
பொதுவாக ஒரு எழுத்தாளரை ஆதர்சம் என்று சொல்பவர் மொழிநடையில் தவிர்க்கவியலாது அவர்களின் பாதிப்பு இருக்கும். மயிலன் ஜி சின்னப்பன், அவரைப் பெரிதும் கவர்ந்த எழுத்தாளர்கள் என்று அசோகமித்திரனையும், ஆதவனையும் சொல்வார். இருவரின் சாயலோ, தாக்கமோ இவரது கதைகளில் இருப்பதைத் தெளிவாகக் காணலாம். ஆனால் மயிலன் ஜி சின்னப்பனின் பாணி முற்றிலும் அவர்களிடமிருந்து விலகியது, சமகால கலாச்சாரத்தின் விளைவுகளை எழுத்தில் எதிரொலிப்பது.
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் என்ற முதல் நாவலே, இவரை அநேகமாக எல்லோரது கவனத்திற்கும் கொண்டு வந்திருக்கும். தமிழில் மிக அரிதான Literary thriller வகைமையைச் சேர்ந்தது அந்த நாவல். கதையின் ஆரம்பத்திலேயே ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். அவன் ஏன் இறந்தான் என்று கதைசொல்லி, பலரிடம் விசாரிப்பதே இறந்தபின் செய்யும் போஸ்ட்மார்ட்டம். இறந்தவன், கதைசொல்லி, எழுத்தாளர் மூவருமே மருத்துவர்கள் என்பதால், நாவல் முழுக்கவே இன்றைய மருத்துவ உலகின் சவால்கள், போட்டிகள், எதிர்பார்ப்புகள், இருண்ட பக்கங்களைச் சொல்வது. இறந்தவன் தனக்கு ஏதோ ஒரு வகையில் நெருக்கமானவன் என்று வெளிக்காட்டும் சமூகப் பொது மனநிலையில் இருந்து பல உளவியல்களை உள்ளடக்கியது. கதைசொல்லிக்கு இறந்தவன் நெருக்கமில்லாத போதும் அவன் குறித்துத் தொடர்ந்து விசாரிப்பது, அத்தனை பெண்கள் இருக்க ஆர்யாவை மணமுடிப்பது, ஒரே கதை ஒவ்வொருவர் வாயிலாகப் பலகதையாகத் திரிவது என்று பல உளவியல்களைக் கொண்ட நாவல். டயரிக்குறிப்புகள் போல் சென்று முன்னுக்குப்பின் முரணாகச் சொல்வது என்று பரிட்சார்த்த நாவலுமிது. இதன் பின் வந்த குறுநாவல் ‘முப்போகம்’, தனியாகப் பார்த்தால் நல்ல நாவல் எனினும் பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் வீச்சுக்கு முன் ஒரு மாற்றுக்கம்மியாகத் தோற்றமளித்தது.
மருத்துவத்தில் குறிப்பிட்ட துறையின் வல்லுநரான சார்வாகன் பல கதைகளை எழுதி இருந்தாலும், துறைசார் கதைகளை அவர் எழுதவில்லை. பொதுவாகவே தமிழில் மருத்துவர்கள் இலக்கியம் எழுதுவது குறைவு, தொழில் குறித்து எழுதுவது அரிது. மாறாக முதல் நாவல் மட்டுமன்றி, மூன்று தொகுப்பும் சேர்த்து ஐந்து சிறுகதைகளும் முழுவதும் மருத்துவப் பின்னணியில் எழுதியிருக்கிறார் மயிலன் ஜி சின்னப்பன்.
இந்தக் கதைக்களங்களை யாரும் எழுதியிருக்க முடியும் ஆனால், இவ்வளவு நிதர்சனத்தன்மையுடன் ஒரு மருத்துவரால் மட்டுமே எழுத முடியும். குறிப்பாக, ‘நிரபராதம்’, ‘ஆகுதி’, ‘அன்நோன்’ முதலிய கதைகளைக் குறிப்பிட்டாக வேண்டும். முதல் இரண்டு கதைகளுமே குற்றஉணர்வை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்தாலும் இரண்டுமே எதிர்த்திசையில் பயணிப்பவை.
ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை வைத்துப் பல கதைகள் எழுதியிருக்கிறார். அவற்றில் முக்கியமானவைகளாக ‘சாந்தாரம்’, ‘நியமம்’, ‘ஸ்படிகம்’, ‘வழிச்சேறல்’ ஆகிய கதைகளைக் கூறலாம். இது போன்ற கதைகளில் மயிலன் ஜி சின்னப்பன் ஆதவனின் நீட்சியாகவே விளங்குகிறார் என்று சொல்ல வேண்டும். மனஅவசங்களுக்குள் மட்டும் இந்தக் கதைகள் உள்நுழைந்து வெளியே வரவில்லை, பாசாங்குகளையும் எல்லோர் பார்வைக்கும் வைக்கின்றன. இவரது சுவாத்தியமான தாழ்வாரத்தை விட்டு வெளியே வந்து எழுதிய கதைகளாக ‘இடர்’,
‘ சங்கல்பம்’ , ‘நூறு ரூபிள்கள்’, ‘தோமா’ போன்ற கதைகளைச் சொல்லலாம். அதனால் தானோ என்னவோ என்னைப் பொறுத்த வரையில் அவை அதிக பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை.
மயிலன் ஜி சின்னப்பனின் கதைகளில் எங்கோ ஓரிடத்தில் உள்முடிச்சு மறைந்திருக்கும். இவரது ஆரம்பகாலக் கதைகள் நீளமானவையாதலால், தேர்ந்த வாசகர் தவிர்த்து மற்றவர்களுக்கு அது நிரந்தரமாக மறைந்து போகும் அபாயம் இருந்தது. இவருடைய சமீபத்தில் வெளிவந்த ‘நெஞ்சோடு புலத்தல்’ வடிவஅமைதியும், சுற்றி வளைக்காது கதையின் மையஅச்சைச் சுற்றிவரும் கதையமைப்பும் கொண்டது. அதுவும் ஆண்-பெண் உறவுச்சிக்கல் கதை எனினும் அதில் குற்றவாளி என்றோ, பாதிக்கப்பட்டவர் என்றோ உண்மையில் யாருமில்லை. யோசித்துப் பார்த்தால் அவையெல்லாம் நம்முடைய கற்பிதங்கள். ஆணின் கோணத்தில் ஒருகதையாக, பெண்ணின் கோணத்தில் மற்றொரு கதையாக விரியக்கூடியது. தமிழ் சிறுகதைகளை வேறெந்த மொழியுடனும் ஒப்பிடும் வகையில் எழுதுபவர் வெகுசிலரே. அந்த சிலரில் ஒருவர் மயிலன் ஜி சின்னப்பன்.
நூலைப் பற்றியும் நூலாசிரியர் பற்றியும் சிறப்பான மதிப்பீடு…அருமை.
வாழ்த்துகள்.
தமிழ் இதழ் வரலாற்றில் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின்
படைப்புகளுக்கான சிறப்பிதழ் வெளியிடப்பட்டது இதுவே
முதல் முறை என நினைக்கிறேன்..
மொழியின் மீது காதலும் இலக்கிய செழுமைக்குப் புதிய வரவுகளை
வரவேற்று ஆற்றுப்படுத்தும் சொல்வனத்திற்கு வணக்கங்கள்..
80களில் எழுத வந்தவர்களுக்கான சவால் – எண்ணிக்கையில் அதிகம்
இருந்தாலும் எல்லோருக்கும் இடமளிக்கும் இயலா அச்சுப்பத்திரிகைகள்..
எழுதி எழுதிக் காத்திருக்க வேண்டிய சூழல்.. அச்சில் ஏறிய நல்ல
எழுத்தாளர்கள் சுலபமாய் வாசகர்களை சென்றடைந்தார்கள்..
மற்றவர்கள் காத்திருந்தார்கள்..சிலர் காணாமல் போனார்கள்..
தற்போதைய காலத்தின் சவால் இணையத்தில் இறைந்து கிடக்கும்
எண்ணற்ற செயலிகளும் வலைத்தளங்களும் வலைப்பூக்களும்..
நீண்டு கிடக்கும் கடற்கரை போல எழுதிப்பார்க்க ஏராளமான
வசதிகள்.. கூழாங்கற்களுக்கு நடுவில் கோமேதகத்தைத் தேடிப்
பார்ப்பது எளிதல்ல.. சில சமயம் அயற்சியூட்டும் செயல்..
இந்தத் தருணத்தில் இதைப்போன்ற புதிய எழுதாளர்களுக்கான சிறப்பிதழ்
படைப்பாளிகளுக்கும் தேர்ந்த எழுத்தை விரும்பும் வாசர்களுக்குமான
ஒரு கைகுலுக்கலை நிகழ்த்துகிறது..
அன்புடன்
மஹேஷ்.