மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று

2001   மங்களூர்

கொச்சி நெடும்பாஸ்ஸேரி விமான நிலையம் நீங்கி  மங்களூர் செல்லும் விமானம் குறிப்பிட்ட நேரமான காலை ஆறு மணிக்குப் புறப்படத் தயாராக இருந்தது. நாலு மணி நேரம் எடுக்கும் நீண்ட பயணம் இது. விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னவோ அந்தச் சிறு விமானத்திலும் வெற்று இருக்கைகள் நிறைய இருந்தன. 

ஜெயம்மா மங்களூருக்கு வரச்சொல்லிக் கையோடு அழைத்துப் போகும் வசந்தியும் சங்கரனும் தவிர தெரிசாவும் அவர்களோடு இருந்தாள். தெரிசாவும் கூட இருப்பது சங்கரனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் அனுகூலமாக இருக்கும் என்று ஜெயம்மா கருதியது தவிர இன்னும் ஒரு திடமான காரணமும் இருந்தது. 

இத்தனை வருடம் மேற்குக் கடற்கரையில் ஆலப்புழை – அம்பலப்புழையில் இருந்தாலும் தெரிசா மங்கலாபுரம் என்ற மங்களூர் போனதே இல்லை என்பது அது. 

ஜெயம்மாவிடம் தெரிசா அவள் பெயருக்கு முன்னொட்டாக வரும் பிடார் பற்றி விசாரித்தபோது பலபேர் அதை பிடாரி என்று சொல்கிறார்கள் என்று சந்தோஷத்தோடு குறிப்பிட்டாள். பிறகு, “கர்னாடகத்தின் மலைப் பிரதேசமாக மகாராஷ்டிரத்துக்கும் தெலுங்கானாவுக்கும் அருகில் இருக்கும் எல்லைப்புற மாவட்டத் தலைநகர் பிடார்”  என்றாள் ஜெயம்மா. 

வசந்தி கையை இறுக்கமாகப் பிடித்தபடி சங்கரன் இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்திருந்தார். சீட் பெல்ட்டைப் போட்டுக்கொள்ள முடியாது என்று குழந்தை மாதிரி பிடிவாதம். விமானத்துக்குள் ஓட வேண்டியிருந்தது என்றால் இப்படிக் கட்டிப் போட்டபின் செய்ய முடியாது என்பது அவர் வாதம். 

‘உயிர் முக்கியமில்லியா’ என்று தெரிசாவிடம் யாரோ மூன்றாம் மனுஷியிடம் விசாரிப்பது போல் கேட்டபோது அவர் தன்னைத் தவிர மற்ற எல்லோரையும், எல்லாவற்றையும் மறந்து விட்டிருந்தார் என்று தோன்றியது. 

அவ்வப்போது இப்படி தன்னை இழந்து விடுகிறார் என்று வசந்தி தெரிசாவிடமும் ஜெயம்மாளிடமும் சொன்னாள். 

“மூச்சா வந்தா வாயைத் திறந்து சொல்லுங்கோ. இப்போ போய்ட்டு வந்துடறேளா?” 

“மாட்டேன், வரலே” என்று சீட்டில் உட்கார்ந்து முன் சீட் முதுகில் செருகி இருந்த நேற்றைய பத்திரிகையைப் பிரித்தார் சங்கரன். “ஜிலேபி ஜிலேபியா போட்டிருக்கு” என்று அந்த மலையாளப் பத்திரிகையைத் திருப்பி வைத்தார் உடனே. தெரிசாவும் வசந்தியும் சிரிக்க, அட என் சமத்துக் கொடமே என்றாள் ஜெயம்மா.

“ஜெயம்மா, என் முதல் ப்ளேன் பிரயாணத்துக்கு டெல்லி சப்தர்ஜங்  ஏர்போர்டுலே நீங்க தான் கொண்டு வந்து விட்டுட்டுப் போனேள். ஓர்மையுண்டோ?” என்று விசாரித்தாள்  வசந்தி.

”ஓ, நன்னாவே இருக்கு. நேற்றைக்கு, கிட்டத்தட்ட முப்பத்தைஞ்சு வருஷத்துக்கு அப்புறம் அன்னிக்கு உன் கூடவும் சங்கரன் கூடவும் கார்லே சப்தர்ஜங்குக்கு லிஃப்ட் கேட்டு சவாரி செஞ்ச ஒருத்தரை பார்த்தேன். திலீப் ராவ்ஜியோட நூற்றுப்பத்து வயசு அப்பா” என்றாள் ஜெயம்மா.   

”ஆமா, நானும் அதேபடி வருஷம் முப்பத்தஞ்சு போய்த்தான் அவரை நேற்றைக்கு பிஷாரடி வைத்தியர் வீட்டிலே வச்சுப் பார்த்தேன். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு அவரை அங்கே பார்த்ததுமே யோசிச்சேன். பிடி கிட்டலே. அவர் கிட்டேயே கேட்டேன், எங்கேயோ பார்த்திருக்கோம் மாமான்னு. டக்குனு சொல்லிட்டார். ஆமா, எங்க கூட ப்ளேன்லே வந்துட்டு நாக்பூர்லே இறங்கிக் காணாமல் போய்ட்டார் ரொம்ப நாளைக்கு ரொம்ப நாள் முந்தி”  என்றாள் வசந்தி. வெகு சகஜமாக, முந்தாநாள் நடந்தமாதிரி சொன்னாள் அவள்.

”என்ன ஆச்சுன்னா, அவரை சுட்டுக் கொல்றதுக்கு கூட்டிப் போறபோது மூத்திரம் போய்” என்று ஆரம்பித்த சங்கரன் எழுந்து நின்றார். பாத்ரூம் போகணும் என்றார். அவரை தாங்கிப் பிடித்தபடி விமான டாய்லெட்டுக்கு நடத்திக் கூட்டிப் போனாள் வசந்தி. 

“கதவை மூடலே. நானும் இருக்கேன். பயப்படாமல் போங்கோ. யாரும் துப்பாக்கி வச்சுண்டு நிற்கலே வாசல்லே” என்றாள் வசந்தி, டாய்லெட் கதவைத் திறந்தபடிக்கு வைத்து, சங்கரனை கமோடில் இருத்தியபடி. 

இவர்கள் பத்து நிமிடம் வரவில்லையே என்று தெரிசா இருக்கைகளின் ஊடாக நடந்து கழிவறை வாசலுக்கு வந்தாள். 

“தெரிசா, அடல்ட் டயாபர்  போட்டுவிட்டு பழக்கம் இருக்கா?” வசந்தி கேட்டாள். ”தெரிஞ்சுக்கிட்டா போச்சு” என்று வசந்தி சங்கரனுக்கு டயாபர் போட உதவி செய்தாள் அவள். ”கூல், இனி நான் பார்த்துக்கறேன்” என்றாள். 

இரண்டு அறுபது வயசுக்காரிகள் அதே வயசு வரம்பில் ஒரு ஆணுக்கு டாய்லெட் போக இப்படி விழுந்து விழுந்து உதவி செய்வதை ஏர் ஹோஸ்டஸ்களும் ப்ளைட் பர்ஸர்களும் விநோதமாகப் பார்க்க, அவர்களிடம் சுருக்கமாக முன்கதை சொன்னாள் தெரிசா. அதற்கப்புறம் அவர்கள் பார்வையே மாறிப் போனது. 

மிட்டாயும், காதில் அடைக்கப் பஞ்சும், விமானம் ரன்வேயில் ஓடி வந்து உயரப் பறக்கும் முன் உபசரிப்பாகக் கொடுத்துக்கொண்டு வந்த ஹோஸ்டஸ் சங்கரன் பக்கம் வந்ததும் ”டாஃபி சார்” என்று கேட்டு பதிலை எதிர்பார்க்காமல் நாலைந்து மிட்டாய்களை அவர் கையில் கொடுத்து நகர்ந்தாள். குட்டிக் குழந்தைகளுக்கு மிட்டாய் உபசாரம் செய்வதுபோல் இருந்தது அது. சங்கரனும் சின்னப் பையனாக அந்த மிட்டாய்களை சட்டைப் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டார். 

சாப்பாடு வைத்த ட்ராலிகளைத் தள்ளிக்கொண்டு ஏர் ஹோஸ்டஸ்கள் இருபுற இருக்கைகளுக்கு நடுவே நடந்த போது, சங்கரன் சிரித்துக் கொண்டார். எதற்காக என்று வசந்தி கேட்க நினைத்து வேண்டாம் என்று வைத்தாள். 

“முன் இருக்கை முதுகில் உங்கள் உணவு வைக்க பலகை மடித்து வைக்கப்பட்டுள்ளது. அதைத் தயவு செய்து  தாழ்ப்பாள் திறந்து தட்டுகள் வைக்கும்படிக்கு படிந்து வைக்கவும்”. அறிவிப்பு வந்தபோது சங்கரன் நித்திரை போயிருந்தார். 

“பரவாயில்லே வசந்தி இன்னும் ஒரு மணி நேரம் தான், நான் பிஸ்கட் எடுத்துண்டு வந்திருக்கேன். ஆத்திலே போய் சாப்பிட்டுக்கட்டும்” என்று ஜெயம்மா சொல்ல, வசந்தி நானும் அப்புறம் சாப்பிட்டுக்கறேன் என்றாள்.

 ஜெயம்மா தெரிசாவைப் பார்த்தாள். வேண்டாம் என்று பார்வையால் சுட்டினாள் தெரிசா. ”நான் சாப்பிடப்போறேன்” என்றாள் ஜெயம்மா. சங்கரன் கண் விழித்தார். கை வைத்துத் தடுத்தார் யாரை என்று இல்லாமல். 

“ஜெயம்மா, நீ மட்டும் ஏன் சாப்பிடணும்? இது கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் போகலாம். என் அனுபவத்திலே இருந்து சொல்றேன். போய் சாப்பிட்டுக்குவோம்”. ஹோஸ்டஸிடம் வேண்டாம் என்று ஜெயம்மாவும் திருப்பிக் கொடுத்ததும் தான் சங்கரன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

மங்களூர் விமான நிலையத்தில் கொச்சி – மங்களூர் விமானம் இறங்கும்போது இருகை கொண்டு இரு செவி பொத்தி, சீட்டில் சுருண்டு கிடந்தார் சங்கரன். இட்ஸ் ஆல்ரைட் என்று தெரிசா திரும்பத் திரும்பச் சொல்லியபடி அவர் தோளைத் தடவிக் கொண்டிருந்தாள். 

சங்கரன் அடுத்த சீட் பக்கம் சரிந்து தெரிசாவின் உதடுகளில் முத்தம் கொடுத்தார். அவளுக்கு எல்லா விதத்திலும் கூச்சத்தைக் கொடுத்த முத்தம் அது. வசந்தி தலை குனிந்து பார்த்தபடி இருந்தாள். பொது இடத்தில் கொடுத்த முத்தம், அறுபத்தைந்து வயசில் வாலிபம் திரும்பியது போல் கொடுத்தது, மனைவி பார்க்க  சிநேகிதிக்குக் கொடுக்கப்பட்டது. ஜெயம்மாவுக்கு முன்னால் சிருங்காரம் காட்டிய நாகரிகமின்மை எல்லாம் தெரிசாவுக்கும் வசந்திக்கும் சங்கடத்தை உண்டாக்கியிருக்க வேண்டும்.

”ஜெயம்மா, ஏர் போர்ட்லே இருந்து வீடு ரொம்ப தூரம் இருக்குமா”? 

வசந்தி சூழலை மாற்றக் கேட்டாள். 

“வசு, இறங்கி அரைமணி நேரத்தில் பேக்கேஜ் வாங்கிண்டு கார்லே உக்காந்து பாஜ்பே மெயின் ரோடுலே போனா, பத்தே நிமிஷத்திலே பேஜாய் தான். அதான் நம்ம பிரதேசத்துக்கு பேர். பேஜார் இல்லே, பேஜாய்” என்றாள் ஜெயம்மா. விமானம் ஓடி இறங்கி, வேகம் குறைந்து ஊர்ந்து, பின் நின்றது.

”மங்களூர்லே என்ன பார்க்கணும்?” சங்கரன்  மங்களூர் பேஜாய் நகர்ப்பகுதியில் ஜெயம்மாவின் அபார்ட்மெண்ட்க்கு காரில் போகும்போது கேட்டார். 

“ஜெயம்மாவை பார்க்க வந்திருக்கோம். பார்த்துட்டு திரும்பிடலாம்” என்றாள் வசந்தி. தெரிசாவைப் பார்த்து உடனே, “அஃப் கோர்ஸ் அக்கம்பக்கத்துலே பீச், கோவில்னு நாலைஞ்சு ஸ்பாட் பார்த்துட்டு” என்று கொஞ்சம் போல் மாற்றினாள்.

 ஜெயம்மா, ”இவ்வளவு தூரம் வந்து இந்த ஜெயம்மாவோட கிழட்டு மூஞ்சியைப் பார்த்துண்டு உக்காந்துட்டு, மறுபடி ப்ளேன் பண்ணிப் போகப் போறியா?” என்று கேட்க தெரசா சிரித்துவிட்டாள். 

“அது என்ன ப்ளேன் பண்றது?” தெரிசா கேட்டாள்.

ஜெயம்மாவும் சிரித்தாள். ”எங்க தமிழ்லே வண்டி பண்ணுவோம்னா வண்டியிலே போக ஏற்பாடு செய்வோம், பல் கழுவுவோம் என்னாக்க பல் ப்ரஷ் பண்ணுவோம், தலைய்லே எண்ணெ துடைப்போம் அப்படீன்னா தலையிலே எண்ணெய் தடவுவோம், ஏன் கேக்கறே போ!” என்று தெரசாவைத் தோளில் அணைத்து, வசந்தி மேல் காட்டிய அதே நேசத்தை தெரிசா மேலும் காட்டினாள். 

“தெரிசா, இங்கே நானே உங்க மூணு பேரையும் கூட்டிப் போக உத்தேசிச்சிருந்தது கத்ரி மஞ்சுநாத் கோவிலும் தன்னீர்பவி பீச்சும்.  எலிட் பீச் அது. பாபுலர் பீச்சுன்னா பனம்பூர் பீச் இருக்கவே இருக்கு. ரெண்டுக்கும் கூட போய்ட்டு வந்துடலாம். நம்ம வீட்டுலே இருந்து பக்கம் தான். மஞ்சுநாத் கோவில் ஆயிரம் வருஷம் முந்தி தஞ்சாவூர் கோவில் மாதிரி ரொம்பப் பழைய,   அற்புதமான கோவில்”. 

“ஷாப்பிங் எங்கே போகலாம்? என்ன வாங்கலாம்?” வசந்தி கேட்டாள். 

“ட்ரை ப்ரூட்ஸ், முக்கியமாக முந்திரிப் பருப்பு, ஏலம், பட்டை லவங்கம், மிளகு, டப்பாவிலே அடைச்ச மீன். சரி சாப்பிடலேன்னா வேண்டாம், மெல்லிசா பதினாலு காரட் தங்க நகை எல்லாம் வாங்கலாம்.. நாள் முழுக்க ஷாப்பிங் போகலாம். அவ்வளவு அங்காடி உண்டு” என்றாள் ஜெயம்மா. 

வீட்டு வாசலில் கார் நின்றது. காவல் சிறந்த gated community. பல மாடிக் குடியிருப்பு. நாகரிகமும் வளமும் தெரியும் தனவந்தர் சூழல். எல்லாம் மூணு பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் தானா என்று கேட்டாள் வசந்தி. ஆமா என்று தலையசைத்தாள் ஜெயம்மா. 

”அவரும் போயாச்சு. எனக்கு தனியா இருக்க எதுக்கு மூணு பெட்ரூம்? ஏதோ, வாங்கியாச்சு. இருக்கட்டும்னு விட்டுட்டேன்” ஜெயம்மா குரல் கம்ம நிற்க வசந்தி அவளை அணைத்துக் கொண்டாள். 

கல்லூரியில் இங்க்லீஷ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று  ஜெயம்மா கணவரும், யுனைடட் நியூஸ் பீரோவின் தலைமைச் செயல் இயக்குநராக இருந்து ஜெயம்மாவும் ஓய்வு பெற்று இங்கே குடித்தனம் வந்தது ஐந்து வருடம் முன்பு. 

வந்ததற்கு அடுத்த வருடம் ஜெயகர் – ஜெயம்மாவின் கணவர் – ஹார்ட் அட்டாக்கில் காலமானார். 

சங்கரன் வந்து பார்த்து விட்டு உடனே தில்லி திரும்பினார் அப்போது. வசந்திக்கு கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகியிருந்த நேரம் அது.

ஹாலில் ப்ரேம் போட்டு வைத்திருந்த ஜெயகர்   புகைப்படத்துக்கு முன் ஒரு நொடி நின்றார் சங்கரன்.  ”என்ன மாதிரி English pronunciation! Bye Bye Professor Jayakar, the loving husband of my best friend, Jayamma” 

“சங்கரா, சங்கரா…” 

ஜெயம்மா அழுது வசந்தி பார்த்ததில்லை. இப்போது பார்த்தாள்.

”சங்கரா, ஆமாடா. சூரஜ் ஜெயகர் was an exceptional guy. அவனோட உச்சரிப்பு இங்க்லீஷ்காரனுக்குக்கூட வராது. ஞாபகம் வச்சிண்டிருக்கியா? தேங்க்ஸ்டா”

சங்கரன் ”நாங்க எல்லாம் வரப்போறோம்னு எல்லா சமையலும் செஞ்சு வச்சிருக்கே போல இருக்கே. பேஷ்” என்று ஜெயம்மாவிடம் சொன்னார். 

“இதானே வேணாங்கறது, நான் சமையல் டிபார்ட்மெண்ட்லே வீக் அப்படீன்னு உனக்குத் தெரியும். தெரிஞ்சுண்டா இத்தனையும் நான் பண்ணி வச்சிருப்பேன்னு நினைக்கறே?” என்று அவனுடைய நகைச்சுவை தொனியிலேயே விசாரித்தாள். 

புளியஞ்சாதம், தேங்காய்ச் சேவை, எலுமிச்சம்பழச் சாதம், இடியாப்பம், குழிப் பணியாரம், மசாலா தோசை, தயிர்சாதம், ஐஸ்கிரீம், ஃப்ரூட் சாலட் என்று இத்தனையும் செய்ய ஜெயம்மா ஒரு நாள் முழுக்க சிரமப்பட்டிருந்தாலும் முடிந்திருக்காது. 

“சமையலுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன் சங்கரா. அந்த குக் அவன் கூடவே இன்னொருத்தரையும் கூட்டி வந்து, ரெண்டு பேரா சமைச்சு எறக்கினது எல்லாம்” என்றாள் ஜெயம்மா.

ஜெயம்மா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவள் தட்டில் இருந்து ஜவ்வரிசி வடகத்தை எடுத்துக் கடித்தார் சங்கரன். 

“பாஷாண்டி, எச்சில் பத்தே கிடையாதா?” என்று அவர் இடது கையில் எடுத்த இன்னொரு வடகத்தைப் பிடுங்கிப் போட்டாள் ஜெயம்மா. 

“முப்பது வருஷம் முந்தி யு என் ஐ காண்டீன்லே அட்சரம் தவறாமல் நமக்கு இதான் பேச்சாக இருந்தது” என்றார் சங்கரன் சிரித்தபடி. 

ஜெயம்மா ஏதோ மந்திரப் பிரம்பைச் சுழற்றி சங்கரனை எல்லா விதத்திலும் பழைய சங்கரனாக்கியதைப் போல் வசந்தி சந்தோஷப்பட்டாள்.  

தெரிசாவுக்கு இந்த நாடகத்தில் தான் நடிகையா பார்வையாளரா என்று புலப்படவில்லை. எனினும் அவளோடு இருக்கும்போது சங்கரன்   இயல்பு நிலைக்கு   திரும்புவது ஆசுவாசமானதாக இருந்தது. 

”டைனிங் டேபிள் நிறைந்து ரொம்ப நாளாச்சு” என்றாள் ஜெயம்மா, மலர்ந்த முகத்துடன் எல்லோருக்கும் பரிமாறியபடி.

”உச்ச பக்‌ஷணம் கழிஞ்ஞு உறக்கம். பின்னெ கறங்ஙி நடன்னு காட்சி காணான் போவுக” என்று அபூர்வமாக மலையாளத்தில் சொன்னாள் தெரசா. 

“குட்டி மிண்டறது” என்றார் சங்கரனும் அதே விளையாட்டுத் தொனியில். 

“தன்னீர்பவி பீச்சுக்கு நேரே கார்லே போயிடலாம். இல்லே, சுல்தான் பேட்டரி வரை கார்லே போய் அங்கே இருந்து படகுலே குட்டியூண்டு கடல் பயணம் போகலாம். அங்கே”. 

ஜெயம்மா முடிப்பதற்குள் ”படகு எல்லாம் வேணாம். கார்லே போகறோம்,  கார்லே வந்துடறோம்” என்று சங்கரன் பிடிவாதமாகச் சொல்லவே, காரில் மாலை நாலரை மணிக்கு தன்னிர்பவி கடற்கரைக்கு புறப்பட்டார்கள்.   

மாலை ஐந்து மணிக்கு தன்னிர்பவி கடற்கரை மணலில் கையளைந்தபடி வசந்தியிடமும் தெரிசாவிடமும் முப்பத்தைந்து வருடம் முன் தான் அரசூரில் இருந்து புதுடெல்லி வந்த வைபவத்தை,  சிறு தகவல்கள் கூட விட்டுப் போகாமல் சொல்லிக்கொண்டிருந்தார் சங்கரன். 

வசந்தி கண்ணில் நீர் நிறைந்து போனது. வழக்கமான சங்கரன் இப்போது பேசிக் கொண்டிருப்பது. மங்களூர் மண்ணின் மகத்துவமா, பழைய சிநேகிதி ஜெயம்மாவை மறுபடி சந்தித்த சந்தோஷம் குணமாக்கியதா, சங்கரன் விமானக் கடத்தலில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். 

தெரிசா வசந்தியின் கையைப் பற்றியபடி சங்கரனையே பார்த்தபடி இருந்தாள்.

”ஐ.ஏ.எஸ் கோச்சிங் போனோமே ஞாபகம் இருக்கா?” ஜெயம்மா புன்சிரிப்போடு கேட்டாள் சங்கரனை. ”நீயும் அந்த சோழ பிரம்மஹத்தி தைனிக் ஜாக்ரன் எடிட்டர் குப்தாவும் க்ளாஸுக்கு முதல்லே வந்து பேக்கு பேக்குன்னு உட்கார்ந்திருந்தீங்க. என்ன வயசு இருபத்துமூணு இருக்கும். எனக்கும் அவ்வளவுதான். ஆனா பாரு பகவான் என் ஆகிருதியை, உங்க ரெண்டு பேரை ஒண்ணாக்கி நீட்டி நிமித்தின மாதிரி ஆக்கிட்டான்”. 

சங்கரன் மணலுக்குள் ஜெயம்மா கையை இழுத்து வைத்து மேலே மணலால் கோபுரம் செய்து மறைத்தபடி சொன்னார் – 

“ஆறடிக்கு ஆஜானுபாகுவா academic தோரணையோட ஒரு பொம்மணாட்டி, Socialogy, Political Science, Economics … நிச்சயம் இப்படி ஏதோ சப்ஜெக்ட் class எடுக்கற சீனியர் ப்ரபசர் தான் வந்திருக்கார்னு ஏதோ ஒரு பயம். என்னைப் பார்த்து குப்தாவும் அவனைப் பார்த்து நானும் எழுந்து நின்னு ’குட் மார்னிங் மிஸ்’ஸுனு கிண்டர் கார்டன் குழந்தைகள் மாதிரி விஷ் பண்றோம். சாயந்திரம் ஆறு மணிக்கு குட் மார்னிங் எல்லாம் சிங்சாங் வாய்ஸ்லே.  நீ என்ன பண்ணினே சொல்லு” என்று ஜெயம்மாவைப் பார்த்து சிரித்தார்.

 நானா என்று ஜெயம்மாவும் சிரிக்க, ”நர்ஸரி பசங்க தானே, ஒன் பாத்ரூம் போய்ட்டு வந்துடுங்க, இல்லேன்னா ரெண்டு மணி நேரம் போக பெர்மிஷன் இல்லேன்னு சொல்லிட்டாங்களா?” தெரிசா கேட்டாள். 

“சரியா சொன்னே” என்று சங்கரன் சிரிப்பை நீட்டினார்.  

“எப்படி தெரியும் தெரிசாவுக்கு?” ஜெயம்மா ஆச்சரியத்தோடு கேட்டாள்.  

”வயதுக்கு வந்தது பத்தி Summer of Fortytwo மாதிரி எத்தனை சினிமா பார்த்திருக்கோம், எத்தனை புத்தகம் படிச்சிருக்கோம். ப்ரைம் ஆஃப் ஜீன் ப்ராடி மாதிரி, கேட்சர் இன் தி ரை மாதிரி..  துடுக்குத்தனமாத்தான் பதில் இருக்கும்னு தெரியும்”.

வசந்தி தெரிசாவுக்குக் கிடைத்த பாராட்டில் ஒரு ஓரமாகக் கிள்ளி மூளியாக்கி மண்ணில் புதைத்து மூடினாள். அதை சிரித்தபடி, தெரிசாவின் தோளில் கைபோட்டு இறுக்கியபடி செய்தாள்

தனக்கு எப்படி தெரியும் என்று சொல்ல தெரிசாவுக்கு ஆர்வம்தான். ஆனால் எப்படிச் சொல்ல? சங்கரனோடு ஒரு பிற்பகல் மழை நேரப் புணர்ச்சியில் போகம் முந்தாதிருக்க என்னென்னவோ பேசும்போது ரொம்ப நேரம் சிரித்தபடி உச்சம் தொட்டு நீடித்து நிற்க வைத்தது ஜெயம்மா குறும்பு.

அது அம்பலப்புழையில் நடந்தது. தெரிசா பிங்க் ப்ளவுஸ் அணிந்து தலை குளித்து ஆற்றியிருந்தாள். வெள்ளைப் புடவை இடுப்பு காட்ட, பிங்க் இணை விழைய அழைக்க, நேரம் முழுக்கக் கூடி இருந்த அந்த மழைநேரப் பிற்பகல் இருபத்தைந்து வருடம் முன் வந்தது. 

தெரிசா  தலை நிமிர்த்தி ஒரு வினாடி சங்கரனைப் பார்த்து மறுபடி தலை தாழ்த்திக் கொண்டதை வசந்தி பார்க்கத் தவறவில்லை. சங்கரன் மண்ணை மறுபடி குவித்துக் கொண்டிருந்தார். 

“அப்புறம் என்ன ஆச்சு?” வசந்தி கேட்டாள். ஜெயம்மாவே அதைச் சொன்னாள்.

அப்புறம் ஒன்றும் இரண்டுமாக வந்த கிளாஸ்மேட்கள் எல்லாரும் கப்சிப் என்று இருக்க, ஜெயம்மா முதல் வகுப்பு எடுக்க ஆரம்பித்து விட்டாள். இந்தி சினிமா கதாநாயகிகளில் நூதன் அழகியா, சந்த்யா அழகியா, மீனா குமாரி அழகா, மதுபாலா அழகா என்று ஆளுக்கு இரண்டு வாக்கியம் பேச்சுப் பயிற்சியாகக் கொடுத்து சுவாரசியமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. வகுப்பு எடுக்க வேண்டிய ப்ரபசர் கார்வே பஸ் தாமதமாக வந்ததால் ஏற்பட்ட விளைவு அந்தக் குறும்பெல்லாம் என்று புரிந்து ஆச்சரியப்பட்டு நின்று விட்டார். ‘ஜெயம்மா வகுப்பு’ முடியும் வரை அவரும் ஆர்வமாகக் கலந்து கொண்டு, முடிந்ததும் poltical history முதல் வகுப்பை எடுக்கத் தொடங்கினார்.

 அந்த பத்து வகுப்புத் தோழர்களும், சங்கரன், ஜெயம்மா அடங்கலாக, பெரிய உத்தியோகங்கள் வகித்து ரிடையர் ஆகி, இன்னும் நெருங்கிய சிநேகிதர்களாகத்தான் தொடர்பில் இருக்கிறார்கள். 

நாலு வருடம் முன் ப்ரபசர் கார்வே இறந்து போனார்.  அதுவரை அவரும் அந்த நண்பர் வட்டத்தில் தான் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்தார். 

தைனிக் ஜாக்ரன் தினசரி ஆசிரியராக லட்சம் பிரதி விற்று பெயர் வாங்கி சுவிட்சர்லாந்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார் சந்தோஷிலால் குப்தா.

இருட்டிக்கொண்டு வந்தது. எழுந்து கார் பக்கம் நடந்தார்கள். வழி, தன்னீர்பவி கடற்கரை மணலில் கால் புதைய, இருட்டும் வெளிச்சமும் கண்ணாமூச்சி ஆட, நீண்டு போனது. 

டிரைவர் கார் கதவைத் திறந்து விட்டுக் காத்திருக்க, ஜெயம்மா முன்னால் அமர்ந்தாள். வசந்திக்கும் தெரிசாவுக்கும் நடுவே சங்கரன் ஜெயம்மாவிடம் பழைய நினைவுகளை உதிர்த்துக் கொண்டிருந்தார்.

”நெய் வாசம் கமகமன்னு அடிக்கறது எங்கேயோ” என்றாள் வசந்தி. விதவிதமான இனிப்புகள் அடுக்கி வைத்த இனிப்பு அங்காடி வாசலில் நின்று ஒரு சிறுவன் அப்பா அப்பா என்று விளிக்க,  காட்சி கலைந்தது. 

வசந்தி ஜெயம்மாவிடமும் தெரிசாவிடமும் இந்த வினோதத்தைச் சொல்ல நினைத்து ஹலோ என்றாள். பின்னால் திரும்பிப் பார்த்த ஜெயம்மா, ”சாரிடி வசந்தி” என்றபடி டிரைவரிடம் கை காட்ட,  சுத்தமாகப் பராமரிக்கப்பட்ட கட்டணக் கழிப்பறை வாசலில் கார் நின்றது. 

“திரும்ப ஒன்பாத்ரூமா?” சங்கரன் சிரிப்பு குழந்தை போலிருந்தது.

(தொடரும்)

Series Navigation<< மிளகு  அத்தியாயம்  ஐம்பதுமிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.