மனதில் புதைந்த காயம்பட்ட மிருகம் !

கார்த்திக் சுப்ரமணியன் சிறுகதைகளை முன் வைத்து

அவளுடைய கணவன் எதிர்காலத்தில் எதையாவது சம்பாதிக்கக் கூடும். இப்போது சினிமாவின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறான். அவனையும் அரவணைத்துச் செல்ல வேண்டியது அவள் பொறுப்பு. அவளுடைய குழந்தையை அவள் தனது தாயிடம் ஒப்படைத்திருக்கிறாள், மற்றும் வேறு ஒரு ஊரில் அவள் வேலை செய்கிறாள். அலுவலகத்தில் வழக்கம் போல மனிதர்களின் உணர்வுகளை எடுத்துக் கொள்ளாத இரும்பு விதிகள் நிலவி வருகையில் பதட்டங்கள் நெருக்குகின்றன. செய்ய வேண்டிய அலுவல்களால் அலைக்கழிக்கப்படுகிற அவள், தடுப்பூசி போடப்பட்டு காய்ச்சல் வந்த குழந்தையைப் பார்க்க செல்ல வேண்டும். அதற்குள் எவ்வளவோ இடர்ப்பாடுகள், சீண்டல்கள், மூச்சு முட்டல்கள். இறுதியில் பேரூந்தில் சில்லறை கேட்டு வீம்பு பண்ணுகிற ஒரு நடத்துனரைத் தாங்க முடியாமல் வெடித்து அழுகிறாள். அங்கே இருக்கக் கூடிய அத்தனை பேரும் அவளைப் பார்க்கிறார்கள். 

இந்தக் கதையில் என்ன இருக்கிறது?

தனிப்பட்ட மனிதர்களின் பொறுப்போ, அல்லது திருமணம் என்கிற அமைப்பில் இருக்கக் கூடிய மௌடீகமோ, அந்தத் தம்பதிகளுக்குள் ஒரு விலகல் நேர்ந்து அவர்கள் தேமேயென்று வாழ்கிறார்கள். அவன் வெளியூருக்கு சென்ற சுதந்திரமான ஒரு நாளில் அவள் இணையத்தில் நுழைய, ஒரு மற்றொரு ஆளுடன் சுவாரஸ்யம் பூக்கிறது. அதில் அவள் திளைக்கிறாள். ஒரு ஓரத்தில் குற்ற உணர்ச்சிகளுக்கான ரெடிமேட் பதில்களும் உண்டு. இந்த ரகசியங்களை தொகுத்துக் கொண்ட ஒருவன் அதற்கு விலையாக பணம் கேட்டு பிளாக் மெயில் செய்வது தான் கதை. எல்லாவற்றையும் வெறுத்து பழைய வாழவை அடைந்தால் போதும் என்று நம்பியவளின் கெட்டகாலம் ஒருநாள் பளிச்சென்று விடிகிறது. பிளாக் மெயிலின் சுவடே இல்லை. கதையின் முடிவில், அவள் மறுபடியும் இணையத்தில் நுழைகிறாள். 

இந்தக் கதையில் கூட என்ன இருக்கிறது?

கார்த்திக் சுப்ரமணியனின் ஒவ்வொரு சிறுகதையையும் விளக்கிச் சொல்லி, இவைகளில் என்ன இருக்கின்றன என்று கேட்டு விட முடியும். அவர் இன்று புனைவுலகில் பெயர் கேட்ட ஒரு நபர். விருதுகள் பெற்றிருக்கிறார். இடையறாமல் தொடர்ந்து அவர் எழுதுகிற கதைகளை, தொடர்ந்து படிக்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்தக் கதைகளில் அவருடைய வாசகர்கள் அடைவது என்ன ?

முதல் கதையில், பேரூந்தில் தன்னை மறந்து கதறி அழுகிற பெண்ணுக்கு முன்னே உலகத்தின் சவால் இருந்தது. கடைசி நிமிடத்தில் கூட அவள் வாய்பேசி அந்த நடத்துனரை வென்று போயிருந்தால் அங்கே இருந்த பல பேரும் அவளுடைய அதிகப்பிரசங்கித்தனத்தை முனகிக் கொண்டு இருந்திருப்பார்கள். என்ன செய்வது, அவள் அழுத அழுகை ஒரு வீழ்ச்சி அல்லவா? பரிதாபகரமான ஒரு சரணாகதி அல்லவா? ஆயிரம் அழுமூஞ்சிகளோடு இதையும் சேர்த்துக் கொள்கிற சமூகம் தன்னளவில் திருப்தி அடைந்து கொள்கிறது. அடேங்கப்பா நம்மை மீறி எதுவும் நடப்பதில்லை என்கிற திருப்தி. 

இரண்டாவது கதையில் வீழ்ச்சியைத் தொட்டு விடுகிற ஒருத்தி இருக்கிறாள். அவளுடைய கோழைத்தனம் அவளை தாண்டி முன்னே வந்து நிற்கவும் செய்யும்போது வாசகர்களுக்கு சற்றே கிளுகிளுப்பு உண்டாகவும் செய்யலாம். கதை முடியும் போது அது இல்லை என்பதாக ஆசிரியர் அவர்களை மூர்க்கமாக சீண்டி கதையை முடிக்கிறார். இணையத்துக்குள் நுழைகிற அவள் தனிமரம் இல்லை அல்லவா? தாம்பத்தியம் உள்ளிட்ட எல்லா பொது அவஸ்தைகளையும் ஒரு கணம் நினைத்துப் பார்க்காமல் முடியாது.

நம்மில் பலருக்கும் ஒரு காரியம் தெரியும். ஒரு எழுத்தாளனின் தனிப்பட்ட அனுபவங்கள் கதைகளாக நிற்க முடியாது. அவற்றிற்கு உலகம் முழுவதும் உள்ள பொதுதன்மையை அணிவித்தே ஆக வேண்டும். எழுதுகிறவன் என்றோ ஒருநாள் மண்டையைப் போட்ட பிறகும் அக்கதையின் நிஜம் ஒளிர்ந்து கொள்ள வேண்டும். புதுமைப் பித்தனும், ஜி நாகராஜனும், அசோகமித்திரனும், சுந்தர ராமசாமியும் அவ்வகை தீபங்கள் ஒளிர சுடர் தேடிக் கொண்டிருந்தார்கள். ஜெயமோகன் ருசுப்படுத்துகிற வாதைகள் அனைத்தும் அவரே சுமந்து வந்து கட்டின கோட்டை அல்லவா? 

நாம் நம்மை ஆளாக்கின அத்தனை பேருக்கும் உள்ள முகங்களை அறிகிறோம். சரியான இலக்கிய வாசிப்பு என்பதும் அதுவே தான்.           

கார்த்திக்கின் இருபதுக்கும் அல்லது அதற்கும் மேற்பட்ட சிறுகதைகளை அசை போட்டிருந்து தான் அவருக்கு கதை சொல்லும் மனம் ஒன்று உண்டு என்பதை சொல்லத் துணிகிறேன். அவர் அதை அலட்டிக் கொள்ளாமல், அமைதியின் கனம் அழுத்துமாறு தன்னுடைய கதைகளை சொல்ல முனைகிறார். தான் கூற வருகிற செய்திகளை கரண்டியில் எடுத்து வாயிற்கு ஊட்டித் தருவது கிடையாது. ஒருபோதும் வாசக வாஞ்சை மிதமிஞ்சுவதில்லை. அதே நேரத்தில், அத்துமீறல்கள் இல்லை. 

முடிந்த வரையில் எல்லாக் கதைகளிலும் ஆண்கள் பெண்கள் தம்மிடையே உள்ள நெருக்கடிகள் வருகின்றன. உறவுகள், பிரிவுகள், தனிமை என்று பல திசைகளில் இன்றைய மனிதர்களுக்கு நடுவே பெருக்கெடுத்து ஓடுகிற சிடுக்குகளின் நதி மிக சரியாக கரையுடைந்து வந்து பீதியூட்டுகிறது. தற்காலிக, நிரந்தரத்  தேர்வுகளுடன் கூடிய ஹாப்பி எண்டில் யாரையும் சமாதானம் செய்து விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். மேலும் அவர் கதையை அழைத்துக் கொண்டு செல்லுவது ஒருவழிப்பாதையாகவே இருக்கும் போது ஆசிரியரே கூட கையறு நிலையில் தான் இருக்கிறார். லிண்டா தாமசுக்கு அகம் மலர செய்ய அக்கதையின் நாயகன் என்ன சர்க்கஸ் செய்து விட முடியும்? பலவித ஏமாற்றங்களால் மனம் கசந்தவன் போடி தேவடியா என்று உறுமியதையோ, தன் மீது புகார் கொடுத்து வஞ்சகம் பெருக்கிய பெண்ணை நோக்கி முஷ்டி மைதுனம் செய்ய வருகிறவனையோ திருப்பி எடுத்துக் கொள்ள முடியாது. எதிர்பாராத திருப்பத்தில் தலை திரும்புகிற ஜெயமணியின் காலம் கடந்து தீண்டிய வார்த்தைகளுக்கு மறுவார்த்தை சொல்ல முடியாது. வேறு ஒரு கதையில் காலிங் பெல் ஒலிப்பதை நிறுத்த முடியாது. மெய்நிகர் உலகத்தில் இருந்து ஒரு பதுமையைத் தான் நிறுத்தினாலும் பழகின ஈகோக்களை வடிவம் மாற்ற முடியாது. எல்லா மனிதர்களின் அடிமனதிலும் திராவாகமே ஓடிக் கொண்டிருக்கிறது என்கிற கூற்றை மேலும் பல கதைகள் சொல்லுகின்றன. மனிதனால் தவிர்க்கவே முடியாத பகையும் பயமுமாக வாழ வேண்டியிருப்பவர்களின் நிர்க்கதியை வலசை என்கிற கதையை சொல்லி முடித்த பின்னும் கதையில் சொல்லப்பட்ட அந்த எளிய பறவைகள் மனதில் பறந்து கொண்டிருந்தன. 

இவைகளை எல்லாம் கணக்கிட்டபடி ஆசிரியருக்கு கதை சொல்லும் மனம் ஒன்று உண்டு என்று சொன்னேனா என்று கேட்டால் அது மட்டும் இல்லை என்று கூற வேண்டும். இதை எழுதுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு கோவை புத்தகக் கண்காட்சியில் நாஞ்சில் நாடன் பேசின ஒரு வீடியோவைப் பார்த்தேன். ரா செந்தில் குமார் எழுதின சிறுகதைத் தொகுப்பு வெளியீடு. அவர், “ எழுத்தாளர்கள் தங்கள் வாசகர்களிடம் தமக்குத் தெரிந்ததை முறையிடுகிறார்கள் “ என்று பேசிக் கொண்டு சென்றதில் துணுக்குற்று விட்டேன். முறையிடுவதற்கான காரணங்கள் தானா இப்புவியில் இல்லை? அதைத் தொடர்ந்து யோசித்து நகர்ந்தபோது எழுத்தாளன் தன்னுடைய நெஞ்சில் கனக்கிற செய்திகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்கிற உண்மையை அறியும் தோறும், அவன் அந்தத் துயரை, தன்னுடைய அடுத்த செய்தியை எழுதுவதன் மூலம் கடக்கிறான். காலம் முழுக்க அவனுள் புதைந்த ஒரு பாவப்பட்ட விலங்கு அவனைப் பிராண்டியவாறு இருக்கிறது. அப்படி அதை சுமந்து நடக்கும் ஒரு முகம் கார்த்திக்கின் கதைகளில் உண்டு என்று நம்புகிறேன். அது ஒருவேளை எனது கற்பனையாகவோ, பிரமையாகவோ கூட இருக்கலாம். 

அடிப்படையில் நானும் ஒரு சிறுகதை எழுத்தாளன். கதை எழுத வருகிறதோ, இல்லையோ நான் எழுதுவதன் சாரத்தை சுற்றி வந்து என்னுடைய சிறுகதை கோட்பாடாக ஒன்றை முன்வைக்க முடியும். அதை ஆதாரமாகக் கொண்டு மற்றவர்களுடைய படைப்புகளை என்னுடைய சொந்தத் தராசில் நிறுத்த முடியும். பக்கத்துக்கு பக்கம் மதிப்பெண்கள் வழங்கி டோட்டல் போட்டு பாசு, பெயிலு சொல்ல முடியும். ஆனால் பல்வேறு எழுத்தாளர்கள் வாசகர்கள் , பல்வேறு பார்வைகளை விலகி நின்று பார்த்துத் தான் கார்த்திக்கை யாருமே படிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன். எனக்கு இவைகளில் பிடிக்காதவை என்ன என்பதைக் காட்டிலும் மிகவும் கறாரான விஷயம் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.