மூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல்

தன்னுடைய ஜெஃப்னா பேக்கரி, கலாதீபம் லொட்ஜ், மூத்த அகதி, ஆக்காண்டி, இந்நாவல்களுக்காக சமூகஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டவர் வாசு முருகவேல். இதில் மூத்த அகதி நாவல், ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் இலக்கிய விருது 2021இல் பரிசுக்குத் தேர்வாகி கவனத்தை ஈர்த்தது. அந்நாவலின் கலை வெற்றி அது நேரடியாக வாழ்க்கையைத் தன் ஊற்றுமுகமாக்க் கொண்டதுதான் என எழுத்தாளர் ஜெயமோகனால் பாராட்டப்பட்டது. தொடர்ந்து, இவருடைய ‘புத்திரன்’ வெளியானது.   

ஈழத்தைப் பிரிந்து தமிழகத்தில் வாழும் தமிழரின் மனவோட்டம் மூத்த அகதி நாவல் முழுவதும் நுட்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர் ஒருவரின் சாம்பலைத் திருவான்மியூர் கடற்கரையில் கரைக்கும்போது வெளிப்படும் வசனம் அந்த சித்தரிப்புகளின் உச்சம். ‘தமிழன்ர கடல்’ ஒரு வரியில் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்திய வார்த்தைகள். கரைக்கப்படும் இடம் மொழியால் தம்மை இணைப்பதை நினைத்துப் பெருமிதப்படுவதுபோலத் தோன்றினாலும், நாவல் முழுக்க வெளிக்காட்டும் அகதியின் வலி, இந்த வரிகளிலும் காயத்துக்கு மருந்திடும் ஆறுதலாக வெளிப்படுகிறது.

சென்னையில் அடுக்குமாடிக் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, மெல்ல அதை விருந்தினர் விடுதியாக மாற்றிய விளக்கத்திலிருந்து கதை துவங்குகிறது. அந்த விடுதியில் தங்கிச் செல்வோர் அனைவரும் வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள். இந்த விளக்கத்தினிடையே வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களால் நிறைந்து காணப்படும் அந்த விடுதியில், அவர்களில் இலங்கைத் தமிழர்களும் இருப்பார்கள் என வார்த்தைகளில் சிறிய வேறுபாட்டைக் காட்டிக் கடக்கிறார். 

விருந்தினர் விடுதியிலிருந்து கிடைக்கும் வாடகையும், ‘பொலிரோ’ வண்டியிலிருந்து கிடைக்கும் வருமானத்திலும் வாழ்ந்து வரும் பாலன், மூத்த அகதியாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், கதை அவரை நடுவணாக வைத்து நகரவில்லை. துவாரகன், ஈசன், ரூபன் என ஈழத் தமிழர்களைச் சுற்றிக் கதை நகர்கிறது. குறிப்பாக, நோயுற்ற வயதான தந்தை, தாய் இருவருடன் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வீடு மாற்ற இடந்தேடி அலையும் வாசனையும் சுற்றி நகர்கிறது. 

இயக்கத்தில் இருந்தவர்களின் கதை, புலிகளிடம் அடிபட்ட கதை, பிரெஞ்சு போலீசிடம் பிடிபட்ட கதை, போலி நுழைமதி (விசா) ஏற்பாட்டில் இந்தியக் குடியேற்ற அதிகாரிகளிடம் பிடிபட்டு விசாரிக்கப்படும் காட்சி எனச் சென்னையில் இருக்கும் ஈழத்தமிழர்களின் பல பிரச்சனைகளை மூத்த அகதி பேசுகிறது.

நாவல் முழுதும் அழுகுரலாக ஒலிக்கவில்லை. சென்னைக்கு வரும் ஈழத் தமிழர்களின் இன்னொரு பக்கத்தையும் காட்டுகிறது. போத்தீசில் கற்றைக்கற்றையாக ‘டொலர்’களை மாற்றி ஆயிரக்கணக்கில் துணிகளை வாங்கிக் குவிப்பதும், வந்ததும் வராததுமாக விஜயைப் பார்த்தால்தால் ‘றொராண்ட்டோ’ திரும்புவேன் என அடம்பிடிப்பதும், எப்படியோ விஜயைத் தொலைவிலிருந்து பார்ப்பதும், நட்சத்திர விருந்துடன் திருமணப் பதிவுகளும், பகுதி அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக நிற்பதுமாக மகிழ்ச்சியான பக்கங்களைப் பதிவு செய்கிறது.

அகதியாக வாழ்ந்தாலும் அவர்களும் இளைஞர்கள்தான், நிலையாமை அவர்களைத் துரத்தியடித்தாலும் அவர்கள் மனதிலும் காதலின் நிழல் போல ஏதாவது தோன்றி மறையத்தான் செய்யும். பக்கத்து வீட்டில் வசிக்கும் மாணவியுடன் அவனையறியாமல் அவனுக்கு நெருக்கம் உண்டாகிறது. அவனுடைய நிலையாமையோ என்னவோ சில நேரங்களில் அது காதலா என்னும் குழப்பத்துடனே அவன் மனநிலையை வாசு முருகவேல் விவரித்துள்ளார். அவளைக் காண்பதற்காக அவள் வீட்டை அவன் நோட்டமிடும் நேரத்தில் அவள் அங்கு இல்லாமற்போக, இன்னொரு திசையை அவன் நோக்கி அங்கு வழக்கமாகப் பாத்திரம் துலக்கும் பெண்மணியாவது தென்படுகிறாளா எனப் பார்க்கும் நுண்ணிய குறும்பை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். 

திடீரென ஒருநாளில் ஈழத் தமிழர்கள் அதிகமாக ஒரு சாலையோர இரவு உணவுக் கடையில் கூடுகிறார்கள். வாக்குவாதத்தில் பிரச்சனை உண்டாக, சாதாரண உடையில் வந்து இவர்களை நோட்டமிடும் காவலர்கள் அடித்து வெளுத்துக் கூட்டத்தைக் கலைக்கிறார்கள். சில நாள்களில் விருப்பப்பட்டதைக் காசு கொடுத்தும் உண்ண முடியாத அளவில்தான் அவர்கள் வாழ்க்கை தொடர்கிறது. 

முகாமிலிருந்து வெளியே வந்து அன்றைய சில்லறை வியாபாரத்தை முடித்துவிட்டு மீண்டும் முகாமிற்குத் திரும்பும் பாத்திரம் ஒன்று நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்பவன் எங்கும் பிழைக்கிறான் என நிரூபிப்பதோடு, முகாம்களின் தளர்வுகளையும் குறிப்பால் உணர்த்துகிறது.

நாவலின் நடுவணாக இருக்கும் வாசனின் வாழ்க்கை அப்பாவின் மருத்துவச் செலவுகளுக்கும் வீட்டு வாடகைக்கும் வெளிநாட்டில் வசிக்கும் அண்ணனின் தயவை எதிர்பார்க்கும் நிலைமை. உதவி செய்வதாலேயே அண்ணனின் குரல் கட்டளையாகவே எப்போதும் ஒலிப்பதும், வாசன் எதுவும் பேச முற்பட்டாலோ அல்லது சரியெனச் சொல்ல முற்பட்டாலோ ‘சொல்வதைச் செய்’ என அதிகாரத்தில் தொலைபேசியில் குரல் ஒலிப்பதும் கண் முன் நிகழும் உண்மை. பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பித் தன் குடும்பத்தை வாழவைப்போர், பீடத்திலிருக்கும் மனநிலையில் பேசுவது தமிழ் நாட்டில் பரவலாகக் காணக்கிடைக்கும். ஈழத் தமிழர்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல, மேலும் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு வெளிநாட்டுப் பணம்தான் என்னும் நிலையில், அந்த அதிகாரத் தொனியை ஏற்க மனம் பழகிக்கொள்கிறது.

வாசனின் தந்தை மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில், பெரியவர் இந்த வீட்டிலிருந்து இறந்தால் பிறகு வீட்டுக்கு வாடகைக்கு ஆள்கள் வரத் தயங்குவார்கள் என்னும் யதார்த்தத்தை வீட்டின் சொந்தக்காரர் தெரியப்படுத்த வாடகைக்கு இருப்பவரின் கையறு நிலையை நாவலில் பதிவு செய்கிறார்.

இத்தனை அவதிகளுக்கு நடுவிலும் தோன்றிய அந்தக் காதல் போன்ற ஒன்றைக் கொத்திக் கிளறி,

‘உனக்கு வர்சா லிப் டு லிப் குடுத்திருக்கிறாளா?’ எனக் கேட்கும் நட்பு வட்டம் வாசனைச் சூழ்ந்திருக்கிறது. 

அந்தப் பெண்ணோ உரையாடலில் சாதாரணமாக,

‘அவன் பெயர் நகுலனா? லூசு போல இருக்கான். ஊருக்குப் போறேன் ஏதாவது கிஃப்ட் தருவியான்னு கேட்டான்பா. என்ன வேணும்னு கேட்டேன். கிஸ் கேட்டான் அதான் குடுத்தேன். ஷாக் ஆகிட்டான் பய’ எனச் சொல்கிறது.

எல்லாவற்றையும் வரிவரியாக்க் காட்சிப்படுத்திய வாசு முருகவேல், விமானநிலைய வழியனுப்பல் நெகிழ்ச்சிகளையும் விட்டுவைக்கவில்லை. அதில், பெண் கணவனைப் பிரியும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்து கண்ணீர் வடிப்பது உண்மையிலேயே பிரிவால்தானா அல்லது தனக்கும் விரைவில் நுழைமதி (விசா) கிடைத்துத் தானும் வெளிநாட்டுக்குச் செல்லவேண்டும் என்பதை முன்னிறுத்தவா என்னும் வினாவை அமைதியாக முன்வைக்கிறது. வெளிப்படையாகப் பேசத் தயங்கும் யதார்த்தங்களை இப்படிச் சின்னச்சின்னக் காட்சியமைப்புகளில் சொல்லிச் சென்றது நாவலின் சிறப்பு. 

வாசனின் தந்தை இறந்த பின் மெதுவாகக் கதை முடிவை நோக்கி நகர்கிறது. தந்தை இறந்த பின் காலியாகக் கிடக்கும் இரும்புக் கட்டில், தந்தைக்காக செய்தித்தாள் வாங்கும் வழக்கம் இருந்தாலும் அவர் இறப்புக்குப் பின்னும் செய்தித்தாள் வாங்கச் சொல்லும் தாய், எங்கும் சூழும் வெறுமை என ஒவ்வொருவரும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

பாலனுடைய விடுதிக்கு வரும் ஆள்கள் குறைகிறார்கள். வாடகை வருமானம் நின்றதால் மூன்று தளத்தையும் வாடகைக்கு எடுத்திருந்த பாலன் ஒருதளத்தை மட்டும் வாடகைக்குக் கேட்கிறார். வீட்டுக்காரர் எடுத்தால் மூன்று தளமும் இல்லையே வீட்டைக் காலிசெய்யவேண்டும் என்கிறார்.

முத்தாய்ப்பாக ஒரு கொலை நிகழ்கிறது. சென்னை விருகம்பாக்கம், வடபழனி, கே.கே. நகர் பகுதிகளை உலுக்கும் கொலை. 

வாசன் எங்கோ இலக்கின்றி செல்லத் துடிக்கிறான். நடக்கிறான், நடக்கிறான், கடைசியில் கால்களைப் பார்க்கிறான், அவன் கால்களில் வீட்டுக்குச் செல்லும் வரையில் திறன் இருப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. நாவலின் துவக்கத்தில் சொன்ன ‘இலங்கை – ஈழம்’ வார்த்தைகளுடன் வாசனும் சுவரொட்டிகளில் திருத்த்த்தை நினைக்கிறான். ‘இலங்கை இனப்படுகொலைக்கு நீதி கேட்போம்’ என எழுதப்பட்ட வாசகத்தை, ‘ஈழ இனப்படுகொலைக்கு…’ என மாற்றி எழுதினால் சரியாக இருக்கும் என நினைத்துக்கொள்கிறான்.  

அகதி வாழ்க்கை என்பது ஒருவன் மீது அவன் விருப்பமின்றி யாராலோ குத்தப்பட்ட முத்திரை. அதை நெற்றியில் ஒட்டிக்கொண்டு தன்னுடைய மண், கலாசாரம், சுற்றம், பணம் அனைத்தையும் விட்டிவிட்டு ஏதிலியாக இன்னொரு நாட்டில் குடியேறி ஒவ்வொரு அடியை முன்னே வைக்கும்போதும் காவல்துறையினருக்கும், குடியேற்ற அதிகாரிகளுக்குமாக மாறிமாறித் தன் நிலையை நிரூபித்து வாழும் வாழ்க்கை கொடுமையானது. பணத்துக்காக இன்னொருவரின் தவியை எதிர்பார்த்து, குடியேறிய நாட்டில் தன்னை நிரூபித்து வாழ்பவனின் வலியை வெளியிலிருந்து கேட்டுப் புரிந்துகொள்வதற்கும், அந்த வலிகளையே வாழ்க்கையாகக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு.

சென்னையில் விருகம்பாக்கம் தொடங்கி, வளசரவாக்கம், கலைஞர் கருணாநிதி நகர் வரையில் ஈழத்தமிழர்கள் ஆங்காங்கே குடியேறியதை எண்பதுகளில் இந்தப் பகுதியில் வசித்த சென்னை மக்கள் அறிவர். அவர்களுடைய வாழ்க்கை, போராட்டங்கள், அலைக்கழிப்புகள், கனவுகள், புலம்பெயர்வுகள் போன்றவற்றை, மூத்த அகதி நாவலில் அதே கே.கே. நகர் விருகம்பாக்கம் பகுதிகளைக் கதைக்களனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் மூத்த அகதி சிறப்பான புனைவாகவும், மண்ணைப் பிரிந்து நிற்பவர்களின் குரலாகவும் நிற்கிறது.  

நாவலாசிரியர் வாசு முருகவேல், ஈழத்தின் யாழ் – நயினாதீவில் பிறந்து, தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.