பாப்பாக்காவும் பிரசாந்த் சினிமாவும் 

“ஐயோ……யம்மாவே….”

“அடீ ….பாதகத்தி ……”

திசைக்கொன்றாய் பறந்தன மனித புலம்பல்கள். அத்தனை  கேவல்களுக்கும் ஒரே பாஷையில் ஒலித்தன, “பாப்பா தற்கொலை செய்து கொண்டாள்”.

அன்றைய பொழுது அப்படியொரு ஓலத்துடன் தான் விடிந்தது. தெரு சனங்கள் எல்லாம் ஈசல் புற்றை களைத்து விட்டால் போல அழுது அரட்டியபடி குமுகுமுவென  குருமூர்த்தி வாத்தியார் வீட்டு வாசலை மொய்த்திருந்தனர்.

திண்ணை ஓடுகள் சரிய வீட்டு கூரையேறி உத்தரத்தில் உயிரற்று ஆடி கொண்டிருந்த பாப்பாக்காவை பார்த்து  தலை குப்புற  விழுந்த சண்முகம் இன்னமும் மூர்ச்சை அற்று கிடந்தான். தண்ணீர் தெளித்து எழுப்பிய போதும் அவன் கண்களை உருட்டி உருட்டி எதையோ சொல்ல வந்தானொழிய பேச்சு வரவில்லை. “க்கா ..பப் ……..க்கா..”, என்று செருமி கொண்டேயிருந்தான் கைகளை கழுத்தில் வைத்தபடி. எதையோ சைகைகள் காட்டியபடி.

கம்பௌண்டர் தான் முதலில் கதவை உடைத்தது. அரக்க பறக்க உள்ளே புகுந்த  மணியண்ணன் போன சுருக்குக்கு ஓவென அலறி கொண்டே தெரு பக்கம் இறங்கி ஓடிற்று. இடுப்பு லுங்கியை அவிழ்த்து வாத்தியார் வீட்டு வாசலில் வீசிவிட்டு. 

மணியண்ணன் லுங்கி கூட  கட்டும் என்பதை நான் அன்று தான் அறிந்து கொண்டேன். அண்ணன் எப்போதும் பேகிஸ் பேண்ட் இன் சர்ட்டில் டிப் டாப்பாக தான் இருக்கும். முகமுழுக்க பவுடர் அப்பிக்கொண்டு வெள்ளென்று அத்தர் வாசத்துடன். அந்த அண்ணன் தான் இப்படி கோட்டுவாய் தடத்துடன் அம்மணக்கமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

“ஐயோ”, என்று தலையில் அடித்து கொண்டு அலறியபடி மண்ணை வாரி வாரி இறைத்தது. தும் தும்மென்று அடி வயிற்றில் அடித்து கொண்ட போது, அண்ணனின் குறி துள்ளி துள்ளி குதித்ததை நான் சலனமற்று பார்த்து கொண்டே நின்றேன்.   

அரை அம்மணமாக ஓடிய அண்ணனை மடக்கி பிடித்து தெருக்காரர்கள் வம்புடியாக இடுப்பில் சுற்றி விட்ட துண்டை கிழித்து எறிந்தது.  அடக்க முடியாத வகையில் திமிறி கொண்டிருந்தது. கட்டை குரலில் “ஹ்ம். ..ஹ்ம்ம்..” மென்று முனகி கொண்டே பெருசு பெருசா மூச்சு விட்டது.  

திடீரென்று எல்லோரையும் மீறிக்கொண்டு ஓடியது. அந்த சம்பவத்திற்கு பிறகு முன் தோல் பிரியாத அண்ணனின் ஆண் குறி அவ்வப்போது கனவுகளில் வந்து என்னை துக்கத்தில் ஆழ்த்தும். 

பெருமாண்டி சுடுகாட்டில் இடுப்பு வேட்டி இல்லாமல் அரை குறையாக அண்ணன் மல்லாந்து  கிடந்ததாக சொல்லி கம்பௌண்டர் மாமா ஒருநாள் நிறை போதையில் எங்களிடம் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டார். அதன் பிறகு அண்ணன் வெறும் நினைவுகளாக மட்டும் எனக்குள் தங்கிவிட்டார். 

“பரிச்சையில கோட்டை விட்டதுக்கா இப்படி… பண்ணிக்கும் ஒரு பொம்பளப்பிள்ளே …”, இது “ஜி ஒரு கோல்டு பில்டர் ஜி” என்று தாத்தா கடையில்  ஸ்டைலாக சிகரெட்டு வாங்கும் ஹிந்தி பண்டிட் ஒருத்தர். ஜி என்ற சத்தத்தை எதிர்கொள்ளும் போதெல்லாம் தாத்தா அவரை ஒருமாதிரியாக பார்ப்பார் தலையை சொரிந்து கொண்டே.  

“அட அதெல்லாம் ஒண்ணுமில்லைய்யா…எல்லாம் காதல் விவகாரம்யா….”, இது யாரோ.

“அதப்பத்தி பேசாதீங்க. , லவ்வு பண்றதுக்கு வேற பயலுவலா தெருவுல இல்ல, போயும் போயும் அந்த பயல போயா லவ்வு பண்ணனும் … “, இது குருமூர்த்தி வாத்தியாரின் தூரத்து உறவுக்காரரின் கோவ குரல்.

“சினிமாவுக்கு விட்டுட்டு போய்ட்டா உசுர விட்டுறதா…”, இது தெரு சனம் ஒன்று.

“சாவுற வயசா இது… “. தெரு சனம் இரண்டு.

“சரி விடுங்கய்யா, ஆக வேண்டியதை பாருங்கய்யா… “, இது மூன்றாவது.

“டேய் ஓடி போய் கவுன்சிலர் அண்ணனை கூட்டியாடா … “, இது அந்த வரிசையில் எண்ணிக்கையை விட்ட ஒரு ஏவல் குரல்.

“அதே  தொடாதேப்பா…போலீஸ் கேஸ் ஆயிடும் … “, விவரமான குரலொன்று.

“யய்யா… அந்த குழந்தையை முதல்ல தூளியிலுந்து இறக்குங்கப்பா, அதுக்கு மேலுக்கு ஏதாச்சும் துணிய போத்துங்கய்யா …”, அழுது கொண்டே இளகியது மில்லுவீட்டுக்கார கிழவியின் குரல்!

நாளையிலிருந்து நான் மீண்டும் மீனா மிஸ் டியூசனுக்கு போகவேண்டி வரும். பாப்பாக்கா செத்து போய்விட்டாள். அப்படி தான் எங்களுக்கு சொல்லபட்டது. ஆனால் பாப்பாக்கா தற்கொலை செய்து கொண்டு இறந்து போனாள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள இன்னும் காலம் இருந்தது.  

சாயுங்காலம் அடிபம்பில் வரும் நல்ல தண்ணியை குடம் குடமாக அடித்து நிரப்பி வைத்து விட்டு, காரணத்திற்கு அல்லது காரணமேயில்லாததற்கு வீட்டில் இருக்கும் எல்லாரிடமும் ஏச்சு வாங்கிக்கொண்டு, அழுகையை அழுத்தி கொண்டே வந்தமரும் பாப்பாக்காவே தான் செத்து போய்விட்டாள். 

நேற்றும்  கூட அக்கா அப்படியே தான் இருந்தாள். ஈரம் சொட்ட சொட்ட உட்கார்ந்திருந்தாள் . கழுவிய முகத்தை துடைப்பது ஏனோ அவளுக்கு பிடிக்காது. பொட்டு வைக்காத ஈரம் உதிரும் அந்த முகத்தில் சாவின் சாயல் கொஞ்சமேனும் ஒட்டியிருக்கவில்லை 

“நாளெக்கி வரும்போ வீட்டு பாடெல்லாம் முடிச்சிட்டு தான் வரனும் . நாளைக்கும்  பீஸ் கொடுக்காதவங்களை வெளிய நிக்க வச்சுருவேன் பாத்துக்கோ கண்டிசனா சொல்லிபுட்டேன் ஆமா” வென்று எங்களிடம் கறார் காட்டும் பாப்பாப்பாவின் குரல் அங்கே தான் எங்கேனும் மிதந்து கொண்டிருக்க வேண்டும். அதனை உணர முடிந்ததே தவிர ஓசை  காதில் விழவில்லை.  ஆனால் எச்சில் ஒழுகும் வாய் அசைந்தது போல எனக்கு தோன்றிற்று. அக்காவின் கற்றையான கூந்தல் மட்டும் காற்றில் அசைந்து கொண்டிருந்தது எதையோ சொல்லிக்கொண்டு.

சுற்றி நின்ற வேட்டி சேலைகளுக்குள் புகுந்து எக்கி பார்த்தேன்.பாப்பாக்கா உத்தரத்தில் ஆடிக்கொண்டிருந்தாள், பரிதாபமாக.

கழுத்தை சுருக்கும்  போது அக்கா ரொம்பவே போராடியிருப்பாள் போல கால்களின் உதறலில்  இடுப்பு துணி நழுவியிருந்தது முற்றிலுமாக.

மேல் சட்டை தூக்கி கொண்டு அவளின் சின்ன முலைகள் வெளிப்பட்டிருந்தது. அதை பற்றி அக்கா அலட்டிக்கொண்டது போல தெரியவில்லை. சலனமற்று தொங்கி கொண்டிருந்தாள். எனக்கு ஊஞ்சலில் ஆடும் அக்காவின் துள்ளலான முகம் சட்டென நினைவில் பளிச்சிட்டு மறைந்தது. 

அன்றொருநாள் டியூஷனில் வழித்து கொண்டு உட்கார்ந்திருந்த அக்காவின் கால்களுக்கு இடையில் கொச கொசவென மண்டியிருந்த மயிர்களை இன்றும்  பார்க்கிறேன். “அக்கா என்ன அங்க ஒரே முடியா இருக்கு”,  கேட்க தவறிய ஒரு கேள்வி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. காலத்தில் அப்படியே உறைந்து போய்.  

முழியை உருட்டி உருட்டி எங்களை மிரட்டும் அக்காவின் பெரிய பெரிய கண்கள் இரண்டும் இப்பொழுது வெளியே வந்து கிடந்தது. சிவந்து. கோவைப்பழம் போல. மூக்கிலிருந்து கோழையாக சளி வழிந்திருந்தது. கன்னங்களில் உறைந்த கண்ணீரின் தடம் கழுத்தை கடந்து நீண்டது. 

நாக்கு நுனியால் மூக்கை தொடும் லாவகம் அந்த சினிமாவின் நாயகிக்கு முன்னமே அக்காவுக்கு வாய்த்திருந்தது. அந்த நாக்கு தான், அதே நாக்கு தான் இப்பொழுது எச்சில் ஒழுக கழுத்து வரையில் நீண்டிருந்தது பேச்சாயி போல. மூத்திரம் கால்களில் வழிந்து திட்டு திட்டாக  தரையில் சிந்தியிருந்தது. நாற்றம் எடுத்தது. வாத்தியார் வீட்டில் ஏழு பிள்ளைகள் இருந்தாலும் பாப்பா தான்யா அழகு மம்முதி என்று  தெருவே அள்ளி வைத்து கொஞ்சிய அந்த அழகு முகம் கோரமாக மாறியிருந்தது.  

அக்காவின் சில்லிட்டு துவண்ட கால்களை பற்றி கொண்டு நான் அழுதது எனக்கே ஏன் என்று புரிய வில்லை. நேரம் ஏற  இன்னவென்று அறிந்திராத ஒரு மொச்சை வாடை வீடெங்கும் பரவ தொடங்கிற்று. 

கோவில் நடையை சாத்த சொல்லி மெய்க்காவலுக்கு சேதி சொல்லி அனுப்பப்பட்டது. அக்காவிடம் பிரேட்டுக்கு வரும் பிள்ளைகளின் அப்பாமார்கள் மேலுக்கு போர்த்திய துண்டோடு வந்துவிட்டிருந்தனர். அவர்கள் அக்காவிற்காக மட்டும் தான் அங்கு வந்தார்கள் என்று நான் நம்பவில்லை.  

“இன்னைக்கி லீவுக்கு சொல்லிட வேண்டியது தான்…”

“ரெண்டு நாளில் இன்ஸ்பெக்ஷன் இருக்கு. கலெக்ட்ரேட்டிலிருந்து பெரிய பெரிய மனுசங்க எல்லாம் வருவாங்க  நான் இல்லனா அவ்வளவு தான்…”

“நல்ல அழகா பாடம் சொல்லி கொண்டிருந்த புள்ள… இனி அடுத்து யாருன்னு தேடி பிடிக்கணும்…”

“நேத்திக்கு கூட கடைத்தெருவுல வச்சி பார்த்தேன்…” 

“பேப்பர்ல என்ன சேதி “

அவர்கள் ஆளாளுக்கு வழக்களந்து கொண்டிருந்தார்கள், வாத்தியார் வீட்டிற்க்குள் பார்வையை செலுத்தியபடி.

சங்கரப்பாதான் அக்காவை உத்தரத்திலிருந்து இறக்கினார் அக்காவின் சின்னக் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த புடவையை அரிவாள்மனை கொண்டு அரிந்து. அவரின் கைகள் அக்காவின் கக்கத்தில் இருந்தது என்னை கோபமூட்டியது. கயிற்று கட்டிலில் அக்காவின் உடல் கிடத்தப்பட்டது. எல்லோரும் அக்காவை சுற்றி கொண்டு அழுதார்கள். சண்முகம் இன்னமும் தெளிவில்லாமல் எல்லோரையும் குறுகுறுத்தபடி இருந்தான். அவனை பார்க்கவே பயமாக இருந்தது. அவன் உடல் சன்னமாக நடுங்கி கொண்டேயிருந்தது. தீடீரென்று வாயிலெடுத்தான். “க்கா …க்கா” என்றான். விசும்பி கொண்டே மீண்டும் சுரத்தையின்றி மயக்கமானான். 

தூக்கு துணி கொல்லை பக்கத்தில் வைத்து எரியூட்டப்பட்டது. “அதை எடுத்துட்டு போயி சிமிலி எண்ணெய்யை ஊத்தி எறி,…”, தெரு நாட்டமைக்காரரின் குரலுக்கு பொசுங்கிய அது அக்கா எதையோ அழுத்தி கொண்டு டியூஷனில் உட்கார்ந்திருப்பதை போல கறுவியது . 

கட்டிலில் கிடந்த அக்காவை சுற்றி மற்ற அக்காமார்கள் எல்லோரும் அழுது அரற்றி கொண்டிருந்தார்கள். தெரு சனமெல்லாம் உச்சு கொட்டினார்கள். கை வச்ச முண்டா பனியனுடன் குருமூர்த்தி வாத்தியார் தெரு மண்ணில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். அவர் உடல் குலுங்குவதை நாங்கள் பார்த்தோம். அழுதார் போல. 

நான் மட்டும் அக்கா தூங்குவதாக நினைத்து கொண்டேன். ஆனால் உத்தரத்தில்  கோணல் மாணலாக அரியப்பட்ட மிச்ச துணி அக்காவின் சாவை காற்றுக்கு சொல்லிற்று சன்னமாக. 

குருமூர்த்தி வாத்தியாருக்கு தெருவுக்குள் இரண்டு பட்ட பெயர்கள் உண்டு. அதில் ஒன்று எல்லோருக்கும் பரிச்சயமானது. ‘சிலம்பம்  வாத்தியார்’ சுருக்கமாக ‘வாத்தியார்’. அவர் காதுப்பட சொல்லலாம். குற்றமில்லை. அவரும் கோவம் கொள்ளமாட்டார். ஆனால் அந்த இரண்டாவது பெயர் இருக்கே  அது பொல்லாதது!

அதை அவர் முன்னே யாரேனும் சொன்னால் அவ்வளவு தான் வாத்தியார் சிலம்பத்தால் வீடு கட்ட ஆரம்பித்துவிடுவார். பிறகு சொன்னவனுக்கு மாவு கட்டு கட்ட வேண்டி வரும் உடம்பெல்லாம். ஆனாலும் எல்லோரும் அவரை அப்படி சொல்லி புறம் பேசுவது அவருக்கும் தெரிந்தேயிருந்தது.  

அப்படி ஒன்றும் அது வாத்தியாருக்கென்று சூட்டப்பட்ட பிரத்தேகமான பெயரென்று. ஊர் தெருவில் பெரும் புள்ளிகளுக்கு உள்ளதுதான். அதான், ரெண்டு பொண்டாட்டிக்காரன். 

ஆம். வாத்தியாருக்கு ரெண்டு தாரம். மூத்தவள் இருக்கவே ரெண்டாவதாக வந்தவர்தான் பாப்பாக்காவின் அம்மாவான மோகனா டீச்சர். வாத்தியார் சிலம்ப போட்டிக்கு வெளியூர் சென்றிருந்த போது கட்டிக்கொண்டு வந்தவர் என்று தெருவுக்குள் பேச்சுண்டு. அதன் பிறகு அவர் பள்ளிக்கூடம் போவதில்லை. அல்லது வாத்தியார் அவரை அனுப்பவில்லை. இருவருக்கும் கிட்டத்தட்ட பதினாறு பதினேழு வயது வித்தியாசம். பாப்பாக்காவின் அழகு எங்கிருந்து வந்திருக்கும் என்று டீச்சரை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். டீச்சர் கொள்ளை அழகி. பாப்பாக்கா கொள்ளை கொல்லும் அழகி! 

சாமானியமாக டீச்சரை பார்ப்பது அரிது. வீட்டை விட்டு பெரும்பாலும் வெளியே வருவதில்லை. அல்லது வாத்தியார் அவரை வெளியே வர அனுமதித்ததில்லை. நல்ல காரியம், எளவு, கோவில் விசேஷம், தெரு தேவை  என்றான சமயங்களில் தான் மோகனா டீச்சரை பார்க்க முடியும். சிக்கென்று வெளியே வருவார் தெருவில் அவரின் பாதம் பாவுகிறதா என்பதை விளங்கிக்கொள்ள முடியாமல் அவரின் சேலை மண்ணில் புரளும். சட்டென மறைந்துவிடுவார். பின்னர் கனவுகளில் மட்டுமே வருவார். அந்த பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்திருந்தது. நான் உள்பட. 

பிள்ளையார் கோவில் திருவிழாவில் உற்சவமூர்த்தி உலாவின் போது  வாத்தியார் வீட்டு வாசல் வரை மட்டும் வந்து திரும்பும் பக்தியை புரிந்து கொள்ள எனக்கெல்லாம் பல காலம் பிடித்தது. அப்படி திரும்பும் பெரும்பான்மையர்களில் எங்கள் அம்மாமார்களும் அடங்குவர். டீச்சரின் கொண்டைக்கு ஏக கிராக்கி இருந்தது தெருவில். வாணிஸ்ரீ பாணி கொண்டை அது. சிலர் டீச்சரை வாணிஸ்ரீ டீச்சர் என்று கூட அழைப்பதுமுண்டு. டீச்சரை தெருவே சுற்றி வருவதை வாத்தியார் அறிந்தேயிருந்தார். இவனுக்கு  இப்படியொரு மனுஷியா என்று எல்லோரையும் ஏங்க செய்வதில் வாத்தியாரின் ஆண்மை திருப்தி கொண்டது. இந்த கிழவன் எப்படி இந்த பொண்ண வச்சி பெண்டாள போறான் என்ற கேலி சொல்லுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக வரிசையாக பெத்து தள்ளிக்கொண்டேயிருந்தார் மோகனா எனும் வாணிஸ்ரீ  டீச்சர். இருந்தும்  அவரின் கொண்டையின் பருமன் குறையவேயில்லை. 

தேங்காய் வாழைப்பழம் வெற்றிலை பாக்கு  கதம்பம் பூ சுருள் வைத்த பித்தளை தட்டத்தை அவர் வழிபாட்டுக்கு கையேந்தி நிற்பதை பார்ப்பதற்கு முருகன் கோவில் சன்னதியில் நிற்கும் பாவை சிற்பம் போல இருப்பார். ஆம் என்னை பூசிய மினுமினுப்புடன் ஒயிலாக நிற்கும் பாவை போன்று. 

மோகனா டீச்சரும் அப்படியொரு நிறம். நாவல் பழம் போல பளபள வென்று. பெயருக்கு ஏற்ப மோஹினி போல இருப்பார். ஒருவேளை என்னை பாப்பாக்காவிடம் ப்ரேட்டுக்கு (தனி டியூசன்) பிடிவாதமாக அனுப்பியது கூட அப்பாவுக்கு டீச்சர் மீது ஏதோ ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதை பின்னாட்களில் நானாக யூகித்து புரிந்து கொண்டேன்.

ஊர் தெரு குளத்தங்கரை பஞ்சாயத்து என்றோ பத்திரிக்கை வைக்கவோ வேறு ஏதும் செய்தியோ யாராக இருப்பினும் திண்ணையில் வைத்தே அனுப்பிவிடுவார் வாத்தியார். யாருக்கும் வீட்டினுள்ளே வர அனுமதியில்லை. சின்ன பிள்ளைகள் என்பதால் நாங்கள் அவரின் வீட்டு அடுப்பங்கரை வரையில் சென்று விளையாடுவோம்.

வாத்தியார் தம்பதிக்கு ஆறு பெண்கள் ஒரு பையன். ஆறாவதாக வந்தவள்தான் இந்த பாப்பாக்கா. ஆறு பேரின் அழகையும் மொத்தமாக குத்தகை எடுத்து கொண்டு பிறந்தவள். வாத்தியாரின் முதல் மனைவிக்கு பிறந்த சுபாக்கா மசக்கை கொண்ட பருவத்தில் பிறந்தவள் பாப்பாக்கா. “பேரன் பேத்தி எடுக்குற வயசுல புள்ளை பெத்துக்குற போரான்ய்யா, நம்ம வாத்தியாரு”, என்று  தெருவுக்குள் கேலி கிண்டலுக்கு அவர் கண்டும் காணாதுமாக  இருந்தார்.  

ஒருவகையில் அவருக்கும் அந்த வயதில் அப்படி நிகழ்ந்ததை பற்றிய வெட்கமும்  பிடிங்கி தின்றிருக்க வேண்டும். இல்லையென்றால் டீச்சரை கூப்பிட்டு கொண்டு  வயிற்றில் இருக்கும் பாப்பாக்காவை கலைத்து விட வேண்டி பெரியாஸ்பத்திரிக்கு போவாரா மனுஷன். கெடு தள்ளிபோனதில் அவரால் அப்படி செய்ய முடியாமல் போனது. பாப்பாக்காவும் பிறந்தாள். அதற்கு பிறகும் ஒரு பையன் பிறந்ததும் அவன் எங்கள் கூட்டுக்காரன் ஆனதெல்லாம் பெரிய கதை. 

அவனுக்கு ஆறு ஒன்னு ஏழு அக்கா இருந்தும், எல்லோரும் மயில் தம்பி என்றே அழைத்தோம். மைதிலி அக்காவின் தம்பி என்பது மருவி மயில்தம்பி என்றானது. டீச்சர், பாப்பாக்கா என்றிருக்க இந்த மைதிலி அக்கா எங்கிருந்து வந்தாள் என்று தெரியவில்லை, ஒருவேளை மைதிலி அக்காவை விரும்பிய யாரோ ஒரு அண்ணன் அவனுக்கு அப்படியொரு அடையாள பெயர் தர அதுவே அவனது நிரந்தர பெயரானது. அவன் உண்மையான பெயர் முத்துக்குமாரசாமி. ஆனால் அவனை யாரும் அப்படி கூப்பிட்டு நான் கேட்டதில்லை. வீட்டில் கூட அவனை மயில்தம்பி என்றே எல்லோரும் அழைத்தார்கள். அதுவும் பாப்பாக்கா ஒரு கேலியோடு அவனை கூப்பிடும் போது மைதிலி அக்காவின் முகத்தை பார்க்க வேண்டும். உண்மையிலே மைதிலி அக்காவை விரும்பிய முகம் தெரியாத அந்த அண்ணனின் ரசனையை நினைத்து கொள்வேன். 

மயில்தம்பி சற்றேறக்குறைய பாப்பாக்காவின் ஆண் சாயல். அவன் முகத்தில் ஏழு பெண்களின் அழகு ததும்பி வழியும். அதெப்படி ஏழு. கணக்கு பிசகோ என்று எண்ண வேண்டியதில்லை, வாணிஸ்ரீ டீச்சரின் அழகையும் சேர்த்து கொண்டவன். மயில் தம்பியை தெருவே கொண்டாடுவதின் ரகசியமும் அது தான். முகத்தில்  வழியும் பெண்மை கலந்த அந்த  குழந்தையை எதிர் வீட்டு சர்தார் பாய் தன் வீட்டிலே வைத்துக்கொண்டார். ராவுக்கு மட்டும் தான் தன் வீடு. மற்ற நேரங்களில் எல்லாம் பாய் வீடு தான் கெதி. சோறு தண்ணி, உறக்கம் எல்லாமும் அங்கே தான். மயில் தம்பி இன்ன இடம் என்றில்லாமல் எல்லா இடங்களையும் புழங்கும் வகையில் இருந்தான். வெளிக்கு  கூட பாய் வீட்டு மொசைக்  பதித்த பீங்கான் கக்கூசில்தான். கொல்லை கடைசியில் கொசுக் கடியில் உட்கார வேண்டியதில்லை. சகடை கீச்சிட தேங்காய் நார் கயிறில் கைகள் அருவ கேணியிலிருந்து தண்ணீர் மொள்ள அவசியம் இல்லை. குழாயை திருகினால் சட சடவென தண்ணீர், ராஜ போக வாழ்வு.

ரம்ஜான் என்றால் மயில் தம்பிக்கும் சேர்த்தே தான் துணி எடுப்பார் சர்தார் பாய். தீபாவளி, பொங்கல் வந்து விட்டால் அதற்கு தனி, என்னவோ சுவீகாரம் எடுத்துக்கொண்டது போல 

பாய்க்கு மூன்று பெண்கள். மூன்று பேருமே பேரழகிகள். அந்த வகையில் எங்கள் தெரு சில நல்ல தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட தெரு. தெருவெங்கிலும் அழகிகள். குறிப்பாக வாத்தியார் வீட்டில் ஏழு பாய் வீட்டில் மூன்று. அது போக அம்புஜம் மாமி, கீதாக்கா, மீனா மிஸ் ,  பாக்கியம் என்று இன்னும் சில தேவதைகள் கூட எங்கள் தெருவில் உண்டு. அவர்கள் எல்லோரையும் பற்றி சொல்ல போனால், சிறுகதையாக அன்றி நாவலாக போய் முடியும் அபாயமிருக்கிறது. அந்த அழகிகளை பற்றி பிரிதொரு சமயத்தில் சந்திக்கலாம்.

அவர்கள் யார் யாரோ யார் யாரின் கனவுகளிலோ சஞ்சரித்து கொண்டிருந்தார்கள். யார் யாரோ யார் யாரின் கட்டில்களில் திறந்து கிடந்தார்கள். யார் யாரோ யார் யாரின் பிள்ளைகளுக்கு தாயாகியிருந்தார்கள். 

மயில்தம்பியிடம் பாய் வீட்டு அக்காக்களுக்காக கொடுத்தனப்பப்டும் பெரும்பாலான கடிதங்களை நானும் அவனும் பிரித்து படிப்போம் ரகசியமாக . அவைகளை படிக்கும் போது  ஏனோ எங்கள் உடலில் லேசான வெப்பம் பரவும். மழை பெய்து விட்ட பின்பு கிளம்பும் சூடு போல. எங்களை அறியாமலே குறிகள் விறைத்து கொள்ளும். அவன் என்னின்  நான் அவனின் குறியை அழுந்த பிடித்துக்கொள்வோம். 

நாள் முழுவதும் பாய் வீட்டிலேயே அக்காமார்களின் இள முலைகளின் அரவணைப்பில் கதகதப்பிலும் ஏறிய உஷ்ணத்தை தணித்துக்  கொள்ள எங்கள் வீட்டுக்கும் வரும் அவன் என்னை மிருகத்தனமாக கொல்லைப்புறத்துக்கு கொண்டு போய் டவுசரை அவிழ்த்துவிட்டு கட்டிக்கொள்வான். முத்தமிடுவான் அவன் உதடுகள் கொண்டு என் உடலையே எச்சில் படுத்துவான்.  என்ன செய்வது என்று தெரியாமலே நாங்கள் அம்மணமாக கட்டி கொண்டு கிடப்போம். அப்படியான தகிக்கும் வெப்பமான ஒரு மதிய வேளையில் அவன் “ரெஜினா: என்று முனக, நான் என்னை அறியாமல் “பாப்பாக்கா” என்று சொக்கிபோய் அவன் அடிவயிற்றில் முத்தமிட்டேன். 

என்னை உதறிக்கொண்டு எழுந்தான். முகத்தில் நங்கென்று குத்தினான். நீ எப்படி எங்க அக்கா பெயரை சொல்லலாம். சண்டையிட்டு கோவமாக கொஞ்ச நாளாக பேசாமல் இருந்தவன், என்னை கட்டிக்கொண்டு அழுதான். பாப்பாக்காவின் சாவில். எனக்கு அந்த சமயத்திலும் ஏனோ  விறைத்து கொண்டது. 

வாத்தியார் எங்களுக்கு சிலம்பம் சொல்லி தருவது தெருவில் யாருக்கும் பிடிக்கவில்லை. சின்ன பிள்ளைகளைகளுக்கு சண்டித்தனம் கத்து தருவதாக அவரின் மீது பஞ்சாயத்து வைக்கப்பட்டதை தெருவில் தனித்து விடப்பட்டதை அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.  ஆவணி மாத பிள்ளையார் கோவில் திருவிழாவில் உற்சவர் அவர் வாசலில் நிற்காது என்று தீப்பானது. அவரின் மண்டகப்படி பொதுவில் செய்யப்படும் என்றும் தெருச்சபை கூடி முடிவு செய்தது. 

அதையெல்லாம் சட்டை செய்யாது யாருக்கும் தெரியாமல் எங்களையெல்லாம் பிள்ளையார் கோவில் சந்துக்கு வர சொல்லி ரகசியமாக பாடம் எடுப்பார். அவரின் தயவில் சிலம்பத்தில் வணக்கம் வைக்க கற்று கொண்டோம்.  அதே பிள்ளையார் கோவில் சந்தில்தான் இப்போது மணி அண்ணனும் பாப்பாக்காவும் முத்தங்களை பரிமாறிக்கொண்டனர் எச்சிலும் வியர்வையுமாக.  

அந்த காட்சியை நான் மட்டுமே தான் பார்த்தேன் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் குருமூர்த்தி வாத்தியார் வீட்டு வாசலில் கூடி நின்றவர்கள் ரகசியமாகவும் ஏளனமாகவும் பேசி கொண்டதை கேட்ட பின்னர், நான் நினைத்தது தவறு என்று உணர்ந்து கொண்டேன்.

எங்கள் தெரு பிள்ளையார் கோவில் பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி ரொம்ப சக்தி வாய்ந்தவர். ஐஸ் பாய் விளையாட்டில் ஒளிந்து கொள்ளும் என்னை அவர் ஒருநாளும் காட்டிக் குடுத்தது கிடையாது. அன்றைக்கும் அந்த நம்பிக்கையில் தான்  ஒதுங்க போனேன். ஆனால் எனக்கு முன்னமே அங்கே பாப்பாக்காவும் அண்ணனும் ஒளிந்து கொண்டிருந்தனர். அந்த ரவ்வ இடத்தில் இரண்டு பேர் ஒளிந்து கொள்ளலாம் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அடுத்த முறை விளையாடும் போது அங்கே நானும் மயில்தம்பியும் ஒளிந்து கொள்ளலாம் என்று மனதுக்குள் நான் திட்டம் போட்டுக்கொண்டிருக்கும் நொடிகளில் ஒருவரை ஒருவர் விழுங்குவதை போல மணியண்ணனும் அக்காவும் மூர்க்கமாக  கவ்வி கொண்டிருந்தனர். அக்காவின் மேல் சட்டை ஒரு பக்கமாக ஒதுங்கி இருந்ததில் அவளின் கறுத்த மாரில் மெல்லிய கோடு தெரிந்தது. தலையெல்லாம் கலைந்து இருந்தது. அண்ணனின் கைகள் எங்கிருந்தன என்பதை நான் கவனிக்கவில்லை ஆனால் பாப்பாக்கா அண்ணனின் பங்க கிராப்பாய் அழுத்தமாக பிடித்திருந்தாள். அக்காவின் மூச்சு சத்தம் பிரகாரத்தின் அமைதியோடு சமர் செய்து கொண்டிருந்தது. அது அவள் அழுகையை அடித்தொண்டையில்  வைத்து புதைக்கும் போது எழும் ஓசையை ஒத்திருந்தது. செய்வறியாது திகைத்து நின்ற என்னை அக்காவின் கண்கள் தான் முதலில் கண்டது. அந்த கண்கள் பற்றி எரியும் சொக்கைபனையை போல இருந்தது அப்போது. கண்ணீரால் கலங்கியிருந்தது. ஆனால் அந்த கண்ணீர் அழுகைக்கானது அல்ல என்பது மட்டும் எனக்கு தெரிந்திருந்தது. நின்று நிறுத்தி விடும் நீண்ட மூச்சில் அவளின் மார்கள் ஏறி இறங்கி கொண்டிருந்தன. அந்த சமயத்தில் அக்கா காளியாய் உருமாறியிருந்தாள். அண்ணன் பதறியபடி நின்றார். பின்னர்  இருவரும் சாதாரணமாக இறங்கி ஆளுக்கொரு பக்கமாக நடந்தனர். எனக்கு கனவு போலிருந்தது. நொடிக்கும் குறைவான நேரத்தில் எல்லாமுமே முடிந்துவிட்டிருந்தது. 

கருவ  கொல்லையில் பாம்புகள் ரெண்டு பின்னி கொண்டு இருந்ததையும் பின்னர் தானாகவே நீர் போல நழுவி பிரிந்து சென்றதையும் குலை நடுங்க பார்த்த அனுபவமொன்று எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்தது. நான் அங்கேயே கொஞ்ச நேரம் நின்றேன். அன்றைக்கு நான் விளையாட்டிலிருந்து விலகி வந்து விட்டேன். எனக்கு இனிமேல் ஒளிய இடமேயில்லை என்று நொந்து கொண்டேன்.   

தீவிரமான பிரசாந்த் ரசிகையான அக்காவிற்கு பிரசாந்த் மாதிரியே அசடு வழியும் முகம் கொண்ட மணியண்ணன் மீது காதல் வந்ததில் வியப்பேதுமில்லை என்று இப்போது தோன்றுகிறது. அண்ணனின் ஹேர் ஸ்டைல் கூட அப்படியே பிரசாந்த் போலவே  இருக்கும். அதுவும் கல்லூரி வாசல் படம் வந்த போது வாத்தியார் வீட்டில் ஒரு பெரும் போரே வெடித்தது. அஜித்குமார் தான் அழகன் என்று சில அக்காக்களுக்கும் இல்லவே இல்லை பிரசாந்த் தான் அழகன் என்று பாப்பாக்காவும் விவாதிப்பார்கள், சண்டையிடுவார்கள், அடித்து கொள்வார்கள். ஒருவழியாக அஜித்குமார் பக்கமாக முள் சாயும். பாப்பாக்காவை தவிர்த்து  எல்லா அக்காமார்களும் ஒருபக்கமாக நிற்க, துணைக்கு நிற்க ஆளின்றி முழங்கால்களில் முகம் வைத்து பச்ச பிள்ளை போல குலுங்கி குலுங்கி அழும் பாப்பாக்கா. 

ஹேர் ஸ்டைல் மட்டுமன்றி மீசையும் அந்த அளவிலேயே தான். சல்லிசான பென்சில் கோடு போன்று. பேகிஸ் பேண்ட் மூன்று பட்டனை திறந்து விட்ட தொள தொளா  முழு கை டிசைன் சட்டை, உள்ளுக்குள் வெள்ளை நிற நெக் பனியன், கையில கோல்ட் வாட்ச். காலில் சாண்டக் என்று அதகள படுத்தும். மீனா மிஸ்ஸு க்கு பிறகு எங்கள் தெருவில் B.A. வரையில் படித்தது அண்ணன் தான். 

அக்காவிற்கு துணையாக பின்னர் அண்ணனும் பிரசாந்த் ரசிகரானார். அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை தான். கல்லூரி வாசல் பிரசாந்த் போலவே சடை வைத்து கொண்டது தான் ஆச்சர்யம். கேலி கிண்டலை பற்றி கவலை படாமல். குதிரை வால் போட்டு கொண்டு சுற்றி கொண்டிருந்தது மணியண்ணன். 

வாத்தியார் வீட்டின் வாசலில் நிற்கும் ஓங்கு தாங்கான முருங்கை மரத்தின் பொந்தில் தான் அவர்களின் காதல் சிறுக சிறுக வளர்ந்தது குருவி குஞ்சுகளோடு. துண்டு சீட்டு அதற்கு பதில் சீட்டு என்று இருவரும் மாறி மாறி குருவிகளை விட அந்த பொந்தை அதிகமாக பயன்படுத்தி கொண்டார்கள்.  எந்த கை உள்ளே வருகிறது, எந்த கை எடுக்கிறது என்பெதெல்லாம் முருங்கையும், பொந்தில் அடையும் குருவிகளுமே அறிந்த ரகசியம். கொஞ்ச நாட்களிலேயே குஞ்சுகள் வளர்ந்தன. தங்கள் திசை நோக்கி பறந்தன. 

வாசலில் குப்பை சேருவதாகவும் திண்ணை ஓட்டை கலைப்பதாகவும் சொல்லி வாத்தியார் மர  கிளைகளை வெட்ட ஆரம்பித்தார்.  துளிர்த்தது.  கத்தரித்தார். மீண்டும் துளிர்த்தது. வழியில்லாமல் வெட்டிச்சாய்த்தார். அவரின் வீட்டிற்கே அடையாளமாக இருந்த அந்த பெருமரம் சுவடேயில்லாமல் போனதை பற்றி அங்கே தங்கி சென்ற குருவிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. 

“டியூஷனெல்லாம் கிடையாது, அக்கா இனிமே பாடம் எடுக்கமாட்டா”, மோகனா டீச்சர் தன இயல்புக்கு மாறாக முகத்தை கடுமையாக வைத்து கொண்டு சொன்னபிறகு நாங்கள் அங்கு போவதில்லை. நான் மீனா மிஸ் டியூஷனில் சேர்க்கப்பட்டேன்.

அதன் பிறகு பாப்பாக்காவை வெளியிலோ, கடைத்தெருவிலோ, பிள்ளையார் கோவில் சந்திலோ நான் பார்வையேயில்லை. வாத்தியார் வீட்டையே சுற்றி வந்த மணியண்ணன் நிலைமை என்னவென்று தெரியவில்லை. எங்கோ ஓடி போய்விட்டதாக சொல்லிக்கொண்டார்கள். பைத்தியமாகிவிட்டதாகவும் சொன்னார்கள். சிலர் அண்ணன் செத்து போய்விட்டதாக கூட சொன்னார்கள். 

ரொம்ப்ப நாட்களுக்கு பிறகு மீண்டும் பாப்பாக்கா டியூசன் எடுக்க தொடங்கியிருந்தாள். நான் மட்டும் அடம்பிடித்து அக்காவிடம் சேர்ந்தேன். அந்த முகத்தில் பழைய அக்காவை காண கிடைக்கவில்லை. உம்மென்று இறுக்கமாக இருப்பாள். பாடம் தாண்டி ஒரு வார்த்தை பேச மாட்டாள்.  அக்காவின்  முகம் முன்பு போலல்லாமல் வாடி கன்னம் ஒடுங்கி கருவளையம் பூத்து பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாள் . 

அன்றொருநாள் விஜயா தியேட்டரில் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருந்த பிரசாந்த் குடுத்த ஜீன்ஸ் படத்தை பார்க்க வேண்டி கெஞ்சி கேட்டாள். ஒட்டாரம் செய்தாள். அழுது புலம்பினாள். “எத்தனை நாளைக்கு இன்னும் இப்படியே பைத்தியம் போல இருக்கனும்”, செருமிக்கொண்டே கேட்டாள் ஆனால் சத்தமாக. 

வீட்டில் யாரும் அவளை கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஜீன்ஸ் படத்தை பார்க்க அக்கா அடம் பிடித்ததற்கும் அவர்கள் ஒரே குரலாக மறுத்ததற்கும் காரணம் ஒன்றிருந்தது. அது என்னவென்று எல்லோருக்கும் தெரிந்தேயிருந்தது. 

அழுத்தமாக கன்னத்தை துடைத்து கொண்டு டியூஷனில் வந்தமர்ந்தாள். அழுகையை அழுத்திக் கொள்ளும் அக்காவை நான் மீண்டும் கண்ணுற கிடைத்தது. 

“பியர்லெஸ்ஸில் அஜித்குமார் குடுத்த அவள் வருவாளா படம் போட்டிருக்கான் போவோம்  வரியா, அன்னைக்கு ஏதோ சினிமாவுக்கு போகணும்ன்னியே”,  என்றதற்கு ஒன்றும் பேசாமல், டியூசனுக்கு வந்தாள். பாடம் எடுத்தாள். 

ட்யூசன் முடித்து கிளம்பும் சமயம், என்னை மட்டும் இருத்தி வைத்து கொண்டு ஒன்றுமே பேசாமல் அக்கா வெறித்து பார்த்து கொண்டிருந்தது ஏன் என்று எனக்கு இன்றுவரையில் புரியவேயில்லை.

காலங்கள் சில கடந்த பின்னும், “தாங்க் யூ. க்கா” பாப்பாக்காவிடம் கடைசியாக நான் சொல்லிய தாங்க் யூ எங்கேனும் இருக்கிறதா என்று நான் தேடும் சமயங்களிலெல்லாம் ரோட்டில் சிதறி கிடந்த ஜாமந்தி பூக்களை அரை நிர்வாணமாக சேகரித்து கொண்டிருப்பார் மணியண்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.