
இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு எழுத்துத்துறையில் நுழைந்த இளையவர்களைச் சிறப்பிக்கும் இதழ். இந்த அடையாளங்களில் முன்னது மட்டுமே எனக்குப் பொருந்தும். எழுத ஆரம்பித்து இருக்கும், எழுத ஆசைப்படும் இளையவர்களுக்கு உதவும் என்கிற நம்பிக்கையில் என் எழுத்து உலக அனுபவங்கள்.
‘கண்ணன்’ பத்திரிகை ஆசிரியர் ஆர்வியின் சிறுவர் கதைகளில் இருந்து ஜானகிராமனின் வயதுவந்தோருக்கான படைப்புகள் வரை ரசித்த எனக்கு, அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், என்னால் முடிந்த வரையில் எழுத ஆசை. அறிவியல் உலகின் கடமைகளில் அது பகற்கனவாகவே இருந்தது.
ஏபி செய்தி
இரண்டு பிணையக்கைதிகளைத் துப்பாக்கிமுனையில் பிடித்துவைத்தவன் கொல்லப்பட்டான்
அக்டோபர் 28, 1992
ட்யுரம், நார்த் கரோலைனா
நேற்று பிற்பகல், ஹை பாய்ன்ட் சிறையில் இருந்து துப்பாக்கியுடன் தப்பிய ஒரு கைதியை போலிஸார் துரத்தினர். அவர்களிடம் சிக்காமல் அவன் அங்கங்கே கார்களை அபகரித்து அறுபது மைல் கிழக்கே ட்யுக் மருத்தவ மையம் வந்தடைந்தான். மருந்தகத்தின் பேகர் ஹாலில் நுழைந்து இரண்டு பெண் பிணையக்கைதிகளைப் பிடித்துவைத்து, அங்கிருந்து தப்பியோட இன்னொரு ஊர்தி தராவிட்டால் ஒருத்தியைச் சுட்டுவிடுவதாக எச்சரித்தான். அவனுடன் போலிஸ் நடத்திய பேச்சுவார்த்தையில் பலன் இல்லாததால், குறிபார்த்து சுடும் காவலர் ஒருவர் அவன் தலையில் குண்டு செலுத்தி அவனை வீழ்த்தினார். விபரீதம் எதுவும் நிகழாமல் இரண்டு பெண்களும் விடுவிக்கப்பட்டார்கள்.
இது நடந்தபோது நானும் என் மனைவியும் ட்யுக் மருத்துவ மையத்தில் பணிசெய்தோம். அதே சமயம் தபாலில் வந்த ஒரு சங்கிலிக் கடிதம். இரண்டையும் இணைத்து ஒரு சிறு கதை எழுதியபோது ஒரு பக்கத்துக்கு மேல் தாண்டவில்லை. பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த கவனத்துடன் பல வாரங்கள் முயற்சித்ததில் ‘இந்தக் கடிதம் கிடைத்த…’ நான் தைரியமாகத் திருப்பி வாசிக்கும் அளவுக்குத் தேறியது. வணிகப் பத்திரிகைகள் ஏற்காததால் ‘திண்ணை’ இணைய இதழ். ஒரு வெள்ளிக்கிழமை என நினைக்கிறேன். அது வெளியான போது ஒரு பாரம் இறங்கியது போல நிம்மதி. நான் இலக்கிய மாளிகையின் வாசற்படியை மிதித்துவிட்டு வந்த வழியே திரும்பிப் போயிருக்கலாம். ஆனால்…
மறுநாள் என் கதையைப் பாராட்டி எஸ். சங்கரநாராயணனிடம் இருந்து ஒரு மின்னஞ்சல். அவருடைய பல சிறுகதைகளை நான் வாசித்திருந்தாலும் அவரைச் சந்தித்தது இல்லை. அனுபவமிக்க எழுத்தாளர் தானாகவே வழங்கிய பாராட்டு தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுத்தது.
நல்ல கற்பனை எங்கே கண்ணில் பட்டாலும் உடனே பாராட்டுங்கள்!
‘டௌன் சின்ட்ரோமா’ல் பாதிக்கப்பட்ட நான்கு வயதுப் பையனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு என் மகனை அழைத்துப்போனபோது நடந்த அனுபவத்தை வைத்து அடுத்த சிறுகதை. சக-ஊழியர் முதுமை எட்டிய பூனைக்கு ‘கடைசி விருந்து’ கொடுத்துத் தூங்க வைத்தது, மருத்துவ மையத்தில் கிறிஸ்மஸ் பரிசாகத் தரும் ‘உறைவித்த வான்கோழி’ என்று இன்னும் சில மட்டுமே குறிப்பிடத்தக்கவை. ஒரு முயற்சியில் ஆளுமை பெற அதில் பத்தாயிரம் மணி நேரம் செலவிட வேண்டும் என்று சொல்வது உண்டு. அச்சிடக்கூடத் தரம் இல்லாத ஆயிரம் பக்கங்கள் எழுதியவன் அரை எழுத்தாளன் ஆகிறான்.
ஒருமுறை சப் சான்ட்விச் வாங்கியபோது இருபது டாலருக்கு சில்லறை தருவதை ‘மறந்த’ பணிப்பெண்ணின் கதை ‘ப்ளான் பி‘. மிக நன்றாக அமைந்தது என்ற பெருமையுடன் (இந்தியா போனபோது) அதை சங்கரநாராயணனிடம் காட்டினேன். அவர் அடித்து திருத்தி மாற்றியதை மனம் கலங்காமல் பார்த்து, நான் திரும்ப எழுதியபோது கதையின் தரம் பல மடங்கு உயர்ந்ததைக் கவனித்தேன்.
முன்னேற்றப் பாதையில் போக விமர்சனங்களைக் கோபப்படாமல் ஏற்றுக்கொள்ளுங்கள்!
ஆர்லான்டோவில் நடந்த ஒரு அறிவியல் கூட்டம். வருகை தந்தவர்களுக்கு டர்கி லேக் பூங்காவில் ஒரு நடைப்பந்தயம். மழையும் பனி மூட்டமும் மரத்தில் இருந்து உதிர்ந்த நீர்த்துளிகளும் காரணமாக இருக்கலாம். காதலில் தோல்வியுற்ற நண்பன் தன் சோகக்கதையை என்னிடம் சொல்வது போன்ற பிரமை. அந்த அனுபவத்தில் முதல் நாவல், ‘திடீரென்று’. முதன்முறை எழுதியதை வார்த்தைகளில், சம்பவங்களின் போக்கில் இருபது தடவையாவது திருத்தி எழுதியிருப்பேன்.
எழுதுவது கால் பங்கு, அதை எடிட் செய்வது முக்கால் பங்கு.
விஞ்ஞானத்தின் நியதிகளையும் அத்துறையில் ஈடுபட்டவர்களையும் பல காலம் கவனித்ததால் அறிவியல் கதைகளில் என் கவனம் சென்றது.
சயன்ஸ் ஃபிக்ஷன் என்றால் பொதுவாக ரோபோக்கள், விண்வெளிப் பயணங்கள், மற்றும் வேற்று கிரகங்களைச் சேர்ந்தவர்களின் ஆக்கிரமிப்புகள். எல்லையற்ற கற்பனை வெளியில் கட்டுத்தளை இல்லாமல் திரிந்தலைய அறிவியல் உரிமை வழங்கியதாக நினைக்கிறோம். என் நோக்கில், ஒவ்வொரு விஞ்ஞான விதியும் உலகைப் புரிந்துகொள்ள ஒரு குறுகலான திறப்பு, ஒரு வரையறை, ‘கிழித்த கோட்டைத் தாண்டாதே!’ என்கிற ஒரு எச்சரிக்கை. ஒருவித சக்தியை இன்னொன்றாக மட்டுமே மாற்றலாம் என்றால் பறக்கும் கம்பளம் சாத்தியம் இல்லை. எதற்கும் பரிமாண எல்லைகள் இருப்பதால் இறக்கைகள் தேவதைகளைத் தரையில் இருந்து உயர்த்த முடியாது. பரிணாம மாற்றத்தில் நாய் பேசும் சக்தியைப் பெறும் என்பது நிச்சயம் இல்லை.
இதே கருத்தை இறுதிக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த பல்துறை விஞ்ஞானி ஜே. பி. எஸ். ஹால்டேன் வெளியிட்டு இருக்கிறார்.
கதை எழுதப்பட்ட காலத்தில் நிறுவப்பட்ட எந்த அறிவியல் கொள்கையையும் அது மீறல் ஆகாது. பருப்பொருட்களின் குணங்கள் அனைத்தையும் கதை மதிக்க வேண்டும்.
இக்கோணத்தில் பார்க்கும்போது ஸ்டார்ட்ரெக் உட்பட பெரும்பாலான விஞ்ஞானக் கதைகள் அதீதக் கற்பனை (fantasy). அவ்விதக் கதைகள் மனித உணர்ச்சிகளையும் கதாபாத்திரங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறனையும் விவரிக்காவிட்டால் மதிப்பை இழக்கும்.
ஹால்டேனின் அறிவுரையைப் பின்பற்றி,
‘பரிமளவல்லி’யில் என் சொந்த ஆராய்ச்சியில் கண்டறிந்த நிஜமான முடிவுகளைப் பயன்படுத்தினேன். கதையின் இழை கரைப்பானாகப் பயன்படுத்தப்படும் 1-ப்ரோமோப்ரோபேன் (BrCH2CH2CH3). அது கதையை ஆரம்பித்துவைக்கிறது, கதாபாத்திரங்கள் சந்திக்க வழிசெய்கிறது, கதையை வளர்த்தி ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் பொருளாதார நிபுணர்கள் அறிவியல் விதிகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து அத்துறையை உயர்த்தினார்கள். எழுபதுகளில் அத்தவறைச் சுட்டிக்காட்டிய
N. Georgescu-Roegen, The entropy law and the economic process. 1971
EM Lappe’, Diet for a small planet. 1971
DH Meadows, The limits to growth. 1972
EF Schumacher, Small is beautiful. 1973
WR Catton, Overshoot. 1980
இந்நூல்கள் வெளிப்படுத்திய கருத்துக்களின் அடிப்படையில் 1980க்குப் பிறகு ‘ஈகாலாஜிகல் எகனாமிக்ஸ்’ புதிய அறிவியல் துறையாக உருவானது. அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது ‘நிலம் நீர் காற்று’.
ஹால்டேனின் விதியில் என்னுடைய சேர்க்கை.
அறிவியல் நிகழ்வுக்கு சாத்தியம் இருந்தால் அதைப் பயன்படுத்தலாம்.
சூழல் பாதிக்கப்படாமல் பயிர்வளர்ப்பது ‘லான்ட் இன்ஸ்டிட்யுட்’டின் (சலினா, கான்சஸ்) முக்கிய குறிக்கோள். அவர்களின் ஒரு முயற்சி ‘பெரென்னியல் ப்ளான்ட்ஸ்’ உருவாக்குதல். அரிசி, கோதுமை, சோளம் ஒரு பருவத்துப்பயிர். ஒவ்வொரு வருஷமும் அறுவடை ஆனதும் நிலத்தை மறுபடி கொத்தி உழுது பண்படுத்தும்போது எவ்வளவோ மேல்மண் வீணாகிறது. நீண்டகாலப் பயிருக்கு ஆழமான வேர்கள் என்பதால் மண் இறுகி இருக்கும். அவர்கள் வழிமுறைகளைப் பின்பற்றி பக்வீட் பல்பருவப்பயிர் ஆக மாற்றப்பட்டு (அதற்கு இன்னும் சில ஆண்டுகள் போகலாம்) ‘காயகல்பம்’ கதையை இனிதே முடித்துவைக்கிறது.
‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய்!’ 2024-இல் நடப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிறுகதை. பிறர் சந்தோஷமாக இருப்பது பொறுக்காத சமயவாதிகளின் குறுக்கீட்டினால் பாலியுரெதேன் ஆணுறைகளின் தயாரிப்பு சிலகாலம் நிறுத்தி வைக்கப்படுகிறது. நிஜமாகவே அப்படி நடந்தால் ஆச்சரியம் இல்லை.
யோசித்துப் பார்த்தால், அறிவியல் வரம்புகள் கற்பனையின் விளைநிலங்கள், கட்டுப்பாடுகள் தான் சுதந்திரத்தை வளர்க்கின்றன.
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!
ஆனந்தையும் காஸ்பராவையும் வாரக்கணக்கில் கட்டிப்போட்ட அறுபத்திநான்கு கட்டங்கள்.
கட்டுப்பாடான விதிகள் இருப்பதால் தான் ஐம்பத்தியிரண்டு சீட்டுகளில் எண்ணற்ற ஆட்டங்கள்.
இறப்புடன் வாழ்க்கை முடிவதால் அதற்கு அர்த்தம். கால வரையறை இல்லாத வாழ்வு ஜிப்ரால்டர் பாறை.
இயற்கையின் விதிகளை வாய்ப்புகளாக வைத்து இளம் கலைஞர்கள் கதைகள் புனைய வேண்டும்.
சிறுகதையைப் பொறுத்தவரை திட்டத்திற்கும் முடிந்த வடிவத்திற்கும் அதிக வித்தியாசம் இருந்தது இல்லை. நெடுங்கதையில் இப்படித்தான் கதை போக வேண்டும் என்ற நிச்சயம் எனக்குக் கிடையாது. பல சமயங்களில் இப்படி இருந்தால் நல்லது என்று கதாபாத்திரங்களே கொடுத்த அறிவுரைகளைக் கதையின் சேர்த்து இருக்கிறேன். இது தான் என் கடைசி நாவல் என்ற தீர்மானத்தில் எழுதினாலும் ‘உபநதிகள்’ என் பத்தாவது நெடுங்கதை.
அடுத்த கதைக்கு உதவும் என்று நல்ல உத்திகளை, அழகான வர்ணனைகளை, எதிர்பாராத திருப்பங்களை மிச்சம் வைக்காமல் எழுதுங்கள்!
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி போல எழுத எழுத கற்பனை ஊற்று தானாக நிரம்பும்.
சங்கரநாராயணனுடன் என் எழுத்தின் வளர்ச்சிக்கு ஆசிரியர் மைத்ரேயனும் ஏணியாக இருந்து இருக்கிறார். இருவருக்கும் எல்லையற்ற நன்றி!