சிலையும், கல்லும் – நூல் விமர்சனம்

ரா. கிரிதரனின் விமர்சன நூல் – ‘சிலையும், கல்லும்’

கிண்டில் வெளியீடு விலை ரூ 328/-

பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட 32 நூல்களின் விமர்சனங்கள்

சில எழுத்துக்கள் இலக்கியங்கள் ஆவது உண்டு. ஒரு விமர்சன நூல், இலக்கியமாக இருக்கும்  என்று சொன்னால், அது திரு. ரா கிரிதரனின் (இனி கிரி) விமர்சன நூலான ‘சிலையும் கல்லும்’ என்று நிச்சயமாகச் சொல்லலாம். பன்முகத் திறமைகொண்ட எழுத்தாளர், இலக்கியவாசகர், இசை, பிற கலைகள் போன்றவற்றில் சிறந்த கூர்மையான நோக்குள்ளவர், பயணங்களில் ஈடுபாடு உள்ளவர், பாண்டிச்சேரியை சேர்ந்தவர், தற்சமயம் லண்டனில் வசிக்கிறார் என நினைக்கிறேன், உலக இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பவர் என்று இவரைப் பற்றி  நாம் சொல்லிக்கொண்டே போகலாம். 

தங்கத்தின் மாற்றினை அறிவதற்கு. ஆசாரி. உரைகல் என்று ஒன்று வைத்திருப்பார். கிரிதரனின் வசம் அந்தக் கல் வந்திருக்கும் போலிருக்கிறது. முதல் கட்டுரை நாம் கொண்டாடும் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம். வாசனையைக் கொண்டு, பூவை அறிவது போல, நம்மை நேரடியாக பாதிப்பது, ஒரு எழுத்தின் மூலம் எழுத்தாளனை நாம் அறிந்துகொள்வதே. ஹென்றி என்ற. கதாபாத்திரம், புனைவின் பிடிகளுக்குள் கட்டுப்படாதவன். அவனது சமநிலை. ஆச்சரியப்படுத்தும் ஒன்று. ஜெயகாந்தன் சொல்லும் மிகச்சிறப்பான ஒரு அவதானிப்பை கிரி சொல்கிறார். மனிதன் என்பவன், சமூகத்தின் விளைச்சல் இல்லை. அவன் சுயமான எண்ணங்களைக் கொண்டவன். அசாத்திய விடுதலை உணர்வும், மனிதர்களின் கீழ்மை மீதும் கனிவுப் பார்வையும் கொண்ட ஹென்றியால். தனிமனித அகங்காரங்களை மீற முடிகிறது. அவனை ஜெயகாந்தனின் குறுநாவலான ‘ஓங்கூர் சாமியுடன்’ ஒப்பிடுகையில் கிரி உச்சத்தைத் தொடுகிறார், மேலும், ஹென்றி நான் தான் என்று ஜெயகாந்தன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதையும்  கிரி இணைக்கிறார்.  தமிழின் மாபெரும். எழுத்தாளருக்கான சிறந்த விமர்சனமாக முதல் கட்டுரை அமைந்திருக்கிறது. 

ஆர். கே. நாராயணன் அவர்களின் மகாத்மாவிற்காக காத்திருத்தல். அதில் எழுத்தாளரின் எளிமையையும், உண்மைக்குப் பல முகங்கள் உண்டு என்பதை அவர் ஏற்றுக் கொள்ளாத பிடிவாதத்தையும் சுட்டிக்காட்டும் கிரி, அவரது எழுத்தாளுமையை, எளிமையைச் சிறப்பாகச் சொல்கிறார். கதையை சொல்வது மட்டுமே என் வேலை என்பது ஆர். கே. நாராயணனின் தன்மை. காந்தியைப் பற்றி கிரி இந்த விமர்சனத்தில் சொல்வதை திரும்பத் திரும்ப நினைக்க வேண்டும்.  காந்தி காட்டியது ஒரு முடிவல்ல. அது ஒரு பாதை. அதன் வழித்தடங்கள் கூழாங்கற்களால். நிரப்பப்பட்டவவை இல்லை. வானத்தை. அளக்க  முயலும் பறவைகளின் தடம் அது.

நாகம்மாள்- ஆர். சண்முக சுந்தரம்.

இந்த நூலை கு ப ரா, சுந்தர ராமசாமி, அம்பை, பெருமாள் முருகன், ஜெயமோகன் எவ்வண்ணம் விமர்சித்தார்கள் என்று கிரி சொல்வது சுவையாக இருக்கிறது. நீர்ப்பரப்பிற்குள் இருந்தாலும், கருமேகங்களுக்காகக் காத்திருக்கும் சாதகப் பறவையைப் போல, சகல ஆடம்பரத்திற்கும் மத்தியில் கலை, வாழ்வைத் தேடுகிறது என்று கதையின் நாடியை கிரி கச்சிதமாகப் பிடித்திருக்கிறார்.

நள்ளிரவின் குழந்தைகள் என்ற நூலுக்காக புக்கர் பரிசு பெற்ற சல்மான் ருஷ்டியின், வரலாற்றுடன் இணைத்து உருவகமாகக் கதை சொல்லும் திறனை இதில் கிரி வெளிப்படுத்துகிறார். சலீம் சினாய் இந்தியா என்றால், அவனது தங்கை ஜமீலா சிங்கர் பாகிஸ்தான். வன்முறையை மூன்று சொட்டுக் குருதியுடன் வெவ்வேறு கால கட்டத்தில் இணைத்துச் செல்கிறது நாவல். நிழல், நிஜம், கனவு, நனவு எனப் பயணிக்கும் நாவலில், பங்களாதேஷ் சண்டையில் ஈடுபடும் போது இது எவர் பொருட்டான சண்டை என அவன் வியக்கிறான். வண்ணதாசனின் ஒரு கதையில்,  விலைமகளாக வரும் ஒரு பெண், ஒரு கட்டிடத்தின் மேலே காணப்படும் பதாகையில் இந்திராவை பெண்டாளக்கூப்பிடும் வக்ரத்தைக் கண்டித்து, சாக்கடை நீரையள்ளி அவ்வாசகத்தை அழிப்பாள். ‘பெரும் விதவை’ என்று அவரைக் குறிப்பிட்ட ருஷ்டியை நான் மன்னிக்கத் தயாராக இல்லை.

பாரீசுக்குப் போ என்ற ஜெயகாந்தன் கதை அலைபாய்கிறது என்று சொல்கிறார் கிரி. நமது அறிவுத் தேடல் முழுவதும் தேவை சார்ந்ததாக மாறியுள்ள அவலம் கிரியை உறுத்துகிறது. இந்த நாவலின் கதாநாயகனான சாரங்கனை, ஹென்றியுடன் ஒப்பீடு செய்து துலாக்கோல் தூக்கியுள்ளார் கிரி. சாரங்கன் தரிசனமற்ற பாத்திரம் என்பதும், இந்திய இசை, மேலை இசையை பற்றிய அழுத்தமான விவாதங்கள் இல்லாததும், கிரிக்கு மட்டுமல்ல, ஜெயகாந்தனின் வாசகர்களுக்கும் ஏமாற்றமே.

சௌரங்கி புத்தகத்தை தான் எவ்வாறு வாங்கினேன் என்று சுவாரஸ்யமாகச் சொல்கிறார் கிரி. கல்கத்தாவின் காலனிய, பின் காலனிய நிகழ்வுகளை ஒரு விடுதியை மையமாகக் கொண்டு மணி ஷங்கர் முகர்ஜி எழுதிய வங்காள நூலின் மொழி பெயர்ப்பு இது. ஷாஜஹான் ஹோட்டலின் வாடிக்கையாளர்களின் வாழ்வும், சிக்கலுமே நாவல். பெரும் நாவலாக எழுதப்பட்டிருந்தாலும், ஒரு நாவலுக்குத் தேவையான தத்துவப் பார்வைகளோ, தகவல்களோ, வரலாற்றுப் பின்புலமோ சரியாக இடம் பெறவில்லை என்ற கருத்தையும் கிரி சொல்கிறார்.

சாரு நிவேதிதாவின் ‘ராஸலீலை’. ஒரு வரியில் சொல்வதானால், கிரியின் அனல் வாதம் இந்த விமர்சனம். ஒரு கதையின் வழியாக நிறுவ முடியாததை அக்கதையின் அடிக்குறிப்பும், பின் குறிப்பும் இட்டு நிரப்பாது என்ற கிரியின் வாதம், சரியான நெத்தியடி. ஜே எம் கட்ஸீயா, ஹானா-அல்-ஷெயிக், கார்சியா மார்க்கெஸ், குந்தர் க்ராஸ், சல்மான் ருஷ்டி. ரொபொர்த்தோ பொலானியோ, ப.சிங்காரம், போன்றவர்களின் படைப்பைக் குறிப்பிட்டு, சாரு அளித்துள்ள ஏமாற்றத்தை கிரி திறமையாகச் சொல்லியுள்ளார்.

உலகின் முழுமை என்றால் என்ன என்ற கேள்வியை ஜெமோவின் முதற்கனல் நாவல் (வெண்முரசு) கேட்கிறது என்ற அவதானிப்பு கிரிக்கு. இராவதி கார்வே தனது யுகத்தின் முடிவில் நாவலில் குறிப்பிடும் கற்பனையான உரையாடலின் மூலம் மொழியின் சிறப்பை விளக்குகிறார் கிரி. மானுட உண்மை என்ற கிருஷ்ண வேதத்தை முதன்மைப் படுத்துகிறார் ஆசிரியர். ஞானத்தினால், பிறவித் தளைகள் எனச் சொல்லப்படும் குல தர்மத்தை அறுக்க முடியும் என்று பராசரர் வியாசருக்குச் சொல்கிறார். பெண்களின் கண்ணீர், கனலாக எழுவதே முதற்கனல். கிரி, இதில் சில கூற்றுக்களை கேள்விகளே இல்லாமல் ஏற்றுள்ளார் என்பது சற்று ஏமாற்றமே. வேதாந்த தேசிகன், ‘ஹம்ச சந்தேசம்’ என்ற நூலை எழுதியுள்ளார். அனுமன் சீதையை இலங்கையில் கண்டு, அச்செய்தியை இராமனிடம் சொன்ன பிறகு, இராமர் ஒரு அன்னத்தை தூதாக சீதையிடம் அனுப்புவதாக எழுதப்பட்ட காவியம் அது. இதிகாசங்களில், எழுத்தாளருக்கு புனைவுகள் செய்யும் உரிமை உண்டுதான்; மையத்தை விட்டு விலகாத வரையில் ஏற்றுக் கொள்ளலாம், இதை நான் ஏன் சொல்கிறேன் என கிரிக்குப் புரியும்.

நீலம் நாவல், இதுவும் வெண்முரசு நாவலே. இதைப் பற்றி கிரிக்கு சிறந்த கருத்து உள்ளது. நல்ல மொழி, சிறந்த நடை, கவிதைகள் கொண்ட சொல்லாட்சி, பலரை மயக்கும் பிரேமை. என்னைப் பொறுத்த வரையில் சரியாகத் திரளாத அதி இனிப்பு கூடிய திரட்டிப் பால். அன்றாட நிகழ்வுகள், வாழ்வை வாழ்வது, அதில் முழுமையைக் கண்டு கொள்வது போன்றவை கண்ணனின் வழி. ஓஷோ, பெரியாழ்வார், ஆண்டாள், என்ற அனைவரையும் இணைத்து திணையியல்பையும், காதலையும் ஒருங்கிணைத்து, விரக ஏக்கமும், பிரேமையுமான மாதர்களின் (மாந்தர்களில்-கம்சனும் மயங்குகிறான்) வாழ்வைச் சொல்லிச்சொல்லி வியக்கிறார்.

நம் உயிர் பயனற்ற ஒன்றாக பிறருக்கு எப்போது தோன்றுகிறது என்பது ஆட்டிசம் பாதித்த, இன்று (கதை முடிவில்) விலங்கியல் துறையில் முனைவராக உள்ள வர்ஷினி செந்திலின் பார்வையில் கேட்கப்படுகிறது. நிராகரிப்பிற்கு பழகிய ஒரு பருவம், மாய உலகில் (அக்ஷரா என்ற கற்பனை தேசம்) தன்னை ஈடுபடுத்துதல், சுனீல் கிருஷ்ணனின் ‘நீல கண்டம்’ நாவல். கதைகள், புனைவு உத்தியை இரு விதமாகக் கையாளும்-மையத்தை ஆதரித்தும், எதிர்த்தும் போடுகிற வலைப்பின்னல்; மற்றொன்று, கருவின் சிக்கலான முடிச்சை வாசகர் பின் தொடர முடியாதபடி பல உபகதைகளைக் கையாண்டு புதிர்ப்பாதைகளைப் போடும் என்று எழுதி அதற்கான எடுத்துக்காட்டுகளாக கிரி எழுதியுள்ளது மிகவும் அபூர்வமான விமர்சனம். மையச் சிக்கலிலிருந்து வெளிப்படக் கூடிய புனைவு ஓட்டத்தை நாவலில் அமைக்க முடியாதபடி சுனீல் சிக்குண்டுவிட்டார் என்று கிரி சொல்கிறார். 

இருளின் விசும்பல்கள்- ரொபொர்த்தோ பொலானியாவின் சிறந்த நாவல். இறையியல் என்பது அலைக்கழிக்கும் சாதனம். உரூதியா என்ற இறையியலாளரின் மனம், கவிதைகளையும், கவிஞர்களின் அக இயல்புகளையும் சுற்றியே வலம் வர விரும்புகிறது. பகட்டான கொண்டாட்டங்களிலிருந்து விலகும் அவர், மலை முகட்டின் மேலே நிலவோடு உரையாடும் பாப்லோ நெருதாவைப்பார்க்கிறார். அதி அற்புதமான ஒரு கனவு மயக்கம். தென் அமெரிக்க நாட்டின் சர்வாதிகாரத்தை வல்லூறுகளைக் கொண்டு நுட்பமாகச் சொல்லும் இடம், யாரிடமேனும் தாக்கத்தை ஏற்படுத்தாதா? யூதாஸ் மரம் என்ன அர்த்தம் கொடுக்கிறது? அது சிலேவேதான். இலைகளற்று, இறப்பின் களையில்,40 இஞ்சுகள் வளர்ந்த புழுக்கள் நெளியும் கறுப்பு நிற நிலத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இந்தக் கதையை படிப்பதும், புரிந்து கொள்வதும் எளிதானதல்ல. கிரி அனாயாசமாகச் செய்திருக்கிறார்.

பொலான்யோவின் மற்றொரு நாவல் அரண்/ காப்பு. இந்த நாவல் வயதான கவிதாயினியின் பார்வையில் மெக்ஸிகோ நாட்டின் கவிஞர் உலகம் நழுவவிட்ட அப்பாவித்தனத்தைப் பேசுகிறது.. 1968,ம் அக்டோபர் 2ம் தேதி (காந்தி நினைவிற்கு வருகிறார் அல்லவா?) மெக்சிகோவின் மாணவக் கிளர்ச்சி சர்வாதிகார அரசால் அடக்கப்பட்டு, ஆயிரக்கணக்கில் அவர்கள் குண்டடி பட்டு இறந்தது மானுடத்தின் இழிமை. அந்த நகரத்தின் இருண்ட மலைகளின் வழியே தனது குழந்தைகள் என அவள் நினைக்கும் அனைவரும், சூனியத்தில் நுழைவதை அவள் பார்க்கிறாள். கவிதை மற்றும் கலை இரசனை இதுவரை அவர்களின் காப்பரணாக இருந்தது, இன்றோ அது உடைந்து விட்டது. மிகத் தெளிவான விமர்சனமாக இதை நான் பார்க்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியனின் மரநிறப்பட்டாம் பூச்சிகளின் சிறுகதைத் தொகுப்பை கிரி கொண்டாடித் தீர்க்கிறார். ஆனால், கன்னியாகுமரியில் விவேகானந்தரும், ராமநாதன் என்னும் கதாபாத்திரமும் வருகிறார்கள். காமத்தில் கீழ் நிலையை அடைந்த ராமநாதன், மரணத்தைத் தழுவிக்கொள்ள, விவேகானந்தருக்கு அந்த விடுதலை கிடைக்கவில்லை என்று கிரி கொள்ளும் ஆஸ்வாசம் எனக்குப் புரியவில்லை. தானே தேடிக் கொள்ளும் மரணம் தப்பித்தல் மட்டுமே, அது விடுதலையைக் கொண்டு வருமா என்ன? ‘போரால் சிதைக்கப்பட்ட கட்டிடத்தைப் போல என் மனம் மரணத்தின் நினைவுகளில் சிக்குண்டு கிடந்தது. மரணத்தைக் காட்டிலும் அது நிகழும் விதம் என்னை மேலும் அச்சுறுத்தியது’ என்று எழுதும் கார்த்திகைப் பாண்டியனின் கையைப் பற்றி நான் மானசீகமாகக் குலுக்கினேன். பாசாங்கற்ற மொழி, மெய் நிகர் உலகை வாசகனுக்குப் படைத்துக் காட்டுதல் போன்றவற்றில் கதாசிரியர் மின்னுகிறார் என கிரி சொல்வது, வசிஷ்டர் வாயால் ப்ரும்ம ரிஷி என்பதற்குச் சமம்.

சுரேஷ்ப்ரதீப்பின் ஒளிர் நிழல் நாவல், ஒளிக்கும், நிழலுக்கும் இடையிலிருக்கும் உறவைப் போல நாவலை மாற்றுகிறது, என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பில் வெளியான ‘நிழலைத் தின்றவனை’ என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தேவையற்ற இரு வேட விளையாட்டுக்களை-சக்தி, சுரேஷ் மூலம் ஆசிரியர் செய்திருப்பது நாவலுக்குப் பலம் சேர்க்கவில்லை. காண்பதற்கும், விழைவதற்கும் உண்டான எதிரெதிர் பாதைகளைத் தாங்க முடியாத உளவியலை சக்தி எட்டிய போதும், அதைப் புனைவில் ஆசிரியர் சரிவரக் கையாளவில்லை என்று எழுதுகிறார் கிரி.

நாகரத்னம் க்ருஷ்ணாவின் நீலக்கடல், ஒரு நெடிய கனவைப் பற்றிய புனைவு. எட்ட முடியாத ஆழங்களை கற்பனை சென்றடையும் விந்தை இந்தக் கதை. காதலும், தேடலும் நிரம்பிய கதையில், மையப் பாத்திரமான பெர்னார், லாபெர்த்தனே, துய்ப்ளே, ஆனந்தரங்கம் பிள்ளை போன்ற நனவுப் பாத்திரங்களும் இடம் பெறுகிறார்கள். பிரபஞ்சன் காட்டிய ஆனந்தரங்கப் பிள்ளைக்கும், க்ருஷ்ணா காட்டும் பிள்ளைக்கும் இருக்கும் வித்தியாசங்களை, க்ருஷ்ணன் காட்டும் உண்மைத் தோற்றத்தை சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். இந்திய மக்களின் உலகளாவிய இடப்பெயர்வு பதியப்படாத இலக்கியம். அறிவியலும், வரலாறும் இறந்தவற்றை ஆராய்வதன் மூலம் நம் மூதாதையரை நமக்கு அறிமுகம் செய்யலாம்; ஆனால், கலை ஒன்றே, அவர்களை உயிர்ப்போடு நமக்கு அறிமுகம் செய்யும். நீலக்கடல் நவீன வரலாற்றின் துளியை முழுமையாக எட்டிப் பிடித்த முயற்சி என்று எனக்குத் தோன்றுகிறது. எழுத்தாளர்கள் தங்கள் புனைவுகளை எழுதிய கால கட்டங்களையும், தகவல் போதாமைகளையும் அல்லது அவை கிட்டாதத் தொலைவிற்கு அப்பால் இருப்பதையும் கிரி ஏற்றுக் கொள்வாரேயானால், ‘கல்லுக்குள் ஈரத்தை’ குறைத்து மதிப்பீடு செய்தது பிழையோ என எண்ணக்கூடும்.

அயர்லாந்தின் விடுதலைப் போரில் முக்கியப் பங்கு வகித்த ரோஜர் கேஸ்மெண்ட்டைப் பற்றிச் சொல்லி, நீலக்கடலின் போல்துரையுடன் அதை இணைத்த கிரியைப் பாராட்டுவதா, அல்லது அந்தக் கரும்புத் தோட்ட அடிமைகளுக்கு நடந்த அராஜகங்களை அப்படியே எழுத்தில் வடித்த க்ருஷ்ணாவைப் பாராட்டுவதா?

டைசுங் நகரில் புத்த ஆலயத்திற்குச் சென்ற கணேஷ் வெங்கடராமன், தோட்டத்தில் வேலை செய்யும் மனிதரின் முதுகில் காணப்படும் புத்தரின் ஓவியத்தில் அவன் வியர்வை வழிந்து அவரே பளபளப்பானதைச் சொல்லும் கதை கிரியை மிகவும் கவர்கிறது. மனதின் விநோதங்களைச் சொல்லும் போது, அதில் அதிகாரத்தின் தேவையும், அதிகாரத்தை கைக்கொள்ள என்ன வித்தைகள் செய்ய வேண்டும் என்பதையும், எப்போது கூழைக்கும்பிடு போட வேண்டும் என்பதையும் சொல்லும், ‘நாய்களும், பூனைகளும்’ கதை சிறப்பான ஒன்று.

நாகரத்தினம் க்ருஷ்ணாவின் காஃப்காவின் நாய்க்குட்டியின் அறிமுகமே அருமை. மாலை மயங்கும் நேரத்தின் ட்ரஃபால்கர் சதுக்கம், காலையில் காணக்கிடைக்கும் அதே இடம் இரண்டுமே எவ்வண்ணம் வேறுபடுகின்றன என்பதை அனுபவித்துப் படியுங்கள். புதுவிதமான களத்தில் சொல்லப்பட்ட அகப் பயணம் பற்றிய நாவல். புதுச்சேரி, யாழ்ப்பாணம், ஃப்ரான்ஸ் போன்ற ஊர்களில் நடக்கும் கதை. எங்கிருந்து எங்கோ போனாலும், ஆன்ம விடுதலை என்பது எப்போதும் தேடிக் கொண்டே இருக்கும் ஒன்றே.

அழகியல், இயல்பு வாதம், தொன்மப் படிமங்கள், நாட்டாரியல் கூற்றுக்கள், வரலாற்றுக் கதைகள் என்று பல பரிமாணங்களுள்ள பாவண்ணனை இன்னமும் தமிழில் முழுமையாக ஆராயவில்லை என்று கிரி வருத்தப்படுகிறார். கடலோர வீடு, அம்மா, பொம்மை, ஒற்றை மரம், வைராக்கியம். போன்ற பல சிறுகதைகளை/ தொகுப்பை எடுத்துக் கொண்டு, கு. அழகிரிசாமியின் யதார்த்த தளத்தையும், மானுடம் முழுவதற்குமான தரிசனத்தையும் கதைகளில் கொண்டு வருபவர் இவர் எனக் கொண்டாடுகிறார் கிரி. பாவங்களையும், பலாவையும் மறைக்க முடியாது என்ற அபாரமான வரி, ‘கண்கள்’ கதையைப் படிக்கும் நமக்குள் சிலிர்த்து ஒடுகிறது. எங்கோ மாமரம், எங்கோ குயில், இரண்டையும் இணைப்பது எதுவோ? (பசவண்ணர்)

லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோமுடனான நேர்காணல் தகவல் களஞ்சியம். அசோக மித்ரன், அம்பை, மௌனி, சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன், பாமா போன்ற பலரது ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பல விருதுகள் பெற்றவர். தமிழ் எழுத்தாளர்களுக்கு அவர் ஆற்றியிருக்கும் இலக்கியத் தொண்டு வணங்கத்தக்கது. ஆர். கே நாரயணனைப் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். எப்படைப்பை மொழியாக்கம் செய்ய வேண்டும் என்று சுயமாகத் தீர்மானிக்கிறார். மொழியாக்கம் செய்யப்பட்ட ஒன்று என்று வாசகன் அறிந்து கொள்ளும் வண்ணம் தான் செயல்படுவதாக அவர் சொல்கிறார். மிக அழகாக அடிப்படை உரிமைகளுக்கான குரல் வரலாற்றில் ஓங்கி ஒலித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது என்று சொல்கிறார்.

காலம் என்பதுதான் என்ன? பல்வேறு துறைகளின் கூட்டு அறிவே, காலத்தை ஒரளவிற்கு அறியத் தரும். தத்துவமும், அறிவியலும் இந்தக் காலத்தை அணுகும் வழிமுறைகள் ஆச்சர்யமானவை. நம் அனுபவ அறிவிற்கு முற்றிலும் வேறொரு வகையில் காலம் இயங்குகிறது என்று சொல்லும் கார்லோ ரொவேலி என்ற இயற்பியலாளரின் நேர்காணல் அறிவுச் சாளரத்தைத் திறக்கிறது. கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் விரிபார்வையில் மட்டுமே புலப்படும் நிகழ்வு. என்ட்ரோபி என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, ‘குலைதி’ என்ற மொழியாக்கம் செய்த கிரி பாராட்டிற்குரியவர். தத்துவ நோக்கில்லாததால், பல புதிய தரிசனங்களை புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறோம் என்பது ஆய்வு மாணவர்களுக்கான நல்ல அறிவுரை.

கொந்தளிப்பான சமூக நிகழ்வுகளாலும், அறமீறல்களைக் கேள்வி கேட்கும் அவசியத்தாலும் பிரிவுகள் ஏற்படுகின்றன. சு. வேணுகோபால் எழுதிய ‘ஆட்டம்’ கதையின் சரடு இது. உடலின் கட்டுக்கோப்போடு, மனதின் அமைதியும் இணைந்தால் ஆடுகிற ஆட்டத்தில் வெற்றிதான். தெய்வத்தின் சன்னதியில் அனைவருமே கண்ணகிதான் என்பது படிக்கச் சுவையாக இருந்தாலும், மிகப் பெரும் சுமையை கற்பெனும் பேரில் இன்னமும் பெண் மீது ஏற்றும் முயற்சிதான் இது. இதில் வேணுகோபால் என்ன, கிரி என்ன, ஆண் மையம் அகலாத பார்வையில்லையா?

குற்றமும், தண்டனையும் பற்றிய க்ராஃபிக் நாவலைப் பற்றிய அறிமுகம் அம்சமாக இருக்கிறது. நமது பொன்னியின் செல்வன் கூட க்ராஃபிக் வடிவில் வந்துள்ளது. தேவாலய இடிபாடுகளின் ஆழத்தில் மெக்சிகோவில் சிலுவை வடிவக் கத்தி! க்ராஃபிக் நாவலில் என்னவெல்லாம் சாத்தியம் என்பதை ஆலன் மூரின் படைப்புகள் உடைத்துக் கொண்டே இருக்கும் என்று கிரி முடிக்கிறார். மொழி மற்றும் கலாசார எல்லைகளைக் கடந்து நாவலின்  நுணுக்கத்தையும், வேற்று மண்ணின் பண்பாட்டுக் குறியீடுகளையும் எளிதில் புரிய வைக்கின்றன கிராஃபிக் நாவல்கள்.

சமூகத்தில் நாம் காணாத வக்கிரங்களில்லை, வஞ்சங்கள் இல்லை. மேல்பூச்சில் நாம் மேம்பட்டவர்கள் தான்; தன் வாழ்வு, தன் சுகம் என வரும்போது எந்தச் செயலுக்கும் துணியும் அரக்கன் நம் உள்ளே விழித்துக் கொண்டே இருக்கிறான். அதைத் துணிகரமாக, பட்டவர்த்தனமாக ஜெமோவின் ஏழாம் உலகம் காட்டுகிறது; நாயகன் போன்ற நல் வில்லன் (!) படங்களில் காட்டப்படும் கடத்தல் என்பதும் புதிதல்ல. ஆனால், சிறு குற்றங்களில் ஈடுபடுவோர், பெருங்குற்றத்தின் கவர்ச்சியால் ஈர்க்கப்படுவதற்கு ஊடகங்கள் காரணமாகி வருகின்றன. திரையில் பார்ப்பதற்கு ஒவ்வொரு முறையும், பணம் செலுத்த வேண்டும்; ஆனால், புத்தகத்தை ஒரு முறை வாங்கினால் போதும், கீழ்மையைக் கொண்டாடலாம். எனக்கென்னவோ, சு. வேணுகோபால் இந்தப் புத்தகத்தைப் பற்றி சொல்லியுள்ளது மிகச் சரியாக இருக்கிறது என்று தோன்றுகிறது.

தொலைவின் ஆழத்தில் கண் சிமிட்டும் விண்மீன் களாக தந்தை-மகன் உறவைப் படம் பிடிக்கிறார் யுவன் சந்திரசேகர். அந்த உறவு, திட்டவட்டமாக நிலை பெறாமல், நாம் மறையும் வரை நம்முடனே வளர்ந்து நம்மை வாழ்விப்பதும் ஒரு கொடுப்பினை.

சிறு அசைவில் அங்குலப் பாகை மாறும் திசைமானியைப் போல, உள்ளூணர்வின் ஓயாத முணுமுணுப்பைக் கதைகளாக்கியுள்ளார் கால பைரவன் என்று கிரி சொல்கிறார். நம்மால் குஜராத் கலவரத்தில் கிழடு தட்டிய இராமரையும், அவரைக் கடிதத்தில் கேள்வி கேட்டுப் பிரியும் சீதையையும் எழுத முடிகிறது. துளை வழியே செல்லும் நம் பார்வை. உண்மைக்கும், பொய்க்கும் அதிக வித்தியாசங்கள் கிடையாது. நாம்தான் இரண்டையும் எதிரெதிர் துருவங்களாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

சிங்களவர்களும், தமிழர்களும் மிக சகஜமாக, மனிதர்களாக உலா வரும் கதைக்களன்கள் அனோஜன் பாலக்ருஷ்ணனின் கதைகள். சதைகள், பச்சை நரம்பு கதைத் தொகுப்புக்களை இதில் சிலாகித்திருக்கிறார் கிரி.

சாம்பனின் பாடல் சிறுகதைத் தொகுப்பு தன்ராஜ்மணியால் எழுதப்பட்ட ஒன்று. அவர் கதைகளில் இடங்கள் ஒரு கதாபாத்திரமாக வருவதையும், அவர் நேரே கதைக்குள் சென்றுவிடும் இலாவகத்தையும் கிரி பாராட்டுகிறார். ஆருயிர் நண்பனின் இறப்பை தன்னில் ஒரு பகுதி பிரிந்து சென்றுவிட்டதென்று அலமாறும் ஒருவன் போதையில் வீழ்வதில் அவரவர் மனம் படி எந்த விதத்திலும் வாசகர் அதை அறியலாம் என்ற திறந்த முடிவுடன் கூடிய கதை. அறிவியல் சென்று சேராத இடத்தை நம் உணர்வு எப்படிச் சென்றடைகிறது என்ற அறிவியல் புனைவு அற்புதம்.

சுனீல் க்ருஷ்ணனின் அம்புப்படுக்கை என்ற சிறுகதைத் தொகுதி அவர் தனது பாணியை அறிவிக்கும் விதத்தில் இருக்கிறது. மரபு, நவீனம் இரண்டையும் சீர் தூக்கி/செய்யப் பார்க்கும் இடத்தில் சுனீல் இடறுகிறார்.

நிதானமும், பூடகத்தன்மையும் கொண்ட எழுத்தாளராக சிவா கிருஷ்ணமூர்த்தியை கிரி பார்க்கிறார். நம்பகத் தன்மையும், பாத்திரங்களின் தனித் தன்மையும், சாதாரணர்களை கதை மாந்தர்களாக்குவதும் இவரது சிறப்பு.

உலகில் பழமையான காதல், நிகழும் ஒவ்வொரு முறையும் புதியதுதான் என்று பலமாக ஸ்ரீதர் நாராயணனின் கத்திக்காரன் தொகுப்பில் உள்ள நிலம் சிறுகதையைப் பாராட்டுகிறார் கிரி. நுட்பமான தருணங்கள், கதை எனும் அமசத்திற்கான முக்கியத்துவம், கதை முடிவில் வெளிப்படும் திருப்பம் அல்லது ஒருங்கமைவு ஸ்ரீதரின் பலம்.

மரண வீட்டில் பொய் சொல்வது சுலபமா? தவறு செய்தவர்களின் சுமை மேலும் ஏறும் என்று சொல்லும் கல்பட்டா நாரயணனின் ‘இத்ர மாத்ரத்தின்’ தமிழ் மொழியாக்க விமர்சனம் அந்த நாவலைப் படிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. ஷைலஜாவின் அற்புத மொழியாக்கம் இதற்கு எழிலை கூட்டித் தருகிறது.

காலத்தோடு முட்டி மோதாமல், மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தன்னை வளைத்து வாழும் சோமசுந்தர முதலியின் வாழ்வை மையமாகக் கொண்டு க நா சு எழுதிய பொய்த்தேவு, அதன் மிகுதன்மை இல்லாத வழுவமைதிக்காக போற்றப்பட வேண்டும். கோயில் மணியோசை ஒன்றே அவரைப் பிணைத்த கயிறு. மனிதர்களுக்கு ஒவ்வொன்றின் மேலும் ஒவ்வொரு வகை ஆசை. பதவி, குலம், பிறப்பு, கல்வி, வணிகம், செல்வம். போன்ற தெய்வ முகங்கள், பொய்த் தேவர்களாகும் உண்மை முகத்திலறையும் ஒன்று. இன்னமும் கூட இந்த நாவலிற்கு வேறொரு தலைப்பை நான் யோசிக்கிறேன்.

யூதர்களைக் கண்டால் தூர விலகு என்று வளர்க்கப்பட்ட லூசியன், எப்படி அவர்களைக் காக்கும் கட்டிடங்களை, மறைவிடங்களை அமைத்தான் என்று சொல்லும் சார்லஸ் பெல்ஃபோர் எழுதிய ‘பாரீஸ் ஆர்கிடெக்ட்’ தன்னை பாதித்த விதத்தை கிரி இதில் சொல்கிறார். அவரின் போர் புத்தகங்களின் மீதான காதலை நாம் அறிந்து கொள்கிறோம்.

இந்த விமர்சன நூலின் மூலம் தன் பன்முக வாசிப்பனுபவத்தை கிரி நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்தப் படைப்புகள் பற்றிய எழுத்தினூடாக, அதைப் போன்ற பிறவற்றையும் எளிதாகச் சொல்ல முடிகிறது அவரால். என் சில எண்ணங்களையும், கருத்துக்களையும் சொல்லும் வாய்ப்பாக இந்த விமர்சன நூலைப் பற்றிய விமர்சனத்தைப் பயன் படுத்திக் கொண்டேன். சில கட்டுரைகளில் எழுத்துப் பிழையும், வாக்கிய அமைப்புப் பிழையும் தென்படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.