- ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை
- ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்
- ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’
- ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!
- ‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’
- இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்
- அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!
- தனிமையின் பிடியில் புரூரவஸ்
- புரூரவஸ் செய்த பாவம் – அழகு, காதல்
- மாறாத பேரானந்தம்

ஒரு கதைக்கரு – அது புராணமோ புனைவோ, எழுத்தாளனின் பார்வையில் எப்படியெல்லாமோ பல மாற்றங்களையடைந்து என்னைப்போன்ற, அதைப்பற்றி எழுதுபவர்களை உண்மைக்கதையைத் தேடிச் செல்ல வைக்கிறது. (உண்மை சொல்லும் பொறுப்பு கடைசியில் என் போன்றோரின் கடமையாகிறது!) ஆனால் ஒவ்வொரு எழுத்தாளனும் தான் எழுதியதற்கு ஒரு காரணத்தைக் கொண்டிருக்கிறான் (Justification). இதையும் காண்போம்.
இத்தொடரின் முடிவில் நான் அறிந்துகொண்ட அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். அவ்வப்போதும் சில தொடர்பான விஷயங்கள் கூறப்படும்.
இப்போது ஸ்ரீ அரவிந்தரின் மொழியாக்கத்தின் கதையைக் காணலாம். இதுவே காளிதாசன் இயற்றிய மூல நாடகம்.
ஐந்தாவது பகுதியில் ஊர்வசியுடன் நாடு திரும்பிய புரூரவஸைக் காண்கிறோம். நாடு திரும்பி தன் பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறான். மக்கள் மகிழ்கின்றனர். இருப்பினும் தங்கள் அரசனுக்குப் பின் நாட்டையாள ஒரு வாரிசு இல்லையே என வருந்துகின்றனர். அப்போது ஒரு பெண்ரிஷியுடன் அழகான துடியான ஒரு இளம் சிறுவன் வருகிறான். அரசன் புரூரவஸைப் போலவே உள்ள அவன் யாரென அனைவரும் வியக்கின்றனர். அழகானதொரு சொற்றொடரால் தன் உள்ளத்தைத் திறந்து காட்டுகிறான் அரசன்.
"இவனைக்கண்டு என் கண்களில் நீர் பெருகுகின்றதே, ஒரு தந்தையின் உள்ளத்தில் பெருகும் அன்பு இதுதானோ, இவன் என் மகன் என எண்ணம் எழுகின்றதே,"
எனவெல்லாம் சிந்திக்கிறான்.
பின்பு அவன் யார் எனும் விஷயம் அந்தப் பெண்ரிஷி வாயிலாக அவனுக்குக் கூறப்படுகிறது.
ஊர்வசியைக் காலவரையறையின்றிப் பிரிந்திருக்க சுவர்க்கவாசிகள் சம்மதிக்கவில்லை. ஆகவே ஊர்வசிக்கு ஒரு குழந்தை பிறந்ததும் அக்குழந்தையும் புரூரவஸும் சந்திக்கும்போது ஊர்வசி புரூரவஸுடன் இருக்கும் காலக்கெடு முடிந்து விடுமென்றும் இந்திரனால் கூறியே அனுப்பப்பட்டாள். ஆகவே புரூரவஸின்மீது தான் கொண்டுள்ள அபரிமிதமான காதலால் குழந்தையை அவன் கண்களில் படாமல் ஒளித்து வளர்க்க, சியவன முனிவரின் ஆசிரமத்தில் விட்டு வைக்கிறாள். இப்போது வாய்ப்பு வந்தமையால் இளவரசன் இங்கழைத்து வரப்பட்டுள்ளான்.
தந்தையும் மகனும் சந்தித்துக் கொண்டுவிட்டதனால் தான் புரூரவஸைப் பிரியும் நேரம் வந்துவிட்டதென எண்ணி ஊர்வசி கண்ணீர் வடிக்கிறாள். அரசன் புரூரவஸும் தன் மகனுக்குப் பட்டம் கட்டிவிட்டு வனத்திற்குச் செல்ல முயல்கிறான். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற, அனைவரும் வருத்தத்துடன் இருக்கிறார்கள்.
அப்போது அங்கே நாரதர் வருகிறார். முறைப்படி அவரை வரவேற்ற மன்னன், தன் மகன் ஆயுவை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறான். அவரையே தன் மகனுக்கு முடிசூட்டவும் வேண்டுகிறான். அவரும் அப்படியே செய்துவிட்டு, புரூரவஸிடம், தற்சமயம் அரக்கர்களுடன் மீண்டும் ஒரு பெரும்போர் மூள இருப்பதனால், புரூரவஸ் தனக்கு உதவ வேண்டுமென இந்திரன் வேண்டிக் கொண்டதனையும், இதற்குப் பரிசாக ஊர்வசி அவனது ஆயுட்காலம் முழுமையும் அவனுடனே இருப்பாள் எனவும் கூறியதனையும் தெரிவிக்கிறார்.
சுபம் என்று நாடகம் முடிவடைகிறது. மேடை நாடகத்தை இவ்வாறு முடித்து விடலாம். ஆனால் ஒருவரோ அல்லது ஒரு சிலரோ மட்டுமே கூடி ஆழ்ந்து படிக்கும் கவிதையை, அதன் நயம் கருதி, உணர்ச்சிகளை ஆழமாக விவரித்துச் செல்லும் நயம் கவிதை விரும்பிகளுக்கு சுவாரசியமானதாகிறது. இலக்கிய விருந்தாகிறது.
கவிதையைப் படித்தபின் நயமான பகுதிகளைக் காண்போம்.
காண்டம்-3- கவிதை தொடர்கின்றது
ஆங்கில மூலம்- ஸ்ரீ அரவிந்தர்;
தமிழாக்கம் – மீனாக்ஷி பாலகணேஷ்
சினத்தில் அவன் வேகமான ஓரெட்டில் குதித்தெழுந்தான்
தனது வில்லை எட்டினான். அதனைப் பற்றுமுன் நடுங்கினான், 910
அவனது ஆத்மா முழுமையும் மூண்டவொரு பயத்தில்.
திடுக்குற்று அவன் அவளை நோக்கித் திரும்பினான். திடீரன விரிந்த
அவ்வறை முழுதும் அதன் ஒப்பற்ற பிரகாசத்தில் நின்றது,
மின்னல்களுடன், வீரமுள்ள விசாலத்தில்,
அரசனின் அசைவுகளில், ஒரு சிலை நிற்பதுபோல்,
புகழுடன் எழுந்து, வசீகரமான நிர்வாணமான
அங்கங்களுடன், அழகான வீரன், புரூரவஸ்,
அந்தப் பயங்கரமான ஒளியில். நாளின் ஒளியைவிடப் பிரகாசமாக
அவன் ஒரு பளீரிடும் சமயத்தில் நன்றாகப் பார்வையிட்டான்
பரிச்சயமான அவ்விடத்தை, வேலைப்பாடு மிகுந்த பெரும் 920
தூண்களின் உருவை, பின்னால் நிற்கும் உயரமான
சுவர்களின் அசாத்தியமான அமைப்பை, அமைதியான தரையை,
அவளுடைய அழகான வடிவை அணைக்கத் தகுதியற்று
தரையில் விழுந்து கிடந்த வசீகரமான ஆடைகளை,
மங்கலான ஒளியில் படுத்துக்கொள்ளும், அந்த உறுதியான படுக்கையில்
ஒவ்வொரு சிறப்பான வளைவும், நளினமாகத் தனித்துக் காணும்
பொன்னிற உடலும் பூப்போன்ற முகமும்;
அவள் பக்கலில் அழகிய புன்னகையுடன் மற்ற அந்தச்
சிறுகரம் அவளுடைய வேகத்தில் அவள்மீதே பறக்கும்
மின்னும் குழற்கற்றைகளை அழுத்திப் பிடித்தபடி. அனைத்தும்
தேய்ந்து மறைந்தன. 930
கொண்டாடி மகிழும் சுவர்க்கங்களூடே இடி முழங்கிச் சென்றது.
நீண்டநேரம் அவன் துடிக்கும் இதயத்துடன் அங்கு நின்றான்
தான் இழந்ததைப் பற்றிய அரைப்பிரக்ஞையில், மற்றொரு மின்னலுக்காகக்
காத்திருப்பது போல, அந்த மங்கலில் துழாவி வெறித்தபடி
தூரத்திற்கு ஏகிவிட்ட பிரியமான வளைவுகளுக்காக.
பின்பு ஒரு அமைதியான புன்னகையுடன் சென்று
சிறிதுநேரம் முன்பே அவள்கிடந்த இடத்தில்
இரு கரங்களை, அவள் இனிய மார்பகங்களை எதிர்பார்த்து,
ஆனால் கண்டான்
அவளுடைய இடம் வெறுமையாய்க் கிடந்ததை. அமைதியாக
தனது இதயத்திற்கு ரகசியமாகக் கூறியபடி அவன் படுத்துக்
கொண்டான்: 940
“அவள் எழுந்து தன் பளபளக்கும் ஆடையை
சுற்றிக்கொண்டு குளிர்ச்சியான மாடத்திற்குச் சென்றிருப்பாள்
அந்த சுவர்க்கத்து ஆடுகளுக்கு இனிய நீரைக் கொண்டு வருவதற்காக,
மேலும் சிறிதுநேரம் அங்கு நின்று, பார்த்து
இரவினை நோக்கி, எண்ணியபடி திரும்ப வருவாள்
அவற்றிற்கு நீரைக் கொடுப்பாள், அமைதியாகப் படுத்துக் கொள்வாள்
என்னருகே. பொழுது விடிந்ததும் நான் அவளைக் காண்பேன்.”
என்று அவன் உறங்கினான். ஆனால் சாம்பல்நிறப் பொழுது விடிந்து
அவன் இமைகளை உயர்த்தியது. அவன் கரங்களை நீட்டியபடி
அவளைத் தேடினான். தான் தனிமையில் இருப்பதனை அப்போது
உணர்ந்தான். 950
இருப்பினும் அவன் தனது நம்பிக்கையின்மையைத் தொடரவில்லை.
“அவள் எங்கோ சென்றிருக்கிறாள்,” கூறினான், “ஒரு சிறு பொழுது
எல்லையற்ற தூரத்து மௌனத்துள்
தனது பொன்னிற சகோதரிகளைக் கண்டுவரவும், அவளறிந்த
அருவிகளைக் காணவும் பூமியினதல்லாத ஆகாயங்களைக் காணவும்.
அவள் விரைவில் திரும்ப வருவாள், -அவளுடைய இதயம் அவளை
அங்கேயே இருக்கத் தூண்டினாலும், எனது இதயம் அவளை
இங்கே திரும்ப ஈர்க்கும்;-
விரைந்து வந்து தான் விட்டுவந்ததனைப்பற்றி என்னிடம் பேசுவாள்,
தன் குழந்தைகளை அணைத்துக் கொள்வாள், தன் இனிய
செயல்களையும் 960
தினசரி நிகழ்வுகளையும் தொடர்வாள், தான் விரும்பிய
அறைகளைக் காண்பாள்.”
தளராத உறுதியுடன், தனது அரசப் பணிகளைத் தொடர்ந்தான்
பெரும் இலக்குள்ள மனிதர்களிடையே, புனிதப் பணிகளில்
தொலைநோக்குள்ள நியாயவாதிகளைக் கொண்ட குழுமங்களில்
பெருந்தன்மையான உத்தரவுகளைக் கொடுத்து
வெண்கலம்போல் உறுதியாகக் காலத்தில் இருந்துகொண்டு,
தீர்ப்பளிப்பவனின் இருக்கையில் இருந்தபடி, குற்றங்காணவியலாத
தீர்ப்புகளையும், பெரும் வேறுபாடுகளை நீக்கியும் செய்தான்.
புனித நெருப்பின் மும்மூர்த்திகளாக இருந்து
தேவையான மழையை எழுப்பினான், பலவான்களான
மனிதர்களிடையிலும்,
சுமுகமான கூட்டங்களுக்கும் சென்றான். 970
போர்சம்பந்தமான வீர விளையாட்டுகளில் வென்றான்
இருப்பினும் இவற்றுடனான அவன் பொழுதுகளின்பின் ஒரு
வெறுமை இருந்தது.
ஒருவன் தன்னுடைய தவிர்க்கவியலாத விதிபற்றிய எண்ணத்தை
நிகழ்காலத்து இன்பங்களில் தன்னைக் குருடாக்கிக் கொண்டு
எவ்வாறு துணிச்சலாக மறக்க முயல்கிறானோ, அப்போது அடிக்கடி
ஒரு சிறு சப்தம், ஒரு கதவு தட்டப்படுதல், ஒரு பயங்கரமான சொல்,
அல்லது காரணமின்றி அவன் இதயத்தில் எழும் திடீர் பயம், அந்தக்
கொடூரமான எதிர்காலத்தின் அச்சம் நிறைந்த முகம் சாளரம் வழியாக
அவனைப் பார்த்தது; பேச்சற்று அவன் நடுங்கியபடி அமர்ந்திருந்தான்: 980
ஆக, புரூரவஸுக்கு, புனிதக் கூட்டங்களிலும்,
போர்போலும் கூட்டங்களிலும், தனிமையிலும், பேச்சிலும்,
அமர்ந்திருப்பதிலும், அடிக்கடி ஒரு திடீர் அச்சமுண்டாக்கும் பயம்
அவன் வாழ்வை பளீரிடும் மின்னல்போல் நிர்வாணமாக்கியது.
அவன் முழு உடலும் நடுங்கியது அவனது பலமான சரீரம்,
சுரம் கண்டதுபோல், அவன் கண்கள் குருடனைப்போல் விழித்தன;
உடனே அவன் ஆழ்ந்த பெருமூச்சுகளுடன் தன் ஆத்மாவைத்
தன்வசம் இருத்திக் கொண்டான்.
நீண்டநாட்கள் இவ்வாறு பொறுத்தான், ஆனால் பயத்தின் அதிர்ச்சியும்,
இரக்கமற்ற சூரியனின் ஒளிமிகுந்த செல்லுதலும்
விழித்திருக்கும் இரவுகளும் நினைவுகளுடன் யுத்தம் பயின்று 990
தெரியாமல் அவன் இதயத்தை பலவீனப்படுத்தியிருந்தன;
பின்பு அவன்
நம்பிக்கையற்ற ஒருவன்போல், எண்ணமோ, குறிக்கோளோ
இல்லாது,
மேற்கிலுள்ள அந்த சப்தமற்ற மங்கலான இடத்திற்குச் சென்று
அவளுடைய ஆடைகள் அவளின்றியும் படுக்கை கைவிடப்பட்டும்,
அவள் மதியத்தில் படுத்த குளிர்ச்சியான தரை, அவள் குரலினால்
இனிமையாக்கிய வாழ்க்கை இவை இல்லாதிருக்கக் கண்டான்,
சில பொழுதுகளில், பழைய ஆரிய மன்னர்களின் கைகளால்
கட்டப்பட்ட ஒரு உயர்ந்த நீர்நிலையில் அதன் கரைகள்
ரகசியமான சித்ரவேலைப்பாடமைந்த நீண்ட கீழ்வழிகளில்
திடீரெனக் கீழிறங்கும் எதிரொலிக்கும் இடிபாடுகளில் 1000
எதிர்க்க முடியாத வெள்ளப்பெருக்கின் ஓசையில்
இழிந்து, எதிரொலிக்கும் மலைகளில் எல்லாம் கேட்டு,
பளிங்கினாலான நகரங்களை அடக்கிவைத்து, அதனால்
பலவானான புரூரவஸின் தைரியம் அழிந்தது,
ஞாபகசக்தியும் அளவற்ற வருத்தமும் அலைக்கழித்தன
ஆனந்தவாழ்வின் எண்ணங்கள் சகிக்கமுடியாததாயின.
கண்ணீர் பெருகியது; அழிக்கவியலாத அந்த மாவீரன் நீட்டிய
கைகளுடன் கிடந்து அழுதான். அதன்பின் அவன் வாழ்வு
அவ்வறையிலேயே என்றானது. அவன் ஏதேனும் குழுமங்களில்
காணப்பட்டாலும், போர்சம்பந்தமான அல்லது இனிமையான
கூட்டங்களில், 1010
பார்த்தவர்கள் அமைதியான இறந்தவன் போல அவனைப் பார்த்தனர்.
அவனும் எங்கும் தங்கவில்லை, சிறிது தங்கினாலும்
அமைதியாகத் திரும்புவான், நிசப்தமான அறைகளில்
அவள் விட்டுச்சென்ற சிறு நினைவுச் சின்னங்களைப் பார்ப்பான்
பண்டு அவன் கண்டேயிராத அவற்றை,
அடிக்கடி இறுக அணைப்பான், முத்தமிடுவான், சிலசமயம்
உயிருள்ள நண்பர்களிடம்போல அவற்றிடம் இனிமையாகப் பேசுவான்,
உறங்கும் தன் குழந்தைகளிடம் அடிக்கடி அவற்றைத் தொங்கவிடுவான்.
அவன் நாட்களை எண்ணவுமில்லை, திரும்ப அழவும் இல்லை,
புலர்காலையை கண்ணீரற்ற கண்களால் பார்த்தான். 1020
தங்கள் மகத்தான அரசனுக்காக அனைத்து மக்களும் வருந்தினர்.
அமைதியாக அவனைப் பார்த்தபடி, பலர் முணுமுணுத்தனர்:
“இது அவனல்ல, அரசன் புரூரவஸ்
பூசிக்கத்தக்க மாவீரன், அவனுடைய தீவிரமான ஆத்மாவினால்
ஒரு திறமைவாய்ந்த அமைதியான தேரோட்டியைப்போல் ஆண்டவன்,
கன்னி இளையின் மகன், நமது அரசன்.
இப்போது எதிரியின் போர்முழக்கம் நம் கோட்டைக் கதவுகளில்
விரைந்து வரும்போது, காற்றனைத்தும் நன்றாக இருக்க,
அவன் கட்டாயம் எழுந்து தன் வில்லை உயர்த்தி,
தனது விரையும் தேர் கோட்டைக்கதவுகள்மூலம் பறக்க, 1030
கடலைப்போல அவர்களை எதிர்த்து, வெற்றிகொண்டு,
ஓடும் தேர்ச்சக்கரங்களிடையே தான் தானாகவே இருப்பான்.”
வருத்தத்துடன் இவற்றை முணுமுணுத்துக்கொள்வர். ஆனால்
அந்த அரசன்
ஒளிமிகுந்த மாதங்கள் உற்சாகமான பூமியைக் கொண்டுவந்தபோது,
அவனது மரத்துப்போன ஆத்மா பூக்களின் வருடலை உணர்ந்தது,
அவனது துக்கத்திலிருந்து சிறிதே எழுந்தது, அவன் கண்களை
விண்மீன்களை நோக்கி எழுப்பியது. அவன் மெதுவாகக் கூறினான்:
“நான் சீக்கிரம் நம்பிக்கையின்மையை அடைய மாட்டேன்.
ஓ, நீ என்னைவிட்டு வெளிச்சத்தில் காணாமல் போய்விட்டனையா,
கொடுமை, ஒளிரும் அரைக்கோளங்களின் இடையே? 1040
ஆனாலும் நான் அங்கும்கூட எனது இன்பத்தைத் தேடுவேன்.
அனைத்துப் பெரிய அழிவற்றவர்களும் பொறாமைகொண்டு உன்
பொன்னுடலைச்சுற்றித் தங்கள் கேடயங்களுடன் நின்றாலும்
நான் அவர்களுடன் மோதுவேன், அல்லது எனது பலமான பொறுமை
அவளது தூரத்து விண்மீன்களிடையே இருந்து எனது அன்பைப்
பறித்துவிடும்.
நான் இன்னும் இளையின் மகன், புரூரவஸ்,
அந்த அன்பற்ற பலமானது தொலைந்துவிட்டாலும், ஆயுதந்தரித்த
அருமையான ஆத்மாவாக ஒருகாலத்தில் இருந்த நான்
வீழ்ந்து விட்டாலும்.”
கூறியபடியே அவன் கூட்டங்களுக்கு வந்தான்,
அரசனைப் போல வல்லமையுடன், பரந்த அசுரத்தனமான 1050
வளைவுகள் கொண்ட அந்தப் பளிங்குக்கல் இடத்திற்கு,
அமைதியான தூண்களினின்று ஒர் சங்கினைப் பற்றியெடுத்து
அதனை ஊதினான். அந்த ஒலி ஒரு புயலைப்போல
ப்ரதிஷ்டானத்தின் வீதிகளில் பரவியது. வீடுகளிலிருந்து மக்கள்
பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் பெருக்கெடுத்து வந்தனர்.
கம்பீரமான தலைவர்களும்
பலம்வாய்ந்த போர்த்தலைவர்களும் வயதான புகழ்படைத்தோரும்
பெருமைவாய்ந்த புலவர்களும் முதலில்; இளை நாட்டின் மக்கள்
தொடரும் மழையைப்போல் பெருகி அவர்கள்பின் வந்தனர்,
முகங்கள் அளத்தற்கரிய கூடங்களை நிறைத்தன. 1060
அவர்களிடையே அந்த அழகான மாபெரும் அரசன்
ஒளியென எழுந்தான்; அழிவின்மையின் அற்புதமான
எதிர்பார்ப்புகள் அவன் கண்களில் அவன் புருவத்தின்
மரியாதைக்குரிய சுற்றளவில் மின்னலிட்டன.
“நான் செய்த எனது மக்களே, நான் உங்களிடமிருந்து செல்கிறேன்;
இளையின் பிரஜைகளே, எனது புகழையும் துயரத்தையும் அறிந்த
உங்களிடம் நான் என்ன கூற முடியும்? இப்போது நான்
அவள் இல்லாத தனித்த பெரும் கூடங்களையும் தோட்டங்களையும்
சகித்துக்கொள்ள இயலாதவனாகி விட்டேன். நான் இப்போதே சென்று
அவளை அழிவற்ற மரங்களின் அடியிலோ அல்லது நீரூற்றுக்களின் 1070
ரகசியங்களிலோ கண்டுபிடிப்பேன். ஆனால் நான் என் பணிகளையும்
புலர்காலை போலும் உறுதியற்ற தலையெழுத்தைக் கொண்ட ஒரு
சிறு தேசத்தையும் விட்டுச் செல்வதனால் – ஆயுஸ்,
அவளுடைய மகனை, உங்களுக்கு அளிக்கிறேன். அவன்
அழகிலும் பலத்திலும் இணயற்றவன் உங்களை ஆள்வான்.
அந்தோ! என் வீரச்செயல்களை பூமியில் விதைத்தேன், பரந்த
சுவர்க்கங்களை எனது நிரந்தரமான ஞாபகார்த்தங்களாக்கினேன்,
சுவர்க்கத்தினின்று
அழிவற்ற நெருப்பைக் கொணர்ந்தேன், சுவர்க்கத்தில்
போரிடும் கடவுள்களுடன் நானும் போரிட்டேன்.
ஓ மக்களே, நீங்கள் எனது பெருமை நிறைந்த செயல்களில் பங்கு
கொண்டீர்கள் 1080
பூமியில் வாழ்ந்த சில புகழ்வாய்ந்த ஆண்டுகளிலேயே,
நான் புரிந்த போர்களிலும், பெருத்த ஆன்மீக முன்னேற்றங்களிலும்,
நான் செய்த அருமையான ஸ்தாபனங்களிலும்.
பெரும் செயல்களை நாம் இணைந்து செய்திருக்கிறோம், ஓ என்
குடிமக்களே.
ஆனால் நான் இப்போது திரும்பக் கடவுள்களிடம் சென்று
அவர்கள் என்னிடமிருந்து எடுத்துச் சென்ற அவளைத் திரும்ப
உரிமை கொள்ளப்போகிறேன், எனது உயிரான பரிசாக.”
அவன் பேசினான். நாடு முழுமையும் அவன் கூறியதை
வாய்பேசாது கேட்டது.
பின் ஊர்வசியின் மொட்டு கொண்டுவரப்பட்டது,
வேத முழக்கங்களுடனும், புனித கங்கை நீருடனும்
அரசனாக முடிசூட்டப்பட்டது, அந்த தேசம் அவன் சுருண்ட
குழற்கற்றைகளில் 1090
வைக்கப்பட்டது. ஆனால் புரூரவஸ் முன்னால் சென்றான்,
அமைதியான வரிசையான மனிதர்களூடேயும் ஒளிரும் ஆயுதங்களிடையேயும்
அஸ்தமனச் சூரியனின் இறுதிமேகம் வயல்வெளிகளைச் சூழ
வயல்வெளிகள் கருத்தன. இளையின் பாறையிலிருந்தும்
இளையின் கன்னிக் கோவிலிலிருந்தும்,
ஒரு விசையுடன் பாயும் பிரகாசம் அற்புதமாக எழுந்து
அந்த பிரதாபம் மிக்க வெளியேறும் அரசனைச் சூழ்ந்து ஒளிர்ந்தது.
அவன் அந்த ஒளியில் திரும்பி தனக்குக் கீழே கண்டான்
ஒளி வீசும் அகன்ற, பெருமை மிகுந்த நகரத்தை,
சுவர்க்கத்தை நோக்கி பிரம்மாண்டமாகக் குவிந்து எழும்பி நிற்கும் 1100
கோவிலும் வீதிகளும் அரண்மனையும், அந்தக் கடல்போலும்
துக்கம் நிரம்பிய முகங்களும், வருந்தி நிற்கும் கண்களுமாக;
ஒரு பொழுதில் கண்டான், பின்பு ஒளியினின்று அவை காட்டினுள்
சென்று மறைந்தன. பின் பிரதிஷ்தானத்திலிருந்து ஒரு உரத்த
பேரழுகை எழுந்தது கொடூரமான நாடோடிகள் அதன் வீதிகளில்
இருப்பதுபோல, அதன் சுவர்க்கத்தைத் தொடும்
பெரிய கோவில்கள் நெருப்பால் அழிவதுபோல,
ஆனால் அவற்றைச் செவிமடுக்காது அவன் இருளினுள் சென்றான்.
~~~~~~~~~~~~~~~
ஸ்ரீ அரவிந்தரின் காவியத்தின் இப்பகுதி முழுமையும் புரூரவஸின் பிரிவுத் துன்பத்தை விளக்குவதில் மையம் கொள்கிறது. இது புதியதான ஒரு பார்வை. காதலும் தாபமும் பிரிவும் ஆண், பெண் இருபாலருக்கும் ஒன்றுபோன்றதே!
ஊர்வசியின் ஆடுகள் திருடப்பட்ட போது, “இங்கு யாருமே ஆண்மகன் இல்லையா?” என அவள் எழுப்பும் அவலக்குரல் நிர்வாணமாக இருந்த புரூரவஸைத் தன் நிலை உணராமல் துள்ளியெழ வைக்கின்றது.
அது மட்டுமல்ல, பின் நிகழும் நிகழ்வுகள் அனைத்துமே அவன் உணர்ந்து கொண்ட பின்விளைவுகள் என அறிகிறோம். அதனப் பற்பல அவலம் மிகும் காட்சிகளால் நம் மனதை உலுக்கி, பச்சாதாபத்தில் ஆழ்த்தி கவிதையைக் கொண்டு செல்லும் நயம் மிகவும் சுவையானது.
தனக்குத்தானே அவன் கூறிக்கொள்ளும் நம்பகமற்ற சமாதானங்களும் இந்த வகைதான். தான் அவளைக் காதலிப்பது போலவே அவளும் தன்னைக் காதலிப்பதாக எண்ணிக் கொள்கிறான்.
‘பலவானான புரூரவஸின் தைரியம் அழிந்தது.’ ஈட்டி பாய்ந்தது போன்ற சொற்றொடர்.
அழிக்கவியலாத அம்மாவீரன் நீட்டிய கைகளுடன் கிடந்து அழுதான்,’– ஒருவர்மீது எல்லையற்ற காதல் கொண்டுவிட்டால் ஒருவன் எத்தகைய பலவானானாலும், அவனுடைய புகழ், பதவி எதுவுமே அவனுக்கு ஒரு பொருட்டல்ல எனக் காண்கிறது. இத்தனைக்கும் அவனை திலோத்தமை முதலிலேயே எச்சரிக்கை செய்துள்ளாள். காதல் அவன் சிந்தனையைக் குருடாக்கி விட்டதே!
நடைப்பிணமாக அவன் உலவுவதைக் கண்ட மக்களும் உடன் வருந்தினர்.
அவன் திரும்பத் தேவர்களிடம் சென்று அவளை மீட்டு வருவதனைப்பற்றிப் பேசுகிறான். ஊர்வசி தன்னிடம் விட்டுச் சென்ற அவளுடைய குழந்தைகளில் மூத்தவனான ஆயுவுக்குப் பட்டம் சூட்டிவிட்டு அவளைத் தேடிச் செல்கிறான் என்பதுடன் அரவிந்தரின் கவிதையின் மூன்றாம் காண்டம் நிறைவு பெறுகின்றது.
ஒரு பெண்ணுக்குக் காதலே தன் வாழ்வு; ஆனால் ஒரு ஆணுக்கு அவன் அனுபவிக்கக்கூடிய விஷயங்களுள் ஒன்று என்பார்கள். இங்கு அது தலைகீழாகி விட்டது. ஊர்வசியின் மறைவு- பிரிவு புரூரவஸைப் பித்தனாக்கி விடுகின்றது. இதனை விலாவாரியாக விவரிப்பதன்மூலம் பல செய்திகளை ஸ்ரீ அரவிந்தர் நமக்கு உணர்த்துகிறார்.
1. காதல் உணர்வுகள் மானிடரிடமே மிகுந்து காணப்படுகிறது. தேவர்களும், அப்சரஸ்களும் இதனை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர் எனலாமா? (நாம் இதற்கு மகாபாரதத்திலிருந்து ஒரு கதையைக் காணலாம். தேவர்களும் அப்சரஸ்களும் இளமை மாறாதவர்கள். சந்திர வம்சத்து அரசன் புரூரவஸ். கிட்டத்தட்ட பத்து தலைமுறைகளின் பின்பு, சந்திர வம்சத்தவனான அர்ஜுனன் தன் தந்தை இந்திரனைக் காண சுவர்க்க லோகம் செல்கிறான், அப்போது இதே ஊர்வசி இவனிடம் காதல் கொள்கிறாள். அர்ஜுனன் இது தகாத உறவென்றும் அவள் தனக்குப் பாட்டி முறையாக வேண்டுமெனவும் கூற, சினம்கொண்ட அவள் அர்ஜுனனைப் பெண்ணாகப் போகுமாறு சபிக்கிறாள். இதுவும் அஞ்ஞாத வாசத்தின்போது அவனுக்கு ஒரு வரமாகின்றது). அதனால்தான் மானிடனான புரூரவஸின் தவிப்பு விவரிக்கப்பட்டுள்ளது. அப்சரஸ் ஊர்வசி அப்பிரிவினைப் பொருட்படுத்தவில்லை எனவே எண்ணத் தோன்றுகிறது.
2. ஓரிடத்தில் ஊர்வசி தனது ஆடுகளைத் தன் குழந்தைகளைவிட நேசித்தாள் எனக் கூறுவதன் மூலம் அவளுடைய அன்பின் ஆழமற்ற தன்மையைப் பற்றி நமக்கு ஒரு செய்தியைக் கூறுகிறார்.
ஆனால் காளிதாசனின் கதை வேறு போக்கில் செல்வதைக் காணலாம். தன் குழந்தையை ஊர்வசி அவன் கண்களில் படாமல் வளர்ப்பதன் காரணமே அவனுடன் ஆயுள் பரியந்தம் வாழ்வதற்கே எனக் காண்கிறோம். தன் காவியங்கள் சுப முடிவைக் கொண்டிருக்க வேண்டும் எனக் காளிதாஸன் எண்ணியிருந்திருக்கலாம்,
3. கூடலின் போதன்றி வேறெப்போதும் அவன் அவள்முன் நிர்வாணமாகத் தென்படக்கூடாது எனும் கட்டளையை (இது திலோத்தமை வாயிலாகக் கூறப்பட்டுள்ளது) அவன் மீறிவிடுகிறான். இதுவும் கந்தர்வர்கள் செய்தவொரு தந்திரத்தினால்தான்.
இப்படிப்பட்ட பலரகமான செய்திகளை உள்ளடக்கிக் கொண்டு இந்தக் காண்டம் நிறைவு பெறுகிறது.
ஸ்ரீ அரவிந்தரின் கவிதை நான்கு காண்டங்களை மட்டுமே கொண்டது. இவர் எவ்வாறு இந்தக் கதையை முடித்துவைக்கிறார் எனக்காண நான் ஆவலாக இருக்கிறேன்.
(தொடரும்)