
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். [ குறள். அதிகாரம்: மக்கட்பேறு]
வழக்கமான சொல்லுடன் கட்டுரையைத் தொடங்கலாம். இலக்கியம் என்பது எப்போதும் வாழ்க்கையைத் தன் பேசுபொருளாகக் கொண்டது. உலகம் முழுவதுமே இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வாழ்க்கைமுறை வெகுவாக மாறி இருக்கிறது. சமூகத்திலிருந்து குடும்ப அமைப்பு, மேலும் தனிமனிதன் வரை உலகமயமாக்கலால் மாறிக்கொண்டிருக்கிறது. தனிமனிதன் என்ற கருதுகோலிற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. வாழ்க்கையை விரிவாகப் பேசும் இலக்கியவடிவமான நாவலின் பேசுபொருளானது விதவிதமான வாழ்க்கை முறைகள், மனிதர்கள், நிலப்பரப்புகள் என்று விரிந்து செல்கிறது. தத்துவம், வரலாறு, காதல், மண் சார்ந்த வாழ்க்கை, தனிமனிதன், விளிம்பு நிலை வாழ்க்கை என்று நாவலின் பேசுபொருள்கள் மிகப்பரந்தவை.
சமூகமனிதரான காந்தியையும் அவர் மகனையும் மையப்படுத்திய ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற நாவலையும், தனிமனிதரின் குழந்தையின்மைச் சிக்கலை பேசும் காயாம்பூ நாவலையும் இந்தக்கட்டுரைக்காக எடுத்துக்கொள்கிறேன். எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் காயாம்பூ நாவலில் முதல் நாவல் முயற்சிக்கான தத்தளிப்புகள் உள்ளன. எழுத்தாளர் கலைச்செல்வியின் ஹரிலால் நாவலிற்கு அனைவரும் அறிந்த காந்தியின் வாழ்க்கையை பேசுகிறது என்ற மேலோட்டமான பார்வை உள்ளது.
இரண்டு நாவல்களுமே உணர்ச்சிகரமாக களங்களை, மனிதர்களை, தருணங்களை கொண்டவை. எனினும் மிக உள்ளடங்கிய தொனியில் எழுதப்பட்டுள்ளன. வாசகப் பங்களிப்பை கோருபவை. இருநாவல்களிலும் உள்ள அடிப்படையான வாழ்க்கைச் சிக்கல் இந்த நாவல்களை முக்கியமானதாக்குகிறது. தன் தொடர்ச்சி என்று மானுடர் நம்பும் வாரிசுகள் சார்ந்த சிக்கல் ஒரு வலை போல விரிந்து இவர்களின் வாழ்க்கை மீது கவிவதை உணரமுடிகிறது. காந்தி, கஸ்தூரிபா போன்ற லட்சியவாத தம்பதிகள் அதை எதிர்கொள்ளும் விதம் தனித்துவமானது. காயாம்பூவின் எளிய தம்பதிகளான துரையும் நந்தினியும் அதை எதிர்கொள்வது இன்னும் சிக்கலாக உள்ளது. இரு நாவல்களுமே என்றைக்கும் உள்ள ஒரு சிக்கலை தன் கருப்பொருளாகக் கொண்டுள்ளன.
நம் புராணங்களில் குழந்தை வேண்டித் தவம் இருக்கும் மன்னர்களை, மனிதர்களைத் தொடர்ந்து காண்கிறோம். கர்ணனின் பெற்றோரான அதிரதனும், ராதையும் குழந்தை இல்லாதவர்கள். காந்தாரி குழந்தைகள் பெறும் விதம் அசாதாரணமானது. குந்தியும் தன் மைந்தர்களை வரமாகவே பெறுகிறாள். சில நேரங்களில் அசுரர்களுக்கு பிரகலாதன்கள் பிறந்து சோதிக்கிறார்கள். சில நேரங்களில் முனிவர்களுக்கு அசுர மைந்தர்கள் பிறக்கிறார்கள். தசரதன்கள் பிள்ளைகள் மீது கொண்ட அன்பால் அழிகிறார்கள். பாண்டுகள் பிள்ளைகள் மீது கொண்ட அன்பால் நிறைவடைகிறார்கள். திருதராஷ்டர்களால் ஒரு போதும் பிள்ளைப் பாசத்தைக் கடக்க முடிவதில்லை. சந்தனுக்கள் பிள்ளைகளால் தத்தெடுக்கப்படுகிறார்கள்.
பெற்றோர் பிள்ளைகள் உறவை வைத்தே இயற்கை தன் மாபெரும் விளையாட்டு களத்தை நிறைக்கிறது. ஓயாத முரண்கள். ஓயாத தாபங்கள். ஓயாத போராட்டங்கள். பிம்பங்கள் தாங்கள் தங்களுடனே ஆடும் ஆட்டம். இந்த இருநாவல்களுமே இதே ஆட்டத்தின் தத்தளிப்புகளை, முரண்களை , போராட்டங்களை கொண்டவை.
தென்னாஃப்ரிக்காவின் ஆசியர், ஐரோப்பியர் மற்றும் ஆப்பிரிக்க இனகுழுக்களின் இருத்தலியல் மற்றும் இனப்போரட்டங்களுக்கு மத்தியில் காந்தி என்ற மிகப்பெரிய ஆளுமையை காலம் கூர் தீட்டிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஹரிலால் நாவல் நகர்கிறது. ஒரு பெரிய ஆளுமையாக உருவாகிக் கொண்டிருக்கும் காந்திக்கும், அவரின் மூத்த மகனுக்கும் இடையே ஏற்படும் உறவுப் போராட்டம் நாவலின் மையம். அந்த மையத்தை சுற்றி தென்னாஃப்ரிக்காவில் காந்தி முயன்று பார்த்த கூட்டு வாழ்க்கை முறை சோதனைகள், இந்தியன் ஒப்பீனியன் இதழிற்கான அவரின் உழைப்பு, குடும்பத்தினுள் அவர் நடத்திப் பார்த்த வாழ்வியல் சோதனைகள், நண்பர்களுடன் அவரின் விவாதங்கள் என்று நாவல் விரிகிறது. தென்னாஃப்ரிக்க நிலப்பரப்பைக் கொண்டுவருவதில் கலைச்செல்வி வெற்றி பெற்றிருக்கிறார். பதின்வயதின் இறுதியில் உள்ள மகனையும், லட்சியவாதியாக நாற்பது வயதை தொடப்போகும் வயதில் உள்ள கணவனையும் சமாளிக்கத் தத்தளிக்கிறார் கஸ்தூரிபாய். ஹென்றி போலக், மிலி தம்பதிகளின் பார்வையில் காந்தி கஸ்தூரிபாயின் அன்பும், வாக்குவாதங்களும் காட்டப்படுகின்றன. காந்தி தன் குடும்பத்திற்குள்ளேயும் விவாதத்திற்கும், பேச்சுவார்த்தைக்கும் தயாராகவே இருக்கிறார். தன் தரப்பைப் பேசுவதைக்கூட எதிர்ப்பாக எடுத்துக்கொள்ளும் மனநிலை உடைய சமூகத்தில், இந்த மனிதர் விவாதம் செய்வதை அன்றாடமாக வைத்துள்ளார். குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் காந்தி நெருக்கமானவராக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இது நாவலில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.
ஒருலட்சியவாதக் கணவனுடன் பயணிக்கும் இந்த மனைவி தன் வாழ்க்கையை நெருப்புக்கு அருகில் என எப்போதும் உணர்கிறாள். எளிய குஜராத்திப்பெண்ணான கஸ்தூரிபாய், கணவர் காந்தியுடன் சேர்ந்து தானும் தனி ஆளுமையாக வளர்கிறார்.
காந்தி தன் வசுதைவ குடும்பம் கனவை ஃபீனிக்ஸ் குடியிருப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்திப் பார்க்கிறார். வசுதைவ குடும்பத்தைக் கனவு காணும் ஒருவரின் மகன் கொள்ளும் அலைக்கழிப்பின் நாவல் இது.
காந்தியிடம் காலம் தன் துலாபாரத்தில் அவர்களையே வைக்கச்சொல்கிறதோ என்னவோ?
தெரிந்த வாழ்க்கை தானே என்ற எண்ணம் இல்லாது நுழையமுடிந்தால் நாவலிலிருந்து சிறந்த வாசிப்பனுபவத்தைப் பெறுவதோடு, இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் காந்தியையும் அவர் மகனையும் உணர்ந்து கொள்ள முடியும்.
எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் காயம்பூ குழந்தையின்மைக்கான ‘மருத்துவ சிகிச்சை முறைகளை’ முதன்முதலாக எடுத்தாண்ட நாவல் என்ற வகையில் பேசுபொருள் சார்ந்து தமிழுக்கு ஓர் முதல் நாவலாகக் கொள்ளலாம். குழந்தையின்மையின் தத்தளிப்புகளும், துயரமும், மருத்துவமனைகளின் இயந்திரத்தனமான அணுகுமுறைகளையும் குடும்ப அமைப்பில் குழந்தையின்மை எற்படுத்தும் கசப்புகளை, வெறுமைகளை நாவல் நிறைத்து வைத்திருக்கிறது. இணையாக, குறைபாடுடைய குழந்தையின் பெற்றோரின் அன்றாட வாழ்க்கையும் நாவலில் உள்ளது.
காவிரிக்கரை கிராமங்களும், சண்டிகரும் கதைக்களங்கள். துரைக்கும் நந்தினிக்குமான திருமணத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. நந்தினி மீதான ஹரியின் சொல்லப்படாத காதலும் ஹரியைச் சுற்றிய கிராமத்து வாழ்க்கையுடனும் நாவல் நகர்கிறது.
திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே நந்தினியின் சீரற்ற மாதவிலக்கு[ irregular periods] என்ற உடல் சார்ந்த சிக்கலால் அவளுக்கு வாழ்வில் ஏற்படும் அன்றாடசிக்கல்கள் சொல்லப்படுகிறது. திருமணத்தன்றிலிருந்தே அவளின் சின்ன சின்ன திருமணக் கனவுகள் கூட இதனால் கலைகின்றன.
குழந்தையின்மைக்கான சிகிச்சைகளில் மருத்துவமனைகளில், ஒரு பெண் தன் உடல் மீது அடையும் நுணுக்கமான அவமதிப்புகளை நாவல் முழுவதுமே நந்தினி கதாப்பாத்திரம் மூலம் உணரப்முடிகிறது. குழந்தையின்மை என்ற காரணத்தால் குடும்ப, சமூக உறவுகளில் மனிதர்கள் மேல் நந்தினிக்கும் துரைக்கும் ஏற்படும் விலக்கம் முக்கியமானது. இருவரும் என்ன பரிசோதனை என்று தெரியாமல் உடலில் ஏற்படும் உச்சக்கட்ட வலிகளை பொறுத்துக்கொள்ளும் போது குழந்தையின்மை என்ற சிக்கல் மட்டும் தானா வாழ்க்கை? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் நமக்கு எழுகிறது. நாவல் முழுதும் பல்வேறு மருத்துவ முறைகள், பரிசோதனைகள், மருந்துகள் என்று நகர்கிறது. நாவல் வாசிக்கும் போது குழந்தையின்மையை இத்தனை பெரிய விஷயமாக நாம் மாற்றி வைத்திருக்க தேவையில்லை என்று தோன்றுகிறது. ஒரு தம்பதியினரின் இளமை வாழ்க்கையை அழிக்க குழந்தையின்மை என்ற ஒரு விஷயமே போதுமானதாக இருக்கிறது. மருத்துவமனைக்கு ஒவ்வொரு முறையும் குழந்தைக்கான எதிர்பார்ப்புடன் செல்லும் நந்தினியும் துரையும் ஏமாற்றம் அடைகிறார்கள்.
குழந்தை பெறுவதற்காக ‘பேக்கேஜ் மெடிசின்ஸ்’ என்று தனக்கு இல்லாத நோய்க்கெல்லாம் மருந்து சாப்பிடும் நந்தினியிடம் ‘உன் உடம்பு தானே ஊரான் வீட்டுப்பண்டமா’ என்று தோழி கேட்பாள். ஒரு மனித உடல் இயந்திரமாக பார்க்கப்படும் அவலம் இந்த சிகிச்சைகளில் அப்பட்டமாக நடந்தேறுகிறது.
இதையெல்லாம் கடந்து நாவலில் நந்தினி தன் அகத்தின் ஆன்மிகமான ஒரு தளத்தில் குழந்தையின்மையால் பெறும் காயத்தின் வலி காயாம்பூ நாவல் முழுதும் உள்ளது. ஒரு கட்டத்தில் துரையும் அந்தத் துயரத்தை அடைகிறார். குழந்தையின்மை என்ற பெயரால் பரிசோதனைக் களமாகும்[போர்க்களம் என்றும் சொல்லலாம்] உடலை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் நந்தினி நம்மை தொந்தரவு செய்பவள். சிகிச்சைகளின் போது ஒவ்வொரு முறையும் அன்னிய ஆண்கள் முன் ஆடைகலைவதற்கு நந்தினி பதறுகிறாள். மனித உணர்வுகள் பற்றி எந்த அக்கறையும் இல்லாத மருத்துவமனைகளின் அலட்சியமான போக்கும், மருத்துவமனைகளில் அவள் அடையும் பதற்றமும், அவமான உணர்வும், கோபமும், எரிச்சலும், அழுகையும் நாவலின் உணர்வுத் தளத்தை தீவிரமாக்குகிறது. நாவல் முழுதும் ஒரு பெண்ணின் அகத்தத்தளிப்பு உள்ளது. அவை கனவுகளாக மாறி அவளை பதறசெய்கின்றன.
இவ்வாறு துயரத்தை, கண்ணீரை, அவமானத்தை, எரிச்சலை, அருவருப்பை கருவாக்கி ஆவது என்ன? என்ற கேள்வி அவளை அலைகழிக்கிறது. இவ்வாறு நேயமற்ற மருத்துவ முறைகளால், இயல்பான மனநிலையில் இல்லாத தாயால் தயாரித்து அனுப்பப்படும் குழந்தைகளால் நிறையும் சமூகத்தின் மனநிலை என்னவாக மாறும் என்று வாசிக்கும் நமக்குமே கேள்வி எழுகிறது. ஒரு மருத்துவமனையில் அமர்ந்திருக்கும் நந்தினி ‘குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இவை’ என்று சொல்வாள். உடலும் மனமும் பூத்துக் கனியும் ஒன்றை என்னவாக மாற்றி வைத்திருக்கிறோம் என்ற கேள்வியை நாவல் முழுதுமே நந்தினி சிந்தித்துக் கொண்டிருக்கிறாள்.
மாடிப்படியில் அமர்ந்து அவரைக்கொடி பூத்திருக்கும் பந்தலைக் கண்டு நந்தினி கொள்ளும் ஏக்கம் நுட்பமானது. அதன் இடத்தில் வளர்ந்து, வெயிலையும், மழையையும், காற்றையும் ஏற்று பிறர் அறியாது, தானுமே கூட அறியாது, ஏதோ ஒரு அரும்பொழுதில் மொட்டு விட்டும் மலரும் கொடியின் மலர்கள் எத்தனை தூயவை, அழகியவை, அவை காய்க்காமல் போவதில்லை.
நாவலின் ஒருகட்டத்தில் நந்தினியிடம் மருத்துவர் ‘ஒன்னும் கவலையில்லை உங்க கருப்பை நல்லா சுருங்கிடுச்சு. இனி மாதவிடாய் நின்றுவிடும்’ என்று கூறும் போது புன்னகைக்கும் நந்தினி வாசிப்பவர் மனதில் நின்றுவிடுகிறாள். வாசிப்பவருக்குமே ‘போதுமே இனிமேலாவது நிம்மதியா இருக்கட்டுமே’ என்று தோன்றும் இடம் அது. மோகமுள் நாவலில் செப்புச் சிலையாக ரயிலடியில் நிற்கும் யமுனா போன்று, மருத்துவமனையில் மருத்துவர் முன்பு தன் மெனோபாஸ் பற்றித் தெரிந்து புன்னகையுடன் அமர்ந்திருக்கும் நந்தினியும் நம் மனதை, தங்களின் மௌனத்தால் தொந்தரவு செய்பவர்கள். நம் நாவல்கள் உருவாக்கிய கங்கா, யமுனா போன்ற முக்கியமான பெண் கதாப்பாத்திரங்களின் வரிசையில் நந்தினியும் வாசகர் மனதில் நிற்கக்கூடும்.
அதே போல இன்று வரை இளைஞர்களுக்குள்ள இருத்தலியல் மற்றும் தான் யார்? என்ற கேள்வி சார்ந்த தத்தளிப்புகளுடன் ஹரிலால்கள் நம்முன் அலைபாய்வதை கண்டுகொண்டே இருக்கறோம்.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். [அதிகாரம்: மக்கட்பேறு]
நற்பண்புகளை பெற்ற பிள்ளைகளை பெறுபவருக்கு ஏழு பிறப்பும் தீயவை தீண்டாது என்று சொல்லும் மரபு நம்முடையது. ஒரு தந்தையாக காந்தி ஒருகட்டத்தில் கையறு நிலையில் நிற்கிறார். காயாம்பூவில் மிகச் சாதாரணமான ஒரு குடும்பத்தின் தம்பதிகள் குழந்தைக்காக நடுவயது வரை மருத்துவமனைகளில் வதைபடுகிறார்கள். இரு நாவல்களுமே சந்ததிகள் என்ற அம்சத்தை விசாரிக்கின்றன. காந்தி தீர்மானமாக எனக்கு அவன் ஒருவன் மட்டும் பிள்ளை இல்லை..என்கிறார். காயாம்பூ தம்பதிகள் தங்களுடைய சொந்தப் பிள்ளைதான் தங்களுக்கு வேண்டும் என்கிறார்கள். இரு நாவல்களும் கேள்வி எழுப்பி விசாரிப்பது இதைத்தான். ஒரு மனிதனின் வாழ்க்கை சொந்தப்பிள்ளையோடு முடிந்து விடுவதா? பிள்ளை இல்லை என்றாலோ, பெற்ற பிள்ளை சரியான வாழ்க்கை வாழவில்லை என்றாலோ ஒருவரின் வாழ்க்கை முழுமை அடையாதா என்ன? இரு நாவல்களும் வாசிப்பவர் சார்ந்து விரிந்து செல்லும் சாத்தியம் கொண்டவை.
ஃபீனிக்ஸ் செட்டில்மென்டின் ஓடைக்கரையில் நாராயணனின் முன் நிற்கும் காந்தியும், ஸ்ரீரங்கம் கோவிலில் ரங்கநாதரின் முன் நிற்கும் நந்தினியும் கேட்பது என்ன? பெறுவது என்ன? இந்த இரு நாவல்களும் வழிநெடுக கசப்புகளை, தத்தளிப்புகளை வடிகட்டி எடுத்த பின் அன்பின் துயரத்தைப் பேரன்பின் துவக்கமாகக் கொள்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பி, நம்மைத் தனியே விட்டுவிட்டு பின் நகர்ந்து கொள்கின்றன.
[ எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனும், கலைச்செல்வியும் இரண்டாயிரத்திற்கு பின் எழுத வந்தவர்கள். லாவண்யாவிற்கு இது முதல் நாவல். கலைச்செல்வி இன்னும் காந்தியை எழுதி வெளிவரமுடியாத தத்தளிப்பில் இருப்பவர். தொடர்ந்து எழுத இருவருக்கும் வாழ்த்துகளும் அன்பும்]
காயாம் பூ / நாவல் / மென் அட்டை/ காலச்சுவடு பதிப்பகம்/ 2021
குறிப்புகள்:
புத்தகங்களின் விவரங்கள்:
கலைச்செல்வி / நாவல்/
ஹரிலால் – த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
2022 / மென் அட்டை/ தன்னறம் நூல்வெளி – பிரசுரகர்
*** *** ***
லாவண்யா சுந்தரராஜன்
காயாம்பூ/ நாவல்/ மென் அட்டை/ காலச்சுவடு பிரசுரம்/ 2021