அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 3

This entry is part 3 of 4 in the series கணினி நிலாக்காலம்

”பரவாயில்லை பெரியவரே. உங்களை சாமானியமாக எடை போட்டு விட்டேன். Save button -ஐ, எவ்வளவு அழகாக 3D print செய்துள்ளீர்கள்!”

ப்ளாப்பி டிஸ்கைப் பார்த்த இன்றைய இளைஞன்.

எண்பதுகளின் கணினி மையங்களில் நடந்த சில விஷயங்கள் இன்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவை. என்னுடைய வாடிக்கையாளர் ஒருவருடன் நடந்த சந்திப்பு ஒன்று அபப்டிப்பட்டது.

பல மணி நேரம் பயணம் செய்து, ஒரு முக்கிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, வாடிக்கையாளரின் நிறுவனத்திற்குச் சென்றேன். நலம் விசாரித்து, காபி வரவழைத்தார். நான் தீர்க்க வந்த பிரச்சினையை விவரிக்க ஆரம்பித்தார். திடீரென்று பேச்சை நிறுத்தி விட்டு எழுந்து போய்விட்டார்! எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இது கொஞ்சம் மரியாதைக் குறைவாக இருக்கிறதே என்று கூடத் தோன்றியது.

திரும்பி வந்தவரின் விளக்கம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. Sort செய்து கொண்டிருந்த scratch ஃப்ளாப்பி நிரம்பி விட்டது. உடனே மாற்றாவிட்டால், எல்லா வேலையும் விரயமாகிவிடும்! அந்த காலத்தில், அவருடைய செல்பேசிக்கு எந்த ஒரு செய்தியும் வரவில்லை. ஏன், செல்பேசி என்பதே என்னவென்று தெரியாத காலம். எப்படி இவருக்கு ஃப்ளாப்பி நிரம்பியது தெரிய வந்தது?

“அதொன்றுமில்லை சார். திடீரென்று எழுந்து போய்விட்டேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். இந்த sort ப்ரோக்ராம் இயங்கும் பொழுது,ஃப்ளாப்பிகள் மாறி மாறி எழுதும் பொழுது ஒரு ஒலி rhythm என் காதுகளுக்குப் பரிச்சயம். ஃப்ளாப்பி நிரம்ப இன்னும் 1 முதல் 2 நிமிடங்கள் இருக்கும் பொழுது, இந்த rhythm மாறும். எந்த வேலை இருந்தாலும்,

ஒதுக்கி வைத்து, புதிய காலி ஃப்ளாப்பியை மாற்றி விட்டால், எல்லாம் சரியாகிவிடும். இல்லையேல், பிள்ளையார் சுழியிலிருந்து ஆரம்பித்து பல மணி நேரங்கள் வீண். இதற்கு வேற வழி தெரியல.”.

“சரி, நான் என்ன செய்ய வேண்டும்?”

“எப்படியாவது, இந்த ப்ரோக்ராமை மாற்றி, பக்கத்தில் யாரும் இல்லாவிட்டாலும், கணினியைக் காத்திருக்க வைக்க வேண்டும்”.

மிக நியாயமான இவரது தேவையைப் அன்றே பூர்த்தி செய்ததற்கு, பல வருடங்கள் தொடர்ந்து நன்றி சொல்லி வந்தார்! இந்த வகைப் பிரச்சினைகள் இன்றைய கணினி சூழலில் சந்திக்க வேண்டியதில்லை. என்ன, 80 –களில், எங்கோ ஒருவர் இணையம் மூலம், உங்களது கணிக்குள் நுழைந்து பல வித தில்லாலங்கடிகள் செய்ய முடியாது. இந்தக் கட்டுரைக்காகத் தேடியதில், இவ்வகை கணினிகளின் படங்கள் இணையத்தில் அதிகம் இல்லை!

**********

80 -களில், ஒரு பெரிய கணினி மையத்தில் நேர்ந்த பிரச்சினை, நான் பணியாற்றிய நிறுவனத்தின் பல என்ஜினியர்களை திக்கு முக்காட வைத்தது. மாதக் கடைசியில் சம்பளப்பட்டுவாடா நேரத்தில், சில ஆயிரம் பக்கங்கள் அச்சடிக்கப்பட்டது. அச்சடிக்கப்பட்ட பட்டியலை தங்களுடைய நிறுவனத்திற்கு எடுத்துச் செல்ல, நம்பகமான நிறுவன ஊழியர்கள் தவமாய் காத்திருப்பார்கள். இது ஒரு பெரிய பொறுப்பு. ஒரு டீ எஸ்டேடின் சம்பளப் பட்டுவாடா அல்லது ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் பட்டியல் என்பது சில ஆயிரம் பக்கங்களைத் தொடுவது சாதாரணம்.

பிர்ச்சினை இதுதான்: அச்சடிக்கும் எந்திரம், திடீரென்று, பாதியில் நின்றுவிடும். உதாரணத்திற்கு, ஒரு 1,300 பக்கப் பட்டியலில் 780 பக்கம் வரை அச்சடித்து விட்டு நின்று விடும். பல வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தில், இவ்வாறு நிகழ்வது கணினி மையத்திற்கு ஒரு மிகப் பெரிய தர்ம சங்கடம் மற்றும் இழப்பு. அந்த நாட்களில், 781 ஆம் பக்கத்திலிருந்து மீண்டும் அச்சடிக்க வசதி இல்லை. ஆரம்பத்திலிருந்து அச்சடித்தால், முழு 1,300 பக்கங்களும் அச்சடித்தது எந்திரம்! காகித மற்றும் நேர விரயம் என்பது கணினி மையத்திற்கு பிடிக்காத விஷயம். அந்த கால சம்பளப் பட்டுவாடா பட்டியலில், கார்பன் காகிதத்துடன், 2 அல்லது 3 நகல்கள் அச்சடிக்கப்படும்.

பல கார சாரமான தொலைபேசி உரையாடல்கள் இதை அடுத்து வாடிக்கையாளருக்கும், நான் பணி செய்த நிறுவனத்திற்கும் பறந்தது. கணினி மையம், அச்சடிக்கும் எந்திரம் கோளாறு செய்கிறது. அதை மாற்ற வேண்டும் என்றது. பல லட்சம் விலையுள்ள எந்திரத்தை மாற்ற கணினி நிறுவனம் தயங்கியது. இப்படி மாதா மாதம் நிகழ்ந்த வண்ணம் இருந்தது. கடைசியில், கணினி மையம் பிரச்சினையைத் தீர்க்க ஒரு கெடு வைத்தது. இன்னும் ஒரு மாதத்தில் அச்சு எந்திரத்தை மாற்றாவிட்டல், உங்களது கணினியையே மாற்றி விடுவோம் என்றது. நான் பணியாற்றிய நிறுவனத்தின் பல திறமையான என்ஜினியர்கள் பலராலும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. தீர்க்க முடியாத பிரச்சினையுள்ள வாடிக்கையாளர் என்பது எந்த ஒரு வியாபாரத்திற்கும் தர்மசங்கடமான விஷயம். வியாபார உறவும் சற்று அடிபட்டது. 

கடைசியாக, ஒரு தேர்ந்த பராமரிப்பு என்ஜினியர் அனுப்பப்பட்டார். ஒரு வாரம், அவரும், சுற்றிச் சுற்றி பலவித சோதனைகள் செய்து வெற்றி இல்லாமல் திணறி, கடைசியில் ஒரு ஐடியா அவருக்குத் தோன்றியது. கணினி மையத்தின் செயற்கைக் கூரையைப் பிரித்து ஆராய்ந்ததில் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. கடைசியாக, செயற்கைத் தரையைப் பிரித்து ஆராய்ந்தார். பல மாதப் பிரச்சினையின் மூலம் உடனே தெரிய வந்தது. கணினியிலிருந்து, கனமான அச்சடிக்கும் எந்திரத்திற்கு, பட்டையான ஒரு கேபிள் செயற்கைத் தரையடியே செல்லும்.

அதை, எலி, எப்படியோ கடித்து விட்டது. முழு கேபிளையும் கடிக்கவில்லை! இதனால், கணினிக்கும் அச்சடிக்கும் எந்திரத்திற்கும், அதிர்வால் இணைப்பு அவ்வப்பொழுது துண்டித்து அச்சடிப்பு நின்றுவிடும்! இவ்வகைப் பிரச்சினைகள், எத்தனை மின்னணுவியல் படித்தாலும் தீர்க்க முடியாதவை. வால்ட் டிஸ்னி, இவ்வகைக் காட்சிகளை சிந்தித்திருப்பாரா என்று அவ்வப்பொழுது இன்றும் எனக்குத் தோன்றும்! என்னுடைய கணினி வாழ்கையில் வந்த முதல் மவுஸ் அதுதான் என்று சொல்ல வேண்டும்!

இந்த நிகழ்விற்குப் பின், நான் பணியாற்றிய நிறுவனத்தில், செயற்கைக் கூரை மற்றும் செயற்கைத் தரையை வருடம் தோறும், பராமரிப்பின் பொழுது பிரித்து ஆராய்வது ஒரு வழக்கமானது.

(தொடரும்)

Series Navigation<< அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 2அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 4 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.