மறவேன் பிரியேன் என்றவளே!

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
契りきな
かたみに袖を
しぼりつつ
末の松山
波越さじとは

கனா எழுத்துருக்களில்
ちぎりきな
かたみにそでを
しぼりつつ
すえのまつやま
なみこさじとは

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் கியோஹரா

காலம்: கி.பி. 908-990. 

இத்தொடரின் “கோடைநிலா எங்கே?” என்ற 36வது செய்யுளை எழுதிய கவிஞர் ஃபுகாயபுவின் பேரன்தான் இவர். அரண்மனையிலும் வெளியிலும் பல்வேறு பொறுப்புகளில் இருந்த இவர் தனது 82வது வயதில் ஹிகோ என்ற இடத்தில் பணியிலிருக்கும்போதே இறந்திருக்கிறார். பேரரசர் முராகமியின் ஆணையையேற்று கி.பி. 951ல் கொசென்ஷூ தொகுப்பை ஐந்து கவிஞர்கள் இணைந்து தொகுத்தனர். அந்த ஐவருள் இவரும் ஒருவர். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் கொசென்ஷூ தொகுப்பிலும் இவரது தனிப்பாடல் திரட்டாகவும் இடம்பெற்றுள்ளன.

பாடுபொருள்: கைவிட்ட காதலியின் உறுதிமொழியை எண்ணி வருந்துதல்.

பாடலின் பொருள்: வானளாவும் இந்தப் பைன்மர மலையே கடலலையில் மூழ்கினாலும் நான் உன்னைப் பிரிகிலேன் என்று வாக்குத் தந்தாயே?

இது கியோஹராவின் சொந்த அனுபவம் அன்று. காதலியால் கைவிடப்பட்ட ஆணொருவனின் சார்பாக எழுதப்பட்டதாக ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஜப்பானின் தற்போதைய மியாகி மாகாணத்தில் தகாஜோ நகரில் சுவேனோ மட்சுயமா என்றொரு மலை இருக்கிறது. இது ஜப்பானின் மிக உயரமான மலைகளில் ஒன்று. எப்பேர்ப்பட்ட சுனாமியும் அதனை மூழ்கடிக்க முடியாது. எனவே இது நடக்கவியலாத நிகழ்வுகளுக்கு உவமையாக ஜப்பானிய இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த உவமை முதன்முதலில் கொக்கின்ஷூ தொகுப்பின் 1093ம் பாடலில் இடம்பெற்றது. பின்னர் புகழ்பெற்றுப் பிற இலக்கியங்களிலும் எடுத்தாளப்பட்டது.

இப்பாடலில் இன்னொரு புகழ்பெற்ற உவமையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சட்டையின் கைப்பகுதி ஈரமாதல். இதை அழுவதற்கு உவமையாகப் பயன்படுத்துகிறார்கள். இப்பாடலில் ஒருவரையொருவர் பிரியமாட்டோம் என இருவரும் உறுதிமொழியேற்றபோது அழுதிருக்கிறார்கள் என்பதை இரண்டாம் அடியில் உள்ள சட்டைக்கை ஈரமாதல் உணர்த்துகிறது.

வெண்பா:

மறவேன் இமயம் அலையிற் புகினும்
உறவும் விலகிடாது அன்பிற் - சிறந்த
உனைஎனக் கூறிப் பிரியினும் என்னுள்
உறையும் நினைவோ உனது
Series Navigation<< காற்றினும் கடியது அலர்காதல்வலி விதைக்கும் வெறுப்பு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.