ராயல்டி பிரச்னை எனக்கில்லை!

 50 நூல்கள் எழுதிய எஸ்.எல்.வி. மூர்த்தி பேட்டி

எழுத்தாளர் எஸ்.எல்.வி. மூர்த்தி, அஹமதாபாத் ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ. படித்தவர். நிர்வாகவியல், தொழில்துறை, வரலாறு, வாழ்க்கை வரலாறு, சுய முன்னேற்றம் எனப் பல்வேறு துறைகளில் நூல்கள் எழுதி வருகிறார். 

இரண்டாயிரத்தின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்து வருடத்துக்கு மூன்று நூல்கள் எனத் தற்போது 50 நூல்கள் வரைக்கும் வந்துவிட்டார் 77 வயது எஸ்.எல்.வி. மூர்த்தி. சத்தமில்லாமல் ஒரு சாதனை.

இவர் எழுதிய, தொழில் முனைவோர் கையேடு – 2008-ல் சிறந்த பிசினஸ் நூலாகத் தமிழக அரசின் விருதைப் பெற்றது. இந்நூலைப் படித்துவிட்டு இவரிடம் ஆலோசனைகள் கேட்டவர்கள் பல நூறு பேர். நாணயம் விகடன், தி இந்து தமிழ் போன்ற ஊடகங்களில் பல வருடங்களாகத் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இ ந்தப் பேட்டியின் வழியாக அவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள முயல்வோம்.

1. எந்த வயதில் எழுத ஆரம்பித்தீர்கள்? முதல் புத்தகத்தின் அனுபவம் பற்றி?

1954. என்னுடைய ஒன்பதாவது வயதில் முதல் சிறுகதையை எழுதினேன். கதைக்கருவோ, தலைப்போ நினைவில் இல்லை. முதல் வாக்கியம் நன்றாக நினைவிருக்கிறது – வள்ளி வயல் வரப்பில் நடந்துகொண்டிருந்தாள்

பிறகு, 200 பக்கங்கள் கொண்ட மூன்று நோட்டுப் புத்தகங்களை என் சிறுகதைகளால் நிரப்பினேன். என் தந்தை தந்த ஊக்கத்தால் பல கதைகளை ‘கல்கி’, ‘தினமணி கதிர்’ ஆகிய பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய வேகத்தில் அவை நிராகரிக்கப்பட்டன. என் தந்தை, எழுத்தாளர் சுந்தரம் ராமசாமியை நன்கு அறிவார். என்னுடைய நோட்டுப் புத்தகங்களை அவரிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னார். படித்த அவர், என்னிடம் சொன்ன அறிவுரை, “உன் வயசுக்கு ஏற்ற கதைகளை எழுது!”

ஏன் தெரியுமா? ஒன்பது வயதில், அந்தப் பிஞ்சில் பழுத்த பழம் எழுதியவை அத்தனையும் காதல் கதைகள்! 

இரு பள்ளிக் கோடை விடுமுறைகளில் நானும் சில நண்பர்களும் கையெழுத்துப் பத்திரிகைகள்  நடத்தினோம். ஒரு விடுமுறையில் நடத்திய பத்திரிகையின் பெயர் ‘அமுதம்’ (குமுதத்தின் பாதிப்போ?). இன்னொரு விடுமுறையில் ‘டமாரம்’.

நான் பிறந்து வளர்ந்தது, குமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலின் ஒரு பகுதியான ஒழுகினசேரி கிராமம். நாங்கள் கேட்காமலேயே, ஊர்ப் பெரியவர்கள் காகிதம், கலர் பென்சில்கள் ஆகியவற்றை வாங்குவதற்குப் பணம் தந்து உதவினார்கள். பத்திரிகை வெளியானவுடன் அதைப் படிக்கப் போட்டா போட்டி. அமுதத்திலும், டமாரத்திலும் சுந்தரம் ராமசாமி தந்த அறிவுரையைக் கடைப்பிடிக்க முயன்றேன். ஆனாலும் பெரும்பாலானவை காதல் கதைகளாகவே இருந்தன. ஒருசில, சிறுவர் கதைகள். 

என் வயது பதின்மூன்று.  ‘படிப்பும் பண்பும்’ என்னும் சிறுவர் கதை எழுதினேன். நாகர்கோவிலில் கத்தோலிக்கத் திருச்சபை ‘தென் ஒலி’ என்னும் மாதப் பத்திரிகையை நடத்தினார்கள். அவர்களுக்குக் கதையை அனுப்பினேன். வெளியானது. நான் மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றேன். பத்திரிகை ஆசிரியர் புனிதத் தந்தை ஜேசுதாசன் தொடர்ந்து என் பதினொரு கதைகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டார். 

என் கல்லூரிப் படிப்பு ஆரம்பமானது. அடுத்த ஒன்பது வருடங்கள் பி.யூசி, பி.எஸ்சி, எம்.ஐ.டி. (Madras Institute of Technology – பொறியியல் படிப்பு), அஹமதாபாத் ஐஐஎம்-மில் எம்.பி.ஏ. படிப்பு என நான் படிப்பின் மும்முரத்தில் இருந்ததால் விரல்விட்டு எண்ணக்கூடிய கதைகள், கட்டுரைகளையே எழுதினேன். பெரும்பாலானவை வெளியாகவில்லை. இதற்கு ஈடு கட்டும்படி எம்.பி.ஏ. இரண்டாம் வருட மாணவனாக இருந்தபோது பிரபல ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழில் என் கட்டுரை வெளியானது. பிரபலங்களும் மேதைகளும் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த அந்த இதழில் மாணவனான என் எழுத்து வெளியானவுடன் பேராசிரியர்களே மனதாரப் பாராட்டினார்கள்.  

1969. மும்பையில் இருக்கும் ‘கிரைன்ட்வெல் நார்ட்டன்’ (Grindwell Norton)  நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன். 1972-இல் திருமணம். 1973 -இல் மறுபடியும் எழுதத் தொடங்கினேன். ‘கல்கி’யில் மூன்று கதைகள் வெளியாயின.   

1977. ‘மூர்த்தி மார்க்கெட்டிங் அசோசியேட்ஸ்’ (Moorthy Marketing Associates) என்னும் சொந்த நிறுவனத்தை சென்னையில் தொடங்கினேன். ஹாங்காங்கிலிருந்து வெளியாகும் ‘பிஸினஸ் ஏஷியா’ (Business Asia) இதழில் தொடர்ந்து ஆங்கிலக் கட்டுரைகள் எழுதினேன். ரிலையன்ஸ் நிறுவனத்தின் திருபாய் அம்பானி, முகேஷ்  அம்பானி, அனில் அம்பானி ஆகியோரோடு மூன்று நாள்கள் செலவிட்டது அற்புதமான அனுபவம். 

1980. ‘பிஸினஸ் ஏஷியா’ 12 கட்டுரைகளைத் தொகுத்து Inside Asia என்னும் நூலாக வெளியிட்டார்கள். ஒரு கட்டுரை என்னுடையது. என் முதல் புத்தகம் என்று நான் பெருமைப்பட முடியவில்லை. ஏனென்றால், கட்டுரை ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது என்பது அவர்கள் கொள்கை. ஆனால், அன்று கணிசமான தொகையான 1,000 ரூபாயைத் தந்தார்கள். ஒரு வார்த்தைக்கு ஒரு ரூபாய் என்னும் கணக்கில்.  

அடுத்தப் பல வருடங்கள். பிஸினஸ் கூட்டாளியின் நம்பிக்கைத் துரோகம், அதனால் வந்த பொருளாதாரச் சிக்கல்கள், வளரும் குடும்பம் எனப் பல பிரச்னைகள். 2005 -இல் மறுபடியும் எழுதத் தொடங்கினேன். என் மனத்துக்கு ஆறுதல் சொல்லிக்கொள்ளவோ, ஏனோ, சுயமுன்னேற்றக் கட்டுரைகள் எழுதினேன்.  முதல் கட்டுரையை ‘ராமகிருஷ்ண விஜயம்’ வெளியிட்டது. அதன் ஆசிரியர் மகாராஜ் விமூர்த்தானந்தாஜி  தொடர்ந்து எழுத ஊக்கம் தந்தார். சுமார் இருபது கட்டுரைகளை வெளியிட்டார். 

2007. என் எழுத்து வாழ்வின் பொற்காலத் தொடக்கம்.  ‘ராமகிருஷ்ண விஜயம்’ தாங்கள் வெளியிட்ட பல எழுத்தாளர்களின் 48 கட்டுரைகளைத் தொகுத்து, ‘விழித்திடு, வென்றிடு’, ‘வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே!’,  ‘வெற்றிக்கு விரைந்திடு’ என மூன்று புத்தகங்களை வெளியிட்டார்கள். அவற்றுள் 12 கட்டுரைகள் என் பெயருடன். ஆகவே, ‘விழித்திடு, வென்றிடு’ தான் என் முதல் தமிழ்ப் புத்தகம்.  

2. தொழில்துறை, மேனேஜ்மென்ட் தொடர்பாக ஆரம்பத்தில் எழுதினீர்கள். அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு எப்படி?    

2007 காலக்கட்டத்தில் புதினங்கள் வாசிப்போர் வட்டம் சுருங்கி வருவதாக எனக்குள் உள்ளுணர்வு.  சுயமுன்னேற்றக் கட்டுரைகளைத் தொடர முடிவெடுத்தேன். அப்போது திறந்தது ஒரு புதிய கதவு.

புதிய துறைகளில் நூல்கள் வெளியிடுவது கிழக்கு பதிப்பகத்தின் திட்டம். நிர்வாகம் தொடர்பாக எழுத முடியுமா என்று என்னிடம் கேட்டார்கள். இந்தத் துறையில் எனக்குத் தனித்துவம் இருப்பதை உணர்ந்தேன். இந்தியாவின் நெ.1 மேனேஜ்மென்ட் கல்லூரியான அஹமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் நான் செதுக்கப்பட்டவன்.  அந்த மாணவர் கூட்டத்தில் தமிழ் எழுதத் தெரிந்த மிகச்சிலரில் ஒருவன். மேலும் தமிழ் எழுத்துலகில் நுழைவாயிலைத் தேடிக்கொண்டிருப்பவன். ஆகவே, உடனேயே சம்மதித்தேன். 

கிழக்கு ஆசிரியர் பா. ராகவனைச் சந்தித்தேன். தொழில்துறை சம்பந்தமான என் எழுத்துக்களுக்கு அடித்தளமிட்டவர் அவர்தான். எச்.ஆர். (H.R.) குறித்து எழுதச் சொன்னார். 

“மேனுஸ்க்ரிப்ட் எப்போது அனுப்புவீர்கள்?”

“மூன்று மாதங்களில்.”

“எனக்கு முப்பது நாள்களில் தரவேண்டும்.”

எனக்கு அப்போது டைப்பிங்கே தெரியாது. முப்பது நாள்களில் முடிப்பது இயலாத காரியம். 

“முயற்சிக்கிறேன்.”

“இல்லை. தரவேண்டும்.”

“ஒருவேளை தாமதமானால்…” 

“மேனுஸ்க்ரிப்ட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.” 

இந்த (அன்பு?) மிரட்டலைச் சவாலாக எடுத்துக்கொண்டேன். அடுத்த பல வாரங்கள். பசி, தூக்கம் மறந்தேன். 29 – ஆம் நாள் மேனுஸ்க்ரிப்ட் ரெடி. பா.ரா. மனமாரப் பாராட்டினார். 

“ஹலோ, உங்களைத்தான் தேடுகிறார்கள்” என்னும் தலைப்பில் புத்தகம் வெளியானது.  விற்பனையும், வரவேற்பும் என்னை அசரவைத்தன. காரணங்களை ஆராய்ந்தேன். 

சாஃப்ட்வேர்  நிறுவனங்களில் பணிபுரியும் பல இளைஞர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். தமிழ்ப் புத்தகங்கள் மட்டுமே படிப்பவர்கள். உயர் பதவிகளுக்காக மேனேஜ்மென்ட் அறிவு பெற விரும்பினார்கள். அவர்களின் தாகத்தை இந்தப் புத்தகம் தணித்தது. இந்தத் தேவையைச் சரியாகக் கணித்தது பா.ராவின் தீர்க்கதரிசனம்.  இந்த வெற்றியால், பா.ரா. தந்த ஊக்கத்தால், நான் கிழக்குக்கு எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை;

2007-ல் 5, 2008-ல் 7, 2009-ல் 7.

பிறகு, கிழக்கைத் தாண்டி, விகடன், மதி நிலையம், சிக்ஸ்த் சென்ஸ், தி இந்து தமிழ், சுவாசம் பதிப்பகம் ஆகிய நிறுவனங்களிலும் எழுதியிருக்கிறேன், எழுதி வருகிறேன்.                              

3. நீங்கள் எழுதிய ‘தொழில் முனைவோர் கையேடு’ தமிழக அரசின் விருதைப் பெற்றது. இந்த விருதை எதிர்பார்த்தீர்களா? விருது வாங்கிய அனுபவம் எப்படி இருந்தது? 

2007 –இ ல்  மேனேஜ்மென்ட் பற்றி எழுத ஆரம்பித்த நான், அடுத்த வருடமே எழுதிய நூல், தொழில் முனைவோர் கையேடு. ஒருவகையில் அப்போது, தமிழில் மேனேஜ்மென்ட் துறையில் ஆரம்ப எழுத்தாளன் நான். ஆகவே, இந்த விருதை எதிர்பார்க்கவேயில்லை. இது ஆனந்த அதிர்ச்சி, என்னை மேலும், மேலும் எழுதவைத்த உற்சாக டானிக். 

4. 60 வயதுக்குப் பிறகு எழுத்துலகில் தீவிரமாக இயங்க ஆரம்பித்தீர்கள். பிறகு இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக வருடத்துக்கு 2, 3 நூல்களை எழுதும் அளவுக்கு நேரமும், முனைப்பும் இருந்தது எப்படி?

ஒன்றை விட்டுவிட்டீர்களே? ‘மூர்த்தி மார்க்கெட்டிங் அசோசியேட்ஸ்’ என்னும் ஆலோசனை நிறுவனத்தையும் 45 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். என் தந்தை, தான் மறைந்த 75 வயது வரை காலை 4 மணிமுதல் இரவு 11 மணிவரை உழைத்தவர். அவர் வழியில் வந்த நான் ‘நேரம் இல்லை’ என்று சொன்னால், அது அநியாயம். முனைப்பு? வாசகர்கள் தரும் ஆதரவால், அவர்கள் வாழ்க்கையில் முன்னேற என் புத்தகங்கள் உதவியிருக்கின்றன என்று சொல்லும் கருத்துகளால், இவற்றைப் பிரதிபலிக்கும் விற்பனையால். 

5. வாசகர்கள் பலரும் உங்கள் புத்தகங்களைப் படித்து உங்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடியிருக்கிறார்கள். அதைப் பற்றி?   

அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். கோவையில் வருடம் ரூ. 10,000 கோடிக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யும் ஒரு பிரமாண்ட நிறுவனத்தின் தலைவர் தன் செயலாளர் மூலமாக, என் தொலைப்பேசி எண்ணைக் கண்டுபிடித்து ஃபோன் செய்தார். அவர் என்னிடம் சொன்னார், “என்னைப் பாதித்த நூல்கள் மூன்று. அவை, நெப்போலியன் ஹில் எழுதிய Think and Grow Rich, பாரதியாரின் கவிதைகள், அடுத்ததாக நீங்கள் எழுதிய MBA மூன்றெழுத்து மந்திரம் தொடர் நூல்” என்றார். இதைக் கேட்டுப் பல நாள்களுக்கு என் கால்கள் தரையில் படவில்லை. 

சேலம், தஞ்சாவூர், மதுரை, கோயம்பத்தூர், காரைக்குடி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் இருக்கும் எம்.பி.ஏ. கல்லூரிகளின் பேராசிரியர்கள் அடிக்கடித் தொடர்புகொண்டு “எங்கள் மாணவர்களுள் பலர் தமிழ் மீடியத்தில் படித்தவர்கள். அவர்களுக்கு மேனேஜ்மென்ட் கொள்கைகளை விளக்க உங்கள் நூல்கள் உதவுகின்றன” என்று பூங்கொத்துகள் அளித்தார்கள்.

“என் கம்பெனி ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம். அதை நிர்வகிக்க உங்களுடைய தொடர் வழிகாட்டியாக இருக்கிறது” என்று பல தொழில் முனைவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் துபாய், தோஹா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா எனப் பல நாடுகளிலிருந்தும் எனக்கு மின்னஞ்சல்கள் வந்துள்ளன. 

இதையும் தாண்டிய ஆச்சர்யம். “வீட்டை நிர்வகிக்கவும் உங்கள் புத்தகங்கள் உதவுகின்றன” என்று நன்றி சொன்ன பல இல்லத்தரசிகள். 

ஓர் எழுத்தாளனுக்கு வேறு என்ன மகுடம் வேண்டும்? 

6. புத்தகம் எழுத நீங்கள் மேற்கொள்ளும் நடைமுறைகள் என்ன? தொடர்ச்சியாக எழுத எது காரணமாக உள்ளது? 

தினமும் 500 வார்த்தைகளாவது எழுதவேண்டும் என்று வைத்திருக்கிறேன். ஒரு புத்தகம் எழுதி முடிக்க சுமார் ஆறு மாதங்களாகின்றன. எழுதி முடித்தபின், அது என் படைப்பு என்பதை மறந்து, வாசகன் பார்வையில் படிப்பேன். தயங்காமல் மாற்றங்கள் செய்வேன். 

7. தொழில்துறை நூல்களில் இருந்து வரலாற்று நூல்களை எழுத ஆரம்பித்தது ஏன்?

திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான வேலையைச் செய்துகொண்டிருந்தால் எனக்குச் சலிப்பு வரும். வேறு எந்த வகையான புத்தகங்கள் எழுதலாம் என்று மனத்துக்குள் கேள்விகள். கிழக்கு பதிப்பகத்தில் பணியாற்றிய ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகத்தில் ஆசிரியராகச் சேர்ந்திருந்தார். ‘ஜுலியஸ் ஸீஸர்’ வரலாற்றை எழுதச் சொன்னார். அந்தப் புத்தகம் மாபெரும்  வெற்றி கண்டது. ‘மாவீரன் நெப்போலியன்’, ‘அலெக்சாண்டர்’, ‘செங்கிஸ்கான்’,‘கிளியோபாட்ரா’, ‘அசோகர்’ என என் வரலாற்று எழுத்துவரிசை நீள்வதற்கு ஆரம்பப்புள்ளி நண்பர் ஆர். முத்துக்குமார். 

8. உங்கள் பதிப்பாளர்கள், உங்களுக்கு கிடைத்த ராயல்டி பற்றிச் சொல்லுங்கள்.

என் தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டிருப்பவர்கள் – ராமகிருஷ்ண மடம், கிழக்கு, விகடன், மதி நிலையம், சிக்ஸ்த் சென்ஸ், தி இந்து தமிழ், சுவாசம் ஆகிய பதிப்பகங்கள். இதில் ராமகிருஷ்ண மடம் சேவை நிலையம். ஆகவே, ராயல்டி கிடையாது. பிற பதிப்பகங்கள், அவர்களுடைய தற்காலிகப் பொருளாதார நெருக்கடிகளால் ராயல்டி தருவதில் தாமதங்கள் ஏற்பட்டிருக்கலாம்.  ஆனால், நிலைமை சீரானவுடன் தந்துவிட்ட நேர்மையாளர்கள். ஆகவே, எனக்கு ராயல்டி பிரச்னை எதுவும் இல்லை.     

9. முக்கியப் பத்திரிகைகளில் தொடர்களை எழுதியிருக்கிறீர்கள். அதைப்பற்றி?

‘நாணயம் விகடன்’, ‘இந்து தமிழ்திசை’. ‘தினமணி டாட் காம்’ ஆகிய ஊடகங்களில் தொடர்கள் எழுதியிருக்கிறேன். புத்தகங்களைவிட இந்தத் தொடர்களின் வீச்சு பல நூறு மடங்கு அதிகமாக இருப்பதாக என் அனுபவம் சொல்கிறது.  ‘நாணயம் விகடன்’ ஆசிரியர் ஏ. ஆர். குமார், ‘இந்து தமிழ்திசை’  ஆசிரியர் கே. அசோகன், பிசினஸ் பக்க ஆசிரியர்  எம். ரமேஷ், ‘தினமணி டாட் காம்’ ஆசிரியர் ஆர். பார்த்தசாரதி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.      

10. உங்கள் வாசிப்பு எப்படி இருக்கும்? நீங்கள் அடிக்கடி படித்த நூல் எது? 

பெரும்பாலும் சுயமுன்னேற்ற நூல்களும் வரலாற்று நூல்களும் படிக்கிறேன். அடிக்கடிப் படித்த நூல் என்று எதையும் சொல்லமுடியாது. 

11.   நீங்கள் எழுதிய நூல்களில் மிகச் சவாலாக இருந்தது எது? எந்த நூலை எளிதாக எழுதிவிட்டீர்கள்? 

சவாலாகவும் அதிக ஆராய்ச்சியும் தேவைப்பட்ட புத்தகம், சிக்ஸ்த் சென்ஸ் வெளியிட்ட ‘மேனேஜ்மென்ட் உங்கள் உள்ளங்கையில்’. மற்றபடி, எந்த நூலையும் எளிதாக எழுதவில்லை என்று நினைக்கிறேன். 

12. 50 அபுனைவுநூல்களை எழுதிய உங்களுக்கு நாவல் எழுதும் ஆவல் வரவில்லையா?

நான் எழுதிய எதுவுமே புனைவுநூல் அல்ல. மேனேஜ்மென்ட், வரலாறு தவிர்த்த பிற துறைகளில் எழுதும் திட்டமும் எனக்கு இப்போது இல்லை. 

13. உங்களுடைய வயதில் பலரும் ஓய்வை விரும்புவார்கள். ஆனால், நீங்கள் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். எது உங்களை இயங்க வைக்கிறது?

எழுத்தே என் மனத்தை ஆசுவாசப்படுத்தும் ஓய்வு. இசை, சினிமா, இறை வழிபாடு என இன்னும் பல வகைகளிலும் நான் ஓய்வெடுக்கிறேன். 

14. தற்போது எழுதத் திட்டமிட்டுள்ள நூல்கள் எவை?

இந்த ஜூன் மாதம்தான் சுவாசம் பதிப்பகம் வெளியீடாக ‘தாமஸ் ஆல்வா எடிசன்’ வந்திருக்கிறது. அடுத்தப் புத்தகங்கள் பற்றி இனிமேல்தான் யோசிக்கவேண்டும்.

***

எஸ்.எல்.வி. மூர்த்தி இதுவரை எழுதிய 50 புத்தகங்களின் பட்டியல்:

1. Inside Asia (இணை ஆசிரியர்) (Business Asia. Hong Kong)

2. விழித்திடு, வென்றிடு (இணை ஆசிரியர்) (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்) 

3. வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே! (இணை ஆசிரியர்) (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்)

4. வெற்றிக்கு விரைந்திடு (இணை ஆசிரியர்) (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்)

5. ஹலோ, உங்களைத்தான் தேடுகிறார்கள்! (கிழக்கு பதிப்பகம்)

6. சவாலே, சமாளி (கிழக்கு பதிப்பகம்) 

7. ‘சிப்’புக்குள்  முத்து (கிழக்கு பதிப்பகம்) 

8. நம்மை நாமே அறியலாமா (கிழக்கு பதிப்பகம்) 

9. நான் எம்.பி.ஏ. ஆவேன் (கிழக்கு பதிப்பகம்) 

10. எகிப்திய நாகரிகம் (கிழக்கு பதிப்பகம்) 

11. மாயன் நாகரிகம் (கிழக்கு பதிப்பகம்) 

12. ஜேம்ஸ் வாட் (கிழக்கு பதிப்பகம்) 

13. சுப்ரமணியன் சந்திரசேகர் (கிழக்கு பதிப்பகம்)  

14. நாகரிகங்கள் (கிழக்கு பதிப்பகம்) 

15. பி.பி.ஓ. (கிழக்கு பதிப்பகம்) 

16. தொழில் முனைவோர் கையேடு (கிழக்கு பதிப்பகம்) 

17. James Watt (New Horizon Media)

18. ஐ. ஐ. எம். நிர்வாகவியல் கல்லூரி (கிழக்கு பதிப்பகம்) 

19. இன்டர்வியூ டிப்ஸ் (கிழக்கு பதிப்பகம்) 

20. வால்மார்ட் (கிழக்கு பதிப்பகம்) 

21. மார்க்கெட்டிங் யுத்தங்கள் (கிழக்கு பதிப்பகம்) 

22. பி.பி.ஓ. ஒரு அறிமுகம் (கிழக்கு பதிப்பகம்) 

23. ஈ காமர்ஸ் (கிழக்கு பதிப்பகம்) 

24. டியர் மிஸ்டர் பிசினஸ்மேன் (விகடன் பிரசுரம்)  

25. இரண்டாம் ஆப்பிள் (விகடன் பிரசுரம்)  

26. ஜப்பான் (கிழக்கு பதிப்பகம்) 

27. விளம்பர உலகம் (விகடன் பிரசுரம்)  

28. எம்.பி.ஏ. –  மூன்றெழுத்து மந்திரம் (விகடன் பிரசுரம்)  

29. ஜூலியஸ் சீசர் (சிக்ஸ்த் சென்ஸ்)

30. அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் (மதி நிலையம்)

31. வாங்க பழகலாம்! (மதி நிலையம்)

32. இன்டர்வியூக்கள் (மதி நிலையம்)

33. மாவீரன் நெப்போலியன் (சிக்ஸ்த் சென்ஸ்)

34. பண்டைய நாகரிகங்கள் (கிழக்கு பதிப்பகம்) 

35. எழுச்சி பெறு யுவனே! (இணை ஆசிரியர்) (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்)

36. சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ (கிழக்கு பதிப்பகம்) 

37. பீமநகரி (சுய வெளியீடு)

38. அலெக்சாண்டர் (சிக்ஸ்த் சென்ஸ்)

39. பொசிஷனிங் (சிக்ஸ்த் சென்ஸ்)

40. தொழில் கலாச்சாரங்கள் (தி இந்து தமிழ்)  

41. அமேசான் வெற்றிக்கதை (கிழக்கு பதிப்பகம்) 

42. தொழில் முன்னோடிகள் (தி இந்து தமிழ்)  

43. செங்கிஸ்கான் (சிக்ஸ்த் சென்ஸ்)

44. ஆன்லைன் ராஜா (தி இந்து தமிழ்)     

45. விழுவது எழுவதற்கே! (தி இந்து தமிழ்)  

46. கிளியோபாட்ரா (சிக்ஸ்த் சென்ஸ்)

47. உலகக் குழந்தைக் கதைகள் (அமேசான் கிண்டில்)  

48. அசோகர் (சிக்ஸ்த் சென்ஸ்)

49. மேனேஜ்மெண்ட் உங்கள் கையில் (சிக்ஸ்த் சென்ஸ்)

50. தாமஸ் ஆல்வா எடிசன் (சுவாசம் பதிப்பகம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.