சுஜாதா செல்வராஜ் கவிதைகளை முன்வைத்து

நமது தமிழ்க் கவிதை வெளியில் பெண் கவிதைகளுக்கு ஒரு வரலாற்றுத் தொன்மமும், பாரம்பரியமும் இருக்கிறது. ஆனாலும் நமது பழந்தமிழ் இலக்கியத்தில் பெண் பற்றிய கவிதைகள் பெண்ணை அவளது சராசரி வாழ்வோடு பொருத்திப் பார்க்காமல் அவள் வாழ்ந்து கொண்டிருந்த மனித வாழ்விலிருந்து அவளை விலத்தி ஒருவித தெய்வீகத் தன்மை வாய்ந்தவளாகவோ அல்லது மிக இழிநிலையில் ‘நாயிலுங் கடையராகவோ’ தான் அவள் கவிதைகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வந்தாள்.
இந்தப் போக்கிலிருந்து பெண்ணின் முற்றிலும் வேறுபட்ட ஒரு பரிமாணத்தை நமது நவீன தமிழ்ப் பெண்கவிகள் வெளிப்படுத்தத் தொடங்கினர். அவர்கள் பெண்களின் உலகத்தை இந்த மாதிரியான கற்பனாவாதப் புனைவுகளிலிருந்து விடுவித்து அவளையும் ஒரு சமூக உயிரியாக, பூமியில் ஒரு சாதாரண வாழ்வைக் கொண்டவளாக, பிரச்சினை உள்ளவளாக, தெய்வீகக் குணாமசங்களன்றி மனிதக் குணாம்சங்கள் கொண்டவளாக அவளை தங்களது புனைவுகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு புரட்சிகரமான புனைவுச்செயலில் பெண் படைப்பாளிகள் களம் இறங்கினர்.
சில நவீன பெண்கவிகள் தமது சமூக அமைப்பில் அவர்கள் எதிர்கொள்ள நேரிட்ட மோசமான அனுபவங்களை எந்தத் தயக்கமோ, கட்டுகளோ இன்றி சுதந்திரமாக வெளிப்படுத்தத் தொடங்கினர். கல்வி முன்னேற்றம், உலகமயமாக்கல் போன்ற காரணிகளால் பெண்கள் குறித்த சில இறுக்கங்கள் வேறு வழியின்றி நொருங்கிச் சிதைந்த போது அவர்கள் எழுதுவதற்கும் செயற்படுவதற்குமான வெளி மேலும் அதிகரித்தது. இந்த மாற்றங்களிலும் திருப்தி காணாத சில தமிழ்ப் பெண் கவிகள் தீவிர மேலைத்தேயப் பெண்ணிலை வாதக் குடையின் கீழ் இன்னொரு தளத்துக்கு நகரத் தொடங்கினர்.
பெண்களின் வாழ்வை நடைமுறை உலகத்தோடு பொருத்திப் பார்த்த இந்த நவீன தமிழ்ப்பெண்கவிகள் தங்களின் யதார்த்த உலகை தாங்களே அர்த்தப்படுத்திக் கொள்ளும் எழுத்துச் செயற்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டள்ளனர்.
இந்தப் புரிதலோடுதான் சமகாலத்தில் எழுதும் பெண்கவி சுஜாதா செல்வராஜின் கவிதைகளை வாசிப்புச் செய்ய முனைகிறேன். சுஜாதா செல்வராஜின் “காலங்களைக் கடந்து வருபவன்“ என்ற தொகுதி கவிதைகளை முன்வைத்தே இந்தக் கட்டுரை பேசுகிறது. “புது எழுத்து” பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுதி நவீன தமிழ்க் கவிதை வெளியில் குறிப்பிடத்தக்க ஒரு கவிதைப்பிரதி.
இத்தொகுதியில் ஒரு சில கவிதைகளைத் தவிர ஏனைய கவிதைகளின் மைய விசயமாக பெண் இருக்கிறாள். ஆனால் இந்தப் பெண்ணை அவளின் அன்றாட வாழ்வோடு பொருத்தி அவளது பல்வேறு பரிமாணங்களை, அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இந்தப் பகிர்வு பாசாங்குகளற்றது. சராசரியான ஒரு பெண் அனுபவிக்கக்கூடிய உடல், உள காயங்களிலிருந்து எழுவது. இதனால் அவரது கவிதைகள் பெண்ணின் அகக் கனவுகள் பற்றியதாகவும், புற நிஜங்கள் பற்றியதாகவும் இருக்கிறது.
பெண்ணின் வாழ்வை சொல்லோவியமாய் வரைந்து செல்கிறார் சுஜாதா.
தமிழ்க் கலாசாரத்தின் மீது மிகவும் அவதானமான முறையில் ஒரு வரையறுக்கப்பட்ட விமர்சனத்தை முன்வைக்கும் சுஜாதாவின் கவிதைக் குரல் ஒருவித மிதவாதக் கவிதைக்குரல் என்றே எனக்குத் தோன்றுகிறது. “எதிர்த்து நிற்றல்“ எனும் பண்பில் அதிதீவிரத்தன்மையை தன்மேல் பூசிக்கொள்ளாத கவிதைகள் சுஜாதாவினுடையவை.
சுஜாதாவின் கவிதைகள் அவரது தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அவரது கவிதைகள் சமூகத்தளத்தில் ஒவ்வொரு பெண்ணினதும் அனுபவங்களைப் பற்றியதாக இருக்கிறது என்பது நிரூபணம். சுஜாதாவின் கவிதைமொழி இயல்புக்கு மீறிய உணர்ச்சிகள் கொந்தளிக்காத இயல்புத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. கவிதைக்கான ஒப்பனைகளை அளவோடு சூடி உள்ளன.
பெண்ணின் இருப்பு, அவளது வாழ்வு, கனவுகள், வேட்கை என விரியும் சுஜாதாவின் கவிதைகள் சிக்கலற்ற எளிமையான குறியீடுகளைக் கொண்டுள்ளன. படிமங்கள் மிக மிக குறைவு. பெண்களின் அனுபவங்களை நேரடியாகப் பேசுகின்றன.
பெண்ணின் சுதந்திரம் பற்றிப் பேசும் போது கூண்டு, வானம், பறவை போன்ற மிக எளிமையான குறியீடுகளையே பாவிக்கிறார். “வானம் மறுதலிக்கும் சிறகுகள்” எனும் அவரது கவிதையில்,
“என்றுமே நீஅறியப்போவதில்லை
வனம் அளக்கும் பறவையின் சிறகிற்கும்
கூண்டு தாண்டும் பறவையின் சிறகிற்கும்
வானம் வேறு என்பதை”
இதுபோன்ற எளிமையான குறியீடுகளைத்தான் அவர் தனது கவிதைகளில் கையாள்கிறார்.
பெண் என்றால் யார்? என்ற கேள்வியும் அதற்கான புரிதலும் தமிழ்ச் சூழலில் இன்னும் ஒருமுகப்படுத்தப்படாததாகவே இருக்கிறது. பெண் குறித்து தமிழ்ச் சமூக மட்டத்திலுள்ள புரிதல் கல்விப்புலத்தில் ஏற்பட்டுள்ள புரிதலிலிருந்து மிகவும் தொலைவிலேயே உள்ளது. இந்த இடத்தில் பெண்ணைக் குறித்து பெண் என்ன விளக்கத்தை சொல்ல முற்படுகிறாள் என்பதை நாம் செவிமடுக்க வேண்டும். சுஜாதா தனது “மருதாணிக் காடுகளின் உன்மத்தம்” எனும் கவிதையில்,
“நாங்கள் துடுப்புகளற்ற படகு செலுத்தும்
கலை அறிந்தவர்கள்” என்கிறார். இன்னொரு வரியில்,
”ஆதிக்கனவுகளை திருத்தி எழுதிக் கொண்ட
முனை மழுங்கிய பேனைகள்” என்கிறார்.
”மேலும் உங்கள் செங்கோல்
ஆட்சியின் கீழ் வராத குடிகள் நாங்கள்” என்கிறார்.
அநேகமான தமிழ் பெண்கவிகள் தன்னிலை ஒருமையில்தான் பெண்களை அறிமுகப்படுத்தவதோ அல்லது அவர்களின் அனுபவங்களைப் பேசுவதோ வழக்கம். ஆனால் சுஜாதா தன்னிலைப் பன்மையில் பேசும் போது அவரத குரல் தனியான அனுபவம் எனும் நிலையிலிருந்து கூட்டு அனுபவத்தின் வெளிப்பாடாக, பிரதிநிதித்துவத் தன்மையைப் பெறுவதாக மாறிவிடுகிறது.
சமூகத்தில் பெண்ணுக்குள்ள பிரச்சினைகளாக இவர் அடையாளங் கண்டிருப்பவை எதுவும் கற்பிதமாகத் தெரியவில்லை. இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி அவற்றைப் புனைவுகளில் பூதாகரப்படுத்தி தனக்கான பிம்பங்களையும் ஒளிவட்டங்களையும் சூடிக்கொள்ள அவர் பிரயாசைப்படுவதாகவுமில்லை என்றே நான் கருதுகிறேன்.
ஒரு ஆண் வீட்டில் தனிமையை உணரும் போது அவன் வெளியில் சென்று தனது தனிமையையும் வெறுமையையும் போக்கிக் கொள்ள முடியும். இதே நிலை ஒரு பெண்ணுக்கு ஏற்படும் போது அவளால் வெளியில் சுதந்திரமாக உலவிவிட்டு வருவதற்கான சூழல் இன்று இல்லை என்பது பெண்களின் சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். இது உண்மையில் உள்ள பிரச்சினைதான். இது கற்பிதமல்ல.
“ஆளற்ற வீட்டின் முன்
எத்தனை நேரம்தான் வெறித்திருப்பாய்” என்ற வரிகள் இந்த அவலச் சூழலைப் பற்றித்தான் சொல்கிறது.
இப்படியான ஒரு சூழலில் பெண்ணின் வாழ்வு தோல்வியுற்றிருப்பதாக கருதுகிறார் சுஜாதா.
“கண்மூடிக்கிடப்பதங்கே தோற்ற வாழ்வென்று
ஈக்கள் ஆர்ப்பரித்து அறிவிக்கும்”
என்று தோல்வியை அறிவிக்கும் அவர், திடீரென்று இன்னுமொரு கவிதையில்
“வெற்றி முரசு வனமெங்கும் தெறித்து எதிரொலிக்க
கள்வெறி கொள்கிறேன்”
என வெற்றியைக் கொண்டாடுகிறார். இவ்வாறு முரண்பட்ட உணர்வுகளை ஒரே நேரத்திலும் ஒரே வாழ்விலும் அனுபவிக்கும் பெண்கள்தான் சுஜாதாவின் கதாபாத்திரங்களாக வருகின்றனர்.
இத்தொகுதியிலுள்ள சுஜாதாவின் சில கவிதைகள் பெண்ணின் இருப்பு பற்றியே பேசுகின்றன. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சுயமரியாதை இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்வதில் நமக்கென்ன சிக்கல் இருக்கிறது. ஆனால் சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவர்களின் இருத்தலுக்கான சுதந்திரத்தைக்கூட சில சமூகங்கள் வழங்கிவிடத்தயாராக இல்லை என்ற கசப்பான உண்மையைத்தான் சுஜாதாவின் கவிதைகள் காவிக்கொண்டு திரிகின்றன.
“இருப்பின் ஒரு பிரதி” எனும் கவிதை பெண்ணின் இருப்பு, சுயமரியாதை பற்றிய பா்வையை மேலும் ஆழமாக வெளிப்படுத்தும் ஒரு கவிதை.
“பெண்ணின் புகைப்படங்கள் தொங்கும்
பூஜையறைகளுக்குப் பின்னால்தான்
ஜன்னல்கள் ஏதுமற்ற
வழுக்கும் சமயலறைகளும்
தூமைத் துணிகள் சொருகப்பட்ட
புழக்கடை வெளிகளும் பரந்து கிடக்கின்றன”
”புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென
உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு”
“ஆசுவாசம்” எனும் கவிதையில்,
“இருள் அப்பிப் பிசுபிசுக்கும் என் இருப்பெங்கும்
அலறி ஓடும் ஓர் அம்மணம்”
என்ற வரிகளில் மட்டுமல்ல
“என் திசை எங்கும்
நீ வனம் பரப்பி வைத்திருக்கிறாய்
உன் பாதை தோறும்
நான் முள் பொறுக்கி்க்கொண்டிருக்கிறேன்” என உருகுகிறார்.
அதேநேரம் “கொத்தித் துளைக்கத் தொடங்கும் நட்சத்திர வானம்” என்ற அவரது கவிதையிலும்
“சிறகுதிர்ந்த பட்டாம் பூச்சியென
பதறித் தவித்தலைகிறது எனதிந்த இருப்பு” எனத் துயருறுகிறார்.
தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் பெண் மீதான கலாசார இறுக்கங்களை துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.
அவரது “அவ்வளவே” என்ற கவிதைக்குள் இந்தக் குரலை நீங்கள் கேட்கமுடியும்.
”நெஞ்சுக்கூட்டில் முட்டி அழும் இதயத்தின் குரல்
தலைமயிர் சிதைக்கப்பட்ட
பெண்ணின் கூக்குரலாய் ஒலிக்கிறது” என்று அவர் எழுதும் போது கலாசாரத்தின் இறுக்கப்பிடியிலிருந்து பெண்ணின் மீட்சிக்காக வாசக மனம் அவாவுறுகிறது.
ஒரு வாசகனுக்கு அற்புதமான கற்பனைகளி்ன் தரிசனமும் சுஜாதாவின் கவிதைகளுக்குள் கிடைக்கிறது.
“நினைவைக் கலைத்துக் கலைத்து
அடுக்கிப் பாரக்கிறேன்”
“தவறாமல் என் வாசல் வரும்
இளமாலை வெயிலுக்கு என்
மௌனங்களை நுரைக்க ஊற்றித் தருகின்றேன்”
போன்ற வரிகளில் அதீத கற்பனையின் தரிசனத்தை அனுபவிக்கிறோம்.
பொய்க் குற்றஞ் சாட்டப்பட்டு கைதுசெய்யப்படுபவர்களின் மனவுணர்வுகள் பற்றி நமது தமிழ்க் கவிகள் அவ்வளவாக கவனத்திற்கொண்டதாகத் தெரியவில்லை. சமூகத்தின் கண்களுக்கு அவர்கள் உண்மையான குற்றவாளிகளாகவே தெரிகின்றனர். ஒரு இடத்தில் ஒரு பொருள் திருடப்பட்டிருந்தால் அங்கு யாராவது ஒருவர் பொது மக்களால் சந்தேகிக்கப்படுகிறார். ஏற்கனவே சும்மா குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நிரபராதியின் மீது எப்போதும் சமூகத்தின் சந்தேகக் கண்கள் மொய்த்தபடிதான் இருக்கும்.
அப்படிப்பட்ட விளிம்புகள் மீதும் சுஜாதாவின் கவிதை மனம் கவனங்கொள்கிறது.
“சுதந்திரத்தின் முடிச்சு” என்ற கவிதையில்,
”காணாமல் போகும் “ஒன்று“
அதன் வாசனையை அடையாளத்தை
இரக்கமின்றி அவன் மீதே விட்டுச்செல்கிறது”
“தெளிந்த தனது கைகளை மீண்டும் மீண்டும்
அவன் கழுவியபடியே இருக்கிறான்”
அதேநேரம் நமது தமிழ்ப் பெண்கவிகள் சமூகத்தில் பெண்ணுக்கான இடம் என்ன என்பதில் ஒரு தெளிவுடன் இருப்பதில்லை. ஒரு ஆணுக்கு நிகரான பெண்ணையா அல்லது பெண்ணுக்கென வேறொரு தனித்துவமான இடத்தையா அவர்கள் தங்கள் கவிதைகளில் கோருகின்றனர் என்ற குழப்பம் ஒரு பனிமூட்டத் தெளிவின்மையாக அவர்களின் கவிதைகளில் தொடர்ந்தபடிதான் இருக்கிறது.
ஆனால் சுஜாதாவின் கவிதைகளில் இந்த பனிமூட்டத் திரை கொஞ்சம் விலகி இருப்பது போல் தெரிகிறது.
“நம் இருவருக்குமிடையில்
நிமிர்ந்து நிற்கும் அந்தச் சுவர்
அத்தனை உறுதியானதொன்றும் இல்லைதான்”
என்று எழுதுவதன் மூலம் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் ஒரு மெல்லிய வித்தியாசமிருப்பதை ஏற்றுக்கொள்கிறார்.
”ஆயினும் நாம் அதைக் கடக்கவோ
உடைக்கவோ முயன்றதில்லை” என்பதன் மூலம் அந்த வித்தியாசங்கள் மீறப்பட வேண்டும் என்ற அதிதீவிர நிலைப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார்.
பெண்ணின் வாழ்வு அவளுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அனுபவங்களை சொல்லோவியமாக மாற்றுவதிலேயே அவர் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்.
சுஜாதாவின் கவிதைகளில் காலம் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. ஒரே சீரான பயணத்தையே அவர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அதாவது “ஒன்றாகவே செய்தல்” எனும் தளத்திலேயே இவரது கவிதைச் செயற்பாடுள்ளது.
சுஜாதாவின் கவிதைகள் கூர் ஆணுணர்வு கொண்ட ஒரு ஆண் வாசகனுக்கும், மென்ணுணர்வு கொண்ட ஒரு வாசகிக்கும் வெவ்வேறுபட்ட அனுபவங்களை வழங்கக்ககூடியவை. இந்தப் பண்பு மேலும் சில பெண்கவிகளின் கவிதைகளுக்கிருப்பதை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பெண் கவி என்றால் பெண்ணைப் பற்றித்தான் பெரும்பான்மையாக எழுத வேண்டும் என்ற ஒரு பிம்பம் உருவாகி வருவதைப் போல் தெரிகிறது. ஏன் பெண் கவிகள் அதற்கு அப்பால் தமது பார்வையைச் செலுத்துவதில்லை. அப்படி எழுதினால்தான் இலக்கிய உலகில் விரைவான கவனிப்புக்கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பா? என்ற கேள்வியும் தமிழ்ச் சூழலில் எழுப்பப்பட்டிருக்கிறது. ஆண்கவிகள் ஆண்களின் அனுபவங்களைப்பற்றி மட்டுமா பெரும்பான்மையாக எழுதுகிறார்கள்.
சுந்தரராமசாமி சொன்னதைப் போல் “நான் கவிதை எழுதாத கவிதைக்கான வாசகனைத் தேடுகிறேன்” என்றார். நான் பெண்களின் அனுபவங்களை எழுதாத பெண்கவியைத் தேடுகிறேன் என்று சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது.
சுஜாதாவின் கவிதைகளில் ஆண் ஒரு எதிர்நிலைப் பாத்திரமாகவே சித்தரிக்கப்படுகிறான். பெண்ணின் உலகம், அவளது கனவு மற்றும் அவளது வாழ்வு என்பன ஆண்களோடு ஒப்பிடப்பட்டே நோக்கப்படுகிறது. பெண்ணின் உலகம், பெண்ணின் கனவுகள் என்பன ஆணின் உலகத்திலிருந்து வேறுபட்டிருப்பது இயல்பானதல்லவா? அதைப் பெண்கவிகள் புரிந்துகொள்ளவில்லை என்பதை அநேகமானோரின் கவிதைகளைப் படிக்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது. பெண்ணின் உலகை ஆணின் உலகத்தோடு ஒப்பிடாமல் வெளிப்படுத்த முடியுமா என்பது பற்றி நமது தமிழ்ப் பெண்கவிகள் சிந்திக்க வேண்டும்.
உண்மையில் சுஜாதாவின் கவிதைகள் பெண்ணின் வாழ்வு குறித்த வித்தியாசமான அனுபவங்களை வெளிப்படுத்துகிற போதிலும் அவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு மாயப் புள்ளியும் அவர் கவிதைகளுக்குள் இருக்கத்தான் செய்கிறது. அவரது கவிதைகளின் தலைப்புகளை நீக்கிவிட்டு ஒரே மூச்சில் வாசிக்கும் போது ஒவ்வொரு கவிதைக்குமான வேறுபாடுகள் அவரது மொழியின் ஆழத்துள் காணாமல் போய்விடுகின்றன.
சுருக்கமாக சொல்வதனால் சுஜாதாவின் கவிதைகளின் அகம் ஒரு ஆணின் வன்மையோடும் புறம் ஒரு பெண்ணின் மென்மையோடும் இருக்கின்றன.