பேச்சினும் எழுத்து ஆகச்சிறந்தது

எழுத்து என்பது எப்பொழுதும் கொண்டாடப்படுவதே. அயற்சியாக இருக்கும் தருணத்தில் நீரள்ளி முகம் கழுவுகையில் ஏற்படுமே மனதிற்கு ஓர் இனம்புரியா புத்துணர்ச்சி, அந்த புத்துணர்ச்சி அப்படியே உடலுக்கும் ஒரு உற்சாகத்தைத் தந்து கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்துச் செல்வதைப் போல் எழுத்துகளை கண்கள் வழியே மனதிற்கு அனுப்புகையில் புதிய உலகிற்குள் அதுவரை அனுபவித்திடாத புதுவித அனுபவத்திற்குள் ஒப்புக் கொடுக்க மனம் தயாராகிறது. அந்த மனதில் ஏற்படும் ரசவாதம் புதியதொரு சூழலுக்குள் தன்னைப் பொருத்தி சிறகு விரித்து பறக்கத் துவங்குகிறது. பேச்சினும் எழுத்து ஆகச்சிறந்தது. ஒரு புத்தகத்தை வாசிக்கையில் அது புரட்டிப் போட்டே ஆக வேண்டும் என்ற எந்தவித நிர்பந்தமுமில்லை. அது அமைதியாக உங்களின் உள்ளங்கைப் பிடித்து கொஞ்சமேணும் பேசினாலும் போதும். கொஞ்சம் காலாற நடந்து போகச் செய்து தன்னைப் பற்றி மட்டுமல்லாமல் தன்னோடு உறவாடிய சகமனிதனின் அன்பை அசை போடச் செய்தால் அது ஒரு நல்ல எழுத்து எனலாம்.

அப்படி சமீபத்தில் வாசித்த சிறுகதை தொகுப்பு தவிப்பூ. மகேஷ்குமார் செல்வராஜ் (ம செ) எழுதிய இந்த சிறுகதை தொகுப்பிற்கு அட்டைப்படம் ம செ (மணியம் செல்வன்) வரைந்துள்ளார். வாழ்த்துரையை நாஞ்சில் நாடன் எழுதி வாழ்த்தியுள்ளார். அணிந்துரையை வ.ஸ்ரீநிவாசன் எழுதித் தந்து பாராட்டியுள்ளார். சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டுள்ள இந்த சிறுகதை தொகுப்பானது மொத்தம் பதினேழு கதைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு வகையில் முத்திரை கதையாக இருப்பதே முத்தாய்ப்பானத் தனிச்சிறப்பு.

தவிப்பூ எனும் முதல் சிறுகதையே தொகுப்பிற்கு தலைப்பாக உள்ளது. மிக நுட்பமாக திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்ணின் அக உணர்வுகளை அன்பின் ஆழத்தை பேரமைதியோடு மிக அழுத்தமாக எழுதியிருக்கிறார். எழுத்தின் வழியே உணர்வுகளை மிக சரளமாக கடத்துகிறார். நிலப்பரப்பை வர்ணிக்கையில் அதனூடாக நம்மை கைப்பிடித்து அழைத்துச் சென்று அந்த சூழலுக்குள் பொருந்த வைப்பது பேரழகு. சிறுகதைக்கான இலக்கணத்தை மீறாமல் இயற்கையோடு இணைந்த இலக்கியமாக உணர வைக்கிறார்.

செவலை தான் இந்த கதையின் நாயகன். கிராமத்து சாலைகளில் புழுதி பறக்காமல் மழை பெய்து முடித்த பின் இருக்கும் அமைதியோடு இலைகளில் தேங்கி நின்று சொட்டும் கடைசி நீரென கண்ணீரை சொட்ட வைக்கிறார். இப்படி ஒரு வாழ்வை வாழாமல் தொலைத்து விட்டோமே என ஏங்க வைத்து நம் விரல் பிடித்து பானை வனைதலைப் போல முடிக்கையில் கையில் அப்பிக் கிடக்கும் சேறே அதற்கு சாட்சி. எங்காவது உடைந்து கிடக்கும் பானையையோ அல்லது புதுப்பானையையோ பார்க்கையில் செவலையின் உழைப்பு கண்முன் வந்து போகும். அதனினும் தவிலோ, பறையோ இசைக்கையில் பார்க்கையில் நம் விரல்கள் அனிச்சையாக தொட்டுத் தடவினால் அதுவே செவலைக்குக் கிடைத்த வெற்றி.

வேப்பம்பூ வாசம் சிறுகதையின் வழி கசப்பேறிய வேப்பம்பூவை குழம்பாக்கி இனிக்க இனிக்க சுவைக்க கொடுத்தால் அதுதான் அந்த சிறுகதை பேசும் பேரிலக்கியம். எளிய மனிதர்களின் வீடானது கான்கிரீட் காடுகளினின்று தனித்துப் பேசி ஓங்கிக் குரல் கொடுக்கும் உயர்ந்ததொரு கட்டிடம் எனலாம். ஜவ்வாது மலைக் காற்று முகத்தில் வீச குதூகலத்தோடு அந்த களத்தில் அமர்ந்து வீட்டையும் வேப்பம்பூ குழம்பையும் இயற்கையையும் நேசிக்கும் மனம் வாய்ப்பதென்பது மனதிற்கு திகட்டாமல் கிட்டிய மாதவம்.

அதீதத்தின் ருசி கிராமத்து வாழ்வியலை அவர்களின் மன உணர்வுகளோடு கலந்து புலம்பலை புறந்தள்ளி வாழ்வை வார்த்தைகளின்றி அவதானிக்கச் செய்து மன அமைதியோடு அமர்ந்து மண்ணை தன் மனதிற்கு ஏற்றவாறு மாற்றி அதற்கும் ஒரு ருசியை கொடுத்த மகத்துவத்தை உணர்த்தும் ஆழமானதொரு சிறுகதை. பெண்களின் அக உணர்வுக்குள் சலிப்பு, இயலாமை, அவமானம் எல்லாவற்றையும் அண்டவிடாமல் நுட்பமானதொரு மன வடிவை கட்டமைத்து பிரபஞ்சத்தை தன் உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டதொரு உணர்வைத் தரும் அதீத்தின் ருசி பெண்களின் பேராளுமையை பறைசாற்றுகிறது. பெண்களுக்கு பெயர்களே இல்லாமல் எல்லாவற்றிலும் நம்மை பொருந்தச் செய்யும் லாவகம் தான் இந்த எழுத்தின் பலம். அதனினும் அந்தந்த பெண்களின் குணாதிசயங்களுக்கேற்ப நாமும் மாறுவது வாசித்து முடித்த பின் “அட, ஆமால்ல” என போட வைப்பதே சாட்சி மிகுந்த அத்தாட்சி.  

மன்னன் நிலம் ஒரு கூத்துக் கலைஞனின் வாழ்வை பெருங்குரலெடுத்துப் பேசுகிறது. அன்பின் அரூபம் இப்படித்தான் இருக்குமா என யோசிக்கவும் நேசிக்கவும் வைக்கிறது. இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் மகள் கிடைத்திருக்கிறாள் விளையாடிக் கொண்டிருக்கும் மகளை இழுத்து அணைத்து முத்தம் கொடுக்க வைக்கிறது. ஓங்காரமாய் நின்ற மெய்யே சுழித்து ஓடும் கங்கைக்குள் வாழ்வின் சிடுக்குகளை எப்படி தீர்க்க என யோசிக்க வைக்கிறது. தாயே எந்தன் மகளாய் பேசும் ஒற்றை வரி ஆட்டக்காரனோட பலம் ஆட்டத்த சுவாரஸ்யமாக்குறதுலதான் இருக்கு எனும் போதே வாழ்க்கையோட நம்பிக்கைய பிடிச்சி இந்தான்னு கைல குடுக்குது.

வெந்து தணியும் நினைவு அம்மாவென்று அரற்றத் தோணுகிறது. நேசத்தே நின்ற பழைய நட்புகளை தேடி ஓடி கட்டியணைத்து மீண்டும் நட்பு கொள்ளச் செய்கிறது. பொங்குமாங்கடலில் நடக்கும் வதை ஒரு இரவில் நடக்கும் சூழலை ஒரு ஓவியத்தைப் போல் தீட்டிச் செல்கிறது. அப்பாவின் குரல் வழியே மிகுந்த நம்பிக்கையையும் பொறுமையையும் இந்த வாழ்வின் தீராப் பக்கங்களை எழுதுவதற்கு ஊன்றுகோலாக இருக்கிறது. மெய்யை அலங்கரிக்கும் பொய்கள் வாழ்வின் பகடையாட்டத்தை உள்ளே வெளியே என ஆட வைக்கிறது. ஊர்ப்பிரவேசம் பறக்கும் தும்பிகளை பிடிக்க விடாமல் செய்கிறது. புளிசாதம் ஒரு கவளச் சோற்றின் ருசியை சுவைக்க வைக்கிறது.

இன்னும் இந்த கதைகள் பற்றி நிறைய எழுதலாம் தான். ஒரு புத்தகத்தோட பலம் அந்த புத்தகத்த சுவாரஸ்யமா வாசிக்குறதுலதான் இருக்குதுங்குற மாதிரி இருக்கு இந்த எழுத்து. அங்கங்க இல்ல, நிறைய இடத்துல மனசு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு கண்ணு வேர்த்துச்சு. இந்த எழுத்து என்னமோ செய்துச்சிங்குறது நெசம்.
அணிந்துரையில சொன்ன மாதிரி, நிம்மதியான காலங்களில் இந்தக் கதைகள், இவற்றை வாசிப்பவர் மனதுக்குக் குதூகலத்தைத் தரும். பொய்மையாலும் பகைமையாலும் வருந்தி மனம் சோர்வுற்ற காலங்களிலும் இவை வாசிப்பவருக்கு அமைதியை நம்பிக்கையைத் தரும். அவ்வாசகர் எங்கிருந்தாலும் அவ்விடத்தில் சற்று நேரத்துக்காவது சாந்தி நிலவும் என்பதற்கு நானும் உடன்படுகிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.