- அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 1
- அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 2
- அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 3
- அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 4

எண்பதுகளில், கணினிகளின் எடை மற்றும் அளவு குறைந்த காலம் என்று பலரும் படித்திருக்கலாம். இன்றைய மடிக்கணினிகள் இன்னும் எடை அதிகம் என்று நினைக்கும் பலருக்கும், இது இன்றைவிட, ஒரு 8 முதல் பத்து மடங்கு எடை மற்றும் அளவு அதிகம் என்று தெரிந்திருக்க நியாயமில்லை. பெரும்பாலும், உலோகத்தால் உருவாக்கப்பட்ட இந்த கணினிகளுக்கு எடை அதிகம். அத்துடன், அந்த நாட்களில் வந்த கணினிகளுக்கு பாட்டரி எல்லாம் கிடையாது. இயங்க மின் சக்தி தேவை. அதுவும் அந்நாளைய இந்தியாவில், சீரான மின் சக்தி என்பது மும்பாய் போன்ற நகரங்களில் மட்டுமே சாத்தியம். புதிதாக பிறந்த குழந்தைக்கு இன்று மருத்துவமனைகளில் மிகவும் சிரத்தையாகப் பாதுகாக்கும் முறைகள் இதைப் பார்க்கையில் மிகவும் குறைவு. ஒரு சின்ன ஒப்பிடல் செய்து பார்ப்போம்:
புதிய குழந்தையை எதிர்பார்க்கும் இன்றைய பெற்றோர் | 80/90 -களில் புதுக் கணினி எதிர்பார்க்கும் நிறுவனம் |
தனியாக குழந்தை உறங்க ஒரு அல்ங்காரம் செய்யப்பட்ட அறை | புதிய கணினிக்காக உருவாக்கப்பட்ட புதிய அறை |
அதிக தூசு இல்லாமல் இருக்க குழந்தை அறையில் ஏற்பாடுகள் | முழுவதும் காற்று உள்ளே போகாத வகையில் கண்ணாடிகளால் மூடப்பட்ட அறை. தனிப்பட்ட குளிர்சாதனம் |
குழந்தைக்கு என்று அல்ங்காரப் பொருட்கள் மற்றும் தொட்டில் | கணினிக்கு என்று ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட பொய் கூரை மற்றும் தரை (false ceiling and flooring) |
குழந்தைக்கு என்று வாங்கப்படும் பொம்மைகள், கிலுகிலுப்பை, துணிகள் மற்றும் பல குழந்தை சமாச்சாரங்கள் | புதிய கணினிக்காக அச்சடிக்கும் காகிதம், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மின்சக்தி சீரமைப்பு வசதிகள் |
இதை இங்கு பட்டியலிடக் காரணம், இன்றைய கணினிகள் காட்டில் பிறந்த விலங்குக் குழந்தைகள் போல எந்த ஒரு முன் ஏற்பாடும் இல்லாமல், பயனுக்கு உடனே தயாராக உள்ளன!
80 -களில், பெரும்பாலும் தரவுகள், ஒரு சின்ன எந்திரம் (Data Entry machine) மூலம் ஒரு மனிதர் டைப் செய்வார். இந்த பொறுப்பிற்குப் பெயர், ‘தரவு உள்ளேற்றும் இயக்கி’, அதாவது, data entry operator. இந்த வேலை இன்று அறவே நீக்கப்பட்டுள்ளது. ஒரு கணினி மையத்தில் 10 முதல் 50 தொழிலாளிகள் இந்த வேலையைப் பார்த்தனர். அதே மையத்தில் ஒன்று அல்லது இரண்டு நிரலர்கள் (programmers) மட்டுமே இருப்பார்கள்.
இப்படி உள்ளேற்றப்படும் தரவுகள் ஒரு ஃப்ளாப்பி டிஸ்க் -கில் (floppy disk) பதிவு செய்யப்படும். டிஸ்க் என்றவுடன் ஏராளமான தேக்கம் (storage) இருப்பதாக நினக்காதீர்கள். ஒரு ஃப்ளாப்பி டிஸ்கில் 80 -களின் ஆரம்ப கட்டத்தில் வெறும் 256 KB மட்டுமே சாத்தியம். இந்தத் தரவு உள்வாங்கும் எந்திரங்கள், அவை முற்றிலும் நிரம்பிவிடாமல் பார்த்துக் கொண்டு, வித்தியாசமான ஒலிகள் மூலம் இயக்கியிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும். இதில் அனுபவம் வாய்ந்த இயக்கிகள், கணினி மையத்திற்குள் வரும் தரவுகளை ஆராய்ந்து எத்தனை records பதிவு செய்ய முடியும் என்று சொல்லிவிடும் சூரர்கள், ஒரு கணினி வாங்கும் நிறுவனம், குறைந்தது 5 முதல் 50 தரவு உள்வாங்கி எந்திரகளும் வாங்க வேண்டும்.
இது போன்ற தனிப்பட்ட கணினி மையங்களின் வாடிக்கையாளர்கள், பெரும்பாலும், சம்பளப் பட்டுவாடா (payroll processing) செய்ய வேண்டிய, ஆனால், கணினிகளை வாங்க வசதியில்லாத நிறுவனங்கள். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கணினி மையம் ப்ளாப்பி மற்றும் கணினி நாடாக்களை (computer tapes) ஒதுக்கீடு செய்து விடும். கணினி நாடா இங்கு எதற்காக? தரவு உள்வாங்கி மூலம் உருவாக்கிய தரவுகள், ஃப்ளாப்பிகளிலிருந்து, கணினி நாடாவிற்கு மாற்றப்படும். ஒரு 100 முதல் 500 ஃப்ளாப்பிகளின் தரவுகள் ஒரு கணினி நாடாவில் கொள்ளும். அதாவது, ஒரு பெரிய வாடிக்கையாளருக்கு, மாதம் ஒன்றிற்கு ஒரு கணினி நாடா போதும். இதற்கான தரவுகள் பல நூறு ஃப்ளாப்பிகளிலிருந்து கணினியில் மாற்றப்படும். மாற்றப்படும் என்றவுடன், உடனே நீங்கள் USB Flash drive –க்கு தாவாதீர்கள். அதுவும் ஒரு பெரிய வேலை! ஃப்ளாப்பிகளிலிருந்து தரவுகளை சரியாக (sorted data) ஒரு டேப்பிற்கு மாற்றுவது ஒரு தனிக்கலை. அதற்காக, சில இடைப்பட்ட நிரல்கள் தேவை! சம்பளப் பட்டியல் கணினி நாடாவிலிருக்கும் தரவுகளை வைத்தே சம்பளம் கணிக்கப் பட்டு, அச்சடிக்கப்படும். மாதம் தோறும் நடக்கும் ஒரு திருவிழா இது!
கணினி மையங்கள் மாதக் கடைசியில் ஏராளமான நடவடிக்கைகளுடன் இரவும் பகலும் செயல்படும் ஒரு திருவிழா போல இருக்கும். யாருக்கும், எந்த வெட்டிப் பேச்சுக்கும் நேரமில்லாத சூழல். பல வாடிக்கையாளர்களின் கால கடுவான தேவைகள், அதைப் பூர்த்தி செய்யும் DEOs, ஃப்ளாப்பிகளில் உள்ள தரவுகளை டேப்பிற்கு மாற்றி, அதை சரியாக ப்ராஸஸ் செய்து, சம்பளப் பட்டுவாடா பட்டியல்கள் மற்றும், சம்பளச் சீட்டுக்களை (pay slips) அச்சடிப்பது என்பது மிகவும் டென்ஷனான விஷயம். இதில் எங்கு தவறு நிகழ்ந்தாலும், ஆரம்பத்திலிருந்து எல்லா வேலைகளையும் திரும்பச் செய்ய வேண்டும்! எங்கோ ஒளிந்திருக்கும் மேகக் கணிமை மையங்களைப் பற்றி இன்று நாம் கவலைப் படுவதில்லை! பயனர்கள் பலருக்கும், அப்படி ஒன்று இருப்பதாக்க் கூடத் தெரியாது. கன்னியாகுமரியில், அசோக் என்பவருடைய வங்கிக் கடனுக்காக ஆதார் சரி பார்க்கப் படுகிறது. வங்கிக் கணினி ஆதார் எண்ணை கொடுத்தவுடன், 800 கி.மீ. தொலைவில் உள்ள பெங்களூரில் உள்ள மேகக் கணிமை மையம், அது சரி என்று வங்கி கணினிக்கு தெரிவிக்க, உடனே அசோக் என்பவரின் ஒரு வேலை முடிந்து விடுகிறது. 1980 பயனர் போல, அசோக் கணினி மையத்திற்கு பயணிக்க வேண்டியதில்லை.

நான் பணியாற்றிய கணினி நிறுவனம், இவ்வகை எந்திரங்களை விற்றது. இந்த எந்திரங்கள் இன்றைய கணினிகள் போலல்லாமல், ஏராளமான கோளாறுகளுடன் இயங்கும் வஸ்துக்கள். இவற்றை பராமரிக்க என்ஜினியர்கள் நிறுவனத்தில் வேலை செய்தார்கள். என்னுடைய பின்னணி வன்பொருளாதலால், இவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். மாதக் கடைசி நாட்களில் இவர்களுக்கு எந்திரப் பராமரிப்பு வேலை பளு ஏராளமாக இருக்கும். மற்ற நாட்களில் அவ்வப்பொழுது சில பராமரிப்பு வேலைகள் இருந்த வண்ணம் இருக்கும். இவர்களில் ஒருவர், செல்வா (அவருடைய அந்தரங்கம் கருதி, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதிக மது அருந்தும் பழக்கம் உள்ளவர். அவரிடம் மதுப்பழக்கத்திலிருந்து விடுதலை அடைய, பல ஆலோசனைகள் வழங்கியும் அவர் கேட்பதாக இல்லை. ஆனால், இதற்கு அவர் சொன்ன நகைச்சுவையான காரணம், இத்தனை வருடம் கடந்தும் இன்னும் நினைவிருக்கிறது.
“என்னுடைய அன்றாட அலுவலில் என்ன செய்கிறேன்? டேப் ட்ரைவ் மற்றும் ஃப்ளாப்பி ட்ரைவிற்கு சாராயம் வழங்குகிறேன். என்னைப் போலவே அவற்றுக்கும் சாராயம் தேவைப்படுகிறது அல்லது காற்றோட்டம் தேவைப்படுகிறது. இதுக்கு போய் ரொம்ப அட்வைஸ் வேண்டாமே!”

80 -களில், எத்தனைதான், தனிப்பட்ட அறைகளில் ஃப்ளப்பி மற்றும் டேப்புகளை பாதுகாத்து வைத்தாலும், பல ஆயிரம் முறைகள் இவற்றின் காந்த ப்ளாஸ்டிக்கை வருடுவதால், இரண்டு விஷயங்கள் அடிக்கடி நேரும்.
- தூசு, தரவைப் படிக்கும் காந்த உணர்விக்கு (magnetic head) மாறி, சரியாக தரவுகளை படிக்கத் தவறும்
- ஏராளமான முறை தரவுகளை தொட்டுத் தொட்டு படித்த காந்த உணர்வி அதன் தன்மையை இழக்கும்
முதல் பிரச்சினையை சமாளிக்க என்ஜினியர்கள் அழுத்தமான காற்றை உணர்விமேல் செலுத்தி, அதை மீட்பார்கள். இரண்டாவது பிரச்சினையை சமாளிக்க isopropyl alcohol -ஐ உணர்விமேல் செலுத்தி, அதை மீட்பார்கள். இதைத்தான், செல்வா அப்படிச் சொன்னார் 😊
(தொடரும்)