
ஆண் பார்வை (Male gaze) என்றால் என்ன?
பெண் என்பவள் ஆண்களது பார்வையில் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார் என்பதையே விபரிக்கின்றது. ஆண்பார்வையில் பெண்களை முழு மனிதராக (human being) பார்க்கப்படுவதில்லை. அவர்களது பார்வையில் பாலியல், அழகியல், கலாச்சாரம் என்பன உட்பதிந்துள்ளது. இந்த ஆண்பார்வையானது பெண்ணின் செயலான்மை(agence) மற்றும் மனித அடையாளத்தை மறுக்கின்றது. இதனால் பெண்ணை மனிதாபிமானமற்றதாக்கி நபருக்கு பொருளாக மாற்றுகிறது. அவளது அழகு, உடழமைப்பு, பாலியல் கவர்ச்சி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவளை ஒரு பாலியல் பொருளாக (Sexual objects ) கருதி மகிழ்கிறது. பாலியல் பொருள் என்பது உயிரற்ற, உணர்வற்ற ஒரு பொருளை பாலியல் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகும். இது ஆண்களது பார்வையில் உருவாக்கப்பட்ட கற்பனையான பெண் பாத்திரம் என்றே கூறலாம். லண்டன் பல்கலைக்கழக ஊடக திரைப்பட பேராசிரியர் லாரா மல்வி தமது கட்டுரையான “கதையாடல் சினிமாவும் காட்சி இன்பமும்” ( Visual pleasure and Narrative cinema ) இல் ஆண்களின் பார்வை (Male gaze) குறித்து உளவியல் விளக்கத்துடன் பெண்ணியக் கருத்தை முன்வைத்துள்ளார். இவர் ஊடகங்களில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் ? என்பது குறித்து தசாப்தங்களாய் ஆய்வு செய்துள்ளார். இவரது கட்டுரை இரண்டாம் பெண்ணிய அலையுடன் 1975 ல் வெளிவந்துள்ளது. ஆண்பார்வையின் முழு பரிணாமத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமாயின், சமூகத்தில் பெண்கள் எவ்வாறான பார்வைக்கு உட்படுத்தப் படுகிறார்கள் என்பதையும், சினிமா, பத்திரிகை, சஞ்சிகைகள் என பல்வேறு ஊடகங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்பதையும் அடையாளம் காண்பது அவசியமாகும்.
இருபதாம் நூற்றாண்டில் 40,50, 60, களின் பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பொருளாதார முறைமையும் மாற்றமடைந்துள்ளது. சினிமாத்துறையானது சிறிய முதலீட்டுடன் குறைந்த நேரத்தில் சிறியளவில் 16m.m சினிமாக்களை எடுக்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறு தோற்றம் பெற்ற மாற்றுச் சினிமாவில் அரசியல் ரீதியாகவும், அழகியல் ரீதியாகவும் சாத்தியப்படுத்தியுள்ள வாய்ப்புகள், பிரதான நீரோட்டத்திலுள்ள சினிமாவின் முன் ஊகங்களை சவால்விடும் வகையில் அமைந்திருந்தது. சினிமாவில் செல்வாக்குச் செலுத்தும் காண்பியல் இன்பத்தை எவ்வாறு முதன்மைப்படுத்தும் வகையில் கையாளுவது? நடைமுறையிலுள்ள சித்தாந்தத்தை பிரதிபலிக்கும் வகையில் பாலியல் உந்தல்களை முன்வைத்தே உருவாக்கப்படுகிறது. வளர்ந்த பிரபல்யமான சினிமாக்களில் கற்பனைக்கு எட்டாத வகையில் ‘அழகு’ ‘கவர்ச்சி’ என்றவாறு மகிழ்ச்சியை கொடுக்க விரும்புகிறார்கள். இந்த மகிழ்ச்சியின் மையத்தில் பெண்ணையே வைத்துள்ளார்கள்.
ஊடகங்களில், பெண்கள் பெரும்பாலும் ஆண்களது கண்ணோட்டத்திலேயே சித்தரிக்கப் படுகிறார்கள். பொதுவாக எமது சமூகமானது ஆண்களின் நலன்களையே மையப்படுத்தி, பாலின ஏற்றத்தாழ்வுடன் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. செயலாற்றல் கொண்ட ஆண் (active male), செயலற்ற மந்தமான பெண் (passive woman) என்பதாகவே பிரித்து வைக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களில் ஆண் கதாநாயகர்கள் பெண் கதாபாத்திரங்களை தாம் பயன்படுத்துவதற்கான பாலியல் பொருளாக நோக்கும் நிலையே காணப்படுகிறது எனவும், இந்நிலமை பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தும் பாலினத்தவராலேயே மேற்கொள்ளப் படுவதாகவும் லாரா மல்வி குறிப்பிடுகிறார். உண்மையில் ஆண்பார்வையானது அதன் உள்ளார்ந்த சமத்துவமின்மையின் காரணமாகவே உருவாகின்றது. பெரும்பாலும் திரைப்படங்களை எழுதுவது ஆண்கள், தயாரிப்பது ஆண்கள், கதாநாயகர்கள் ஆண்கள், மற்றும் இலக்கு ஆண் பார்வையாளர்களே ஆவர். இதனை அடிப்படையில் கொண்டே ஆண்,பெண் கதாபாத்திரங்கள் கட்டமைக்கப்படுகின்றது. வேறு வார்த்தையில் சொல்வதானால் நாம் அனைவரும் ஆண்களின் பார்வையையே இயல்பானதாக, ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே பாரம்பரிய சினிமாவில் வளர்க்கப்பட்டுள்ளோம். ( 21ம் நூற்றாண்டில் பெண் தயாரிப்பாளர்கள் சினிமாவில் பெண்களின் ஆளுமையை முதன்மைப்படுத்தும் நிலைமையினை காணக்கூடியதாக உள்ளது )
நாம் ஏன் திரைப்படங்களை விரும்புகிறோம் ?
திரைப்படங்கள் முக்கியமாக பல்வேறு காட்சி இன்பத்தை (pleasure in looking) அளிக்கிறது எனலாம். அதில் ஸ்கோபோபிலிய (Scopophelia ) ஒரு வகையாகும். ஒரு பெண்ணின் உடலையும், உடற்பகுதிகளையும் பாலியல் உந்தல் பொருளாக பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாகும். அண்மையில் வெளிவந்த ‘புஸ்பா’ திரைப்படம் குறித்து ஒரு உரையாடலில் சாமானியர் ஒருவர் ‘ஓ…சொல்லுரியா ஓ ஓ… சொல்லுரியா’ என்ற பாடலை நூறு முறை பார்த்தாலும் சலிக்காது என்கிறார். உண்மையில் இப்பாடலின் அர்த்தம், காட்சி இரண்டுமே முரண்தன்மையை கொண்டுள்ளது. ஆனால் ஆண்பார்வையில் பெண்ணின் உடல் காட்சி இன்பத்தினை அளிப்பதில் முதன்மை பெறுவதைக் காணலாம். திரைப்படங்கள் ஆண் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பெண் பாத்திரங்களுக்கு கொடுப்பதில்லை. ஆண்கள் புனையும் பாத்திரத்தையே பெண்கள் செயற்படுத்த வேண்டும். இங்கு பெண்கள் யார் என்பதைவிட எவ்வாறு தோற்றம் அளிக்கிறார்கள் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்களது உணர்வுகள், கருத்துக்கள், உணர்ச்சிகள் மிக குறைந்தளவு அல்லது எதுவுமே முக்கியத்துவம் அற்றநிலமையே காணப்படுகிறது. பெண்கள் அழகாக, கவர்ச்சியாக இருப்பது மட்டுமே தேவையாக உள்ளது. அதற்கேற்ப உடைகள் மற்றும் அணிகலன்கள், மேக்அப் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. உடலின் ஒவ்வொரு அசைவையும் மார்பு, தொப்புள், தொடை, இடை, கால் என சிறு சிறு பகுதிகளை முதன்மைப்படுத்திக் காட்டுவதையும் அவதானிக்கலாம்.
ஆண்பார்வையானது பெண்ணை பாலியல் பொருளாக உருவகப்படுத்தி அவளது தோற்றத்தை வலுவான காட்சிப் பொருளாக்கவே முயல்கிறது. இந்த காட்சிப்படுத்தலானது பாரம்பரிய சினிமாவில் முக்கியமாக இரண்டு வகையில் செயற்படுத்துகிறது. ஒன்று திரைக்கதையில் உள்ள ஆண் கதாபாத்திரங்களுக்கு பாலியல் பொருளாகவும், மற்றைது திரைஅரங்கத்தில் உள்ள ஆண் பார்வையாளருக்கு பாலியல் பொருளாகவும் காட்சிப்படுத்தப்படுதுகிறது. பெண்ணின் உடலமைப்பு என்பது சாதாரண விடயம் என்றபோதிலும் சினிமாவானது அதனை ஊதிப் பெரிதாக்கி பெண்பாத்திரங்களை பாலியல் பொருளாகவும், செயலற்ற மந்தமானதாகவும், உடமைப்பொருளாகவும் பயன்படுவதுடன் கதாநாயகன் தனது இறுதி இலக்கை நோக்கி செல்வதற்கு தூண்டுதல் அளிப்பவராகவும் காண்பிக்கிறது.
லாரா மல்வி, தமது உளவியல் ரீதியாக விளக்குவதற்கு சிக்கன் பிராட்டின் ‘ஸ்கோபோபிலியா’(Scopophilia), பெற்றிசம்( Fetishim) போன்ற கட்டமைப்பினை பயன்படுத்துகிறார். ஒரு படத்தை பார்ப்பதில் பார்வையாளர்களில் அழகியல், உணர்ச்சிகரமான இன்பம் மற்றும் பிரஞ்சையற்ற மன நிகழ்வுகளை அடையாளம் காணவே ஸ்கோபோபிலிய பயன்படுத்தப்பட்டது. அதாவது ஒருவரை பாலியல் உந்தல் பொருளாக பார்ப்பதால் மகிழ்ச்சியடைதலாகும். உளவியல் ரீதியில் பாரம்பரிய சினிமாவானது Scopophilia என்று அழைக்கப்படும், பார்ப்பதில் பாலியல் இன்பம் என திருப்திப்படுத்தும் வகையிலேயே படமாக்கப்படுகிறது என மல்வி கூறுகிறார். ஆண்பார்வையில் காட்சி ஊடகங்கள் பெண்களை ஆண் பார்வையாளருக்கு பாலியல் தீனியாக்க முயல்கின்றது. ‘பார்வை’ என்பதன் பொருளுக்குள் ஒரு குழப்பமான பற்றாக்குறையை இழிவுபடுத்தும்,கவலைப்படுத்தும் தன்மையைக் கொண்டிருப்பதுடன் முரணாக மிகைப்படுத்தலையும் கொண்டிருக்கிறது. அதாவது கவலை என்பது இன்பத்தின் தொடர்ச்சியாகிறது. இந்த இன்பமானது மற்றொரு நபரை(பெண்ணை) பார்வையின் மூலம் பாலியலைத் தூண்டும் பொருளாக பயன்படுவதிலிருந்து தோன்றுகிறது என்கிறார்.
பார்ப்பதில் இன்பம் என்பது இயல்பூக்கத்தோடு தொடர்புடையதாகும். இயல்பூக்கம் என்பது உயிரினங்கள் பிறக்கும்போதே இயல்பாக கொண்டுருப்பதாகும். அதில் பாலூக்கமானது இயற்கையாக மனிதனில் குறித்தளவில் காணப்படும். குறிப்பாக மனித ஈகோவின் கட்டமைப்பில் மற்றொரு நபரை பொருளாக பார்ப்பதில் மகிழ்ச்சிக்கான (சிற்றின்ப) தொடர்பு உள்ளது. இவ்வாறு இயல்பாக காணப்படும் இந்த பாலூக்கத்தை தொடர்ச்சியாக தூண்டலுக்கு உட்படுத்திச் செல்கையில் அது பெண்களை கட்டுப்படுத்தும் வகையில் தீங்கு விளைவிப்பதாகவும், வக்கிரமாகவும் பிறழ்வு நிலையில் செயற்படக்கூடியதாகவும் இருக்கும். இன்று உலகெங்கும் வியாபித்துள்ள பாலியல் வன்கொடுமைகளை குறிப்பிடலாம்.
ஜாக் லக்கான் ஒரு குழந்தை கண்ணாடியில் தனது சொந்த உருவத்தை அடையாளம் காணும்போது ஈகோ பற்றிய முக்கியத்துவத்தை விளக்குகிறார். குழந்தையின் உடல் அபிலாசைகள் அதிகரிக்கும்போது கண்ணாடியில் தெரியும் உருவத்தில் தன்னை அங்கீகரித்து மகிழ்ச்சி அடைகிறது. இதன் கட்டமைப்பில், தோன்றும் விம்பத்தை தன்னை ஒத்ததாகவும், தன்னைவிட சிறப்பாகவும் இருப்பதாக குழந்தை கற்பனை செய்யும். அவரால் அங்கீகரிக்கப்பட்ட விம்பம் சுயத்தின் பிரதிபலிப்பு உடலாக கருதப்படுகிறது. இந்த அங்கீகாரம் அவரில் ஈகோவை கட்டமைப்பதில் பங்குகொள்கிறது. இவ்வாறு கண்ணாடியில் தோன்றும் குழந்தையின் விம்பம் முதல்முறையாக ‘நான்’ என்ற தன்னிலையை அடையாளப்படுத்துகிறது. இது குழந்தையில் மொழி வளர்வதற்கு முற்பட்ட காலமாகும். பொதுவாக திரைப்படங்கள் மனிதரை கவனப்படுத்தும் வகையில் உருவாக்கப்படுபவையாகும். ஆகையால் அவை விம்பத்திற்கும், சுய உருவத்திற்கும் இடையிலான தொடர்பையே கொண்டிருக்கிறது. இதுவே பார்வையாளரிடையே மகிழ்ச்சிக்கான அங்கீகாரத்தை வழங்குகிறது என்கிறார்.
முதலாவது மற்றொரு நபரை பார்வையின் மூலம் பாலியல் தூண்டல் பொருளாக பயன்படுத்தி இன்பம் அடைவதில் ஸ்கோபோபிலிய ஒரு விடயமாகவும், இரண்டாவது கண்ணாடியில் பார்த்த உருவத்துடன் தன்னை ஈகோவின் கட்டமைப்பில் அடையாளம் காண்பது மற்றொரு விடயமாகவும் உள்ளது. திரைப்படத்தின் அடிப்படையில் முதலாவது ஒருவர் திரையில் உள்ள நபரை பொருளாக கருதி நபரில் இருந்து இன்பத்தைப் பிரித்து எடுப்பதைக் குறிக்கிறது, இரண்டாவது பார்வையாளரின் ஈர்ப்பு மற்றும் அங்கீகாரத்தின் மூலம் திரையில் உள்ள பொருளுடன் ஈகோவை அடையாளம் காண்பதாகும். முதலாவது பாலியல் இயல்பூக்கத்தின் செயற்பாடாகவும், மற்றையது ஈகோவின் கற்பனையான அங்கீகாரம் என்பதாகவும் உள்ளது. சிக்மன்ட் பிராய்ட் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று Symbolic அர்த்தமாக அடையாளப்படுத்துவதில் தொடர்புபட்டிருப்பதாக கூறுகிறார்.
லாரா மல்வி தமது ஆய்வில் திரைப்படங்களில் பெண்களை ஸ்கோபோபிலிய உள்ளுணர்வும், கண்ணாடியில் அடையாளம் கண்டறியும் ஈகோ லிபிடோ செயல்முறையுமே பொறிமுறைகளாக பயன்டுத்தப்படுகிறது என்கிறார். ஆண் பார்வையின் ஆழமான வேராக ஆணாதிக்கமும் மற்றும் பாலியல் ரீதியாக பெண்களை கட்டுப்படுத்தும் செயற்பாடே உட்பதிந்துள்ளது. சினிமா மனிதரை மையமாக வைத்தே கட்டமைக்கப்படுகிறது. அது கற்பனையான மிகையான பால் தூண்டல் கண்ணோட்டத்தையே கொண்டுள்ளது. உண்மையில் ஆண் பார்வையின் செல்வாக்கானது பெண்களும், சிறுமிகளும் திரைப்படங்களில் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதில் மட்டுப்படுத்தப் படவில்லை மாறாக திரையில் வரும் பெண் உருவங்கள், பார்வையாளர்களின் நீட்சியாக திரைக்கு வெளியில் அனைத்து பெண்களும் இவ்வாறே பார்க்கப்படும் விதமாகவே நீண்டுள்ளது. உண்மையில் இந்த ஆண் பார்வையானது பெண்களது சுயத்தை பாதிக்கவே செய்யும். ஆணாதிக்க கண்ணோட்டத்தில் இப் பார்வையினை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது சகித்துக் கொள்வது என்பதானது பெண்களது சொந்த உடல், திறன்களை மழுங்கடிக்கவே செய்வதுடன், மொத்தத்தில் பெண்களது முழு ஆற்றல்களையும் (Female empowerment) குறுக்கிவிடுகிறது எனலாம்.
ஆண்பார்வை எவ்வாறு தீங்கிழைக்கின்றது?
முதலாவதாக ஊடகங்களின் ஆண்பார்வையில் பெண்கள் செயலற்ற,மந்தமான, உடமையான, பாலியல் பொருளாகவே பயன் படுத்தப்படுகிறார்கள். இரண்டாவதாக பெண்கள் எவ்வாறு தம்மைத்தாமே பார்க்கிறார்கள் என்பதாகும். மூன்றாவதாக பெண்கள் மற்றைய பெண்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதாகும். பெண்களில் ஒரு பகுதியினர் ஆண்பார்வையில் தங்களது செயலான்மையை விளங்கிக் கொண்டாலும், பெரும் பகுதியினர் ஆணாதிக்க ஆண்பார்வைக்கே பலியாகிப் போகிறார்கள். அப்பார்வையே இயல்பானது எனவும் நம்புகிறார்கள். அழகு, கவர்ச்சி என சில பெண்கள் தமது உடலமைப்பு குறித்து அதீத கவனம் செலுத்துவதைத் காணலாம். குறிப்பாக இளம் வயதினரின் தமது உணவை தவிர்த்து உடல் எடையை குறைப்பார்கள். முழு கவனமும் உடலின் எடை, அளவு (shape and size) என்பதாகவே இருக்கும். இறுதியில் உடல்நலத்திற்கு அவசியமான கலோரியினை இழப்பதினால் கனியுப்புகள், விற்றமின்கள் குறைபாடும் ஈமோகுளோபின் குறைபாடும் ஏற்பட்டு நோயாளியாகிறார்கள். இதனை eating disorder என்று அழைப்பர். இது ஆணாதிக்க கருத்தாக்கத்தின் பின்புலத்தில் உருவாக்கப்படும் ஆண்பார்வையை ஏற்றுக்கொண்ட பெண்களின் விழிப்புணர்வின்மை அல்லது அறியாமை என்பதுடன் மனநிலை பாதிப்பிற்கே இட்டுச் செல்கிறது எனலாம்.
இந்திய திரைப்படங்களில் வரும் பெண் நடிகைகளில் அழகான, கவர்ச்சியான, மெலிந்த, மாநிறமானவர்களுக்கே முன்னுரிமைகள் வழங்கப்படுகின்றது. நடிகைகளின் உடல் எடை அதிகரிப்பானது அவர்களது திரைப்பட வாய்ப்புகளை இழக்கச் செய்வதையும் நாம் காணலாம். சினிமாவில் பெண்களை பொருத்தவரை திருமணம், குழந்தைப்பேறு என்பது அவர்களது வளர்ச்சியை, வாய்ப்புக்களை தடைப்படுத்துவதாகவே உள்ளது. அண்மையில் ஒரு பிரபலமான நடிகை வாடகைத்தாய் வாயிலாக குழந்தையினை பெற்றுக் கொண்ட சம்பவம் யாவரும் அறிந்ததே. இதன்போது பலரது விமர்சனமாய் பெண் உடல் சுரண்டப்படுவது பற்றி பேசப்பட்டபோதும், அதன் மூலவேராய் இருப்பது ஆண்பார்வையும் அதன் பின்னே தாக்கம் செலுத்தும் ஆணாதிக்கமுமே என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. இந்தளவிற்கே சினிமா பெண்களது உடலை காட்சிப்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
பெண்களை அழகுக்காட்சிப்படுத்தல் ( Modelling) என்பது இன்று கவர்ச்சிகரமான தொழிலாகவே உள்ளது. மேற்கத்தைய நாடுகளின் சந்தைப்படுத்தலில் உத்தியாகவே அழகான உடலைத் தெரிந்தெடுத்து விளம்பரப்படுத்துவதாகும். இந்த அழகு சாதனப் பொருட்கள், உடைகள், நாகரீகப் பொருட்கள் ஆபரணங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்களே தமது உற்பத்திகளை பெரும் இலாபமீட்டும் வியாபார நோக்குடன் திட்டமிடப்பட்டே அழகிப் போட்டிகள் நடாத்தப்படுகின்றன. இத்தகைய அழகிப் போட்டிகளை லாரா மல்வியும் எதிர்த்தார்.
பெண்களின் அழகான உடலை வியாபார நோக்கில் சந்தைப்படுத்தலில் பயன்படுத்தவே செய்கிறார்கள்.இதனை பெண்கள்கேள்விக்குட்படுத்துவதேயில்லை. அழகிப் போட்டி என்பது பெண்களது உடலைக் காட்டி வியாபாரம் செய்யும் வக்கிரத் தன்மையேயன்றி வேறில்லை. இங்கு பெண்கள் தம்மை அலங்கரிப்பது தவறா? என்ற கேள்வி எழலாம். எமது சமூகத்தில் உள்ள ஆதிக்கசக்திகளின் விழுமியங்களில் இருந்து முதலில் விடுபட வேண்டும். அதன் பின்னரே பெண்களது தெரிவானது, அவர்களது சுயத்தை வெளிப்படுத்தும். இன்றுவரை ஆண்களது பார்வையில் பெண்ணழகு என்பது பாலியல் பொருளாகவே கருதப்படுகிறது.