
கடந்த ஐந்தாண்டுகளில் தரமான இணைய இதழ்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அது புதிதாக எழுதுபவர்களின் எழுத்துக்களை எளிதாக வாசிப்பவரிடம் கொண்டு சேர்த்தது. இப்படி இணைய இதழில் எழுதத் தொடங்கி தமிழ்ச் சிறுகதை உலகில் முக்கியமான பகுதியாக சில எழுத்தாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது. கமலதேவி, காலத்துகள், கே ஜே அசோக்குமார், சுஷீல் குமார், வைரவன் போன்ற பலரைச் சொல்ல முடியும். இணைய இதழ்களில் படைப்புகளை வெளியிடுவது மிகச் சுலபமாக இருக்கிறது. ஆனால் இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டுப் பெருந்தொற்றுக் காலத்தில் சிறுகதைகள் எழுதுவது மிகவும் குறைந்து விட்டதோ என்று நினைக்கக் காரணமாக இருந்த காலகட்டம். ஆனால் அதைப் பொய் என்று கடந்த மூன்றாண்டுகளில் வெளியாகியிருக்கும் சிறுகதைத் தொகுப்புகளின் கணிசமான எண்ணிக்கை நிரூபித்திருக்கிறது. அதில் நான்கு தொகுப்புகளை இந்த கட்டுரை மூலம் அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன்.[1]
இந்தக் கட்டுரையின் மூலம் இரண்டாண்டுகளுக்குள் வெளியான ரா. செந்தில்குமார், பிரமீளா பிரதீபன், சங்கரநாராயணன் மற்றும் அமுதா ஆர்த்தி ஆகியோரின் சிறுகதைத் தொகுப்புகளில் கண்டுணர்ந்த சில விஷயங்களை பதிவு செய்திருக்கிறேன். அவை “இசுமியின் நறுமணம்”, “விரும்பித் தொலையும் காடு” , “விறலி” மற்றும் “பருந்து” தொகுப்புகள். [2]
ரா செந்தில்குமார், சங்கரநாராயணன் மற்றும் அமுதா ஆர்த்தி மூவரின் தொகுப்புகளும் அவர்களின் முதல் தொகுப்புகள். பிரமீளா பிரதீபனின் தொகுப்பு அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. ஆனால் தமிழகத்தில் வெளியாகும் முதல் சிறுகதைத் தொகுப்பு.
இந்த தொகுப்புகள் வெவ்வேறு நிலப்பரப்பை மையமாகக் கொண்டவை. ரா செந்தில்குமாரின் தொகுப்பு ஜப்பானிய நிலப்பரப்பில் ஆழ்ந்தூறியது. பிரமீளாவின் கதைகள் நிகழ்வது இலங்கையில். சங்கரநாராயணன் கதைகள் தமிழகத்துள் உலா வருகின்றன. அமுதா ஆர்த்தியின் கதைகள் நாஞ்சில் நாட்டையும் அதன் வட்டார வழக்கையும் மையம் கொண்டுள்ளன.
ரா.செந்தில்குமார் மன்னார்குடியில் பிறந்து ஜப்பானில் வசிப்பவர். பிரமீளா இலங்கையைச் சார்ந்தவர். சங்கரநாராயணன் திருச்சி மாவட்டம் காணக்கிளிய நல்லூரில் பிறந்து சென்னையில் வசிப்பவர். அமுதா ஆர்த்தி கன்னியாகுமரி மாவட்டம் தினவிளை என்ற ஊரில் பிறந்து கொல்லாஞ்சிவிளையில் வசிப்பவர். நால்வரும் அவரவர் வசிப்பிடம் சார்ந்த கதைகளை எழுதியிருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த நான்கு தொகுப்புகளும் தமிழ்ச் சிறுகதை உலகுக்கு வெவ்வேறு வெளிச்சத்தைப் பாய்ச்சுவதாக இருக்கின்றன.
ரா செந்தில்குமார் கதைகள் அபாரமான வாசிப்பனுவத்தைக் கொடுக்கின்றன. இசுமியின் நறுமணம் தொகுப்பில் பன்னிரண்டு கதைகள் உள்ளன. அவற்றில் அறுபது சதவிகிதக் கதைகள் ஜப்பானிய மண்ணில் நிகழும் கதைகள். இவற்றை வாசிக்கும் போது வாசகர் ஜப்பானிய மண்ணின் சகுரா மலரின் மணத்தை நுகர, மேபிள் இலைகள் நிறம் மாறும் போது அதைக் காண, அப்போது உலவும் டிசம்பர் மாதக் குளிரை உணர, உகியிசு குருவியின் பாடலைக் கேட்க, கதைகளில் இடம் பெற்றிருக்கும் ஜப்பானிய உணவுப் பண்டங்களை உண்ண, அது பட்டியலிடும் மது பானங்களுக்கு ஏங்க, அந்த நிலத்தின் ஆடை அலங்காரங்களை அறிந்து கொள்ள, காலச்சார, பண்பாடுகள் தேடிச் செல்ல வேண்டிய ஆவலைக் கண்டிப்பாகத் தூண்டும். இவரது கதைகளில் பேசப்படும் அந்நிய நிலப்பரப்பு கண்களால் காணா விட்டாலும் நமக்கு அந்நியமாக இல்லாதது செந்தில்குமார் எழுதியிருக்கும் கதைகளின் சிறப்பம்சம். நிலப்பரப்பு மட்டுமல்லாது இரண்டாம் உலகப்போரின் துன்பியல் வரலாற்றுச் சின்னங்கள், சாமுராய் சார்ந்த தொன்மக் கதைகள், ஜப்பானிய உடைகளின் வர்ணிப்பு, நிலப்பரப்பில் மேபிள் இலைகளில் மழைக்குப் பின்னால் வழியும் நீர் இவை எல்லாம் நாமே கண்டது போல உணர செய்யும் வாசிப்பனுவம் அலாதியானது என்று சொல்வது மிகையில்லை. இந்தக் கதைகள் தமிழ்ச் சிறுகதைவெளிக்கு முற்றிலும் புதியவை. மீதமிருக்கும் நாற்பது சதவிகிதம் கதைகள் ஏதோ ஒருவிதத்தில் நன்கு வாழ்ந்தவர்கள், அதன் எதிர்முனைக்குச் சென்று கையறுநிலையில் நிற்கும் எதார்த்தம் சொல்லும் கதைகள். இது போன்ற கதைகள் பல எழுதப்பட்டிருந்தாலும் இவர் சொல்லும் விதம் புதியது மேலும் முக்கியமானது.
இவரது தொகுப்பு குறித்து, ஒற்றை வரியில் சொல்வதென்றால் “இருண்மையைக் கடக்க உதவும் துன்பியல் பாடல்கள்” என்று சொல்ல வேண்டும். இந்த வரியும் அவரது ஒரு கதையில் சொல்லப்பட்டிருக்கும் ஜப்பானிய வார்த்தையொன்றின் பொருளிலிருந்து எடுக்கப்பட்டது. இத் தொகுப்பின் தலைப்புக் கதையான ‘இசுமியின் நறுமணம்’ என்ற ஒரே ஒரு கதையைத் தவிர, பிற எல்லாக் கதையிகளிலுமே பிரிவு, ஏமாற்றம், மரணம், தற்கொலை, நம்பிக்கைத் துரோகம், அவமானம், துன்பியல் போன்ற இருண்மைகள் இருக்கின்றன. ஆனால் அந்த இருண்மைகள் அழகிய இசை போன்ற மொழி நடையில் எழுதப்பட்டிருப்பதால் மனதைக் கிழித்து ரணப்படுத்தாமல், துயரத்தைக் கடக்க உதவும் இந்த கதைகளின் கட்டமைக்கப்பட்ட முரண். இந்த உத்தியே அந்தக் கதைகளைத் தனித்துவமாகக் காட்ட அவற்றை மனதை விட்டு நீங்காமல் இருக்கச் செய்கின்றன. காதல் கணவனின் மரணத்தில் முடியும் கதையின் முதல் பகுதியில் பரிபூரணமான காதலும், காதல் மனைவியின் கனவு தேசத்தைப் பற்றிய வர்ணனைகளும் மனதைக் கொள்ளை கொள்கின்றன. தற்கொலையில் முடியும் கதையில் மனமொத்த தம்பதிகள், அவர்களது பிள்ளைகள் மட்டுமல்லாது மனதை மயக்கும் நிலக்காட்சிகளும் வருகின்றன. துரோகமும் வாழ்ந்து கெடுதலையும் காட்டும் கதைகளில் முன்னோர் வாழ்ந்த பெருவாழ்வின் வியப்பும், பெரு நெல்வயல்களும் அவர்களது ஆளுமை சார் வியப்புடன் தொடங்குகிறது. போலவே சமூகம் கொடுத்த ஏமாற்றங்களின் பொருட்டு ஒட்டாத தன்மையுடன் எதிரெதிர் வீடுகளில் வாழும் நாயகனும் நாயகியும் இயற்கைப் பேரிடரின் போது அந்தச் சமூகத்துக்குத் தம்மால் இயன்ற உதவியைச் செய்யச் சொல்வது அழகியல் கவிதை. இந்த முரண் எதுவும் டேபிள்மேட் போலில்லாமல் எதார்த்தக் கதைகளாக எழுதப்பட்டிருப்பது, இந்தக் கதைகளை இன்னும் சிறப்பானதொரு இடத்துக்கு நகர்ந்துகிறது. இந்தக் கதைகளை இன்னொரு விதமாகவும் தொகுத்துப் பார்க்கலாம். அது “அலை பாயும் மனம்” என்ற கருத்தாக்கத்தில் அடங்கலாம். பல கதைகளிலிருந்து இந்தப் பதத்தில் துலங்கும் பாத்திரங்களைப் பட்டியலிட முடியும்.
ரா செந்தில்குமார் கதைகள் பலவற்றில்; சொல்லப்படும் கதையும் அதற்குள் சொல்லாத கதையும் ஒன்றாக இயங்குகின்றன. கதைக்குள் கதை சொல்லுதல் பழைய உத்தி தான் என்றாலும் அதைக் கதையோடு புனைந்திருக்கும் விதம் இந்தக் கதைகளை வித்தியாசப்படுத்துகிறது. தகவல் தொழில்நுட்பப் பின்புலத்தில் தொடங்கும் கதையொன்று வரலாற்றில் நிகழ்ந்த துன்பியல் உண்மைகளை மது போதையில் தனது சக பணியாளரிடம் சொல்வது தனிக்கதையாக விரிவது அந்த வகைமையில் சேரும். ‘தானிவத்தார’ கதையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துணையைக் கவர வெவ்வேறு பாடல்களைப் பாடும் உகியிசு குருவி – கதையில் ஒரு குறியீடு. அந்தக் குறியீட்டைக் குறிக்கும் கதை சொல்லப்படுமிடத்தில் இந்தக் குறியீடுக்கான அழுத்தத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. மலரினும் மெல்லியது என்ற கதையில் ” தெரியாத மனுசன் என்ன பெரிய தீமையைச் செஞ்சுட முடியும்?” என்ற கேள்வியை, கதையில் ஒரு கதாபாத்திரம் இரண்டு முறை கேட்கிறது. அது இரண்டாம் முறை கேட்கும் போது அதன் ஆழம், அந்த கேள்விக்கான கதையின் ஆழத்தை இன்னும் அதிகமாக்குகிறது.
இந்தத் தொகுப்பில் எழுதப்பட்ட கதைக்குள் கதை உத்தியின் உச்சம் ‘சிபுயா கிராஸிங்’ கதையின் ஆரம்பத்தில் வரும் கதாநாயகியின் மனச்சிதைவைக் காட்டும் சித்திரங்கள் எல்லாமே அற்புதங்கள். அது தனிக் கதையாக விரியும் போது அந்தப் பெண் இரக்கத்துக்குரியவளாக மாறிவிடுகிறாள். தொகுப்பின் தலைப்பிட்ட கதை ‘இசுமியின் நறுமணம்’ வெளிப்படுத்தும் தந்தைமை, தமிழ்க் கதைக்களத்துக்கு மிகவும் புதியது. அதற்கு அப்படியே முரணுடன் வரும் ‘மடத்து வீடு’ கதையும் மனதைக் கீறிப் பார்க்க வல்லது. ‘வயதான பிறகு கூடையில் வைத்துச் சுமந்து வந்து மிருகங்கள் உலவும் அந்த மலையில் தனியே விட்டுப்போன மகனை நினைத்து அழும் கிழவியை’ என்ற வரியும், ‘ஒரு அறைக்குள் தமது வாழ்க்கையைச் சுருக்கிக் கொண்டவர்கள் ஜப்பானில் பதினைந்து லட்சத்திற்கும் மேலான போது’ என்ற வரியும், படிக்கும் போதே அதிர்ச்சியை கொடுக்க கூடியவை. இது போன்ற அனுபவங்களும் தமிழ் சிறுகதைக்குப் புதிது.
பிரமீளா பிரதீபன் கதைகள் மூன்றாம் தொகுப்புக்குரிய பக்குவத்துடன் இருக்கின்றன. இத் தொகுப்பில் பதினொரு கதைகள் இருக்கின்றன. எல்லாக் கதைகளிலுமே பெண் என்பவள் இரக்கத்திற்குரியவளாக இருக்கிறாள். இதில் வரும் மாட்டியா என்ற ஒரே ஒரு கதையில் மட்டும் மையப் பாத்திரம் ஆணாக இருக்கிறது. பிற எல்லாக் கதைகளிலும் பெண் பாத்திரங்களும் அவர்களின் பாடுகளுமே கதையாகியிருக்கின்றன. வழக்கமான கதைகளன்களான பெண்கள் மீது நிகழும் பாலியல் சுரண்டல்கள் (உரபுழுக்கள், அது புத்தனின் சிசுவல்ல), உழைப்புச் சுரண்டல்கள்(ஒரு அரசமரமும் சில வௌவால்களும்), தீரா நோயின் போது மனிதாபிமானமின்றி நடந்து கொள்ளும் கணவன் (பகற்கனவு), பெண்களுக்கு தன் இணையால் கிடைக்கும் ஏமாற்றங்கள் (ஜில் ப்ராட்லி, ஓரிரவு, விரும்பித் தொலையும் காடு) என்ற கதைகள் இருந்தாலும், அவை சொல்லப்பட்ட விதம் இந்தக் கதைகளை வேறு கண்ணோட்டதோடு பார்க்க வைக்கிறது. கதைக்குள் சொல்லப்பட்டிருக்கும் இலங்கை நிலப்பரப்பு அதன் இயற்கை வளம் சார்ந்த வர்ணனைகள் கதையோட்டத்தோடு அவற்றை அழகாகப் பொருத்தி எழுதியிருக்கும் தன்மை எல்லாம் பாராட்டவல்லதாக இருக்கிறது.
இந்தத் தொகுப்பில் சில கதைகளில் அயல் இலக்கியத்தோடு குறிப்பாக ஓவியத்தோடு தொடர்புள்ள சில காட்சிகள் வருகின்றன. அவற்றைப் படிக்கும் போது ஆச்சரியமாகவும், அவற்றைத் தேடிப் போய்ப் பார்க்கவும் அவை வழி செய்கின்றன. ‘ஜில் ப்ராட்லி’யில் சல்வடார் டாலியின் ஓவியம் சார்ந்த குறிப்புகள் வருகின்றன. ஓவியர் பிரைடாகா மற்றும் ஓவியர் வின்சென்ட் வன்ஹொஹ் குறித்த குறிப்புகளும் வருகின்றன. இன்னொரு கதையான ‘ கமீலே டொன்சியுக்ஸின் ஜோடித் தோடுகள்’ என்ற கதையில் பிரெஞ்சு ஓவியரான க்ளாட் மோனேயின் னோவின் முதல் மனைவி கமீலே டொன்சியுக்ஸ் பற்றிய கதையை அவள் அணிந்திருந்த தோடுகள் இந்தக் கதை சொல்லியிடம் சொல்வது போல வருவது மிக வித்தியாசமான கற்பனை. க்ளாட் மோனேனா தன்னுடைய முதல் மனைவியை மாடலாக வைத்து வரைந்த ‘பச்சை ஆடை உடுத்திய பெண்’ என்ற உலகப் புகழ் பெற்ற ஓவியம் சார்ந்த குறிப்புகளும் வருகின்றன. அயல் இலக்கியம் மட்டுமின்றி சேக்கிழார் நாயனார் புராணம் சார்ந்து வரும் ஒரு தொன்மத்தைப் புனைவாக விரித்து எழுதிய நீலி என்ற கதை, மற்றும் யசோதரையின் தியாக தொன்ம அடியொட்டி எழுதப்பட்ட ‘அது புத்தனின் சிசுவல்ல’ என்ற கதை, எல்லாம் க்ளிஷே-வாக இல்லாமல் தனது கற்பனையில் வரைந்து மாறுபட்ட புனைகதைகளாக மாற்றிய பிரமீளா பிரதீபன் பாராட்டுக்குரியவர். பிரமீளா படைத்திருக்கும் கதை உலகம் கலைகளையும், கலைஞர்களையும் அவர்களது தன் நிலை மறந்த மிதக்கும் உலகத்தையும் பேசுகிறது, அதுமட்டுமல்லாமல், சராசரி மனிதர்களில் சாமானியக் கதைகளையும் பேசுகிறது. ஓவியக் கலையின் நுட்பங்கள் மட்டுமல்லாது யோகப் பயிற்சியின் நுட்பங்களை விவரமாகப் பேசும் கதைகள் இருக்கும் இதே தொகுப்பில் எளிய மனிதர்கள் புழங்கும் உரப்புழுக்கள், ஒரு அரசமரமும் சில வௌவால்களும், போன்ற கதைகள் யதார்த்தக் கதைகளாக இருக்கின்றன.
பிரமீளாவின் கதையுலகம் உருவகங்களால் நிறைந்து எழுதப்பட்டுள்ளது. விரும்பித் தொலையும் காடு கதையில் வரும் காடு ஒரு உருவகம். காடு – இதில் பெண்ணை தன் இயல்பைத் தொலைக்கும் எதோடும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். நீலி கதையும் உருவகக் கதைக்கு அருகில் நிற்கும் கதையே. இலங்கையின் தேசக் கொடியில் நான்குபுறமும் இருக்கும் அரச இலைகள் குறிப்பு இருக்கும். ஒரு அரசமரமும் சில வௌவால்களும் கூட அப்படிப்பட்ட உருவகக் கதையே. அந்தக் கதையின் அரசமரம் ஈழ நாடு போலவும் வௌவால்கள் என்று அந்த நாட்டின் அமைதியைக் குலைக்கும் எல்லோரையும் குறிக்கும் உருவகம் போல அதனைப் பார்க்கலாம். சிங்களர்களுக்கு தமிழீழப் போராளிகளும், தமிழீழப் போராளிகளுக்கு சிங்களர்களும், பொது மக்களுக்கு இவ்விருவருமே அந்த அரசமரத்தை சதா அசுத்தமும் துர்நாற்றமும் கொணர்ந்து, அமைதியான அழகான வீட்டைத் தனது அடி வேர்களால் சிதைக்கும் ஒன்றாகவே இந்தக் கதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ‘அரசமரத்து நிழலில் பிள்ளையார் விரும்பி உறைவார் என்ற நம்பிக்கையையும், அதன் கிளைகளுக்கிடையே தெரியும் வெளிகளுக்கூடான மாலைநேர மஞ்சள் வெயிலைத் தரும்’ என்று சொல்லப்படும் வரிகளில் அழகியலுக்கு அருகே இருக்கும் அரசமரம் அமைதியைக் குலைக்கும் உருவகமாகக் கட்டி எழுப்பியிருக்கிறார் கதாசிரியர். அந்த வகையில் விரித்துப் பார்த்தால் ‘அது புத்தனின் சிசுவல்ல’ ஒரு பெண்ணியக் கதையாக விரிவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் கொண்ட கதை. இவரது தொகுப்பு கடத்தும் ஒட்டு மொத்த உணர்வு – கனவு வசப்பட்ட நிலையை வெளிப்படுத்தும் கலையைப் பேசும் கதைகள்.
அறிமுக எழுத்தாளர் சங்கரநாராயணனின் முதல் தொகுப்பு விறலி. இந்தத் தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. எல்லாமே யதார்த்தக் கதைகள். இரண்டு கதையைத் தவிர எல்லாக் கதைகளிலுமே பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகள் பேசப்படுகின்றனது. அது வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் நியாயம் கோரும் கதைகளாகவும், தான் சார்ந்திருக்கும் ஆண்மகனை ஏதேனும் ஆறுதல் தரும் பெரும் பெண்களின் மனச்சிடுக்குகளைப் பேசும் கதைகளாகவும் இருக்கின்றன. பெரும்பாலும் இவை பெண்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் கதைகளாகச் சித்திதரிக்கப்பட்டாலும் இவற்றின்தன் பின்னால் உள்ளடங்கிய, ஆண் ஆணவம் பொங்கி ஆரவாரம் செய்யாத, பெண்களைப் பாதுகாக்கும் கதாநாயக பாவம் கொண்ட ஆண்களின் கதைகள் என்று சொல்லலாம். இவ்வகைக் கதைகளில் சொற்ப அளவில் அற்பமான விஷயங்களுக்கும் தனக்குள்ளேயே பெருமிதம் கொள்ளும் ஆண் அகங்காரத்தைப் பெண் உடல் தலைகீழாகச் சாய்ப்பதைச் சொல்லும் கதைகள், சவாரி விளையாட்டு மற்றும் பச்சை. பெருநகர் கலாசாரத்துகாலச்சாரத்து நவீன ஆண்கள், ஆணவம் பிடித்த கிராமத்து ஆண் இருவர்க்கும் இந்தச் சரிவு கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. பெரும்பாலான கதைகளில் எவ்வளவுக்கெவ்வளவு பெண்களின் சிக்கல்கள் பேசப்படுகின்றனவோதோ அதே அளவுக்கு சிடுக்குகளில் ஆண்களும் சிக்கி இருக்கின்றார்கள். ஆண்கள் ஒரு கருவியாக மட்டுமே இருக்கின்றார்கள். ‘‘மறந்துட்டேன், அதுக்காகத் தலைல அடிப்பியா’ என்று கடவுளையே கேள்வி கேட்பவர்களாக இருக்கும் இவரது பெண் கதாபாத்திரங்களுக்கு, ஆண்கள் ஒரு கருவியாக மட்டுமே இருக்கின்றார்கள். இப்படி, ஆண், பெண் இருவரின் அகம், புறம் சார் கதைகளைப் பேசும் பாணியை, இந்த சமநிலை பேணுதலே, இவர்கள் கதைகளில் இருக்கும் தனிச் சிறப்பு என்று சொல்லலாம். இவ்வகைமையில் அடங்காத இரண்டு கதைகள் நாவிதம் மற்றும் கடவுளால் கைவிடப்பட்டவனின் கடைசி ஓவர். இவ்விரண்டும் சில ஏற்றத்தாழ்வுகளைப் பேசுகின்றன. ஒன்று சமூக ஏற்றத்தாழ்வு இன்னொன்று நிறுவனத்தில் நிகழ்த்தப்படும் ஏற்றத்தாழ்வு.
கதைக்குள் கதை சொல்வது, உணர்வைச் சூழல் மீது ஏற்றிச் சொல்வது இவை அனைத்துமே சங்கரநாராணயனுக்கு சாதாரணமாய் வருகின்றது. உணர்வை, சூழல் மீது ஏற்றிச் சொல்லும் சித்திதரிப்பு அகல்யா கதையில்ன் இரண்டு இடத்திலும், மன்னிப்பு கதையிலும் வருகிறது. மன்னிப்பு கதையில் கதை சொல்லியின் மனப்பிறழ்வு போன்ற ஒன்று அவன் நாசிக்கு மட்டும் உணரும் மண்ணெண்ணெய் வாசனை அவனுடைய குற்ற உணர்வன்றி வேறு எதுவாக இருக்க முடியும்? அதே போல அகல்யா கதையின் இறுதியில் அறையிலுள்ள பொருட்கள் எல்லாம் அவனை ஆர்வமாகப் பார்ப்பது போல் எழுதிய வரி கதைசொல்லியின் மகிழ்ச்சியைச் சுட்டிக் காட்டும் குறிப்பு. மேலும் இந்தக் கதைகளில் வரும் அப்பா மகன் உறவு சார்ந்த சித்திரிப்புசித்தரிப்புகள் மிக அற்புதமானது. அகல்யா கதையில் ‘அவனைப் பார்த்துத் திரும்பியிருந்த சைக்கிளின் முன்சக்கரம், ‘என்னடா இதெல்லாம்?’ என்று முறைப்பதுபோல் இருந்தது.’ இந்த வரிகள் கிளர்த்தும் குற்ற உணர்வை சூழல் மீது ஏற்றிச் சொல்வதோடு தந்தை மீது மகனுக்கு இருக்கும் மரியாதை கலந்த பயத்தையும் அழகாகக் கடத்திவிடுகின்றனது. அதே போலவே நாவிதம் கதையில் அப்பா மீதான பயம் கலந்த மரியாதைசார் இன்னொரு சித்திரமும் உண்டு. மேலும் அந்தக் கதையில் கதை சொல்லியின் பால்ய கால நினைவுகள் மிக அழகாகப் பதிவாகியிருக்கின்றன. அந்தக் கதையில் வரும் சலூன் கடைச் சித்திதரிப்புகள் மற்றும் அந்தக் கதைசொல்லி சொல்லும் பால்ய கால சித்திரிப்புகள் எல்லாம் வாசகர்களில் மனதில் பால்ய கால நினைவுகளைக் கட்டாயம் கிளர்த்தும்.
சங்கரநாராயணனின் கதை எல்லாமே திரைப்படம் போல மூன்று மணி நேரத்தில் முடியாமல் வாழ்வைப் போல இது தான் முடிவு என்று அறுதியிட்டுக் கூற முடியாமல் முடியும் கதைகளாக இருக்கின்றன. இதை அவர் வார்த்தையாலேயே சொல்ல வேண்டுமென்றால் ‘தான் நினைத்தபடி ஒருநாளும் தன்னை விளையாட அனுமதிக்காதா இந்த விளையாட்டு’ இந்த புதிர்தன்மையுடனான கருப் பொருளும் கதை முடிவும் இந்தக் கதைகளை மனதோடு அசை போட்டு மகிழ வழி செய்கின்றன.
இந்த கதைகள் பெரும்பாலும் பெருந்தொற்றுக் காலத்தில் ஊரடங்கு காலத்தில் எழுதப்பட்ட கதைகளாக இருக்கலாம், அகல்யா கதையில் அந்தக் காலகட்டத்தின் சித்திரிப்புசித்தரிப்புகள் வருகின்றன. மேலும் மன்னிப்பு கதையில் ‘மின் விசிறி ஓடும் சப்தம் மட்டும் கேட்கும் அறை போல ஓடும் பேருந்தின் சப்தம் மட்டுமே கேட்கும் அமைதியான பயணம்’ மற்றும் ‘ கைவிடப்பட்ட நிழற்குடையும் பெரியார் சிலையும் மட்டும்தான் இருந்தன’ போன்ற சித்திரிப்புசித்தரிப்புகள் அதனை உறுதி செய்கின்றன. வீட்டுக்குத் தூரமான பெண்களை ஊர்ப் பள்ளியில் கொண்டு போய் விடும் வழக்கம் ஒருகாலத்தில் இருந்தது என்பதை வாசிக்கும் போது வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடும். அதைப் பதிவு செய்வது மிக முக்கியமானது. அதே போல இன்னொரு கதையிலும் வீட்டுக்கு விலக்கான பெண்களைக் கடவுள் பெயர் சொல்லித் தனிமைப்படுத்தும் சித்திரிப்புசித்தரிப்பு வருகிறது. இரண்டு இடங்களையும்ளுமே பிரச்சார தொனியில்லாமல் புனை கதையாகத் தீட்டி இருப்பது சங்கரநாராயணின் எழுத்தின் நேர்த்தியால் சாத்தியமானது.
அறிமுக எழுத்தாளர் அமுதா ஆர்த்தியின் பருந்து தொகுப்பு பதினான்கு கதைகளைக் கொண்டது. இந்தத் தொகுப்பு பேசும் பெண் பாடுகள் மிக வித்தியாசமானவை. கணவனால் துரத்தப்பட்டு எங்கே இரவைக் கழிப்பது என்று திண்டாடும் பெண்ணின் கதை தமிழ்ச் சிறுகதைகளில் இதுவரை நான் படித்திராத களம். அமுதாவின் கதைகளில் கணவனால் கைவிடப்பட்டுத் தனித்தலையும் பெண்(இரவை வெளிச்சமிடும் வானம்), வீடு தொலைத்து வாழ்க்கையைத் தேடி அலையும் ஆண்(நெகிழிக் கனவு), மனநலம் குன்றி தன்னிலை மறந்து எங்கோ கிளம்பி எங்கோ சென்றுவிடும் நடுவயதுப் பெண்ணும்(கடல் கரம் பற்றிய தடம்), கைவிடப்பட்ட முதியவர்களும்(கரிச்சான்) நிறைந்திருந்தாலும் கொலுசுக்கு ஏங்கும் குழந்தைப் பெண்(வெற்றுடல் குளம்), செல்லக் கோபத்தோடு பெரிய ஆடு என்று அழைக்கப்பட்டும் தாத்தாவின் நினைவுகளைக் கொண்டாடும் பெண் (பெரிய ஆடு), ‘பாவாடையில் பலூன் எடுத்து மூச்சு வாங்காமல் ரொம்பநேரம் தண்ணியில நிக்கலாம்’ என்று விளையாடும் பெண்(ஆம்பக்காய்), பருந்துக்குஞ்சைப் பாதுகாக்க நினைக்கும் பெண்(பருந்து) என்று பெண் குழந்தைகளின் பால்ய காலத்தால் நிறைந்திருக்கும் கதைக்களம். விளிம்பு நிலை மக்களின் கதைகளாகவும் இவரது கதைகளைப் பார்க்கலாம். ஒற்றை மின்விளக்குள்ள வீடு, குடியிருக்க வீடில்லாமல் கல்லறையின் மேல் இரவைக் கழிக்கும் மனிதர்கள், கழிவறை கூட இல்லாத வீட்டில் வசிக்கும் மனிதர்கள்(கரிச்சான், நெகிழிக் கனவு), தெருவோரம் வசிக்கும் மனம் பிறழ்ந்த மனிதர் (அடையாளம் அற்றவனின் ஆடை), பிள்ளைகளால் கைவிடப்பட்tஉட வாழ்வாதாரத்துக்கு அரசாங்க உதவித்தொகையை நம்பியிருக்கும் மனிதர் என்ற வறுமையின் தவிப்பிலிருக்கும் மனிதர்களின் உணர்வுத் தடுமாற்றங்களை, வாழ்க்கைப்பாடுகளை அழகான கதைகளாக்கியிருக்கிறார். வாழ்க்கைத் தடுமாற்றத்திலும், பொருளாதார நெருக்கடியிலும் அடிப்படை உணர்வுகள் ஒரே வடிவத்தில் தான் இருக்குமென்பதைப் பல கதைகள் காட்டுகின்றன. அதனை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் கதை கரிச்சான்.
அமுதா ஒரு கவிஞரும் கூட என்பது இவரது கதை வரிகளில் வரும் காட்சிப்படிமங்களைக் கொண்டு உணரலாம். ‘கண்ணாடி டம்ளரில் மீதம் வைத்திருக்கும் டீ போல செம்மண் நிலப் பள்ளங்களில் ஆங்காங்கே தேங்கி நின்றது மழைநீர்.’(பருந்து)’ என்று சொல்லுமிடத்திலும், ‘கடற்கரை மணல் ஓவியமில்லா வெற்றுக்காகிதமாய்ப் பரந்து கிடக்க’.( கடல் கரம் பற்றிய தடம்)’ என்ற வரிகளிலும் கவித்துவம் மிளிரும் காட்சியாக ‘சி.டி.க்களால் ஜொலித்தது கொல்லப்பட்டறை.’(செல்வி)’ என்ற இடத்திலும் சூழலும் கதையும் இணைந்து வாசிப்பை ஆனந்தமாக்குகின்றன. அமுதாவின் கதைகள் சிலவற்றின் உடல் சார் இச்சையும், காமமும் சில குறியீடுகள் மூலம் வலுவாகச் சொல்லப்படுகின்றன. விடலைப் பையனின் காமம் ஒரு நாயின் காமம் கொண்டு எழுப்பும் ஒலி அவனுக்கு வெறுப்பைக் கொண்டு வருதாகச் சித்தரிப்பதன் மூலம் வெளிப்படுகிறது.(செல்வி) உடைமரத்தில் பூக்கள் பூத்திருப்பதை வெட்டிச் சாய்க்கும் பெண், அவளுக்குள் இச்சையாய் மாறும்; இச்சையை அவமதிக்கும் கணவனை எதுவும் செய்ய முடியாத கையறு நிலையைச் சொல்லும் இன்னொரு கதையும் இந்த தொகுப்பில் உண்டு.(அவளது உடை மரக்காடு, வெட்டுக்கத்தி) பருவத்தில் துளிர்க்கும் காதலை அவை கைகூடாமல் போகும் அவலம் பெண்ணுக்கும் கொடுக்கும் வலியைச் சில கதைகள் அழுத்தமாகப் பேசுகின்றன(சைக்கிள் சவுட்டு). ‘சைக்கிள் சவுட்டு’ போன்ற கதைகளில் ஐந்து நாட்கள் தொடர்ந்து சைக்கிள் விடுவது பெண் படித்தறியாத புதிய விஷயம்
அமுதா ஆர்த்தியின் கதைகள் வெவ்வேறானவை அவை ஒட்டு மொத்தமாய் சொல்லும் ஒற்றை உணர்வைப் பிடிக்குள் கொண்டு வருவது மிகவும் சிரமம். நாஞ்சில் நாட்டு நிலக்காட்சிகளையும், அதில் திரியும் கரிச்சான், நீர்ப் பறவை, தவிட்டுக்குருவி, குயில், பச்சைக்கிளிகள், தேன்சிட்டு, பருந்துக்குஞ்சு, பட்டாம்பூச்சி, சேவல், காக்கை போன்ற பறவைகளையும், அல்லி, ஆம்பல்,
செந்தாமரை, தாழம்பூ போன்ற பூக்களையும், பலவகை மீன்களையும் பதிவு செய்திருக்கும் கதைகள் என்பதை கணக்கிலெடுத்து ‘நாஞ்சில் நாட்டு மக்களின் உறவுச் சிக்கல்கள் முரண்பட்ட உணர்வு நிலைகள்’ என்ற ஒற்றை மையத்தைக் கொண்டு இந்தக் கதைகளைக் கட்டி வைக்கலாம்.
தொகுப்பின் பதினான்கு கதைகளில் பனிரெண்டு கதைகளில் வெவ்வேறு பருவத்துப் பெண்களின் ஆசைகள், நிராசைகள், நியாயமான ஆறுதலைத் துணையிடம் தேடும் ஏக்கங்கள், பிள்ளைப் பருவத்துக் கேளிக்கைகள், எளிய ஆனால் நிறைவேறாத பால்ய கனவுகள் என்று வெளிச்சமும் இருளும் இரண்டறக் கலந்த சாம்பல் வண்ணம் கொண்ட கதைகள். மீதி இரண்டு கதைகளில் ஆண்கள் முக்கியப் பாத்திரங்கள்; அவர்களும் விளிம்பு நிலையில் தளும்பும் சிக்கல்களோடு உலா வருகின்றனர். அந்தச் சிக்கல்கள் அகம் மற்றும் புறம் இரண்டிலும் இருப்பதை எந்த வித மெனக்கடலும் இல்லாமல் இந்த கதைகள்ளுக்குள் சித்தரிக்கின்றனது. நெகிழிக் கனவு, இரவை வெளிச்சமிடும் வானம் போன்ற கதையின் களம் தமிழ் சிறுகதைகளில் காணக் கிடைப்பது அரிது. முதல் தொகுப்பிலேயே இவ்வளவு அடர்த்தியான கதைகள் தமிழ் சிறுகதைவெளிக்கு பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
இக்கதைகள் பரப்பும் நிறங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவை நிச்சயமாய் ஒளிர்தலைக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பின் அயல்நிலம் சார் கதைகள் பெரும்பாலும் தமிழ்ச் சிறுகதை உலகத்துக்குப் புதியவை. அவை தங்களை, கதையை மொழிந்து வெளிப்படுத்திக் கொள்ளும் விதம் அபூர்வமானவை. கதையிடைவரும் அந்நிய நிலப்பரப்பின் மொழியும், நிலக்காட்சிகளும் வசிப்பவரின் மனதை வசீகரப்படுத்துபவை.
இந்த நான்கு தொகுப்புகளை அறிமுகம் செய்வதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. எழுத்தாளர்கள் ரா செந்தில்குமார், பிரமீளா பிரதீபன், சங்கரநாராயணன், அமுதா ஆர்த்தி நால்வருக்கும் எனது அன்பு. இவர்களது தொகுப்புகள் பல பதிப்புகள் கண்டு சிறப்பானதொரு வாசகப் பரப்பை அடைய வாழ்த்துகள்.
கட்டுரையின் நீளம் கருதியும் என்னுடைய நேரக் குறைவின் காரணமாகவும் இந்த தொகுப்பில் எழுத நினைத்த இன்னும் சில அறிமுக எழுத்தாளர்களைச் சார்ந்து எழுத முடியாமல் போனது எனக்கு மிகவும் வருத்தத்தைத் தருகிறது.
வைரவன் மற்றும் சுஷில்குமார் இருவரின் முதல் தொகுப்புகளும் இதே காலகட்டத்தில் வந்திருந்தாலும் தற்சமயம் அவர்களது இரண்டாம் மூன்றாம் தொகுப்புகள் வந்துவிட்டதால் முதல் தொகுப்பின் அறிமுகம் மட்டும் அவர்களது படைப்புகளுக்கு நியாயம் செய்வதாக இருக்காது. மேலும் எழுத நினைத்து விடுபட்ட தொகுப்பு லோகேஷ் ரகுராமன் அவர்களின் ‘விஷ்ணு வந்தார்’ தொகுப்பு. நேரம் கிடைக்கும் போது இந்த எழுத்தாளர் படைப்புகளைச் சார்ந்து கட்டாயம் எழுதுவேன் என்று நம்புகிறேன். இந்த கட்டுரை எழுதக் காரணமான சொல்வனம் நண்பர்களுக்கு உளமார்ந்த நன்றி.
***
பின்குறிப்புகள்:
[1] சொல்வனம் சிறப்பிதழுக்காக கட்டுரை எழுத வேண்டி கோரிக்கை வைத்த நண்பர் கிரிதரன் அவர்களுக்கு எனது நன்றி
[2] புத்தகங்களின் விவரங்கள்:
இசுமியின் நறுமணம்/ ஜனவரி, 2021 / யாவரும் வெளியீடு
விரும்பித் தொலையும் காடு /2021 டிசம்பர்/ யாவரும்
விறலி/ டிசம்பர்,2021/ சால்ட் பதிப்பகம்
பருந்து/ ஆகஸ்ட், 2022/ எதிர் பிரசுரம்