
“இந்த பத்து வாரத்தில வைரஸுடன் வாழப் பழகிட்டோம். ஒருத்தர் மட்டும் கடைக்குப் போய் சாமான் வாங்கிவறோம். அதுவும் முதியோர் நேரத்தில. முகத்திரை இல்லாம எங்கியும் போவது கிடையாது. கும்பல் இல்லாத சமயத்தில வேளியே ஒரு மணிக்கு மேல நடக்கிறோம். வேலையில சாமியும் நானும் மட்டும் தான். எப்பவும் போல கைகளை அடிக்கடி சோப்பில் கழுவிக்கொள்கிறோம். யார் கிட்டேயும் கிட்ட இருந்து பேசறது இல்ல. அங்கே எப்படி?”
“தெருவில கார்கள் ஓடாம நன்னா இருக்கு. பத்திரிகைகளில கோவிட்டை வச்சு நிறைய அறுவை ஜோக்ஸ் வருது.”
“நானும் பார்த்தேன். கோவிட்டின் இறப்பு விகிதம் யூ.எஸ்.ஸை விட இந்தியா குறைச்சல். அதுக்கு என்ன காரணம்னு நிறைய சயன்டிஸ்ட் மண்டையை உடைச்சிண்டு இருக்காங்க. என்னைப் பொறுத்த வரை, சொர்க்கம் ஆனாலும் நரகம் ஆனாலும் வைரஸ் என்றாலும் நாம எல்லாத்தையும் தமாஷா எடுத்துக்கறோம். இங்கே எல்லாம் சீரியஸான அரசியல் வர்ணம் பூசிய விஷயங்கள். அது உடல்நலத்தைப் பாதிக்கிறது.”
“இந்தப் புது தியரிக்கு ஒரு நோபல்.”
“பரிசு தாராளமா கொடுக்கலம். உன் வீட்டில…”
“அம்மா நெட்ல பாடம் எடுக்கறா. அப்பாவுக்கு அப்பப்ப ஒண்ணு ரெண்டு கன்சல்டிங். ஆதவிக்கு இன்னும் சில ஆடிச குணங்கள் மிச்சம் இருக்கு. புது இடத்துக்குக் கூட்டிண்டு போனா பிடிக்காது. ஒரு வேலையில மனசு வச்சா அதை முடிச்சப்பறம் தான் இன்னொரு வேலை. நீங்க போனதடவை வாங்கிண்டுவந்த சூரியகாந்தி பூப்போட்ட சட்டைகளைத் தான் எப்பவும் போட்டுக்கறா.”
“இதெல்லாம் குறைன்னு கூட சொல்லமுடியாது.”
“உண்மை தான். பால்மொழி கதை நடந்தப்ப அம்மாவை இரண்டு மூணு காலேஜ்லேர்ந்து கூப்பிட்டாங்க. அம்மா கரீயரைப் பெரிசா எடுத்துக்காம ஆதவியைக் கவனிச்சதாலதான இவ்வளவு முன்னேற்றம்.”
“வாழ்க்கையில எது முக்கியம்னு கண்டுபிடிச்சு அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கற தைரியம் ஒரு சிலருக்குத்தான் இருக்கு.”
“அது என் முதல் புத்தகத்தின் தீம்.”
“சரி, உன் வேலை…”
“நான் வீட்டிலேர்ந்து பண்ணறேன். வியாபாரம் கொஞ்சம் குறைச்சல். மூணு மணிக்கு அப்புறம் நேரம் நிறைய.”
“அப்ப அம்மாக்கு உதவி செய்யறது.”
“அம்மா சொல்றதை மட்டும். மிச்ச நேரத்தில ஒரு கதை எழுத ஆரம்பிச்சிருக்கேன்.”
“கதை எதைப்பத்தி?”
“தலைப்பு மட்டும் தான் இப்ப சொல்வேன். மொழியோசை. அவுட்லைன் முடிஞ்சதும் அனுப்பறேன். நீங்க நன்னா இருக்குன்னு சொன்னாத்தான் அதை விரிவா எழுதுவேன்.”
செமிஸ்டர் பாடங்கள் முடிந்து தேர்வுகளுக்கு முந்தைய இடைவெளி.
பெர்னி எடுத்த வகுப்புகள் மின்-வழியே வந்தாலும் அவற்றின் தரம் குறைந்துவிட வில்லை. பேராசிரியரின் விரிவுரை, அதைத் தொடர்ந்து விவாதங்கள் கிட்டத்தட்ட நேரில் நிகழ்வது போல. மானஸாவுக்கு உயிரியல் மற்றும் உயிர்-வேதியியல் பாடங்களில் அவள் செய்தது அவ்வளவாகத் திருப்தி இல்லை. அதனால் அவளுக்கு வருத்தம். அதை அதிகப்படுத்த இன்னொரு ஏமாற்றம்.
கோடை வெப்பம் இன்னும் தொடங்காததால் மாலையில் இதமான வெயில். அவளைப் பார்த்ததும் பெர்னி,
“ஏதோ சரியில்லை, மனா!”
“ட்யுக் யூனிவெர்சிடிக்கு நார்த் கரோலைனாவின் கடலோரத்தில் ஒரு மெரைன் லாப்.”
“தெரியும்.”
“கோடையில் கல்லூரி மாணவர்களுக்கான பத்து வார ஆராய்ச்சி. என் உயிர்-வேதியியல் அறிவை வளர்க்க ஒரு நல்ல வாய்ப்பு.”
“நீ அதற்குப் போவதாக இருந்தது. இப்போது அது இல்லை. சரியா?”
மானஸா உதட்டைப் பிதுக்கினாள்.
“அங்கே போயிருந்தால் அந்த அனுபவத்தை வைத்து ஒரு கதை எழுதியிருக்கலாம். ம்ம். ஒரு அதிபுத்திசாலிப் பெண். அங்கே வந்த ஒரு சராசரிப் பையனுக்கு அவள் மேல் ஆராதனை. ஆய்வுக்கூடத்திலும் கடற்கரையிலும் இருவரும் சேர்ந்து பரிசோதனைகள் செய்ய, நாள் ஒவ்வொன்றும் வேகமாகப் பறக்கிறது. கடைசி வாரத்தில் எப்படியாவது அவளிடம் தன் விருப்பத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று அவன் மனம் துடிக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னால் எதிர்பாராத விதமாக…”
மானஸா புன்னகை பூத்தாள்.
“அதுவும் போச்சு. வீட்டிலேயே சுற்றிச்சுற்றி வர வேண்டும்.”
சைக்கிளில் பள்ளங்களைத் தாண்டிக்குதித்த சிறுவர்களைப் பார்த்து நின்றார்கள்.
“வீட்டில் அலையாமல் ஓரிடத்தில் அமர்ந்து பல தகவல்களைப் படித்து ஒரு அறிக்கை எழுத ஒரு வாய்ப்பு. அலட்டிக்கொள்ளாமல் எட்டு வாரத்தில் ஆறாயிரம் டாலர்.”
பணம் அவளுக்குப் பெரிதாகப் படாது என்ற எண்ணத்தில்,
“தினம் மூன்று நான்கு மணி தான் தேவைப்படும். மீதி நேரத்தில் நீ உன் படைப்பு இலக்கியத்தைக் கவனிக்கலாம்” என்பதையும் சேர்த்தான்.
“விவரம் சொல்!”
“நாற்பது வயதுக்கு முன்பே பொருளாதாரத்தில் தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டியவர் டாக்டர் வீரன் வெட்டி. சென்ற ஆண்டு ட்யுக் அவரை ஸ்டான்ஃபோர்டில் இருந்து வரவழைத்து இருக்கிறது.”
“நிறைய வசதிகள் செய்து கொடுத்து…”
“அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி வரும் கோடையில் ஐந்து மாணவர்களுக்கு அவர் செய்யும் ஆராய்ச்சியில் அறிமுகப்பயிற்சி.”
“நீ அதில் சேரப்போகிறாய்.”
“நீயும் விண்ணப்பிக்கலாம். நிச்சயம் கிடைக்கும்.”
“பொருளாதாரம் என் அம்மாவுக்கும் அலெக்குக்கும்.”
“ஒரு நல்ல எழுத்தாளருக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்திருப்பது நல்லது.”
“முன் அனுபவம் இல்லையே.”
“ஏ பி ட்யுக் ஸ்காலருக்கு முடியாதது என்று எதுவும் கிடையாது.”
“சரி. குறிக்கோளைச் சொல்!”
“ஏழ்மையைக் குறைப்பது எப்படி?”
கோவிட் பணக்காரர்களை விட ஏழைகளை அதிகமாகத் தாக்கியதைக் கவனித்த மானஸா அதைப்பற்றி யோசித்திருந்தாள். ஆனாலும், பெர்னியின் அழைப்பை ஏற்பதா வேண்டாமா என்று யோசிப்பதுபோல பாவனை செய்தாள்.
“உன்னை என் பக்கம் இழுக்க முயற்சிக்க மாட்டேன். நாம் தனித்தனியாக வேலை செய்து நம் அறிக்கைகளைத் தயார் செய்வோம்.”
“நீ இவ்வளவு சொல்லும்போது…” என்று விட்டுக்கொடுப்பது போலச் சொன்னாள்.
கோடை தொடங்கியதும் பெர்னி ஃப்ளாரிடா சென்றுவிட்டான்.
“நீ என்னோட தான் நடக்கணும்” என்ற கேலியுடன் கங்கா மானஸாவுடன் நடக்கத் தொடங்கினாள்.
“ஒரு விதத்தில அது சௌகரியம். ஏழ்மையைப் பத்தி ஒரு சம்மர் ப்ராஜெக்ட். நானே தனியாப் பண்ணணும்னு இருக்கேன்.”
ஏழ்மையைக் குறைப்பது எப்படி?
மக்கள் வருமானங்களின் சராசரிக்கும் நடுநிலைக்கும் இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.
சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களின் வருவாய்களில் அதிக வித்தியாசம் இருக்கக்கூடாது.
சுருக்கம்
ஒரு நாட்டு மக்களின் வருமான ஏற்றதாழ்வுகளை அளக்க ‘ஜீனி இன்டெக்ஸ்’. கொராடோ ஜீனி உருவாக்கிய இந்தப் பொது அளவீடு காலப்போக்கில் ஒரு நாட்டில் நிகழும் வருமான மாற்றத்தைப் பின்பற்றவும், இரு நாடுகளின் சமத்துவமின்மையை ஒப்பிடவும் உதவும். பல மில்லியன் மக்களின் உயர்வு தாழ்வுகளை ஒரு குறிப்பிட்ட எண்ணால் விவரிப்பது இயலாது. அண்மையில் யூ.எஸ். மக்களின் பொருளாதார சமநிலை குறைந்துவருகிறது என்பதை ஜீனி இன்டெக்ஸ் காட்டினாலும் அதற்கான காரணங்களையும் அவற்றை நிவர்த்திக்கும் வழிகளையும் அதில் இருந்து நேரடியாகப் பெறமுடியாது.
டாக்டர் வெட்டி பல ஆண்டுகளாகச் கேசரித்த புள்ளி விவரங்களில் இருந்து ஏழ்மையைக் குறைக்க இரண்டு படிகள் அவசியம் என்பது வெளிப்படுகிறது.
முதல் படி.
சராசரிக்கும் நடுநிலைக்கும் இடைவெளி குறைக்கப்பட வேண்டும். அரசாங்கமும் பெரும்பாலான பொருளியலாளர்களும் சராசரியைப் பயன்படுத்துவது ஏழ்மையின் தீவிரத்தை மறைத்துவிடுகிறது. தற்போது ஒரு குடும்பத்தின் நடுநிலை வருமானம் சராசரியைவிட எட்டாயிரம் டாலர் குறைவு. இந்த வித்தியாசத்திற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, நிறுவனங்களின் உயர்மட்ட சன்மானம் நுழைவுமட்ட சம்பளத்தைப்போல் ஐம்பது நூறு மடங்குகள். இரண்டு, தாமஸ் பிக்கெட்டி சுட்டிக்காட்டியது போல் முதலீட்டின் வருமானம் சம்பளத்தைவிட அதிவேகமாக வளர்கிறது. கம்பெனி பங்குகள் பெரும்பாலும் மேல்மட்டத்தினரின் கைகளில். வட்டியில்லாத பணத்தை அரசாங்கம் பரப்புவதால் அவற்றின் மதிப்பு ஆதாரம் இல்லாமல் உயர்கிறது. அதைத் தவிர்க்க கடன்தொகைகளுக்கு பணவீக்கத்துக்கும் அதிகமான வட்டியை அரசு நிர்ணயிக்க வேண்டும்.
இரண்டாவது படி.
உயர் மட்டத்தினரின் வருமானத்தில் நிறைய ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அது ஒருவேளை அவர்களிடையே பொறாமையையும் அதிருப்தியையும் உண்டாக்கும். ஆனால் அவர்கள் வாழ்க்கைத் தேவைகளில் எந்தக் குறையும் இராது. நடுநிலைக்குக் கீழே உள்ளவர்களுக்கு அப்படி இல்லை. அவர்களிடையே சிறு வேறுபாடுகளும் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கும். அவர்களின் வருமானத்தைச் சீராக்க ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ற நிச்சய வருமானம்.
இவ்விரண்டு மாற்றங்களையும் செயல்படுத்தினால் நடுநிலை வருமானத்தில் பாதிக்கும் கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை குறையும்.
(இச்சீர்திருத்தங்கள் சோஷலிசத்துக்கு இட்டுச்செல்லும் என்று குறை சொல்பவர்களின் கவனத்துக்கு… யூ.எஸ். கடற்படையில் நுழையும் கப்பல்தள வீரர்களின் ஆண்டு வருமானம் இருபத்தியைந்தாயிரம் டாலர். படைத்தலைவர்களுக்கு அதைவிட எட்டு மடங்கு மட்டுமே. பெப்ஸி நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி இந்திரா நூயிக்கு அதன் சாதாரண தொழிலாளரை விட அறுநூற்று ஐம்பது மடங்கு சன்மானம். எந்த விதத்தில் முன்னதின் தரம் பின்னதைவிடக் குறைந்துவிட்டது?)
மக்கள் வருமானங்களில் சமத்துவமின்மை கடந்த ஐம்பது ஆண்டுகளில் அதிகரித்து வந்திருப்பதைப் பல ஆய்வுகள் காட்டுகின்றன. படம் 1. ஜீனி இன்டெக்ஸ் 1970-இல் இருந்து 2020 வரையில். …..
முந்தைய இரவு டாக்டர் வெட்டி சம்மர் இன்ஸ்டிட்யுட்டிற்கு மானஸாவின் அறிக்கை சென்றது.
கங்கா, கலாவதி முடிந்தபோது வந்த திருப்தி நிம்மதி பெருமிதம் அவளுக்கு இப்போதும். கலாவதியை உருவாக்கியபோது அவளிடமே சிற்சில மாற்றங்கள். இப்போது இரண்டு மாதத் தேடலில் புது மானஸா. அறிக்கையின் கருத்துக்களும் அவற்றை வெளிப்படுத்திய விதமும் அவளுக்குப் புதுமை. கவனக்குவிப்புடன் செய்த சாதனை.
பெர்னியின் அறிக்கை முடிந்து அதன் மின்-வடிவம் ட்யுக் போயிருக்கும். இருவருடைய எண்ணங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க அவன் மின்-முகவரிக்கு அவள் கட்டுரையை அனுப்பிவைத்தாள். அவனிடம் இருந்து…
– நான் நேற்றைய இரவு திரும்பிவந்தேன், பெர்னி –
– மாலையில் நடப்போம், மானஸா –
காலைநேரம் நகர்ந்தபோது மானஸாவின் மனதில் மகிழ்ச்சிக்கு அடியில் கலக்கம். ஏன்? அவள் கருத்துக்களுக்கு பொருளியலாளர்களிடம் வரவேற்பு இருக்குமா? இல்லாவிட்டால் என்ன. இது தேர்வு அல்ல. அறிக்கைக்கு க்ரேட் கிடையாது. கொடுத்த பணத்திற்கும் அதிகமான நேரம் செலவழித்து வெகுநேரம் சிந்தித்து எழுதியிருக்கிறாள். கதை முடிந்தது.
பெர்னியிடம் இருந்து தயார் என்ற தகவல் வந்ததும் மானஸா தொப்பியும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்து வெளியே வந்தாள். அவன் தெருமுனையில் காத்திருந்தான்.
பயணத்தின் போதும் தாத்தாவின் வீட்டிலும் பெர்னி கோவிட் வைரஸின் பாதையில் குறுக்கிட்டிருக்கலாம் என்பதால், முன்பே ஒத்துக்கொண்டது போல் இருவரும் ஆறடிக்குமேலேயே விலகி நின்றார்கள்.
பெர்னி வித்தியாசமாக இருந்தான். பதின்பருவத்தைத் தாண்டிய தோற்றம். எப்படி வந்தது? டி-சட்டைக்கு பதில் காலருடன் சட்டை, குட்டையாக வெட்டிய தலைமயிர்? எட்டு வாரங்களில் திடீர் வளர்ச்சி? ஃப்ளாரிடாவில் தாத்தா பாட்டி வீட்டில் அவர்களுக்கு உதவியாக இருந்ததால் வந்த முதிர்ச்சி?
அவளைப் பார்த்ததும், அவளைப் பார்க்காத சமயம் அவன் யோசித்ததைக் கோர்வையாகச் சொல்லும் திட்டத்தில்,
“மானஸா! நீ ஒரு அபூர்வப்பிறவி” என்று ஆரம்பித்தான்.
“நாம் எல்லாருமே மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டவர்கள். அதை கேரக்டர்கள் வழியாக வெளிப்படுத்துவது ஒரு நல்ல எழுத்தாளரின் சாதனை.”
“நோ! நோ! நீ சொல்வது நாம் பிறக்கும்போது. கல்வி என்கிற இயந்திரத்தில் நுழைந்து வெளிப்படும்போது ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் தனித்துவத்தை இழக்கிறார்கள்.”
எதற்கு இந்த அலசல்?
“ஏழ்மையின் தீர்வுக்கு நீ எழுதியது ஒரிஜினல். அதைப் படித்ததும் என் அறிக்கை மிக சாதாரணமாகப் பட்டது. அதனால் தான் உனக்கு நான் அதை அனுப்பவில்லை.”
பொருளாதாரம் படிக்காத ஒருத்தி எழுதியதை அத்துறையில் ஓரளவு அறிவுசேர்த்த ஒருவன் கேலி செய்கிறானோ? அவள் சந்தேகப் பார்வையைக் கவனித்த அவன்,
“நிஜமாகத்தான் சொல்கிறேன். டாக்டர் வெட்டியின் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அவர் ஊடகத்தில் சொன்ன விவரங்களையும் தொகுத்துச் சுருக்கி, கட்டுக்கோப்பான மொழியில் எழுதினேன். அவர் எப்படிப்பட்ட ஆராய்ச்சி செய்கிறார் என்பதை யாராவது அறிய விரும்பினால் அதைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். மற்றபடி, அறிக்கையில் புதிதாக ஒன்றும் இல்லை. இந்த ப்ராஜெக்ட்டில் பங்குபெற்ற மற்ற மூன்று பொருளியல் மாணவர்களின் அறிக்கைகளும் கிட்டதட்ட அதே போலத்தான் இருக்கும். அவற்றை வெட்டியின் குழுவில் இருக்கும் யாராவது மேலோட்டமாகப் படித்து மின்-கோப்பில் சேர்த்து வைப்பார்கள். எல்லாருக்கும் சாதனை செய்த திருப்தி. உன் எழுத்து வித்தியாசம்.”
“அது எதிர்பார்க்கக்கூடியது தான். பொருளாதாரத்தில் எனக்கு எல்லாமே புதிது. உங்களைப்போல அதன் கருத்தியல் கொள்கைகள் எனக்குத் தெரியாது. அத்துடன், போன செமிஸ்டரில் நான் ‘சோஷியல் இன்ஈகுவாலிடி’ வகுப்பு எடுத்தேன்.”
“அதையும் தாண்டி…”
“ஒரு எழுத்தாளர் மற்றவர் சிறப்பாக எழுதியதை எடுத்து, தன்னுடைய அச்சைப் பதித்து, அதைத் தனதாக ஆக்கிக்கொள்ளலாம். ஜார்ஜ் ஆர்வெல் சொன்னது போல், அது இலக்கியத்திருட்டு ஆகாது. ‘ஜீனி இன்டெக்ஸை’ ஊடகத்தில் நீண்ட நேரம் தேடியபோது ஒரு அதிபுத்திசாலி அகப்பட்டான். அவன் எண்ணங்களை மாற்றிப்போட்டு எனக்குச் சொந்தமாக்கினேன்.”
“அதைப்போல சின்ன சின்ன அமைப்புகள் பூதாகரமான நிறுவனத்தைவிட சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நான் எப்போதோ சொன்னதையும் நீ பயன்படுத்தி இருக்கிறாய்.”
“சங்கிலித் தொடர் உணவகங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஏழெட்டு அதிகாரப்படிகள். ஒவ்வொரு படி உயரும்போதும் வருமானம் வளர்ந்து மேல் படிகளை எட்டும்போது மில்லியன் டாலர் கணக்கில். விளம்பரங்களில் பிரபலங்களுக்குக் கொள்ளைப்பணம். மூதலீடு செய்தவர்களுக்கு வருமானம். எல்லாம் போக, உணவு தயாரிக்கும் பணியாட்களின் சன்மானம் அவர்கள் ஜீவிக்கப் பத்தாது. ஆந்திரா அட்ராக்ஷனில் இரண்டு அதிகாரப்படிகள். மொத்தம் இருபத்தியெட்டு பணியாளர்கள். பாதி பேர் விடுதி ஆரம்பித்த நாளில் இருந்து அதில் பணிசெய்கிறவர்கள்.”
“தற்போதைய சட்டங்கள் பெரிய நிறுவனங்கள் பக்கம். ஏழ்மையைக் குறைக்க அவற்றை மாற்றுவது ஒரு சிறந்த வழி. ஆனால், என் பாடப்புத்தகங்களில் அது இராது. அதை விவரிக்கும் உன் அறிக்கை ஒரு புதிய முயற்சி. அது டாக்டர் வெட்டியின் பார்வைக்கு அனுப்பப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.”
அப்படி நடந்தால்… என்ற சிந்தனையில் மானஸா மௌனமாக நடந்தாள்.
அவர்கள் வழக்கமாக நடக்கும் பாதையில் ஆரம்பப்பள்ளியின் நுழைவிடம். வந்த வழியில் திரும்பிப்போகாமல்,
“மேலே போகலாமா? மானஸா!”
குரலின் அழைப்பில் ஒரு ஆர்வம். அதைக் கவனித்த அவள் நடையைத் தொடர்ந்தாள்.
வளைந்த சாலையில் ஏறி மேட்டில் இருந்த விளையாட்டு வட்டத்தைப் பார்த்தபடி நின்றார்கள். அங்கே இரண்டு பத்துவயதுப் பெண்கள் பந்தைத் தரையில் விழாமல் தட்டினார்கள்.
சுற்றுத்தடத்தில் கால் வைப்பதற்கு முன்னால் பெர்னி,
“நான் சொல்வது அதிர்ச்சி தராது என்கிற நம்பிக்கையில்…”
எழுத்தாளருக்கான கற்பனைத்திறன் கொண்ட மானஸாவுக்கு அவன் சொல்லப்போவதை ஊகிப்பதில் சிரமம் இல்லை. அதை அவள் எதிர்பார்த்திருந்தாலும் இவ்வளவு விரைவாக அல்ல. அவளுடைய ‘ஏழ்மையைக் குறைப்பது எப்படி?’ அறிக்கை அவன் எண்ணங்களைத் துரிதப்படுத்தி இருக்கலாம். அவன் ஆரவாரம் இல்லாமல் அந்தப் பேச்சை எடுத்தது அவளுக்குப் பிடித்திருந்தது. அதன் விளைவுகளை உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக யோசிக்கலாம். மானஸா மறுத்தாலும் அவன் அதற்காக அவள்மேல் கோபப்பட்டு உலகத்தையே வெறுக்கப்போவது இல்லை. அவள் அசையாமல் நின்றாள். அவளை நேரே பார்த்து,
“உன் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்க ஆசை. உன் மேதாவித்தனத்தை சொந்தம் கொண்டாட அல்ல. அது என்னிடம் உறைக்குமோ என்கிற நம்பிக்கையில்.”
முகத்தில் சிறிது ஆச்சரியம் காட்டி, பிறகு அதை ஏமாற்றமாக மாற்றி,
“உன் ப்ரோபசல் ரொமான்டிக்காகவே இல்லை” என்றாள்.
“நிச்சயமாக இல்லை. என் எலைஸா பாட்டி ஆதிகால வரலாற்றில் கரைகண்டவள். டைபர் நதியில் மிதந்து வந்த இரண்டு அபலைக் குழந்தைகளை ஒரு பெண் ஓநாய் காப்பாற்றி வளர்த்த கதையையும், அதைத் தொடர்ந்த சம்பிரதாய வழக்கங்களையும் அவள் எழுதிய ஒரு கட்டுரையில் படித்தேன். நிஜத்திலும் ஓநாய்கள் ஒன்றுக்கொன்று உதவிசெய்து குட்டிகளுக்கும் முதிர்ந்த பிராணிகளுக்கும் ஆதரவு தருவதையும், ஆணும் பெண்ணும் வாழ்நாள் முழுக்கத் துணையாக இருப்பதையும் அவள் விவரித்து இருக்கிறாள். ஓநாய்களை நம் காதல் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக ஏற்க வேண்டும் என்ற அவள் அறிவுரையைப் பின்பற்றப் போகிறேன்.”
“இப்படிச் சொல்லும் நீ தான் அபூர்வம்.”
வட்டத்தைச் சுற்றி நடக்கத் தொடங்கினார்கள். தரையில் குழந்தைகளின் கிறுக்கல்கள், படங்கள். மௌனத்தில் ஒரு சுற்று முடிந்ததும்,
“நீ இன்னும் எனக்குப் பதில் சொல்லவில்லையே.”
“இம்மாதிரி பதின்பருவத்தைத் தாண்டாதவர்களின் திருமணம் ஒரு சில ஆண்டுகளுக்குள் கரைந்துவிடும்.”
“அது முதிர்ச்சி இல்லாத பாமரர்களின் அனுபவம்.”
“நமக்கு ஒருவரை யொருவர் எவ்வளவு தெரியும்?”
“நிறைய. உன் சிறப்பான குணங்களின் அருமை ஜோசஃப் ஸ்மித்துக்குத் தெரியவில்லை. அது உன் அதிருஷ்டம். கலாவதி’ஸ் டிலெமாவின் ஸ்க்ரிப்டை எழுத ஒப்புக்கொண்டு அந்த சவாலை சந்திக்க அசாதாரண திறமை வேண்டும். எழுத்துத் துறையில் இன்னும் பல சாதனைகள் காத்திருக்கின்றன. என்னைப்பற்றி இதுவரை உன்னிடம் நான் சொல்லாதது எதுவும் பாக்கி இல்லை. இரண்டு மாதங்களின் மாலைவேளைகளில் நாம் பேசாத விஷயம் இல்லை. நாம் சர்ச்சைக்குரிய பல கொள்கைகளை விவாதித்து இருக்கிறோம். எப்போதுமே ஒத்துப்போனோம் என்று சொல்வதற்கு இல்லை. அதனால் பரஸ்பர மதிப்பும் மரியாதையும் குறைந்துவிடவில்லை. உன் கோடை அறிக்கை நான் எழுதியதைவிட மிக உயர்வானது என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.”
“எல்லாம் சரி. பதின்பருவத் திருமணத்தின் முதல் எதிரி – இன்னொரு பொருத்தமான, இல்லை சிறப்பான துணையின் சந்திப்பு. நம் வாழ்விலும் அது நிச்சயம் நடக்கும்.”
“ஒரு மனிதரை இன்னொருவருடன் ஒப்பிடுவது பாவம். அப்படிச் செய்த என் அக்கா ஆறு ஆண்டுகளில் மூன்று உறவுகளை மாற்றிவிட்டாள். இன்னமும் அவளுக்குத் திருப்தி இல்லை.”
“நாம் மாணவர்கள். நமக்கு நிரந்தர வருமானம் கிடையாது.”
“நம் தேவைகளும் மிகக்குறைவு.”
“கோவிட் மட்டுமல்ல, நிலையற்ற சீதோஷ்ணம், குறைந்துவரும் இயற்கை வளங்கள், சமுதாயத்தில் அதிகரித்துவரும் ஏற்ற தாழ்வு – இவற்றாலும் இது நிச்சயமற்ற காலம்.”
“இந்த சமயத்தில் தான் நிச்சயமான ஒரு உறவு அவசியம்.”
“நம் மற்றும் இந்த உலகின் எதிர்காலம் எப்படி இருக்கும்?”
“அது எப்போதுமே எதிர்பாராததாக இருக்கும்.”
எல்லா மறுப்புகளுக்கும் பதில்.
இப்போது அங்கே அவர்கள் மட்டும்.
“தீர யோசிக்க வேண்டிய விஷயம்” விவாதத்தை நிறுத்தியது.
வட்டத்தில் இருந்து வெளியேறி வளைவில் இறங்கி வழக்கமான பாதையில் நடந்து முடிக்கும் வரை மௌனத்தில் சிந்தனை. மானஸாவின் மனதில் அவள் அறிந்த திருமணங்களின் ஊர்வலம். இரண்டு ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்த அஷ்வினியும் அவள் தோழனும் கல்யாண பந்தம் என்று வந்ததும் ஆறு மாதங்கள் கூட சேர்ந்து வாழவில்லை. ஒரு நாள் வைபவத்துக்கு அரை மில்லியன் டாலர் செலவழித்த இன்னொரு ஜோடி.
வீட்டின் முன் நின்று பிரிந்தபோது கூட பார்வையில் விடைபெற்றார்கள்.
(தொடரும்)