
திங்கள் மதியம் முதல் பாடவேளையில் சம்பவத்துக்கு பிரேம் தேர்வு செய்திருந்தது சங்கரம்மாள் டீச்சரை. அறிவியல் வகுப்பு எடுக்கும் சங்கரம்மாள் டீச்சர் தினமும் நான்கு பிள்ளைகளையாவது முதுகு எரிய, கன்னம் பழுக்க வைப்பதென தன் குலதெய்வமான தேசியம்பட்டி ஒத்தப்பனை நொண்டி கருப்பனிடம் நேர்ந்து கொண்டு பணிக்கு ஆட்பட்டவர். பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காகவே கருப்பன் தினமும் தன் உடலில் வந்து சாடுவதாக நம்பக் கூடியவர். பிரேம் அன்று அவரிடம் கேட்ட சந்தேகம் பழைய பாடத்கிலிருந்து. அதில் ஒரு செல் உயிரி என்பதை உயரி என்று டீச்சர் எழுதியிருந்ததாக சாதித்தார். சங்கரம்மாள் பொறுமை இழக்கவிருந்த நொடியில் “வேணும்னா சங்கீதா நோட்டுல பாருங்க டீச்சர், அதுலயும் அப்படித்தான் இருக்கும்” என்றார். முந்தைய திங்களில் கையொப்பம் வாங்கிய துணிவில் சங்கீதாவின் குறிப்பேடு எடுத்து நீட்டப்பட்டது. “இவளும் உயிரின்னுதானடே எழுதிருக்கா. ஒனக்கு சந்தேகம் எழுத்துல இல்ல, உன் கண்ணுலதாம்டே “ என்றார். பிரேம் மிகச்சரியாக அந்த வரிகளை வீசினார் –“ டீச்சர், அந்த திங்கக் கெழமை நீங்க லீவு. அடுத்த நாள் பாடத்துலயும் ஒரு செல் உயிரி எழுதிருக்கோம். அதையும் சரி பார்த்துருங்க டீச்சர்” என்றார். இந்த நொடியில் தெண்டில் எதுவோ சரியாக இல்லை என்பதை அனுமானித்து விட்டார். அவர் எழுவதற்குள் டீச்சர் அடுத்த நாள் பாடத்தை திருப்பினார். “அதுலயும் உயிரின்னுதான்டே எழுதிருக்கா, நீ என்ன இன்னைக்கு வம்பு …” என்று சொன்னவர் கண்கள் ஒரு நொடி சுருங்கி விரிந்தன. பிரேமின் வீட்டுப்பாட நோட்டை எடுத்து திருப்பினார். கருப்பன் வந்து இறங்குவதற்கான அறிகுறிகள் தோன்றலாயின. “ஏல,ராமரு, உன் வீட்டுப்பாட நோட்டைக் கொண்டா” என்றார். இன்னும் இருவரது குறிப்பேடுகளும் பரிசீலிக்கப்பட்டன. கருப்பன் வரத்துப் பாடப்படாமலேயே பள்ளிக்குள் வந்திறங்கினான்.
தெண்டில் மண்டை செந்தில், சங்கீதா, சென்ற செவ்வாயில் குறிப்பேடுகளை தெண்டிலுடன் சேர்ந்து வாங்கி வைத்த புல்தடுக்கி மூவரும் விசாரணை வளையமான மேசையின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டனர். டீச்சர் கண்கள் சிவந்து கைகள் துடி கொள்ள ஆரம்பிப்பது புரிந்தது- “ ஏட்டி, சங்கீதா… உள்ளத சொல்லு, நான் திங்கக் கெழம லீவு. திங்கக் கெழம பாடத்த செவ்வாக் கெழம திருத்தினாலும் திங்கக் கெழம தேதியத்தான் கையெழுத்துக்கு போட்டேன். செவ்வா கெழம பாடத்துக்கு செவ்வாக் கெழம தேதிதான போட்டேன். ஒன் நோட்டுல மட்டும் எப்டிட்டி ரெண்டு நாளும் செவ்வாக் கெழம தேதி வந்துச்சு? “. சங்கீதா மைத்தடங்கண்ணில் நீர் விளிம்பு கட்டி நிற்க தெண்டில் அலையில் இருந்து உலையில் தள்ளும் செயலைச் செய்தார் – “டீச்சர், நீங்க யாவகமறதியா ரெண்டு நாளுக்கும் ஒரே தேதியப் போட்ட்…” வாக்கியம் முழுமையடையாமைக்கு காரணம் சொத் எனும் ஓசையும், கன்னம் பற்றிய கைகளுடன் தெண்டில் இரண்டடி பின்னகர்ந்ததும் உதடு பிரியும் நொடிக்குள் நடந்து விட்டிருந்ததுதான். கருப்பனின் வேகம் அசாத்தியமானது. இரண்டடி பின்னகர்ந்த தெண்டில் நிலை கொள்வதற்குள் கருப்பன் இயற்பியலின் இயங்கியல் விதிகளை மீறிய வேகத்தில் நகர்ந்து வந்து தெண்டிலைப் பிடித்தார். மூளையைக் காப்பாற்ற வேண்டி இயற்கையால் கடினமாக அமைக்கப்பட்ட தெண்டிலின் மண்டை ஓட்டின் வலு கருப்பனால் பரிசோதிக்கப்பட்டது. அருள்வாக்கு மடை திறந்ததெனக் கொட்டியது –“ அதெப்படில? திங்கக் கெழம கையெழுத்த எல்லாருக்கும் கருப்பு மைல போட்ருக்கேன். செவ்வாக்கெழம, புதங்கெழம கையெழுத்த செவப்பு மைல போட்ருக்கேன். இவ நோட்டுல மட்டும் எப்டில மூணு கையெழுத்தும் செவப்பு மைல வரும்?” . கருப்பன் புல்தடுக்கி பக்கம் பாதி திரும்புவதற்குள்ளாகவே புல்தடுக்கி கருப்பனிடம் விபீடண சரணாகதி அடைந்து விட்டார். கருப்பன் கேட்பதற்குள்ளாகவே பதட்டத்தில் டொம்ப்ளீயின் கூறுமுறை பாணியை அவ்வப்போது பின்பற்றி ஊழலை விளக்கி அப்ரூவர் ஆகிவிட்டார்.
கருப்பன் ஊழலின் வீரியத்தில் தன் பக்தையும் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து அதிர்ச்சியாகி தண்டிக்கும் பொறுப்பை சங்கரம்மாளிடமே ஒப்படைத்து மலையேறிச் சென்றார். சங்கரம்மாள் தன்னிருக்கையில் இரு நிமிடங்கள் கண்மூடி அமர்ந்திருந்தவர் சட்டென எழுந்தார் –“ டே பிரேம், வகுப்பப் பாத்துக்கோ, யாரும் பேசக்கூடாது, இந்த மூணு பேரும் நின்ன எடத்த விட்டு அசையக்கூடாது. கேட்டியா”. பிரேம் எழுந்து தலையாட்டுவதற்குள்ளாகவே வகுப்பின் படிகளில் இறங்கியிருந்தார். தெண்டில் பிரேமைப் பார்த்த பார்வையில் கற்பழிப்பைத் தவிர இந்திய தண்டனைச் சட்டத்தில் இருக்கும் அனைத்து குற்றங்களையும் அவர் மீது நிகழ்த்தும் வன்ம நோக்கம் கனன்றதை “குறியீட்டு வாசிப்புக்கு” உள்ளாகாத அப்போதே எங்களால் உணர முடிந்தது. தெண்டிலின் பார்வை புல்தடுக்கி பக்கம் திரும்பியது. புல்தடுக்கி வராத கண்ணீரை துடைக்கும் சாக்கில் கைகளால் முகம் பொத்தி இருந்தார். சங்கீதாவின் தலை வகிடு மட்டுமே அவர் முகம் இருக்க வேண்டிய இடத்தில் தென்பட்டது. அவர் அணிந்திருந்த வெளிர் நீல சட்டையின் நெஞ்சுப் பகுதி அடர் நீலமாக மாறுவது அதிகரித்தபடியே வந்தது. மெஜூரா தான் முதலில் எழுந்தாள். பிரேம் பார்ப்பதை சற்றும் மதிக்காமல் தண்ணீர் பானையின் பக்கம் போய் தம்ளரில் நீர் மொண்டு வந்து சங்கீதாவிடம் நீட்டினாள். பிரேம் லேசாக அசைந்தபோது மெஜூராவின் மைத்தடங்கண் தாடகைக் கண்ணாக மாறி அவனைப் பார்க்க பிரேம் அப்படியே அமர்ந்தார். சங்கீதா முகம் கழுத்தின் மேலாக நிமிரவேயில்லை. தண்ணீரை இடக்கை மெல்ல விலக்கியது. மெஜூரா தண்ணீரை வாயிலில் கொட்டி விட்டு தன்னிடம் வந்தமர்ந்தார்.
பிரேமின் முகத்திலிருந்த சிடுசிடுப்பு மறைந்து சினிமா தியேட்டரில் செய்தித்தாள் படிப்பவன் முகம் போல மாற ஆரம்பித்தது. சங்கரம்மாள் வகுப்பாசிரியர் கணபதி சாருடன் திரும்பி வந்தார். படியேறி வரும்போதே கணபதி சார் தெண்டிலை கையறு நிலையில் அடிபட்ட பார்வையாகப் பார்த்துக் கொண்டே வந்தார். “சொல்லுங்க சார்வாள், கூட்டுக் களவாணித்தனமா செஞ்சுருக்காங்க. இந்த வயசுலயே என்னா திண்ணக்கம் பாத்தியாளா. என்ன செய்யலாம் இவங்கள? “ – சங்கரகருப்பு அருள்வாக்கு குரலில் ஆலோசனை கேட்டார். கணபதி சார் குரல் உலர்ந்திருந்தது – “ நம்பித்தானடே கையெழுத்து போட்டோம். இப்டி செய்ய எப்படிடே யோசன வந்துச்சு? அப்டி தப்பா யோசிக்க மாதிரியாடே பாடஞ்ச்சொன்னோம்?” தெண்டில் தலை கவிழ்ந்தார்.
“ஏம்ல பெனியேலு, உங்ககப்பாவான எம் பையன் சண்டே கிளாஸ் போறான், சண்டே கிளாஸ் போறான்னு பசார்ல பெரும பேசுதாரு. நீ இப்டி கர்த்தருக்கு விரோதமா செய்யலாமாடே?” பெனியேல் இப்போது நிஜமாகவே கண்ணீரைத் துடைத்துக் கொள்ள ஆரம்பித்தார். “யம்மா, ஒன்ன எவ்வளவு கெட்டிக்கார புள்ள, படிப்புல சரஸ்வதி கடாச்சம் உள்ளவன்னு நெனச்சிருந்தேன். எவ்வளவு நம்பினேன். இப்டி நீ செய்யலாமா? இனி ஒன் நோட்டை எடுத்தாலே கூட நாலு மட்டம் சரி பாக்கணும்னு தோணுமே. புத்தியில்லாதன் தப்பு செஞ்சா அவனோட போகும். புத்தியுள்ளவன் தப்பு செஞ்சா கூட இருக்கப்பட்டவங்களையும் சேத்துல்லா குழில தள்ளும். இந்தப் புள்ளைகல்லாம் ஒன்னக் கண்டு நல்லாப் படிக்கும்னு நெனச்சேனே. இந்த கழுதப்பொரட்டு வேலயவா மத்த புள்ளைக ஓங்கிட்டருந்து படிக்கணும்ங்க..” – கிணற்றில் முக்குளிப்பான் அடித்து வெளியே வருகையில் வாயாலும், மூக்காலும் ஒருசேர மூச்சு வாங்கும் ஓசையைப் போன்றதொரு சப்தம் சங்கீதாவிடமிருந்து எழுந்தது. மழையில் நனைந்த ஆட்டுக்குட்டி போல அவர் உடல் நடுங்க ஆரம்பித்தது. பாண்டியம்மாள் யாரும் எதிர்பார்க்காமல் கண்ணீர் விட ஆரம்பித்தார். சுகுமாரி, இரு மாரியம்மாள்கள், இரு வள்ளிமயில்களில் ஒரு வள்ளிமயில் என பெண்கள் தரப்பில் கண்ணீர் சார்ங்கம் உதைத்த சரமழை போல பொழிய ஆரம்பித்தது. சங்கரம்மாள் ஒரு அதட்டில் அனைவரையும் உறைய வைத்தார்.
இருவரும் பேசிமுடித்ததும் சில முடிவுகள் உடனே அமுல்படுத்தப்பட்டன. வகுப்பினைக் கவனிக்கும் பொறுப்பு உடனடியாக ஆசிய ஜோதி அணியினருக்கு திரும்பக் கொடுக்கப்பட்டது. தெண்டில் அணியினர் அனைவரும் அவரவர் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர். இனி குறிப்பேடுகளை தேதி வாரியாக சரி பார்த்து ஆசிரியர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூடுதல் தனிப் பொறுப்பு பிரேமுக்கு ஒதுக்கப்பட்டது. தவறு செய்த மூவருக்கும் அன்று மாலை பள்ளி முடியும்வரை வகுப்புக்கு வெளியே படிக்கட்டில் நின்று கொண்டேயிருக்கும்படியாக தண்டனை அளிக்கப்பட்டது.
மூன்றரை மணிக்கு விடப்படும் 15 நிமிட இடைவேளையின்போது பெண்கள் அனைவரும் சங்கீதாவைச் சூழ்ந்து நின்றனர். ஆசியஜோதி அணியினர் பிரேமைச் சுற்றி நின்றோம். பிரேம் தன் இடத்திலிருந்து எழவில்லை. நானும், சிவாஜியும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும், சொல்லத் தெரியாத ஏதோ வருத்தத்திலும் இருந்தோம். போரில் வென்றாலும் மன்னனை இழந்த படையினரென ஆசியஜோதி அணியினர் உணர்ந்திருந்த தருணம். தெண்டில் கோஷ்டியார் அவரைச் சுற்றி நிற்கவில்லை. ஆனால் தனியே வெளியேறி அவர்கள் உணவுண்ணும் இடமான வேப்பமரத்தடியில் கூடி பேசிக் கொண்டிருந்தனர். “வீட்பாட்நோட்லாந மக்கு தானலனிமே, ஏன்லும் ருக்கீக” (வீட்டுப்பாட நோட்டுல்லாம் நமக்கு தானல இனிமே, ஏன் உம்முனு இருக்கீங்க)- டொம்ப்ளி மெளனத்தின் கனம் தாளாமல் குமுறியதை மு மா கூட பொருட்படுத்தவில்லை. மாலை இடைவேளையில் ஆசிரியைகள் அறையில் சம்பவம் விவாதிக்கப்பட பாலகனி டீச்சரும், யோகாம்பாள் டீச்சரும் விரைந்து வந்தார்கள். சங்கீதாவை செல்லமாகக் கடிந்து கொண்டும், தெண்டிலை அவரது கெடுமதி யோசனைக்காக விரைவில் தாம் இருவரும் சேர்ந்து தோலை உரிக்கப்போவதாகவும், பெனியேலை அழுத்தித் தொட்டாலே தாம் இருவரும் கொலைக் குற்றத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதால் தற்காலிக மன்னிப்பும், தண்டனை ஒத்திவைப்பும் அறிவித்து தாம் சங்கரம்மாள் டீச்சரிடம் பேசி விட்டதாகவும் மூவரும் வகுப்புக்குள் சென்று அமரலாமெனவும் ஆறுதல் சொன்னனர். தெண்டிலும், பெனியேலும் விரைந்து சென்று இருக்கையில் அமர சங்கீதா நகரவேயில்லை. டீச்சர்கள் இருவரும் அவரை தோள்களைப் பிடித்து உந்தியும் அவர் ஓரடியும் எடுத்து வைக்கவில்லை. அன்று தலைமை ஆசிரியர் திருனவேலிக்கு மீட்டிங் போயிருந்ததால் நிலவரம் கலவரமாக ஆகவில்லை. ஆனால் சங்கீதாவின் சத்தியாகிரகம் பிற ஆசிரியர்களையும் எங்கள் வகுப்புக்கு இழுத்து வந்தது. சங்கரம்மாள் டீச்சரே வந்து அவளை உள்ளே போகும்படி சொல்லியும், கணபதி சார் வந்து தாம் மன்னித்து விட்டதாக சொல்லியும் சங்கீதா அசையவேயில்லை.
இடைவேளை முடிந்து வகுப்புகள் துவங்குவதற்கான மணி ஒலித்ததும் ஆசிரியர்கள் ஒவ்வொருவராக கலைந்தனர். சங்கரம்மாள் டீச்சர் மட்டும் எஞ்சி நின்று மெல்ல அவள் அருகில் சென்று குனிந்திருந்த தலையை மோவாய் பற்றி நிமிர்த்தியபோது கருப்பன் இறங்கி மலர்ந்திருந்தான்- “ ஏட்டி, வாக்குக்கு கட்டுப்படுத கருப்பனாக்கும் என் குலசாமி. சொல்லுக்கு கட்டுப்பட்டு நிக்க எவனும் தப்பு செய்ய மாட்டான். நீ என்னவோ புத்தி மழுங்கி இந்தத் தப்புக்கு ஒத்துகிட்டே. இனி நீ தப்பு பண்ணமாட்ட. வாக்கு கொடுத்த நாஞ் சொல்லுதேன். உள்ள போ, இல்லையா நானும் நிக்கேம்டி இங்ஙணயே”. சங்கீதாவின் கண்கள் புது ஊற்று கண்டன. கருப்பன் கைசவுக்கை கீழே வீசிய கையால் அருள்முத்திரை அருளி விலகினான். சங்கீதா வகுப்புக்குள் வந்து அமர முத்துசாமி சார் பாடம் நடத்த புத்தகத்தைப் பிரித்தவர் சங்கீதாவைப் பார்த்தத்தும் அப்படியே அமர்ந்தார். “அரவங்காட்டாம படிங்கல, இன்னைக்கு பாடம் வேண்டாம்”. ரகசியமாய் பேசவும் கூட எவருக்கும் மனமில்லை.
மாலை பள்ளி விட்டதும் நாங்கள் கிளம்பினோம். கணபதி சார் தன்னைக் கூப்பிட்டதாகச் சொல்லி பிரேம் ஆசிரியர் அறைக்குச் சென்று விட்டார். எங்களுடன் அன்று மாலை அவர் வீடு திரும்பவில்லை. சிவாஜிதான் புலம்பிக் கொண்டே வந்தார் – “ஏல, பிரேம் என்னவோ மாதிரி ஆயிட்டாம்லா. நாம கொஞ்ச நேரம் கழிச்சு அவன் வீட்டுக்கு போவமா?”. நாங்கள் போனபோது பிரேம் உமையொருபாகன் கோவிலுக்கு சென்றிருப்பதாக அவர் அம்மா சொன்னார் (என்னடா பசங்களா, உங்கள்ட்டலாம் சொல்லாமலா போனான்? நீங்கல்லாம் கோவிலுக்கு வந்திருப்பேள்னு நெனச்சேனே”- பிரேம் அம்மா). நாங்கள் எங்களுடைய “ஓட்ட புல்லட் பைக்கில்” (சிவாஜி மட்டும் ஓட்ட ஸ்கூட்டர் பைக்கில்) விரைவாகக் கிளம்பி கோவிலைச் சென்றடைந்தபோது பெருவாயிலின் முன் நீண்டு கிடக்கும் நீள்மண்டபத்தின் பக்கவாட்டுக் கல்மேடையில் தனியே தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த பிரேமைப் பார்த்தோம். கொடை முடிந்த மறுநாள் மதியவேளை கருப்பன் கோவில் போல அவர் முகம் இருந்தது.
(தொடரும்)
Hilarious. It’s really a feast to read each episode; beings back my school day memories. Keep it up.