
வாழ்வெனும்..
பூவிதழ்கள் வழிகாட்ட
மிதந்து போகும் ஜலதீபம்
மூச்சிழந்த மரத்துண்டு
அலையின் போக்கில் தள்ளாடும்
பாறைகள் தடுக்கித் தடம் மாறும்.
பகலில் இரவில் வேனில் குளிரில்
படிகளில் இறங்கி எந்நேரம்
பாபம் கழுவும்
பெருங்கூட்டம்.
அனலில் பனியோ மழையின் வரமோ
யாரும் அறியா இதன் மூலம்
வான்விட்டிறங்கி வெகுநாளாய்
புரண்டு போகும் பிரம்மாண்டம்.
இதுதான் வாழ்வென அறியாமல்
யாரோ காட்டிய வழியில் போய்
திகைப்பூண்டின் மேல் கால் வைத்து
திரும்பி வரவும் தெரியாமல்
எல்லாம் தொலைத்து
எதையோ சேர்த்துக்
கேள்விகள் தேடி வரும் நாளில்
மயங்கி நின்று கால்நனைக்க
கணநேரத்தில் கண்மூடி
தானைக் கரைக்கும்
பெருங்கருணைப் பேராறு.
தவழும் பூ
நேற்றைய கனவில்
அம்மா வந்தாள்.
மங்கலான அகல் வெளிச்சத்தில்
திருப்புகழ் படித்துக் கொண்டிருந்தாள்..
காலனெனை அணுகாமல் உனதிரு
காலில் வழிபட அருள்வாயே
எங்கே போனாய் இவ்வளவு நேரம்?
கேட்டுவிட்டு படிக்கலானாள்..
புகையும் அனலும் மண்டி மேலெழ
அம்மா கனவில் நானா
என் கனவில் அம்மாவா?
இதையும்
யார் கனவில் யார் கேட்பது?
உள்ளல்
சுவரில் ஒலிக்கும் ரீங்காரம்
தேடினும் காணா சுவர்க்கோழி
யாரோ இட்ட தன்பெயரை
எதற்கென எண்ணிக் கலையாமல்
சப்தமெழுப்பும் செயல் ஒன்றை
கடமையாய்ப்
பயிலும்
த்யானம் போல்
இறையின் இருப்பு புரியாது
உணரும் உணரா தருணமிது
வருத்தம் சோகம் கவலையென
வாழ்வின் சுவரில் ரீங்காரம்
சுவரைக் கடக்கும் நேரத்தில்
புலன்கள் குவித்துப் பார்த்தாலும்
அகல்வதும் உழல்வதும் தேடலது
அவரவர் அகந்தையின்
அனுபவம் போல்
ஒலியில் ஒளியும் மாயமான்
வேட்டை ஒன்றே விளையாட்டு
வாழ்வை நகர்த்தும் சிறுகூத்து
மயங்கி நின்று கால்நனைக்க
கணநேரத்தில் கண்மூடி
தானைக் கரைக்கும்
பெருங்கருணைப் பேராறு.——————————அருமையான முடிவு..
மிக்க நன்றி ஐயா..