யாழ் பறவை

“நாளைக்குக் காலமை சவரின் ஹில் பாக்கப் போகிறோம். நீங்களும் வெளிக்கிட்டு நில்லுங்கோ. போற வழியிலை உங்களையும் கூட்டிக்கொண்டு போறோம்,” மகள் தன் பெற்றோருக்கு, முதல்நாள் இரவு தொலைபேசியில் அழைப்பு விட்டிருந்தாள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திரமோகனும் பராசக்தியும் தாமதித்தே உறக்கம் கலைவார்கள். அன்று நேரத்திற்கு எழுந்து தயாராகிவிட்டார்கள். மெல்பேர்ணில், பலரட் என்ற இடத்தில் உள்ள சவரின் ஹில்லை—தங்கச்சுரங்கத்தை—அவர்கள் ஏற்கனவே இரண்டு தடவைகள் பார்த்துவிட்டார்கள். இருப்பினும் மகள், மருமகன், பேர்த்தியுடன் பார்க்கப் போவது இதுதான் முதல் தடவை. ஆயிரத்து எண்ணூற்று ஐம்பதுகளில் பலரட் என்னுமிடத்தில் தங்கம் அகழ்ந்தெடுத்ததை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது இந்த `சவரிங் ஹில்’.

சந்திரமோகனும் மனைவியும் வெளிக்கிட்டு, நேரத்திற்குப் போய்விடவேண்டும் என்பதால் வீட்டிற்கு முன்னால் காத்து நின்றார்கள். எதிரே பரந்து விரிந்திருந்த, சந்திரமோகனின் விவசாய நிலப்பரப்பில் சிலர் வேலை செய்து கொண்டு நின்றார்கள். சந்திரமோகன் வீதியைக் குறுக்காகக் கடந்து – அப்பிள், பீச்சஸ், நெக்டரின் பழங்களை அறுவடை செய்து கொண்டிருந்தவர்களுடன் கதைத்துவிட்டு அங்கிருந்தபடியே மனைவியைப் பார்த்தார். இன்னமும் மகள் வரவில்லை.

 பராசக்தி தன் தோள்பட்டையில் தொங்கிக் கொண்டிருந்த பையை சரி பார்த்துக் கொண்டார். தின்பண்டங்கள் உள்ளே ஒளித்திருக்க, தண்ணீர்ப்போத்தல்கள் வெளியே நீண்டிருந்தன. மகள் குடும்பம், கரோலைன் ஸ்பிறிங்ஸ் என்ற இடத்திலிருந்து புறப்பட்டு, இவர்கள் இருக்கும் பக்குஸ்மாஸ் வந்தடைந்தார்கள். மகளின் காரைக் கண்டதும், சந்திரமோகன் நடையைத் துரிதமாக்கி விரைந்து வந்தார்.  தாமதிக்காமல் இருவரும் மகளின் காரினுள் ஏறிக்கொண்டார்கள். 

சந்திரமோகன் தம்பதியினருக்கு நடுவே பேர்த்தி நிலா இருந்தாள். பேர்த்திக்கு எட்டு வயதாகின்றது. இடுப்பிலிருந்து குடை போல விரிந்த ஆடையுடன், கையிலே ஒரு ஸ்ரைலான `ஹாண்ட் பாக்’ வைத்திருந்தாள் அவள். தலையில் குடை போல ஒரு தொப்பி `பிங்’ நிறத்தில் விரிந்திருந்தது. லிப் ஸ்ரிக் கூடப் பூசியிருந்தாள். அவளைக் கடைக்கண்ணால் பார்த்து புன்முறுவல் செய்துகொண்டார் சந்திரமோகன். பேர்த்தி நன்றாகத் தமிழ் கதைப்பாள். பக்குஸ்மாஸ் என்ற இடத்தில், தனது வாயைத் திறந்த பேர்த்தி, பலரட் வரும்வரையும் மூடவேயில்லை. அளப்பதும் அரைப்பதுமாக இருந்தாள்.

“தாத்தா… உங்களுக்கு லயர்பேர்ட் தெரியுமா?” 

“நான் கூட லயர்பேர்ட் தான்.” 

“எப்படி?”

“நாங்கள் யாழ்ப்பாணம் எண்ட இடத்திலை பிறந்து வளந்து, பறந்து பறந்து பல நாடுகளுக்கும் போய், இப்ப கடைசியா ஒஸ்ரேலியாவிலை வந்து நிக்கிறோம். யாழ்ப்பாணம் எண்ட பெயர் ஏன் வந்ததெண்டு உனக்குச் சொல்லியிருக்கிறன் தானே! யாழ் எண்ட இசைக்கருவியை லயர் எண்டு இங்கிலிசிலை  சொல்லுவினம்.”

நிலா சிரித்தாள். பின் நாடிக்குக் கை ஊன்றி யோசனை செய்தாள்.

“அப்பிடியில்லை… லயர்பேர்ட்டுக்கு ஒஸ்ரேலியா தான் சொந்த இடம். அது சறவுண்டிங்ஸிலை இருக்கிற சத்தங்களையெல்லாம் கேட்டு, அதே போல மிமிக்கிரி பண்ணும். மரம் அரியிற செயின்ஷோ சத்தம், சைரன் சத்தம், கமரா சட்டர் போடுற சத்தம், ஆக்கள் அழுகிற சிரிக்கிற சத்தம் எண்டு கனக்கச் செய்யும்.”

“நிலாவுக்கு ஸ்கூலிலை லயர்பேர்ட்டைப் பற்றிச் சொல்லிக் குடுத்திருக்கினம்.  இப்ப கொஞ்ச நாளா ஒரே லயர்பேர்ட் புராணம் தான்,” என்றார் கார் ஓடிக்கொண்டிருந்த மருமகன்.

`குழந்தைப்பிள்ளையுடன் போய் ஏன் விதண்டாவாதம் புரிவான். நாம் சீதோஷ்ண நிலை காரணமாக கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகள் அல்லவே! எமது நிலத்தில் வாழமுடியாமல் பறந்து வந்த பறவைகள் அல்லவா ’ மனதிற்குள் எண்ணிக் கொண்டார் சந்திரமோகன்.

பேர்த்திக்கு ஏதாவது இடக்குமுடக்காகச் சொன்னால் கோபம் வந்துவிடும். அவள் தாத்தாவை முழுசிப் பார்த்து வாயைச் சுழித்தாள். பராசக்திக்கு, பேர்த்தி `தாத்தா செல்லம்’ என்பதில் கொஞ்சம் பொறாமை இருந்தது. `நல்லா வாங்கிக் கட்டட்டும்’ என, பராசக்தி தன் வாயை சுப்பர் குழூவினால் மூடி இறுக வைத்திருந்தார். 

“நிப்பாட்டு… நிப்பாட்டு… உன்ரை கதை அளப்பை,” என்றார் முன்னால் இருந்தபடியே நிலாவின் அம்மா.

“அவளுக்கொரு சிப்ஸ் பக்கற்றை உடைச்சுக் குடுங்கோ… கதை நிக்கும்,” என்றார் கார் ஓடிக்கொண்டிருந்த நிலாவின் அப்பா.

நிலாவின் பேச்சு நின்றது. சந்திரமோகனின் சிந்தனை தொடர்ந்தது.

ஆதிவாசிகள்… புலம்பெயர்ந்து வந்து நாட்டை ஆக்கிரமித்த இங்கிலாந்து வெள்ளையர்கள்… அப்புறம் பல நாடுகளில் இருந்தும் வந்த குடியேறிகள்…

வெள்ளைக்காரர்கள் ஆக்கிரமித்த இடங்களில், அதற்கு முன்னர் அங்கு வாழ்ந்த ஆதிவாசிகளைக் கிஞ்சித்தும் கணக்கில் எடுக்கவில்லை. பறவைகள் போல சுதந்திரமாக வாழ்ந்தவர்களை விரட்டி விரட்டி அடித்தார்கள், கொன்று குவித்தார்கள். ஏதோ தாங்கள்தான் இந்த நாட்டைப் புதிதாகக் கண்டுபிடித்ததாகச் சொல்கின்றார்கள். அதன் பின்னர் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு வாழ்வதற்காக வந்தவர்கள் கூட, எப்பொழுதாவது இங்கு வாழ்ந்து வந்த ஆதிவாசிகளைப் பற்றிச் சிந்தித்தார்களா? புலம்பெயர்ந்து வந்தவர்களில் பலரும் தம் இருப்புக்காக எத்தனை விதமாக மிமிக்கிரி செய்கின்றார்கள். மிமிக்கிரி என்றால் சத்தம் மட்டும் தானா? பேச்சு, தோற்றம், நடை உடை பாவனைகள், செய்கைகள், தொழில் என்பவற்றிலும் தானே! 

சந்திரமோகனால் எதையுமே மாற்றிக் கொள்ள முடிந்ததில்லை. `சூழலுக்கு ஏற்ற வகையில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்’ என்று அடிக்கடி பராசக்தி சொல்லிக் கொள்வார். ஆனால் அவர் அதைக் காதில் போட்டுக் கொள்வதில்லை. அடுத்தவர் மீது எப்பொழுதும் அன்பும் ஆதரவும் காட்டிக் கொள்வார். இருபது வருடங்களாக, நிரந்தரம் என நம்பிச் செய்துவந்த தொழிலை இழந்து, மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக இயங்கிவந்த  `மிற்சுபிஷி’, `போர்ட்’, `ஹோல்டன்’, `ரொயோட்டா’ கார்த்தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டபோது, பல ஆயிரக் கணக்கானவர்கள் தமது தொழில்களை இழக்க வேண்டி வந்தது. நிரந்தரம் என்று எதுவும் இல்லை என்பதை உணர்ந்தார் சந்திரமோகன். கடந்த மூன்று வருடங்களில் சந்திரமோகன் பலதொழில்கள் பார்த்துவிட்டார். எதிலுமே ஒரு பிடிப்பில்லை. ஒருவர் தன் இளம் வயதினில் தொழிலை இழந்தால், இன்னொரு வேலைக்கு இலகுவாக மாறிவிடலாம். ஆனால் சந்திரமோகன் ஐம்பத்தைந்து வயதைத் தாண்டிவிட்டார். அவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்  பலரும் தயங்கினார்கள். கடைசியாக சந்திரமோகன் தனது இருப்பிடத்தையே மாற்றிக்கொண்டு விளைநிலம் நோக்கிச் சென்றுவிட்டார்.

வீட்டுக்கான கடனைச் செலுத்தமுடியாமல், மகளுக்கு அண்மையாகவிருந்த தனது வீட்டை விற்றுவிட்டு, நகரத்திற்கு எதிர்த்திசையில் சென்று பக்குஸ்மாஸ் என்னுமிடத்தில் ஒரு சிறியவீட்டை வாங்கிக் கொண்டார் சந்திரமோகன். நகரத்தை நோக்கிச் செல்ல வீடுகளின் விலைகள் அதிகரித்திருப்பதும், நகரத்தை விட்டு விலகிச் செல்ல மலிவாக இருப்பதும் உலக வழமை. சிறிய வீட்டிற்கான முழுப்பணத்தையும் செலுத்திவிட்டதால் `மோற்கேஜ்’ என்ற பூதம் சந்திரமோகனைப் பயமுறுத்தவில்லை. வேலையை இழந்தபோது நிர்வாகம் குடுத்த சிறுதொகைப் பணத்தையும், வீட்டை விற்றதனால் கிடைத்த லாபத்தையும் கொண்டு, அங்கே விளைநிலம் ஒன்றை வாங்கிக் கொண்டார். `நம்மால் மட்டும் ஏன் ஒரு தொழிலையே கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும்? ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்று… அதிலிருந்துகொண்டு ஏன் முன்னேற முடியாது?’ சந்திரமோகனின் சிந்தனைகள் பலவாறு விரிகின்றன.

ஆரம்பத்தில் பக்குஸ்மாஸ் வருவதற்கு சந்திரமோகனுக்கும் பராசக்திக்கும் தயக்கமாக இருந்தது. அங்கே இங்கிலாந்திலிருந்து ஆரம்பத்தில் வந்த வெள்ளையர்களின் பரம்பரையினரைத் தவிர வேறொருவரையும் காண முடியவில்லை.  அவர்கள் சற்றே முரடானவர்கள் என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருந்ததே அவர்களின் தயக்கத்திற்கான காரணமாக இருந்தது. தமக்கு வரவேற்பு இருக்குமா என்ற சங்கடத்தில் அவர்கள் இருந்தார்கள். ஆனால் மாறாக அப்படியொன்றும் நிகழவில்லை. அங்கிருந்த வெள்ளையர்கள் இவர்களை வரவேற்று உபசரித்தார்கள். 

பலரட் வீதியின் இருபுறங்களிலும் வெளிகளும் மலைகளும் மரங்களும் தோட்டங்களும் தோன்றி மறைகின்றன. மாடுகளும் செம்மறியாடுகளும் கூட்டம் கூட்டமாக நின்று பனிப்புகாரினுள் புல் மேய்கின்றன. 

வரண்ட மண்ணின் மணமும், இயூகலிப்டஸ்  இலைகளின் வாசனையும் மூக்கை நிறைத்தபோது பலரட் வந்துவிட்டதை உணர்ந்தார்கள். புறப்படும்போது இருந்த மூடுபனி, அங்கே போய்ச் சேர்ந்தபோது சுத்தமாக அகன்றிருந்தது.

காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு, தங்கச்சுரங்கத்தை அடைந்தபோது மேளச்சத்தங்களும் கிண்கிணி வாத்தியங்களும் கேட்டன. நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்றார்கள்.

“ஐய்… சைனீஸ் ட்றஹன்,” கத்தினாள் நிலா.

விசாரித்தபோது, மாசி மாதத்தின் முதல் இரு வாரங்களும் சீனர்களின் புதுவருடத்தை முன்னிட்டு இப்படியான களியாட்டங்கள் நடைபெறும் என்று சொன்னார்கள். தங்கவேட்டைக் காலத்தில் சீனர்களும் இடம்பெற்றிருந்தார்கள் என்பதை நினைவுகொள்ளத் தகுந்த வகையில், அவர்களுக்கெனவும் சில பாசறைகள், கோவில் என்பன அங்கே இருக்கின்றன. 

காரை விட்டுக் குதித்து ஓடிய நிலா, அந்தக் கூட்டத்தினுள் இரண்டறக் கலந்தாள். தாழி போன்ற தோற்றத்தில் முரசு ஒன்றை இருவர் தூக்கிச் செல்ல நடுவே நின்றிருந்த ஒருவன் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். தீயை உமிழ்ந்த வண்ணம் ட்றஹன் ஒன்று, கம்பங்களில் படர்ந்து, சீறி எழுந்து பறந்து கொண்டிருந்தது. அதன் தலையை ஒருவன் தாங்கியிருக்க, பத்துப்பேர்கள் மட்டில் வாலைப் பிடித்திருந்தார்கள். அலை அலையென அதன் வால் நீண்டு பரந்து, உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. பந்து போன்ற கண்கள், நீண்ட காதுகள், மானின் கொம்புகள், நீண்ட கோரப்பற்கள் எனப் பார்ப்பதற்குப் படு பயங்கரமாக இருந்தது அது.

“நிலா ஓடிப்போறாள்… எட்டிப் பிடி,” பராசக்தி மகளிடம் சத்தமிட்டார். மகளும் மருமகனுமாக கூட்டத்தினை விலத்தியபடி உள்ளே சென்றார்கள். முரசு அறைபவனிற்கு இரண்டு பக்கங்களிலும் இரண்டு சிங்கங்கள் ஆடிக்கொண்டு நிற்க, பின்னாலே ட்றஹன் வந்து கொண்டிருந்தது. நிலா சிங்கமொன்றின் அருகில் போய் நின்று, தயங்கியபடியே அதனை உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றாள். சிங்கத்தின் தலைப்பகுதிக்கு ஒருவனும், பின்பகுதிக்கு ஒருவனும் என உடல் முழுவதும் ஆடைகளை அணிந்துகொண்டு ஆடிக்கொண்டிருந்தனர். முன்புறம் ஆடியவனின் ஆட்டம், தள்ளாத வயதினில் பொதி சுமக்கும் முதியவன் ஒருவனின் ஆட்டத்திற்கு ஒப்பாக இருந்தது.

“அப்பா… இந்தச் சிங்கத்தைப் பாக்க எனக்குக் கவலையாக் கிடக்கு. தலை ஆடுதில்லை… வால் மட்டும் வேகமா ஆடுது,” என்றாள் நிலா.

“அது நிலா… முன்னுக்கு நிற்கிறவர் ஒரு முதியவர். முதியவரால் துள்ளிக் குதித்து ஆட முடியாதுதானே! பின்னுக்கு நிற்கிறவன் ஒரு சிறு பையன். அவனால் நன்றாக ஆட முடியும். அதுதான் வால் வேகமாக ஆடுது,” விளக்கம் தந்தார் நிலாவின் அப்பா.

சந்திரமோகனும் பராசக்தியும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். அவர்களைக் கண்டதும், நிலாவிற்கு அருகே நின்ற சிங்கத்தின் தலை உஷாராகிவிட்டது. தலையைக் கூர்ந்து கூர்ந்து இரண்டு பக்கங்களும் ஆட்டியபடியே சந்திரமோகனை நோக்கி வேகமாக வந்தது. பின் சந்திரமோகனைச்  சுற்றி ஆடத் தொடங்கியது. நிலா நிலத்தை விட்டுத் துள்ளி எழுந்து சிரித்தாள். நிலாவை மேலும் மகிழ்விப்பதற்காக, அது தரையிலே விழுந்து புரண்டு, உடலைப் பரப்பி கைகளை உதைத்து அங்குமிங்கும் ஆட்டியது. பின்புறம் ஆடிய சிறுவன் திகைத்துப் போனான். `பாரடா கிழவனுக்கு வந்த வேகத்தை’ என நினைத்துக் கொண்டான். பின்னர் சுதாரித்து முதியவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாய்ந்து பாய்ந்து ஆடினான். சுற்றி இருந்தவர்களின் கரகோசம் வானைப் பிளந்தது. 

அவர்களின் ஆட்டம் நிறைவுக்கு வந்த பின்னர், நிலாவிற்கு எதை முதலில் பார்ப்பதென்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடினாள். சலசலத்தோடும் நீரோடை ஒன்றில் பலரும் அரிக்கன்சட்டி போன்ற ஒன்றை ஏந்திய வண்ணம், மண்ணை அரித்து தங்கம் கிடைக்கின்றதா எனப் பார்த்துக் கொண்டிருந்தது நிலாவின் கண்களைக் கவர்ந்தது. தானும் மண்ணை அரித்துப் பார்க்கவெனப் புறப்பட்டு நீரிற்குள் குதித்தாள். அங்கே நின்று கொண்டிருந்த ஒருவன் `ஷவல்’ போன்ற ஒன்றினால் மணலும் நீரும் கலந்த கலவையை அள்ளி நிலா வைத்திருந்த சட்டியினுள் போட்டான். அரித்துப் பார்த்து ஒன்றும் கிடைக்காது, ஏமாற்றம் தாளாமல் தொப்பென்று அரிக்கன் சட்டியை நீரினுள் எறிந்தாள் நிலா. தண்ணீர் தெறித்து அவளது ஆடை நனைந்தது.

“நிலா… குழப்படி செய்யக் கூடாது,” என்றார் அம்மா.

நான்கு குதிரைகள் சேர்ந்து ஒரு வண்டிலை கரடு முரடான பாதைகளின் மேல் இழுத்துச் சென்றன. உள்ளே இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தினர் வீற்றிருந்ததை நிலா கண்டுவிட்டாள். பிறகென்ன அவர்களும் அதில் ஏறி ஒரு சுற்றுச் சுற்றினார்கள். ஏராளமான மரத்தாலான குடில்கள் அங்கும் இங்குமாகப் பரவிக் கிடந்தன. சில குடில்களுக்குள் படுக்கை, மெத்தைகளும் இருந்தன. விதம் விதமான கடைகள்… அந்தக் கடைகளுக்குள் அந்தக் காலத்து நாணயங்கள், கேத்தில்கள், மணிகள், அரிக்கன் விளக்குகள், தொப்பிகள், கூடைகள் என விரவிக் கிடந்தன. பேக்கரி, மது வகைகள் விற்குமிடம், ஹோட்டல் என்பவை கூட அங்கே இருந்ததைக் கண்டார்கள். பொன்னிறம் போன்ற வெய்யில் எங்குமே தழுவிக் கிடக்க பார்ப்பதற்கு எல்லாமே அழகாக இருந்தன. “தங்கச்சுரங்கத்தை முழுமையாகப் பார்த்து ரசிப்பதற்கு ஒருநாள் போதாது,” என்றான் குதிரையோட்டி. 

ஒரு இடத்தில் தங்கத்தை எப்படி உருக்கி வார்ப்பதென செய்முறை செய்து காட்டிக் கொண்டிருந்தார்கள். 

அந்தக் காலத்தில் பாவித்த நிலக்கீழ் சுரங்கமொன்றை நிலத்தின் கீழ் அழைத்துச் சென்று, அரைமணி நேரம் அதைப்பற்றி விளக்கம் குடுத்தார்கள். நிலக்கீழ் சுரங்கம் இருட்டானது, பிராணவாயு சற்றுக் குறைவானது. முன்பே அதைப் பார்த்திருந்ததால் சந்திரமோகனும் பராசக்தியும் அதைத் தவிர்த்துக் கொண்டார்கள். அதற்கு முன்னால் இருந்த குடிலில், ஒரு வாங்கினில் குந்தி இருந்தார்கள். சிறிது நேரத்தில் சந்திரமோகனின் மொபைல்போனிற்கு ஒரு குறும் செய்தி வந்தது. எடுத்துப் பார்த்தார். `ஹாய் ஃபிரண்ட்… ஹவ் ஆர் யு?’ என ருவான் போட்டிருந்தான். 

“இவனென்ன மூண்டு வருஷத்துக்குப் பிறகு ஹவ் ஆர் யு எண்டு போட்டிருக்கிறான்?” சந்திரமோகன் வியப்பில் ஆழ்ந்தார்.

சந்திரமோகனின் மொபைல்போனை எட்டிப் பார்த்தார் பராசக்தி. அதற்கிடையில், `நண்பனே! எனக்குத் தோதான வேலை எங்காவது சந்தித்தால் சொல்லு’ என அடுத்த குறும் செய்தி ருவானிடமிருந்து வந்திருந்தது.

“நீங்கள் நேற்று ஷொப்பிங் சென்ரரிலை ஜோர்ஜ்சை சந்திச்சது எண்டு சொன்னனியள் தானே! அவன் தான் நீங்கள் பக்குஸ்மாஸ் வந்தது பற்றி ருவானிட்டைச் சொல்லியிருப்பான்,” என்றார் பராசக்தி.

“ருவானும் மண்ணாங்கட்டியும்,” சந்திரமோகன் முகத்தைச் சுழித்தபடி மொபல்போனை மடக்கி பொக்கற்றுக்குள் வைத்தார்.

“எல்லாருக்கும் அன்பும் ஆதரவும் காட்டும் உங்களுக்கு அப்படி என்ன கோபம் உங்கள் நண்பருடன்? ஒரு காலத்தில் நீங்களும் ருவானும்  இரட்டையர்கள் போல இருந்தீர்கள் தானே! எப்பவோ நடந்த, ஏதோவொரு சின்ன விசயத்துக்காக இவ்வளவு நாட்கள் கதைக்காமல் இருப்பதா? ரெலிபோன எடுத்துக் கதையுங்கோ…”

சந்திரமோகன் வாயை மூடி மெளனமாக இருந்தார்.  இருவரும் நீண்ட நாட்கள் சந்திக்கவில்லை என்றாலும், ருவானைப் பற்றிய சிந்தனை சந்திரமோகனின் மனதில் இருந்துகொண்டே இருந்தது. வேலையை விட்ட சில தினங்களில் சந்திரமோகனின் மொபைல்போனிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தான் ருவான். ஆனால் சந்திரமோகன் அன்றிருந்த நிலையில் அதைக் கணக்கில் எடுக்கவில்லை.

“அவன் அப்ப இருந்த மனநிலையிலை, அந்தரிச்சுப்போய் அப்படி நடந்திருக்கலாம். உங்களைத் தேவையில்லையெண்டா, பேந்தும் பேந்தும் ஏன் அவன் உங்களைத் தொடர்பு கொள்ளவேண்டும்? பாவம் அவன்ரை மனிசி… அவள் ஒரு அப்பிராணி,” பராசக்தி மீண்டும் உபதேசம் செய்துவிட்டு, தனது மொபல்போனைத் திறந்து தங்கச்சுரங்கத்தில் எடுத்த படங்களைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினார். 

சந்திரமோகன் கார் தொழிற்சாலையில் முன்னர் நடந்த நிகழ்வுகளை அசை போடத் தொடங்கினார். ருவான்… அவன் ஒரு வியட்நாமியன். புடைத்த மூக்கு, தட்டையான உதடு, மெல்லிய தேகம், குட்டையான உருவம் என அவனின் தோற்றம் வியப்பானது. காலைச் சற்று இழுத்து நடப்பான். அவனும் சந்திரமோகனைப் போலவே, தன்னுடைய நாட்டில் வாழமுடியாமல் புலம்பெயர்ந்து வந்தவன் தான். சந்திரமோகன் வேலைக்குச் சேர்ந்து, ஐந்து வருடங்களின் பின்னர் தான் ருவானுடன் சேர்ந்து வேலை செய்யும் சந்தர்ப்பம் வந்தது. இருவருக்கும் மாலை வேலை. மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து இரவு இரண்டு மணி வரை நீளும். ஒன்றாக வேலை செய்யத் தொடங்கி, சில வாரங்களாக, “நண்பரே! என்னை மன்னித்துக் கொள்ளும். உங்கள் பெயரை மறந்துவிட்டேன்,” என்றபடி சந்திரமோகனுடன் உரையாட வருவான். ருவானின் இந்தத் தொல்லை தாங்காமல், அவனைக் கண்டவுடன் “நண்பரே!” என சந்திரமோகனே ஆரம்பித்து விடுவார். அப்புறம் சந்திரமோகனின் பெயர் அவன் மூளையின் அடுக்குகளில் பதிந்துவிட்டது. ருவான் எப்போதும் தான் உண்டு, தன் வேலை உண்டு என ஒருவரின் பிரச்சினைகளுக்குள்ளும் தலையிட மாட்டான். அவனை அங்கு வேலை செய்பவர்கள் அனைவருக்கும் நன்கு பிடிக்கும். என்ன ஒரு கெட்ட பழக்கம், தன் சம்பளப்பணத்தின் பெரும் பகுதியை குதிரைக்குக் கட்டிவிடுவான். நகைச்சுவையாகக் கதைக்கும் அவன், சிகரெட் புகைப்பதற்காக அடிக்கடி ஏதாவது சாட்டுச் சொல்லிப் போய்விடுவான். அந்த நேரத்தில் அவனது வேலையையும் சந்திரமோகனே பார்த்துக் கொள்வார்.

ஒரு நாள் மிகவும் தயங்கியபடி சந்திரமோகனிடம் வந்தான்.

“நீ என்னுடைய நல்ல நண்பன். எனக்கு ஒரு உதவி உம்மால் ஆக வேண்டும். என்னுடைய மனைவியின் கார் விபத்தில் நொருங்கி ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டது. சில நாட்கள் வேலை முடிந்த பின்னர் என்னை வீட்டில் இறக்கி விடவேண்டும்.” 

“நான் வீட்டுக்குப் போகும் பாதையில் இருந்து விலகி, உம்மை இறக்கிவிட்டுப் போவதென்றால் எனக்குப் பதினைந்து நிமிடங்கள் தாமதமாகும். பரவாயில்லை. செய்கின்றேன்.”

“எனது பிள்ளைகளுக்கு மூன்று நாட்கள் மாலை ரியூசன் வகுப்புகள் இருப்பதால், மனைவிக்கு என்னுடைய கார் தேவைப்படுகின்றது. அவள் என்னை அந்த மூன்று நாட்களும் வேலை செய்யுமிடத்தில் கொண்டுவந்து இறக்கிவிடுவாள். நீ வேலை முடிந்து போகும்போது என்னை வீட்டில் இறக்கிவிட்டால் போதும். மனைவியை நள்ளிரவில் வரச்சொல்லத் தயக்கமாக இருக்கின்றது.”

“ஒன்றுக்கும் கவலைப்படாதே ருவான். நான் உதவி செய்கின்றேன்.”

முதன் முதலாக ருவானை அழைத்துச் சென்றபோது, பாதை புதிது என்பதால் சந்திரமோகன் காரைக் கவனமாகச் செலுத்துவதில் இருந்தார். இருளிற்குள் எல்லாம் புதிதாக இருந்தன. ருவானோ சந்திரமோகனை “நீ என்னுடைய நல்ல நண்பன்,” எனப் பலவாறு புகழ்ந்து கொண்டே வந்தான். ருவானின் வீட்டிற்குச் செல்வதென்றால், பிரதான வீதியில் இருந்து உள்ளே பல குறுக்குப் பாதைகள் போகவேண்டும். முதல் நாள் சந்திரமோகன் மிகவும் கஸ்டப்பட்டுப் போனார் என்பதால், பின்பு ருவான் பிரதான வீதியில் இறங்கிக் கொள்வான். “அதொன்றும் எனக்குப் பிரச்சினை இல்லை. நான் வீடு வரை வருகின்றேன்,” என்று சந்திரமோகன் சொன்னாலும் ருவான் மறுத்து விடுவான். நள்ளிரவில் இறங்கி, பனி சொட்டும் நேரத்தில் உடலை ஒடுக்கியபடி இறங்கிப் போய்விடுவான். காரை விட்டு இறங்கியபின் சந்திரமோகனை நோக்கி  `ஃபிளையிங் கிஸ்’ கூட அடிப்பான்.

இப்படியாக  `சில நாட்கள்’ என்று தொடங்கியது, பின்னர் சில வருடங்களாகிப் போனது. 

ஒருநாள் காரை விட்டு இறங்கியதும், பின்புறமாக ஓடிவந்து, சந்திரமோகனின் கார்க்கண்ணாடியைக் கீழே இறக்குமாறு தட்டினான் ருவான். சந்திரமோகன் கார்க் கண்ணாடியைப் பதித்ததும், “எனக்கொரு குழந்தை பிறக்கப் போகின்றது,” என்றான் வெட்கத்துடன். சந்திரமோகனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சிக்குக் காரணம் ருவானுக்கு அப்போது வயது ஐம்பத்து ஐந்தைத் தாண்டியிருந்தது. சந்திரமோகன் உதட்டுக்குள் சிரித்தபடியே “வாழ்த்துக்கள்,” சொல்லிவிட்டுப் புறப்பட்டார். 

சந்திரமோகனின் மகள் அப்பொழுது திருமணம் முடித்திருந்த காலம். ருவான் சந்திரமோகனைவிட வயதில் மூத்தவனாயினும் தாமதித்தே திருமணம் செய்திருக்க வேண்டும். என்றாலும் ஐம்பத்தைந்து வயதில் ருவானுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகின்றது என்ற செய்தி எல்லோருக்கும் புதினமாக இருந்தது.

பின்னர் ருவானுக்கு பெண்குழந்தை பிறந்தபோது, சந்திரமோகனும் பராசக்தியும் அவர்களது வீட்டுக்குச் சென்று பரிசுப் பொருட்கள் குடுத்து மகிழ்ந்தார்கள். `வெயர் இஸ் யுவர் சண்’ என்று ருவானின் மனைவியிடம் பராசக்தி கேட்டதற்கு, அவள் வெளியே வானத்தை எட்டிப் பார்த்து `ரூ கொற் ருடே’ என்றாள். அவளின் இந்த வெள்ளேந்தியான பேச்சினால், பராசக்திக்கு ருவானின் மனைவியை முதற்சந்திப்பிலேயே பிடித்துப் போனது. 

மகிழ்ச்சியாக வேலை செய்துவந்த எல்லோரது வாழ்விலும், `தொழிற்சாலை இன்னும் மூன்று வருடங்களில் மூடப்பட இருக்கின்றது’ என்ற செய்தி பேரிடியாக வந்து இறங்கியது. காலம் உருட்டிப் போடும் காய்களில், அங்கு வேலை செய்யும் அத்தனைபேருக்கும் `ஏழரைச்சனி’ என்று எழுதிக் கிடந்தது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக, வாழ்க்கையில் கஸ்டம் என்பதை என்னவென்று அறியாத ருவானின் மனதை அந்தச் செய்தி புரட்டிப் போட்டது. தனது பிறந்த குழந்தையை எண்ணி, குடும்பத்தை நினைத்துக் கவலை கொண்டான்.

“என் மகள் படித்துக் கொண்டிருக்கின்றாள். மனைவி சுகமில்லாமல் இருக்கின்றாள். மூத்தவன் விட்டேந்தியாக நண்பர்களுடன் சுற்றிக்கொண்டு திரிகின்றான். புதிதாக ஒரு குழந்தையும் வந்துவிட்டது. நானோ முதியவன் ஆகிவிட்டேன். என்ன செய்வேன்,” சந்திரமோகனைக் காணும் நேரம் எல்லாம் மனநிலை பிறழ்ந்தவன் போல் பிதற்றினான் ருவான். 

“எங்கள் நாட்டில் என்றால் ஐம்பத்தைந்து வயதில் ஓய்வு பெற்றுவிடலாம். இங்கே வயதைக் கூட்டிக் கூட்டி அறுபத்தேழு வரை கொண்டுவந்து விட்டிருக்கின்றார்கள். எங்கள் நாட்டிலேயே பிறந்து, அந்தச் சுவாத்தியத்திலேயே வளர்ந்து வந்த நாங்கள் எப்படி அறுபத்தேழு வயது வரையும் வேலை செய்யலாம்?” அழுது புலம்பினான் ருவான்.

“பயப்படாதே ருவான். இங்கே நல்ல மருத்துவ வசதிகள் உண்டு. அதுவும் இலவசமாக. ஒருத்தராலை வேலை செய்ய முடியவில்லை என்றால், அதுக்கான காரணத்தைக் காட்டி முன்கூட்டியே ஓய்வும் பெறலாம். அதுக்கான வசதிகள் எல்லாம் இங்கே இருக்கிறது,” ருவானுக்கு ஆறுதல் சொல்லுவார் சந்திரமோகன்.

எதுவும் ருவான் விடயத்தில் எடுபடவில்லை. எல்லாவற்றையும் அவன் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கத் தொடங்கினான்.அவனது செய்கைகள் முன்பு இருந்ததற்கு எதிர்த்திசையில் பயணித்தன. உடல் வலிமையை இழந்து போய்விட்டதாகவும், கண் பார்வை மங்கிப் போவதாகவும் புலம்பினான். சிலவேளைகளில் தனக்குள்ளே கதைத்துக் கொண்டான். சிரித்தான், அழுதான். லயர்பேர்ட் போல மிமிக்கிரியும் செய்து கொள்வான். சிலவேளைகளில் அவனது மிமிக்கிரி எல்லை மீறியும் போய்விடுவதுண்டு.  சிலருடன் தேவையில்லாமல் சண்டைகளையும் வரவழைத்துக் கொண்டான். 

“ருவானுக்கு என்னவாயிற்று? ஏன் இப்படி மாறிப் போனான்?” நிர்வாகத்தினரே ஆச்சரியப்படும் விதத்தில் அவன் நிலை நாளுக்கு நாள் மோசமாயிற்று. தொழிற்சாலை மூடப்படப் போகின்றது, மூப்பு காரணமாக தன்னால் புதியதொரு வேலையை எடுக்கமுடியாது என்ற பயம் அவனைச் சூழ்ந்துகொண்டது. அவனை `ஷோம்பி’ (zombie) என்று எல்லாரும் கூப்பிடத் தொடங்கினார்கள். 

“தொழிற்சாலை மூடுவதென்பது தனி ஒருவருக்கான பிரச்சினை அல்ல. எல்லோருக்குமானது,” என்று சந்திரமோகன் ருவானுக்குப் புத்திமதி சொல்லப்போக, அவன் சந்திரமோகன் மீது சீறிப் பாய்ந்தான்.

ஒருநாள் ருவானை தொழிற்சாலை மேலதிகாரி அழைத்து, “ருவான்… அவுஸ்திரேலியா இங்கு வாழும் மனிதர்களை ஒருபோதும் கை விட்டுவிடாது. எல்லோருக்குமான அடிப்படை வசதிகளை, வாழ்வாதாரங்களைத் தந்து கொண்டே இருக்கும். நீ ஒன்றுக்கும் பயப்பிடத் தேவை இல்லை,” என்று சொன்னார். அவரின் பேச்சை நம்பிவிடத் தயாரில்லாமல் இருந்தான் ருவான்.

ஒருநாள் சந்திரமோகனின் வீட்டிற்கு, சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்தான் ருவான். 

“நான் உன்னுடைய வீட்டை ஒருக்கா சுற்றிப் பாக்க விரும்புகின்றேன்” என்றான்.

அவனது மனைவியின் இடுப்பில் கடைசிக்குழந்தை தொங்கிக் கொண்டிருந்தது. அவள் பராசக்தியுடன் கதைத்துக் கொண்டு நிற்க, அவன் சந்திரமோகனின் வீட்டைச் சுற்றிப் பார்வையிட்டான். கேள்வி மேல் கேள்வி கேட்டான்.  மனம் புழுங்கினான். 

“இந்த வீட்டை நீ கட்டினாயா? அல்லது யாரிடமாவது வாங்கினாயா?” 

“இதில் ஏற்கனவே ஒருவர் ஐந்து வருடங்கள் குடியிருந்தார். அவரிடம் வாங்கினேன்.” 

“யாராவது புதிய வீட்டை ஆசை ஆசையாகக் கட்டிவிட்டு விற்பார்களா? இந்த வீட்டில் ஏதோ ஒண்டு இருக்கு.  யாரோ ஒருவர் தற்கொலை செய்திருக்க வேண்டும்!” 

ருவானின் அந்தப் பதிலினால் சந்திரமோகன் மனமுடைந்து போனார்.

அதன் பின்னர் தொழிற்சாலையில் பலவித மாற்றங்கள் நிகழ்ந்தன. சிலர் வேலையை முன்கூட்டியே விட்டுவிட்டு, புதிய வேலை தேடிப் போனார்கள். அவர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டன. சந்திரமோகன் பதவி உயர்வு பெற்றார். அது ருவானுக்குப் பிடிக்கவில்லை. 

“என்னுடன் வேலை செய்துவிட்டு, எனக்கே `பொஸ்’ ஆகிவிட்டாய்,” நேரிடையாகவே சந்திரமோகனிடம் பொறாமை கொண்டான். அன்று வேலை முடிவடைந்து வீட்டுக்குப் புறப்படுவதற்காக சந்திரமோகன் தனது `பாக்’கைத் தூக்கியபோது, அதன் கீழ் கறுப்பு மை ஊற்றப்பட்டிருந்தது கண்டு திகைத்தான்.  சொட்டுச் சொட்டாக மைத்துளிகள் கசிந்தவண்ணம் இருந்தன. உள்ளேயிருந்த அவனது உடைமைகள் கறுப்பு நிறத்தில் ஊறியிருந்தன. சந்திரமோகனுக்கு ருவான் மேல் சந்தேகம் வந்தது. `எத்தனை வருடங்கள் அவனைக் காரில் ஏற்றி இறக்கியிருப்பேன். பிரச்சினைகள் தனக்குத்தான் வந்திருக்கின்றன என நினைத்துக் கொண்டு முகத்தை மாற்றிவிட்டானே!’ கவலை கொண்டார் சந்திரமோகன். நீறு பூத்த நெருப்பாக சில மனிதர்கள் இருக்கின்றார்கள். அந்தக்  கண்ணுக்குத் தெரியாத நெருப்பு மீது கவனம் கொள்ளல் வேண்டும், ருவானை நம்பக்கூடாது என முடிவெடுத்தார். அவர்களுக்கிடையேயான நட்பில் மெல்ல விரிசல் விழுந்தது.

தனது மொபைல்போனில் அன்று எடுத்த படங்களைப் பார்த்து ரசித்துவிட்டு, கூகிளில் ஏதோ தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் பராசக்தி. சந்திரமோகன் நீண்ட நேரமாக மெளனமாக, எதையோ யோசித்தபடி இருப்பதை அவதானித்தார். தான் கூகிளில் பார்த்த ஒன்றை அவருடன் பகிர வேண்டும் போல் இருந்தது பராசக்திக்கு.

“உங்களுக்குத் தெரியுமா? லயர்பேர்ட் நிலத்துக்கு அடியிலைதான் கூடு கட்டி வாழ்க்கை நடத்துமாம்… அதின்ரை வால் பகுதி யாழ் போல இருப்பதால்தான் லயர்பேர்ட் எண்ட பெயர் வந்ததாம்.”

சந்திரமோகன் சிரித்துவிட்டு, “பராசக்தி இப்போது நிலா ஆகிவிட்டார்,” என்று ஜோக்கடித்தார்.

“அது மாத்திரமில்லை… ஒரு வருசத்துக்கு, ஏக்கருக்கு எண்பது தொன் சருகுகளையும் மண்ணையும் புரட்டிப்போட்டு சூழலுக்கும் உதவி செய்யுமாம்,” அப்பாவித்தனமாய் சொன்னார் பராசக்தி.

“தாத்தா,” என்றபடியே சந்திரமோகனின் பின்னால் வந்த நிலா, அவரின் கழுத்தைக் கட்டிப்பிடித்தாள். அவளின் பிஞ்சுக் கரங்களின் ஸ்பரிசம், அவர்களின் உரையாடலை நிறுத்தியது. நிலத்தின் கீழ் சென்று பார்த்ததை, வியப்புடன் மூச்சு விடாமல் சொன்னாள் நிலா. அவளது மழலை மொழியின் விபரிப்பில் தங்கச்சுரங்கம் நிறைவுக்கு வந்தது. மன நிறைவுடன் அவர்கள் வீட்டிற்குப் புறப்படத் தயாரானார்கள்.

கார்த் தரிப்பிடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். இடையில் ஒரு பெண் காரின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு நின்றாள். நாரியைப் பிடித்துக்கொண்டு நொண்டியபடியே கதவடியில் நின்று தள்ளாடும் அவளை எங்கேயோ பார்த்ததாக நினைவு தட்டியது பராசக்திக்கு. அவள் இவர்களைப்  பார்த்ததும் சிரிக்கவும் செய்தாள். அவளை நோக்கி அண்மித்துச் சென்றதும், “ருவானின் மனைவி,” என்றார் பராசக்தி.

“நீங்கள் போய் காரில் இருங்கோ… நாங்கள்  கதைத்துவிட்டு சீக்கிரம் வருகின்றோம்,” மகளையும் மருமகனையும் நிலாவையும் அனுப்பிவிட்டு, ருவானின் மனைவியுடன் கதைப்பதற்காக இவர்கள் இருவரும்  சென்றார்கள். 

ருவானின் மனைவி முன்பு கண்டபோது இருந்ததைவிட இன்னமும் முதுமை அடைந்திருந்தாள்.  வெண்பஞ்சு போர்த்திருந்த தலையின் கீழ், முந்திரிகை வற்றல் போல முகம் சுருங்கிக் கிடந்தது.   அவள், றைவிங் சீற்றில் இருந்த மூத்த மகளையும், அவளின் அருகே மொபைல்போனில் விளையாடிக் கொண்டிருந்த கடைசி மகளையும் இறங்கி வரும்படி சொன்னாள் .

“என்ன வயசாகின்றது?” ருவானின் கடைசிப் பெண்ணைப் பார்த்துக் கேட்டார் பராசக்தி. 

“ஏழு வயது. பள்ளிக்குப் போகின்றாள்,” ஆங்கிலம் சரளமாக வராது தடுமாறினாள் ருவானின் மனைவி.

“ருவான் எங்கே? உங்களுடன் வரவில்லையா?” அவனைப் பார்க்கும் ஆவலில் சந்திரமோகன் அவசரப்பட்டார்.

“வேலைக்குப் போய்விட்டார்.”

“இண்டைக்குமா?”

பதில்சொல்லத் தயங்கினாள் அவள். 

“என்ன வேலை?”

அதற்கும் பதில் இல்லை. 

மகளை சுட்டிக்காட்டி, “மகள் இப்ப யூனிக்குப் போகின்றாள். கொமேர்ஸ் படிக்கின்றாள். இதுதான் கடைசி வருடம்,” என்றாள். 

“மூத்த மகன்?”

“அண்ணா இப்போது எங்களுடன் இல்லை. தன் வழியே போய்விட்டான்,” இந்தத் தடவை மூத்தவள் பதில் சொன்னாள். அதன் பிறகு அவள் கதைக்கத் தொடங்கினாள்.

“அப்பா உங்களோடை கார்க் கொம்பனியிலை வேலை செய்ததுக்குப் பிறகு பல இடங்களிலை வேலை பாத்திட்டார். ஒண்டும் சரிவரேல்லை. கடைசியா `பிக்கிங் – பக்கிங்’ கூடச் செய்தார். கொரோனா வந்ததாலை கன பேரை வேலையாலை நிப்பாட்டிப் போட்டினம். அந்த வேலையையும் இழந்திட்டார்.”

“நீங்கள் இப்ப என்ன செய்யிறியள்?” அவர்களின் உரையாடலைக் குழப்பிக் கொண்டே, ருவானின் மனைவி சந்திரமோகனிடம் கேட்டாள்.

“நான் வீட்டை வித்துப் போட்டு, பக்குஸ்மாஸ் எண்ட இடத்துப் போயிட்டன். அங்கை சின்னதாக ஒரு நிலம் வாங்கி ஆக்களை வைச்சு பழத்தோட்டம் செய்யிறன். இருண்டு கிடக்கின்ற காடுகளை வெட்டி, வெளிச்சமாக்கி விவசாய இடங்களாக மாற்றும் வேலை. மனதுக்கு நிறைவாக இருக்கு. ருவானுக்கு என்னோடை வேலை செய்ய விருப்பம் இருந்தா, மகிழ்ச்சியோடு சேர்த்துக் கொள்வேன். சுப்பர்வைசராக வேலை செய்யலாம்…”

ருவானின் மனைவியின் முகம் மலர்ந்தது. உதட்டுக்குள் பாதியளவு பற்கள் எட்டிப் பார்த்துச் சிரித்தன.

“கட்டாயம் அவர் வருவார். அடிக்கடி உங்களைப்பத்தியே கதைச்சுக் கொண்டிருப்பார். அவராலும் இப்ப கடுமையா வேலை செய்ய முடிவதில்லை.”

“பரவாயில்லை. சுப்பர்வைசர் வேலை தானே!”

ருவானின் மகள், தாயை நிமிர்ந்து பார்த்தாள். அவள் வியட்நாம் பாஷையில் மகளுக்கு ஏதோ சொன்னாள்.

“இப்ப எங்கட வருசப்பிறப்புக் கொண்டாட்டங்கள் நடக்குதுதானே! அப்பாவினுடைய நண்பர் ஒருவர் கேட்டதாலை, அவையோடை சேர்ந்து வேலைக்கு இஞ்சை  தங்கச்சுரங்கத்திற்கு வந்திட்டார். பலரட் தூரம் எண்டபடியாலை இரண்டு கிழமையும் இங்கேயே தங்கி நிக்கின்றார். இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை எண்டபடியாலை அவருக்கு சாப்பாடுகள் செய்துகொண்டு வந்திருக்கின்றோம். அவருக்கு கடைச்சாப்பாடு பிடிப்பதில்லை. இன்னும் ஒரு  மணித்தியாலத்திலை எங்கட கார் நிக்கிற இடத்துக்கு  வந்திடுவார்,” என்றாள் அவள்.

“ஒருமணி நேரம் ஆகுமா? எங்களால் தாமதிக்க முடியாது. நான் பிறகு ருவானுடன் கதைக்கின்றேன்.”

சந்திரமோகனும் பராசக்தியும் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்கள். அதிக நேரம் கதைத்துவிட்டதில், ஓட்டமும் நடையுமாக இருவரும் கார் நிற்குமிடம் சென்றார்கள். பின் சீற்றில் மகளும், அவருக்குப் பக்கத்தில் நிலாவும் இருந்தார்கள். அன்றைய நாள் முழுவதும் நடந்து களைத்துப்போன நிலா, குறட்டையொலி எழுப்பியபடி உறக்கத்திற்குப் போயிருந்தாள். பராசக்தி பின்புறம் ஏற, சந்திரமோகன் முன்பக்கமாக ஏறி மருமகனுக்குப் பக்கத்தில் அமர்ந்தார். அங்கிருந்தபடியே நிலாவை எட்டி எட்டிப் பார்த்தார். நிலாவின் குறட்டையொலி அவருக்குச் சிரிப்பை வரவழைத்தது.

 “லயர்பேர்ட் மிமிக்கிரி செய்யுது,” என்றார் பராசக்தி.

நிலா திடுக்கிட்டு எழுந்தாள். பராசக்தியை நோக்கித் திரும்பினாள்.

“பாட்டி… லயர்பேர்ட் விதம்விதமா மிமிக்கிரி செய்தாலும், அதுக்கெண்டும் ஒரு சொந்தக் குரல் இருக்குது!” பாதி விழிகள் திறந்திருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் உறக்கத்துக்குப் போய்விட்டாள்  நிலா. சந்திரமோகனைத் தவிர எல்லாரும் ஒரு தடவை உதட்டுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

நிலாவின் குரல் சந்திரமோகனை உற்று நோக்க வைத்தது. அவர் ருவானை நினைத்துப் பார்த்தார். அவனுக்கென்றும் ஒரு சொந்தக்குரல் இருப்பதை உணர்ந்து கொண்டார்.கார் பலரட்டை விட்டுப் புறப்பட்டு, மெல்பேர்ண் நோக்கி வேகமெடுக்கத் தொடங்கியது. பலரட் தங்கச்சுரங்கத்தில் சந்தித்த அந்தக் கிழட்டுச் சிங்கம், சந்திரமோகனின் மனக்கண் முன்னே தோன்றி வட்டம் போட்டு ஆடியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.