முதல் பகுதி : இச்சா, இனியா, காயா, பழமா?
கெய்ன்சின் ஓரினச் சேர்க்கையைப் பற்றி நாம் பார்த்தோம். வளம் கொழித்த தொழில் வாழ்க்கை ஒருபுறமிருக்க, அவரது தனிப்பட்ட வாழ்க்கை புது திசையில் திரும்பியது. ‘உறங்கும் அழகி’ (Sleeping Beauty) என்ற ஜெய் காவிஸ்கியின் (Jchai Kovsky) நாடகத்தில், வைகறைப் பெண் தேவதையான அரோராவாகவும்,(Aurora) இளஞ்சிவப்பு தேவதையாகவும் இரட்டை வேடத்தில் ஆடி அசத்திய, செர்கி டியாகிலே பாலே ரஸ்ஸஸ் (Sargei Diaghilev Ballets Russes) என்ற ரஷ்ய நடனக் குழுவைச் சேர்ந்த நடனக் கலைஞரான லிடியா லோபோகோவாவின் மேல் (Lydia Lopokova) கெய்னிசிற்கு அபாரமான ஈர்ப்பு ஏற்பட்டது. காணக் கிடைக்காத பேரழகி என்று இலண்டன் பத்திரிகைகள் மெழுகாய் உருக, நம்முடைய காலத்து ‘பார்பி டால்களைப்’ போல. ‘லிடியா பொம்மைகள்’ கடைகளில் பரபரப்பாக விற்றன. நம் கெய்ன்ஸ் மனோவசியத்திற்கு ஆட்பட்டவர் போல, தினமும் நடன அரங்கத்திற்குச் சென்றார். அழகும், அறிவும் ஒன்றையொன்று ஈர்த்தன. 1921 டிசம்பர் 26ம் தேதி அந்தப் பெண்மணி அவரை தேநீர் விருந்திற்கு அழைத்தார். ஏப்ரலில் கிளர்ச்சி தரும் கடிதங்கள், அவள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் இவருக்கும், இவர் நண்பர்களுக்கும் பழமொழிகளாகின. உதாரணத்திற்கு ஒன்று- ‘நான் உன்னை விழுங்குகிறேன், அன்பே!’ “உன்னால் விழுங்கப்படவே நான் விரும்புகிறேன், தேனே!” இந்தக் காதல் 1925ல் அவர்களின் திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது. அவ்வப்போது அவர் தன் ஆய்வினையும் தொடர்ந்தார். பாபிலோனியன் நாணயங்களை 1926ல் ஆய்வு செய்த கெய்ன்ஸ், ‘முதல் காதல் கவிதையைக் கண்டு கொண்டேன் இங்கே. எத்தனை அற்புதம் அது- எந்த நேரமும் நின் தன்னைப் போற்றுவேன்- எந்தன் வாயிலே அமுதூறுதே என்னைத் தீண்டும் இன்பம் வேண்டுதே’. ஒரு இயற்பியலாளரைக் காதலிப்பதைவிட (சொல்வனக் கட்டுரை) ஒரு பொருளாதார நிபுணரைக் காதலிக்கலாம் போலிருக்கிறது! அவர் 1920 களிலிருந்து சொல்லி வந்த ‘விலங்குத்தன்மை’ (Animal Spirits) என்பது அவரது உடல், உணர்வு, அறிவு ரீதியிலான கூட்டு. அதன் மையம் கலவி.
அவரது ஒரே பெண் காதலி லிடியா மட்டுமே. 20 ஆண்டுகளாக ஓரினச் சேர்க்கையில் இருந்த கெய்ன்ஸ், இருபாலரிடையே உருவாகும் காதலில் ஆழமாகச் சென்றது அவரது ப்ளும்ஸ்பரி நண்பர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் முதலில் லிடியாவை கேலியாகப் பார்த்தாலும், மெது மெதுவே அவளை ஏற்றுக் கொண்டார்கள். நேர்த்தியான, தன்னுணர்வு மிக்க, அதி நாகரீகமாகத் தங்களை காட்டிக் கொண்டவர்கள் அவர்கள். லிடியாவிடம் அந்தத் தன்னுணர்வு வெளிப்படாததே அவரது கவர்ச்சி.(மடம் என்று தமிழ் வியப்பதோ இது?) கெய்ன்ஸின் மற்றொரு காதலியான (?) டங்கன் க்ரேன்ட்டும், லிடியாவும் படிக்காதவர்கள்; அவர்கள் எதிர்வினையாற்றுவது உடனுக்குடனானது; புதிதாகவும், எதிர்பாராததாகவும் இருக்கும், என்று ஸ்கிடெல்ஸ்கி சொல்கிறார். உரிய காரணங்களின் உபாசகரான கெய்ன்ஸ், லிடியாவிடம் கொண்ட அன்பில், சூதாடியதில், பகுத்தறிவை மீறிச் சென்றார். லிடியா அவரது மாபெரும் சூதின் வெற்றி. அது அவருக்கு நல்லதே செய்தது. அவர் பொதுப்பணிகளில் அடையாத நிறைவையும், அமைதியையும் தந்து அறிவை ஆழப்படுத்தியது.
பிரித்தானிய அரசாங்கம் அவரை ஆலோசனை கேட்டுக் கொண்டேதான் இருந்தது;அவரும் புதுக் கருத்துக்களைத் தந்த வண்ணம் தானிருந்தார். ஆனால், கடை விரித்தேன், கொள்வாரில்லை என்ற கதைதான். தனது1924ம் வருட நூலான ‘பணச் சீர்திருத்தத்தில்’(Tract on Monetary Reforms) வணிகத்தின் சுழற்சியில் சாதாரண மனிதன் சிக்கிக் கொண்டு தவிக்காமல் அவனைக் காப்பாற்றும் பொறுப்பு, அரசைச் சேர்ந்தது என அவர் எழுதினார். பொருளாதார வீக்கம் மற்றும் மந்த நிலை தானாகவே சரி செய்து கொள்ளும் என்ற எண்ணத்தின் போதாமைகளை அவர் சுட்டிக் காட்டினார். விலைவாசியை கட்டுக்குள் வைத்து, அதை நீடித்த வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அரசின் கடமை என்றும், மரபார்ந்த பொருளாதார நிபுணர்கள், ‘நெடுங்கால அளவில் (Long Run) இந்தச் சுழற்சி தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்’ என்று சொல்வதை ஏற்க முடியாதென்றும், நம் வாழ் நாள் குறுகிய ஒன்றல்லவோ என்றும் துணிந்து எழுதினார். ‘நெடுங்கால அளவில் நாம் அனைவருமே இறந்தவர்களாகிவிடுவோம்’ என்ற அவரது புகழ் பெற்ற கூற்று அவரது நடைமுறைப் பார்வையைக் காட்டியது; அவர் வெறும் கோட்பாடுகளில் மட்டுமே பொருளாதாரத்தைக் கண்டவரில்லை.
இதற்கிடையில் யூரோப் சிதறுண்டு வருவதைப் போலிருந்தது. இளைய வெய்மார் குடியரசில் எழுச்சி மிகுந்து வந்தவண்ணம் இருந்தது. ஜனவரி 1923ல் ஜெர்மனி, இழப்பீடு தரத் தவறிய போது, பல ஜெர்மானிய தொழிற்சாலைகள் இயங்கி வந்த ருவர் பள்ளத்தாக்கை ஃப்ரெஞ்ச் படை ஆக்ரமித்தது. வெர்செய்ல்ஸ் (Versailles) ஒப்பந்தம் செயல்படவில்லை. இந்த ஒப்பந்தம் முதலாம் உலகப் போரை முடிவிற்குக் கொண்டு வந்த முக்கியமான ஒன்று. பின்னர் டாவ்ஸ் திட்டம், (Dawes Plan) அமெரிக்காவின் தலையீட்டினால் முன்னெடுக்கப்பட்டு ஜெர்மனியின் அபராதத் தொகையை தீர்மானித்தது. இது கெய்ன்ஸ் முன்னர் அமைதி மாநாட்டில் சொன்னதொரு திட்டத்தின் நீர்த்த வடிவம். 1925ல் ஃப்ரெஞ்ச் துருப்புகள் விலகின.
இடைப்பட்ட இந்தக் குழப்பக் காலத்தில், அரசின் தலையீடில்லாத வணிகச் சுதந்திரத்தின் முடிவைப் (The End of Laissez-Faire) பற்றிய உரைகளை அவர் வழங்கினார். இந்தக் கையேடுகளும், அவரது சிந்தனையின் புதுமைகளை முன்னிறுத்தின. பொருளாதார ஆற்றல் என்பது, தார்மீகத்தை மீறிய ஒன்றாக இருக்கக் கூடாது என்று சிந்திக்குமாறு அவர் வல்லுனர்களைக் கேட்டுக் கொண்டார். அவரது முதிர்ந்த, கனிந்த சிந்தனை இதன் மூலம் வெளிப்பட்டது.
1920களின் மத்தியில் தேங்கிய நிலையிலிருந்த பிரித்தானிய பொருளாதாரம், வீழ்ச்சியை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. நாணய மதிப்பில் தங்கத் தரக் கோட்பாடுகளை பிடிவாதமாக வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) பின்பற்றியதால், பவுண்டின் அன்னியசெலாவணி மதிப்பு, அதன் நிஜ மதிப்பை விட அதிகமாக இருந்தது. மந்த நிலை பொருளாதாரத்தில், பணத் தட்டுப்பாட்டுக் கொள்கைகள் (Dear Money Policies) அவருக்கு எரிச்சலைத் தந்தன. ‘கொள்கலனை விட அதிகரிக்கும் ஏற்றத்தைக் கட்டுக்குள் வைக்க, பணச் சுழல் இறுக்கம் தேவையே. இந்தக் கொள்கையை, மந்தப் பொருளாதாரக் காலத்தில், அதை மேலும் அதிகரிக்கும் வண்ணம், பின்பற்றும் அறிஞர்களை நான் வியக்கிறேன்’ என்றார் அவர். குறையும் வருவாய், பண இறுக்கத்தை மேலும் அதிகரிக்கும்; செயற்கையாக மிகுமதிப்பிடப்பட்டுள்ள பவுண்ட், ஸ்டெர்லிங்கினால், நம் நிலக்கரி சுரங்க உரிமையாளர்கள் அன்னிய வர்த்தகத்தில் குறைந்த விலைக்கு பொருட்களை விற்க நேரிடும்; இல்லையெனில் அவர்களால் உலகச் சந்தையில் பங்கு பெற இயலாது. ஆனால், அவர்கள் இந்த நட்டத்தை எப்படி ஈடு செய்வார்கள்? ஊழியர்களின் ஊதியத்தை வெகுவாகக் குறைத்தார்கள். தங்கள் ஊதியத்தைக் காப்பாற்றும் பொருட்டு, ஊழியர்கள் பெரும் பொது வேலை நிறுத்தம் (General Strike) செய்தார்கள்.
வர்க்கப் போராட்டத்தின் இடையே, ‘லாய்ட் ஜார்ஜால் செய்ய முடியுமா?’ (Can Lloyd George Do It?) என்ற கட்டுரையை அவர் எழுதினார். இதை ஃப்ரேங்ளின் ரூஸ்வெல்ட் (Franklin Roosevelt) கொண்டு வரப் போகும் புது திட்டத்தின் முன்னோடி என்று சொல்லலாம். எதிர்வரும் ஆபத்தான பொருளாதார மந்த நிலையைச் சரி செய்யவும், பொதுவில் நிலவும் கிலேசங்களைப் போக்கவும், இருண்டதாகத் தெரியும் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை விரட்டுவதற்குமான பெரும் பொதுப்-பணிகள் (Public-Works) திட்டம் ஒன்றை ரூஸ்வெல்ட் முயன்றார். ‘நாம் ஏன் நம்மை துணிச்சல் உள்ளவர்களாக, வெளிப்படப் பேசுபவர்களாக, பரிசோதனைகள் செய்யும் நாட்டமுடையவர்களாக, செயல் வீரர்களாக, நடக்கக்கூடியவைகளை முயல்பவர்களாக நம்மை கருதக்கூடாது? ஆம். ஒரு தடை இருக்கிறது- அது ஃப்ராக் கோட் (Frock Coat) அணிந்த பழைய ஆசாமிகள்- அவர்களை மரியாதையுடன் நடத்தி, அவர்கள் சொல்வதை ஒன்பது ஊசிகளைக் (nine Pins) குலைப்பதைப் போல ஒதுக்கி விட வேண்டும்.’ இதெல்லாம் பொதுமக்களை ஈர்ப்பதற்காகச் சொல்லப்பட்டது. அரசு தலையீடற்ற வணிகம் இறந்து விட்டது என்பதை பொது மக்கள் ஏற்கெனவே அறிந்திருந்தார்கள். வர்க்கப் பேதம் நிலவும் என்பதையும். அமெரிக்காவில் ‘சீறிப்பாயும் காளைச் சந்தை’ (Bull Market) காட்டும் ‘விலங்குத் தன்மை’ புத்தக உதரணங்கள், அவற்றை அளவீடு செய்ய முயலும் கால விரையங்கள், மற்றும் செய்நேர்த்தியின்மை, பிரிட்டனில் செல்லுபடியாகுமா?
1929, தொழிலாளர் தினத்தில், அமெரிக்காவில் சந்தையின் இறங்குமுகம் தென்படலாயிற்று. இலையுதிர்கால தொடக்கத்தில், பொருத்தமான சில விற்பனைகள் நடந்தன; என்றாலும், ‘வாங்கும் பேரலை’ அதை தடுத்தது. பொது நிலவரம் கீழ்முகமாக இருந்தது. அக்டோபர் 24, வெள்ளிக் கிழமையன்று, அதி வேக விற்பனைகள். ந்யூயார்க் வங்கியாளர்களை மதியத்தில் சந்தித்த தாமஸ் லமாண்ட் (Thomas Lamont) என்ற ஜே பி மோர்கன் (J P Morgan) வங்கியைச் சேர்ந்த இயக்குனர், அன்று காலை பங்குச் சந்தை வர்த்தகத்தில் சிறு இடர் ஏற்பட்டது என ஒத்துக் கொண்டார். மதிய உணவிற்குப் பிறகு, 1907ல் மோர்கன் செய்ததைப் போலவே, இலட்சக் கணக்கான மதிப்பில் பங்குகளை வாங்கி, சந்தையை மீட்டனர். பங்குகள் விலையேறின. கறுப்பு வெள்ளி மகிழ்வுடன் முடிந்தது. அந்தோ, பரிதாபம்- இந்த வெள்ளியைத் தொடர்ந்து வந்த செவ்வாய்க் கிழமையில், அக் 29, சந்தை படுத்துக் கொண்டு விட்டது. வங்கியாளர்கள் இணைந்து நெறிப்படுத்த முயன்ற சந்தை போக்குக் காட்டி விட்டது. மணி ஒலித்ததும் தொடங்கிய பதற்ற விற்பனை நாள் முழுதும் தொடந்தது; பங்கு வர்த்தகக் கூடத்திற்கு வெளியே திரண்ட மக்கள் கூட்டம் பேரொலி எழுப்பியது- அது சினத்தினாலோ, மன அழுத்தத்தாலோ உண்டான ஒலி அல்ல; இத்தன்மையே அச்சுறுத்துவதாக இருந்தது. கைவிடப்பட்டவர்களின் கதறல் போல, கிரேக்க பிலாக்கணம் போல அந்த ஒலி இருந்ததாக அந்த நிகழ்வை நேரில் கண்டவர் பதிவு செய்துள்ளார்.
பூமியில் தீர்ப்பு தினத்திற்கான ஒன்று என்று எட்மண்ட் வில்சன் (Edmund Wilson) சொன்னார். பேருரு எடுத்த முட்டாள் தனமான இந்த மோசடி, திடீரென்று எதிர்பாராமல் ஏற்பட்டிருந்தாலும், ஒரு வகைக் களிப்பையும் தருகிறது என்றார் அவர். வில்சனைக் காட்டிலும், கொள்கை முடிவுகளில் அதிகமாக ஈடுபட்ட கெய்ன்ஸ், இந்த வீழ்ச்சியை, பண இறுக்கமற்ற, எளிதில் கிடைக்கும் பணக் கொள்கைக்கான (cheap money policy-no dearth of movement of legal currency) சகாப்தம் பிறந்தது என்று ந்யூயார்க் போஸ்ட்டில் எழுதினார்.
பல வருடங்களாகவே பொருளாதார தள்ளாட்டத்தில் இருந்த பிரிட்டனில், அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச் சந்தை விபத்தைப் போல நேரவில்லை என்றாலும், அடித்தளம் சிதைந்ததை அது உணரவில்லை. பல யூரோப்பியர்களைப் போலவே, கெய்ன்சிற்கும் வால் ஸ்டீர்ட் (Wall Street) வீழ்ச்சி என்பது ஒரு முணுமுணுப்புதான்.
1930ல் அவர் பணம் என்பதைப் பற்றிய கட்டுரையை (Treatise on Money) எழுதினார்- நாணயமும், சந்தையும் அரசு உருவாக்குபவை; அவை அரசை உருவாக்குவதில்லை. பொதுக் கொள்கையின் (Public Policy) முக்கிய நோக்கமே, கடன் வழங்கல், பெறுதலின் மூலம், துடிப்பான, பொருளாதார பண்பாட்டுக் கட்டமைப்பை கொண்டு வருவது தான். நுகர்வினை விடுத்து, தனி நபர்கள், மகிழ்ச்சியைப் பலி கொடுத்து செய்யும் ‘சேமிப்பில்’ என்ன இருக்கிறது? ‘உலகின் ஏழு விந்தைகள் சேமிப்பால் தான் ஏற்படுத்தப்பட்டனவா? நான் சந்தேகிக்கிறேன்.’
நடக்கக்கூடிய சாத்தியங்களைப் பற்றிய அவரது ஊக்க எண்ணங்களுக்கும், குழும இயக்குனர்கள் முதல், ரொட்டிக்காக நீள் வரிசையில் நின்று காத்திருக்கும் சாதாரண மக்களின் பொருளாதார அச்சங்களுக்கும்- அதாவது இந்த இரு அம்சங்களுக்கும், இடையே அமெரிக்காவில் அவர் கண்ட வேறுபாடுகள் அவரை இம்சித்தன. வசந்தத்தில், 1931ல் அவர் அமெரிக்காவிற்கு வருகை புரிந்த போது, பொதுக் கோட்பாட்டின் (General Theory) ஜீவ நாடி எதுவாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டார்-அது உணர்வின் அடிப்படையில் பொருளாதாரக் கொள்கைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதே; முன்னர் நான் புரிந்து கொள்ளாததை இப்போது அறிந்து கொண்டேன்-“இந்த தேசத்தின் வங்கிகளும், வாடிக்கையாளர்களும் கொண்டிருக்கும் கவலையைப் போக்கும் வண்ணத்தில் பொருளாதாரக் கோட்பாடுகள் இருக்க வேண்டும். அச்சத்தால் மக்கள் பீடிக்கப்படும் நாட்டில் பொருளாதார மீட்பு ஏற்படாது.” ரூஸ்வெல்டும். இவரும் ஒத்துப் போன புள்ளி இது.
பொருளாதாரமும், பாரதமும்
நம் நாட்டில் பொருளாதார வல்லுனர்களுக்குக் குறைவில்லை. என்னவொன்று, அவர்களில் பலர் மேலைச் சிந்தனையை, மார்க்சீய கருத்துக்களை பிரதி எடுப்பவர்கள். நோபல் பரிசு பெற்ற இந்தியர்களும் இதில் விலக்கல்ல. தாராளமயமாக்கலை விதந்தோதிய திரு. மன்மோஹன் சிங் ஆட்சியில் தான் மாபெரும் ஹர்ஷத் மேத்தா ஊழல் நடந்தது.
தன்னிறைவு, அனைத்து வளங்களும் அனைவருக்குமாகப் பயன்பட வேண்டும், உள் நாட்டுப் பொருட்களைக் கொண்டு கிராமப்பொருளாதாரம் கட்டப்பட வேண்டும் என்று சொன்ன காந்திஜி சிறந்த பொருளாதார நிபுணர்.
உலகம் போகும் வேகத்திற்கு, பொதுத் துறை நிறுவனங்கள், அரசு முதலீடுகள், அறிவியல் மூலம் நாட்டு வளர்ச்சி என்று சிந்தித்து செயல்படுத்திய நேருவும் பொருளாதார நிபுணர்தான்.
பசுமைப் புரட்சியின் மூலம் இரு வேளைகளுக்காவது மக்கள் உணவருந்தட்டும் என்ற இந்திராவும் அவ்வகையில் பொருளாதார நிபுணர்தான். இன்னமும் வெள்ளைப் புரட்சி போன்றவற்றைச் சொல்லலாம். இவையெல்லாம், மக்களுக்காக அரசுகள் செய்தவை. இன்றிருக்கும் அரசு, தனிக் குழுமங்கள் அதிக அளவில் உற்பத்தியில் ஈடுபட வழிவகை செய்கிறது. ஒரு வகையில் சொல்லப் போனால், தாராளவாதத்தின் ஒரு குழந்தை தனியார்மயமாக்கல். இலாபத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு ஏன் விற்க வேண்டும், பொன் முட்டையிடும் வாத்தை அறுத்த கதையாக. நட்டத்தில் இயங்கும் தொழில்களை தனியார் வசம் கொடுத்து, கண்காணித்து, மக்கள்/ஊழியர் நல நடவடிக்கைகளை உறுதி செய்து செயல்படுவது விவேகம். ஆனால், தனியார்களுக்கு கறவை மாடு தான் வேண்டும், அரசு என்னதான் செய்யும்? உறுதியுடன் சட்டங்களை இயற்றி நடைமுறைப் படுத்தினால் இதுவும் சாத்தியமே.
பணவியல் கொள்கையில் இவ்வரசு அறிவுடன் செயல்படுகிறது; ஆனால், நிதிக் கொள்கையில் அது செய்ய வேண்டியது நிறைய உள்ளது. எடுத்துக்காட்டாக. நிதியை அழுத்தி வைக்கும் செயற்பாடுகள்- அரசு வாங்கும் கடனிற்கான வட்டி விகிதத்தைக் குறைத்தால், அதன் மூலம் பெறும் தொகையை சரியான திட்டங்களில் பயன்படுத்துவது ஆக்கபூர்வமாகும். வேலையைத் தேடுவதை விடுத்து நீங்கள் வேலை கொடுப்பவராகுங்கள் என்பது இதன் கொள்கை. வங்கிகளிலிருந்து தொழில் முனைவோர் எளிதில் கடன்/ மான்யம் போன்றவற்றைப் பெறுவதற்கான இணையங்களையும் இந்த அரசு தோற்றுவித்துள்ளது.
இந்த உலகம் ஆடம் ஸ்மித்தை பொருளாதாரத்தின் தந்தை எனப் போற்றுகிறது. அவருக்கு 1900 வருடங்களுக்கு முன்னரே அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல், பொருளாதாரம், நிதி சார்ந்த நூலை எழுதிய கௌடில்யரை பல இந்தியர்களே அறிய மாட்டார்கள்.
பொது நிதியைப் பற்றி அவர் 15 பகுதிகள் எழுதியுள்ளார்.
- சிறுகச் சிறுக செல்வம் சேரவேண்டும்.
- நாட்டிற்கான சிறந்த பொருளாதாரக் கொள்கை வேண்டும்.
- உழவும், விலங்கின பாதுகாப்பும், செழிப்பும் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை. நஞ்சை நிலங்களில் சற்று அதிக வரியும், புஞ்சையில் குறைவாகவும் வரி விதித்து காலத்தில் வசூலும் செய்வது அவசியம்.
- தானும் உழைக்கலாம், கூலிக்கும் ஆள் அமர்த்திக் கொள்ளலாம். தரமான கூலியைத் தர வேண்டும்.
- வணிகத்தை முறைப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. தனது அரசு நிறுவனங்களின் மூலம் சில முக்கிய வணிகங்களை அரசே மேற்கொள்ள வேண்டும். பொருட்களுக்கேற்ப வரி விதிக்கப் பட வேண்டும். ஆடம்பர பொருட்களின் மீது அதிக வரி விதிக்க வேண்டும்.
- இடுபொருளின் மதிப்பை, அதை வாங்குவதில் உள்ள கடினங்கள், அல்லது எளிமை போன்றவைகளை அளவீடாகக் கொண்டு இறக்குமதி வரி விதிக்கப்பட வேண்டும்.
- மக்கள் தொகையைப் பற்றிய அதீதக் கவலைகள் வேண்டாம். உழைப்பதற்கான, கல்வி பயில்வதற்கான கட்டமைப்புகள் அரசைச் சார்ந்தவை; தனியாரிடம் கொடுக்கும் சூழலில் கண்டிப்பான கண்காணிப்பும், மீறுவோருக்கு அபராதமும் விதிக்க வேண்டும்.
- அடிமை முறைக்கு எங்கும் அனுமதியில்லை.
- மக்கள் நலத் திட்டங்களை அரசு சிறப்பாகச் செய்ய வேண்டும்.
- வட்டி என்பது பாவமல்ல. அது இலாபத்தின் ஒரு பகுதி. நியாயமான வட்டி தான் விதிக்கப்படலாம்.
- வரி என்பது மூன்று விதங்களில் விதிக்கப்பட வேண்டும்.
- தன் நாட்டின் உற்பத்திசெய்யப்படும் பொருளுக்கான வரி வீதம், ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பு, ஆடம்பரப் பொருட்களுக்கான வரி மூன்றும் சமமாக இருக்கக் கூடாது.
- இடு பொருட்கள் நான்கு- நிலம், முதல், உழைப்பு. கட்டுமானம்.
கையில் இருக்கும் வெண்ணெயை விட்டுவிட்டு நெய்க்கு அலைந்து கொண்டே இருக்கிறோம்.
எந்தப் பொருளாதார மாதிரி சரி அல்லது நல்லது? ஜார்ஜ் இ பி பாக்ஸ் சொன்னார்- எல்லாமே தவறுதான், ஆனால், சில மாதிரிகள் பயனுள்ளவை
மார்கன் ஸ்டேன்லியின் அறிக்கை, பத்தாண்டுகளில் பாரதம் என்னென்ன பொருளாதார மாற்றங்களை அடைந்திருக்கிறது என்று சொல்கிறது.
2013 | 2023 | |
பரஸ்பர நிதி முதலீடு | 100.73 பில்லியன் | 507.78 பில் |
இலக்கப் பரிமாற்றம்- ஜி டி பி சதவீதத்தில் | 4.4% | 76.1% |
அன்னிய நேரடி முதலீடு | $22 பில் | $46 பில் |
ரயில் பாதை மின்மயமாக்கல் | 4100 கி மீ | 28,100 கி மீ |
குழும வரி விகிதம் | 33.9% | 22% |
நுகர்வோர் சார்ந்த விலைவாசி | 10% | 4.7% (இன்று விலைவாசி கட்டுக்குள் இல்லை) |
மனை, வீடு விற்பனை/ முதலீடுகள் | 50000 | 75000 |
“அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா மானம் உடையது அரசு” திருக்குறள்.
உசாவிகள்
நாளேடுகள், பிற ஊடகங்கள், பொருளாதார புத்தகங்கள் மற்றும்
https://www.commonwealmagazine.org/john-maynard-keynes-economics-uncertainty-woolf-lears