சீர்மையின் நுதல் விழி – சித்ரனின் சிறுகதைகள் முன்வைத்து

மீட்பரற்ற நாயொன்று அத்துவான வெளியில் வெறும் குரைப்பொலியாய்க் கரைந்தது – விடுதலை.

எழுத்தாளர் சித்ரனை வினோத் கண்ணாவாக எனக்கு அறிமுகம். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். பக்கத்து ஊர்காரர்கள் என்பதால் இயல்பாகவே கல்லூரியில் எங்களுக்குள் அணுக்கம். நான் ஆயுர்வேதமும் அவர் சித்த மருத்துவமும் ஒரே கல்லூரி வளாகத்தில் ஒரே காலகட்டத்தில் கற்றோம். ஜோனாத்தன் லிவிங்ஸ்டன் தி சீ கல், அல்கெமிஸ்ட் என திரிந்துக்கொண்டிருந்தவனுக்கு “விஷ்ணுபுரம் படி” என ஜெயமோகனை அறிமுகப்படுத்திய நண்பர் வினோத். பயிற்சி மருத்துவர்களாக இரவு பணி (பணி என ஏதுமிருக்காது, மருத்துவமனையில் உறங்கி எழ வேண்டும்) எங்களுக்கு ஒன்றாக போடப்பட்டபோது இலக்கிய – அரசியல் உரையாடல்கள் நெடுநேரம் நிகழும். ஈழப்போர் உச்சத்திலிருந்த காலம். வாசிப்பின் தொடக்க நிலைகளில் இருப்பவனின் அதீத தன்னம்பிக்கைக்கும் மொண்ணைத்தனங்களுக்கும் சலிக்காமல் பதில் சொல்வார். நியாயப்படி எனக்கு முன்பே எழுத்தாளராக அறிமுகமாகியிருக்க வேண்டும். போலன்யோவின் ‘டான்ஸ் கார்ட்’ கதையை கல்குதிரை இதழில் மொழிபெயர்த்ததன் வழியாக அறிமுகம் ஆனார். தற்போது அறநிலைத்துறையில் பணியாற்றி வருகிறார். திருச்சியிலும் புதுக்கோட்டையிலும் மாறி மாறி வசித்துவருகிறார். மனைவி சாலினியும் தீவிர இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர், வேளாண்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். முதல் தொகுப்பு ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. க.சீ. சிவகுமார் நினைவு பரிசு மற்றும் த.மு.எ.க.ச வின் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான விருதுகளை பெற்றது. இரண்டாவது தொகுப்பு ‘பொற்பனையான்’ 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகி பரவலாக கவனம் பெற்று வருகிறது. 

முதல் தொகுப்பில் ஏழு சிறுகதைகளும் இரண்டாம் தொகுப்பில் ஆறு சிறுகதைகளும் நான்கைந்து குறுங்கதைகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டு தொகுப்புகளில் உள்ள பதிமூன்று கதைகள் வழியாக அவரது படைப்புலகை அணுக முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். 

சித்ரனின் கதைகள் அறிமுக எழுத்தாளர்களுக்கான எந்த தடையையோ தடுமாற்றத்தையோ பெரிய அளவில் எதிர்கொள்ளவில்லை. அவரது தொடக்கக்கால கதைகளில் சில நெருடலான/ பொருத்தமற்ற உவமானங்கள் வெளிப்படுகிறது. உதாரணமாக “செதில்களால் நெய்யப்பட்ட சட்டையை உரிக்கும் அரவமாய் எனது வெறுமையை என்னிலிருந்து அகற்ற அண்ணா நகர் பூங்காவிற்கு கிளம்பினேன்.” “கூட்டத்தால் கைவிடப்பட்ட கழுதைப்புலி ஒரு வலிமையான இரையை தாக்க வழியில்லாது வெறித்திருப்பதைப் போல் அவளை கவனித்தவாறிருந்தேன்” (தூண்டில்). இரண்டு மூன்று கதைகளுக்கு பிறகு இவ்வகையான பயன்பாடும் மறைந்து நேர்த்தி கைக்கூடிவிடுகிறது. பெரும்பாலான கதைகளில் மொழியும் பேசுபொருளும் முழு முதிர்ச்சியுடன் வெளிப்படுகிறது. கதைசொல்லி- இலக்கியவாதி என இரு முகங்களும் ஒருங்கே அமைந்த படைப்பாளியாக திகழ்கிறார். 

முதல் கதையான ‘தூண்டில்’ எழுப்பும் கேள்வி ‘தூண்டில்’ யாருக்கானது? என்பதுதான். பூங்காவில் பூனம் பால் என்றொரு பெண்னை கவனிக்கிறான். அவளால் ஈர்க்கப்படுகிறான். அவள் மணமானவள்.  பின் தொடர்கிறான். அவளும் இவனை நோட்டமிடுகிறாள். துறவியை விழைவதாக வரும் பாடல் வரிகள் வழியாக பூனம் பால் இட்ட தூண்டில் என வாசிக்கலாம். கதையில் கனவு மற்றும் கற்பனை பற்றிய குறிப்புகள் தொடர்ந்து வருகின்றன. திரைப்பட காட்சிகளின் சுட்டுதல் கதைசொல்லி கற்பனையில் வாழ்பவன் என்பதை நிறுவ உதவுகிறது. காமச்சித்தரிப்பு கூட திரைப்பட காட்சித்தன்மையை கொண்டவையே. நிகர் வாழ்வின் அசல் அனுபவத்தை விட கற்பனையும் கனவும் தான் கதை சொல்லியை கிளர்த்துகிறது. அந்தரங்கமாக மட்டும் தீண்டி மறையும் கனவின் தூண்டில் என்று கூட வாசிக்கலாம். இறக்கை முளைத்த கனவுரு ஏறத்தாழ சாத்தானின் விவரனையை ஒத்ததாக உள்ளது. இன்ப நாட்டத்தில் தற்சார்பு என்பது சாத்தானின் அருட்கொடையாக்கும். மொழி, கூறுமுறை மற்றும் பேசுபொருள் சார்ந்து சித்ரனின் ஆக பலவீனமான கதை இதுதான் என சொல்லலாம். எனினும் அவர் படைப்புகளில் தொடர்ந்துவரும் சில கூறுகளை அவதானிக்க முடிகிறது. ‘உடல் இயற்கை துறவு எனும் ஃ’ சிறுகதையை இந்த கதையையொட்டி வாசிக்க முடியும். ‘தூண்டிலில்’ இருந்து ‘உடல் இயற்கை..’ கதைக்கு வந்து சேர்ந்ததான ஒருவித பரிணாமத்தை காண இயலும். பொன்னையா ஆசாரியின் மகன் சந்திரசேகரனை துறவியாக ரயிலில் சந்திக்கிறார்கள். திருமணமாகி ஓராண்டில் துறவேற்றவர் “மானுடப்பெண் உடன் உறவுக்கொள்ள இயலவில்லை” என்கிறார்.  அவரது கதையை சொல்கிறார். உடலிச்சையிலிருந்து விலகிய ஒருவன் சித்ரனின் கதைகளில் தொடர்ந்து வருகிறான். ‘நைனாரி’ கதையின் ஜான் பாஸ்கோவைப் போல, ‘இரும்புக்கை மாயாவி’ கதையில் சம்போக சித்திரங்களைப்பார்த்து வெடித்து சிரிக்கும் மனோகரனைப்போல, சந்திரசேகரனுக்கும் பெண் உடல் மீது பெரிய ஆர்வமில்லை. அவனை கிளர்த்துவது இயற்கையின் மோனப்பேருரு. முழுமதியிரவில் நாணல் பெண்ணுடன் உறவுகொள்கிறான். மானுட பெண்ணுடன் உறவு கொள்பவர் குடும்பஸ்தன் என்றால் இயற்கை எனும் பெண் வடிவத்துடன் உறவு கொள்பவன் துறவியாகவே இருக்க முடியும் என்பதே கதையின் மைய தரிசனம். ‘தூண்டிலின்’ சிறகு முளைத்த சாத்தான் பெண்ணுக்கும் ‘உடல் இயற்கை‌ துறவு கதையின்’ நாணல் பெண்ணுக்கும் தொடர்ச்சியும் மெல்லிய பரிணாமமும் உள்ளதை கவனிக்க முடிகிறது. காமத்தை உடற்தேவை என்பதற்கப்பாலான தளத்திற்கு நகர்த்த முயல்கிறார். ‘இரும்புக்கை மாயாவி தோன்றும் இன்ப வேட்கை’ கதையில் முதன்முதலாக கலர்படங்களில் நிர்வாணத்தை காணும் மனம் அதன் பின் கிரிக்கெட் விளையாடும்போது  கொள்ளும் கூர்மையைப்பற்றி சொல்கிறது. “என்னத்தடா திண்ணுட்டு வந்து அடிச்ச” என வைரவன் வியக்கிறான். காமத்தின் வர்ணங்களையும் சிடுக்குகளையும் பேசும் கதைகளில் ஒன்றென “நீர்மை குன்றும் நெடுங்கடல்” கதையைச் சொல்லலாம். காமமும் குற்ற உணர்வும் தான் பேசுபொருள்.  காமம் உன்னதப்படுத்தப்படாமல் முற்றிலும் தரையில் உக்கிரமாக நிகழும் கதை. ஏர்வாடி தர்காவில் பைத்தியங்கள் எரிந்த நிகழ்வு பின்புலத்தில் வருகிறது. விரைந்து செல்லும் திரைக்கதை தன்மைக்கொண்ட கதை என்பதே இக்கதையின் பலவீனம். குழந்தையின் இறப்பு ஏர்வாடி எரிப்பு உட்பட வலுவான கதைத்தருணங்கள் கூட உணர்வுரீதியாக நம்மை தொந்திரவு செய்யாமல் உணர்வு விலக்கத்தோடு சொல்லிக்கடக்கப்பெறுகிறது. 

குற்ற உணர்வு சித்ரனின் கதைகளில் தொழிற்படும் மிக முக்கியமான உணர்வு. ‘விசுவாசத்தின் மறைபொருள்’ .

கதையில் பாதிரியாராக ஆன தனது சகோதரன் ஜான் பீட்டர் என்கிற ஜான் பாஸ்கோவிற்கு இளமை நினைவுகளை பகிர்ந்து எழுதும் கடிதத்துடன் கதை தொடங்குகிறது. நினைவுக்கும் நிகழ்காலத்திற்குமாக கதை ஊசலாடுகிறது. பிள்ளைகளை வைத்து கொண்டு கஷ்டப்படும் ஜூலியில் தன் அம்மாவை காண்கிறான். ஃபாதரின் உச்சந்தலை வழுக்கை அழகாக இருந்ததால் நாவற்பழ கொட்டையை குறிபார்த்து வீசுமாறு  தன் அருகே அமர்ந்து இருந்த சாத்தான் வற்புறுத்தியதாக பாவமண்ணிப்பு கோரும் ஜூலியின் கடைசிமகன் சேவியரில் தன் கடந்தகாலத்தை காண்கிறான். ஜூலி கஷ்டத்தைச்சொல்லி பிலாக்கனம் வைக்கும்போதெல்லாம் அவளுக்கு உதவுவதன் வழி கணக்கை நேர் செய்ய முயல்கிறான்.  சிறப்பான மொழியில் மெல்லிய அங்கதம் படரும் இனிய நினைவேக்க கதையாக வளர்கிறது. புதுகுளததின் வறன்ட பிளவுகளின் அடியில் தேங்கியிருக்கும் பால்யத்தின் சுணை ஊற்றெடுக்கிறது. 

ஜான் பீட்டர் ஜான் பாஸ்கோவாக, ஒரு துறவியாக ஏன் ஆனான்? அவனது விசுவாசத்தின் மறைபொருள் என்ன? அறியாத வயதில் அவன் சொல்லாலும் நடத்தையாலும் நிகழ்ந்த தாயின் மரணம் நிரந்தரமாக அவர்களின் வாழ்வை தடம்புரள வைக்கிறது. உள்ளத்தில் பெரும் எடையை சுமக்கிறான். பிலோமியும் இறை பணியில் இருக்கிறாள் என்பதற்கு சிறு குறிப்பு கதையில் உள்ளது. கர்த்தரின் பணியில்தான் அவன் கழுவாய் தேடிக்கொள்கிறான், இதுவே அவனது விசுவாசத்தின் மறைபொருள் என்பது ஒரு வாசிப்பு. அப்பா இறந்து பின்னர் அம்மாவையும் இழந்த குழந்தைகளாக ஜானுக்கும் பிலோமிக்கும் கர்த்தரை விசுவாசிப்பதை தவிர வேறு நாதியில்லை என்பது இன்னோரு மறைபொருள். பெற்றோர்களற்ற பிள்ளைகளை கடவுளோ சாத்தானோ எவரேனும் ஒருவர்தானே பேணி வளர்க்க முடியும். கதையின் முக்கிய நிகழ்வுகள் சிறுவர்கள் நோக்கிலிருந்து குறிப்புணர்த்தி நகர்வது மேம்பட்ட வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. தேவ ஈவு,  அவனது தந்தை, ஜானின் தந்தை அம்மா என மனதில் நிற்கும் கதை மாந்தர்களை உருவாக்கியிருக்கிறார் என்ற அளவில் நல்ல கதை. ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ கனவுக்கும் நினைவுக்குமான இடைவெளியை குலைக்கும் கதை. கதை கொத்து என கூறலாம். சில தீவிரமான தருணங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. உளவியல் கதைகள் பகுப்பாய்வை நோக்கமாக கொண்டவை. ஒரு பிறழ்வுக்கான விதையை பால்யத்தில் தேடுபவை. ‘எனது கனவுகளை கதையாக்க மாட்டீர்கள் அல்லவா டாக்டர்’ என நோயாளி உறுதி கோருகிறான். நடப்பதென்னவோ அதுதான். மனித உள்ளத்தை புரிந்துகொள்ள ஃபிராய்டை விட தாஸ்தாயெவ்ஸ்கி உதவிகரமாக இருப்பவர் எனும் கூற்று கதைக்குள் சுட்டப்படுகிறது. விளையாட்டும் தீவிரமும் ஒருங்கே அமைந்த கதைசொல்லல் முறை வாய்த்திருக்கிறது. கதைசொல்லி நிரப்பும் கேள்வி பதிலில் தன் பெயரை கோபி கிருஷ்ணன் என்றும் தந்தையின் பெயர் சிறுதொண்டன் என்றும் எழுதுகிறான். அம்மாவிற்கு அவமானத்தை தேடித்தரும் சிறுவன் இக்கதையிலும் வருகிறான். ‘ப்ரிங்கா’  என குதித்து விளையாடுகிறான். மிகவும் தொந்திரவு செய்த பகுதி. சிறுவர்கள் விளையாட்டும் பொறுப்பின்மையும் பெரியவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் பாரதூரமான விளைவுகள் பற்றிதான் ‘விசுவாசத்தின் மறைபொருளும்’ பேசுகிறது. இரும்பு குண்டென உள்ளத்தின் ஆழத்தில் கிடக்கும் கடந்த காலத்தை என்ன செய்வது? அறியாமைக்கு யார் பொறுப்பேற்பது? இத்தனை கணமும் குற்ற உணர்வும் தேவைதானா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தவண்ணமிருந்தது. 

‘பெரியப்பா’ சித்ரனின் நல்லகதைகளில் ஒன்று. அமானுடத்தன்மை கொண்ட கதை. கதைசொல்லியின் பெரியப்பா தூக்கிலிருந்து காப்பாற்றப்பட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது. அவர் ஏன் தூக்கிட்டுக்கொண்டார் என்பதே கதை. தான் வளர்க்கும் மகன் தூளியில் கிடந்தபோது சுளுக்கி கடித்ததற்காக அவனே அழுகையை நிறுத்திய பின்னரும் “பிள்ள எப்படி தாங்குனானோ?” என விசும்பி அழுதவர் எனும் சித்தரிப்பின் வழியாகவே அவரது மன இயல்பு காட்டப்படுகிறது. கதைசொல்லிக்கு பெரியப்பா மீது பெரும் பிரியம். அவர் வளர்த்த தெருநாய் அர்ணால்டை வேட்டைக்கு பழக்குகிறார். வெறிநாயாக மாறிய அது கன்றுகளை வாநீர் வடிய கடிக்கிறது. வாழ்வை முடிக்கச் சொல்லி பெரியப்பாவிடம் மன்றாடுகிறது. பெரியப்பாவின் உருவமே ஒரு வேட்டை நாயை போன்றது என்கிறான் கதைசொல்லி. அவர் வளர்த்த நாய்க்கு அவர் மீதிருந்த பிரியத்தைப்போலவே அவனுக்கும் அவரது அணுக்கம் பிடிக்கும் என இணைவைக்கிறான். மகனின் கெண்டைக்காலை கவ்வ வந்த தேத்தாம்பட்டி நாயை வழிக்கு கொண்டுவர எண்ணி திட்டமிடுகிறார். வேறொரு உயிர் பலியாக காரணமாகிறார். தேத்தாம்பட்டி நாய் அவர்களை தொடர்ந்து வீட்டுக்கு வருகிறது. அதன் இருப்பே குற்ற உணர்வை தூண்டுகிறது. பொதுவாக குரைத்து துரத்தும் நாய் மவுனமாக நீதி வேண்டுகிறது. நாய் கோரியதை அளிக்க தீர்மானிக்கும்போது சிறுவனின் அசாதாரண செயல் அவரை மரணத்திலிருந்து காக்கிறது. மிக முக்கியமாக அவனது உறுதியை தேத்தாம்பட்டி நாய் வாஞ்சையுடன் புரிந்துகொள்கிறது. மன்னிக்கிறது. ஏறத்தாழ ஒரு நாய் இன்னோரு நாயை உணர்ந்துகொள்வதைப்போல. அவனை நக்கிக்கொடுக்கிறது. ஏதோ ஒரு கணக்கை தீர்த்துக்கொண்டது போல தொங்கியவரின் வேட்டியை மட்டும் கவ்விக்கொண்டு ஊருக்கு ஓடுகிறது.

‘ஐயனார்புரம்’ ஜயனார்புரம் சித்ரனை நல்ல கதைசொல்லியாக காட்டுகிறது. இவ்வகை கதைகளில் சிறந்த கதை என சொல்லலாம். தெருவின் கதையை சொல்ல முயன்று கனகுவின் கதையை சொல்ல தொடங்கி செல்வத்தின் கதையை சொல்லி நிறைவடைகிறது. புதுக்கோட்டைக்கே உரித்தான லாக் விளையாட்டை அறிமுகப்படுத்துகிறார். திரைக்கதை சுருக்கம் போன்ற வடிவமே இந்த சிறுகதையின் பலமும் பலவீனமும். இருளும் வன்மமும் நுரைக்கும் கதைக்களம். பல்வேறு உள்மடிப்புகளும் சாத்தியங்களும் கொண்ட கதை. கனகு வெற்றிக்காக உழைப்பவன். வெல்வதற்கென்றே விளையாடுபவன். செல்வம் கூத்து கலைஞன். குரலுடைந்து பாட முடியாமல் குடிக்கு தன்னை அளித்து சிறுக சிறுக அழித்துக்கொள்பவன். கனகுக்கு அவனது வாகனமான ஆர்.எக்ஸ் 100 ன் மீது பித்து. தினமும் துடைத்து வைப்பான். செல்வத்துடன் அவனது நாய் செவலை எப்போதும் சுற்றி வரும். அதன் மீது பெரும் பிரியத்துடன் இருந்தான். கனகு வெல்வதை வாடிக்கையாக கொள்பவன். அவன் வெற்றியால் யாருக்கும் எந்த உற்சாகமும் இல்லை. செல்வம் அரிதாக வெல்வான். ஆவி புகுந்தது போல விளையாடுவான். ஈட்டியதை அனைத்தும் அன்றே அளித்து அழிப்பான். கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் மீது ஒரு கரிசனம் எப்போதும் இருக்கும். கனகு ஆஸ்திரேலியாவை போல, வெல்வதில்‌ ஆச்சரியமில்லை தோற்றால் சற்று மகிழ்வாக இருக்கும். செல்வம் மேற்கிந்திய தீவகளை போலத்தான். அரிதாக வெல்வார்கள். வென்றால் கொண்டாட்டம்தான். இயந்திரத்தின் மீது பிடிப்புக்கொண்ட, வெற்றி வெறி கொண்ட உலகியலாளனுக்கும் உயிர் நேசம் கொண்ட தோல்வியடைந்த கலைஞனுக்கும் இடையேயான உறவுச்சிடுக்குதான் கதை. இருவரும் அவரவர் அளவில் நியாயவான்கள். தீரர்கள். எனினும் செல்வம் கனகுவை மடியிலேந்தி அவனுக்காக கண்ணீர் சிந்தியதுபோல கனகுவால் செல்வத்துக்காக அழதிருக்க முடியாது. கலை மனதிற்குள் ஒளிந்திருக்கும் இருளைப்பற்றியும் வன்மத்தைப்பற்றியும்  கதையின் இறுதித்தருணம் மீண்டும் மீண்டும் மனதில் பல கேள்விகளை எழுப்பி அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. வேட்டில் துண்டுப்பட்ட கனகுவின் கட்டைவிரலை தூக்கிக்கொண்டு ஓடும் செவலை நாயின் சித்தரிப்பு சித்ரனின் இருண்ட சித்தரிப்புகளில் ஒன்று. செவலை காட்டுக்குள் திரியும் ஏகலைவனிடம் கொண்டு கொடுத்ததாவ் அவன் இப்போது ஐந்து விரல்களோடும் விவ் பயிற்சி செய்கிறான் என செல்வம் சொல்லும் கதை இக்கதைக்கு இன்னோரு மடிப்பை சேர்க்கிறது. அந்த செல்வத்தின் பாத்திர வார்ப்பு ஏனோ எனக்கு பிரான்ஸிஸ் கிருபாவை நினைவுபடுத்தியபடி இருந்தது. ஒரு கதையில் எதை சொல்லாமல் விடவேண்டும் என்பதை அவர் நன்கு பயின்றுள்ளார். உதாரணமாக குழந்தைவேலுவை செல்வத்தின் நாய் என்ன செய்தது என்பதை விரிவாக விவரிக்காமல் அதன் விளைவாக தெரு மக்கள் செல்வத்தை கவனத்துடன் அணுகியதை மட்டும் சொல்லி கடக்கிறார். 

குற்ற உணர்வே இயக்குவிசை ஆனாலும் அதன் கணம் குறைந்து வெளிப்பட்ட கதை என ‘ஒரு வழிப்போக்கனும் அவனது வழித்துணையும்’ சொல்லலாம். ‘காண்பவர்களோடெல்லாம் உரையாடலைத் தொடங்கும் இயல்பு’ என கதைசொல்லி ‘உடல் இயற்கை துறவு எனும் ஃ’ கதையில் குறிப்பிடுகிறார். ஒருவகையில் இந்த இயல்பே சித்ரனை நல்ல கதைசொல்லியாக ஆக்குகிறது. கதைமாந்தர்களின் குணச்சித்திரத்தை படைக்க உதவுகிறது. ஐயனார்புரம் போன்ற கதைகளில் இந்த கூறு தென்படுகிறது என்றாலும் இக்கதையில் முழுவீச்சில் வெளிப்படுகிறது. இலக்கியவாதிக்கு அகத்தை கூர்ந்து நோக்குவது தன்னியல்பாக கைவரப்பெற்றது என்றால் மனிதர்களை அவதானிக்கும் திறனே கதைசொல்லிக்கான மிக முக்கிய திறன் என கூறலாம். அவதானிக்கும் திறனின் தெறிப்புகள் ‘நீர்மை குன்றும் நெடுங்கடல்’ கதையில் காணக்கிடைக்கிறது. விஜயனுக்கும் சுசீலாவுக்குமான உறவில் சண்முகம் இடையில் வருமிடம் மிக நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது. ‘வழிப்போக்கன்’ கதையில் பரமசிவம் எனும் மிக சுவாரசியமான கோட்டி (அல்லது லூசுக்கூ) கதையில் அறிமுகப்படுத்தப்படுகிறார். பெண் இல்லாமலேயே பெண் தரகராக பணம் செய்யும் நூதன மோசடியாளர். பேருந்து பயணத்தில் தொல்லை தரும் ஆளாக உடன்வருகிறார். அவரது பின்கதை கதாப்பாத்திர கூற்றாகவே சொல்லப்படுகிறது. தொழிலில் ஏமாந்து நொடிந்தவர் காவிரியில் குதித்து உயிர்விட செல்கிறார். காவிரியின் பிரம்மாண்டமும் விரிவும் சொல்வயப்படாத அனுபவமாக அவருள் படிகிறது. இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் மனிதனின் அகங்காரம் அற்பமாக சுருங்குகிறது. அத்தனை மகத்தான இயக்கத்தை கண்டவன் வாழ்வை எப்படி மறுக்க முடியும்? பறவைகள் வேறோரு ஒழுங்கிலிருந்து உலகில் சஞ்சரிப்பவை எனும் நம்பிக்கை விசும்பின் மொழி கதையில் வெளிப்படுகிறது. இக்கதையிலும் நீரில் மூழ்குபவருக்கு மேலே நீர்காகங்கள் பறந்து வழிநடத்தும் ஆன்மீக அனுபவம் விவரிக்கப்படுகிறது. நாய்கள், பறவைகள் என பிராணிகளின் கூருணர்வு தொடர்ந்து சித்ரனின் கதைகளில் பேசுபொருளாக உள்ளது. காவிரியை நோக்கி விரிந்த யோனியுடன் இருக்கும் கோபுரத்து சுதை சிற்பத்தை காண்கிறார். வாழும் இச்சையை மீளப்பெறுகிறார்.‌ அவரது காதல் கதை விவரிக்கப்படுகிறது. மனைவி வேறுவழியின்றி விட்டுச்சென்ற பின்னரும் தொடர்கிறது காதல். கதை தொடக்கத்தில் கதைசொல்லிக்கு பரமசிவத்தின் மீது இருக்கும் எச்சரிக்கை உணர்வும் எரிச்சலும் மறைந்து ஏற்பும் புண்ணகையும் சூழ நிறைவடைகிறது. எதையும் கொண்டுசெல்லாத, எதையும் பதுக்காத மனநிலை வழிப்போக்கனுடையது. அந்த மனநிலையே வழித்துணையும் கூட. 

கதைசொல்லியாக சித்ரன் சிறப்பாக வெளிப்பட்ட மற்றொரு கதை என ‘முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை’ கதையைச் சொல்லலாம். பழைய புத்தகக்கடையை களமாக கொண்ட‌ கதை. 90 களின் குழந்தைகளுக்கு பல்வேறு நினைவுகளை கிளர்த்தும். சச்சின் – கங்குலி ரசிகர்களுக்கு இடையேயான மோதல் தொடங்கி, கிட்னி கார்டில் கைக்குட்டை போட்டு பகிர்ந்துகொள்வது,  காமிக்ஸ்களின் உலகம் வரை. புத்தக கடை இடம்பெயர்கிறது, நினைவேக்கத்துக்கான எல்லா சாத்தியங்களும் இருந்தும் கூட எவ்வித விதந்தோதுதலோ நெகிழ்ச்சியோ இல்லாமல் சொல்லப்படுவதே இக்கதையின் வெற்றி. திருமண உறவில் சிக்கியிருக்கும் தற்பாலினத்தவர் எதிர்கொள்ளும் சிக்கலே மையம். சுப்பையாவின் மனைவிக்கு கிடைக்கும் ஒரு தரிசனமே கதை. சிறிய முடிச்சுதான். ஆனால் சித்ரன் இந்த கதையை சொல்ல கட்டி எழுப்பும் உலகமும் சித்தரிக்கும் கதை மாந்தர்களும் தான் இக்கதையை நல்ல சிறுகதையாக ஆக்குகிறது. பாலியல் படங்கள் உள்ள புத்தகத்தை அளிக்கும் போது கையாலேயே எடையிட்டு அளிக்கிறார் சுப்பையா. புத்தகங்களிலேயே மூழ்கியிருக்கும் மனோகரன் வழியாக கண்ணா எனும் கதைசொல்லி வாசிப்பு உலகத்திற்குள் நுழைகிறான்.  கலர் புத்தகத்தை காணும் வேட்கை மனோகரனை விட்டகன்ற புள்ளி மவுனமாக விடப்பட்டுள்ளது. வாழ்க்கையின் நுண்மையான முரண்களையும் அபத்தங்களையும் சித்தரிப்பதன் வழியாகவே சித்ரனின் நகைச்சுவையுணர்வு செயல்படுகிறது. சரஸ்வதி பூஜைக்கு வாயை பிளந்து களிப்பில் இருக்கும் பெண் படம் போட்ட ‘இன்ப வேட்கை’ புத்தகத்திற்கு சந்தன போட்டு வைக்கப்பட்டுள்ளது எனும் காட்சி ஒரு உதாரணம். உடல் மறைந்து இருட்டில் பிசையும் சுப்பையாவின் கரத்திற்கு ‘இரும்புக்கை மாயாவி’ என பெயரிடுவான் கண்ணா. மெல்லிய புண்ணகை மொத்த கதையிலும் ஊடுருவியுள்ளது. இதே வரிசையில் வைக்கத்தக்க கதை என ‘நைனாரியும் பதின்கரைகளும்’ கதையை சொல்லலாம். அசோகமித்திரன் தான் எதிர்கொண்ட சாமானியர்களின் நினைவுகளை போற்றும் விதமாக கதை எழுதுகிறேன் என சொல்கிறார். பதின் பருவத்து நாயகன் பிம்பம் உடைபடும் அனுபவம் தான் கதை. சிறுகதை வடிவம் சரியாக துலங்கி வரவில்லை.  ‘விசுவாசத்தின் மறைபொருளுடன்’ பொருத்திப்பார்த்து நாவலின் பகுதி என ஜான் கதாபாத்திரத்தைக்கொண்டு  வாசிக்கலாம். ஏறத்தாழ ஒரு நினைவுக்குறிப்பு அல்லது வாழ்க்கைச்சித்திரம். சித்ரனின் மெல்லிய நகைச்சுவை உணர்வும் சுவாரசியமான கதைசொல்லல் முறையும் கதையை வாசிக்க வைக்கிறது. வரதனின் துடுக்குத்தனமும் சந்துரு கோழிக்குஞ்சை குறி பார்த்து சுட யத்தனிக்கும் பகுதியும் புண்ணகைக்க வைக்கிறது. ஐயனார்புரம், விசுவாசத்தின் மறைபொருள், நைனாரி ஆகிய கதைகள் எல்லாம் ஏறத்தாழ ஒரே நிலத்தில் நிகழ்பவை, கதைமாந்தர்களில் தொடர்ச்சியும் உண்டு. நாவலின் துண்டுப்பட்ட அத்தியாயங்களாக வாசிக்க இடமுண்டு. 

‘கொனட்டி முத்தன்’ குற்ற உணர்வை பேசு பொருளாக கொண்ட கதையல்ல. நமது தேர்வுகளை விட அவற்றை. பின்னிருந்து இயக்கும் விசையே முக்கியம். அதுவே பாவத்தையும் குற்றத்தையும் தீர்மானிக்கிறது என்றொரு நம்பிக்கை உண்டு. சித்ரனின் சிறந்த கதைகளில் ஒன்று. சரி தவறு எனும் இருமைக்கு அப்பால் சென்று அமரும் கதை. இதன் பேசு பொருள் எனது புனைவுகளின் ஊடாக நான் எழுப்பிக்கொள்ளும் அடிப்படை வினாக்களில் ஒன்று என்பதால் மேலும் நெருக்கமாக உணர்ந்தேன். பெண் உடல்மொழி கொண்ட கொனட்டி முத்தனை நேசத்துடன் மணந்துகொள்கிறாள் அமராவதி. கதைகளே பெரும் போதை வஸ்து என நம்புபவன் முத்தன். அவன் உடல்மொழியில் உள்ள பெண்தன்மை காரணமாக எப்போதும் கேலிப்பொருளாக எஞ்சுபவன். பரிகாசப்பொருளாக இருப்பதை குறித்து எந்த புகாரும் அற்றவன். உலகிற்கு ஒரு முகமும் நேசிக்கும் அமராவதிக்கு பேராண்மை கொண்ட வேறொரு முகமும் கொண்டவனாக இருக்கிறான். அமராவதிக்கு அனைவரிடமும் அவனது இந்த உருவை விளக்கமுடியவில்லை. உண்டான செய்தி வாயடைக்கும் என எண்ணுகிறாள். ஆனால் மேலும் பரிகாசமும் அவதூறுமே பரவுகிறது. தன்னளவிலோ அமராவதிக்காகவோ கேலிகளை பொருட்படுத்தாத முத்தன் மகன் சபாரத்தினம் படும் அவமானத்தை கொண்டு தன் உடல்மொழியை மாற்ற முயல்கிறான். ‘விசுவாசத்தின் மறைபொருள்’ போலவே குழந்தைகளின் இச்சையை நிறைவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தன்னை இழக்கிறான். படுக்கையில் இயக்கமற்று கிடக்கும் முத்தன் அமராவதியின் தயவில் நாட்களை கழிக்கிறான். நாளும் பொழுதும் ஒன்றுபோலவே நகர்கின்றன. அமராவதியிடம் ஒருநாள் கேட்கிறான். “ஏன் நாம செத்தோனே எரிக்கிறாங்கன்னு சொல்லு?” தெரியவில்லை என்றதும் “மனுசனுக்கு பயந்தான்… ஒருவேளை மனசு மட்டும் புதைகுழிக்குள்ள முழிச்சுக் கெடந்து தலைக்கு மேலே கிடக்குற மண்ணு மேட்ட முடிவே இல்லாம பாத்து கெடக்குமோன்னு தான்.. எரிச்சுட்டா மனசு காத்தோடே சுத்திக்கிட்டு திரியலாம் பாரு” என்கிறான். அமராவதி புரிந்து கொள்கிறாள். வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ எனது ‘வாசுதேவன்’ ஆகிய கதைகளின் வரிசையில் கொனட்டி முத்தனை வைக்கலாம். மேற்சொன்ன கதைகளில் நோயும் பிழைப்பை நடத்த வேண்டிய நிர்பந்தமும் பொருளாதாரமும் இக்கட்டான முடிவை நோக்கி நகர்த்துகிறது. எனினும் கொனட்டி முத்தன் இக்கதைகளில் இருந்து வேறுபடும் புள்ளியை கவனத்தில் கொள்ள வேண்டும். புருஷனுக்காக எட்டி விதைகளை கொடுக்க அமராவதி வரும்போது விடுதவையுணர்வுடன் அதை ஏற்கிறான். உற்சாகமாக படுக்கையில் படுத்தபடி இசைக்கிறான். இந்த ஏற்பு பிற கதைகளில் வெளிப்படையாக இல்லை. இதுவே கொனட்டி முத்தனை மகத்தான காதல் கதையாக ஆக்குகிறது. மேலும் கதை நிகழ்காலத்தில் தொடங்கி நாற்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட நினைவுகளை தொட்டு மீள்கிறது. அடங்கா தாகத்துடன் எட்டியின் தீரா கசப்புடன், மாறா இளமையுடன் முதிர்ந்து தளர்ந்த அமராவதியை அரவணைக்க காத்திருக்கிறான் முத்தன். கொனட்டி முத்தனுக்கு அமராவதி அளிப்பது அவளது பெருங்காதலின் பரிசு, கருணையின் கொடை. சித்ரனின் ‘புங்கமரத்தாயிக்கும்’ கொனட்டி முத்தனின் அமராவதிக்கும் ஒற்றுமை உண்டு. புங்கமரத்தாயி ஏறத்தாழ சிறு தெய்வ நிலையை அடைகிறாள். 

சீர்குலைவுகளை காண்பது ஒரு நிலை. சமன்குலைவுகளுக்கு அப்பால் அவற்றுள் செயல்படும் ஒழுங்கு அல்லது சீர்மையை நோக்கி நகர்வதையே இலக்கியத்தில் வெளிப்படும் ஆன்மீகம் என கருதலாம். இயற்கையுடனான முழு இயைவு, ஒத்திசைவே  ரசவாதத்தின் சாரமான தத்துவம். அண்டத்தில் உள்ளவை பிண்டத்திலும் பிண்டத்தில் உள்ளவை அண்டத்திலும் உள்ளன. இந்த தரிசனம் ரசவாதத்தை களமாக கொண்ட ‘பொற்பனையான்’ கதையில் முழு வீச்சில் வெளிப்படுகிறது. பேரொழுங்கை நோக்கிய நகர்தலில் அமானுட/ அதிமானுட அனுபவங்கள் முக்கிய பங்காற்றுபவை. ஏனெனில் அவை நம் புற உலகின் தர்க்கத்திற்கு அப்பாலான வேறொரு ஒழுங்கின் குறியீடுகள். ‘விசும்பின் மொழி’ அவ்வகையில் அவரது ‘பொற்பனையான்’ தொகுப்பின் பேசுபொருளுக்கு ஒரு முன்மாதிரி. ஆன்மீகத்தன்மை முழுக்க வெளிப்பட்ட சிறுகதை என சொல்லலாம். அமானுட / அதிமானுட நிகழ்வுகளை எழுதுவதற்கு இங்கு பொதுவாக இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒன்று இந்திரா சவுந்தரராஜன் பாணி, அதீதமாக மாயப்படுத்துவது, மற்றொன்று புதிரை கட்டுடைப்பது. மூன்றாவதாக ஒரு முறை உள்ளது. ஜெயமோகனை அவ்வகையான கதைகளுக்கான முன்னோடியாக கருதலாம். ‘விசும்பு’ மற்றும் ‘உற்றுநோக்கும் பறவை’ ஆகிய ஜெயமோகனின் கதைகளுடைய நீட்சியாக ‘விசும்பின் மொழி’ கதையை வாசிக்கலாம். கதிரவன் பறவைகளின் சமிக்ஞைகளை ஆராய்கிறான். அவற்றின் முன்னறியும் திறனை பதிவு செய்கிறான். இயற்கையின் வலைபின்னலில் ஒவ்வொரு உயிருக்கும் உண்டான முக்கியத்துவத்தை உணரும் தருணத்தில் கதிரவன் வவ்வா சாமியாக ஆகிறான். அகால மரணமடைந்த குழந்தைகளே பழந்திண்ணி வவ்வாளாக பிறக்கின்றன என சொல்கிறான். கதையின் இறுதி உச்சம் அந்த அனுபவத்தை கடத்துகிறது. இந்தியத்தன்மை கொண்ட அறிவியல் மிகுபுனைவு என சொல்லலாம். பகுத்தறிவை நம்பும் சூழலியல் பேராசிரியர் சொந்த வாழ்வில் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும்போது ஆசுவாசம் தேடி அலைகிறார். ‘விசும்பின் மொழி’ என்பது கதிரவனின் நாட்குறிப்பு. இயற்கைக்கும் மனிதனுக்கும் (அப்படி ஒரு இருமையை கட்டமைப்பதே வினோதமானது) உண்டான உறவு சங்கிலியைப் பற்றிய அவதானங்களை கொண்டது. நாட்குறிப்பில் சித்தரிக்கப்படும் சிறுவனின் மரணம் மனதை தொந்தரவு செய்தது. ‘பறவைகளைத் தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் மட்டுமே பேரழிவின் விளிம்பில் நிற்கும் மானுட குலத்திற்கு மீட்பு என்பது சாத்தியப்படும்’ என்கிறது. இயற்கையெனும் மாபெரும் வலைப்பின்னலில் நம் கைக்கு அகப்படும் கண்ணியைக்கொண்டு புரிந்துகொள்ள முயல்வதுதான். மனிதமையவாதம் மனிதனை பிரபஞ்ச இயக்கத்தின் மையமாக ஆக்குகிறது. இயற்கைக்கு மனிதனை பேணியேயாகவேண்டிய எந்த நிர்பந்தமும் இல்லை.‌ அதன் அமைப்பில் மனிதனுக்கு தனிச்சலுகைகள் என ஏதுமில்லை. தனித்துவம் என ஏதேனும் ஒன்று உண்டென்றால் அவனுக்கு அளிக்கப்பட்ட அறிவின் காரணமாக இருக்க வேண்டிய பொறுப்புணர்வுதான். 

‘பொற்பனையான்’சித்ரனின் கதைகளில் இதுவே சிறந்தது. பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் புதுக்கோட்டை சிவகங்கை பகுதியில் மிகவும் பிரபலம். அவரது தொன்மத்தை கையிலெடுத்துக்கொண்டு ரசவாதம், காலனிய காலகட்டம் என பல தளங்களில் கதை பயணிக்கிறது. சித்ரன் அடிப்படையில் சித்த மருத்துவ பட்டதாரி. ரசவாத பின்புலத்தில் அரிதாகவே கதைகள் எழுதப்பட்டுள்ளன. ‘பொற்பனையான்’ அளவிற்கு நுண் தகவல்களும் நம்பகத்தன்மையும் கொண்டு வேறு ஒரு கதை இந்த களத்தில் எழுதப்பட்டுள்ளதா என தெரியவில்லை. கதையைப் படித்தவர்கள் தாமே குறிப்புகளைக்கொண்டு ரசவாதத்தில் ஈடுபடும் அபாயம் கூட உண்டு. எனினும் இந்த தகவல் செறிவு அறுபத்தி சொச்சம் பக்கம் நீளும் கதையில் எங்குமே அயர்வை ஏற்படுத்தவில்லை.

   பெனுவா எனும் ஃபிரெஞ்சு நாட்டுக்காரன் வீராம்பட்டிணத்தில்  துப்பாக்கிகளுக்கான வெடிமருந்து தொழிற்சாலையை நிர்வகிப்பவன். அவனுக்கு ரசவாதத்தின் மீது ஆர்வம். அவனுடன் நட்புகொள்ளும் சுவடிகளை பிரதியெடுக்கும் பொற்பனையான் ஆகியோரே கதையின் முக்கிய பாத்திரங்கள். கதைக்குள் மேலை கீழை நாகரீகங்களிக்கு இடையேயான உறவும் உரசலும் கோடிட்டுக்காட்டப்படுகிறது. இறுதியில் அத்தகைய பகுப்புகள் பொருளற்று போவதையும் சொல்கிறது. பெனுவாவின் ஆசிரியர் அவனிடம் ‘மேற்குலக நாடுகளின் இரசவாதிகள் தங்கத்தின் மீது அளவு கடந்த பிரேமை உடையவர்களென்றும் கீழைத்தேய இரசவாதிகளோ அதைத் தன் மலத்திற்கு ஒப்பாக நினைப்பவர்களென்றும்’ சொல்கிறார். விந்தைகளும் வினோதங்களும் மாயங்களும் நிறைந்த இந்தியாவைத்தேடி பெனுவா இங்கே வருகிறான். ஆனால் அவனுக்கு காண கிடைப்பதோ பசியும் பட்டினியும் நீக்கமற நிறைந்த‌ தேசம். இவர்களா ரசவாதத்தில் உலோகங்களை பொன்னாக்க போகிறார்கள்? என யோசிக்கிறான். இந்தியர்களுடன் மேட்டிமை ஏதுமின்றி நெருங்கி பழகுகிறான். ரசவாதத்தை அவன் அறிந்துகொள்ள ஏன் விரும்புகிறான்? அது தன்னை தேவனின் ராஜ்ஜியத்திற்கு இட்டுச்செல்லும் என நம்புகிறான். அறிதலின் கிளர்ச்சியே அவனுக்கு முதன்மை விசை. ஆதிமுனியின் பெயர்தாங்கியான பொற்பனையானை சந்திக்கிறான். சுவடிகளை பிரதியெடுத்து துபாஷிகளுக்கு விற்று பெரும் பொருள் ஈட்டுகிறான். தற்செயலாக ரசவாத சுவடிக்கட்டுக்களை பிரதியெடுக்க அந்த பித்து அவனை பீடித்துக்கொள்கிறது. வைத்தியர்களிடம் வித்தைகளை அவர்கள் அறியாமலேயே கற்கிறான். தேவையானவற்றை சேகரிக்கிறான். வெடியுப்பை களவாடும்போது மாட்டிக்கொண்டுதான் பெனுவாவை சந்திக்கிறான். பொற்பனையான் தனது குடியின் பூர்வகதையை சொல்கிறான். திசைப்பூண்டை தின்ற வேடுவச்சி நரிகளால் வேட்டையாடப்பட இருந்தபோது சித்தனால் மீட்கப்படுகிறான். வேடன் சித்தனுடன் அணுக்கமாகிறான். அவருக்கு தேவையானவற்றை தேடிக்கொடுக்கிறான். பனமரம் கற்ழகத்தருவாகிறது. பொன் விளையவில்லை என்றாலும்கூட பனை கற்பக விருட்சம்தான். பொற்பனைக்கான வேட்கை செட்டியை, அரசனை, ஊர் மக்களை என எல்லோரையும் ஆட்டுவிக்கிறது. பித்துடன் ஒற்றைப்பனையை தேடியலைகிறார்கள். செட்டியைக்கொன்றவர்களை பழிதீர்க்க மணிக்கிராமத்தினர் காவல்படையினரான வீரகொடியினரை அணுகுகின்றனர். அதன் தலைவன் மணிமாறன் வழியாகவே பொற்பனையான் ஆதிமுனியாகிறான். தலைச்சன் பிள்ளைக்கு‌ பொற்பனையான் என பெயரிடுகிறார். அந்த கொடிவழியில் வந்தவன் தான் பெனுவாவை சந்திக்கும் பொற்பனையான். ஆதிமுனியின் கதை அவனுடைய கூற்றாகவே வருகிறது. ரசவாதத்தில் ஆர்வம் காட்டும் பெனுவாவை வைத்தியர் எச்சரிக்கிறார். ரசசித்தி எல்லாருக்குமானது அல்ல என்கிறார். உலக வாழ்வில் பற்றுள்ளவர்களுக்கு அது கைகூடாது என்கிறார். அதற்குள் பயணித்து வாழ்வை வீணடித்தவர் பட்டியல் மிக நீண்டதென எச்சரிக்கிறார். தங்கத்துக்காக அல்ல ரசவாதம் எனும் கலைக்காகவே இதில் ஈடுபடவேண்டும் எனும் உறுதியுடன்தான் இருவரும் இணைந்து ஈடுபடத்தொடங்குகிறார்கள்.‌ இவர்களுக்கு இடையேயான மாறுபாடு எங்கு எப்படி ஏற்படுகிறது? ஏழாம் காய்ச்சலுக்கு பதிலாக ஐந்தாம் காய்ச்சல் வெடியுப்பு பயன்படுத்தியதால் மீண்டும் வெடியுப்பு வேண்டும் என பொற்பனையான் கோருகிறான். வெடியுப்பு கணிசமாக குறைந்துள்ளதால் கம்பேனி பெனுவாவை நெருக்கியது. ஐந்தாம் காய்ச்சலுக்கும் ஏழாம் காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசமில்லை என வாதிடுகிறான் பெனுவா. “சிவன் தென்னாட்டவனென்றாலும் தெற்கே பயணித்தால் கைலாச மலைகளை அடைய முடியாது” என்கிறான் பொற்பனையான். இந்த இடத்தில் பொற்பனையான் வழிமுறையில் கறாராக இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் அவன் பீடிக்கப்பட்டவன். நான்கு நூற்றாண்டு நீண்ட வேளிர் அரசின் கடைசி மண்ணன் ரசவாத பித்தேறி ரசமணிகளை விழுங்கி பித்தாகி இறந்தவன். அவனே பொற்பனையானின் மீது ஆரோகணித்தவன். “பொற்பனையானுக்கு விளைபொருள் மட்டுமே குறியாயிருக்க பெனுவாவிற்கோ வழிமுறைகளில் தாதுக்களில் நிகழும் மாற்றங்கள் ஏனெனக் கேள்விகளால் ஆர்வமாய் இருந்தது,” என இருவரின் உளப்போக்கையும் கதை காட்டிச்செல்கிறது. சித்ரனின் ‘மாயவன்’ குறுங்கதை ஒருவனுள் உள்ள இரு சாத்தியங்களை சொல்வது. பெனுவாவையும் பொற்பனையானையும் அப்படி காண இடமுண்டு. செயநீர் பற்றிய சுவடியை கைப்பற்ற வைத்தியரை கொல்லவும் செய்கிறான் பொற்பனையான். தங்கத்திற்கு பதிலாக மூன்று நீலமணிகள் கிடைக்கின்றன. பொற்பனையான் மனமொடிந்து ரசமணியை தயாரிக்க செல்கிறான். அதன் வழி கற்பகதருவை கண்டுவிட முயல்கிறான். பெனுவாவிற்கோ தங்கமாகவில்லை என்பது பொருட்டாக இல்லை இதுவரை மானுடம் அறியாத புதிய தாது உருவாகியிருக்கிறது என்பதே அவனுக்கு வியப்புக்குரியதாக உள்ளது. கதையில் வரும் உபதலைப்புகள் நம் கவனத்திற்கு உரியவை. ‘ஆதிமுனியின் கதை (அ) கற்பக விருட்சத்தின் கதை’ எனும் முதல் தலைப்பில் ஒரே கதை பெனுவாவிற்கு ஆதி முனியினுடையதாகவும் பொற்பனையானுக்கு ‘கற்பகவிருட்சத்தின் கதையாகவும்’ இருக்கிறது.  பெனுவாவிற்கு ‘திசையறியா வேடுவச்சியின் கதையாக’ உள்ளது பொற்பனையானுக்கு ‘பொற்பனம்பழம் காய்த்த கதையாகிறது’. ஒரே அனுபவம் பெனுவாவிற்கு ‘மெய்ஞானியின் கல்லாகவும்’ பொற்பனையானுக்கு ‘இரசவாதியின் சாபமாகவும்’ ஆகிறது. ‘நித்தியத்தின் பேரொளியை’ ஒருவருக்கு அளிக்கும் அதுவே இன்னொருவருக்கு ‘ஒலியெழா மணியாக’ உள்ளது.  தங்க பித்தேறிய பொற்பனையானுக்கு மரணமும் அறிதலின் பொருட்டு ஈடுபட்ட பெனுவாவிற்கு தேவனின் ராஜ்ஜியமும் கிட்டுகிறது. ஞானம் ஒருபோதும் அதிகாரத்தின் கருவியாக ஆகிவிட முடியாது என்பதே கதையின் தரிசனம். வேடன் ஏனாதியை கொல்கிறான். அரச மறுப்பு என்பது முக்கியமான சரடாக கதையில் துலங்கி வருகிறது. அதிகாரமற்றவர்களிடமே ஞானம் சென்று படிகிறது. வேடனிடமிருந்து பொற்பனை செட்டியை சென்றடைந்தபோதே அது பாவத்தின் கனியானது என்று புரிந்துகொள்கிறான் பெனுவா. சித்தர் மரபு என்பதே வெகுமக்களின் அதிகார மறுப்புடன் நெருக்கமாக தொடர்புடையது. ‘விசும்பின் மொழி’ கதையிலும் இக்கதையிலும் அண்டத்திலுள்ளவையே பிண்டத்தில் பிண்டத்தில் உள்ளவையே அண்டத்தில் எனும் சித்தர் மரபின் மெய்யியல் தரிசனம் மையமாக உள்ளது. கதையின் இறுதி அதை உறுதிசெய்யும் அபாரமான பகுதி. தமிழர் மெய்யியல்/ஆன்மீகத்தை/ மறைஞானத்தை பேசுபொருளாக்கிய விதத்தில் ப. சிங்காரம், ஜெயமோகனின் ‘கொற்றவை’ ரமேஷ் பிரேம் கதைகளின் வரிசையில் சித்ரனின் ‘பொற்பனையானை’ வைக்கலாம். கதையில்

 தொழிற்படும் கச்சிதமின்மையே கதைக்கு ஒரு வசீகரத்தை அளிக்கிறது. அவ்வகையில் சிறுகதை வடிவமே நாவல்தன்மைக்கு நெருங்கிச்செல்கிறது. அரவிந்த் கருணாகரனின் “சீர்மை” ஏறத்தாழ இதே அளவு. அது ஒரு நாவலாகவே கருதப்படுகிறது. “பொற்பனையானையும்” அப்படி கருத இடமுள்ளது. 

என் வாசிப்பின் எல்லையில் ‘தூண்டில்’ ‘நீர்மை குன்றும் நெடுங்கடல்’ ‘கனாத்திறமுரைத்த காதைகள்’, ‘உடல் இயற்கை துறவு’ ‘நைனாரியும் பதின்கரையும்’ ஆகியவை என்னை ஈர்க்காத கதைகள். ‘உடல் இயற்கை..’ கதையில்  கதைசொல்லி வழியாக இன்னோருவரின் கதையாக சொல்லப்படுவதும் அந்த கதை குறித்த சிந்தனைகளுமாக உள்ள இவ்வடிவம் கதையின் மைய தரிசனத்தை வலுப்படுத்தவில்லை. அமானுட அனுபவங்கள் மோதலின் உச்சத்தில் நிகழும்போது தான் பெறுமதி கொள்கின்றன. ‘வழிப்போக்கன்’ கதையில் வரும் பரமசிவத்திற்கும் இக்கதையில் வரும் சந்திரசேகருக்கும், விசும்பின் மொழியின் வவ்வால் சாமிக்கும் அவை பொருந்தி வருகின்றன. இக்கதையின் கதைசொல்லிக்கும் அந்த அமானுட தரிசனம் கிடைப்பது கதையின் ஓர்மையை குலைப்பதாக உள்ளது. ஆன்மீகத்தை பேசுபொருளாக கொண்ட கதைகளில் எழுத்தாளர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதி இதுவே. அமானுட அனுபவங்களை நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதுவதில் மிகுந்த கவனம் தேவையாகிறது. அதீதமாகும்போது கேலிக்குரியதாக ஆகிவிடும் அபாயம் அதற்கு உண்டு. 

புதிய தலைமுறை கதைசொல்லிகளில் முழுமை நோக்கு கொண்ட படைப்பாளிகள் ஒப்புநோக்க சிலரே. உலக இயக்கத்தின் ஆதாரத்திற்கு சென்று அதன் சீர்மையை தரிசிக்கும் விருப்புறுதி கொண்ட வெகு சில சமகால எழுத்தாளர்களில் சித்ரனும் ஒருவர். சீர்மையை காண ஊனக்கண்களுக்கு அப்பால் ஒரு விழி திறக்க வேண்டியுள்ளது. ‘பொற்பனையான்’ அந்த சாத்தியத்தை எனக்கு காட்டுகிறது. அவ்வகையில் சித்ரனின் கதைகள் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியமான வரவு. நண்பராகவும் தமிழ் இலக்கிய வாசகராகவும் சித்ரன் நெடுங்காலம் தமிழ் புனைவுக்கு பங்காற்றுவார் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.