அதிரியன் நினைவுகள் -21

This entry is part 21 of 22 in the series அதிரியன் நினைவுகள்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

என்னை நான் வித்தியாசமாக உணர்ந்தேன், எனக்கென்று வேறு தேர்வுகள் இருந்தன. எளிமை, துறவு, மறுப்பு எனக்கிவை முற்றிலும் அன்னியமானவையுமல்ல: அவ்வாறொன்றை பதம்பார்க்க எனக்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது, இருபது வயதில் அனேகமாக நம்மில் பலருக்கும் நடக்கக்கூடியதுதான்.  நான் அப்போது உரோமில் இருந்தேன்,  இருபது வயதுகூட ஆகவில்லை, ஒரு நண்பர் அழைத்துச்செல்ல, தத்துவவாதி எபிக்டெட்டஸ்(Epictète)ஐ பார்க்கச்சென்றேன் (அதாவது மன்னர் டொமிஷியானோ(Domitien) அவரை நாடுகடத்துவதற்கு ஒருசில நாட்களுக்குமுன்பு) முதிய வயது, ஏழைகள் வசிக்கும் சுபுரா(Suburre) பகுதியில் ஒரு சிறு குடிலில் வாழ்ந்துவந்தார். கடந்த காலத்தில் அவரது அடிமை வாழ்க்கையில் ஒருமுறை,  கொடிய எஜமான் ஒருவர் அவர் காலை உடைத்திருக்கிறார், அப்போதுகூட இவரிடமிருந்து வலியின் சிறுமுனகலைக் கேட்கின்ற வாய்ப்பினை அந்த அரக்கன் பெறவில்லை. நாங்கள் பார்க்கச்சென்ற நேரத்தில் சிறுநீரக நோயினால் நெடுங்காலமாக அவதிபடும்  மெலிந்த  முதியவராக இருந்தார்,  கடும் வலிகளில் அவதிபட்டும் அவற்றிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் தெய்வீகச்சக்தி அவர் வசம் இருக்கக் கண்டேன். அன்றியும் அவருடைய  கவட்டைக் கட்டைகளும், காய்ந்தகோரைகளைத் திணித்தப் படுக்கையும், சுடுமண் விளக்கும், களிமண் குடுவையில் கண்ட மரக்தில்செய்த சிறுகரண்டியும் அவருடைய தூய வாழ்க்கையின் எளிமையான கருவிகளாக எனக்குப்பட்டன. 

ஆனால் எபிக்டெடஸ் பல விஷயங்களை கைவிட்டிருந்தார் அல்லது துறந்திருந்தார், எந்தவொன்றையும் துறப்பதைக் காட்டிலும்  ஆபத்தானது எதுவுமில்லை என்பதை நான் விரைவில் உணரவும் சந்தர்ப்பம் கிடைத்தது. மாறாக இந்தியரோ மிகவும் தர்க்கரீதியாக, மனித வாழ்க்கையையே நிராகரித்திருந்தார். தங்கள் கொள்கையில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காத, இத்தூய கொள்கை வெறியர்களிடம் நான் கற்க வேண்டியவை ஏராளம், ஆனால் அவைதரும் பொருளில் அல்ல, அந்த அர்த்தங்களின் திசை மாறவேண்டும் என்பது என்னுடைய நிபந்தனை. இந்த யோகிகள் தங்கள் கடவுளை வடிவ சமுத்திரத்திற்கு அப்பால் காணவும்; அக்கடவுளின் பிரம்மாண்டத்தை தொட்டுணர இயலாதவகையிலும், ஒப்புமையற்றவகையிலும் தனித்துவ பண்புடனுங்கூட காணவுமுயன்றனர், ஆனால் தம்மை பேரண்டமாகக் காண விரும்பியபோது அதனை துறந்தனர். இறைமையுடன் எனக்குள்ள பந்தங்கள் குறித்து எனக்கும் வேறுவிதமான பார்வைகள் இருந்தன. உலகைச் சீர்படுத்த குறிப்பாக வளைவுகள், கிளைவழிகள், திருப்பங்கள், சுற்றுவழிகள் ஆகிய்வற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தரத்தைக் கூட்டவும் கடவுள் முயற்சிகளை மேற்கொள்கிறார், எனது தரப்பில் உலகை சீரமைத்தும், அது குறித்த  விஷயங்களைத் தெரிவித்தும் இறைமுயற்சிக்கு நானும் உதவுகிறேன் என்பதென் எண்ணம்.  உலகை உருட்டிச் செல்லும் சக்கரத்தில் நானும் ஓர் அங்கம், பல்வேறுகூறுகள் ஒன்றிணைந்த  தனித்துவமான இச்சக்தியின் அம்சங்களில் நானும் ஒருவன்:  கழுகும் காளையும், மனிதனும் அன்னப்பறவையும், ஆண்குறியும் மூளையும்,  அனைத்தும், சுருங்கக்கூறின்  புரோட்டியஸும்(Proteus)31 நானே, ஜூபிட்டரும் நானே.

என்னைக் கடவுளாக உணர ஆரம்பித்தது இந்தக் காலக் கட்டத்திலேதான். அதற்காக என்னை நீ தவறாக நினைக்கக் கூடாது.  முன் எப்போதையும்விட இப்பூமியின் கனிகளையும், ஜீவராசிகளையும் உண்பது ; உண்டபொருட்களின் எச்சத்தை பூமிக்கே திருப்பி அளிப்பது ; கோள்களின் ஒவ்வொரு சுழற்சியின்போதும் உறக்கத்தைத் தியாகம் செய்வது ; காதலின் கதகதப்பான வெப்பத்திற்குரிய தருணம் முடிவின்றி தள்ளிப்போகும்போது அதற்காக வாடுவது,  முதலான மனிதர்க்குரிய அவ்வளவு குணங்களும் என்னிடத்தில் அப்படியே இருந்தன. எனது வலிமையும், உடல் மற்றும்  மூளையின் சுறுசுறுப்பும் முற்றிலும் மனித உடல்பயிற்சிகொண்டு  கவனமாகப் பராமரிக்கப்பட்டவை. ஆனால் தெய்வீகமாக வாழ்ந்தன என்பதன்றி இவைபற்றி வேறென்ன சொல்ல முடியும்? வாலிப வயதுக்கே உரிய ஆபத்தான சோதனைகளும்,  கடக்கும் காலத்தை சுகிப்பதிலுள்ள ஆர்வமும் முடிந்துபோனவை. எனக்கு நாற்பத்துநான்கு வயது, பொறுமையின்மை இனியில்லை என்றானது. என்மீது எனக்குக் கூடுதல் நம்பிக்கை, முழுமையிலும், குறையின்மையிலும் அத்தன்னம்பிக்கை எனது குணத்தை ஒத்தது, அது நித்யமானதும்கூட. இக்கருத்து மூளைத்திறம் பற்றியது என்பதை நீ புரிந்துகொள்ளவேண்டும்: இதற்கொரு பெயர் அவசியமெனில், இருக்கவே இருக்கிறது பிற்காலத்தில் தெரியவந்த ‘பிதற்றல்’ என்ற சொல். நான் கடவுளாக இருந்தேன்,  காரணம் நானொரு  மனிதனாக இருந்தேன். ஆண்டுகள் பலவாக என்னை நானே உணர்வு பூர்வமாக உறுதிபடுத்திக்கொண்ட கடவுள் என்ற வார்த்தை, பிற்காலத்தில் கிரேக்கர்களால் உத்தியோகபூர்வ  பட்டப் பெயராக எனக்கே அதனைச் சூட்டக் காரணமாயிற்று. டொமிஷியன் சிறையிலும், சுரங்கக் கிணறுகளுக்குள்ளுங்கூட  கடவுளாக என்னை உணர முடிந்திருக்கும் என்பதென் நம்பிக்கை. அதை அப்போது வெளிப்படையாக உரிமை கொண்டாடும் தைரியம் எனக்கு இந்திருக்குமானால், இன்றைய உணர்வு மிகவும் சாதாரணமானதாகவும் தனித்துவம் அற்றதாகவும் இருந்திருக்கும். இத்தகைய அவனுபவத்தை ஏதோ நான் மட்டுமல்ல பிறமனிதர்களும் கடந்த காலங்களில் பெற்றிருப்பார்கள், இனிவரும் காலங்களில் பெறவும் செய்வார்கள்.

என்னுள்ளும் இறைவன் இருக்கிறான் என்கிற ஆச்சரியமிகு உறுதிப்பாட்டில்  எனக்குச் சூட்டிய பட்டப்பெயர்களின் பங்களிப்பு மிகவும் குறைவு என்பதற்காக இதைநான் சொல்லவேண்டியதாயிற்று. அதேவேளையில் சக்கரவர்த்தி என்றவகையில் நான் நிறைவேற்றிய எளிமையான தினசரி அலுவல்களால் இந்த உண்மை உறுதிசெய்யப்பட்டது  என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். ஜூபிடர் உலகின் மூளை எனில், மனிதர் விவகாரங்களை ஒழுங்குபடுத்துவது, கட்டுப்படுத்துவது என்றிருக்கிற ஒரு மனிதனும் அனைத்தையும் வழிநடத்துகிற அந்த மூளயின் ஒர் அங்கமாக தம்மை, கருதுவதே நியாயம். மனிதகுலம், சரியோ தவறோ, தொன்றுதொட்டு கடவுள்சார்ந்த சொல்லாடல்களை தெய்வச்செயல் (Providence) என்பதோடு இணைத்துப் பார்க்கிறது. பேரரசன் என்கிறவகையில் நான் நிறைவேற்றிய பணிகள்,  இத்தெய்வச்செயலின்கீழ் இயங்குகிற  மனிதப்பண்பில் அடங்கும். ஓர் அரசு மனிதர்கூட்டத்தை துல்லியமான, கட்டுக்கோப்பான கண்ணிகளில் அடைத்து  வளர்ச்சி அடைய அடைய, அந்த அளவிற்கு அடைபட்ட மனிதர்களின் நம்பிக்கையும் பெரும் அவாவாக மாறி  இந்த மிகப்பெரிய சங்கிலியின் மறுமுனையில், ஒரு பாதுகாவலரின் பிரியத்துக்குகந்த உருவத்தை கட்டமைக்க விரும்புகிறது. நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பேரரசின் கீழை மக்கள் என்னை ஒரு கடவுளாக நடத்தினார்கள். மேற்குநாடுகளிலும், உரோமிலும், அதிகாரபூர்வமாக நம்மைத் தெய்வமாக ஏற்றுக்கொள்வதென்பது மரணத்திற்குப் பின்னரே நிகழ்கிறது. எனினும் பாமர மக்களின் மூடத்தனமானபக்தி நம்மை உயிரோடிருக்கிறபோதே தெய்வமாகக் கொண்டாடுவதென்பது மேலும்மேலும் மகிழ்ச்சி தருகிற ஒன்று. உரோமானியப்பேரரசர் தங்கள்நாட்டில் அமைதியை நிலைநாட்டி பராமரித்ததை முன்னிட்டு,  நன்றி தெரிவிக்கிற வகையில்  பார்த்தியர்கள் கோயில்களை கட்ட ஆரம்பித்தார்கள்; பரந்திருக்கும் அந்த அந்நியர்  உலகில் வோலோஜிசியர்(Vologésie) பூமியில் எனக்கொரு வழிபாட்டிடத்தை அப்படி பெறமுடிந்தது. இத்தகைய ஆராதனைக்குரிய  சின்னளங்களை அங்கீகரிக்கிற மனிதர்களுக்கு, பொதுவாக அவற்றில்  ஓளிந்துள்ள பைத்தியக்காரத்தனமான அபாயமோ  அதன் வீரியமோ கண்ணுக்குத் தெரிவதில்லை. பதிலாக, நான் இப்பிரச்சினையில்  நூலிழைபோன்ற ஒன்று தட்டுப்படுவதை உணரமுடிந்தது, அதாவது  என்றென்றும் நிரந்தரமென்கிற முன்மாதிரியின்படியோ அல்லது மனிதசக்தியை உயர்ந்தபட்ச ஞானத்தின் ஒரு பகுதியாகவோ  கட்டமைத்துக் கொள்ளவேண்டிய நெருக்கடியை அதிற் கண்டேன். சுருக்கமாக சொல்வதெனில், ஒரு சக்கரவர்த்தியாக இருப்பதை விட ஒரு தெய்வமாக அடையாளம்பெற அதிக நற்பண்புகள் தேவை. 

பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு எலியூசிஸில்(Eleusis) தீட்சை பெற்றேன். ஒரு வகையில், பார்த்திய மன்னர் ஆஸ்ரோஸ்  சந்திப்பு என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. உரோம் திரும்புவதற்குப் பதிலாக, பார்த்திய பேரரசுவின் கிழக்குப் பகுதியிலும், கிரேக்கமாகாணங்களிலும் சில வருடங்களைக் கழிப்பதென  முடிவு செய்தேன்: ஏதென்ஸ் நகரம் முன்னெப்போதும் அறிந்திராத வகையில்  மேலும் மேலும் எனது தாயகமாகவும், எனது செயல்பாட்டு மையமாகவும் மாறியது. கிரேக்கர்களை மகிழ்விக்க விரும்பினேன், மேலும் முடிந்தவரை  கிரேக்கபண்பாட்டினை நேசிப்பவனாகவும் என்னை மாற்றிக்கொள்ள விரும்பினேன், இதன்பின்புலத்தில்  ஒருசில அரசியல் காரணங்களோடு, உதாரணம்காட்டவியலாத சமய அனுபவமும்  இருந்தன. இமாதிரியான பெரியசடங்குகள் மனித வாழ்க்கையின் நிகழ்வுகளை மட்டுமே அடையாளப்படுத்த உதவுகின்றன. ஆனால் குறியீடு, செயல்பாட்டை விட விரிவானப் பொருளைத் தரக்கூடியது  நித்திய இயக்கவியலின் அடிப்படையில் நமது சைகைகள் ஒவ்வொன்றையும் விளக்குகிறது. எலியூசிஸ்ஸில் (Eleusis)  பெறப்பட்ட போதனையின்  இரகசியம் காக்கப்பட வேண்டும்: மேலும் இதனை இயற்கையாகவே பிறருக்கு  விளக்கிச்சொல்வது கடினம் என்பதால் வெளிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.  மேலோட்டமான சான்றுகளை மட்டுமே முன்வக்க இயலும், அவ்வகையில் வடிவமைக்கபட்டுள்ளது,  அதனுடைய ஆழம் அப்படி. கிரேக்க பாதிரியாரான ஹைரோபாண்ட்(Hierophant) ஒருவருடன் தனிப்பட்ட வகையில் உரையாடிய வகையில் உயர்போதனைகளைப் பெற்றேன், இருந்தும் முதன்முதலாக நான் தீட்சை பெற்றபோது உண்டான அதிர்வு, புனிதயாத்திரை மேற்கொள்கிறவர்கள் நீர்சுணையில் சமயச்சடங்கு குளியலின்போதும் அந்நீரைப் பருகும்போதும் பெறும் அதிர்வுகளுக்கு நிகராக இருந்தது, இம்முறை அத்தகைய அனுபவம் என்னிடமில்லை. பொதுவாக இணக்கமற்றவைகூட தம்மிடையே உடன்பாடு காண்பதுண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு முறை பிரிதொரு கோளின் பிடிமானத்தில் ஒரு கனம் சாய்ந்து, வெகுதொலைவிலும், மிகஅருகில் சென்றும் மனிதரும் கடவுளுமாக வலம்வரும் கூட்டத்தில் – தவறுகளேதுமற்ற வலிகள்மட்டுமே எஞ்சியுள்ள அவ்வுலகில்-எனது இடமெங்கே என்று தேடினேன் ; அங்கே மனிதர் விதியின் வெளிக்கோடு, ஆகாயம் வரைந்த கோட்டோவியம் போல மின்னுகிறது, அதைக்காண போதிய அளவு பயிற்சிபெற்றிராத என்னுடைய விழிகளைக் கொண்டு, நான் காணமுடிந்ததெல்லாம் பழுதுகளும், குறைபாடுகளும். 

வாழ்நாள் முழுக்க எலூசினியன்(Eleusinian)  பாதைகளுக்கு நிகரான அதேவேளையில்  ஒளிவுமறைவற்ற வகையில் தெளிவாக  என்னை வழிநடத்திய  பழக்கமொன்றை, சரியாகச் சொல்வதெனில்   கோள்கள் மற்றும் நட்சத்திரங்களைப் பற்றிய எனது ஆய்வினை இங்கே பகிர்ந்துகொளவது நல்லதென நினைக்கிறேன். வானியல் அறிஞர்களுக்கு நண்பனாகவும், சோதிட வல்லுனர்களுக்கு வாடிக்கையாளனாகவும் இருந்துள்ளேன். பிந்தையஅறிவியல் நிச்சயமற்றது, ஒட்டுமொத்தமாக பார்க்கிறபொழுது ஒருவேளை அதில் உண்மை இருப்பதைப்போல தோற்றம் தரினும் தவறான தகவல்களுக்கு வாய்ப்புண்டு, இருந்தும், மனிதன் என்பவன் பிரபஞ்சத்தின் ஓர் அங்கம்; விண்ணுலகத்தை வழிநடத்தும் விதிமுறைகள் மனிதருக்கும் பொருந்தக் கூடியது; எனவே  நமது வாழ்ழ்க்கைக்குரிய கருப்பொருள்களையும், நமது வெற்றிதோல்விகளுக்கு காரணமானவற்றையும் புதிர்மிக்க அக்கோள்களிலிருந்து தெரிந்துகொள்வதில் தவறில்லை. இலையுதிர் காலங்களில் ஒவ்வொரு மாலையிலும், எனக்குப் பானபாத்திரம் சுமக்கிற சிறுதெய்வமாகவும் (’Échanson)32, எனது நல்வினை தீவினை சூத்திரதாரியாகவும்(le Dispensateur)32 இருக்கிற  நான் பிறந்த இராசியென  நம்பப்படும் ‘கும்பம்’ என்கிற கோளை வணங்கவும், அதுபோல வாழ்க்கையில் ஜூப்பிட்டர் மற்றும் வீனஸால் ஏற்படும் தாக்கத்தையும், சனிக்கிரகத்தினால் விளையும் தீங்கையும் அளவிட நான் மறந்ததில்லை. 

எனது முன்னிரவு நேரங்களை உடுக்களின் வடிவமாறத்தின் மீதான மனிதப்பார்வையின் போக்கிற்கு அடிக்கடி செலவிட்டபோதிலும்,  வானியல்கணிதம் மற்றும் எரிநட்சத்திர பேருடல்கள் தரும் தெளிவற்ற ஆருடங்களில் எனது ஆர்வத்தைக் கூடுதலாக உணர்ந்தேன். ஆனாலிந்த கிரகங்களின் தன்மையிலமைந்த மனிதர் வாழ்க்கையின் இவ்விநோதமான மாற்றுப்பாதை  பிரச்சினை,  எனது உறக்கமற்ற நேரத்தை அடிக்கடி ஆக்கிரமித்திருந்ததால்; வானியல் கணிதத்திலும், எந்த எரிநட்சத்திரங்களின் பேருடல்கள் தெளிவற்ற ஆரூடங்களை முன்வைத்தனவோ, அவற்றிலும் இன்னும் அதிகமாக ஆர்வம் காட்டினேன். மனிதர் வாழ்க்கைமுறையை பிரதிஎடுத்ததுபோல நிகழும் எலூசினியன் புனிதச் சுற்றுகளில், பூமியும்கூட இரவும்பகலும் பங்கேற்கிறதென நம்முடைய ஞானிகளில் ஒருசிலர் துணிச்சலுடன் நம்பினார்கள், அதனை நான்கூட நம்பத் தொடங்கினேன். ஒரே நேரத்தில் மேற்பரப்பிலும் கீழ்பரப்பிலும், மையத்திலும் புறஎல்லையிலும் அணுக்களின் சுழற்சியாகவும், வலிமையின் சுழற்காற்றாகவும் உள்ள இவ்வுலகத்தை என்னால் அசைவற்றதொரு கோள் என்றோ; நிலையானதொரு புள்ளி  ஆனாலது இயக்கமற்றதெனவோ ஒரு கருத்தியத்தை முன்வைப்பது எனக்குக் கடினம். 

அலெக்ஸாந்திரியாவைச் சேர்ந்த வானியல் மற்றும் கணிதவியல் அறிஞர் ஹிப்பார்க்கஸ்(Hipparque) 33 என்பவர் இரவு பால் சுழற்சியில் சூரியன் நிலநடுக்கோட்டினை கடக்கும் தருணத்தைக் (La précession des équinoxes) 33 துல்லியமாக கணக்கிட்டிருந்தார். இக்கணிப்பும் எனது இரவுநேர கோள்கள் அவதானிப்புக்கு இடையூறாக இருந்ததை பிறகொருகட்டத்தில்  உணர்ந்துள்ளேன்.  ‘எலுசீனியன் மர்மம்’  (Mystères d’Éleusis)34 சூரியன் நிலநடுக்கோட்டைக் கடந்து போவதையும் வருவதையும் குறியீடாகவும், நீதிக்கதைகளாகவும்  குறிப்பிடும், மாறாக ஹிப்பார்க்கஸ் கணிப்பு அவற்றையே செயல்முறைவிளக்கமாக அளிக்கிறது. கன்னி விண்மீன்குழுமக்  கதிர் (l’Epi de la Vierge), ஹிப்பார்க்கஸ் கையாண்ட வரைபட விண்மீன் குழுமத்தில் இன்றில்லை, ஆனாலிந்த மாறுபாட்டினை ஒரு காலவட்டத்தின் முடிவாகக் கருதமுடியும். இதுநிரந்தரமல்ல, மெள்ள மெள்ள, தவிர்க்கமுடியாதவகையில் ஹிப்பார்க்கஸ் காலத்து வானமண்டலம்  திரும்பவும் வரும், பின்னர் அதிரியனாகிய எனது காலத்தில் இருப்பதுபோலவே வருங்காலத்தில் அது இருக்கவும் கூடும். ஒழுங்கின்மை ஒழுங்கிற்குள் ஒடுங்கிவிடும். வானசாஸ்திர அறிஞர் முன்னதாக அறிந்து ஊகித்திருந்ததைப் போலவே ‘மாறுபாடு’ என்பது கால நிகழ்வில் ஓர் அங்கம். மனிதர் மூளை, எலுசீனியன் வழிமுறையில் பிரபஞ்சத்திற்கென்று தமது பங்களிப்பை சடங்குகள், நடனங்கள் போன்ற சூத்திரங்களைக் கொண்டு வெளிப்படுத்தும். மனிதன் கூர்ந்து கவனிக்கிறவன், விண்மீன்கள் கூர்ந்து கவனிக்கப்படுபவை, இருதரப்பினருமே சுழற்சி முறையில் விண்ணில் ஏதோவொரு பகுதியில் தங்கள் முடிவைத் தேடியவர்கள். ‘விழுதல்’ என்பது, கணம்தோறும் கிடைக்கும் தற்காலிக ஓய்வு, போகும் திசையைத் தெரிவிக்கிற அடையாளம், ஒரு கண்ணி, வலிமையில் அக்கண்ணி தங்கச்சங்கிலி ஒன்றிற்கு இணையானது, வான்வெளியில் ஒவ்வொரு இறக்கமும் ஒரு புள்ளியில் நம்மை ஒன்றிணைக்கிறது, அப்புள்ளியை பிரபஞ்சத்தின் மையமாக நான் உணர்வதால் அப்புள்ளியில் இருப்பதைப்போன்ற எண்ணம்.  

இளம்பிராயத்தில் இரவுநேரங்களில் மருல்லினஸின்(Marullinus)35 விண்மீன்களை நோக்கி உயர்த்திய கரம், சுட்டிக்காட்டிய பொருள்கள் பற்றிய  ஆர்வம் என்னை விட்டு இன்றுவரை விலகவில்லை. இராணுவ முகாம்களில் கட்டாயமாக  விழித்திரிருக்க நேரும் இரவுகளில் அலங்கோலமான வானத்தில் மேகங்கள் ஊடாக ஓடிக்கொண்டிருக்கும் நிலவைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன்; பிற்காலத்தில்,  அட்டிக் பிரதேச தெளிவான இரவுகளில், நம்முடைய ரோட்ட்ஸ் தீவு வானியலாளர் தெரோன்(Théron)36,  தமதென்று வடித்துக்கொண்ட  உலக அமைப்பை எனக்கு விளக்கிக்கூற அதையும் காதில் வாங்கியுள்ளேன்; நட்டநடு ஏஜியன்(Aegean) கடலில் மரக்கலமொன்றின் மேல்தளத்தில் படுத்தபடி, நட்சத்திரங்களுக்கிடையில் பாய்மரத்தின் மெதுவான ஊசலாட்டத்தையும் ;  ரிஷபநட்சத்திரத்தின்(Taurus) சிவந்த கண்ணில் ஆரம்பித்து, கார்த்திகை(Pleiades)நட்சத்திரம் சிந்தும் கண்ணீர்வரையிலும் ; பெகாசஸில்(Pegasus) நட்சத்திரத்தில் ஆரம்பித்து சிக்னஸ்(Cygne)நட்சத்திரம் வரைலும் விண்மீன் கூட்டங்களைக் கூர்ந்து கவனித்துள்ளேன். அவ்வேளையில், என்னைப்போலவே வான மண்டலத்தை என்  அருகிலிருந்து அவதானித்த இளைஞனுடைய  வெகுளித்தனமாகக்  கேள்விகளுக்கும், காத்திரமான வினாக்களுக்கும் முடிந்தவரையில் சரியான பதில்களைத் தெரிவித்திருக்கிறேன். இங்கே, வில்லாவில், ஒரு கண்காணிப்பகம் கட்டினேன், மாறாக என்னை பீடித்துள்ள நோய் காரணமாக அதனுடைய படிகளில் ஏற முடிவதில்லை. என் வாழ்க்கையில் ஒருமுறை, ஓர்இரவை முழுமையாக விண்மீன் குழுமத்திற்கென ஒப்படைக்க வேண்டியிருந்தது, இச்சசம்பவத்தை மிகையாக எடுத்துக் கொள்ளலாம். ஆஸ்ரோஸ் சந்திப்பிற்குப்பிறகு, சிரியன் பாலைவனத்தை கடக்கும் போது  இது நிகழ்ந்தது.  என் முதுகைக் கிடத்தி, கண்களை அகலத் திறந்து, சில மணிநேரங்களுக்கு மனிதக் கவலைகள் அனைத்தையும் கைவிட்டு, மாலையில் ஆரம்பித்து விடியும்வரை பளிங்கினைப்போல நிரமலமாக சுடர்விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்த உலகிற்கு என்னைத் தந்தேன். எனது பயணங்களில் இப்படியொரு அழகான அனுபவத்திற்கு ஒருபோதும் உட்பட்டதில்லை. என் தலைக்கு மேலே ஆகாயத்தில் மனித உயிர்களின் அழிவுக்குப்பின்னரும் ஆயிரமாயிரம் நிலைத்திருக்கக்கூடிய, விண்மீன் குழுமங்களிலேயே மிகப்பெரியதான லைரா(Lyre) என்கிற துருவநட்சத்திரம் பிரகாசித்தது. ஜெமினி(Gémeaux) அந்தி சாயும் நேரம் என்பதால்  கடைசி மினுமினுப்பில் மங்கலாகப் பிரகாசிக்க, சர்ப்பம்(Serpent) தனுசை(Sagittaire) முந்திக்கொண்டது; கழுகு(Aquila) இறக்கைகள் முழுவதையும் விரித்து வான்கோளின் உச்சத்தை(zenith) நோக்கி செல்ல, அதன் கால்களின்கீழ் வாணியல் அறிஞர்கள் இன்னமும் பெயர்சூட்டியிராத ஒரு நட்சத்திரம் தெரிந்தது, அதற்கு அன்றையதினம் மிகவும் பிரியமான பெயர்களைச் சூட்டி மகிழ்நதேன். அறைகளுக்குள் முடங்கிக்கிடப்பவர்களும், உறங்குபவர்களும் நினைப்பது போலன்றி அன்றையஇரவு கடுமையாக இருட்ட ஆரம்பித்து பின்னர் தணிந்தது. குள்ளநரிகளை பயமுறுத்துவதற்காக எரிக்கப்பட்ட தீயும் அணைந்தது; கனன்றுகொண்டிருந்த தீக்கங்குகள் திராட்சைத் தோட்டத்தில் நிற்கும் என் பாட்டனாரை நினைவு கூர்ந்தன. அவருடைய தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிகழ்காலத்திற்குள் பிரவேசித்தன, வெகுவிரைவில் அவை  கடந்த காலத்திற்குரியவை என்றாகும். நான் பல வடிவங்களில் தெய்வசக்தியுடன் ஒன்றிணைய முயற்சித்திருக்கிறேன்; இம்முயற்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட பரவசத்தை அறிந்துமிருக்கிறேன்; அவற்றில் சில கொடூரமானவை; மற்றவையோ அதீத பரவசத்திற்குரியவை. மாறாக அந்த சிரியன் இரவோ ஆச்சரியப்படும்வகையில் தெள்ளத் தெளிவாக இருந்தது.  இதற்குமுன் எந்த ஒரு அவதானிப்பு கூறும் ஒருபோதும் அனுமதித்திராத துல்லியத்துடன் வானமண்டல கோள்களின் இயக்கங்களை என்னுள் அந்த இரவு பதிவு செய்தது. உனக்கென்று இதை எழுதும் இக்கணத்தில் இங்கே திபூரில், உயர்ந்த ஓவியங்கள் தீட்டபட்ட, காரை பூசப்பட்ட தளங்களுக்கு மேலே, அல்லது  வேறோர் இடத்தில் உதாரணத்திற்கு ஒரு கல்லறைக்கு மேலே வானில் கடந்துசெல்லும் நட்சந்திரங்கள் எவையென்பதை என்னால் துல்லியமாக சொல்லமுடியும்.  ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு, ‘மரணமும்’ அப்படியொரு தொடர்ந்த அவதானிப்புக்குரிய சிந்தனைப் பொருளாக மாறியது, அரசாங்க விவகாரத்திற்கு வேண்டிய சக்தியைக் கொடுத்ததுபோக எஞ்சியிருந்த அனைத்தையும் இதற்கென்று ஒதுக்கினேன். மரணம் பற்றி பேசுகிறபோது, அம்மரணத்தினூடாக நாம் அடையக்கூடிய மர்மமான உலகம் குறித்தும் பேசுகிறோம். ஏராளமான சிந்தனைகள், எண்ணற்ற அனுபவங்கள் – சில நேரங்களில் கண்டனத்திற்குரியவை என்கிறபோதும் – இக் கருப்புத் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறதெஎன்று எனக்குத் தெரிவதில்லை. ஆனால் சிரியா பாலைவனத்தில் கண்ட இரவு என்றென்றும் எனக்கு மரணமில்லா நனவுக்கு ஒரு நல்ல உதாரணம். 

தொடரும்….

————————————————————————————————————————————-

குறிப்புகள்…

31. புரோட்டியஸ்(Proteus)  கிரேக்க கடல் மற்றும் நதிக்குரிய தெய்வம், இதொரு நிமித்திகனும் ஆகும். 

32. எஷான்சோன்(Echanson), கிரேக்கத் தொன்மத்தின்படி விருந்துபசாரங்களில் தண்ணீர், மது பரிமாறும் தெய்வம் ; டிஸ்பான்ஸாத்தர் (Dispensateur) நல்வினை தீவினைகளை மனிதருக்கு அளிக்கும் தெய்வம்.

33. ஹிப்பார்க்கஸ் (Hipparchus)கி.பி.190–கி.பி.120 கிரேக்க வானவியல், கணிதம், புவியியல்  மற்றும் சோதிடவியல் அறிஞர். 

34. எலுசீனியன் மர்மங்கள் (The Eleusinian Mysteries ) என்பது  எலுசீயஸில் இருந்த பண்டைய கிரேக்க பான்ன்ஹெலினியன் சரணாலயத்தில்  உள்ள டிமிட்டர் மற்றும் பெர்செபோன் தேவதைகள் வழிபாடு மரபுகளுக்கு சூடப்பட்ட பெயர்.

35. ஏலியஸ் மருல்லினஸ்(Aelius Marullinus) என்றும்  Publius Aelius Hadrianus Marullinus முதக் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசில் வாழ்ந்த ஸ்பெய்னைச்  சேர்ந்த ப்ரீடோரியன் பதவியில் இருந்த ஒரு ரோமானிய செனட்டர் ஆவார்.

36. கிரேக்கத்தில்  Theron என்ற சொல்லுக்கு வேட்டையாடுபவர் என்று பொருள், இபெயரில் கிரேக்க ரோமானிய வரலாற்றில் ஒரு கொடுங்கோலன் உண்டு. ஆனால் இங்கு இந்த Théron வானசாஸ்திர சார்ந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த, ரோட்ஸ் தீவில் சில காலம் வாழ்ந்த ஹிப்பார்க்கஸ் என்ற வானவியல் அறிஞரை குறிப்பிடுகிறது என பொருள்கொள்ளவேண்டும். 

(தொடரும்)

Series Navigation<< அதிரியன் நினைவுகள் -20அதிரியன் நினைவுகள் -22 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.