறகு அழைத்துப்போகும்.
அங்கே என்ன செய்கிறார்கள்?
ஏதோ செய்தவிட்டுப் போகட்டும். அவனுக்கு என்னவோ அது புரியப்போவது இல்லை.
கத்தியதால் வந்த களைப்பில் இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு ஆழ்ந்த தூக்கம்
சில நாட்களாக அடுத்த வீட்டுக்குக் குழந்தைகள் நடந்தோ ஊர்தியிலோ வரவில்லை. சிறுபொழுதுக்குப் பிறகு அவர்களை அழைத்துப்போகவும் இல்லை. அந்த வீட்டில் நடமாட்டமும் இல்லை. அதன் பாதிப்பு அவனுடைய மாற்றத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒரே நிசப்தம்! அவன் கூச்சலைக் கேட்பதற்கு யாரும் இல்லையே என்பதால் அதைச் செய்யப் பிடிக்கவில்லையா? அவனுக்குக் கத்த வேண்டும் என்கிற ஆசையே போய்விட்டதா? சேச்சே அப்படி இருக்காது. அவன் குரல் உடைந்து அதில் ஒரு கரகரப்பு. கனமாகக் கட்டையாக மாறிவருகிறது. அது ஒரு நிதானத்துக்கு வரட்டும்.
3
அன்று காலை அடுத்த வீட்டின்முன் முரளியின் கார் வந்து நிற்க, அதில் இருந்து பெட்டி பைகளுடன் இறங்கிய மனிதர்கள். மாலையில் கும்பல் சேருமோ? பழக்கப்பட்ட பகற்பொழுது நகர்ந்தது. காரப்பொரிக் கிண்ணத்தைக் காலிசெய்ததும், முதல்முறையாக முகத்தில் தண்ணீர் தெளித்து, தலையை வாரிக்கொண்டான். அவன் பிறந்தநாளுக்குப் பிறகு மறுமுறை அணியாத ஆடையை எடுத்துப் போட்டுக்கொண்டான்.
அவனுக்கு ஏமாற்றம் தராமல் நடந்தும் ஊர்தியிலும் வந்த இரு சிறுவர்கள்.
அவர்களைப் பார்த்ததும் கத்துவதற்கு உற்சாகம் வந்தது. தலையை ஆட்டி உடலை சில தடவை சுற்றி வலக்கை விரல்களைக் குறுக்கிக் காதில் வைத்தான். பாட்டி கவனித்துவிட்டாள்.
“கொஞ்ச நேரம் சுலோகம் சொல்லுடா!”
கத்தி சொன்னால் போகிறது.
“என்ன சுலோகம்?”
“உனக்கு நிறையத் தெரியுமே.”
கண்களை மூடி யோசித்தான்.
“வாசல்படியில சொல்லட்டுமா?”
“பெருமாள் எங்கேயும் இருக்கார்” என்று வாசல் விளக்கை எரித்தாள்.
“சுக்லாம்பரத்ரம்…”
பாட்டி தவறுகளைத் திருத்தாமல் ரசித்தாள்.
“வஸுதேவ ஸுதம் தேவம்…”
தெருவின் திருப்பத்தில் சூரியகாந்தி சட்டை போட்ட பெண் வருவது தெரிந்தது. கூட வந்தவர் தெருவின் பாதியிலேயே, “ஜாக்கிரதையாப் போ!” என்று திரும்பிநடந்தார்.
‘சுலோகம், பாதியில நிறுத்தக்கூடாது’ என்று உச்சரிப்பைத் தொடர்ந்தான். வாய் ஒலியெழுப்ப பார்வை அந்தப் பூவின் மேல்.
அவள் அடுத்த வீட்டில் நுழைந்தபிறகும் அவனுக்கு சூரியகாந்தியை நேரில் பார்ப்பது போல பிரமை, சந்தோஷம்.
“என்ன அடுத்த வீட்டில இருந்து கத்தலே இல்ல. பையன் ஊருக்குப் போயிருக்கானா?” சகமாணவி கேட்டாள்.
“இங்கே தான் இருக்கான். ஒரு வாரமாகவே அவன் கூச்சல் போடலன்னு கேள்விப்பட்டேன்.” தொடர்ந்து அவர், “சத்தம் இல்லாம என்னவோ போல இருக்கு” என்றார்.
ஆதவிக்குக்கூட நிசப்தம் புரிபடாத இயந்திர ஓசையைப்போல மனதின் அமைதியைக் கெடுத்தது.
“நீ ஜியாமெட்ரி படிக்கிற இல்லையா?” என்ற மாஸ்டர் கேள்விக்கு ஆதவி உடன்பாடாகத் தலையசைத்தாள். “எல்லாவிதமான ஜியாமெட்ரிக் ஃபிகர்ஸை வச்சு வரையறது ஒரு விதம். நீ கணக்கில நன்னா செய்யறதால அந்த டெக்னிக்கைக் கத்துத்தரலாம்னு இருக்கேன். இந்த மாதிரி படங்களைப் பார்க்கும்போது இமேஜ் தான் பட்டுன்னு கண்ணில படணும். உத்துப்பார்த்தாத்தான் ஒளிஞ்சிருக்க ஃபிகர்ஸ் தெரியணும்.”
அடுத்த வீட்டுப்பையன் கொடுத்த நிசப்தத்தில் முக்கோணங்களையும் வட்டங்களையும் வெவ்வேறு அளவுகளில் இலேசாக வரைவதில் கவனத்தைக் குவித்தாள்.
வகுப்பு முடிந்து வாசலுக்கு வந்தாள்.
ஊர்திகளின் இரைச்சல் கொஞ்சம் கொஞ்சமாகத் தெருவில் அதிகரித்தது.
நிஷாந்த் தெரிந்த சுலோகம் அத்தனையையும் சொல்லி முடித்துவிட்டான்.
பயிற்சி முடித்த சிறுவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தார்கள். சூரியகாந்தி சட்டை கண்ணில் பட்டது. அவளை அழைத்துப்போக ஒரு பெரிய ஆள்.
“இன்னிக்கி க்ளாஸ் எப்படி?”
“ஜியாமெட்ரிக் டிஸைன் போட ஆரம்பிச்சிருக்கேம்பா.”
“எங்கே, காட்டு!”
அவள் நோட்டை வாங்கி பிரித்துப் பார்த்தார்.
நிஷாந்த்துக்கு அதைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. எப்படி கேட்பது?
அவன் பக்கம் அவள் திரும்பினாள். தலைவாரி, நன்றாக மடித்த சட்டை பான்ட்ஸில் ஜொலித்த அவனைக் குறும்புப் புன்னகையில் அளந்து,
“கர கர தகமல கதமல”
என்ன சொல்வது என்று அவன் யோசிப்பதற்குள் அவர்கள் இரண்டு வீடு தள்ளிப்போய்விட்டார்கள்.
“கர கர தகமல கதமல” என்று சத்தமாகச் சொன்னான்.
அவள் திரும்பிப் பார்த்தாள். இது வேறுவிதமான புன்னகை.
தெருவின் முடிவில் அவள் இன்னொருமுறை திரும்பிப் பார்க்கும்வரை அவன் அசையாமல் நின்றான்.
4
மறுநாள்.
அப்பா சவரம் செய்தபோது நிஷாந்த் அருகில் நின்று பார்த்தான். திரும்பி அவன் முகத்தின் கருமையைக் கவனித்த அவர்,
“நீ கூட பண்ணணும் போல இருக்கே.”
அவன் யோசித்தான். அதுவரை அவன் செய்யாத ஒரு காரியம்.
“நான் காட்டட்டுமா?”
“ம்ம்..”
அது முடிந்ததும் அப்பாவுடன் உடற்பயிற்சி. ஒற்றைச்சக்கர சைக்கிளில் ஒரு மணி.
மாலை நான்கு மணியில் இருந்தே வாசலில் காத்திருந்தான். சூரியகாந்தி பூக்கவில்லை. ஏன்? ஒரு நாளைப்போல இன்னொரு நாள் இருக்காது. தோசை காப்பி பொரி தினமும் வரிசையாகச் சாப்பிடலாம். ஆனால் சில விஷயங்கள் சில நாட்கள் மட்டுமே. அவனுடைய புதிய உலகின் விதி.
அடுத்த நாள். அந்தப் பெண்ணை இன்னொருத்தி இயந்திர சைக்கிளில் அழைத்துவந்து இறக்கினாள். சூரியனைப் பார்த்த புஷ்பம் போல அவன் முகத்தில் பிரகாசம். சைக்கிளுக்குக் கையசைத்துவிட்டு அவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவன் எழுந்து அவள் பின்னால் நடந்தான். அவள் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே கூடத்தில் ஆசிரியர் முன் அமர்ந்தாள்.
“போன தடவை நான் சொன்னதெல்லாம் பண்ணினியா?”
“ம்ம்…”
“இப்ப அடுத்தபடியா…”
அவன் வாசலில் அவளைப் பார்வையில் இருத்தி நின்றான். சற்றைக்கொரு முறை அவன் திரும்பிப்போய்விட்டானா என அவள் வாசற்பக்கம் பார்த்தாள். அவன், ‘நான் இங்கே தான்’ என்று தலையை ஆட்டினான்.
ஆசிரியர் வழியனுப்பியதும் அவளாகவே வந்து அன்று வரைந்ததை அவனிடம் காட்டினாள்.
“இது என்ன?”
முக்கோணங்கள், நாற்கரங்கள், அறுகோணங்கள். எல்லாம் சேர்ந்து,
“மயில்.”
“கண்டு பிடிச்சுட்டியே.”
“எனக்கு.”
“கலர் வரைஞ்சதும் தரேன்” என்று நோட்டை மூடினாள். “அக்கா வந்துட்டா. நான் போகணும்.”
முகத்தில் சிறு ஏமாற்றம்.
“வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ரெண்டு நாளும் வருவேன். சரியா?”
பதில் சொல்வதற்குள் அக்காவைக் காக்கவைக்காமல் அவன்மேல் வைத்த புன்னகையுடன் நடந்தாள்.
5
நாள்கணக்கு போகப்போக அவனுக்குத் தெரியவரும். அத்தை வரும் நாளில், அப்பா, ‘நாளை வேலைக்குப் போகணும்’ என்று முனகும் நாளில் அவள் வருவாள்.
அத்துடன் இன்னும் பல விஷயங்களை அவன் தெரிந்துகொள்ளப்போகிறான். மாற்றங்களில் சில நிரந்தரமானவை. காலச்சக்கரம் கடிகாரமுள் போல இல்லை. காரின் சக்கரம். அது சுழலும்போது இடம் மாறுகிறது. காரைப் பின்னால் நகர்த்துவது போல காலத்தில் பின்னோக்கிப் போக முடியாது. அவன் அடுத்த கட்டத்தில் சந்தோஷமாகக் கால் வைத்து…
(தொடரும்)