2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம்

1

எழுபதுகளின் தமிழ் சினிமா உலகம் பல புதிய மாற்றங்களைக் கண்டது. புதிய கதைகள், புதிய கூறல் முறைகள், இசையில் இருந்த புதிய பாய்ச்சல் என்று அன்று வந்த திரைப்படங்கள் புதியனவாக இருந்தன. அவற்றுள் ஒரேவகைக்குள் அடக்க முடியாத காட்சி ஊடகத்தை காணமுடியும். கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணம் என்று வண்ண மாற்றங்கள் நிகழ்ந்தன. பலவகை இசை கோலங்கள் கொண்ட இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது இந்த காலகட்டத்தில்தான். இதே மாதிரியான மாற்றத்தை 2000க்குபின் தமிழில் இலக்கிய உலகில் நிகழ்ந்திருக்கிறது.

2000க்கு பின்னான தமிழ் இலக்கிய விரிவிற்கு இணையத்தின் பெருக்கமும், அச்சு ஊடகத்தின் எளிமையாக்கமும் முக்கிய காரணங்களாக சொல்ல வேண்டும். இணையத்தின் வாயிலாக வாசிப்பின் எல்லை விரிவடைந்தது. வாசகர்களின் நெருக்கம் அதிகமாக, விவாதங்களும் அதிகரித்தன. எல்லா முக்கிய சிறுகதைகதைகளும், சிறுகதையின் சூட்சமங்கள் எளிதாக வாசிப்பாளர்களிடமும் சென்று சேர்ந்தன. புதுமைப்பித்தன் மீண்டும் மறுவாசிப்பு உள்ளானார். அசோகமித்திரன், ஜானகிராமன், ஜெயகாந்தன் என்று முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் முக்கிய ஆக்கங்கள் மீண்டும் வாசிக்கவும் விவாதிக்கவும் செய்தார்கள். அவர்களின் சிறுகதை, நாவல் தொகுப்பு நூல்கள் பெரிய புத்தகமாக தொகுக்கப்பட்டன.

பத்திரிக்கை, வாரந்திரி, மாதாந்திரி போன்றவைகள் வழக்கொழிந்து ஒரு சாரார் தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்க, ஒரு சாரார் இணையம் வழியாக வாசிக்க தொடங்கினர். இணையம் ஒரு பெரிய வரப்பிரசாதமாக கணினியில் வேலை செய்யும் ஆட்களுக்கு அமைந்தது. பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் இந்திய, வெளிநாட்டு மக்கள் எளிதாக இணையம் வழியாக தொடர்பு கொள்ளவும், புதியவைகளை வாசிக்கவும், விவாதிக்கவும் பரந்துப்பட்ட இலக்கிய உலகமாக விரிவடைந்தது. 

சிறந்த சிறுகதைகள், நாவல்களுக்கான க.நா.சு எழுதிய பட்டியல் வாசிக்க கிடைத்தது. சி. மோகன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் சிறந்த பட்டியல் வெளியாகி வாசகர்களை கவர்ந்தன. எழுத்தாளர்களின் இணைய ப்ளாகர் எழுத்துக்கள் பெரியளவில் புதிய வாசக, எழுத்தாளர்களுக்கு பயன்பட்டன.

எழுத்து பெரிய வாசகப் பரப்பிலிருந்து தொடங்குவதல்ல, சின்னச் சின்ன எழுத்துகள் வழியே, பழகிய வாசகர்கள், கவிதை, சிறுகதை என்று சின்ன பரப்பு எல்லைகளிலிருந்து தொடங்குவது. அதனால் சிறு நிலப்பரப்பை வாழ்வாக கொண்டவர்களும் வெளிச்சம் பெற்றார்கள். பல புதிய தொழில்சார் எழுத்துகளும் அறிமுகமாயின. அச்சு ஊடகம் போல பல மாதங்கள் காந்திருந்து தன் படைப்பை காணும் படைப்பாளியாக இல்லாமல், இணைய எழுத்தில் உடனே பிரசுர சாத்தியமாகி, வாசகர்களை சென்றடைந்து உடனே அதற்கான எதிர்வினையும் கிடைத்து வந்தது. இப்படியான சூழலில்தான் புதிய எழுத்தாளர் படை ஒன்று உருவாகியது.

2

தங்களை உருவாக்கிக் கொள்ளும் பெரிய பணி எழுத்தாளர்களுக்கு உண்டாகியது. பழைய சூழல் கதைகள் வழக்கொழிந்து புதிய சூழலில் சிறுகதைகள், நாவல்கள் எழுதவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. எதையும் சொல்ல தங்கள் படைப்பாற்றலுக்கு புதிய களம் தேவையாக மாறியது. சின்ன களங்களில் எழுதி நின்றுவிடாமல் தங்கள் அறிவிற்கு ஆற்றலுக்கு தகுந்த புதிய களங்களை தேர்வு செய்து அமைக்கிறார்கள். கப்பலில் வேலை செய்பவரிலிருந்து முடி திருத்துவோர் பரம்பரையில் வந்தவர் வரையும், உள்ளூர் மளிகைக்கடை வைத்திருப்பவரிலிருந்து லண்டன் ஐடி துறையில் வேலை செய்பவர் வரையும் எழுத்தாளர்களின் எல்லை விரிந்து அமைந்திருக்கிறது.

எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கை சூழலோடு ஒன்றியிருக்கும் தங்களின் இடங்களையே தங்கள் களங்களாக கொள்கிறார்கள். ஸ்ரீதர் நாராயணன் தான் வாழும் வெளிநாட்டு வாழ்க்கையை முழுவதும் சொல்விட ஆசைக் கொள்வது இதனால்தான். கடையில் வேலை செய்யும் பா.திருச்செந்தாழை தன் ஓய்வு நேரத்தில் கணக்குகளை சரிபார்க்காமல், கதைகளை பின்னுகிறார். மலேசியாவில் வசிக்கும் ம.நவீன் தன் வாழ்வின் பெரும் பகுதியை எழுத்திற்காக செலவிடுகிறார். பங்களிப்பை அளிக்க காத்திருக்கும் பெரும் திரளான எழுத்தாளர்கள் இந்த காலத்தில் வெளியாவதற்கு முக்கியமாக தொழில்நுட்ப வளர்ச்சியும், கல்வியறிவின் பெருக்கமும், உபரியான பொருளியல் வாழ்க்கையும் இயல்பாக அவர்களுக்கு அமைந்தது.

சொல்ல விரும்பிய வாழ்க்கை முறையும், தத்துவங்களும், அவர்கள் பின்னே இருக்கும் பெரிய சக்தியின் வெளிப்பாடாக கொள்ள வேண்டும். அறிவார்ந்த விவாதங்களும், அவர்களின் வெளிப்பாட்டின் தன்னம்பிக்கையும் முந்தைய தலைமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. முந்தைய தலைமுறை தயங்கி சொன்ன விஷயங்களை இத்தலைமுறை தயக்கமின்றி சொல்ல வந்திருக்கிறது. முந்தைய தலைமுறை யோசித்து வைத்த விஷயங்களை இத்தலைமுறை நிறைவேற்றியிருக்கிறது. போன தலைமுறை நிராகரித்தவைகளை இத்தலைமுறை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறது. உதாரணமாக தன்பால் ஈர்ப்பு வாழ்க்கை முறையை இந்த தலைமுறையினர் எந்த தயக்கமுமின்றி பேசுயிருக்கிறார்கள். இதுவரை ஒதுக்கப்பட்டிருந்த தத்துவத்தையும், ஆன்மீகத்தையும் இந்த தலைமுறை பேசுகிறது. 

எளிமையாக சொல்லவேண்டுமென்றால் முன்பிருந்த வழித்தடங்களை புதிய இலக்கிய போக்குகள் உடைத்து புதிய பாதையை உருவாக்கியிருக்கின்றன. 

3

எந்தவிதமான சித்தாந்த அடிப்படைகள் இன்றி தங்கள் குறுங்குழுக்கலான வாழ்க்கையை எழுத தலைப்பட்ட தலைமுறையினர் 2000பின் வந்தவர்கள். பெரிய சிந்தாந்த கொள்கைகளின் தாக்கம் ஏதுமின்றி இருக்கும் முதல் தலைமுறையும் இதுதான். நவீனத்துவமும் பின் நவீனத்துவமும் பின்னோக்கி சென்றுவிட யதார்த்த வாதத்தையும், இயல்புவாதத்தையும் கருப்பொருளாக கொண்டு எழுதும் புதிய தலைமுறை. அதுவே எளிமையான அவர்களுக்கு கைகூடுகிறது. புதிய களங்களை எழுதிப் பார்க்க அவர்களுக்கு யதார்த்தவாதம் எளிமையாக வந்துவிடுகிறது.

2000க்கு பின் வந்த தலைமுறையின் இடம் பன்முகம் கொண்டது. புதிய வழிமுறைகளை எழுதிப் பார்க்கும் ஆர்வம் கொண்ட இவர்கள் தர்க்க ரீதியாக எதையும் நிறுவ முயற்சிப்பதில்லை. எழுத்தினூடாக கண்டடையும் மெய்மையே அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது. எதார்த்தத்தை கூறும் எந்த படைப்பும் அதன் அழகியல் ஒரு மெய்யியலை நோக்கி சிறு காலை வைக்கவே முயற்சிக்கிறார்கள். செவ்வியல் தன்மை கொண்டதாக மாற்ற அவர்கள் செய்யும் முயற்சியாகவே இதைக் கொள்ள வேண்டும்.

ஆனால் எல்லா ஆக்கங்களும் சென்றுசேருமிடம் குழப்பமான இடமாக இருப்பதை வாசகன் அறிந்திருக்கிறான். புதியவைகளை எழுதுபவன் என்றபேரில் ஆழமற்ற பல ஆக்கங்கள் வெளியாகின்றன. பல நேரங்களில் அவை கவனிக்கப்படாமலும் போகின்றன. மிகச் சிறந்த ஆக்கங்கள் என்று சொல்லத்தக்க சிலவைகள் மீது நம்கவனம் நிலைபெறாமல் போகும் சாத்தியமும் அதிகமாக இருக்கின்றன.

இதற்கு மேல் சொல்ல ஒன்று உண்டு அன்றாடத்தில் காலூன்றாத எந்த இலக்கியமும் சிறந்த படைப்பாக அமைவதில்லை. கருத்து தீவிரம் என்ற பெயரில் அமைக்கப்படும் எழுத்துக்களும் பெரிய அளவில் கண்டு கொள்ளப்படுவதும் இல்லை. மேல் தளத்தில் அமைக்கப்படும் நகாசு வேலைகளால் அடித்தளமற்ற, ஆழமற்ற, ஆழ்மனதை தொடாத படைப்புகளை விலக்கி வைக்க வேண்டி இருக்கிறது. இவை அனைத்துமே கணினியின் பயன்பாட்டின் தொடர்ச்சியாக வந்து சேர்ப்பவை. அனைத்தையும் தாண்டி பல நல்ல கதைகள் உருவாகி வெளியாகி கொண்டே இருக்கின்றன பல நல்ல எழுத்தாளர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் படைப்புகள் மக்கள் மனதை சென்று சேர்ந்து கொண்டே இருக்கின்றன.

4

நவீனத்துவ எழுத்துகளின் இறுக்கும் தளர்ந்து பின் நவீனத்துவமாக மலர்ந்ததும் எழுந்த புதிய பாணி எழுத்துகள் வாசிப்பவரை மலர்ந்த முகத்துடன் இருக்கும் காலவெளியில் தள்ளியது. எழுதிய அனைத்தையும் வாசித்துவிட துடிக்கும் பேனாவாக தன்னை உருவகித்துக்கொள்ளும் நல்லுள்ளங்களை அது பெற்றுக்கொண்டது. தீராத உவகையால் எழுத்து அலைகள் போல எழுந்து வந்தன. யாரும் அறியாத ஒரு கூட்டதை உருவாக்கியிருந்தது. சொல்லொன்னா கடலில் தத்தளித்து தவிக்கும் வாசகனாக அவனை மாற்றி வைத்தது. 

ஜோடி குருஸ் எழுதிய ஆழிசூல் உலகுவின் வரவால் புதிய மாற்றத்தின் தொடக்கமாக கொள்ளலாம். அதற்கு முன் சில புதிய வரவுகள் இருந்தாலும் முக்கிய பெரிய மாற்றமாக இதைக் கொள்ள வேண்டும்.

பின் வந்தவர்கள் அடுத்த புதிய மாற்றங்களை கொண்டுவந்தார்கள். எஸ்.செந்தில்குமார் வெய்யில் உலர்த்திய வீடு என்ற சிறுகதையின் மூலம் அறிமுகமானார். வெளிப்படையான சொல்லாடல்களால் அதிகம் கவனத்தை கவர்ந்தார். ரா.கிரிதரன் எழுதிய காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதை மூலம் அதிக கவனத்தை பெற்றார். பா. திருச்செந்தாழையின் வெயில் நண்பன் ஒரு பிரார்த்தனை சிறுகதை தொகுப்பின் மூலம் அறியப்பட்டார். தனித்துவமான எழுத்து நடையும் நுட்பமான விவரனையும் கச்சிதமான தகவல்களுடன் எழுதுபவர்.

லாவண்யா சுந்தர்ராஜன் நீர்கோல வாழ்வை நச்சி என்ற கவிதை தொகுப்பின் மூலம் அறியப்பெற்றார். புறாக்கள் எனக்கு பிடிப்பதில்லை என்ற சிறுகதை தொகுப்பும், காயம்பூ என்ற நாவலும் எழுதியிருக்கிறார். குழந்தை பேற்றின்மையை அழுத்தங்களை சொல்லும் சிறந்த நாவலாக காயாம்பூவை சொல்லலாம். துரதிஷ்டம் பிடித்த கப்பலின் கதை என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் அதிக கவனம் பெற்றவர் பாலசுப்ரமணியம் பொன்ராஜ், அழுத்தமான காட்சிவிவரனைகள், ஆழமான தத்துவநோக்குடனும் எழுதுபவர். பிறகு நள்ளிரவின் சொற்கள் என்ற கவிதை தொகுப்பு வெளியானது. கத்திக்காரன் என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் அறியபெற்றவர் ஸ்ரீதர் நாராயணன். லகுதன்மையுடன் கதைகளை சொல்லமுடிவது இவரது சிறப்பு. பிறகு அம்மாவின் பதில்கள் என்ற சிறுகதை தொகுப்பு வெளியானது. கே.என். செந்தில் இரவுக்காட்சி என்ற தொகுப்பின் மூலம் அறியப்பட்டார். விரிந்த தளத்தில் நுண்ணிய காட்சி சித்தரிப்பு கொண்ட கதைகளை எழுதுபவர். அரூப நெருப்பு, அகாலம், விருந்து ஆகிய சிறுகதை தொக்குப்புகளை எழுதியிருக்கிறார்.

யாவரும் பதிப்பகம், இணையதளம் நடத்திவரும் ஜீவகரிகாலன் டிரங்க் பெட்டிக் கதைகள் சிறுகதை தொகுப்பின் மூலம் அறியப்பெற்றார். கலைத்துப் போடும் சீட்டுகட்டுகளைப்போல கதைகளை புதிய உத்திகளின் மூலம் சொல்லிவருபவர். கண்ணம்மா, ஒரு சம்பிரதாய தேநீர் விருந்து ஆகிய சிறுகதை தொகுப்புகள் வெளியாயின. பதிமூன்று மீன்கள் சிறுகதை தொகுப்பின் மூலம் அறியப் பெற்றார் குமாரநந்தன். எளிய நேர்க்கோட்டில் பிசிறற்ற அழகுடன் கதைகளை எழுதிவருபவர் இவர். அடுத்து பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப்பாடகன், மகா மாயா ஆகிய தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சுய எள்ளல் கவிதைகளை எழுதி வெளிச்சத்திற்கு வந்தவர் போகன் சங்கர். எரிவது அணைவது ஒன்றே என்ற முதல் கவிதை தொகுப்பு. அதே அங்கததன்மையுடன் சிறுகதைகளை எழுதியிருக்கிறார், கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், போக புத்தகம், திகிரி, மர்மகாரியம் போன்ற தொகுப்புகள் வந்துள்ளன. கே.ஜே. அசோக்குமார் சாமத்தில் முனகும் கதவு சிறுகதை மூலம் இலக்கிய கவனம் பெற்றார். தனக்கென கதைக்களம், மானுடரின் வாழ்க்கை நோக்கை பரிசீலனையாக உருமாற்றிக் கொள்ளும் கதைகளை எழுதுபவர். சாமத்தில் முனகும் கதவு, குதிரை மரம் இரண்டு தொகுப்புகள் வந்துள்ளன. ரமணி குளம் என்ற நாவல் வெளியாகியுள்ளது.

மாறிலிகள் தொகுப்பு மூலம் கவனத்தைப் பெற்றார் சித்துராஜ் பொன்ராஜ், நக்கல் எள்ளல்தன்மையுடன் எழுதும் எழுத்துகளை பிரதானமாக கொண்டிருக்கிறார். மரயாணை என்று நாவல் வெளியாகியிருக்கிறது. இருமுனை தொகுப்பு மூலம் கவனம் பெற்றார் தூயன். அடர்த்தியாக கதைகளை ஆழமான இருத்தலிய பார்வையோடு பின்னும் தூயனின் இரண்டாம் தொகுதி டார்வினின் வால். பின் கதீட்ரல் என்கிற நாவலை எழுதியிருக்கிறார்.

ம.நவீன் போயாக் என்ற சிறுகதையின் மூலம் அதிக கவனம் பெற்றார், அகம்சார்ந்த நுட்பங்களையும், வரலாற்றுணர்வுகளையும் தம் படைப்பில் வெளிப்படுத்துபவர். மண்டை ஓடி, போயாக், உச்சை ஆகிய சிறுகதை தொகுப்புகளும், பேய்ச்சி, சிகண்டி ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். டொரினோ தொகுப்பு மூலம் கவனம் பெற்றார் கார்த்திக் பாலசுப்ரமணியம். நுண்ணிய சித்தரிப்பும் பூடகத்தன்மையும் தன் பாணியாக கொண்டவர். நட்சத்திரவாசிகள் என்ற நாவலும், ஒளிரும் பச்சைக் கண்கள் என்ற தொகுப்பும் வந்திருக்கின்றன. குடை சிறுகதை மூலம் தமிழில் சுசித்ரா அறியப்பட்டார். பிறகு ‘ஒளி’ என்ற தொகுப்பு வெளியானது. இருத்தலிய சார்ந்த வாழ்வின் ஆதாரகேள்விகள், அறிவியியல் புனைவு என்று எழுதிவருபவர். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

வற்றாநதி தொகுப்பின் மூலம் கவனம் பெற்றார் கார்த்திக் புகழேந்தி. மண் மனம் வீசும் கதைகளை நாட்டரியல், நாட்டுபுற பண்பாட்டு பின்னணியில் எழுதிவருபவர். ஆரஞ்சு மிட்டாய், அவளும் நானும் அலையும் கடலும், வெஞ்சினம் ஆகிய தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சுனில் கிருஷ்ணன் அம்புபடுக்கை தொகுப்பின் மூலம் கவனத்தை பெற்றார். புதிய உருவகங்களை காந்திய சிந்தனைகளை எழுத்தில் கொண்டுவருபவர், விஷக்கிணறு என்ற தொகுப்பும், நீலகண்டம் என்ற நாவலும் எழுதியிருக்கிறார். இயர் ஜீரோ நாவல் மூலம் கவனத்தை பெற்றார் காலத்துகள். இளமைகால நினைவுகளை கதைகளாக எழுதும் பாணியை கொண்டவர். வேதாளத்தின் மோதிரம் என்கிற தொகுப்பு வெளியாகியது. 

பதிலடி சிறுகதை தொகுப்பின் மூலம் அறியப்பெற்றார் அரிசங்கர். தனக்கென தனி பாணி கொண்ட பாப்புலர் பிக்ஷன் வகையாக எழுதக்கூடியவர். ஏமாளி, உடல் ஆகிய சிறுகதை தொகுப்புகளும், பாரிஸ், உண்மைகள் பொய்கள் கற்பனைகள் ஆகிய நாவல்களும் வெளிவந்திருக்கின்றன.

விடாய் சிறுகதையின் மூலம் அறியப்பட்டவர் கமலதேவி, யதார்த்த சிறுகதைகளில் கிராமத்து வாழ்வின் பெண்களின் அகஉலகை கூறுபவர். சக்யை, குறுதியுறவு, கடுவழித்துணை, கடல், ஆழி ஆகிய சிறுகதை தொகுப்புகள் வந்திருக்கின்றன. அகரமுதல்வன் இரண்டாம் லெப்ரினன்ட் தொகுப்பின் மூலம் அறியபெற்றார், ஈழத்து வாழ்வையும், அகதிகளின் துயர வாழ்வையும் தொடர்ந்து எழுதுபவர். முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு, பான் கி மூனின் றுவாண்டா, மாபெரும் தாய் ஆகிய சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

சக்கை நாவல் மூலம் கவனத்திற்கு வந்தார் கலைச்செல்வி. காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கதைகளை நிறைய எழுதும் ஆர்வம் கொண்டவர். சக்கை, புனிதம், அற்றைத்திங்கள், ஆலகாலம், ஹரிலால், தேய்புரி பழங்கயிறு ஆகிய நாவல்களும், வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி, கூடு ஆகிய சிறுகதை தொகுப்புகளும் வெளியாகியுள்ளன.

ஆகுதி சிறுகதையின் வழியே கவனம் பெற்றார் மயிலன் ஜி சின்னப்பன். அகத்தின் பாவனைகளை எழுத முயற்சிப்பவர், மருத்துவ பின்னணியில் நிறைய கதைகளை எழுதியிருக்கிறார். நூறு ரூபிள்கள், அநாமதேய கதைகள் போன்ற தொகுப்புகளும், பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் நாவலும் எழுதியிருக்கிறார். ஒளிர்நிழல் நாவல் மூலம் அதிக கவனத்தை பெற்றார் சுரேஷ் பிரதீப். இருத்தலிய சிக்கல்களையும், வடிவ சோதனைகளை அதிகம் செய்து பார்ப்பவர், நாயகிகள் நாயகர்கள், எஞ்சும் சொற்கள், உடனிருப்பவன், பொன்னுலகம் ஆகிய தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். மூங்கில் தொகுப்பின் மூலம் கவனத்தை பெற்றார் சுஷில் குமார், நாஞ்சில் நாட்டு மக்கள், வாழ்க்கை, தொன்மங்களை எழுதும் ஆர்வம் கொண்டவர். சப்தாவர்ணம், அடியந்திரம் ஆகிய சிறுகதை தொகுப்புகள் வந்துள்ளன.

மறவோம் என்ற கதை மூலம் கவனம் பெற்றார் சிவா கிருஷ்ணமூர்த்தி. அயல் நிலத்து வாழ்வை பகடியாக சொல்லும் வல்லமை பெற்றிருக்கிறார். இவரது வெளிச்சமும் வெய்யிலும் சிறுகதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது. நாய்சார் தொகுப்பின் மூலம் கவனத்தை பெற்றார் ஐ.கிருத்திகா, மண்ணும் பெண்ணும் என இவர் கதைகளை வகைபிரித்துக் கொள்ளலாம். உப்புச்சுமை, நாய்சார், திமிரி, கற்றாழை போன்ற தொகுப்புகள் வந்துள்ளன. விஜயகுமார் சம்மங்கரை மிருக மோட்சம் என்ற தொகுப்பின் மூலம் கவனம் பெற்றார். மனிதன் மிருகம் என்ற இருமைநிலைகளை அதிகம் கதைகளில் பயபடுத்துகிறார். மிருக மோட்சம் என்கிற தொகுப்பு வந்திருக்கிறது.

வெண்ணிற ஆடை தொகுப்பின் மூலம் கவனம் பெற்றவர் சரவணன் சந்திரன். அன்றாடத்தின் புதிர்களை விலக்கி வெளிக்காட்டும் இயல்பு கொண்ட கதைகளைப் படைப்பவர். ஐந்து முதலைகளின் கதை, ரோலக்ஸ் வாட்ச், அஜ்வா, பார்பி, சுபிட்ச முருகன், லகுடு, அத்தோரோ, அசோகர் ஆகிய நாவல்களும், வெண்ணிற ஆடை, பாவத்தின் சம்பளம் ஆகிய தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். அருகில் வந்த கடல் தொகுப்பின் மூலம் கவனம் பெற்றார் மு. குலசேகரன். பாத்திரங்களின் தனித்துவமான உணர்ச்சிப் போக்குகளைச் சித்தரிப்பதில் வல்லமை கொண்டவர் மு.குலசேகரன். அருகில் வந்த கடல், புலி உலவும் தடம் போன்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. தங்க நகைப் பாதை நாவல் வெளியாக இருக்கிறது. பட்டர் பி தொகுப்பின் மூலம் கவனம் பெற்றவர் வைரவன் லெ.ரா. நாஞ்சில் நிலம், வட்டார மொழிகளை வெளிப்படுத்த எத்தனிக்கும் படைப்புகளை எழுதுகிறார். பட்டர் பி & பிறகதைகள், ராம மந்திரம் ஆகிய தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

விடிவு என்ற சிறுகதையின் மூலம் அதிக கவனத்தைப் பெற்றார் ஆர். காளிப்ரசாத், நகர்புற வாழ்வின் சிக்கல்களைப் பகடியுடன் எழுதுபவர், ஆள்தலும் அளத்தலும் என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. மழைக்கண் சிறுகதையின் மூலம் கவனத்தை பெற்றார் செந்தில் ஜெகந்நாதன், வேளாண்குடிகளின் வாழ்வையும் அவர்களின் மாற்றங்களையும் தொடர்ந்து எழுதுபவர், சினிமா துறை சார்ந்த கதைகளும் எழுதுகிறார். மழைக்கண் என்கிற சிறுகதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது.

2000க்கு பின் வெளியான கதைகள் அதற்கு முன் வெளியான கதைகளிலிலிருந்து எப்படி வேறுபடுகின்றன என நோக்க அதை வாசிப்பவர்களின் ஏற்பைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும். புதிய சிறுகதைகளும் நாவல்களும் வாசகர் மத்தியில் ஆரோக்கியமான தொடர் விவாதங்களை தொடர்ந்து உண்டாக்கிக் கொண்டிருப்பது நடக்கிறது.

***

2 Replies to “2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம்”

 1. அன்புள்ள சொல்வனம் ஆசிரியர் குழுவிற்கு,

  நன்றியும், வணக்கங்களும்.

  சொல்வனம் 300 வது கண்டிருக்கிறது. இது இலக்கிய ஆர்வலர்களுக்கு நெகிழ்வும், பெருமிதமும் ஏற்படும் தருணம். இப்போதுள்ள இலக்கிய இதழ்களுக்கு முன்னோடியாக சொல்வனம் திகழ்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. எட்டுத் திக்கும் சென்று கலைச்செல்வங்கள் கொணர்ந்து சேர்க்கும் பணியில் விடாது ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது சொல்வனம். கவிதைகள், சிறுகதைகள், பல்துறைகளிலிருந்தும் கட்டுரைகள், தொடர்கள், நாவல்கள் என வாசகர்களுக்குத் திணறத் திணற படைப்புகளை அளித்தபடி இருக்கிறது சொல்வனம். தமிழின் ஆகச் சிறந்த ஆசிரியர்களின் படைப்புகளும், புதிதாகக் கண்களில் கனவுகளுடன் எழுத வரும் படைப்பாளிகளின் ஆக்கங்களும் ஒருங்கே காணப்படுவது சொல்வனத்தின் மற்றொரு சிறப்பு. என் போன்ற துவக்க நிலை எழுத்தாளர்களின் படைப்புகளையும் பரிசீலித்து, அவை தரம் கொண்டவையாக இருப்பின் அவற்றைப் பிரசுரித்து அவர்களையும் அங்கீகரிப்பதன் மூலம் தமிழின் புதிய வரவுகளை இரு கரம் நீட்டி வரவேற்பதில் முன்னிற்பது சொல்வனம். முன்னூறு இதழ்கள் என்பது சாதாரண நிகழ்வன்று. வரலாற்றின் பக்கங்களில் முக்கியமானதொரு பகுதியை சொல்வனம் தனதாக்கிக் கொண்டுள்ள இத்தருணத்தில் சொல்வனத்தையும், அதன் ஆசிரியர் குழுவையும் நெகிழ்வுடனும், மகிழ்வுடனும், பெருமிதத்துடனும் வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.
  நன்றி.

  அன்புடன்
  ஜெகதீஷ் குமார்.

 2. மிகச்சிறப்பான கட்டுரை , மூன்று கட்டங்களாக பிரித்து உண்மையான நிகழ்வை மையப்படுத்தி தற்கால சூழலில் சிறுகதை ஆசிரியர்களின் தொகுப்பையும் ஏன் எல்லா முயற்சிகளும் இலக்கியம் ஆகாமல் போகிறது என்பதை தன் விசாரணை மூலம் தெரியப்படுத்தியுள்ளார் நன்றியுடன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.