மோகனவம்சி என்ற நாவல்

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

தென்னேடி ஹேமலதா எழுதிய பிராமண பில்ல (பிராமணப் பெண்), பிச்சிவாள்ள சொர்க்கம் (பைத்தியக்காரர்களின் சுவர்க்கம்), பகவந்துடி பஞ்சாயத்து (இறைவனின் பஞ்சாயத்து), தய்யாலு லேவு (பேய்கள் இல்லை), சப்தஸ்வராலு, வைத்தரணீ தீரம் போன்ற மேலும் சில நாவல்கள் உள்ளன. (நிடதவோலு மாலதி An invincible force in Telugu Literature, see Eminent scholars and other essays in Telugu Literature, 2021, e book).

லதாவின் பல நாவல்களைப் போலவே இவையும் சமுதாய வாழ்க்கையின் விசித்திரங்களை சித்திரிக்கின்றன. ஹெச் ஜி வேல்ஸ், சோமர்செட் மாம் போன்ற எழுத்தாளர்களை படித்ததன் தாக்கம் கதைப் பொருளை தேர்ந்தெடுப்பதிலும் கதையை அமைப்பதிலும் இருப்பதை நாவல்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகளைக் கொண்டு அறிய முடிகிறது.

லதாவின் சமூக நாவல்களிலிருந்து மாறுபட்டு சிறப்பாக தென்படுபவை அவர் எழுதிய புராண மற்றும் வரலாற்று நாவல்கள்.

எழுத்தாளர் லதா என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவு வருவது மோகன வம்சி என்ற நாவல். நாவல் படைப்பின் இலக்கணத்தை முழுவதும் அறிந்தவர் லதா என்று அடையாளம் காட்டும் நாவலாக உள்ளது மோகன வம்சி.  .

2013 ல் வெளியான பதிப்பு கிடைக்கிறது. முதல் பதிப்பு எப்போது அச்சானது என்பது தெரியவில்லை. 1965 ல் அந்தரங்க சித்திரம் என்ற பெயரில் வந்த லதாவின் சுயசரிதத்தில் இந்த நாவல் பற்றிய குறிப்பு வருகிறது என்பதால் (நெடுதவோலு மாலதி) இது 1965 க்கு முன்பாவாகவே வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த நாவலுக்கு ‘எலா செப்பாலி’ (எப்படிச் சொல்வது?) என்ற தலைப்பில் லதா எழுதிய பின்குறிப்பில், “வாழ்வதற்கென்று எனக்கு நிர்ணயித்த வாழ்நாளில் 28 ஆண்டுகள் கடந்துவிட்டன. என்னால் எதை மிச்சம் வைத்துக் கொள்ள முடிந்தது?” என்று கேட்டு அதுவரை பட்ட சிரமத்தைக் குறித்து எழுதி, மோகன வம்சி நாவலை எழுதிய பின்பு தனக்கு அத்தகைய வருத்தம் எதுவும் இல்லை என்கிறார். அவர் 28 வயதிலேயே இந்த நாவலை எழுதி இருக்கிறார் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். 1932ல் பிறந்த அவருக்கு 28 வயது என்றால் அது 1960. .அதுவே மோகன வம்சி எழுதப்பட்ட காலம். அவர் எழுதிய பல நாவல்கள் 1960 ல் எழுதப்பட்டிருப்பது சிறப்பு. 

சமுதாயத்தில் எந்த நிபந்தனையையும் எந்த தர்மத்தையும் கடைபிடிக்காத ஸ்ரீகிருஷ்ணனின் கதையை ஆச்சர்யத்தோடு கவனித்து, தன் ஆலோசனைகளையும் அந்தரங்கத்தையும் அது வசப்படுத்தி விட்டது என்றும் அதுவே மோகன வம்சி நாவலுக்கு மூலக் கரு என்றும் நாவலுக்கு எழுதிய பின்குறிப்பில் கூறுகிறார் லதா.

ராதா, கிருஷ்ணர் இருவரின் காதலில் இருக்கும் மாதுரியத்தின் நிரூபணம் இந்த நாவல். கடந்து சென்ற யுகத்தைச் சேர்ந்த ராதாவின் அந்தரங்கத்தோடு ஒன்றிணைந்து சாதனை செய்து, உணர்ந்து எழுதிய நாவல் இது. கோகுலத்தில் கிருஷ்ணரின் ராசக் கிரீடையில் தொடங்கி, கம்சனின் தரப்பில் மதுராவுக்கு வரவேற்று அழைத்துச் செல்ல வந்த அக்ரூரரோடு சேர்ந்து மதுரா வருவதும் கம்சனைக் கொன்று  பெற்றோரை சிறையில் இருந்து விடுதித்து, தாத்தாவை சிம்மாசனத்தில் அமர்த்தி  அங்கு ஜனாநாயகம் மலர ஏற்பாடு செய்து, உத்தவரை கோகுலத்திற்கு அனுப்பி தனக்காக எதிர்பார்த்திருந்த கோபிகைகளுக்கு தான் வருவதாக செய்தி அனுப்புவது, ஒரு இரவு தனியாகச் சென்று அவர்கள் அனைவரையும் ஆதரித்து வருவது, ருக்மணியோடு திருமணம், திரௌபதியோடு பாண்டவர்களின் விவாகம் நடப்பது குறித்து அர்ஜுனனோடு உரையாடல், சுபத்ராவை அர்ஜுனன் திருமணம் செய்வது, பாண்டவர்களின் ராஜசூய யாகம், சிசுபால வதை, சத்தியபாமாவும்  ஜாம்பவதியும் கிருஷ்ணரின் மனைவிகளாவது, பாண்டவர்களின் அரண்ய வாசம், அஞ்ஞாத வாசம், பாண்டவர்களின் தரப்பில் கௌரவர்களிடம் கிருஷ்ணர் தூது செல்வது, போருக்கு ஏற்பாடு செய்வது, கீதோபதேசம் முதலான சம்பவங்களை எழுதியபடி நகரும் இந்த நாவலின் உண்மையான உயிர்நாடியாகவும் உயிரோட்டமாகவும் விளங்குவது, ஆண் பெண் இடையே ஏற்படும் ஈர்ப்பின் சகஜ சௌந்தர்யத்தை வேறு வேறு கோணங்களில் விளக்கிக் காட்டுவதே.

சின்னக் கண்ணன் வீடு வீடாகப் புகுந்து பாலும் தயிரும் வெண்ணையும் தின்று குறும்பு செய்யும் குழந்தை. அதே சமயத்தில் கோபிகைகளின் இதயத்திலும்    புகுந்து விடுகிறான். அவனுடைய முரளி நாதத்தைக் கேட்டு பரவசமான கோபிகைகள் வீட்டையும் கணவரையும் விட்டு அவனைத் தொடர்ந்து செல்கின்றனர். யமுனா நதியின் மணற்தீரம், காளிந்தி நதிப் பிரதேசம், பிருந்தாவனம் போன்றவை கிருஷ்ணனின் ராசலீலையையும் கோபிகைகளின் விரகதாபத்தையும் எதிரொலித்தன என்பது பாகவதம் தசம ஸ்கந்தத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது. அவை இறைவனின் லீலைகள்.

அகங்காரம், மமகாரம் போன்ற பந்தங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, ‘உன்னைத்  தவிர வேறு இல்லை’ என்ற நிலைமைக்கு அவர்களை அழைத்து வந்து முக்தி அளிப்பதே அந்த லீலை. கிருஷ்ணருக்கு எட்டு மனைவிகள். மேலும் நரகாசுரனின் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பதினாறாயிரம் கோபிகைகள் கிருஷ்ணரின் அடைக்கலத்துக்கு வந்தவர்கள். ஒரு ஆணுக்கு வாழ்க்கையில் இத்தனை மனைவிகள் இருப்பது என்பது, இறைவனின் லீலை என்பதால் ஒப்புக்கொள்ளப்பட்டதாக இருக்கலாம். ஆனால் மனிதனாகப் பிறந்தவன் இதனை எவ்வாறு புரிந்து கொள்வது ?

ஆண் எத்தனை பெண்களோடு வேண்டுமானாலும் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு இந்த சமுதாயம் உரிமையும் வாய்ப்பும் அளிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட  திருமணங்களோ, திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்புகளோ பெண்ணுக்கு மறுக்கப்படுகிறது 

சமுதாயத்தின் இவ்வித ஏற்பும், மறுப்பும் பெண் மனதின் அந்தரங்க செயல்பாட்டைத் தடை செய்ய இயலுமா? இது போன்ற அனேக கேள்விகளை எழுப்பி, எண்ணங்களின் வெள்ளத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் மோகத்தால் விளையும் பாலியல் ஆசைகள், இயல்புகள் போன்றவற்றை விவரித்து ஒரு முடிவு காண்பதை இலக்காகக் கொண்டு மோகன வம்சி எனப்படும் இந்த நாவலின் கருவை கட்டமைத்துள்ளார் லதா. 

பொறாமை, அர்த்தமில்லாத வாஞ்சை, வெறுப்பு போன்றவை எதுவுமில்லாமல் அனைவரிலும் கிருஷ்ணரே நிறைந்து ஒளிவிடும் தீபங்களாக மனிதர்களைக் காண்கிறார் லதா. 

ராதா, தபதி, சந்திரிகா அனைவரும் கிருஷ்ணனின் பௌதீகமான சிந்தனை, கானம், சௌந்தர்யம் ஆகியவற்றில் களித்திருப்பவர்களே. அவர்களுக்குத் திருமணம் ஆகி சம்சாரம் இருந்தது. வயதில் கிருஷ்ணரை விடப் பெரியவர்கள். கிருஷ்ணருக்கும் அவர்கள் மீது சமமான அன்பு. உண்மையில் அவனுடைய பார்வையில் பெண்களனைவரும் வேறு வேறு பெயர்களோடு பௌதீகமாக மாறுபட்டு தென்படும் பெண்மையும் வேறுபட்ட தோற்றங்களே.

கோகுலத்தை தேவபூமியாக வர்ணிக்கிறார் லதா. பூமியில் இருக்கும் சொர்க்கம் அது.  அங்கு அன்புக்கு முழு சுதந்திரமும் அனுபவத்திற்கு முக்கியத்துவமும் அளிக்கப்பட்டது. திருமணம், குடும்பம் இவற்றோடு எந்த நிமித்தமும் இன்றி,  எப்படிப்பட்ட ஏற்பும் மறுப்பும் இல்லாத சுயேச்சையும் தூய்மையும் ஆன ஆண், பெண் அன்பு பந்தம் அங்கு நிலவியது. உன்னுடையது என்னுடையது என்ற வேறுபாட்டு உணர்வு என்றுமில்லாத சுகமும் சாந்தமும் கொண்ட ஜீவிதம். 

நந்தகோபன் அந்த விழுமியங்களை கோகுலத்தில் குடியாட்சியின் அதிகாரமாக அமல் செய்தான் என்பதால்தான் அங்கு பெண்களுக்கு சுயேச்சை என்பது சாதாரண விஷயமாக இருந்தது.

இந்திர பூஜை போன்ற வைதீக சம்பிரதாயங்கள் நுழைந்தாலும் மொத்தத்தில் வைதீக மார்க்கம் மனிதர்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தாதிருப்பது  கோகுலத்தின் சிறப்பு.

அந்த இந்திர பூஜையையும் தடை செய்து கிருஷ்ணர் கோவர்தன கிரி பூஜையை தொடங்குவதன் மூலம் இயற்கை சக்திகளின் வழிபாட்டிற்குத் தொடக்கம் ஏற்படுத்திய அம்சத்தை எடுத்துரைக்கும் லதா, இயற்கையின் இயல்பான ஆண் பெண் ஈர்ப்பிற்கும், காதலுக்கும் அனுபவத்திற்கும் பிறவற்றை விட அதிக முக்கியத்துவம் கொடுப்பது போல் தோன்றுகிறது.

இந்திர பூஜை நடத்துவதற்கு வந்த பிராமணர்கள் எந்த வேலையும் இல்லாமல் கோகுலத்தில் கழித்த ஒரு வார நாட்களில், அவர்களில் ஒருவன் கோகுலப் பெண் ஒருத்தியோடு ஏற்படுத்திக் கொண்ட தொடர்பால் வந்த மோதல் ஒன்றை நாவலின் கதையம்சத்தில் ஒரு பகுதியாக்குவதன் மூலம் சுவையான முரண்பாட்டை சர்ச்சைக்கு எடுத்து வருகிறார் லதா.

பிராமணக் குழுவில் இருந்த பூரீஸ்ரவன் கோகுலத்தில் உள்ள ஜெயவாணி என்ற பெண்ணால் ஈர்க்கப்படுகிறான். நைஷ்டிக பிரம்மச்சாரியான அவன்பால் அவளும் ஈர்க்கப்படுகிறாள். இருவரும் யமுனை நதியின் மணற் கரையிலும் தோட்டங்களிலும் விஹாரம் செய்கிறார்கள். தனிமையில் அவர்கள் இருவரையும் பார்த்த குரு சைவாலன் அது அதர்மம் என்றும் வேத சம்மதமான செயல் அல்ல என்றும் கடிந்துரைக்கிறார். இந்த எதிர்விளைவை ஜெயமணி எத்தனை எளிதாக எடுத்துக்கொண்டு சிரித்தபடி கண்டு கொள்ளாமல் போகிறாளோ. பூரீஸ்ரவன்  அத்தனை பயப்படுகிறான். கோகுலத்தின் தர்மத்திற்கும் மதுரா நகரத்தின் தர்மத்திற்கும் இடையில் நிலவும் வேறுபாடே அதற்குக் காரணம். கோகுலத்தில் ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பதற்கு எந்த தடையும் இல்லாத இயல்பான இயற்கை தர்மம் நிலவியது. வைதீக மார்க்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு இடையில் அது ஒரு சமுதாய தர்மம். 

மதுரா நகரம் மதம், குலம், குடும்பம், அரசாங்கம் போன்ற அனைத்தின் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு இருந்தது. அதனால் அங்கு அது குற்றமாகிறது. அதனால்தான் குரு சீடனுக்கு நாடு கடத்தல் தண்டனை விதிக்கிறார். தீர்த்த யாத்திரை செய்து பாவத்தை போக்கிக் கொண்டு வரலாம் என்ற தளர்வும் அளிக்கிறார். கோகுல கலாசாரத்தில் இளைஞனும் இளம் பெண்ணும் அன்னியோன்யமாக சந்திப்பதும் ஈர்க்கப்படுவதும் குற்றம் அல்ல. மதுரா நகரத்தின் தண்டனைச் சட்டம் கோகுலத்தில் எடுபடாது என்பது கிருஷ்ணனின் தீர்ப்பு.

குடும்பம், திருமணம் போன்றவை தேவையில்லாத தேவலோக பழக்க வழக்கங்கள் மானுடனுக்குப் பிடிக்காது என்று கிருஷ்ணரிடம் அவர் தந்தை கூறியபோது, பிடிப்பது என்ன? பிடிக்காததென்ன? அவரவர் சமுதாயத்தின் தீர்மானம் அவரவருக்கு உள்ளது. இல்லாவிட்டால் எந்த சமுதாயத்தில் சுகம் இருக்கிறதோ அந்த சமுதாயத்தை மீதி உள்ள சமுதாயங்களும் அனுசரிக்கும் என்று கிருஷ்ணர் கூறிய சொற்களை கவனிக்க வேண்டும்.

ஒருவர் உயர்ந்தவர் என்றும் ஒருவர் குறைந்தவர் என்றும் எதனையும் மறுக்காமல் இருப்பதே உண்மையான பண்பாடு. உண்மையான கலாச்சாரம்.

மனிதனுடைய சுகத்தையும் சந்தோஷத்தையுமே தரப் பரிசோதனையாகக் கொண்டு மனித உறவுகள் வளர்ச்சி செய்ய வேண்டும். அத்தகைய கலாச்சாரத்தையே லதா ஆதர்சமாகக் காட்டுகிறார். 

கோகுலத்தை விட்டு மதுரைக்குச் செல்கிறான் கிருஷ்ணன் என்றறிந்து அவனுடைய பிரிவைத் தாங்க இயலாத தாய் யசோதா மட்டுமின்றி தபதி, சந்திரிகா, நீரஜா அனைவரும் வருத்தத்திற்கு உள்ளானார்கள். அன்பால் ஈரமான உள்ளமும், கண்ணீரால் நனைந்த கண்களும் ஆராதனையால் பரவசமான வாழ்க்கையும் விலை மதிப்பில்லாதவை என்று ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறான். அந்தரங்கத்தில் ஏற்படுகின்ற வேதனையின் வருத்தத்தையோ, மோகத்தையோ    அறிந்துகொள்ள முடியாத பெண்களின் திறனின்மையே அவர்களுடைய  துயரத்திற்குக் காரணம் என்று ராதாவின் மூலமாக கூறச் செய்கிறார் நாவலாசிரியை லதா.

குரூபியான குப்ஜாவின் உடல் கோணல்கள் எல்லாவற்றையும் நிமிர்த்தி விலக்கிய தெய்வீக சக்தி கிருஷ்ணருடையது என்பது அனைவரும் அறிந்ததே. லதா அதனை, பெண்மையை மதித்து கௌரவிக்கும் மனிதாபிமானம் நிறைந்த  குணமாகக் கூறுகிறார். 

குப்ஜாவின் கண்களில் வெளிப்பட்ட ஒருவித அழகைக் கண்டு கொண்ட கிருஷ்ணனின் விசாரிப்பு, குப்ஜாவுக்கு, தான் ஒரு பெண் என்ற உணர்வை ஏற்படுத்தியது என்கிறார் லதா.

பெண்மையின் அழகு தீர்மானிக்கப்படுவது உடலுறுப்புகளின் சமச்சீர் போன்ற பௌதிக அம்சங்களைக் கொண்டல்ல. பெண்மை என்பது இவை எல்லாவற்றுக்கும்   அப்பாற்பட்டது. உன்னதமானது. அதனை எழுப்பிவிடும் மனிதாபிமானப் பண்பாடு   ஆண்களிடம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆதர்ச நாயகன் ஸ்ரீகிருஷ்ணன் என்பது லதாவின் முடிவு.

“ஒருமுறை ஒரு பெண்ணின் காதலை ஏற்பதால் கிடைக்கும் இனிமை எனக்குப்     போதாது” என்கிறான் கிருஷ்ணன் குப்ஜாவிடம்.

அது கிருஷ்ணனின் பலதார மணத்தை ஏற்பதற்காக கூறப்பட்ட காரணமாக  இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட மாதுர்யமான  அனுபவம் பெண்களும் ஆசைப்படக் கூடியதே என்பது லதாவின் கருத்து. ராதா, தபதி, சந்திரிகா, நீரஜா அனைவரும் திருமணமானவர்களே. ஆனாலும்  மோகத்தோடு கூடிய மாதுர்ய விருப்பம் துரத்தியதால்தான் ஸ்ரீகிருஷ்ணனை எண்ணி விரக தாபத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால் யாரும் கிருஷ்ணனோடு சாஸ்வதமாக இருக்கக்கூடிய திருமணத்திற்காக ஆசைப்படவில்லை. 

ஒருவரோடு ஒருவரை சாஸ்வதமாக கட்டி வைப்பது மூச்சு விட முடியாத நிலமை. அதிலிருந்து விடுதலை பெறவே அவர்கள் மைதானங்களுக்கு ஓட்டம் பிடித்தார்கள். திருமணம் என்பது செயற்கையானது என்று ஸ்ரீகிருஷ்ணன் கூறுகையில், ராதா தனக்கு அதன் மீது நம்பிக்கையே இல்லை என்கிறாள்.

விவாகம், அவர்களின் பார்வையில் ஒரு பௌதிக செயல் மட்டுமே. ஆத்மாவோடு  முடிச்சு போடும் உறவு அதற்கு அப்பாற்பட்டது. செயல் அனுபவம் வேண்டும் என்பதால் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவ்வளவே. ராதாவின் மூலமாக கிருஷ்ணனிடம் அந்த வார்த்தையைச் சொல்லச் செய்யும் லதா, முழுவதாக அதனை மறுக்காவிட்டாலும் அத்தனை முக்கியத்துவம் கொண்ட அமைப்பு அல்ல திருமணம் என்று தீர்மானமாக கூறி விடுகிறார்.

ருக்மிணியின் திருமணம் குறித்தும் இந்த நாவலில் கூறப்படுகிறது. விருப்பமில்லாதவனோடு திருமணத்தை எதிர்க்கிறாள் என்பதால் தன்னை விரும்பிய அவளை ஏற்கவேண்டும் என்று எண்ணுகிறான் கிருஷ்ணன்.   அந்தணரை தூது அனுப்பியதை ஏற்று ருக்மிணியைத் தூக்கி வந்து மனைவியாக்கிக் கொள்கிறான் என்று லதா அதற்கு விளக்கமளிக்கிறார். 

அதேபோல், திரௌபதி ஐந்து கணவர்களை மணம் புரிந்து கொள்வதில் ஒழுக்கமின்மை எதுவும் இல்லை என்ற விஷயத்தைக் குறிப்பதற்கு அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் ஒரு உரையாடலைக் கொண்டுவருகிறார் லதா. ஒரு பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களோடு தொடர்பு கொண்டு அவர்களைத் திருப்திபடுத்தியபடி அவளும் சந்தோஷமாக வாழ்வது வியாசருக்கு சம்மதமாகவே இருந்தது என்றும் கூறுகிறார். திரௌபதிக்கும்  பாண்டவர்களுக்குமான உறவை பொறாமையற்ற உலகைப் படைப்பதற்கான ஒரு படிக்கல்லாகக் கண்டு விளக்கமளிக்கிறார் லதா. 

பெண்களின் விஷயத்தில் அசூயையில் இருந்து மானுடன் அடையவேண்டிய விடுதலைக்குத் தொடர்பான முயற்சியே இந்த கதையின் ஆதாரம் என்பது   லதாவின் அபிப்பிராயம். அந்த ஆதாரமே சத்தியவதி. அவள், மீனவத் தலைவன் தாஸராஜாவின் மகளாகத் தோன்றி படகு ஒட்டிய போது ஒரு முனிவரின் காரணமாக வியாசரைப் பெற்று, சந்தனு மகாராஜாவை மணந்து இரு புதல்வர்களைப் பெற்று, அவர்கள் அகால மரணமடைந்த பின், சந்தானம் இல்லாமல் விதவைகளாக இருந்த தன் மருமகள்களிடம் வம்ச வாரிசுகளான புதல்வர்களைப் பெறும்படி வியாசரை ‘நியோகித்த’ சத்தியவதியின் கதையை கிருஷ்ணனும் அர்ஜுனனும் உரையாடுவதில் ஒரு பகுதியாகக் கொண்டுவந்து, அது சிருஷ்டிக்கும் தாய்மைக்கும் அவள் அளித்த முக்கியத்துவம் என்று ஸ்ரீகிருஷ்ணன் தீர்மானமாகக் கூறுவதாக காட்டுகிறார் லதா.

அந்த சந்தர்பத்தில் யாரோ தேர்ந்தெடுத்த ஆண் பெண்களின் இடையே அன்றி சுயேச்சையாக விருப்பம் ஏற்பட்ட ஆண் பெண்களின் இடையே ஏற்படும் சகஜமான உறவே உத்தமமான சந்தான உற்பத்திக்கு காரணமாகும் என்றும் குறிப்பிடுகிறார். 

சத்தியவதியிடம் இருந்த தாய்மையின் தூண்டுதலே, குந்தியிடமும் இருந்தது. அவள் யமன், வாயு, இந்திரன் ஆகியோரிடமும், மாதுரி அஸ்வினி தேவதைகளிடமும் பாண்டவர்களைப் பெறுவதற்கு அதுவே வழிகாட்டியானது. இன்று பஞ்ச பாண்டவர்களுக்கு மனைவியான திரௌபதி மற்றொரு சத்தியவதியாகிறாள் என்று அர்ஜுனன் கூறிய சொற்களைக் கேட்ட பின் ஸ்ரீகிருஷ்ணன் தான் ஒவ்வொரு பெண்ணிடமும் ராதையையே பார்ப்பதாகவும் அதே போல் பாஞ்சாலியும் ஐந்து கணவர்களிலும் அர்ஜுனனையே பார்க்கிறாள் என்றும் எண்ணுகிறான். 

அவ்விதமாக லதா, ஒரு பெண்ணுக்கு பல ஆண்களோடு உறவு இருப்பது ஒழுக்கமற்ற செயல் அல்ல என்று ஸ்தாபிப்பதற்கு இத்தனை முயற்சியும் செய்ததாகத் தெரிகிறது.  

“அவரவர் வழியில் அவரவர் தேவைக்கேற்ப அவரவர் உசிதமான முறையில் வாழ்வதும், சுகப்படுவதுமே செய்ய வேண்டிய வேலைகள். அதிகாரத்திற்காக சக மனிதர்களுக்கு மயக்க மருந்து கொடுப்பதும், சுய முன்னேற்றத்திற்காக பிறருக்கு நியமங்களை விதிப்பதும் செய்யக் கூடாத வேலைகள். சமுதாய நியமங்கள் தூக்குக்கயிறாக மாறாதவரை கடைபிடிக்கலாம். அந்தரங்க உள்ளத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்வது முக்கியம்” என்று தன் கருத்தான    வாழ்க்கை சூத்திரத்தை எடுத்துக் கூறுவதற்கு லதா வியாசரையும் சத்தியவதியையும் பயன்படுத்திக் கொள்கிறார். 

சத்தியவதி மூலமாக, “பெண் என்பவள் ஒரு பிராணி. விருப்பங்களும் உணர்வுகளும் கொண்ட ஒரு மானுட ஜீவன். அவள் ஒரே ஆணோடு வாழ நினைத்தால் வாழ்வாள். இல்லை என்று தோன்றினால் அவ்வாறு வாழமாட்டாள். அவரவர் பண்பாட்டைப் பொறுத்து அவரவர் வாழ்க்கையை சரி செய்துகொள்வார்கள்” என்று கூறவைத்து ஆண், பெண் உறவை அக்கிரமத் தொடர்பு என்ற சொல்லால் களங்கம் செய்துவரும் உலகியல் தர்மத்தை புறந்தள்ளுகிறார் லதா. 

மொத்தத்தில், இந்த நாவலில், மதுரப் பிரேமைக்கு உயர்ந்த இடம் அளித்து அது கோபிகைகளின் வழிபாடாக, சர்வ சமர்ப்பணமாக, எந்த விருப்பமும் இல்லாத மானுட தியானமாக, சர்வ சுதந்திர கீதமாக, கானமாக வளரக் கூடியது என்றும், திருமணத்தால் ஏற்படும் தர்மப் பிரேமையில் சுயேச்சையை விட பொறுத்துப் போவதற்கே அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும், ருக்மிணியின் நடத்தையின் மூலமாக குறிப்பிடுகிறார் லதா. அவ்விதமாக மோகனவம்சி,    காதல் சார்ந்ததாக மட்டுமின்றி லதாவின் கொள்கை சித்தாந்தங்களை நிரூபிப்பதற்கான மூலோபாயமாக படைக்கப்பட்ட நாவல்.

ஸ்ரீசரணாலு என்ற நாவலும் இதைப் போன்றதாகவே இருக்காலம். ஞானிகளும், பாரத பண்டைய இலக்கியங்களின் மேல் வழிபாட்டுணர்வு கொண்டவர்களுமான வாசகர்களுக்காக எழுதிய நாவலாக மோகனவம்சியோடு கூட லதா குறிப்பிடும் நாவல் இது. (பௌலஸ்த்யுனி ஹிருதயம் என்ற நாவலுக்கு எழுதிய முன்னுரையில் லதாவின் விண்ணப்பம்).

பௌலஸ்த்யுனி பிரேம கத என்ற நாவல்

மகாபாரதம், பாகவதம் இரண்டின் கதைகளையும் கலந்து மோகனவம்சி என்ற நாவலை எழுதிய லதா, இராமாயண கதையை ஆதாரமாகக் கொண்டு எழுதிய இரண்டு நாவல்கள், பௌலஸ்த்யுனி பிரேம கத, ஸ்வர்ண சீதா என்பவை. 

பௌலஸ்த்யுனி பிரேம கத என்ற நாவல் தேசி பதிப்பாக 1973 ல் பிரசுரமானது. ஸ்வர்ண சீதா ஆந்திரஜோதி வார பத்திரிகையில் தொடராக வந்தது. ஆனால் எப்போது பதிப்பிக்கப்பட்டதோ தெரியவில்லை. 2013 ல் சாஹதீ பதிப்பாக வந்தது. 

ரங்கநாயகம்மா எழுதிய இராமாயண விஷவிருக்ஷம் (1974-76) என்ற நூலை சவால் செய்து, இராமாயண விஷவிருக்ஷ கண்டனம் என்ற நூலை 1977 ல் லதா பிரசுரித்தார். பௌலஸ்த்யுனி பிரேம கத அதற்கு முன்பே வந்தது. சுவர்ண சீதா அதற்கு முன்னால் வந்ததோ பின்னர் வந்ததோ தெரியவில்லை. 

புலஸ்தியரின் பேரன் பௌலஸ்தியன். புலஸ்தியர் பிரம்மாவின் மானச புதல்வர். பத்து பிரஜாபதிகளில் ஒருவர். சப்த ரிஷிகளில் புலஸ்தியரும் உள்ளார். அவருடைய புதல்வன் விஸ்ரவசு. அவனுக்கு இலவித தேவி என்ற மனைவி மூலம் பிறந்தவன் குபேரன். கைகசியாக புகழ் பெற்ற மனைவி புஷ்போத்கட என்பவள் மூலம் விஸ்ரவசுக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை பிறந்தார்கள். 

புலஸ்தியனுடைய மகனின் மகனானதால் ராவணனுக்கு பௌலஸ்தியன் என்று பெயர் வந்தது. ராக்ஷசனாக, சீதையை அபகரித்து எடுத்து வந்த ஒழுக்கமற்றவனாக, காமுகனாக உலகின் நிந்தைக்கு ஆளான ராவணனை  பிரம்மரிஷியின் பேரனாகவும் சிவ பக்தானாகவும் காட்டும் வகையில் பௌலஸ்தியன் என்றழைத்தனர். அவனை மனிதாபிமான கோணத்திலிருந்து காட்டும் நவீன கண்ணோட்டத்தில் ‘காட்டூரி பிங்களி கவிகள்’ பௌலஸ்திய ஹ்ருதயம் என்ற காவியத்தை எழுதினார்கள். அது லதாவை மிகவும் சிந்திக்க வைத்தது. 

ராமாயணத்தில் ராவணன் எதனால் அவ்வாறு சித்திரிக்கப்பட்டான் என்ற கேள்வி அவரை வதைத்தது; அதற்கு பதில் தேடும்போது, பௌலஸ்தியனின் பிரேம கதை  என்ற நாவலின் கருப்பொருள் கிடைத்தது. இந்த நாவலுக்கு விண்ணப்பம் என்ற தலைப்பில் எழுதிய முன்னுரையின் கருத்து இதுவே. 

ராவணன் சீதையை அபகரித்ததற்கு அன்றைய யுக தர்மம் அல்லது அரசியல்     காரணமே தவிர ராவணனுடைய அதர்ம புத்தியால் அல்ல என்று நிரூபிப்பதற்குத் தகுந்தாற்போல் ராவணனின் ஆளுமையை நிர்மாணம் செய்து உயர்வாக வர்ணித்து கதையை நெய்கிறார் லதா. 

ராவணன் சிறந்த சிவபக்தன் மட்டுமின்றி, சிறந்த சங்கீத, சாகித்ய செல்வமும் கொண்டவன் என்பது பிரசித்தி. ராவணன் எழுதியதாக கூறப்படும் சிவ தாண்டவ ஸ்தோத்திரம் ஒன்று உண்டு. அந்த ஸ்தோத்திரத்தால் ராவணன் சிவனை பூஜிப்பதில் தொடங்கம் நாவலில், ரம்பையை அறிமுகப்படுத்தி, அளகாபுரியின் மீது படையெடுக்கும் சமயத்தில் ரம்பையை பாழ்படுத்திய சம்பவத்தைப் பற்றிக் கூறி, அந்த அப கீர்த்தியில் இருந்து விமுக்தி பெறுவதற்கு ராவணன் எத்தனை சிரமப்படுகிறான் என்று காட்டி, ரம்பையிடம் மன்னிப்பு கேட்கக் கூடிய உத்தம குணநலன் கொண்டவன் ராவணன் என்று நிரூபிக்கிறார். 

மண்டோதரியை அறிமுகம் செய்து அவளிடம் ராவணன், தன்னிடம் உள்ள குறைகள், மோகங்கள் பற்றிக் கூறி, அவை ரத்த சம்பந்தமாக, வம்ச பாரம்பர்யமாக வந்தவையாக இருக்கலாம் அல்லது யுக தர்மம் தன்னை அவ்விதம் செயவித்திருக்கலாம் என்று தன் அந்தரங்கத்தை பகிரங்கப்படுத்துவது போல் கதையை நடத்துகிறார். 

பெண்கள், வீரனான ஆணின் சொத்து என்ற பலமான யுக தர்மக் கருத்து அவனை  பெண்களுக்காக அலையும்படி செய்ததென்று ராவணன் தன் நடத்தைக்கு  நியாயமான ஒரு காரணத்தை கற்பித்துக் கொண்டு அதன்படி நடந்து கொள்கிறான். 

அந்த சந்தர்பத்தில் ராவணன், ஜானகியை தான் சிறுவயதிலேயே மிதிலா நகரத்தில் பார்த்ததாகவும் அப்போதே அவளுக்கு ராமனோடு மணமாகும் என்று தான் அறிவேன் என்றும் ராமனுக்கு அந்த விஷயத்தைக் கூறுவதற்கு தூது செல்வதற்குத் தான் அயோத்திக்குச் சென்றதாகவும் அங்கு நாரதர் ராமனின் கதையை எழுதச் சொல்லி வால்மீகியை தூண்டினார் என்றும் அந்த சங்கல்பம் நடக்கும்போது ராவணன் வால்மீகியை சந்தித்ததாகவும், மிருத்யு ரகசிய ஞான போதனையால் அவரை எழுதத் தொடங்கச் சொல்லி தூண்டியதாகவும் கதை நகருவது மற்றுமொரு கற்பனை. 

மொத்தத்தில், நாவலின் தொடக்கத்திலேயே ராவணன் தன் மரணம் பற்றிய அறிவோடு இருந்தான் என்றும் மண்டோதரியை அதற்குத் தயார் செய்கிறான் என்றும் கூறுகிறார் ஆசிரியை. 

வால்மீகி, சீதையையும் ராமனையும் கதாநாயகியாகவும் கதாநாயகனாகவும் வைத்து எழுதிய இராமாயண காவியத்தின் எதிர்கால வரலாற்றில் தவறுதலாக பாவியாக நினைக்கப்ட்ட தானே வில்லன் என்று தெரிந்தவன் பௌலஸ்தியன். நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலம், எதிர்காலம் மூன்றிற்கும் போக்குவரத்து நடத்தி, அனைத்திற்கும் சாக்ஷியாக பௌலஸ்தியன் இருந்தான் என்று சித்திரிக்கும் இந்த வர்ணனை அவனை காலத்திற்கு அப்பாற்பட்டவன் என்று அறிவிக்கும் செயலே.  

அயோத்தி அரசன் மருத்து என்பவனின் பட்டமகிஷியை யக்ஷ தீட்சையில் இருக்கும் போது பார்த்து, சஞ்சலம் கொண்ட மனதோடு சிவ பூஜையில் மாத்ரு தேவதையை வழிபாடு செய்ததால், ராவணனுக்கு அயோத்தியா ராணி மூலமாகவே அழிவு என்று ‘ருத்ராணி’ சபிப்பதாக மற்றொரு கற்பனை. இந்த விஷயமும் ராவணனுக்குத் தெரியும் என்றும், அகண்ட மேதைமை கொண்டவன் ராவணன் என்றும் சாபத்தின் காரணமாக இராமாயண காவியத்தில் பழிச்சொல்லாக பதிவு செய்யப்பட்டதென்றும் சனத் குமார முனிவரைக் கொண்டு கூறச் செய்கிறார் லதா.

முனிவருடன் நடந்த உரையாடலில் சிவனுக்கும் ஹரிக்கும் பேதம் இல்லை என்றும் ராமனிடம் ராவணனுக்கு வழிபாட்டு உணர்வு உள்ளதென்றும், ராமனுடைய கைகளில் மரணமடைய வேண்டும் என்று ராவணன் எண்ணியதாகவும் கூறுவதைக் காண்கிறோம்.  

அனுதாபம் எல்லாம் ராமனின் மீது இருக்கும்படி காவியம் எழுதுவதற்கு வால்மீகிக்கு போதனை செய்தார்கள் என்றும், வால்மீகியின் சங்கல்பத்தின்படி நடக்கும் கதையில் தன் பாத்திரத்திற்கு நிர்ணயிக்கப்படும் கிரம வரிசைப்படி நடப்பதற்கு ராவணன் தயாராகிறான் என்றும் மற்றுமொரு கற்பனை. முக்காலத்திலும் மூலோகத்திலும் மட்டுமல்ல. கற்பனை உலகின்  எல்லைகளையும் தொடக்கூடிய ஒரு அற்புத மனிதனாக ராவணனை வடிவமைக்கிறார் லதா. 

வால்மீகியோடு உரையாடுகையில் ராவணன், ஜானகியின் கல்யாணம் வரை கதை வந்ததென்று அறிந்து கொண்டு அதற்கு மகிழ்ந்து, தன் தங்கையின் காதல் குறித்து கேட்கிறான். பிராமண கன்னிப் பெண்ணிற்கு க்ஷத்திரியனோடு திருமணம் செய்வது சரியாக இருக்காது என்று வால்மீகி பதிலளிக்கிறார். 

ஜானகி ஜனகரின் அன்பு மகள் என்றாலும் பெற்ற மகள் அல்ல அல்லவா? அவள் பிராமணக் கன்னி அல்ல என்று நீங்கள் சொல்ல முடியுமா? என்று ஒரு வினாவை எழுப்பிவிட்டுச் செல்கிறான் ராவணன். 

அதைப் பற்றி விசாரிப்பது தொடங்குகிறது. நாரதர் கூறிய பதில், அவள் மண்டோதரியின் புதல்வியானதால் பிராமணப் பெண் என்பது. அந்த விஷயத்தை  ராமனுக்கு ராவணன் கூறுகிறான். நாரதர் அதற்கு சாக்ஷி. அவ்விதம் ராவணனின் புதல்வி ஜானகி. ராமன் அவனுடைய மாப்பிள்ளை. ராமனின் தாய் கௌசல்யாவுக்கு ராவணன் சிறுவயது நண்பன். அதனால் வன வாசத்தில் இருந்த போது ராமன் அலையும் இடங்கள் ராவணனின் அதிகாரத்தில் இருந்ததால் ராமனுடைய பாதுகாப்புப் பொறுப்பை ராவணனுக்கு கௌசல்யா தேவி அளித்திருந்தாள் என்று மற்றுமொரு கற்பனை. 

சூர்ப்பனகை, தான் எப்போதோ காதலித்த ராமனை ஜனஸ்தானத்தில் பார்த்து அவனுக்கு சேவை செய்வதற்காக வந்ததாகவும், லட்சுமணன் அவளை காயப்படுத்தினான் என்றும் சீதை சிரித்தாள் என்பதால் அதற்குப் பழி வாங்கும் படி  அவள் தன் அண்ணனிடம் கேட்கிறாள். தன் மகளான சீதையைத் தூக்கிச் செல்வதற்கு ராவணன் முடிவு செய்தான். வாழ்க்கையின் மீது சலிப்பு ஏற்பட்டதால் ராமனின் கையால் மரணமடைவதற்கு அது காரணமாகும் என்பதால் அதெல்லாம் செய்வதாகக் கூறி மாரீசனைக் கொண்டு மாய மான் வடிவில் செல்வதற்கு சம்மதிக்கச் செய்தான் ராவணன் என்று நாவலின் கதையை நடத்துகிறார் லதா. 

வால்மீகி ராமாயணப் படைப்பைப் பொறுத்து ராவணன் நடந்து கொண்டதாக ஒரு இடத்திலும் ராவணனின் செயல்களை கவனித்து வால்மீகி எழுதியதாக மற்றொரு இடத்திலும் கூறி கதையை நடத்தும் முறையைப் பார்த்தால் விசித்திரமாக உள்ளது. 

இந்த நாவலில் அனுமனை ராமனின் பாலிய சிநேகிதனாக கற்பனை செய்து எழுதுகிறார் லதா. அதனால், ராமனின் சிறுவயதில் அனுமனும்  அயோத்தியிலேயே இருந்ததாக சம்பவங்களை படைக்கிறார். ஹனுமனும்  ராமாயணம் எழுதுவதாக முதலிலிருந்து குறிப்பு கொடுத்து வருகிறார் லதா. அந்த அனுமனே சுக்ரீவனோடு ராமனுக்கு நட்பு ஏற்படுத்திக் கொடுத்து, ராவணன் மீது போருக்கு படை உதவியை அமைக்கிறான். வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையே நடக்கும் போரில் சுக்ரீவனின் பக்கம் நிற்கும் ராமன் வாலியை மறைவாக நின்று அம்பு விட்டுக் கொன்றதாக ராமாயணக் கதை கூறுகிறது. அது நீதியற்றது என்ற விவாதத்தையும், எந்தப் பகையும் இல்லாத மனிதனைக் கொள்வது அதர்மம் அல்லவா என்ற அபிப்பிராயத்தையும், நிராகரித்து, ராமனுடைய செயலுக்கு நியாயத்தோடு தொடர்பை ஏற்படுத்துவதற்கு வாலி, ராவணனின் மனைவியான மண்டோதரியை பாலியல் வன்முறை செய்த சம்பவத்தைக் காரணம் காட்டி கதையை நடத்துகிறார் லதா. 

சீதையைக் கவர்ந்து வந்த ராவணன், அவளிடம், சுக்ரீவனின் மூலம் மண்டோதரிக்குப் பிறந்து, ஜனகனின் பூமியில் விடப்பட்ட சிசுவே அவள் என்று   தெரிவிக்கிறான். மண்டோதரியிடம் மகளைக் காண்பித்து, தாயையும் மகளையும் ஒன்றிணைத்த சந்தோஷத்தைத் தான் பார்த்து அனுபவித்தான் ராவணன் என்பது லதாவின் கதை. மிதிலா நகரத்தில் ராவணன், சீதையை முதல்முறை பார்த்த போதே, சீதையிடம் மண்டோதரியின் சாயல் இருப்பதைப் பார்த்து தந்தையின் பாசத்திற்கு ஆளானதாக கதையைத் தொடங்கிய லதா, காட்டில் ராமனைப் பாரத்த  சந்தர்பத்திலும், அருகிலே இருந்த சீதையிடம் மண்டோதரியின் சாயலைப் பார்த்து ஆச்சர்யப்பட்டதாகக் காட்டுகிறார். 

தன் நகரத்து நியாயத்தின்படி, சீதை தன் மகள் என்றுகூறி  ராமனிடம் திரும்பக் கொடுத்து விட்டால் இலங்கை நகரம் அழியாமல் காப்பாற்றப்படும் என்று விபீஷணன் கூறினாலும் ராவணன் கேட்கவில்லை. ராமனின் கையால் மரணமடைவது தனக்கு விருப்பமானது என்று அறிவித்து தன் குலத்தை உய்விப்பதற்காக, விபீஷணனிடம் நீ சென்று ராமனை சரணடை என்று ராவணனே அனுப்பியதாக கதையை நடத்தும் லதா, ராவணனை மிக உயர்ந்தவனாகக் காட்டுகிறார். 

அந்தரங்கத்தில் ராவணன் விஷ்ணு பக்தன் என்றும் ராமனைப் பார்த்து உய்வடைந்து ராமனின் கையால் மரணித்து மோட்சம் பெறவேண்டும் என்பது அவனுடைய விருப்பம் என்றும் காட்டி, அந்த பலனைப் பெறும்வரை ஜீவ சக்திகளை ஊதிப் பெரிதாக்கி நாவலில் கதையை நடத்தி வருகிறார் லதா. மோகன வம்சி நாவலில் ராதாவாகவே மாறிவிட்ட லதா, இதில் ராவணனாகவே மாறி விட்டாரோ என்று ஐயம் ஏற்படுகிறது. 

லதாவின் ராம பக்தி இந்த நாவலுடைய கருப் பொருளின் உள்ளோட்டம். ஜடாயு, சபரி, வாலி என்று ஒவ்வொருவரும் ராமனின் கையால் மரணித்து மோட்சம் அடைகிறார்கள் என்ற சூத்திரத்தை முன்னெடுத்துச் சென்று, ராவணனின் பக்கமாக கதையை நகர்த்தி முடிக்கிறார். 

பெண்ணை அன்னையாக தரிசிக்கும் மகனின் குணம், மகளாகப் பார்த்து அன்பு செலுத்தும் தந்தையும் வாத்சல்யம், இரண்டும் ராவணனிடம் நிரம்ப இருந்ததாக படிபடியாக நாவலின் தொடக்கம் முதல் நிரூபித்துக் கொண்டு வருகிறார் லதா. மனைவியிடம் அளவுக்கதிகமான பிரேமையும் தங்கையிடம் அதிகமான பாசமும் கொண்டிருந்த ராவணன், ராமனின்மேல் தன் தங்கைக்கு ஏற்பட்ட காதலை  கௌரவித்தான். பிராமணக் கன்னிகைக்கு க்ஷத்திரிய ஆணிடம் ஏற்படும் காதல் ஏற்கக் கூடியது அல்ல என்று மண்டோதரியும் வால்மீகியும் கூறியபோது அது பொருத்தமற்ற காரணம் என்று தெளிவாகக் கூறுகிறான். காதல், குலம் என்ன என்று தெரிந்து கொண்டு வருவதல்ல என்றும் அது சகஜமாக, தானாக ஏற்படும் உணர்ச்சி வேகம் என்றும் தன் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறான். 

ராவணன் ஒரு மனிதன். நல்லது கெட்டது இரண்டும் கலந்த மனிதன். பலம், பலவீனம் இரண்டும் கொண்ட மனிதன். எது பலவீனம் என்று அடையாளம் கண்டறிந்து அதிலிலிருந்து வெளிவருவதற்குப் போராடும் மனிதன். விவேகம் நிறைந்தவன். லதா ராணனை அவ்வாறு சித்திரிக்கவேண்டும் என்று இந்த நாவலை படைத்துள்ளார். 

உலகில் முந்நூறுக்கு மேலாக ராமாயணங்கள் உள்ளன என்பார்கள். அனேக ராமாயணங்கள் அந்த இதிகாசத்தில் இருக்கும் பாத்திரங்களின் மாறுபட்ட குணங்களை பலவித கோணங்களில் இருந்து வியாக்கியானம் செய்துள்ளன. அந்தப் புரிதலில் இருந்தே லதா இந்த நாவலை எழுதியுள்ளார். இருக்கும் பல ராமாயணங்களில் ‘பௌலஸ்த்யனின் பிரேம கதை’ என்ற நாவலும் ஒன்றாக இருக்கட்டும் என்று எண்ணுகிறார் ஆசிரியை. 

ராவணன் சீதையை அபகரித்தான். அவன் ஒரு காமுகன் என்ற பழியை அவன் மீது சுமத்தி இராமாயணம் என்ற காவியப் படைப்பு நடக்கிறது என்பது ராவணனை தொடக்கம் முதல் வேதனைப்படுத்தும் பிரச்சினை. சிவ வழிபாடு நடத்தும் நேரத்தில் இந்தப் பழி கொடுக்கும் பயம் குறித்துக் கூறி தனக்கு அருளும்படி சிவானியை வேண்டுகிறான். அப்போது அவள், “இந்த மகா யுகத்தின் நான்காம் பாதத்தில் ஐயாயிரத்து அறுநூற்று இருபது ஆண்டுகள் கடந்த பின்பு, என் நவ அம்சங்களில் ஒன்றான கனக துர்கா எழுந்தருளிய ஒரு க்ஷேத்திரத்தில் என் பெயர் கொண்ட ஒரு ஐஸ்வர்யப் பெண், சாஹித்திய உபாசனை செய்பவளாக உன் வரலாற்றை காலத்திற்கு ஏற்ப எழுதுவாள். எழுந்திரு” என்று கூறினாள் என்று எழுதுகிறார் லதா. 

மகாயுகத்தின் நான்காம் பாதம் கலியுகம். கனகதுர்கா கோயில் கொண்டுள்ள க்ஷேத்ரம் விஜயவாடா. அம்மனின் பெயர் கொண்ட ஐஸ்வர்யவதி மற்றும்  சாஹித்திய உபாசனை செய்பவர் தென்னேடி ஹேமலதா. 

நாவலின் இறுதியில் மற்றுமொரு சம்பவம். மண்டோதரிக்கும் ராமனுக்கும் இடையில் ஒரு உரையாடல். ராவணனுக்கு இருந்த பழியின் அச்சத்தை நீக்கிவிடும்படி மண்டோதரி கேட்டபோது, ராமன், வால்மீகி ராமாயணத்திலேயே அந்த விஷயம் மறைவாக உள்ளதென்றும், இல்லாவிட்டால் கலியுகத்தின் முதல் பாதத்தில் ஒரு சௌபாக்யவதியால் சிறிது நீக்கப்படும் என்றும் வரம் அளித்ததாக அந்த உரையாடலைக் கொண்டு தெரிகிறது. அந்த சௌபாக்கியவதி தென்னேடி ஹேமலதாவைத் தவிர வேறு யாரும் இல்லை. 

அவ்விதமாக லதா, பார்வதி தேவியின் கூற்றாகவும் ராமனின் கூற்றாகவும் பல யுகங்களுக்கு முன்பே, யாரும் மறுப்பதற்கு இடமில்லாதபடி தெய்வ சங்கல்பமாக இந்த நாவலின் படைப்பு நடந்தது என்று கூறி பௌராணிக திருப்பம் அளித்துள்ளார். கவிஞர்கள் மட்டுமல்ல, நாவல் எழுத்தாளர்களும் கூட எதேச்சேதிகாரிகள் போலிருக்கிறது.

அடுத்து சுவர்ண ஸீதா என்ற விசித்திரமான கதையைப் பார்ப்போம். 

— ௦௦௦௦ —-

Series Navigation<< இது துளசிவனம் என்ற நாவல்ஸ்வர்ண சீதா என்ற நாவல் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.