காதல்வலி விதைக்கும் வெறுப்பு

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
あふことの
たえてしなくは
なかなかに
人をも身をも
恨みざらまし

கனா எழுத்துருக்களில்
あふことの
たえてしなくば
なかなかに
ひとをもみをも
うらみざらまし

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் அசாததா

காலம்: கி.பி. 910-966. 

இத்தொடரின் 25வது பாடலான “கொடிவழிச் செய்தி”யை இயற்றிய புலவர் சதாகத்தாவின் 5வது மகன் இவர். இவர் வாழ்ந்த காலத்தில் சிறந்த கவிஞராகப் பாராட்டப்பட்டார். ஆனால் ஏனோ தெரியவில்லை, இவர் இறப்புக்குப் பின்னர் நாளடைவில் இவரது புகழ் மங்கிக்கொண்டு வந்தது என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 21 பாடல்கள் இவரது தனிப்பாடல் திரட்டாக இடம்பெற்றுள்ளன. காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருப்பவர். கவிஞர் மட்டுமின்றிப் புல்லாங்குழல் வித்தகரும்கூட.

பாடுபொருள்: காதலின் வலியால் பிறரை வெறுப்பது.

பாடலின் பொருள்: உன்னை இனி நான் சந்திக்கும் வாய்ப்பே ஏற்படப்போவதில்லை என்பது தெரிந்திருந்தால் என்னையும் என்னைச் சுற்றியுள்ளவர்களையும் வெறுக்கத் தொடங்கியிருக்க மாட்டேன்.

இத்தொடரின் பாடல்கள் 40, 41 போல இதுவும் பேரரசர் முராகமி அரசவையில் நடத்திய அதே போட்டியில் பாடியது. இவரது இணையாகப் போட்டிப்பாடல் பாடியவர் ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த மொத்தோஜானே. 40, 41வது பாடல்கள் காதல் வயப்பட்டிருக்கும் நிலையில் பாடப்பட்டவை. இது கைகூடாத காதலின் வலியைப் பாடியது. 

இப்பாடலின் வரிகளைக் கொண்டு காதலர்கள் இருவருக்கும் சந்திப்பு நிகழ்ந்ததா இல்லையா என உறுதியாகக் கூற இயலவில்லை. சில உரையாசிரியர்கள் சந்தித்தபின் பிரிவு ஏற்பட்டதால் உண்டான வலி என்றும் சிலர் சந்திக்க முயன்றும் இயலாததால் ஏற்பட்ட வலி என்றும் பொருள்கொள்கிறார்கள். ஆனால் எல்லா உரையாசிரியர்களும் ஒப்புக்கொள்ளும் பொதுவான கருத்து, காதலர்களின் துன்பத்துக்குக் காரணம் அவர்கள் மிகவும் எதிர்நோக்கியிருக்கும் சந்திப்புதான். சந்தித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் சிலரும் மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைக்காதா எனப் பலரும் துன்பப்படுகிறார்கள் என்பதுதான்.

கொக்கின்ஷூ, கொசென்ஷூ போன்று அவற்றின் சமகாலத்தில் தொகுக்கப்பட்ட ஹச்சிதாய்ஷோ என்ற தொகுப்பிலும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. அதில் காதலின் படிநிலைகள் வரிசையில் பாடல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் இப்பாடல் பெற்றிருக்கும் இடத்தை வைத்துப் பார்க்கும்போது சந்தித்தபின் ஏற்பட்ட வலி என வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

வெண்பா:

காதல் வலியது அன்பினில் நேர்ந்ததே
சாதல் கடுமையும் தீர்க்கவும் - வேதனை
கூட்டவும் தாழ்த்தவும் ஆக்கும் உனது
பிரிவால் விளையும் வெறுப்பு
Series Navigation<< மறவேன் பிரியேன் என்றவளே!தேடலும் மறத்தலும் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.