நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகம்

1972 நவம்பர் மாதம் நாஞ்சில் மண்ணிலிருந்து எங்கள் மும்பை மண்ணுக்கு வருகிறான் ஓர் இளைஞன். மும்பைக்கு தினம் தினம் கையில் மஞ்சள் பையோடும் கண்களில் கனவுகளோடும் தாதரில் வந்திறங்கிய இளைஞர்களில் ஒருவனாகவே அவனையும் எங்கள் மும்பை அணைத்துக் கொள்கிறது. 

1972 முதல் 1989 ஆகஸ்டு வரை தன் பணியின் நிமித்தம் மும்பையில் வாழ்ந்த அந்த இளைஞன் தன் நாஞ்சில் மண்ணின் வாழ்க்கையை தன் மனிதர்களை தன் மண்ணை இழந்துப்போன தொட்டிச்செடியாய் தன்னை உணர்கிறான். அங்கிருந்துதான் அவன் தலைகீழ் விகிதங்கள் ஆரம்பமாகிறது. அன்று ஆரம்பித்த அந்தப் பயணம் அந்த இளைஞனின் வாழ்க்கையில் மட்டுமல்ல, மும்பை தமிழ் இலக்கிய படைப்புலகில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திலும் மிக முக்கியமான ஆரம்பமாக இருந்ததை இன்று அதே மும்பை மண்ணிலிருந்து புரட்டிப்பார்க்கிறபோது ஏற்படும் மகிழ்ச்சி பெருமிதம் இன்னதென்று சொல்லமுடியாததொரு மன நெகிழ்ச்சியுடன் நானும் என்னோடு என் மும்பையும்.

இதே இந்த மும்பை மண்ணில் எழுத ஆரம்பித்தக் காலக்கட்டத்தில் தீபம் இதழில் வெளியான அவர் சிறுகதையை வாசித்துவிட்டு ‘கழிவறைக் காகிதம்’

அதாவது டிஷ்யு பேப்பர் என்று விமர்சித்த காலக்கட்டம் இருந்தது 

என்பதை அவர் மறந்திருக்க முடியாது. எங்களாலும் மறக்க முடியவில்லை.

இன்று அதே மும்பை மண்ணிலிருந்துதான் அவருடைய எழுத்துகளைப் பற்றி 

காத்திரமாக பேசுகிறோம், விமர்ச்சிக்கிறோம், கொண்டாடுகிறோம்.

தலைகீழ் விகிதங்கள் ..  நாஞ்சிலாரின் முதல் புனைவுலகம் மாறிவிட்டது.

இன்று கும்பமுனியாகி சுயம் உரித்து சுயம் தேடுகிறது. மும்பையும் மாறிவிட்டது.

தலைகீழ் விகிதங்களில் உங்களை வாசித்த  நாங்களும் உங்கள் கைப்பிடித்து

நடந்து வந்திருக்கிருக்கிறோம். எங்களுக்கான எங்கள் வாழ்க்கையை கண்டடையும் எங்கள் எழுத்துப் பயணத்தில் நீங்களே எங்கள் முன்னத்தி ஏர். 

நாஞ்சில் நாடனின் புனைவுகளில் பெண்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருக்கிறேன். சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன் 2012ல் மும்பை தமிழ்ச் சங்கத்தில் நாஞ்சில் நாடனுக்கு நடந்த பாராட்டுவிழாவில் நாஞ்சில் நாடனின் படைப்புலகில் கண்ட பசித்தவனின் பயணத்தைப் பேசி இருக்கிறேன்.  கொரொனா காலத்தில் மும்பை தமிழ்க் கூடலில் மும்பை படைப்புலகம் என்ற தொடர் சொற்பொழிவில் நாஞ்சில் நாடன் புனைவுலகத்தையும் ஏற்கனவே நான் பேசி எழுதி பதிவு செய்திருக்கிறேன்.

மீண்டும் நாஞ்சில் நாடன் சிறுகதைகளை மீள்வாசிப்பு செய்கிறபோது

அவர் படைப்புலகம்  என் முன்னால் ஒரு மாபெரும் திரைச்சீலையில் வரையப்பட்ட சித்திரமாக விரிந்திருக்கிறது. அச்சித்திரத்தில் அவர் தீட்டி இருக்கும் வண்ணங்கள் அந்த வண்ணங்களுக்கான அர்தங்கள்  நடமாடும் மனிதர்கள் அவர்களின் உரையாடல்கள் எல்லாம் எல்லாமே உயிர்ப்போடு எழுந்து நின்று உரையாட ஆரம்பிக்கின்றன. அக்கதைமாந்தர்கள் நாஞ்சிலுக்கு மட்டுமல்ல, எனக்கும் என் மும்பைக்கும்   நன்கு அறிமுகமானவர்கள் என்ற வகையில் கதையில் எழதப்பட்டவைகளையும் தாண்டி இன்னொரு குறுக்குச்சால் வழியாக ஓடவும் வைத்தது  என்பது இன்னொரு அனுபவம். 

நாஞ்சில் நாடனின் ஒட்டுமொத்த சிறுகதைகளையும் வாசித்த அனுபவத்தில் அக்கதைகளை (என் வசதிக்காக ) மூன்றாக வகைப்பகுத்தி கொள்ள முடியும்

  1. நாஞ்சில் சனங்களின் கதை
  2. மும்பை கதைகள்
  3. சுய தரிசனங்கள்.

இந்த 3 வகைப்பாடுகளும் கதைக்கரு,  கதை மாந்தர்கள் மற்றும் கதைக்களம் சார்ந்தவை. ஆனால் இந்த ஒட்டுமொத்த படைப்புகளிலும் அடி நாதமாக இருப்பது பசித்தவனின் பயணமும் மனித நேயமும் மட்டும் தான். 

நாஞ்சில் நாடன் கதைகளை ஒரு சுவர் கடிகாரத்தின் பெண்டுலமாக உருவகிக்கும் எம்.கோபலகிருஷ்ணன் அப்பெண்டுலத்தின் ஒரு எல்லை நாஞ்சில் நாடாகவும் மறு எல்லை நாஞ்சில் நாடல்லாத பிற தேசங்களாகவும் அமைந்திருக்கின்றன, இவ்விரண்டுக்கும் நடுவிலான ஊசலாட்டங்களே அவரது பயணங்களும் அலைக்கழிப்புகளும் என்று இக்கதைகளை உருவகப்படுத்தி இருக்கிறார். 

இதில் ஐந்தில் நான்கு, அம்பாரி மீது ஒரு ஆடு கதைகள் இன்றும் எம் கதைகளாகவே இருக்கின்றன. ஐந்தில் நான்கு கதை பம்பாயிலிருந்து வெள்ளையும் சொள்ளையுமாக ஊரில் இறங்குபவனின் மவுசும் அதன் பின் ஊரில் கடன்வாங்கிக்கொண்டு பம்பாய் திரும்பும் அனுபவமும் தான். அதைப்போன்ற இன்னொரு கதைதான் அம்பாரி மீது ஒரு ஆடு கதையும். பெரிய மனிதரிடம் டிரைவராக வேலைப்பார்ப்பவரின் கதை. மும்பையில் ஓடும்   நான்கு சக்கர வாகனத்தின் சாரதிகளில் பெரும்பாலோர் தமிழர்கள். இக்கதையின் அனுபவம் அவர்கள் அனைவருக்குமானதாகவே இன்றுவரை தொடர்கிறது. பெருநகர வாழ்க்கையின் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை அனுபவமாக இக்கதைகளை வாசிக்கவும் முடியும். 

ஒவ்வொரு மனிதனும் பெரு நகர நிலப்பரப்பிற்குள் பிரவேசிக்கும் தருணங்களில் மூதாதையரின் நிலமாகத்தான் இருக்கிறான். நகர மனிதனின் உடலுக்குள் இருக்கும் மற்றொரு நிலப்பரப்பு இன்னும் சொல்லப்போனால் அவனிலிருந்து பிரிக்கமுடியாத அவன் மண்ணின்  நிலப்பரப்பு தன்னைப் படி எடுத்துக் கொள்கிறது. அது தன்னைப் புதிது புதிதாக பெயர்ந்து வந்த நிலத்தின் மீது தன்னை மறுமுறை எழுதிக்கொள்கிறது. நாஞ்சிலின் கதைப்பிரதிகள் இப்படியாக தன்னை எழுதிக்கொண்டவைகளாகவே இருக்கின்றன.

இப்படியாக எழுதிச்செல்லும்போது மூதாதையர்களின் மொழியும் வசவுகளும் வாழ்க்கையும் பகடியும் அவர்கள் ஆடிய சுடலைமாடனும் எல்லாமும் ஒரு சேர்ந்து ஒரு கலவையாகி ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்து எடுக்க முடியாத அளவுக்கு கதையின் வடிவமாக மாறி விடுகின்றன. 

 பகடியும் வசவுகளும் இல்லை என்றால் கும்பமுனி இல்லை! 

“ ஐயம் இட்டு உண்” என்ற கதையில்  ( பக் 42 கான்சாகிப் சி.தொ)கல்யாண வீட்டு சமையல் பற்றி எழுதுகிறார் நாஞ்சில் ..

 “எத்தனை செம்பு அரிசி வைக்கலாம் என்ற கேள்வி வந்தது.

ஒரு காலத்தில் ஒரு செம்பு அரிசி வைத்தால் கடுக்கரை, ஆரல்வாய்மொழிக்கார்ர்கள் செம்புக்கு எண்பது பேரும் தேரூர் சுசீந்திரம் தாழக்குடிக்கார்ர்கள் செம்புக்கு  நூறுபேரும் நகரவாசிகள் அனைவருக்கும் குறும வயிற்றுவலி என்பதால்  நூற்றிருபது பேரும் சாப்பிடுவார்கள். ஒரு செம்பு என்பது 7 கிலோ. இன்று யாரும் செம்பு கணக்குப் பார்ப்பதில்லை. ஒரு செம்பு என்பது 25கிலோ கொண்ட டொப்பி புழுங்கல் அரிசிப்பை என்றாயிற்று. இன்று ஒரு பை அரிசி போட்டால் 200 பேர் சாப்பிடுவார்கள்..”

 அவியல், துவட்டல், எரிசேரி, பச்சடி, கிச்சடிகள், உப்பேரி, ஆணைக்கால் ப ப்படம், பருப்பு, சாம்பார், புளிசேரி, ஓலன், ரசம், சம்பாரம், கதலிப்பழம் அடக்கம் 

21 கூட்டான் கள், சமையல் தனித் தேங்காய் எண்ணெயில், தேவைக்கு மட்டும் நெய்யும் நல்லெண்ணையும் , சிறுபயிற்றம் பருப்பு பிரதமன், சக்கைப்பழம் பருவகாலம் இல்லை என்பதால் ஏத்தன்பழம் பிரதமன், போளியுடன் பாலடை பிரதமன்… “… இலைப்போட்டு சாப்பிடனும்னு இதை வாசிக்கும்போதே நாக்குல எச்சி ஊறுதில்ல…

இந்த ஒரு கதையில் மட்டுமல்ல, எங்கெல்லாம் நாஞ்சில் மண்ணின் களமும் சனங்களு கதைகளாகிறதோ அங்கெல்லாம் கதை தன் வரலாற்றை இப்படியாகப் பிரதி எடுத்துக் கொள்வதைக் காணலாம். இக்கதைகளின் ஊடாக வரும் நிகழ்வுகள்  சடங்குகள் அதைப் பற்றிய விவரிப்பு இவை அனைத்துமே எந்த ஒரு சாதாரண வாசகனும் இக்கதையின் மண்வாசனையை அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. 

என் வாசிப்பு அனுபவத்தில் தி.ஜானகிராமன் தன் படைப்புகளில் பரிமாறிய “நளபாகத்திற்கு “ ஈடானது நாஞ்சில் பரிமாறும் உணவின் ருசி. தனக்குத் தெரிந்த தஞ்சை உணவின் அத்தனை ருசிகளையும் தன் கதைமாந்தர்களிடம் கண்டவர் தி.ஜானகிராமன். ஜானகிராமனின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இதைப் பற்றி யாருமே கண்டுகொண்டமாதிரி தெரியவில்லை! ஆனால் அவர் வாழ்ந்தக் காலத்தில் ஜானகிராமனை சந்திக்கும் அவர் வாசகர்கள் அதிலும் குறிப்பாகப் பெண்கள் அவருக்குப் பிடித்தமான உணவுகளை மறக்காமல் பரிமாறியதாக வாசித்திருக்கிறேன். தி.ஜாவின் உணவு தஞ்சையைத் தாண்டவில்லை. மேலும் அந்த உணவில் அக்ரஹாரத்தின் வாசனையும் போகவில்லை.அதோடு ஒரு சாதாரண வாசகனுக்கு முழுவதுமாகப் பொருந்திவிட முடியாதுதான். இதெல்லாம் குறையாக முன்வைக்கவில்லை.ஆனால் நாஞ்சில் தன் அடுக்களை ருசியை மட்டும் பேசவில்லை.வங்காளத்து மீன் ருசியை மராட்டியர்களின் பாவ் ருசியை உழைக்கும் வர்க்கத்தின் கருவாட்டு ருசியை கஞ்சியின் ஈரத்தையும் அறிந்தவர். அதை மிகச்சரியாக தன் கதைகளில் பரிமாறியதில்  நாஞ்சிலின் நளபாகம் தனித்துவம் பெறுகிறது. ! 

நாஞ்சில்  நாடன் சுயசரிதை இன்னும் எழுதவில்லை! எதிர்காலத்தில் எழுதுவாரா என்பதை தீர்மானிக்க வேண்டியது இப்போதெல்லாம் நாஞ்சில் நாடன் வசமில்லை. அதை தீர்மானிக்கும் உரிமை இன்று கும்பமுனியிடம் இருக்கிறது. ஆனால் நாஞ்சிலின் சிறுகதைகள் பல சுயசரிதையோடு நெருக்கமானவைதான். அதை அவர் மறுக்க முடியாது.   நாஞ்சிலை ஓரளவு அறிந்த வாசகன் அந்த சுயசரிதை பக்கங்களை எளிதில் புரிந்து கொள்ளவும் முடிகிறது. ஆனால் மீண்டும் அக்கதைகள் நாஞ்சில் என்ற தனிமனிதனின்

அழுகையோ காதலோ கத்தரிக்காயோ இல்லை. அவை ஒரு காலத்தின் கதையாக தன்னைப் பிரதி எடுத்துக்கொண்டிருக்கின்றன. இதுதான் ஒரு படைப்பாளன் தன்னை சமூகத்தின் ஓர் அங்கமாகவும் அடையாளமாகவும் ஆவணமாகவும் மாற்றும் இடம். அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் அவர் எழுதி இருக்கும் கான்சாகிப் கதை. 

  தமிழினி வெளியிட்ட கான்சாகிப் சிறுகதை தொகுப்பு 2010ல் வெளிவந்திருக்கிறது. 17 கதைகளின் தொகுப்பு. இக்கதைகளில் தனித்து துண்டாக இருக்கும் கதை கான் சாகிப். ஆனால் ஒட்டுமொத்த தொகுப்புக்கும்

நாஞ்சில் கொடுத்திருக்கும்  தலைப்பு “ கான்சாகிப்”  ஒவ்வொரு புத்தகத்திலும் பல்வேறு கதைகள் இருக்கும்போது அதில் ஒரு கதை அப்புத்தகத்தின் தலைப்பாக இடம்பெறுவது என்னவோ எதேச்சியானது அல்ல. அதன் மூலமாக சொல்லிய சொல்லாத அர்த்தங்கள் ஆயிரமுண்டு. அவருடைய கதையின் தலைப்புகளில் இருக்கும் தனித்துவம் மட்டுமல்ல, அவர் புத்தக தலைப்புகளுக்கும் தனித்தொரு அர்த்தப்பாடுகளும் உண்டு. அந்த வகையில்

அவர் சுயசரிதைக்கு மிகவும் நெருக்கமான  ஒரு கதை கான்சாகிப்.

கான்சாகிப் கதையில் இடம்பெறும் சயான் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே இருக்கும் ஓட்டல் கம்ஃபோர்ட் இருக்கிறது. அப்புறம் கேட் வே ஆஃப் இந்தியா கூட அதே இடத்தில் அப்படியேதான் இருக்கிறது. நீங்கள் சாயானில் ஏறும் கடைசி கர்ஜட் லோக்கல் அதே இரவு இ.1.50க்கு தான் சயான் வருகிறது.. ஆம் நாஞ்சில் எதுவும் மாறவில்லை.. கான்சாகிப் கதையில் நீங்கள் எழுதி இருக்கும் இரண்டு முக்கியமான இடம்.. ஒன்று அதை அப்படியே கதையிலிருந்து வாசிக்கிறேன்.. “எனது நண்பர் வட்டத்தில் பலர் , கான் சாகிபுடன் இயல்பாய்ப் பழக மறுத்த தில் அவருக்கு வருத்தம் உண்டு. தமிழ்ச்சங்க விழாவொன்றில் கான்சாகிபை அறிமுகம் செய்து வைத்தவுடன் அந்த சீரங்கத்துப் பெண்ணின் முகம் காட்டிய மருட்சியும் ‘துலுக்கனா’ எனும் கேள்வியும் என்னால் ஆயுளுக்கும் மறுக்க முடியாது”  (பக் 153).. உங்கள் கதையில் கான்சாகிப்புக்கு நீங்களும் அவருடன் சேர்ந்து வீடு தேடி அலைந்த்தை எழுதி இருக்கிறீர்கள். “வீடு தேட ஆரம்பித்தோம், மாலை நேரங்களில் சயான், கிங்க் சர்க்கிள், மாதுங்கா, வடாலா என. வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பெயர் கேட்டதுமே முகம் கறுத்தனர் “ 

 நாஞ்சில் சார்.. இதுவும் மாறவில்லை! 

. இந்த இந்திய சமூகத்தில் கான்சாகிப் என்ற பெயரை நம் புத்தகத்திற்கு தலைப்பாக கொடுப்பதை தவிர வேறு என்னதான் செய்துவிட முடியும்? !!

  நாஞ்சில் நாடன் பேசும் அரசியல் மிகவும் கூர்மையானது. நுண்ணீய அரசியலை தன் கதை மாந்தர்களின் உரையாடல்கள் வழியாக வெத்திலையைப் போட்டு துப்பிவிட்டு சென்றிருப்பதை போல செய்திருப்பார்.  நாஞ்சில் நாடனின் மொகித்தே கதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது

கோவி   ஞானி அய்யா சொன்னது இப்போதும் நினைவில் இருக்கிறது.

“ அவர் சிறுகதைகளில் வைக்கும் அரசியல் ரொம்பவும் உக்கிரமானது.” என்றார். 

அது எல்லோரையும்தான் சுட்டு எரித்து பஸ்பமாக்கிக்கொண்டிருக்கிறது.

நாஞ்சில் நாடன் சிறுகதைகளின் பெருவெளியாக இருப்பது தீராதப் பசி.

‘சின்னஞ்சிறு வயதில் ஆறோ ஏழோ படிக்கின்ற போது ஊரில் நடந்த திருமண வீட்டில் மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடன் அனுமதி பெற்று ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது , உடை கண்டு, பொருளாதர நிலை கண்டு,பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும்

மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின் பலகணிகள் மூலமாகச்

சுற்றியிருந்த உலகைப் பார்த்தேன் ” என்று அவரே பதிவு செய்துமிருக்கிறார்.

அந்தப் பசியின் முகத்தை ஆரம்பகால கதைகள் முதல் அண்மையில் வெளிவந்திருக்கும் கதைகள் வரை அப்படியே கோட்டோவியாமாக வாசகனுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

*1975களில் எழுதிய விரதம் கதையில் சின்னத்தம்பியா பிள்ளைக்கு திருமணமான  தன் இரு மகள்களிடமும் விரதச்சாப்பாடு சாப்பிட வ்ந்திருப்பதை

பசித்திருக்கும் நிலையிலும் சொல்ல முடியாமல் சுய கவுரவம் தடுக்கிறது.

பசியோடு வெந்நீரை வாங்கி குடித்துவிட்டு சாப்பிட்டாகிவிட்டது என்பதை

காட்டிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. 

*இருள்கள் நிழல்களல்ல கதையில் திருமண வீட்டில் பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து காத்திருக்கும் பண்டாரம், பிசைந்த சோற்றைப் பிச்சை வாங்கித் தின்பதா? என்று காத்திருக்கும் காட்சி, 

*விலக்கும் விதியும் கதையில் எண்ணெய்த் தேய்த்து குளித்துவிட்டு வரும் 

பரமக்கண்ணு கருவாட்டுக்குழம்பை நாய் நக்கியதைப் பார்த்து  விடுகிறான்.

நாய் தின்ற மிச்சத்தைத் தின்பதா? எங்கெல்லாம் வாய் வைத்துவிட்டு வந்ததோ?

என்று நினைத்தாலும் பசியின்சுரண்டல் ஜெயிக்கிறது. 

*2020ல்   அவர் எழுதிய ‘அம்மை பார்த்திருந்தாள்’ சிறுகதை சிறுவனாக இருந்தப்போது அவர் கடந்து வந்த அந்தப் பாதை. பசியோடு இருந்த பள்ளிக்கூட சிறுவன் சுப்பையா காலனி தெருவில் பால் ஊற்றுகிறார்கள் என்பதறிந்து தூக்குவாளியை எடுத்துக்கொண்டு வந்து வரிசையில் நிற்கும்போது ஏற்பட்ட அவமானம்.., 

“வெள்ளாங்குடிப் பெய இஞ்ச என்னத்துக்கு வந்து நிக்கான்? சும்ம கெடய்க்கும்னா எங்கினயும் போயி நிப்பானுவ… அவுனுக கோயில் கொடைக்குக் கால் நாட்டியாச்சுண்ணா நம்மள ஊருக்குள்ள எறங்கி நடக்க விடுவானுவளா?”

கடுப்பும் இளக்காரமும் இருந்தது அவன் குரலில். சத்தம் கேட்டு நிமிர்ந்த மற்றவன் அதட்டலாகச் சொன்னான்.

“வந்திருக்காம் பாரு வாளியும் தூக்கீட்டு மானங்கெட்டுப் போயி… ஓடுலே வடக்க மாற இங்கேருந்து!” 

வாளி ததும்பத் ததும்ப பாலூற்றித் தந்தவரின்  முகமேறிட்டுப் பார்த்து வாளியை வாங்கி, தலை கவிழ்ந்து, மடங்கி வடக்காக நடந்தான் சுப்பையா. மனம் குறுகி வலித்தது. பால் நிறைந்திருந்த மூடியில்லாத தூக்குவாளி அலம்பிச் சிந்திவிடாமல் பதனமாய் நடந்தான். என்று பயணிக்கிறது பசி. இக்கதை இத்தனை இத்தனை ஆண்டுகள் கழித்தும் அடங்காத நாஞ்சில் நாடனின் பசியை அம்மையிடம் இறக்கி வைக்கிறது. 

இப்படியாக அவர் கதை நெடுக அவரை பல்வேறு விதமாக துரத்தும் பசி ,தனிமனித உணர்வாக இருக்கும் வயிற்றுப் பசி , ஒரு சமுதாயப் பண்பாட்டின் எச்சமாக படைப்பின் உச்சத்தை எட்டிப்பிடித்திருப்பது

அவருடைய ‘யாம் உண்பேம்’ சிறுகதையில்தான். நாஞ்சில் நாடனின் பசி குறித்த

மேற்சொன்ன கதைகளில் எல்லாம் ஏற்படாத ஓர் உணர்வின் உச்சம் அவருடைய

யாம் உண்பேம்சிறுகதை மூலமாக நான் உணர்ந்தேன். சூடிய பூ சூடற்க

கதை தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அச்சிறுகதையை வாசித்தவுடன் 

ஓவென கதறி அழ வேண்டும் போலிருந்தது எனக்கு.

இந்தக் கதையை வாசிக்கும் முன் இந்தக் கதைக்கான பின்புலத்தை மிகவும்

தெளிவாக அருந்ததிராயின் புரோக்கன் ரிபப்ளிக் கட்டுரைகளும் அதற்கு முன்பே

எழுத்தாளர் இந்திரன் மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் நாம்’ என்ற ஆதிவாசிகளின் கவிதைகளும் எனக்கு கொடுத்திருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.

நம் ஆரண்யகாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, காட்டையும் கழநியையும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு பிச்சை கேட்கவே தெரியாது. அதை அவன் அறிந்திருக்கவே இல்லை. பெற்ற மகன் குடும்பத்துடன் செய்து கொண்ட தற்கொலை அவனை அவன் இடத்திலிருந்து விரட்டுகிறது. பசியின் விரட்டல் வேறு. 

“எதிரே இருப்பவன் ஒரு துண்டு ரொட்டியை சப்ஜியுடன் வாய்க்கு கொண்டு போகும்

நேரம், பாபுராவின் உயர்த்திய கையை , முதிய தோல் சுருங்கிய நாத்ரேயின் கை எட்டிப் பிடித்து வெட வெடத்தது. குலைந்து ஒலித்த குரலால் அதிர்வுற்று பாபுராவ் நிமிர்ந்து பார்த்தான்.

அமி காணார்…. அமி காணார்..

எனக்குத் தா என்றல்ல , நான் தின்பேன் என்றல்ல, நாம் உண்போம் என.

தூய சங்கத் தமிழில் பெயர்த்தால் யாம் உண்பேம் என.

கண்கள் கசிந்திருந்தன. பிடித்த கரம் நடுங்கியது. மீண்டும் பதற்றம் பரவ,

அமி காணார்… அமி காணார்…

எத்தனை முறை வாசித்தாலும் கண்களில் ஓவென வாசகனைக் கதறி அழவிடும் கதை இது. 

உண்டா லம்மவிவ் வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்

தமியர் உண்டலும் இலரே……

[புறநானூறு: 182]

என்று சொன்னானே 2500 ஆண்டுகளுக்கு முன் ஒருவன் 

இம்மைச் செய்தது மறுமைக்கும் ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்

பிறரும் சான்றோர் சென்ற நெறி என

ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே 

(புறம் 134)

என்று சொர்க்கம் நரகத்திற்கு அஞ்சாமல் வாழ்ந்தானே ஒரு இனக்குழு தலைவன்.

தனியொருவனுக்கு உணவில்லை எனில் 

இச் ஜகத்தினை அழித்திடுவோம்

என்று ஆவேசப்பட்டானே நம் பாரதி…

இதை எல்லாம் தன் பண்பாடாக கொண்டு வாழ்ந்தவனால்தான் 

அந்த அமி காணார் அமி காணார் என்ற குரலில் ஒலித்த

அவலத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்தக் குரலில் ஒலித்த

பசி தனி மனிதன் ஒருவனின் பசி மட்டுமல்ல, இது இந்த நாட்டின்

பண்பாட்டைச் சுரண்டுகின்ற பசி, இது ஒரு தனிமனித அவலம் அல்ல,

ஒரு சமூக அவலம். அவமானம், ஏன் ஆபத்தும் கூட! 

  இக்கதை நாஞ்சிலாரின் சொந்த அனுபவம் தான்

என்பதை அவருடைய நக்கீரன் நேர்காணல் வழி அறிந்து கொண்டேன்.

அமி காணார் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அவரும் அழுதிருக்கிறார்.

வாசித்தவனையும் அழ வைத்திருக்கிறது அக்கதை. இந்தக் கதையின் நிஜம்

நம்மைச் சுடுகிறது. தன் அனுபவத்தை வாசகனின் அனுபவமாக்குவதில்

வெற்றி காண்பது தான் ஒரு சிறந்த படைப்பு . விமர்சன பிதாமகன்கள்

இதற்கு என்னவெல்லாமோ பெயர் வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக

எழுதிக்கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருக்கட்டும்.

என்னளவில் இதுவே ஒரு படைப்பாளனின் வெற்றி என்று கருதுகிறேன்.

வாழ்த்துகள் நாஞ்சில் சார்!

அடுத்து, அவர் கதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது அந்த கதைமாந்தர்களின் டிராப்ட் கச்சிதமாக கிடைக்கிறது.  அவர் 1975ல் எழுதிய கதை (தீபம், செப் 1975) சில வைராக்கியங்கள். இக்கதையில் வரும் பரமசிவம்பிள்ளை கதைப்பாத்திரம் தான் அவருடைய பல்வேறு கதைகளில் பல பெயர்களில் நடமாடிக்கொண்டிருக்கும் கதைப்பாத்திரம். இன்றைக்கு பரமசிவம் பிள்ளை கும்பமுனியாக நம்முன் நிற்கிறார். அதை கதையில் வரும் ஆறுமுகம் பிள்ளைதான் இன்றைய கும்பமுனியோடு ஒட்டிக்கொண்டிருக்கும் தவசிப்பிள்ளையாகவும் வைத்துக்கொள்ள முடியும். 1975ல் ஆரம்பித்து 2015 வரை சற்றொப்ப 40 ஆண்டுகள் ஒரு கதைப்பாத்திரம் எப்படி வளர்ச்சி அடைகிறது அல்லது மாற்றம் அடைந்துக்கொண்டிருக்கிறது என்ற கிராப்ட் கிடைக்கிறது. அது இந்த ஒட்டுமொத்த வாசிப்பில் தான் எனக்கும் வசப்பட்டது, எந்த சிறுகதை மாந்தர்களின் வழி என் சனங்களின் உணவு அடுக்களை கொள்ளைப்பற அண்டா குண்டா போனி வகையறாக்கள் அவர்களின் பந்தி வரிசைகளை ருசியோடு பரிமாறுகிறாரோ அதை சிறுகதைகளில் தான் நாஞ்சில் நாடன் தன் சுயசாதி விமர்ச்சங்களையும் வைக்கும் படைப்பாளனாக தலை நிமிர்ந்து நிற்கிறார். தன் 1975 ல் எழுதிய இதே “சில வைராக்கியங்கள்” கதையில் மையச்சரடாக இதுவே இருக்கிறது.

 பரமசிவம்பிள்ளை பேசறதா சில வரிகள் வரும் .,

 “இந்தக் காலத்தில சாதிக்கீதி எல்லாம் ஏது ஓய்? எல்லாம் ஒண்ணுதாலா எல்லார் ஒடம்பிலேயும் ரெத்தம் செவப்புதாலா ?’ 

இதுக்கு அடுத்தவரிதான் செமையா வச்சிருப்பாரு..

‘புல்லறுக்கிறவளைத் தூக்கி வரப்பில கெடத்தும்போது சாதி எங்கே ஓய் போச்சு? “ (நா.நா. சி.தொ. பக் 33) இக்கதையின் மையச்சரடாக இருப்பது இந்திய சமூகத்தில் சாதியைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் அகமணமுறை. அதை நாஞ்சில் நாடன் ரொம்பவும் பூடகமாக வைத்திருப்பார். 

பசிக்கு சாதியில்லை என்பது நாஞ்சிலின் பசிக்கதைகளின் அடி நாதமாக இருக்கிறது. “அம்மை வந்தாள் ‘ கதையிலும் அதை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இக்கதையில் பசி சாதியற்றது என்பதை மிகவும் நுணுக்கமாக முன்வைத்திருப்பார் நாஞ்சில். 

நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த நொண்டிச் சாலமன் டெம்போ மேல். சினந்து குரலெடுத்துக் கூறினார் –

“வாயைப் பொத்தீட்டு சோலியைப் பாருங்கலே! கர்த்தருக்குச் சாதி உண்டாலே சவத்துக்குப் பெறந்த பெயக்களே? பாவம்லே இந்தப் பெய… நல்ல படிக்கப்பட்ட பெய… தாரித்திரியத்துக்க கொணம் வாளியத் தூக்கீட்டு வந்திருக்கான்… சாடி ஏறிக் கடிக்கப்பிடாது முட்டாப் பெயக்களா! நீ வாளியைக் கொண்டாலே இப்பிடி…”

சுப்பையாவிடம் வாளியைப் பிடுங்காத குறையாக வாங்கி, மேலே நின்றவனிடம், “நெறச்சு ஊத்திக் கொடு… பாவங்க குடிச்சிற்றுப் போட்டும்… அஞ்சாறு கண்ணுங்கயந்தலைய…” என்றார்.

நாஞ்சில் நாடனிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு மனிதனைக் காணுகிறேன். அந்த மனிதன் தனக்கு தொடர்பில்லாத எதைப்பற்றியும் பேசுவதில்லை. எதாக அவர் இருக்கிறாரோ எதை அவர் இச்சமூகவெளியில்

தொடர்ந்து பாசாங்கின்றி வெளிப்படுத்துகிறார். நாஞ்சில் கதைகளில் பெண் பாத்திரங்கள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இக்கருத்தை நான் ஏற்கனவே முன்வைத்திருக்கிறேன். இங்கே என் நட்பு வட்ட்த்தில் இருக்கும் இனிய  நண்பர்களும் பெண்களின் கதைகளை எங்கள் கண்ணீரை கூடுவிட்டு கூடுப்பாய்ந்து எழுதி எழுதி புரட்சியாக வெடிப்பார்கள். சில நேரங்களில் அது தாங்கமுடியாமல், இந்தப் பெண்ணியக்கதை இருக்கட்டும்டே. ஆணியக்கதை என்ன? பெண்ணியம்னு ஒன்னு இருக்குனா ஆணியம்னு ஒன்னும் இருக்கும்தானே! இது நடக்கும்போது ஓர் ஆணாக நீ என்ன உணர்ந்தாய் என்று எழுதுடே அப்போதானே எனக்கும் உன் பக்கம் தெரியும்னு சொல்லி இருக்கேன். அந்தப் புள்ளியில் நிற்பவரும் நாஞ்சில்தான். அவரோட “முரண்டு ‘ னு  ஒரு கதை ( நா. க. தொகு. பக் 200).  இந்தப் புள்ளியில் ரொம்ப முக்கியமான கதை. 1979ல் தீபம் இலக்கியச்சிந்தனை பரிசு பெற்ற கதை. குழந்தைப்பேறு இல்லாத தம்பதியின் கதை. குழந்தை இல்லை என்பதால் மீனாட்சி சுந்தரத்தை மறுமணம் செய்து கொள்ள சொல்லி ஆத்தாக்கிழவி கட்டாயப்படுத்துகிறாள். பொதுவாக குழந்தையின்மை, இரண்டாவது கல்யாணம் என்றெல்லாம் கதை எழுதும்போது நம்ம எழுத்தாளர்களுக்கு பெண்பாத்திரம் தான் முதன்மையாகும். பெண் என்ன செய்வாள், அவப்படற மனக்கஷ்டம் கண்ணீர்க்கதை எல்லாம் படிச்சிருக்கோம். இல்லாட்டி அந்த ஆண் குழந்தைக்கொடுக்க முடியாத விந்து குறைபாடு உள்ளவனா காட்டி கதைப்பண்ணி இருக்கோம். ஆனால்  நாஞ்சில் அப்படி கதை உருவாக்குகிறவர் அல்ல. நாஞ்சில்.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை  வாழிய நிலனே”
——–புறநானூறு 187.

என்று பாடிய எங்கள் அவ்வையை நேசித்த ஆண்மகன்… ஓர் ஆண் என்ன செய்வான் என்று. அங்கேதான் தனித்து தன் அடையாளத்தை காட்டி இருக்கிறார் நாஞ்சில். கதை முடிவில் இரண்டாம் கலியாணத்திற்கு 4 நாள் இருக்கும்போது மீனாட்சி சுந்தரம் ஆபரேஷன் செய்துக்கிறான். கதையில கடைசி  நாலுவரி இப்படி எழுதி இருப்பார் நாஞ்சில்..

“ஆபரேஷன் செய்யதுக்குப் போனேன்”

ஆப்பரேஷனா , என்ன தீனம் எனகீட்டு?

“கெளட்டு எளவுக்கு எல்லாத்தையும் பச்சையாச் சொன்னாத்தான் மனசிலாகும்.  நரம்பு வெட்டிட்டு வந்திருக்கேன். போருமா? இனி ஓனக்கு பேரன் பொறக்கதைப் பாத்திருவோம்” 

கதை இதோடு முடிஞ்சிருக்கும்.

இக்கதையை நவீன நாடகத்தின் சோதனை முயற்சியாக ஒரே கருப்பொருளை

எடுத்துக்கொண்டு அதன் இருவேறு பக்கங்களைக் காட்டும் நாடகங்கள் மும்பையில் அரங்கேறி இருக்கின்றன. அதில் நாஞ்சில் நாடன் எழுதிய ‘முரண்டு’ நாடகமும் பி.வி.ஆர் எழுதிய ‘சாலக்கிராமம்’

நாடகமும் ஒரே மேடையில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.  குழந்தை இல்லாத தம்பதியரின் கதை தான் இரண்டுமே. சாலக்கிராமம் – பிராமண சமூகத்தின் கதை. முரண்டு ஒரு கிராமத்தானின் கதை. மும்பையில் இதை அரங்கேற்றிய பரமேஸ்வர் நாடகக்குழு சென்னையிலும் அரங்கேற்றிய போது பாலசந்தர், பாரதிராஜா ஆகியோரின் பாராட்டுதல்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. .எனக்கென்னவோ கதையின் இதே முடிவை.. பாக்கியராஜ் தன் சினிமாவில் வேறுமாதிரி காட்டியிருக்காரோனு சந்தேகம் வரும்!

இன்னொரு கதையும் இதுவரை ஒரு படைப்பாளன் தொடாத ஒரு பக்கம். “வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப்படலம்” என்ற கதை . (நா. சி. தொகு.பக் 488) இந்தியா டுடேயில் 2000ல் வெளிவந்தக் கதை. கதையின் தலைப்பில் சொல்லப்படும் “வதைப்படலம்” என்பது எது? குழந்தைப்பருவம் தாண்டி விடலைபருவம் வருகிற அந்த இரண்டும் கெட்டான் வயதில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்படும் sexual curiosity . தான் கதை. அந்த மா நகராட்சி ஆண்கள் பள்ளி மாணவர்களின் அச்செயலை தமிழய்யா எப்படி அணுகுகிறார்? பள்ளியின் தலைமையாசிரியர் எப்படி அணுகுகிறார்?  நம் தமிழும் நம் தலைமை வழிகாட்டிகளும் குற்றச்செயலாக அணுகும் அச்செயல் உண்மையில் அப்படியான ஒரு பஞ்சமா பாதகமா என்ன? இப்படியான ஒரு கதையில் நம் மண்ணோடும் மனிதர்களோடும் வாழும் மனிதன், அவன் இந்த பள்ளிக்கூட வாசலில் ஒதுங்காகதவனாக இருக்கிறான் அவன் மூலமாக பேசுவார் நாஞ்சில். 

“தப்புதான், பள்ளிக்கூடத்தில செய்கிற காரியம் இல்ல தான். ஆனா உலகத்தில யாருமே செய்யாத து மாதிரி.. நீங்க செஞ்சதில்லையா? தமிழ் வாத்தியாரு செஞ்சதில்லையா? உலகத்திலே அதைச் செய்யாத ஆம்பிள உண்டாய்யா? பள்ளிக்கூடத்தில செய்திட்டான் . சவம், சின்னப்பயக்க புத்தியில்ல, கொழுப்பு. தப்பு ஆகிப்போச்சு. அந்தால காதுங்காதும் வச்சாப்பில கூப்பிட்டு கண்டிச்சு புத்தி சொல்லி அனுப்புவேளா? அதை விட்டுப்போட்டு பள்ளிக்கூடம் பூரா நாற அடிச்சி, ஊரெல்லாம் கேவலப்படுத்தி புள்ளகளத் தண்டிக்கலாமய்யா? அவமானப்படுத்தலாமா? “

ரொம்பவும் வித்தியாசமான தனித்துவமான கதைகளை எழுதி இருக்கிறார்  நாஞ்சில் நாடன் அவர்கள். 

நம் மனிதர்களின் தெய்வ நம்பிக்கையை நம் வழிபாடுகளை எல்லாம் மிகவும் நெருக்கமாக எழுதி இருக்கும் நாஞ்சில் கடவுள் குறித்த அச்ச உணர்வு அதை ரொம்பவும் சாதாரணமாக நம் மனிதர்கள் கட்டுடைக்கும் இடத்தை பெரியார் திடல் கூட இவ்வளவு தெளிவாகப் பேசி இருக்குமா தெரியாது. (இது நிச்சயமாக நகைச்சுவை அல்ல!) உண்மையாகவே அப்படியும் ஒரு கதை உண்டு, சுடலை என்ற கதை. கதையின் முதல்வரி “அவன் உக்கிரமான சுடலைமாடன்” என்று ஆரம்பிக்கும். கதை என்னவென்றால் பரதேசியா பிள்ளை மக கல்யாணத்திற்கு தோப்பு கைமாறுகிறது. தோப்பை வாங்கிய பொன் தூசி முத்து  நாடார் தோப்பில் பல மாற்றங்களை செய்கிறார். ஆலமரமும் இன்றி சுடுகாடும் இன்றி தோப்புச் சூழலும் இன்றி சுடலை மட்டும் மூளியாக நிற்கிறதுனு சொல்கிறார். இந்த ஏழெட்டு ஆண்டுகளில் பிள்ளையின் குடும்பத்தார் யாராவது வந்து பாயாசம் வைத்து கும்பிடுகிறார்கள். அவர்களிடம் பொன் தூசி முத்து நாடார் தவறாமல் படிக்கும் பாட்டு இந்தச் சுடலைமாடன் சிலையை இடம் மாற்றிவிடக்கூடாதா என்பதுதான். சொல்லி சொல்லிப் பார்த்துவிட்டு ஒரு   நாடார் கடைசியில என்ன செய்தாருனு பாருங்க, 

“ நாடார் நாலு ஆட்களை விட்டு சுடலையைப் புரட்டி வேலியொரம் போட்டுவிட்டு , பீடம் இருந்த திரட்டை, முழுவதுமாய் வெட்டி மாற்றி ஒரு தென்ன்ங்கன்று நட குழி பறிக்கச் சொன்னார்” 

கதை இதோட முடியும்.

இப்போ கதை ஆரம்பிச்ச முதல்வரியை மீண்டும் வாசிக்கிறேன்.. 

“அவன் உக்கிரமான சுடலைமாடன்”

இக்கதையை நாம் கட்டுடைத்தோம் என்றால் அது தொல்காப்பியம் வகைப்படுத்தும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருளாக விரியும் நிலமும் பொழுதும் முதற்பொருள். அந்த நிலத்தின் தெய்வம், உணா,  மா , மரம், புல்,  நீர், தொழில்.. இசை கருப்பொருள். நாம் நாஞ்சில் நாடன் கதைகளை மொத்தமாக வாசிக்கும்போது, நாஞ்சில் தன்  நிலம் சார்ந்த மக்களின் கதைகளைப் படைக்கும் போது அவர் கருப்பொருள்கள் அனைத்தும் உயிர்ப்பெற்று எழுகின்றன. நாஞ்சில் நிலமும் கருப்பொருளும் தான் நாஞ்சில்  நாடனின் சிறுகதைகளின் களமும் காட்சியும் கதையுமாக எழுதப்பட்டிருக்கிறது. 

நாஞ்சில் தன் சிறுகதைகளில் சித்தர் பாடல்களையும் திருவாசகங்களையும் தன் கதைமாந்தர்களின் வழி பேசுவாரே தவிர நாஞ்சிலின் கதைகளில் கடவுள்கள் பேசப்படவில்லை. அதாவது பெருந்தெய்வ ஆகமக்கோவில்கள் கிடையாது.  கதையில் இருப்பதெல்லாம் சிறுதெய்வங்கள். நம் மண்ணோடும் மனிதர்களோடும் ஒன்றாக கலந்துவிட்ட தமிழனின் வழிபாட்டு கருப்பொருள்களாக உலாவருகின்றன. இக்கதைகளின் முதற்பொருளான  நாஞ்சில் நிலமும் அந்த நிலத்தின் கருப்பொருள்களும் ஓர்மையுடனும் தமிழர் வாழ்வியலின் எச்சமாக தன்னை பிரதி எடுத்துக்கொண்டிருக்கிறது.  இதை ஏன் நான் பதிவு செய்கிறேன் என்றால் ஒரு படைப்பும் பல்வேறு வாசிப்புகளால்,  பிரதி > வாசகன் என்ற  இரு நிலைகளை என்பதையும் தாண்டி இன்னும் சில அடுக்குகளைக் கண்டடையும் சாத்தியங்களை உருவாக்குகிறது. கதைசொல்லி என்பவர் கதையாடல்களை சிறுகதையின் அடுக்குகளாக மொழியில் புலப்படுத்தும்போது கதைக்கும் மொழிக்கும் இடையில் இருக்கும் எண்ணற்ற சாத்தியக்கூறுகளை  ஒரு தேர்ந்த வாசகன் கண் ட டையமுடியும் என்பதற்காகத்தான். 

அஷ்டாவக்ரம் என்ற சிறுகதை சினிமாவைப் பற்றிய கும்பமுனியின் விமர்சனப்பார்வையாக எழுதப்பட்டிருக்கிறது. “அஷ்டாவக்ரம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ள அதி நவீன தமிழ் சினிமா பற்றியது என்று கும்பமுனியே விளக்கமும் கொடுத்துவிடுகிறார். கதை பிரபஞ்ச நாயகனைப் பற்றிய விலாவரியாக பேசுகிறது. இக்கதை எழுதப்பட்ட காலம் ஆகஸ்டு 2008. (உயிர் எழுத்து) ஜூன் 2008ல்  தசாவதாரம் திரைப்படம் வெளிவந்த து. இப்போ அஷ்டாவக்ரம் – தசாவதாரம் இதற்கு மேல் நான் எதுவும் செல்ல விரும்பவில்லை. கதையை வாசித்து ரசித்து கடந்து சென்றுவிடத்தான் வேண்டும். ஆனாலும் கும்பமுனியிடம் ஒரு சின்ன டவுட்டு… அதாகப்பட்ட து… இதில அஷ்டாவக்ரத்தில் ஒரு காமெடி காட்சியில் செத்தப் பிணமாக நடிக்கவோ அல்லது அதில் ஒரு டப்பாங்கூத்து பாட்டெழுதுவதையோ பிரபஞ்ச நாயகனின் உதட்டசைக்கும் வசனங்களை எழுதிக்கொடுப்பதிலோ இப்படியாக அஷ்டாவக்ர ஜீவஜோதியில் கரைந்துவிடுவதில் கதி மோட்சம் அடைகிற தமிழ் இலக்கிய நதிகளை கும்பமுனி காப்பாற்றுவாரா ? அல்லது பகலில் கண்ட சொப்பனத்திற்கெல்லாம் அர்த்தம் கண்டுப்பிடிக்க கூடாதுனு தவசிப் பிள்ளையை மனாங்கனிய திட்டப்போறாரா தெரியல!

தன் கதைகளின் ஊடாக தன் சமகாலத்தை சமூகத்தை அரசியலை விமர்சனத்துடனும் அக்கறையுடனும் அணுகும் நாஞ்சில் நாடனின் கதையுலகம் தன் சுயம் தேடலின் ஒரு பகுதியாக தன்னைத் தானே உரித்துக்கொண்டு கும்பமுனியாகவும் கும்பமுனியின் அனைத்து செயல்களையும் போகிறபோக்கில் கேள்விக்குட்படுத்தும் தவசியாகவும் இன்றைய கும்பமுனி கதைகளை அணுக வேண்டி இருக்கிறது. இது வாசிப்பவனுக்கு கதையின் இருமுனைகளையும் ஒரே நேரத்தில் காட்டுவதுடன் கதையாடலின் ஒரு சட்டகம் உருவாவதும் அது உடைபடுவதும் ஒரே கதையில் நிகழ்கிறது. எண்ணிறந்த தமிழ் சிறுகதைப் பரப்பில் புதிதாக காணப்படும் இந்த உத்தியே இக்கதைகளின் வடிவமாகவும் இருக்கிறது. பின் நவீனத்துவ உத்தியாக இதை மைக்கெல்பெல் விவரிக்கிறார். 

  வடிவம் என்பதை சொல்லும்போது அபுனைவுகளின் சாயல்  நாஞ்சிலாரின் கதைகளில் காணப்படுவதைபற்றிய பல விமர்சனங்கள் வந்திருக்கின்றன., என் விமர்சனம் உட்பட. .  

“கதைத்தன்மைக் குறைந்துவிட்ட்து, கட்டுரைத் தன்மை மிகுந்துவிட்டது என்ற கூற்றில் உண்மை இல்லாமலும் இல்லை “ என்று  நாஞ்சில் நாடன் ஒத்துக்கொள்கிறார். அவரே சொல்வது போல 70களில் எழுத வந்தவனின் படைப்பு மொழியும் இரண்டாயிரத்து இருபதிலும் எழுதிக் கொண்டிருப்பவனின் படைப்பு மொழியும்  நிச்சயமாக ஒன்றாக இருக்க முடியாதுதான்.  

அந்த மாற்றத்தை “மணமானவர்களுக்கு மட்டும்” 2006ல் எழுதிய கதையில் பார்க்கலாம். வடிவ அமைப்பில் நாஞ்சில் கதைகளில் மிகவும் வித்தியாசமான கதை. கட்டுரையின் மொழி நடையை தன் கதைமொழியாக பிரதி எடுக்கும் முயற்சியாகவே அக்கதையை அமைந்திருக்கிறது. 

கட்டுரைமொழி என்பது ஸ்டேட்மெண்ட். அதாவது நேரடி பொருள்கொள்வது. NO flexibility. பல்வேறு அர்த்தப்பாடுகளைக் கொடுக்காது. கொடுக்கவும் கூடாது. ஆனால் கதைமொழி என்பது வேறு . தொனிகளுக்குள் அது வரும் இடத்திற்கு ஏற்ப அதைப் பேசும் கதைமாந்தருக்கு ஏற்ப அர்த்தப்பாடுகள் உடையது. உரையாடல் மொழி. கனவின் மொழி. கவித்துவமானது. இதெல்லாம் கதைமொழிக்கு உண்டு. கட்டுரை மொழிக்கு கிடையாது. இந்த இரண்டு மொழிகளையும் தன் புனைவுலகில் இணைக்கும்போது .. எழுதப்பட்ட பிரதி என்னவாக இருக்கிறது என்று எனக்கு அறுதி இட்டு சொல்லமுடியவில்லை. 

May be its too early to give any criticism on this  technic.

. ஓர் அரை நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகத்தை

இவ்வாறாக பார்க்கிறேன். 

நாஞ்சில் கதைகள் முதற்பொருள் கருப்பொருளின் பிரதிகள்.

பம்பாய்க்கதைகள் – யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் மாந்த நேயக்குரல். அக்கதைகள் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த மனித நேயத்தைப் பேசி இருக்கும் கதைகள்.

வித்தியாசமானவை என்று நான் குறிப்பிட்ட சில கதைகள் சமகால சமூக அரசியலை காத்திரமாக முன்வைத்தவை. கதைகளில் சில தன்வரலாற்று பக்கங்களாக விரியும். கும்பமுனி இவை அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு வாழ்க்கையை திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அசைபோடும் எம் மூத்தக்குடிமகன்.

நாஞ்சில் கதைகளை மீண்டும் வாசிக்கும்போது இந்த வகைப்பாடுகளை கண்டறிய முடிகிறது. 

கும்பமுனியுடன் எனக்கும் சில முரண்பாடுகள் உண்டு, மறைப்பதற்கில்லை. அது வீட்டுக்கு வீடு இருக்கும். இருக்கட்டுமே.. அதனால் என்ன.?!

 நாஞ்சிலை எப்போதும் நானும் எம் மும்பையும் கொண்டாடுவோம்..

அவர் எங்கள் முன்னத்தி ஏர் என்ற பெருமித உணர்வுடன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.