மொக்குகள் கட்டவிழும் அற்புத தருணங்கள்

அண்மைக் காலத்தில், இணையம் வழியிலும், அச்சு வழியிலும் வரும் இலக்கிய பத்திரிகைகள் அதிகரித்திருப்பது உவகையூட்டுவது.  உலகெங்கிலும் இவ்வகையில் வாசிப்பிற்கான சூழல் பெருகிவரும் வேளையில் தமிழிலும் அது நடந்தேறியிர்ப்பது மிகவும் மகிழ்ச்சியானது.  காலச்சுவடு, உயிர்மை, சொல்வனம், கனலி, தமிழினி, யாவரும், வல்லினம், ஆவநாழி, அகழ், வனம், அரூ, பதாகை, திண்ணை, வாசகசாலை, நீலி என பல தளங்களில் பல புதிய எழுத்தாளர்களை வாசிக்கின்ற வாய்ப்பை நமக்கு ஒருங்கே தருகிறது..  ஒவ்வொரு பத்திரிகையும் தனக்கென ஒரு வடிவமும், தொடர்ச்சியும் கொண்டிருக்கிறது என்பதையும் கவனித்திருக்கிறேன்..  இணையம் அளிக்கும் பெரும் வீச்சில் இன்று உருவாகிவரும் புதிய எழுத்தாளர்கள் பட்டியல் மிக நீண்டது.  ஆண்டு முழுவதும் பல ஊர்களில் நடக்கும் புத்தக கண்காட்சியில் வெளியாகும் இலக்கிய ஆக்கங்களை கண்டு சற்று மலைப்பாகவே இருக்கின்றது.  இலக்கிய வாசிப்பிற்கு, அவற்றை வகைபடுத்துவதற்கு உரைகல்லென வெகு சில தளங்களே அமைகின்றன.  அம்மட்டில் சொல்வனம் ஆசிரியர் குழுவிற்கு இது போன்ற புது எழுத்தாளர்களை அடையாளம் காணும் புது வகையான முயற்சிக்கு உளங்கனிந்த வாழ்த்துகள். அனோஜன், போகன், சுரேஷ் பிரதீப், கார்த்திகை பாண்டியன், கிருத்திகா, கிரிதரன், மஜீதா, சுனீல் கிருஷ்ணன், அசோக்குமார், கணேஷ், கலைச்செல்வி, சுரேஷ், காளிபிரசாத், நகுல்வசன், பானுமதி, ஜிஃப்ரி ஹாசன், சிவா, ரம்யா,  அஜிதன், ஜாரா,  ஆரூர் பாஸ்கர் என்று என் குறைந்த வாசிப்பில், சட்டென நினைவில் தோன்றிய ஒரு நெடும் பட்டியலை என்னால் சொல்ல முடியும்.  இன்னமும் முறையாக கவனித்து தொகுத்தால் இந்த புதிய எழுத்தாளர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டி செல்லக்கூடிய அளவில் இருக்கிறது.  ஒவ்வொருவரும் குறிப்பிடும்படியான படைப்புகள் என ஏதாவது பங்களித்திருக்கிறார்கள் என்பது திண்ணம்.

புது எழுத்து முறை என்று வரும்போது, மறக்காமல் என் நினைவில் தோன்றுபவர் காலத்துகள்.  இலக்கிய உலகில் அழியா இடத்தை என் எழுத்துக்களால் இந்த இடங்களோ, அல்லது என் கதாபாத்திரங்களோ பெறும் என்று தனக்கு நம்பிக்கையில்லை என்றாலும், அப்படி என்றேனும் அது நடக்க வேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் தனக்கு உள்ளது என அவர் குறிப்பிடுகிறார். ஏதோ நேர்காணலிலோ, அல்லது அவருடைய கட்டுரை பதிவிலோ  அப்படி அவர் சொல்லவில்லை.  ஒரு புனைவினூடே இப்படி எழுதிச் செல்கிறார்.  தன்னிலையில் கதையை சொல்லிச் செல்லும் எழுத்தாளர்கள், சில சமயம் பாத்திரப் படைப்புகளிலிருந்து மாறுபட்டு தங்கள் சிந்தையோட்டத்தை சொல்லிச் செல்வதைப் படித்திருக்கிறோம்.  ஆனால் காலத்துகள் இந்த உத்தியில் சற்று மாறுபட்டு, தன்னுடைய படைப்பு தொகுதியை சுற்றி வளைத்து இணைக்கும் ஒரு வலையை நெய்கிறார்.  இது போன்ற தன்னுணர்வு பதிவுகள் கதையோட்டத்தின் சுவையை குறைக்காமல், அவருடைய கதையுலககைப் பற்றிய வினாக்களை மேலும் தூண்டுகின்றன.   

காமிக்ஸ் உலகம் என்பது அலாதியானது.  நான் சிறுவயதில் வாசித்த காமிக்ஸ் கதைகள் அநேகம்.  அவற்றை ஒரு பெருந்தொகுப்பாக எங்கள் மாமா வைத்திருந்தார்.  இன்றைக்கு, கலெக்டிபிள் என்கிற உயர்தரத்தில் வைத்து பார்க்கப்படும் சேகரிப்பு வகைகளில் அது போன்ற புத்தக சேகரிப்புகள் எல்லாம் எவ்வளவு சிறப்பு பெறுமானம் கொண்டிருக்குமோ தெரியாது.  ஆனால் அன்று இந்தப் புத்தகங்கள் எங்களுடைய சிறார் உலகினை நிறைத்திருந்தன.   காலத்துகளின் புனைவுகளில் காமிக்ஸ் உலகு வெகு பாந்தமாக பொருந்திப் போகிறது.  தன் கதையுலகின் இருண்ட பகுதிகளை அவ்வகை பாத்திரங்கள் கொண்டோ, அது உண்டாக்கித்தரும் அதிநாயக கற்பனைகள் கொண்டோ அவர் கடந்து போகிறார்.  இன்றைக்கு பெரும் பணச்செலவில் உருவாக்கப்படும் பெரும் வணிகப் படங்கள் இவ்வகை அதிநாயக பிம்ப புனைவுலகின் வசீகரத்தின் மீது கட்டமைக்கப்பட்டுத்தானே வெற்றிபெறுகின்றன.  ஆனால் இலக்கிய உலகின் யதார்த்த நெய்தலில் இவற்றை எப்படி பொருத்துவது என்பது காலத்துகளின் தனித்துவமாக வெளிப்படுகின்றது.

ஓர் இடத்தில், வரலாறு என்பது கைவிடப்படும் முயற்சிகளின் மிச்சங்களாகவும் இருக்கலாம் என்கிறார்.  இத்தகைய தெளிவுதானே இலக்கிய படைப்புகளுக்கு அடிநாதம்.   “விஷயம் வேணா வேறவா இருக்கலாம், ஆனா படிக்கறதுங்கறது ஒரே மாதிரியான கிறுக்கு தான்” என்று வெவ்வேறு வாசிப்பு எல்லைகளை இணைத்துப் பார்க்கும் பார்வை கதாசிரியரிடம் வெளிப்படுகிறது.  .  இன்றைய சூழலில் வாசிப்பதை விட எழுதும் கிறுக்கு பலவகையில் முளைத்து எழுந்திருக்கிறது.  அதை விட நடிக்கும் கிறுக்கு, பாடும் கிறுக்கு, கிறுக்குத்தனத்தை கிண்டலடிக்கும் கிறுக்கு என பல கிறுக்குத்தனங்கள்.  

ஒரு காமிக்ஸ் புத்தகத்தைத் தேடிச்செல்லும் கதை சொல்லி, மெல்ல மெல்ல, கணேசன் அண்ணனை தனக்குள் தேடிப் பார்க்கும் செயலாக மாறிப் போகிறது.  இது போன்ற அனுபவத்துளிகளை, கொண்டு வந்து எழுதுவது என்பது எந்தளவிற்கு இலக்கிய பெறுமானம் பெறுகிறது இம்மாதிரியான உருமாற்றம் வாசகரை சென்டடையும்போதுதான் புலனாகிறது.  இன்னொரு தருணத்தில், இப்படி கணேசன் அண்ணனைத் தேடியதைப் பற்றிய தன் புனைவாக்கத்தை ஒரு புனைவாக காலத்துகள் எழுத முடியும். 

ஒருமுறை குன்றத்தூர் கோவிலுக்கு சென்றிருந்தபோது, அங்கே வெளி மண்டபத்தில் நிறைய மலர்களை கொண்டு வந்து குவித்து வைத்திருந்தார்கள்.   அதில் தாமரை மொட்டுக்கள் பல இருந்தன.   நான் ஒரு மொட்டை கையில் வைத்தபடி அதை என்ன செய்வது என ஆராய்ந்து கொண்டிருந்தேன்.  ஒவ்வொரு இதழாக கவனமாக அவிழ்த்தால் அது மலர்ந்த பூவாக விரிந்தது.  அப்போது அங்கே வந்த அந்தக் கோவிலின் கைங்கர்யக்காரர், அந்த மலர்களை வகைப்படுத்தி அடுக்கத் தொடங்கினார்.  தாமரை மொட்டின் அடிப்பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, அதன் முனையைத் தட்டி இப்பக்கமாக  ஓர் அழுத்து அழுத்த அந்த மொட்டு சட்டென மலராக விரித்துக் கொண்டது.  அந்த மொட்டு மலரானதும், அதை அவர் படு இலாவகமாக நிகழ்த்தியதும் எனக்கு ஒரு பெரும் காட்சி அனுபவம் ஆனது.

காலத்துகள் இந்த இரண்டையும் ஒரு சேர தன் படைப்புலகில் நிகழ்த்துகிறார். பயோபிக் சாயலில் அவர் எழுதிய இயர்ஜீரோ நாவல் இப்படியாக பல மொட்டு தருணங்களை தன்னகத்தேக் கொண்டிருக்கின்றது.  அதற்கான மொட்டு முகமும் அந்த நாவலிலே இருக்கிறது. தன்னுடைய வாசகர்களை இயல்பாக அதனருகே இட்டுச் சென்று ஒரே திறப்பில் மலர்கள் நிறைந்த தோட்டமாக தன் படைப்பை மாற்றி விடுகிறார்.

இயர்ஜீரோ எப்படி வளர்ந்தது என இன்னொரு சிறுகதையில் ஒரு தகவலாக வருகிறது.  ஏதோ நினைவோட பகிர்வது போலல்லாமல், அந்த தருணங்களை தொட்டு எழுதும்போதெல்லாம் அவற்றில் அவர் மீண்டும் முங்கி எழுகிறார் என்பது புதுவிதமாக இருக்கிறது.  கதையின் நிகழ்களத்தை இப்படி பல்வேறு பரிமானங்க்ளில் இருந்து வார்த்து எடுப்பது ஒரு நல்ல வாசிப்பனுபவம்.  ஆனால் இதறகு படைப்பாளி ஒரு பஹூ ரூபி போல ஒரே காட்சியில் பல வேடங்களை தாங்கி நிற்கும் கூத்துக் கலைஞன் போல மெனக்கெட வேண்டும். 

பத்தாண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதியிருந்த ‘நாகாஸ்திரம்’ சிறுகதைக்கும் இப்போது அண்மையில் வெளிவந்திருக்கும் ‘புதைமணல்’ சிறுகதைக்கும் ஒரு மெல்லிய நேரிழை பிணைத்திருப்பதைப் பார்க்க முடிகின்றது.  இங்கே இறந்த தாத்தாவின் விளிப்பும் அங்கே ரோஜா மனத்தின் கனமும். ஒன்றாக கதைசொல்லியின் அகத்தை தொடர்ந்து அலைக்கழிக்கின்றன.  மரணத்திற்கான எதிர்பார்ப்பு பல விதமான சொற்றொடர்களின் மேலேறி கனக்க வைக்கின்றன.  அக்கனத்தின் பேரெடையை மெள்ள மெள்ள ஆழப்போழ்ந்து வெளிவருகிறார் கதைசொல்லி.  

‘எப்போவும் போலத்தான்’, ‘கலவி, வன்முறை’ என்ற சிறுகதைகளில் இயல்பாக படர்ந்து வரும் உள்மன விகாரங்களை, காலத்துகள் எவ்வித பூச்சுகளுமன்றி காட்சிப்படுத்துகின்றார்.  அலுவலகத்தில் ‘நான் செய்த ரசம்’ என்று சக ஊழியர்களிடம் பீற்றிக் கொள்வதிலும், அதை அப்படியே மனைவியிடம், அவள் செய்த ரசத்தை நண்பர்கள் பாராட்டியதாக சொல்லியும் ஒரு தர்க்க சமன் செய்து கொள்கிறார்.  இப்போது நமக்கு அக்கதையின் மற்ற சம்பவங்கள் கதைசொல்லியின் புரளித் தராசில் உள்ளவையா அல்லது நேர்மைத் தராசில் உள்ளவையா என புதிராக இருக்கின்றது.  முற்றிலும் புதியவனான ஒருவனை சந்திக்கின்ற பொழுதில், ஏதோ ஒரு சிறிய நுனியைப் பற்றி இழுத்து அவனுடன் எப்போதோ சண்டை போட்டதாக எண்ணிக் கொண்டு அதை விரித்து எடுத்துக் கொண்டு போக, இறுதியில் அது மனைவியுடனான கலவியில் சென்று முடிகிறது.  

‘டைம்டேபிள் போட்டா செக்ஸ் வச்சுக்க முடியும்’ என்கிற ஆற்றாமை கேள்வி “ஒரு பிற்பகல் உரையாடல்’ கதையிலும் வருகிறது.  இங்கே அடுத்த வீட்டுப் பெண்ணுடன்.  ஒரு ஸீ-ஸா விளையாட்டுப் போல,  உரையாடல்கள் மாற்றி மாற்றி நிகழ,  முயக்கத்தின் பின்னரான ஒரு சாகச உணர்வோடோ, அல்லது குற்றவுணர்வோடோ தம் வளைக்கு திரும்பிச் சென்று புதைந்து கொள்ளும் முயல்களென கதை நிறைவடைகிறது.  

மற்றோர் தளத்தில், சில பரிசோதனை முயற்சிகளையும் செய்கிறார்.  எழுத்தாளர், ஒரு தேர்ந்த வாசிப்பாளர் மற்றும் புனைகதைகளைப் பற்றிய கட்டுரையாளராகவும் இருந்தவர் என்பதால், அதன் வீச்சு இந்த பரிசோதனை கதைகளில் நிரம்பியிருக்கின்றது.  

கிரேக்க தொன்மங்களில் அகில்லீஸ் ஓர் அதிநாயகனாக உருவெடுத்தாலும், அவனுடைய குதிகால் அவனுடைய பலவீனமாக அறியப்படுகின்றது.  அது போல இந்திய தொன்மங்களில் சுயோதனன்னு அவனுடைய இடது தொடை.  இக்கதைகளின் ஒரு சுவாரசியம் என்னவென்றால், இந்த நாயகர்களை அளவிலாட்ங்கா பலம் பொருந்தியவர்களாக ஆக்குவது அவர்களுடைய அன்னையரின் விழைவுகள்தான்.  அதுவே அந்த நாயகர்களிடம் ஒரு பலவீனத்தை விட்டு வைக்கின்றது.  இதை ‘அதிநாயகனின் குதிகால்’ சிறுகதையில் கொண்டு வந்து சேர்க்கிறார் காலத்துகள்.  குறைபட்ட ஆங்கிலப் புலமை கொண்டு பாடம் நடத்தும் ஆசிரியரிடமிருந்து தப்பிக்க பறக்கும் மனது,  தான் பிறந்தபோது பாட்டி பெண் குழந்தை என பாட்டி கேள்விப்பட்டது, மாத இறுதி ப்ற்றாக்குறையை சமாளிக்க அம்மா சாதாரணமாகச் சொல்லும் பொய் என மூன்று பகுதிகளாக விரியும் கதை, ஓர் சரட்டில் அனைத்தையும் இழுத்துப் பிணைக்கின்றது.  

ஷெர்லாக் ஹோம்ஸின் தீவிர வாசிப்பின் பின்னணியில் சில குற்றப் புனைவுகளையும் சமைக்கத் தவறுவதில்லை காலத்துகள்.  ஆனால் அதற்கான களம், பின்புலம் என்றெல்லாம் மெனக்கெடாமல், ஒருவித அங்கத நடையில் எழுதி திருப்தியடைந்து கொள்கிறார்.  இடையே, இலக்கிய அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று ஏங்கும் எழுத்தாளனும் இடம்பெறத் தவறுவதில்லை. ஃபோர்ஹேவின் (Jorge Louis Borges)  பாதிப்பில், தன் குறுநாவலில் எழுதும் கனவின் பாதிப்பில், அதிலிருந்து வெளிப்பட்டு ஒரு சிறுகதையை எழுதிவிட்டுப் போகிறார். ஜோசியம் பற்றிய சில அனுபவப்பதிவுகளுடன், கிளி ஜோசியம் பார்க்கும் அனுபவம் ஒன்று ஒரு சிறு புள்ளியில் புனைவாக மாறி நிற்கிறது.

“வாசகனுக்காக காத்திருக்கும் கதைகள்” என்று வேறோர் எழுத்தாளர் (பெயர்: முற்றுப்புள்ளி) எழுதிய கதைகளை தன் பெயரில் வெளியிடத் தொடங்குகிறார் காலத்துகள்.  முற்றுப்புள்ளியின் கதைகள், அவற்றைப் பற்றி ஒரு வாசகனாக காலத்துகள் கொள்ளும் எண்ணங்கள், பிறகு முற்றுப்புள்ளியுடனான அக்கதைகளின் மீதான விவாதங்கள் என புதிய பரிமாணங்களைக் காட்டிச் செல்கின்றன.  புனைவாசிரியரின், ஆல்டர்-ஈகோவாக  புனைவில் வரும் புனைவாசிரியரான முற்றுப்புள்ளியின் அறிமுகக் கதையில் அமெரிக்க எழுத்தாளரான ஃபாஸ்டர் வாலேஸின் கட்டுரை ஒன்றும், புனைவு வாசகர்கள் இருவரின் பின்னூட்டங்களும் இடம்பெறுகின்றன.  ஒரு சாயலில், காலத்துகளுக்கும் முற்றுப்புள்ளிக்கும் இடையே நடக்கும் சுவாரசிய சர்ச்சைகள், கேலி கிண்டல்கள், நாஞ்சிலாரின் கும்பமுனியையும் தவசிப்பிள்ளையையும் நினைவுப் படுத்துகின்றன.  ஆனால் காலத்துகள் அவருக்கே உண்டான சுய பிரக்ஞையுடன் தன்னுடைய புனைவுலகில் மட்டும் சுற்றி வருகிறார்.  

பெயர் உதிர்த்தல்கள்,  இலக்கிய உத்திகள், சுயமுன்னிறுத்தல்கள், அற விழுமியங்கள், ஆன்மிக வெளிப்பாடு, தரிசனங்கள் போன்ற பல கலைச்சொற்களைக் கொண்டு, உள் விளக்கங்க்ளுடன் ஒரு பத்தியை எழுதிவிட்டு, “எழுத்தாளன் தன் எழுத்து பற்றி பேசக் கூடாது, வாசகன் அதலிருந்து என்ன பெற்றுக் கொள்கிறானோ அதுதான் அவனுக்கான கதை -அவரவர் கைமணல்” என்று ஒரு தன்னிலை விளக்கமும் அளிக்கும் இடத்தில், இலக்கிய விரிவுரையாளன் என்கிற மற்றொரு அவதாரமெடுக்கிறார்.  

ஒரு குறுங்கதையில், லிஃப்ட் ஒன்றில் பயணிக்கும் ராஜன் என்பவன், லிஃப்ட் கண்ணாடியில் தெரியும் ஃபோர்ஹெ , முரகாமி போன்றவர்களின் பிம்பங்களின் உலகைக் காண்கிறான்.  சீட்டுக்கட்டு ராணி, வாழைப்பழத்துடன் வரும் சிறுமி என்கிற பின்னவீனத்துவ உருமாறுதல்களுக்கு இடையே, யதார்த்தத்தின் உண்மை நெருப்புப் போல சுட வேண்டும் என்கிற எழுத்து பிரக்ஞை வந்து போகிறது.  கையிலிருக்கும் கொர்த்தசாரின் பிரதி தவறிப் போகிறது.  லிஃப்ட் பயணம் நிறைவுறும்போது ராஜன் வேறு பெயரில் வெளிவருகிறான்.  

காலத்துகளின் விஸ்தீரணம் இப்படியாக அளவிட முடியாத பரப்பளவில் இருக்கின்றது.  ஒரு பித்தேறிய நிலையில் ஒரு புனைவுச் சூழலை முழுமையாக கட்டவிழ்த்துவிடும் அதே தருணத்தில், சுயபிரக்ஞையுடன் அந்த ஓட்டத்திற்கு குறுக்கே அவர் ஓர் ஓடம் விட்டுப் பார்க்கிறார்.  இது இயல்பான கதையோட்டத்தை செழுமைப்படுத்துகிறதா என்றக் கேள்விக்கு, இந்த உத்தி பரந்த வாசிப்பு கொண்டவர்களுக்கு ஓர் சுவாரசியத்தை உண்டாக்குகிறது என பதிலளிக்கலாம்.  

ஒரு மலர் அதன் மலர்ந்த நிலையிலோ, அல்லது மொக்கு தருணத்திலோ நீண்ட நேரம் காணப்படும்.  அந்த மொக்குகள் கட்டவிழ்வது ஒரு அற்புத தருணத்தில்தான்.  சொல்லப் போனால் நம் மனம் கட்டவிழும் அந்த நொடியில், அவை தம்மை கண்ணாடிகளாக்கி நம்மை நமக்கு பிரதிபலிக்கின்றன.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.