அதிரியன் நினைவுகள் -20

This entry is part 20 of 22 in the series அதிரியன் நினைவுகள்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

(சொல்வனம் வாசக நண்பர்களுக்கு…..

அதிரியன் நினைவுகள் நாவல் சார்ந்து எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன் , நாவல் வாசிப்புக்கு இத்தகவல்கள் உதவக்கூடும். 1951 எழுதபட்ட இநாவவலின் கதைக்களம் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள், அதிரியன் என்ற ரோமானிய மன்ன் தன்மையில் தன்னுடைய சுவரலாற்றை அவனுடைய வளர்ப்புப் பேரனும் அரசியல் வாரிசுமான Marc-Aurèle என்பவனுக்குத் தன் வரலாற்றைச் சொல்கிறான். தமிழ்மொழிபெயர்ப்பும் இதைக் கருத்திற்கொள்ளவெண்டும். தவிர இலத்தீன் மொழியை வேராகக் கொண்ட , ஒரு மேற்கத்திய மொழியிலிருந்து கீழைத்தேய மொழியொன்றிற்கு கொண்டுவருகிறபோது  அம்மொழியின் நிலத்திற்கு முடிந்தவரையில் இசைந்து மொழி பெயர்ப்பது கடமையாகிறது. 

பிரெஞ்சு இலக்கிய உலகில் Traduction (மொழிபெயர்ப்பு) என்கிற சொல்லை Trahison அதாவது Treason என்று பொருள்கொள்வார்கள். அதாவது மூல நூலுக்குச் செய்யும் துரோகமாகப் பார்பார்கள். பிரெஞ்சு இலக்கிய துறை சார்ந்த மக்களளுக்கு மூல நூலை, மொழி பெயர்ப்பு ஒரு போதும் ஒத்திருக்காது, என்று நம்பிக்கை. ஒரு போதும் மொழிபெயர்ப்பு மூல நூலிடத்தை இட்டு நிரப்பாது, என்பது உண்மை. வள்ளுவர் எழுதிய குறளும், அதற்கு பரிமேலழகர் உரையும் சம மா என்றால் இல்லை. பரிமேலழகர் உரைய திருக்குறளை புரிந்துகொள்ள உதவலாம், ஆனால் ஒருபோதும் திருக்குறள் ஆகாது. 

இந்த நூல் எழுதப்பட்டிருப்பது பிரெஞ்சு மொழியில் கிட்த்தட்ட 30 ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வாழ்கிறேன், பல பிரெஞ்சு இலக்கியவாதிகள் நண்பர்களாக இருக்கிறார்கள், ஒருசிலரோடு இணைந்து எழுத்து பட்டரை நடத்துகிறோம், இருந்தும் அவர்கள் பண்பாட்டுப் புரிதலில் உள்ள தொய்வு, மொழியை உள்வாங்கிக் கொள்வதிலும் எதிரொலிக்கிறது, பலமுறை ஒரு சில வரிகளை பிரெஞ்சு நண்பர்களிடம் விவாதித்து மொழிபெயர்க்கிறேன். இந்நூல் கிரேக்கத்தையும், உரோமையும் பின்புலமாகக் கொண்டதால் ஏராளமான இலத்தீன் சொற்கள், உதாரணத்திற்கு இந்நாவலில் வரும் மன்னன் அதிரியன் உண்மையானப் பெயர் இலத்தீன் மொழியில் Hadrianus, நூல் ஆசிரியர் பிரெஞ்சு மொழியில் Hadrien என்று சொல்கிறார், ஆனால் ஆங்கிலத்தில் Hadrian ; நான் தமிழ்படுத்துகிறபோது,  முடிந்தவரை பிரெஞ்சு சொற்களை ஒதுக்கிவிட்டு இலத்தீன் பெயர்களையும், இயலாதபோது ஆங்கிலம் அல்லது தமிழ்ச் சொற்களின் உச்சரிப்பிலும் அவற்றைப் பயன்படுத்துகிறேன்.  இயன்றவரை குறிப்புகளை அளிக்கிறேன், தவிர இணையதளங்கள் கிரேக்கம், மாறும் ரோமானியர் பற்றித் தகவல்களைத் தருகின்றன. Wikipediaவும் உங்களுக்கு உதவக்கூடும். நன்றி அன்புடன் : நா கிருஷ்ணா)


பிரிட்டானியாவில் நிறைவேற்றப்பட்ட குடிமுறைச் சீர்திருத்தங்கள் எனது நிர்வாகப்பணியின் ஒரு பகுதி, இதுகுறித்து வேறு இடங்களில் பேசியிருக்கிறேன். இவ்விவகாரத்தில் இங்கே முக்கியமானது  நான்காம் பேரரசரான குளோளாடியஸ், இராணுவத் தலைமைத் தளபதியாக இருந்தகாலத்தில் துணிச்சலுடன் சில முடிவுகளை ஓரிரு நாட்கள் எடுக்கும்படி நேரிட்டது. அவ்வழியில் உலகின் விளிம்பிலிருந்த இத்தீவில் அமைதியான முறையில் இக்குடிமுறை சீர்திருத்தங்களைக் பிரயோகித்த முதலாவது ரோமானியச் சக்கரவர்த்தி நான். ஒருமுறை, குளிர்காலம் முழுக்க இலண்டனியம்(Londinium- இன்றைய இலண்டன்) எனது விருப்பப்படி உலகின பயனுள்ள தொழிலாளர் மையமாக மாறியது,  பார்த்திய போர் தேவைகளின் காரணத்தை முன்ன்வைத்து அந்தோக்கியா(Antioche)28  அவ்விடத்தைப் பிடித்தது.  இவ்வாறு ஒவ்வொரு பயணமும் அதிகாரத்தின் ஈர்ப்பு மையத்தை மாற்றி, ரைன் நதிக்கரையிலோ அல்லது தேம்ஸ் நதிக்கரையிலோ சிறிது காலம் வைத்து, அத்தகைய ஏகாதிபத்திய இருக்கையின் பலம் மற்றும் பலவீனம் என்னவாக இருக்கக்கூடும்  என்பதை மதிப்பிட என்னை அனுமதித்தது. பிரிட்டானியாவில் தங்கியபோது  மேற்குலகை அல்லது  அட்லாண்டிக் உலகை மையமாகக் கொண்ட ஒர் அரசாட்சியை உருவாக்குமொரு சிந்தனை எனகு உதித்தது. ஆனால் இந்த எண்ணம் விவேகமானது என்கிறபோதும் நடைமுறை உலகிடமிருந்து விலகிய அபத்தமான சிந்தனையாக இருந்தது, ஆயினும் கணக்கிடு கருவி தனது கணக்கீடுகளுக்கு போதுமான அளவு எதிர்காலத்தை அனுமதித்த மறுகணம், அபத்தங்கள் இல்லையென்றானதும் உண்மை. 

நான் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான், போரில் வாகைசூடிய நம்முடைய ஆறாவது படையணி பிரிட்டிஷ் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே இங்கிருந்த நம்முடைய ஒன்பதாவது படைப்பிரிவு வீரர்களில் அனேகர்,  பார்த்தியர்களோடு நாம் யுத்தத்தில் இருந்த முகாந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு வெடித்த கலவரத்தில் கலிடோனியர்களால்  வெட்டுண்டு மடிந்து அவல்நிலையில் இருக்க, இவர்கள் இடத்தில் ஆறாவது படையணி. இத்தகைய அசம்பாவிதங்கள்  மீண்டும் நிகழாமல் தடுக்க இரண்டு நடவடிக்கைகள் தேவைப்பட்டன. முதலாவதாக உள்ளூர் மக்களைக்கொண்டு தயார் நிலையில்  துணைப்படையை உருவாக்குதல், அதன் மூலம் நமது  படைக்கு வலுசேர்த்தல்.  எபோராகமில்(Eboracum)29, பச்சைப்பசேல் என்றிருந்த உயர்ந்த வெளியில், புதிதாக உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் படையினரின் இராணுவ ஒத்திகைகளை காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இரண்டாவதாக தீவின் மிகவும் குறுகியப் பகுதியில். பிரிட்டானியாவை இரண்டாகப் பிரித்து சுவரொன்றை எழுபினோம், விளைவாக  தென்பகுதி மக்களையும், அதன் வளத்தையும் வடபகுதி  பழங்குடியினரின் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்க முடிந்தது. எண்பது லீக்குகள்(League -2,2Kms) நீளத்திற்கு ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த வேலையின் கணிசமான பகுதியை நேரில் நான்  ஆய்வுசெய்தேன்: ஒரு கடற்கரையிலிருந்து மற்றொன்றுக்கென  நன்கு திட்டமிட்டு முடிவெடுத்த இடத்தில், எல்லா இடங்களிலும் பின்னர் நிறைவேற்றப்படவிருந்த ஒரு தற்காப்புமுறையை முயற்சிக்கும் சந்தர்ப்பமாக அப்பணி எனக்குப்பட்டது. ஆனால் முற்றிலும் இராணுவ நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட இப்பணியின் தொடக்கத்திலேயே அமைதிக்கான அறிகுறிகள் தெரிந்தன,  பிரிட்டானியாவின் இப்பகுதியில்  வளமும்  பெருகியது; கிராமங்கள் பிறந்தன; எல்லைப் பகுதிகளையொட்டி மனிதர் நடமாட்டமும் அதிகரித்தது. நம்முடைய படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உள்ளூர் மனிதர்களைக்கொண்ட குழுக்கள் வேலைகளில் உதவின; நேற்றுவரை அடிபணியமாட்டோம் என்றிருந்த மலைவாழ் மக்களில் பலருக்கு,  கட்டி எழுப்பிய சுவர், உரோமாபுரின் மறுக்கமுடியாத பாதுகாப்பு சக்திக்கு முதன்மை ஆதாரமாகத் தோன்றியது;  சுவரெழுப்பும் வேலையில் பெற்ற ஊதியமே,  அவர்கள் கைளில் சென்ற முதல் ரோமானிய நாணயமாகும். இவ் அரண் ஒருவகையில் எனது நாடுபிடிக்கும் அரசியலைத் துறந்ததின் அடையாளம்: எழுப்பிய சுவர் முடியும் கட்டத்தில் காவலரணின் அடிவாரத்தில், டெர்மினஸ் (Terme)30  கடவுளுக்கு ஒரு கோயிலைக் கட்டினேன். 

மலையுச்சி சரிவுகளில் நெற்றியில் முன்தலைமயிர் விழுந்திருப்பது போல மூடுபனி, நம்முடைய கன்னித் தேவதைகளான நிம்ஃபுகளை(nymphes) காட்டிலும் விசித்திரமான நிம்ஃப்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏரிகள், சாம்பல்நிற கண்களையும் சோகத்தையும் சுமக்கும் முகங்கள், மனிதர்கள், அனைத்துமே ஓயாமல் மழைபொழியும் இப்பூமியில் என்னை மயக்கின. எனக்கு வழிகாட்டி பிரிட்டிஷ் துணைப்படையைச் சேர்ந்த இளம் திரிப்யூனஸ்: எனக்கென்று அனுப்பப்பட்ட இந்தச் செம்பட்டைத் தலையனான இறைதூதன் இலத்தீன் மொழியைக் கற்றான்,  தட்டுத்தடுமாறி கிரேக்கம் பேசினான், சற்றே தயக்கத்துடன் காதல்கவிதைகளை கிரேக்கமொழியில் இயற்றவும் துணிந்தான். இலையுதிர்காலத்தின் குளிர்மிகுந்த இரவன்று, அந்த இளைஞனை, குறிசொல்லும் பெண்ணொருத்தியின் ஆருடத்தை மொழிபெயர்த்து சொல்லுமாறு கேட்டுக்கொண்டேன். ஒரு செல்ட்டியர்(Celtic) பரம்பரை மரத்துண்டுகளைச்சுட்டுக் கரித்தயாரிக்கிற தொழிலாளி ஒருவரின் புகைமண்டிய சிறு குடிலொன்றில்  கரடுமுரடான தடித்த  கம்பளியாலான பிராக்கே(Braccae)வகை காற்சட்டைக் கதகதப்பில் கால்களை முடக்கி அமர்ந்திருக்க, வயதான உயிரினம்போலிருந்த அப்பெண்மணி, மழையில் நனைந்து, காற்றில் உருக்குலைந்து, காட்டுப்பூனையொன்று கள்ளப் பார்வையுடன் நெருங்குவதுபோல, எங்களை நோக்கி ஊர்ந்து வந்தாள். கணப்பு அடுப்பில் வெந்துகொண்டிருந்த சிறிய ஓட்ஸ் ரொட்டிகளின் மீது பாய்ந்தாள். அவள் செயலை உற்சாகப்படுத்துகின்ற வகையில் எனது வழிகாட்டியின் வார்த்தைகளும் இருந்தன: சுழன்றெழும் புகையையும், திடீரென எழும் தீப்பொறிகளையும்;  சுருங்கக்கூறின்  மிலாறுகளையும்  குச்சிகளையும்கொண்டு எரித்து உருவான சாம்பலில் எழுந்துநிற்கிற பலவீனமான கட்டிடத்தை எனக்கென அவள் ஆய்வு செய்வதுபோல இருந்தது. கட்டியெழுப்பும் நகரங்கள், மகிழ்ச்சியில் திளைக்கும் மானுடக் கூட்டம் எனக் கண்டவள் தொடர்ந்து அதில் எரிக்கப்பட்ட நகரங்கள், என்னுடைய அமைதிக் கனவுகளை பொய்யாக்கிய  கசப்பான தோல்விச் சரடுகள் ஆகியவைகளையும் பார்த்தாள்.  அக்காட்சி மென்மையும் இளமையும் கொண்ட பெண்ணொருத்தியின் முகமாக மாறியது, அதனை  நான் நம்பமறுத்தேன். பின்னர், வெண்ணிறத்தில் ஓர் உருவம், ஒருவேளை சிலையாகக்கூட இருக்கலாம், புதரும் காடுமான இப்பகுதிவாசிக்கு இவ்வுருவம் ஒரு பூதம் அல்லது பேயைக்காட்டிலும் விவரிக்க முடியாத ஒரு பொருள்.வருகிற ஒருசில ஆண்டுகளில் தெளிவற்ற ஒரு காலகட்டத்தில் அப்பெண்மணி என் மரணத்தைக்கூட அதிற் காணக்கூடும், இந்த உண்மையை அவள் ஆருடமாக சொல்லவேண்டியதில்லை நானே அறிவேன்.  

கொலுவா வளம்பெறவும், ஸ்பெய்ன் செல்வத்தில் கொழிக்கவும் நான் செலவிட்ட காலம்  பிரிட்டானியாவில் கழித்தக் காலத்தைக்காட்டிலும் குறைவு. நார்போன் கொலுவா பகுதி, எனக்கு கிரேக்கத்தை நினைவூட்டியது, காரணம் கிரேக்கத்திற்குரிய நேர்த்திகளை அங்கு கண்ணூற்றேன், நாவன்மைக்கு மெருகூட்டும் பள்ளிகளும், நிர்மலமான   வானத்தின் கீழ் கண்ணுற்ற தோரணவாயில்களும் சாட்சியங்கள். புளோட்டினாவுக்கு அர்ப்பணிக்கப்படவிருந்த நெடுமாடக் கோயிலுக்காகவும், ஒருநாள் அவருடைய கோவிலாக அதுமாறும் என்கிற நம்பிக்கையிலும்  திட்டமொன்றின்பொருட்டு, நீம் (Nîmes) நகரில் தங்க நேரிட்டது. இந்கரத்துடன பேரரசியை நிவூட்டிய குடும்ப நினைவுகள் அதன் வறண்ட, பொன்னிற  நிலப்பரப்பை எனக்கு பிரியத்துகந்ததாக மாற்றியது

ஆனால் மொரெட்டேனியா கிளர்ச்சித் தணிவதாக இல்லை, தொடர்ந்து புகைந்து கொண்டிருந்தது. கோரடொபா(Cordoue)விற்கும் கடலுக்கும் இடையில் எனது மூதாதையர் மற்றும் எனது இளம் வயது இட்டாலிகாநகரில் சிறிது இளைப்பாறி செல்லலாம் என்றிருந்த ஸ்பெயின் பயணத்திட்டத்தை, இக்கிளர்ச்சி காரணமாகச் சுருக்கிக்கொண்டு, கேட்ஸ்(Gadès)லிருந்து  ஆப்பிரிக்காவிற்கு புறப்பட்டேன். அட்லஸ் மலைகளின் அழகான பச்சை குத்தப்பட்ட போர்வீரர்கள் ஆப்பிரிக்க கடலோர நகரங்களுக்குத் தரும் உபத்திரவங்கள் முடிவுக்கு வரவில்லை. இதனால் பெர்பெர்(Berbers)மக்கள் நுமிடியன்களும்(Numidians), சர்மதியன்களும் மோதிக்கொண்ட நாட்களுக்கு இணையாக சில நாட்கள் தங்கவேண்டிய கட்டாயம் எனக்கு;  அங்கு நட்டநடு பாலைநிலத்தில் கட்டுபாடற்ற பெண்கள், பொதிகள், மண்டியிட்டுக் படுத்துக்கிடந்த  விலங்குகள் ஆகிய கூட்டத்திடை   அடிமைபடுத்தப்பட்ட  பழங்குடியினரையும்,  அவர்களுடைய இறுமாப்பு கொண்ட தலைவர்கள் அடிபணிந்து நிற்பதையும் திரும்பக் கண்டேன். ஆனால் இம்முறை மணலுக்குப் பதிலாக பனிமூடியிருந்தது.

லூசியஸின்(Lucius) வெறித்தனமான அரவணைப்புகள்,   புளோட்டினாவின் நட்பு இவற்றோடு, கட்டத்தொடங்கியுள்ள  வில்லாவைக் காணவும் ஒரு சந்தர்ப்பம், மொத்தத்தில் ஒருமுறையேனும் அதிலும் குறிப்பாக  வசந்தகாலத்தை உரோமில் கழிப்பதில்தான் எத்தனை சுகம். ஆனால் அந்த வாய்ப்பு அதிகம் நீடிக்கவில்லை, காரணம் யுத்தம்பற்றிய அச்சுறுத்தும் வதந்திகள் இருந்தன. பார்த்தியர்களுடன் சமாதானத்திற்குக் கையொப்பமிட்டு மூன்று ஆண்டுகள் முடியவில்லை  ஆனால் அதற்குள்ளாவே யூப்ரடீஸ் பிரச்சினை பெரும் பிரச்சனையாக  வெடித்தது. எனவே உடனடியாக கீழைத்தேசம்(Orient) பயணித்தேன்.

எல்லைப்புற  இப்பிரச்சனைகளை படையெடுப்பு, அணிவகுப்புகள்  என்றில்லாமல் ஒருதடாலடி வழிமுறைகொண்டு தீர்ப்பதென முடிவுசெய்திருந்தேன். அவ்வகையில் பார்த்தியன் மன்னர் ஆஸ்ரோஸுடன்(Osroès) தனிப்பட்ட வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே கீழைதேசத்திற்குப் பயணித்தபோது மன்னருடைய மகளையும் என்னுடன் அழைத்துச் சென்றேன். சக்கரவர்த்தி திராயான் பாபிலோனை ஆக்கிரமித்த நேரத்தில் கிட்டத்தட்ட அவளைத் தொட்டிலில் கிடந்தபோது சிறைபிடித்திருந்தார், அத்தனை சிறுவயது,  பின்னர் உரோமில் பணயக்கைதியாக அச்சிறுமியை வைத்திருந்தார், மெலிந்தும், பெரிய கண்களுமாக இருப்பாள். இப்பயணம் அப்போது தாமதமின்றி உடனடியாக மேற்கொள்ளவேண்டிய முக்கிய பயணமாக இருந்த  நிலையில், அச்சிறுமியும் அவருடைய பெண்களும் என்னுடன் இருந்தது ஒருவகையில் சிறிது உபத்திரவமென்றே சொல்லவேண்டும். முகத்திரை அணிந்த இந்த உயிரினங்கள், கடுமையாக இறக்கிக் கட்டப்பட்டிருந்த தீரைச்சீலைகளைக் கொண்ட கூடாரத்தில் அடைக்கப்பட்டு ஒற்றைத் திமில் ஒட்டக முதுகில் அசைந்தசைந்து சிரியா  பாலநிலத்தைக் கடக்கவேண்டிய நெருக்கடி. மாலையில் பயண இடைத்தங்கல்களில், இளவரசிக்கு ஏதாவது தேவைப்படுகிறதா குறையுண்டா என்று நான் கேட்கவும் வேண்டும்.

பேச்சுவார்த்தை நடத்துவதில் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்திருந்த வணிகர் ‘ஓப்ரமோவாஸ்’ஐ(Opramoas) என்னுடன் பார்த்தியன் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல இடையில் லைசியாவில்(Lycie) ஒரு மணி நேரம் நிற்கவேண்டியதாயிற்று. நேரமின்மை அவரது வழக்கமான ஆடம்பர புறப்பாட்டை தடுத்தது. பாலைநில அனைத்து ஆபத்துக்களுக்கும் பழக்கப்பட்ட இம்மனிதரிடம் பொருள்வளம் காரணமாக கனிவும் உண்டு, தவிர போற்றத்தக்க பயணத்துணை என்கிற விஷயத்திலும் குறைசொல்ல இயலாது. யூப்ரடீஸ் நதியின் இடது கரையில் தியூராற்கு(Dura) அருகில் சந்திக்கவேண்டிய இடம் இருந்தது. கட்டுமரத் தோணியொன்றில் ஆற்றைக் கடந்தோம். பார்த்தியன் அரண்மனைக் காவற்படை வீரர்கள் தங்கக்கவசம் அணிந்து குதிரையில் நதிநெடுகிலும் கண்களைக் கூசச் செய்யும் ஜொலிப்புடன் அணிவகுத்து நின்றிருந்தனர், குதிரைகளின் அலங்காரமும்  வீரர்களுக்கு நிகராக இருந்தது. என்னோடு அல்லும்பகலும் உடனிருக்கிற படைப்பாளியான ஃபிளேகொன்(Phlégon) முகம் அச்சத்தில் வெளுத்திருந்தது. என்னுடன் வந்த உயர் அலுவலர்களிடங்கூட ஒருவித பயம்: இச்சந்திப்புக்கு எதிரிகள் இணங்கியதை முதன்முறையாகச் சந்தேகித்தேன், இதன் பின்புலத்தில் சதியிருக்கலாம்  என்பதென் ஐயம். ஆசியக்காற்றினை நுகரப் பழகிய ஓப்ரமோவாஸை அங்கு நிலவிய அமைதியும் குழப்பமும், அசைவின்மையும், பாய்ச்சலும்  பாதித்தாக தெரியவில்லை, மாறாக பாலை நிலத்தில் நடந்த இந்த ஆடம்பர  அணிவகுப்பு மணல்மீது விரித்த சிவப்புக்கம்பளமாக அவருக்குத் தோன்றி இருக்கூடும் அலட்டிக்கொள்ளாமல்  நிம்மதியாக இருந்தார். என்னைப் பொறுத்தவரை, நான் பதட்டத்திலிருந்து வியக்கத்தக்க வகையில் விடுபட்டிருந்தேன்: சீசர் தமது தோணிக்கு உபயோகித்த மரப்பலகைகள் அதிர்ஷ்டத்திற்குரியவையென நம்பியதைப்போல எனது படகையும் நான் நம்பினேன். அந்த நம்பிக்கைக்குச் சாட்சியமாக பார்த்தியன் இளவரசியை சமாதானப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு நான் திரும்பும்வரை எங்கள் படகில் பணயப்பொருளாக வைத்திருப்பதென்கிற முடிவை மாற்றிக்கொண்டு அவளுடைய தந்தையிடம் உடனடியாக ஒப்ப்டைத்தேன். அதுபோல கீழைத்திசைமக்கள் உயரியமதிப்பு வைத்திருந்த, திராயான் உரோமாபுரி சக்கரவர்த்தியாக இருந்த காலத்தில் பார்த்தியர்களிடமிருந்து அபகரித்துச்சென்ற  ஆர்சாசைட்  ராஜவம்சத்தின் தங்க சிம்மாசனத்தை திரும்ப அளிப்பதாகவும் (அதுதான் நியாயமுங்கூட)  வாக்களித்தேன்.

ஆஸ்ரோஸுடனான இப்பேச்சுவார்த்தை அமர்வுகளின் சிறப்பம்சம் அனைத்தும்  வெளிப்படையாக இருந்தன. அண்டை வீட்டார் இருவர் தங்கள் குடியிருப்புகளுக்கிடையிலான பொதுச்சுவர் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக்கொள்கிற முயற்சிக்கும் இதற்கும் அதிக வேறுபாடில்லை. காட்டுமிராண்டிகள் பிரதிநிதி என்கிறபோதும், பார்த்திய சக்கரவர்த்தி பண்பாடுடைய மனிதர், அத்துடன் கிரேக்க மொழி பேசுகிற, சிந்திக்கக்கூடிய மனிதரென்றும், நம்பகத்தன்மைக்கு எந்தவகையிலும் என்னிலும் குறைந்தவர் அல்லவென்றும் நினைத்தேன். எனக்கேயுரிய ஆர்வக்கோளாறு,  பிடிபடாமல் நழுவிய இதுபோன்ற எண்ணஓட்டங்களை தக்கவைத்துக்கொள்ள எனக்குதவியது. பார்த்திய மன்னரும் நானும் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். அவர் என்னசொல்லப்போகிறார் என்பதை ஊகிக்கவும், அப்பதிலுக்குரிய திசையில் செல்லவும் அறிந்திருந்தேன, அவருடைய விளையாட்டில் நானும் பங்கேற்றேன்; உண்மையைச் சொல்வதெனில் என்னை ஆஸ்ரோஸ் ஆக கற்பனை செய்து, அவரை அதிரியனாக உருமாற்றி பேரத்தில் இறங்கினேன். பேச்சுவார்த்தையில் அமரும் இருவர், எதை விட்டுக்கொடுக்கலாம், அல்லது கூடாதென முன்னதாகத் தீர்மானித்து பின்னர் பயனற்ற விவாதங்களில் ஈடுபடுவதை நான் வெறுக்கிறேன். எந்தவொரு விவகாரத்திலும் உண்மை மட்டுமே என்னை மகிழ்வித்திருக்கிறது, காரணம் அது எளிமையான வழிமுறையாகவும், விரைவில் உடன்பாட்டிற்கு வரவும் உதவும். எங்களிடம்  பார்த்தியர்களுக்கு அச்சம்; அதுபோல பார்த்தியர்களுக்கு நாங்களும் அஞ்சினோம்; எங்கள் இருவரின் பயத்தின் கலவிலிருந்து யுத்தம் பிறப்பெடுக்க இருந்தது. சத்ரபதிகள் தங்கள் சுயநலத்தின் பொருட்டு எங்களைப் போருக்குள் தள்ளினார்கள். ஆஸ்ரோஸ் தரப்பிலும் குயெட்டோஸ்களும்(Quiétus), பால்மாக்களும்(Palmas) உண்டென்பதை  விளங்கிக்கொண்டேன். உதாரணத்திற்கு ஃபார்ஸ்மான்(Pharasmanes)  அதிகம் பிரச்சனைக்குரிய குறுநில ஆட்சியர், ஓரளவு சுதந்திரத்துடன் செயல்பட  எல்லப்புறத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார், எங்களை விட பார்த்தியன் பேரரசுக்கு மிகவும் ஆபத்தான பேர்வழி. முதுகெலும்பற்ற இவரைப்போன்ற பிரபுக்களுக்கு மான்யம் வழங்கி நான் சரிகட்டிவிட்டேன் என்கிற குற்றச்சாட்டைப் பார்த்தியர்கள் வைத்திருந்தார்கள், இருந்தும் எனைப்பொறுத்தவரை இவ்விஷயத்தில் நாங்கள் செலவிட்ட பணம் ஒரு நியாயமான முதலீடு. என்னுடைய இராணுவம் பார்த்தியர்களுடைய படையினரைக் காட்டிலும் மேம்பட்டதென்கிற தற்பெருமையைச் சுமக்க நான் தயாராக இருந்தேன். நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே  தரவேண்டும் என்றிருந்ததால், குறைவான வாக்குறுதிகளை தரவிரும்புகிறேன் எனக்கூறி ஆஸ்ரோஸ் மன்னரை நம்பவைப்பது, எனக்கிருந்த சங்கடம். எது எப்படியோ நான் அளித்த வாக்குறுதிகள் நம்பினார் அல்லது நம்புவதுபோல நாடகம் ஆடினார். இச்சந்திப்பில் ஏற்பட்ட உடன்பாடு இன்றளவும் நீடிக்கிறது, கடந்த 15 ஆண்டுகளாக நம்முடைய எல்லைகளில் உடன்பட்ட இருதரப்பினராலும் பிரச்சனைகளில்லை. எனது மரணத்திற்குப் பிறகும் உன் ஆட்சியில் இந்நிலை நீடிக்கவேண்டுமென்பதே என் விருப்பம்.   

ஒருநாள் மாலை, பார்த்திய மன்னர் ஆஸ்ரோஸ் எனக்கு மரியாதை செலுத்தும் நிமித்தம் விருந்தொன்றை பேரரசு கூடாரமொன்றில் ஏற்பாடுசெய்திருந்தார். விருந்தின்போது  பெண்கள் மற்றும் உயர்குடி பிறந்த குற்றேவல் சிறார்கள் நடுவில் நீண்ட கண்ணிமைகள் கொண்ட மெலிந்ததொரு நிர்வாண மனிதரைக் கண்டேன்; உணவுத் தட்டுகளை நிறைத்திருந்த இறைச்சிகளோ, கழைக்கூத்தாடிகளோ, நடனமிடும் பெண்களோ அவரைக் குழப்பவில்லை, மாறாக அவற்றைத் தாம் பொருட்படுத்தவில்லை என்பதுபோல கண்களை அகலத் திறந்திருந்தார். என்னுடைய மொழிபெயர்ப்பாளர் மூலம் அவரிடம் பேசினேன், அவர் பதிலளிக்க முன்வரவில்லை. மனிதர் ஒரு சாது. ஆனால் அவருடைய சீடர்கள் அதிகம் பேசக்கூடியவர்களாக இருந்தனர்;  ஆழ்ந்த சமயப்பற்றுடைய அத்தேசாந்திரிகள் இந்தியாவிலிருந்து வந்திருந்தனர், அவர்களுடைய குரு சக்திவாய்ந்த பிராமண சாதியைச் சேர்ந்தவர். அவருடைய தியானங்களும் பேச்சும்,  அனைத்து பிரபஞ்சமும் மாயைகள் மற்றும் பிழைகள் என்கிற நூலால் நெய்யப்பட்ட ஆடை என்பதை தவிர வேறொன்றுமில்லை என்று நம்மை  நம்பவைக்க முயற்சித்தன, என்பதை புரிந்துகொண்டேன். தவிர சாதுவிற்கு எளிமை, துறவு, மரணம், இந்த மூன்றுமட்டுமே நிரந்தரமற்ற இந்த உலகாயத வெள்ளத்திலிருந்து நாம் தப்பிப்பதற்கான ஒரே வழிமுறை, மாறாக, நமது தத்துவவாதியான எராக்கிளிட்டோ (Héraclite) அவற்றின் போக்கிற்குத் தம்மைச் செல்ல அனுமதித்தார், பிளாட்டோ புலன்கள் உலகிற்கு அப்பால் நிர்மலம், சூன்யம்,  நிரந்தரம் என்றிருக்கிற விண்ணுலகை அடைய கனவுகண்டவர், இக்கருத்து இந்தியத் துறவிடமும் இருந்தது. எனது மொழிபெயர்ப்பாளர்களின் உளறல்களுக்குப் பிறகும் நம்முடைய  ஞானிகளின் சிந்தனைககளுக்கு இந்திய யோகியின் கருத்துகள் முற்றிலும் அன்னியமானவையல்ல என்பதை என்னால் ஊகிக்கமுடிந்தது, ஆனால் இந்தியர் மிகவும்  ஆணித்தரமாக, அலங்காரமற்ற வார்த்தைகளில் தமது கருத்தைத் தெரிவித்தார் தமது சரீரத்தைத் தவிர பிற அனைத்தையும் துறந்த நிலையில் உருவம், அருவம் இரண்டுமற்ற, கண்ணுக்குப் புலனாகாத இறைவனை இனிப் பிரிவதில்லை என்கிறவகையில் ஐக்கியமாக விரும்பி, மறுநாள் தம்மை உயிருடன் எரித்துக்கொள்ள திர்ர்மானித்தார். இப்புனிதச் சடங்கிற்கு ஆஸ்ரோஸ் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். வாசம் மிக்க மரக்கட்டைகளைக்கொண்டு தீ மூட்டப்பட்டது. இந்தியச் சாது எவ்வித கூப்பாடுமின்றி தீயில் பாய்ந்தார். அவருடைய சீடர்களிடம் வருத்தமில்லை, அதற்கான அறிகுறிகளுமில்லை, காரணம் அதொரு ஈமச் சடங்கு அல்ல. 

மறுநாள் இரவு வெகுநேரம் நடந்த சம்பவம்குறித்து திரும்ப யோசித்துப் பார்த்தேன். மினுமினுப்பாகவும் தடித்துமிருந்த துணியால் மூடிய கூடாரமொன்றின் கீழ் விலையுயர்ந்த கம்பளத்தின் மீது படுத்திருந்தேன். ஒரு இளம்வயது பணியாள் என் கால்களை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தான். அந்நேரத்தில் நுழைவாயிற் கதவருகே அடிமைகளின் முனுமுனுப்பும்; பனைவகை மரத்தின் ஓலைகள் சலசலப்பும்;   திரைச்சீலைக்கு மறுபக்கம் என்னுடன் வந்திருந்த வணிகர் ஒப்ரமோவாஸ் விடும் குறட்டை; தனது தளையில் குதிரை குளம்பினால் எழுப்பும் சப்தம்; சிறிது தொலைவில்,  பெண்கள் தங்கியிள்ள பகுதியிலிருந்து சோகமான பாடலொன்றின் முனுமுனுப்பென ஆசிய இரவொன்றின் அரிதான ஒலிகள் அனைத்தையும் கேட்க முடிந்தது. இறந்த பிராமணர் இவற்றையெல்லாம் வெறுத்திருந்தார். மறுப்பை ஒரு போதையாகக் கொண்டிருந்த அம்மனிதர் ‘தீ’க் குளித்தக் காட்சி காதலனொருவன் படுக்கையில் உருளுவதுபோல நடந்துமுடிந்தது. அவர் முதலில் உயிரற்றபொருட்களை விலக்கினார், பின்னர் உயிருள்ள ஜீவன்களைக் கூடாதென்றார், இறுதியாக தமக்கு எல்லாமாக இருந்த, எல்லாமுமாக தோன்றிய கண்ணுக்கு புலனாகாத, வெறுமையை, அந்த ஒற்றை இருத்தலை, தம்மை அவரிடமிருந்து மறைக்க உதவிய  ஆடைகளையெல்லாம் களைந்ததைப் போலக் கழற்றி எறிந்தார்.

தொடரும்….

Series Navigation<< அதிரியன் நினைவுகள் -19அதிரியன் நினைவுகள் -21 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.