
பாண்டி ஆட்டத்தில் ஒரு பெரிய சதுரத்திற்குள் கட்டங்கள் இட்டு ஆறு சதுரங்களை அமைப்பார்கள். அந்தச் சதுரங்களுக்கு மேலே மையத்தில் ஒரு சிறு சதுரம் அமைக்கப்படும். விளையாடுவோர், கண்களைக் கட்டிக் கொண்டு, தலையில் சிறிய ஓட்டுச் சில்லை வைத்துக் கொண்டு ஒவ்வொருவராக விளையாட வேண்டும். ‘இச்சா’ என்று சொல்லிக் கொண்டே இரு கால்களையும், கீழ்ச் சதுரத்தில் அதன் எல்லைக் கோடுகளை மிதிக்காமல் குதிக்க வேண்டும்; அடுத்த சதுரத்தில், ‘இனியா’ என்று சொல்லிக் கொண்டே, அதே போல், மூன்றாவதில் ‘காயா’ என்று சொல்லிக் கொண்டே மேலிருக்கும் ஒற்றைச் சதுரத்தில் அதன் எல்லைகளை மிதிக்காமல் இரு கால்களையும் ஒன்றிணைத்து ‘பழமா’ என்று சொல்லிக் கொண்டே குதித்தால் வெற்றி. இப்படிக் குதிக்கும்போது தலையிலிருக்கும் ஓட்டுச்சில் கீழே விழுந்து விடவும் கூடாது.
இந்த விளையாட்டின் வெற்றி தோல்வியை புள்ளியல் தரவுகளைக் கொண்டு நிகழ் தகவுகளை அமைத்து அதன் மூலம் கணிப்பதும் பொருளாதாரம் பற்றி, அதன் போக்கைப் பற்றி தெளிவாக அறிய முயல்வதும் கிட்டத்தட்ட ஒன்றே.
‘கருத நல்லா வெளய வச்சு, மருத ஜில்லா ஆள வச்சு களத்துமேட்ல அறுத்துப் போடு சின்னக் கண்ணு….பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில விருது நகர் வியாபாரிக்கு நீயும் வித்துப் போட்டு, பணத்த எண்ணு சின்னக்கண்ணு; சேத்த பணத்த சிக்கனமா செலவு செய்ய பக்குவமா அம்மா கைல கொடுத்துப்போடு சின்னக்கண்ணு, அவங்க ஆறை நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு’ எவ்வளவு எளிய தமிழில் தனி மனிதப் பொருளாதாரத்தையும், வணிக அமைப்புகளையும், சேமிப்பின் தேவைகளையும் இந்தப் பாடல் சொல்லிவிடுகிறது.
20ம் நூற்றாண்டு தொடக்கத்தில், உளவியலாளர்கள், முறையான வழிகளில் மனிதனின் அகநிலை அனுபவங்களை பரிசோதித்து அதன் மூலம் மனதிற்கும், உடலிற்குமான தொடர்பினை அறிந்து கொள்ள முடியுமா என்று சிந்தித்தார்கள். இந்த உளவியல் கோட்பாடுகளில் எதை அவர்கள் அலகாக எடுத்துக் கொண்டு செயல்பட்டாலும், மறைந்திருக்கும் ஆழங்களின் மீது வெளிச்சம் பாய்ச்ச முடியுமா என்பதே நோக்கம். இது ஒன்றும் புதிதல்ல; ஞானிகள், இறை மறுப்பாளர்கள் என்ற தரப்பினரும் பல நூற்றாண்டுகளாக இதற்கான விடையைத் தேடியிருக்கின்றனர். ஆனால், இந்தப் புதிய அறிவியல், உணர்வாழங்களை, விஞ்ஞானப் பூர்வமாக அளக்க முடியுமா அல்லது துல்லியமாக விளக்க முடியுமா என்ற கோணத்தில் அதை அணுகியது. மனமும், உடலும் இணைப்பில் உள்ளன என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும், அது எவ்விதமாகத் தொடர்பு படுத்தப் படுகிறது என்பது கேள்வி. மனம், உடலில் ஆதிக்கம் செலுத்துகிறதா அல்லது உடல் மனதின் மேலே அல்லது இந்த இரண்டும் மிக நுண்மையாகப் பிணைக்கப்பட்டுள்ளதா?
இந்த வளர்பருவ அறிவியலில் உளவியலாளர்களுக்குள் போட்டியும் நிலவியது. உளப்பகுப்பாய்வாளர்கள், வார்த்தையாடுதலின் மூலம் அகநிலையைப் பற்றி அறிய முயன்றார்கள். ‘நாமே அறியாத அடியாழத்து விசையை, நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கும் அந்த ஒன்றை, மனசிகிச்சையாளர்கள், இத்தகைய உரையாடல்களின் மூலம் முறைப்படுத்தி அடையாளம் காண விழைந்தார்கள்.’ என்று சொல்லும் ஆன் ஹாரிங்டன், (Anne Harrington) ஜார்ஜ் க்ரோடக் (George Croddeck) அதை, ‘அது’ (It) என்றும், ஃப்ராய்ட் அதை ‘ஐடி’(id) என்றும் அழைத்தார்கள் என்று கூறுகிறார்.
உளவியலின் மற்றொரு முக்கியப் பிரிவு, ஆய்வகங்களில் அறிவியல் நிரூபணங்களின் மூலம் இதை உறுதி செய்ய முடியும் என நம்பியது. உளவியல் பகுப்பாய்வாளர்கள் போலவே, பரிசோதனை உளவியலாளர்கள், மனிதரின் அக அனுபவத் துல்லியத்தை, அறிவியல் ரீதியாகச் சொல்ல முடியும் என்றார்கள். அளக்கக்கூடிய புற நிலை உடல் செயற்பாடுகள், அகநிலையின் வெளிப்பாடுகளே என்ற அவர்களது கொள்கையால் அவர்கள் உளப்பகுப்பாய்வாளர்களிலிருந்து மாறுபட்டனர். ஜான் வாட்சனின் ‘நடத்தை விதிகள்’ மூலம், மிகப் பிடிவாதமாக, தனியான அகநிலை என்ற கருத்தை கிட்டத்தட்ட மறுத்து, ‘உணர்வு’ என்பது பிரதிபலிப்புகளின் கூட்டமைப்பு என்ற முடிவிற்கு வந்தார்கள். உள ஆற்றலை இறுகிய அடைப்பிற்குள் வைத்துப் பார்த்ததும், தீர்மானமாக ‘அது அப்படித்தான்’ என்று போலியாக நிறுவ முற்பட்டதும் இந்த இரு தத்துவங்களின் குறைபாடுகளாகும். வாழ்வில், மனம் மற்றும் உணர்வுச் சுழல்களின் சிக்கலை, ஒரு அமைப்பிற்குள் செலுத்தி பரிசோதிக்கும் போது, உடனடித் தன்மை, நீரென இளகும் நிலை, நிலையாமை, நிச்சயமின்மை இவற்றையெல்லாம் எதைக் கொண்டு அளக்க? உருவற்ற ஒரு ஆற்றலை ‘குறை மதிப்பீடு’ செய்த அறிஞர்கள் இவர்கள். பழங்கால கருத்தான ‘விலங்குத் தன்மை’ மற்றும் மரபு சொல்லும் ‘உயிர்சக்தி’ என்ற களத்தின் கொள்ளளவு மிக அதிகமாக இருக்கவே, அறிவார்ந்த சிந்தனையாளர்கள், தங்கள் ஊகங்களை உற்பத்தி செய்து, அகநிலை அனுபவங்களுக்கும், தினசரி வாழ்விற்கும் இடையில் இருக்கும் உறவை, பொருளியல் வாழ்வு உட்பட, இணைத்துப் பேசி மகிழ்ந்தார்கள். ஜான் மேனா(ர்)ட் கெய்ன்சை (John Maynard Keynes) விட சிலர் அதிக துணிச்சலுடன் இருந்தனர்.
இன்றளவும் மூன்று பொருளாதாரக் கோட்பாடுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாக வலம் வருகின்றன. ஆடம்ஸ்மித், (Adam Smith) வாணிக வர்த்தகமே பொருளாதாரத்தின் முக்கிய அம்சம் எனச் சொன்னவர். நிலம், முதலீடு, மனித உழைப்பு மூன்றும் உலக உற்பத்தியின் அலகுகள். இதில் முதலிரண்டும் எல்லைகளுக்கு உட்பட்டவை; அதாவது அவை அரிதானவை. ஆனால், உழைப்பைப் பகிர்ந்து செய்வதன் மூலம் அதிக உற்பத்தி, அதிக வர்த்தகம், பொருட்செழிப்பு ஏற்படும் என்பது அவர் கொள்கை. ஆனால், வலியோருக்கும், எளியோருக்குமான இடைவெளியை இது அதிகரித்தது.
ஆஸ்ட்ரியாவைச் சேர்ந்த நிபுணர்கள், (கார்ல் மெங்கர்-Carl Menger போன்றோர்) நுகர்வோருக்கு ஒரே பொருளினால் கிடைக்கும் மதிப்பென்பது குறையக்கூடிய இயல்பிலானது என்று சொன்னார்கள்.
கெய்ன்ஸ் சொல்வது மேக்ரோ எகனாமிக்ஸ் (Macro Economics) என்று சொல்லப்படுகிறது. அவர் ஐந்து அம்சங்களை அனுமானங்களாகக் கொண்டு தன் வாதத்தைச் செய்கிறார்:
- தொழிலாளர் ஊதியம் உயரும் போது காணப்படும் நெகிழ்வுத் தன்மை, அவ் ஊதியம் குறைகையில் இருக்காது.
- பொருளாதாரம் தன்னைத்தானே முறைபடுத்திக் கொள்ளும் தன்மையற்றது. எனவே, அரசாள்வோரின் தலையீடு அவசியம்.
- நுகர்வோரின் செலவினங்கள் ஒரு பொருளாதாரத்தின் இயங்கு சக்தி
- அந்த நுகர்ச்சியும் வருமானத்தைச் சார்ந்தது.
- வருமான அதிகரிப்பு விகிதத்தில், நுகர்ச்சியும் உடனடியாக நிகழாது.
ஆடம் ஸ்மித் கூற்றின்படி, பொருளாதார இறக்கம்/சரிவு ஏற்படும் காலகட்டத்தில், அது தானே சரி செய்துகொண்டு ஏற்றத்திற்கு வரும்.
ஆஸ்ட்ரிய நிபுணர்கள், நிலம், முதலீடு போன்ற இடுபொருட்கள் அருகி இருக்கையில் என்ன, எவ்வளவு, எவ்விதம் உற்பத்தி செய்ய வேண்டுமெனச் சொன்னவர்கள்.
சரிவு நிலையை நேர் செய்து, பணப்புழக்கத்தை மேம்படுத்தி, சந்தையை இயங்க வைப்பது அரசின் பொறுப்பு என்று கெய்ன்ஸ் சொல்கிறார்.
உயர் நடுத்தர குடும்பத்தில், கேம்ப்ரிட்ஜில், தன் குழந்தைகளுக்கான பெரும் கனவுகளைக் கொண்டிருந்த பல்கலை நிர்வாகிக்கும் ,இணக்கமற்ற போதகரின் சுதந்திர அரசியல் சார்புடைய மகளுக்கும் 1883-ல் கெய்ன்ஸ் பிறந்தார். சிறு வயது முதற்கொண்டே பல போட்டிகளில் பங்கு பெறும் வண்ணமே அவர் வளர்க்கப்பட்டார். அவருக்கு இடனில் (Eton) படிப்பதற்கு உதவித் தொகை கிடைத்தது. இவரைப் போன்ற அறிவுஜீவிகளுடன் பள்ளியில் தங்கும் வாய்ப்பினால், அதிக எண்ணிக்கையிலான, அறிதலுக்கு எதிரான உயர்குல நெறிமுறைகளுடன் அலட்டுவோரிடமிருந்து தப்பினார். அவரது பெற்றோர்களும், கல்வி அறிவு வளர்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால், அவரால் அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.
அவரின் அறிவு வளர்ச்சிக்கு, எண்கள், அதுவும் முரணுடன் கூடியவைகள், பெரும் அளவில் உதவின. தகவல்களின் துல்லியம், அதுவும் அது எண்களின் வடிவத்தில் கிடைக்கும் போது, தன் வளர் இளம் பருவத்தில் அவரதை மிக விரும்பினார் என்று அவரது சரிதையை எழுதிய ராபர்ட் ஸ்கிடெல்ஸ்கி (Robert Skidelsky) குறிப்பிடுகிறார். வளர்ச்சியின் மதிப்பை எண்களால் அளவீடு செய்வது என்பது, சுதந்திரச் சூழலில், மரபார்ந்த விக்டோரிய சிந்தனைகளில் மூழ்கிய குடும்பத்திலிருந்து வந்துள்ள புத்திசாலியான அவருக்கு இயல்பான ஒன்றுதான். ஆனால், கேம்ப்ரிட்ஜ் இறையாண்மைக்(!) குழுவைச் சேர்ந்த, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், (Bertrand Russel) லிட்டன் ஸ்ட்ரோசி, (Lytoon Strachey) மற்றும் சில அறிவுஜீவிகளைப் போல அவரும் மெய்யியலாளர் ஜி ஈ மூரால் (G E Moore) கவரப்பட்டார். வறட்டு எண்களின் பிடியிலிருந்து விடுபட்டு, மிக உன்னதமான நட்பு, அழகு, அறிதல் போன்றவைகளில் கவனம் செலுத்துமாறு மூர் சொன்னார். இருந்தும், எண்கள் அவரைக் கவர்ந்தன, அவற்றைத் திறம்பட வளைத்துக் கையாண்டார் அவர். உண்மையின் பாதையில் பயணிக்க எண்கள் மட்டுமே போதாது என்பதை காலப் போக்கில் உணர்ந்தார். பட்டதாரியானார், கருவூலத் துறையில் இந்தியப் பிரிவில் வேலை பார்த்தார். அதை விட்டுவிட்டு கேம்ப்ரிட்ஜில் பொருளாதாரம் கற்பிக்கப் போனார். அந்தத் துறையில் புள்ளியியலில் ஆற்றல் பெற்று ஒரு புள்ளியலாளராகப் பணி செய்தார். அதே நேரம், அறிதல்களை எண்களாகச் சொல்ல முடியும் என்று உச்சமாகக் கூவியதை அவரால் ஏற்க முடியவில்லை. பெரும்பாலும், தன்னை மீறியே, அவை துல்லியமாக அடையாளப்படுத்தத் தவறியதையும், ஆணித்தரமாக வலியுறுத்தும் போக்கையும் கண்டார். அறிந்து கொள்வதற்கு எண்கள் அவசியம் தான், ஆனால் அவை தடித்தனம் கொண்டு, தேவையற்ற விவரங்களில் ஒளி பாய்ச்ச முற்படுவதையும், எதிர்காலத்தை கணித்துக் கட்டுப்படுத்த முடியும் என்று கட்டுக்கதைகளைச் சொல்வதையும், அவரால் ஏற்க முடியவில்லை. புள்ளியியல் தரவுகளில் சார்பின்மை என்பதும், சரியான மாதிரிகளும் அவசியம்; அதனாலேயே புள்ளியியலை பச்சைப் புளுகு இயல் எனச் சொல்வோர் இருக்கிறார்கள்!
கணிப்பதற்கான கருவியாக புள்ளியியலின் செயற்பாடுகள் குறைந்தனவே என அவர் உணர்ந்தார். மாறுபடும் பொருளாதாரச் செயல்களான வட்டி விகிதம், வேலையின்மை, செப்பு விலை இவற்றின் இடையே இன்று நிலவும் உறவை வைத்துக் கொண்டு வருங்காலத்திலும் அவ் உறவின் விகிதம் அவ்வாறேதான் இருக்கும் எனச் சொல்ல முடியாது. அவர் ‘பொருளாதார அறிவியலைப்’ பற்றி கிண்டல் செய்ததும் இதனால்தான்.
வாழ்வைப் போலவே, பொருளாதாரமும், நிச்சயமின்மை கொண்டுள்ள ஒன்று. உலகப் போர் விக்டோரியன் உறுதிப்பாட்டை அசைப்பதற்கு முன்னரே, சுட்டும் நேர்மறைத் தூண்களின் பொருளாதார அறிவை அவர் கேள்வி கேட்டார்- நிதிச் சந்தைகளில், தர்க்கபூர்வமான அறிதல்களின் பங்கு கேள்விற்கு உரிய ஒன்று என்பது அவரது சிந்தனை. 1908ல் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில், ‘படுக்கையில் படுத்துக் கொண்டு, நிகழ் தகவு தத்துவங்களைப் பொழியும் பங்குச் சந்தை உறுப்பினர்களின் நகைச்சுவைகளை இரசித்துக் கொண்டிருக்கிறேன்’ எனச் சொல்கிறார். ‘இதில் மிகவும் இரசிக்கத்தக்கதாக பக்கெட் ஷாப் (Bucket Shop) நிறுவனரின் கூற்றைக் கருதுகிறேன். எப்படியும் பணம் செய்துவிட வேண்டும் என்ற பேராசையினர், அறிவாற்றல் இல்லாத ஏமாளிகள் போன்றோர் அதிகப் பணத்தை கடன் வாங்கி, பங்கு விலை சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
நவீனத்துவக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கெய்னிசின் நண்பரான வர்ஜீனியா உல்ஃப் உட்பட அனைவரும் நிச்சயமின்மையின் காதலர்கள். இந்தக் கருத்தை துணிகரமாக பொருளாதாரச் சிந்தனைக்கு எடுத்துச் சென்றவர் கெய்ன்ஸ் மட்டுமே. 1910களில், தன் இந்தச் சிந்தனையை முதலீடு செய்வோரின் உந்துதல் என்ன என்பதில் அவர் காண்பித்தார்- விலங்குத்தன்மையின் மையம் என்று அவர் உள்ளொளி சொன்னதை ஏற்றார். கணக்கிட்டு முதலீடு செய்வதாகக் கருதிக் கொள்ளும், ‘பொருளாதார மனிதர்கள்’, நிதிச் சந்தையின் இயற்கைத் தன்மையை மீறித்தான், அதை ஒருபுறம் தள்ளி, இத்தகைய பங்கு வர்த்தகங்களில் ஈடுபடுகிறார்கள். பெருவாரியான அறிய முடியாத எதிர் காலச் சந்தைகளை எண்களின் மூலம் கணக்கிட்டு பெரும் தொகைகளை அதில் போடுகிறார்கள்-சூதாடுகிறார்கள். அவர் எழுதுகிறார்: ஆம், இது உள்ளங்கை நெல்லிக்கனி; முதலீட்டாளர்கள், வெகு கால அளவில் தங்கள் நிகர இலாபத்தால் அடையும் சாதகபாதிப்புகளை விட, தங்கள் எதிர்பார்ப்பால் அதிக பாதிப்படைவார்கள். இது எப்போதுமே, நடப்பு வழக்கம், விளம்பரம், அல்லது பகுத்தறிவற்ற நம்பிக்கை அல்லது அவநம்பிக்கைகளால் அமைகிறது. முடிவுகள், அனுபவத்தில் வேரூன்றியுள்ளது; அவை பொருளான எண்களில் அல்ல; கணக்கிடமுடியாததை கணக்கிட்டோம் என்று சொல்லும் விநோத மனிதர்கள் தான் இதை மறுப்பார்கள்.
அவரது இந்தக் கருத்தின் தாக்கம் ஆழம் மற்றும் அகலமுமானது. 20ம் நூற்றாண்டின் சமூகச் சிந்தனைக்கு வழி வகுத்த ஒன்று; அவரது பொது கோட்பாடு (General Theory) நூல் இக்கருத்தை வெளிப்படுத்துகிறது; மரபார்ந்த பொருளாதார சித்தாந்தத்தை கேள்விகளுக்கு உட்படுத்தியது. பொருளாதாரம் அறிவியலல்ல-அது துல்லியத் தரவுகளைச் சார்ந்த ஒன்றல்ல-பிழைபடும் கருதுகோள்களால் முன்னேறும் ஒன்றல்ல- நிலைத்து நிற்கும் பொருளாதாரச் சட்டங்கள் ஏதுமில்லை. ஜேக்கரி கார்ட்டர் (Zachary Carter) சொல்வதைப் போல், அது பெரும்பாலும் அரசியலைப் போன்றது- நெகிழும் பழக்க வழக்கங்கள், கட்டளைகள், விட்டுக் கொடுத்தல் போன்றவை அதில் காணப்படும். இதை, அரசியல்வாதிகளும், பொருளாதார நிபுணர்களும் தெளிவாக உணர்ந்திருந்தால், கொள்கைகளில் கெய்னிசின் தாக்கம், இப்போது இருப்பதை விட அதிகமாகவும், நீடித்தும் இருந்திருக்கும்.
இளைஞர்கள், ஆனால், அவர்கள் மட்டுமல்ல, பலர் மூரின், அன்பு, கலை, அறிதல் இவற்றால் ஈர்க்கப்பட்டவர்கள். அந்தக் குழுவில் அன்பு என்பது ஆடவர் ஆடவரோடு புணர்ச்சி செய்வது; (Sodomy) ஓரு வருடம் ஓவியர் டங்கன் க்ரேன்ட்டுடன் (Duncan Grant) நெருக்கமாக இருந்தவர், 20 வருடங்கள், லண்டனிலும், கேம்ப்ரிட்ஜிலும் இதில் ஈடுபட்டார். அவரது கேம்ப்ரிட்ஜ் குழுவினர், பட்டதாரிகளான பிறகு ப்ளூம்ஸ்பரிக்கு (Bloomsbury) இடம் பெயர்ந்தும், அக் குழுவினரின் ஒருபால் உறவு நீடித்து, சில சமயங்களில் இருபாலினத்தவரின் ஆரவாரமான விளையாட்டுகளிலும் பங்கு கொண்டது. தற்பெருமையுடன், தன்னைத்தானே பாராட்டிக் கொண்ட இந்தக் குழு அமைத்த சூழல், ஒரு சமூக அமைப்பாக இவருக்கு, உல்ஃப் மற்றும் ஸ்ட்ரோசிக்கு புகலும் தந்தது. கெய்ன்ஸ் போன்ற படித்த, வளமான, சிறு குழுவிற்கு, உலகப் போரின் முஸ்தீப்புகள் தங்கத் தருணங்களாக அமைந்தன. போரும், அதன் பின் விளைவுகளும், அவரது சிந்தனையை ஆழமாக்கின, இருட்டடிப்பும் செய்தன.
கருவூல அலுவலகத்திலிருந்து உலக நடப்புகளை அவர் பார்வையிட்டார். அவரை இளநிலை ஆலோசகராக நியமித்தார்கள். 1913ல் வெளியான அவரது முதல் நூல் இந்தியன் கரன்சியும், நிதியும்; (Indian Currency and Finance) அரசு விசாரணையில் அவர் பங்கு பெற்றதை அழகாகக் கூறியிருந்த விதத்தால் பெருமை பெற்றது. அவர் புகழ்பெற்றார். சரஜேவோ (Sarajevo- யூரோப்பின் சக்தி மிகுந்த நாடுகளுக்கிடையேயான மோதல்கள் ஜூலை 1914ல் தொடங்கி முதல் உலகப் போராக உருவெடுத்தது) படுகொலைக்கும், விரோதங்களுக்கும் இடையில் 1914 ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், வங்கிச் சிக்கலைத் தீர்க்க, சிறப்பு ஆலோசகராக பிரதமர் ஜார்ஜ் லாய்ட் அவரை நியமித்தார்.
ப்ளூம்ஸ்பரியில் இருந்தவர்களைப் போலவே, கெய்ன்சும் போரைப் பற்றி அதிகம் கண்டு கொள்ளவில்லை. ஃப்ரான்சிஸ் இருந்த தன் நண்பருக்கு அவர் அனுப்பிய கடிதம் நவம்பர் 1917ல் உறை முழுவதும் ‘கொல்லப்பட்டார்’ என்ற முத்திரைகளுடன் அவருக்கு திரும்பி வந்தது. சந்தர்ப்பம், நிச்சயமின்மை, மனித விவகாரங்களின் ஏறு மாறானத் தன்மைகள், அவரை பாதித்தன. போர் என்பது மாபெரும் தவறு, அது ஒன்றும் புனிதக் கடமையல்ல என்ற எண்ணம் அவரை அமைதிவாதியாக்கியது. அவரது நண்பர்களும், போரையும், கட்டாய இராணுவ சேவையையும் தீவிரமாக எதிர்த்தார்கள். மனிதத் தன்மையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நெகிழ்வான ஒரு சட்ட அமைப்பை ஏற்படுத்த அவர் தன் கருவூலப் பதவியை பயன்படுத்தினார். நாட்டு நலனிற்காக செயலாற்றுபவர் என்ற அங்கீகாரம் கிடைத்தாலும், மனசாட்சியின்படி செயலாற்றுபவர் என்ற தகுதிக்காக அவர் விண்ணப்பித்தார். அதை கொள்கைப் பிரகடனமாக செய்வது ஒன்றுதான் அவரது குறிக்கோள்- அவர் அதற்கான நேர்காணலிற்கு ஒருமுறை கூட செல்லவில்லை.
இறுதியில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. படுகொலைகள் நின்றன. நம்பிக்கையும், நிம்மதியும் அவருக்கு ஏற்பட்டது. சடலங்கள் குவிந்தபோது, அவர் விரக்தியுற்றார், எதிலும் நாட்டமில்லாமல், கேலியான சந்தேகக் கண்ணோட்டம் கொண்டார். அமைதி தேவை என உணர்ந்தார். உட்ரோ வில்சனின் (Woodrow Wilson) போருக்குப் பின்னான உலகம் என்ற கருத்துரு அவருள் இருந்த தாராளவாதியைத் தூண்டியது.1919ல் நடைபெற்ற அமைதி மாநாட்டில் இடம்பெறச் சென்ற பிரித்தானிய குழுவில் அவரும் இருந்தார். நிகழ்வுகளை நேரில் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. விளைவு, அவர், ஒரு நல்ல நூலை, ‘அமைதியின் பொருளாதாரப் பின்விளைவுகள்’ (The Economic Consequences of Peace) என்ற தலைப்பில் வெளியிட்டார், ஜெர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தண்டனைகளால், மேலும் சீரழிவுதான் உண்டாகும் என வாதிட்ட நூல் அது. தோற்றுப் போன நாட்டின் சொத்துக்களை அபகரித்தல், வென்றவர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக அதிக அளவில் விதிக்கப்பட்ட நஷ்ட ஈடுகள், போன்ற உலக சமாதான ஷரத்துக்கள், தோற்றவர்களை எப்போதுமே மண்டியிட்ட நிலையில் வைத்திருக்கும், நவீன இயந்திர வளர்ச்சி சமுதாயமாக அவர்களைச் செயல்படமுடியாமல் செய்துவிடும். ஜார்ஜ் க்ளெமென்சோவின் (Georges Clemenceau) பழிவாங்கும் செயல்கள் அவரை திகைப்பில் ஆழ்த்தின. வில்சனின் பயனற்ற அறநெறிகள், லாய்ட் ஜார்ஜின் பச்சோந்தித்தனம் அவருக்கு அதிக சினத்தைத் தந்தது.
மத்திய, கிழக்கு யூரோப்பாவில் போர் கொணர்ந்த பெரும் பேரழிவைப் பற்றி மிகத் துல்லியமாக அவர் எழுதினார். தவிக்கும் மனித இனத்திற்கு தேவையான நிவாரணம் அளிக்கப்படாவிட்டால், அதன் விளைவுகள் பெரும் வீழ்ச்சிக்குக் கொண்டு செல்லும் என வாதிட்டார். நம்மை எதிர்கொள்ளும் சிக்கல் விபரீதமான ஒன்று, விரைவாகச் சரியும் யுரோப்பிய வாழ்க்கைத் தரம், மனிதர்களை பட்டினியில் தள்ளும்; ஏற்கெனவே ரஷ்யாவில் இந்த நிலை, ஆஸ்திரியாவிலும் கிட்டத்தட்ட இது ஏற்பட்டுவிட்டது. மனிதன் இதை ஏதோ ஒரு விதத்தில் எதிர் கொள்வான். பட்டினி, சோம்பலையும், விரக்தியையும், நரம்புத் தளர்ச்சியையும், மனப்பிறழ்வையும் கொண்டு வரும். விலங்கினத்தன்மை மேலோங்கி வரும், உடனடியாக தீச்செயலைச் செய்ய வித்திடும், விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும்.
நரம்புத் தளர்ச்சியால் உண்டாகும் சோம்பேறித்தனம் ஹிஸ்டீரியாவையும், விரக்தி மனப்பான்மை, மனப்பிறழ்வையும் கொண்டு வரும் என்ற அவரது கூற்றை மனிதனின் இருண்ட பக்கங்களிலிருந்து அவனிடமிருக்கும் விலங்குத் தன்மையை வெளிக் கொண்டு வரும் என்ற உளவியல் கூற்றாகவும் உலகம் புரிந்து கொண்டது.
பணத்தின் நிலையில்லாத தன்மை அதிக மனிதரிடம் அதிகமான வெறியைக் கொண்டு வரும். அவர் சொன்னார்: “லெனின் சரியாகவே சொல்லியிருக்கிறார். நாணயங்களை, பணத்தை ஒழித்து விடுவது சமுதாயக் கட்டமைப்பு ஒழுங்கை நுண்மையாகவும், உறுதியாகவும் சீரழிக்கும்.”
வெய்மார் குடியரசின் (Weimar Republic-ஜெர்மனியில் ஒரு பன்னிரண்டு ஆண்டுகள் குடியாட்சி நடந்தது. 1933ல் நாஜிக்கள் குடியாட்சியை அகற்றி சர்வாதிகாரம் செய்யத் தொடங்கினார்கள்) நிதித் தள்ளாட்டத்தை எதிர்பார்த்த கெய்ன்ஸ் சொன்னார்:
மாதந்தோறும் ஏறும் விலைவாசியும், அலைபாயும் நிதி நிலையும், முதலீட்டுவாதிகளின் அடிப்படை கொள்கையான நிரந்தர கடன் கொடுப்போர், பெறுவோரின் உறவினை சீர் குலைத்து கவைக்கு உதவாமல் செய்து விடும். செல்வ உருவாக்கம், சூதாகவும், அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்புவதாகவும் மாறிவிடும்.
கெய்ன்சே சூதாடியவர் தான். ஆனால், விரைந்து மேலேறிச் செல்லும் விலை வீக்கங்கள் செயற்கையாக உருவாக்கிய பணக்காரர்கள், ஒரு கட்டமைப்புள்ள சமூகத்தில் நிலைத்து நிற்க முடியாதென்பதை அவர் அறிவார். தங்கள் நாணயத்தின் மதிப்பு சரிந்த பிறகும் கூட, சாதாரண மனிதர்கள் ‘அதெப்படி என் நிதி மதிப்புக் குறையும், ஒருபோதும் அவ்விதம் நடக்காது’ என்று குழப்பமும், ஆத்திரமும் அடைவார்கள் என்றும் சொன்னார் அவர். தங்கள் நாணயத்தின் மதிப்பு அதனுள் பொதிந்தது என்றே எண்ணுவார்கள் அவர்கள். மனிதக் கற்பனையின் தளமாகப் பணத்தின் மதிப்பு இருக்கிறது என்று அவர் புரிந்து கொண்டார்.
கடைசியாக அந்த சமாதான உடன்படிக்கையின் பின்விளைவுகள் நிதித்தள்ளாட்டத்தையும் தாண்டிய ஒன்றாக இருந்தது. மனிதத் துயரினை அதிகப்படுத்தும், துயருற்றோரின் வெஞ்சினம் வெடித்துக் கிளம்பும் என்பதையெல்லாம் அந்த ஷரத்துக்கள் கணக்கில் கொள்ளவில்லை. அவர் சுருக்கமாகச் சொன்னார் “நாம் மத்திய யூரோப்பை திட்டமிட்டு வறுமையில் தள்ளினால், பழி வாங்குதல் நொண்டி அடித்துக் கொண்டிருக்காது. ரஷ்யா, ஹங்கேரி, ஆஸ்ட்ரியா போன்ற நாடுகளில் நாம் பார்க்கும் வாழ்வியல் துயரங்களும், சமூகப் பிளவுகளும் தெளிவாகவே நம் கண்களுக்குத் தெரிகின்றன. யூரோப்பின் மற்ற பகுதிகளில், இதன் தாக்கத்தை உணர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவை நமக்கு ஒரு முன்னறிவிப்பைச் செய்கிறது- முடிவில், உடற்பிணி, மனப்பிணியாக மாறிவிடும். பற்றாக்குறை, சீர்குலைவை ஏற்படுத்தும்; கதியற்ற, பசித்த மானுடம், தன் விலங்குத் தன்மையைக் கட்டவிழ்க்கும்; விளைவுகள் விபரீதமாக இருக்கும். உடலாற்றலும், நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து கொண்டே வரும்; எப்படியோ வாழ்க்கை தொடரும்.
துயரைத் தாங்கும் சக்தி குறைந்து, மனிதனின் தாக்கும் சக்தி அந்தச் சமயத்தில் அதிகரிக்கும்; கட்டுப்பாடுகள் சிதறும்; சிந்தை சொல்லும் கட்டளை, நம்பிக்கை, பழி வாங்குதல், எதுவாக இருந்தாலென்ன, அது அவனுக்கு சுய வேதம்.”
அவரின் ஜோசியம் பலித்தது. போருக்குப் பின்னான மத்திய யூரோப் முழுவதிலும், பழி வாங்கும் சிந்தனை தலை தூக்கிற்று.
நிச்சயமின்மையால் போருக்குப் பின்னான பிரித்தானிய பொருளாதாரம் பதற்ற நிலையை அடைந்தது. தேசத்தின் தேவைகளை அறியவும், வழிகாட்டவும் அவர் அடிக்கடி ஆலோசனைகளுக்கு அழைக்கப்பட்டாலும், அரசோ, அதிகாரிகளோ அவற்றை பின்பற்றவில்லை. ஆயினும், அவரது அறிவாற்றலும், உணர்ச்சி நிலைகளும் போருக்குப் பின்னான பத்து ஆண்டுகளில் கூர்மையாயின. 1920 களில் புள்ளியியலின் உண்மைகளைப் பற்றிய அவரது ஐயங்கள் வளர்ந்து வந்தன. அதைப் போலவே, மானுட வாழ்வு மற்றும் பொருளாதார வாழ்வில் அவர் கொண்டிருந்த விலங்குத் தன்மை பற்றிய கோட்பாடுகளும் அவருக்கு உறுதியாயின.
1920ல் அவர் பணக்காரரானார். அமைதியின் பொருளாதார பின்விளைவுகள் நூல் விற்பனையில், பங்குச் சந்தையில் போட்டிருந்த முதலீட்டில் என்று அவருக்கு செல்வம் பெருமளவில் சேர்ந்தது. குதிரைப் பந்தயம், பங்குச் சந்தை களங்களைப் பற்றிய ஊகப் போட்டிகள், மது அருந்துவதைப் போல போதை தருபவை, சிறிது உற்சாகம் ஊட்டக்கூடியவை என்றும் சொன்னார். இவையெல்லாம் எப்போதோ ஈடுபடும் ஒன்று எனவும், மிகப் பெரும் சேதம் ஏற்படவில்லை எனவும் சொன்னார். அனைத்தும் சாத்தியமே என்று கற்பனை செய்து நம்பும் பழக்கம் ஏற்றுக் கொள்ளத் தக்கதே என்பதையும் சொன்னார். இந்தப் புதிய கருத்து அவரது சமீபத்திய செல்வத்தாலும், அவர் பெற்ற புகழாலும் ஏற்பட்ட ஒன்று. உண்டிவில்லை வைத்துக் கொண்டு புலி வேட்டையாடப் புறப்பட்ட கதைதான்.
பொருளாதார பின் விளைவுகள் நூலிற்குப் பிறகு, அவர் தான் பத்தாண்டுகளாக எழுதியும், மாற்றியும், மீண்டும் எழுதியும் வந்த ‘நிகழ் தகவு கட்டுரையை’ எழுதத் தொடங்கினார். நிகழ் தகவுகள் புறவய நிரூபணத்திற்கு உதவும் முக்கியமான ஒன்று என்று அச்சமயத்தில் வலுப் பெற்றிருந்த சிந்தனையை அவர் ஏற்கவில்லை. புள்ளியியல் மூலம் அதிர்வெண்ணைக் (frequency) கொண்டு நிகழ்தகவுகளைக் கணிக்க முடியும் என்று சொன்னவர்கள், புகை பிடிக்கும் பத்து நபர்களில் ஒருவர் புற்று நோயால் இறந்தால், அப்பழக்கத்தினால் புற்று ஏற்பட்டு இறப்பவர்களின் சதவீதம்10 என்று சொன்னார்கள். அதிர்வெண்களைக் கொண்டு நிகழ்தகவுகளை அடையாளமிடுவோர், பொதுவாக நிகழ்தகவுகள் அமையும் சித்தாதங்களை விலக்கியே இம்முடிவிற்கு வருகிறார்கள் என்பது அவரது கருத்து. நிகழ்தகவு தீர்மானங்கள் ஓரளவிற்கு புள்ளியியல் தரவுகளைச் சார்ந்திருந்தாலும், அவைகளை தரவுகளாக வடிவமைக்க முடியாது, பார்க்கப் போனால், அவைகளுக்கு தரவுகளோடு எந்தத் தொடர்பும் கிடையாது என்று தீர்மானமாக எழுதினார்.
ஒப்பு நோக்கி சொல்லப்படும் நிகழ்தகவு விவரங்கள், எண்களல்ல; அது துல்லியமானதல்ல, தோராயமானவைகள். சில நேரங்களில் அவை தன்னிச்சையானவை. ‘குடை தேவையா, இல்லையா என்ற தீர்மானம் தன்னிச்சையால் ஏற்படும். வெப்பமானி அதிக வெப்பத்தைக் காட்டும் போது, வானில் மேகங்கள் கறுக்கையில், நம் மனதில், குடை வேண்டுமா என்று விவாதிப்பதும், தரவுகளைக் கொண்டு தீர்மானிப்பதையும் விட நம் ஏறுமாறான தீர்மானங்கள் சிறந்ததாக இருக்கலாம். சபலபுத்திக்கு இத்தனை இடம் கொடுத்து, சின்னச் சின்ன பொருட்படுத்தத் தேவையற்றவைகளை இவரைப் போல கொண்டாடும் சில காரணப் பிரியர்களை என்னவென்று சொல்லலாம்?
சிகாகோவைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஃப்ரேங்க்லின் நைட், (Franklin Knight) ‘ரிஸ்க், அன்செர்டனிடி, இலாபம்’ (Risk, Uncertainty, Profit) என்ற தன் நூலில், ‘அளக்கக்கூடிய நிச்சயமின்மை, அல்லது ஆபத்து’ என்பது அளவீடு செய்ய முடியாத ஒன்றிலிருந்து மாறுபட்டது; அதை நிச்சயமின்மை எனச் சொல்வதே தவறு என்றார். பல நிகழ்வுகளின் ‘ப்ராபபிலிடியை’ துல்லியமாக அளப்பது என்பதில் கெய்னிசிற்கு நைட்டை விட அதிக நம்பிக்கையின்மை இருந்தது.
தர்க்கத்தின் துணை கொண்டு செயல்படும் நிகழ்தகவுகள், அந்த நிகழ்வுகளைப் பற்றிய நம்பிக்கையே தவிர, அவை உலக நடப்புகளை விவரணை செய்வதில் உதவாதவை என அவர் திண்ணமாக நினைத்தார். நிச்சயமற்ற சூழலில், பகுத்தறிவோடு நாம் முடிவுகளை எடுக்க அவர் ‘விவாதங்களின் எடையை’ (Weight of Argument) பார்க்கச் சொன்னார். இப்படி நடக்கக்கூடும் என்பதற்கான சாட்சியங்கள் நம்பும் விதத்திலும், அதன் நிறையிலும் கண்டு கொண்டு ‘ஏற்றுக் கொள்ளத்தக்க ஆபத்து’ (Moral Risk) என்பதுதான் விவாதங்களின் எடை என்று சொன்னார். நன்மை சிறிதாக இருந்தாலும், அடையக்கூடிய சாத்தியங்களை தேர்வு செய்வது உத்தமம் என்பது அவர் சொல்லும் ‘மாரல் ரிஸ்க்.’ மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் களாக்காய் மேலானது! இந்த மாரல் ரிஸ்க் கோட்பாட்டின் மூலம், சமூகப் புரட்சியை விட படிப்படியே முன்னேற்றம் அடைவது அவரது தேர்வாக இருந்தது ‘நிகழ்தகவுகளைப்’ பற்றிய அவரது இந்த நூல், எதிர்காலத்தில் அவரது பொருளாதார சிந்தனை எவ்வாறிருக்கும் என்பதற்கான திறப்பாக இருந்தது. புள்ளியியல் மூலம் வரும் கணிப்புக்களையும், போலியாக, நிச்சயமின்மையை நிச்சயம் எனக் கூவுவதையும் ஒதுக்கிய அவர், நிரூபணங்களை விட நேர்மறை தூண்டுதல்கள் அதிகப் பலன் தரும் என விவாதித்தார்.
(தொடரும்)
Ref: Newspapers and other media and the main article by Jackson Lears
https://www.commonwealmagazine.org/john-maynard-keynes-economics-uncertainty-woolf-lears By Jackson Lears June, 18,2023
One Reply to “இச்சா, இனியா, காயா, பழமா?”