
தமிழில் முதல் புதினம் எது?
இந்தக் கேள்விக்கு பலரும் எளிதாக பிரதாப முதலியார் சரித்திரம் என்று கூறக்கூடும்.
தமிழில் முதல் வரலாற்றுப் புதினம் எது?
இந்தக் கேள்விக்கு பெரும்பாலும் தடுமாறித்தான் போவார்கள். பாவேந்தரா? ராஜம் ஐயரா? கல்கியா? சாண்டில்யனா? வேறு யாருமா என்று மூளை குழம்பத்தான் செய்யும்.
கல்கியும் சாண்டில்யனும் பிறப்பதற்கு முன்னால், பாவேந்தருக்கு நான்கு வயது இருக்கும் போது, 1895ல் தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் சென்னையின் இந்து யூனியன் அச்சுக்கூடத்தால் வெளியிடப்பட்டது.
“மோகனாங்கி”
ஆம். அதுதான் அந்த வரலாற்றுப் புனைவுப் புதினத்தின் பெயர்.
ஈழத்தவரான திருகோணமலை த. சரவணமுத்துப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது.
திருகோணமலையில் 1864ம் ஆண்டு பிறந்த த. சரவணமுத்துப் பிள்ளையவர்கள் தமிழும் வடமொழியும் ஆங்கிலமும் நன்கு கற்றவர். 1880ல் அண்ணன் திரு. கனகசுந்தரம்பிள்ளையோடு சென்னை வந்து பச்சையப்பன் கல்லூரியிலும் துரைத்தனக் கல்லூரி என்றழைக்கப்பட்ட சென்னை பிரசிடென்சி கல்லூரியிலும் இளங்கலை ஆங்கிலம் பயின்றார். சித்தூரில் பள்ளியின் தலைமையாசிரியராகவும், சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அதோடு சென்னை மாநிலக் கல்லூரி நூலகத்தில் கீழ்த்திசை நாட்டுச் சுவடிகள் நிலையத்தின் பொறுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
காதல் தோல்வியால் துவண்டு இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். அந்தத் துயரத்தால், இளமையின் உச்சம் என்று சொல்லக் கூடிய 29 வயதிலேயே இவர் மறைந்தார் என்பதும் வருத்தத்தையே தருகிறது.
தன்னுடைய மனதிலிருந்த காதலை தத்தை விடு தூது என்ற கவிதை நூலாக எழுதியவர், மோகனாங்கி என்ற புதினமாகவும் காலத்தில் சுவர்களில் கல்வெட்டாகப் பதித்துவிட்டார்.
யார் இந்த மோகனாங்கி?
தில்லானா மோகனாம்பாளில் வரும் மோகனாங்கி அல்ல. இவள் 16ம் நூற்றாண்டு மோகனாங்கி. தஞ்சை நாயக்க மன்னரின் மகளான மோகனாங்கிக்கும் மதுரை நாயக்க மன்னனான சொக்கநாதருக்குமான காதலைச் சொல்வதுதான் கதை. சொக்கநாதர் மோகனாங்கி காதலின் வழியாக தன்னுடைய மனக்காதலை தூர்த்தெடுத்து எழுத்துகளால் வார்த்தெடுத்திருக்கிறார். பச்சையும் கனகாம்பரமும் சேர்த்துக் கட்டிய கதம்பமாய் கற்பனையையும் வரலாற்றையும் கதையில் அருமையாக ஊடாட விட்டிருக்கிறார் சரவணமுத்துப் பிள்ளையவர்கள்.
கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு, தமிழ் இலக்கியவுலகத்தால் முற்றிலும் மறக்கப்பட்ட மோகனாங்கி மீண்டும் எப்படி வந்தாள்?
இலக்கிய வரலாற்று ஆய்வாளரான திரு. சத்தியதேவனின் பேரார்வமும் பத்தாண்டு காலப் பெருமுயற்சியும் செய்த மாயம் அது. எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற உறுதியும் அவரது நண்பர்களின் உதவியும் லண்டன் நூலகத்திலிருந்து மோகனாங்கியை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்தது. தொலைந்ததைக் கண்டுபிடிப்பது பகீரத முயற்சிதான். ஆனால் கங்கை பொங்கி வந்துவிட்டது.
புத்தகம் கிடைத்த செய்தி நள்ளிரவில் சத்தியத்தேவனுக்குக் கிட்ட, அந்நேரமே உறங்கிக் கொண்டிருந்த நண்பர் அருண்மொழியை எழுப்பி தன்னுடைய பிரவாக மகிழ்ச்சியைப் பகிர்ந்திருக்கிறார். உழைப்புக்குப் பலன் கிடைக்கும் இன்பத்தை விடவா இன்னொரு பேரின்பம் இருந்துவிடப் போகிறது!
புதினத்தை மீள்தட்டச்சு செய்து, அச்சுப்பதித்து வெளியிடும் போது தமிழ் இலக்கிய வரலாறு தன்னைத்தானே செழுமைப்படுத்திக் கொண்டது என்றே சொல்ல வேண்டும்.
இவ்வளவு சொல்கிறோமே… மோகனாங்கிக்கு தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் என்ற இடம் எளிதில் கிடைத்துவிடவில்லை. பொதுவாகவே ஈழத்தவரின் தமிழ் இலக்கியப் பணிகளுக்குக் கிடைக்க வேண்டிய முறையான இடம் கிடைப்பதில்லை என்பது இன்றும் உண்மை. சி.வை.தா ஒருவர் போதுமே! அவர் இல்லையென்றால் தொல்காப்பியம் ஏது! கலித்தொகை ஏது! பல நூல்களைக் கண்டெடுத்த அந்த மாமேதையைப் பற்றி தமிழுலகம் பேசுகிறதா! த. கனகசுந்தரம் பிள்ளையிடம் இருந்த குறுந்தொகை ஏடுகள் தான் பின்னர் நூலாகப் பதிக்கப்பட்டதல்லவா!
பிற்காலத் தமிழிலக்கிய வரலாற்று நூல்களும் கட்டுரைகளும் மோகனாங்கியைப் பற்றியோ திருகோணமலை த. சரவணமுத்துப் பிள்ளை பற்றியோ எந்தக் குறிப்புகளும் இல்லாமல்தான் எழுதப்பட்டன.
வித்வான் க.செபரத்தினம் அவர்கள் எழுதி, மணிமேகலை பிரசுரம் வெளியிட்ட “தமிழ்நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும்” என்ற நூலில் மோகனாங்கியைப் பற்றி குறிப்பிருக்கிறது. ஆனால் Charles Kingsley இயற்றிய Hypatia என்ற புதினத்தின் தழுவலே மோகனாங்கி என்று சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக ஒன்றைச் சொல்லிவிட்டால் அதையே எல்லோரும் வால்பிடிப்பதுதானே வழக்கம்.
இது எந்தளவு உண்மை என்று அறிய Hypatia புதினத்தை சத்தியத்தேவன் தேடியெடுத்து வாசித்தார். சரவணமுத்துப் பிள்ளையவர்களும் முன்பு Hypatiaவை வாசித்திருக்கலாம். ஆனால் கதைக்களமும் கதையும் வெவ்வேறு என்பதைத் தெளிந்தறிந்த சத்தியத்தேவன், மோகனாங்கியின் பதிப்புரையில் அதைப் பதிவும் செய்கிறார்.
1978ல் முனைவர் பட்டத்துக்காக பேரா.க. அருணாச்சலம் எழுதிய ஆய்வுக்கட்டுரையில், மோகனாங்கியை தமிழின் முதல் வரலாற்றுப் புனைவாகக் கருத முடியாது என்றும் சரவணமுத்துப் பிள்ளையவர்களை தமிழ் வரலாற்றுப் புனைவுகளின் முன்னோடி என்று ஏற்க முடியாது என்றும் கருத்தை முன்வைக்கிறார். அவருடைய ஆய்வுக்கட்டுரையில் கல்கியை முதல் வரலாற்றுப் புனைவாசிரியராக முன்னிறுத்தும் நோக்கே இருந்திருக்கிறது.
ஏன் மோகனாங்கியை முதல் வரலாற்றப் புனைவாகக் கருத முடியாதாம்?
புதினத்தின் வடிவம் முழுமையாக இல்லை. தமிழகத்தின் பொற்காலப் பகுதியை மையமாகக் கொள்ளாமல், 16ம் நூற்றாண்டில் நடந்த “பெண் கொள்ளல்” தொடர்பான நிகழ்வை வைத்து எழுதப்பட்டிருக்கிறது. எழுத்தில் ஈழத்து மொழிவழக்கும் கலந்திருக்கிறது…. இன்னும் இப்படியே கருத்துகள்…
இதனால் மோகனாங்கி தமிழ்நூல் அல்லாமல் போகுமா?
புதினத்தைப் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். மோகனாங்கி தமிழில் முதலில் வெளிவந்த வரலாற்றுப் புதினம் மட்டுமல்ல. மக்களின் பேச்சு வழக்கைப் பயன்படுத்தி வெளிவந்த முதல் புதினம் என்ற பெருமையும் அதற்குண்டு. ஈழத்து வழக்குகளை ஆங்காங்கு பாவித்திருந்தாலும் இன்றும் எளிமையாகப் படிக்கக் கூடிய அழகு நடையில் புதினம் இருந்தது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வெளிவந்த பழைய தமிழ் நூல்களையும் புதினங்களையும் படிக்கும் போது இருந்த சிரமம் கூட இதில் இல்லவே இல்லை. “முந்தானாத்து ராத்திரி நானிந்தக் கண்ணாலே அவரையும்…” என்று பாத்திரங்கள் இயல்பாகப் பேசிக்கொள்ளும் போது ரசித்துப் படிக்க என்ன தடை!
புதினத்திலிருக்கும் வரலாற்றுத் துல்லியத்தையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். மோகனாங்கி என்ற பெயர் கற்பனையாக இருக்கலாம், ஆனால் நிகழ்வுகள் 99% வரலாற்றை பிரதிபலிக்கின்றன. அதனால்தான் வரலாற்று எழுத்தாளர் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி மோகனாங்கியை “வரலாறு கடமைப்பட்ட வரலாற்றுப் புனைவு” என்று குறிப்பிடுகிறார்.
செக் நாட்டு அறிஞரான Kamil Zvelebilதன்னுடைய “Introducing Tamil Literature” நூலில், மோகனாங்கியையும் சரவணமுத்துப் பிள்ளையையும் சேர்க்காமலே எழுதுகிறார். அறியாமல் நிகழ்ந்த பிழை அது. அதனால்தான் பின்னர் எழுதிய “The First Six Novels in Tamil” என்ற கட்டுரையில், “தமிழிலக்கிய வரலாற்றிலும் எழுத்துலகிலும் தி.த.சரவணமுத்துப்பிள்ளை அசாதாரணமான ஓர் அடியெடுத்து வைத்ததுடன் ஒரு புதிய போக்கையும் உருவாக்கியுள்ளார்” என்று மிக அழுத்தமாக பதிவு செய்கிறார்.
தமிழில் பிரபலம் பெற்றுள்ள வரலாற்றுப் புனைவுகள் வரலாற்று நாவல்கள் அல்ல என்பதை முதலில் சுட்டிக்காட்டி, அந்தக் குறையைப் போக்க “வானம் வசப்படும்”, “மானுடம் வெல்லும்” ஆகிய சிறந்த புதினங்கள் எழுதிய பிரபஞ்சனின் துணிவைப் பாராட்டத்தான் வேண்டும். அதற்கும் நூறாண்டுகளுக்கு முன்னாள் “மோகனாங்கி” எழுதிய சரவணமுத்துப் பிள்ளையவர்களையும் கொண்டாடத்தான் வேண்டும்.
19ம் நூற்றாண்டிலேயே அப்போதைய அறிவொளிக்கால சிந்தனைகளோடு பெண்விடுதலைக் கருத்துகள் இழையோட சமூகச் சீர்திருத்தக்கருத்துகளோடு, அன்றைய சூழலின் இயல்பு மொழிநடையில் மோகனாங்கியை படைத்த சரவணமுத்துப் பிள்ளையவர்களை தமிழ் கூறும் நல்லுலகம் போற்றத்தான் வேண்டும். இன்னும் பலகாலம் வாழ்ந்திருந்தால் எப்பேர்ப்பட்ட படைப்புகள் நமக்குக் கிடைத்திருக்கும் என்ற எண்ணமும் தோன்றாமலில்லை.
அவருடைய தமிழ்பாஷை என்ற ஆராய்ச்சி நூலை மொழிநாத்திகத் தன்மையது என்று கூறுவது பொருத்தம். மொழியின் வரலாற்றை மக்களின் வரலாற்றிலிருந்துதான் படிக்க வேண்டும் என்ற சீர்கருத்து அவரின் எழுத்தில் ஐயமற வெளிப்படுகிறது. மீள்பதிக்கப்பட்ட நூலினை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.
மோகனாங்கி மீண்டும் வருவதற்கு புதையல் வேட்டையாய் பெருமுயற்சி கொண்ட வரலாற்றாய்வாளர் திரு. சத்தியதேவனுக்கும், அவருக்கு பலவகையிலும் உதவிய நண்பர்களுக்கும், குமரன் புத்தக இல்லத்துக்கும் தமிழுலகத்தின் சார்பாக இவ்விடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடத்து விளக்காய் மறைந்திருந்த எழுத்தாளர் திருகோணமலை த. சரவணமுத்துப் பிள்ளையவர்களின் தமிழ்த்தொண்டு இனி குன்றின் மேல் நின்று பிரகாசிக்கட்டும்.
தமிழின் முதல் வரலாற்றுப் புதினமும் முதல் பொதுமொழிப் புதினமும் ஈழத்தமிழின் கொடை என்பதில் பெருமிதம் கொள்வோம்!
கட்டுரை தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள உதவும் சுட்டிகள்…
https://arunmozhivarman.com/2018/02/08/mohanaangi/
https://arunmozhivarman.com/2019/03/11/sathyan-interview/
http://sathiyathevan.blogspot.com/2017/08/blog-post.html?m=1