உலகில் ஒருவன் – தொப்புள்கொடி அறாத குழந்தை

கிராமத்தில் பிறந்து,  சிறிய  பள்ளிக்கூடத்தில் படிக்கும்  சிறுவன் , கல்வி கற்கும் பொருட்டு நகரத்துக்கு அனுப்பப்படுகிறான். அந்தப் புதிய சூழலுக்கு அவன் எப்படி தகவமைத்துக் கொள்கிறான் என்பதுதான் நாவலின் மீச்சிறு கதைச் சுருக்கும். Coming of Age எனும் அறியாப் பருவத்தில் இருந்து வளர்ந்து எப்படி வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்கள் என்பதைச் சொல்லும் நாவல் வகை. மேற்கத்திய இந்த வகைப்பாட்டில் இருந்தாலும், அந்த மாற்றம் இனிய சாகசம் எனும் ஒற்றைத் ஒற்றைப் பரிணாமமோ துயரையும் சவாலையும் தாண்டுவதான வலியைப் பேசும்  வேறு ஒற்றைப் பரிணாமமோ இன்றி  நன்றும் தீதும் கலந்ததே வாழ்க்கை எனும் யதார்த்தத்தை எளிய வகையில் , மண்ணின் மணத்தோடும் இம்மண்ணில் வாழும் மனிதரின் குணத்தோடும் சொல்லும் வகையில் உலகில் ஒருவன் நாவல் தனித்து சிறந்து விளங்குகிறது.

பிறந்தது முதலே தாயிடம் இருந்து பறிக்கப்பட்டு சின்ன அத்தையின் கையில் வளர்கிறான் , பெயர் சொல்லப்படாத சிறுவன். முதல் பிள்ளை என்பதால் பெரியவன் என்றே நாவலில் பகுதியில் அறியப்படும் அவன், கிராமத்தில் ஒற்றை ஆசிரியர் பள்ளிக்கூடத்தில் சரியான கல்வி இல்லாததால் நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் பொருட்டு பெரியத்தை வசிக்கும் ஊருக்கு அனுப்பப்படுகிறான். விடுமுறைக்கு அழைத்துச் செல்வதைப் போல் சென்றுவிட்டு , மூன்றாம் நாள் அங்கிருக்கும் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். அடம் பிடிப்பதை மீறி  அழைத்துச்செல்லப்பட்டு பள்ளியில் சேர்க்கப்படும் போதும், அங்கிருக்கும் மரவகையின் பெயரை மச்சானிடம் கேட்டு வாதானி மரங்கள் என்று அறிந்து கொள்கிறான். அவனை பள்ளியில் சேர்த்துவிட்டு அப்பா ஊருக்குச் சென்றுவிட தனிமையை உணர்கிறான்.  ஏற்கனவே வளமாக வளர வேண்டிய அம்மாவின் பாசம் எனும் மண்ணில் இருந்து பிடுங்கப்பட்டு , சின்ன அத்தை எனும் வேற்று மண்ணில் வளர்ந்த அந்த  சிறு செடி, இப்போது அங்கிருந்தும் பிடுங்கப்பட்டு வேரடி மண் கூட இல்லாமல் வேற்று நிலத்தில் நடப்படுகிறது. அந்த புதிய நிலத்தோடும் நீரோடும்   பொருந்திப் போனதா அந்தச் செடி ? 

சொந்த ஊரில் அப்பாவிடம் அடிவாங்க நேரும் போது, ட்ரவுசரிலேயே “ஒன்னுக்கு” போய்விட்ட காரணத்தால் மேலும் அடி வாங்க நேரிட்ட  உருவான தாழ்வு மனப்பான்மையோ என்னவோ, புதிய ஊரில் புதிய பள்ளிகூடத்துக்குப் போனதும் முறையான “டாய்லட் ட்ரெய்னிங்”இல்லாத காரணத்தால் வகுப்பறையிலேயே ”இரண்டுக்குப் போய்விட”  அந்த செயலை , அந்தப் பள்ளிக்கூடமும் வகுப்பறையும் அவனைக் கனிவுடன் அணுகியதைக் கண்டு மெல்ல வேர் பிடிக்கத் தொடங்குகிறது சிறு செடி. அவன் புதிய பள்ளிக்கூடத்தில்  கற்றுக்கொடுக்கும் முறையாலும் , நண்பர்களாலும், விளையாட்டுகளாலும் புதிய வாழ்க்கையோடு ஒன்றிப் போகிறான். வீட்டைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் அறிமுகமும் பழக்கமும் ஏற்படுகிறது. அவற்றில்   ஜெயா அக்காவுடனான நட்பு முக்கியமானது . ஆனால் அந்த நட்புக்கும் பெரியத்தையின் பொறாமை வடிவில் தீங்கு நேர, அந்த நட்பின் நெருக்கம் விலகிப் போகிறது. இது ஒரு தொடக்கம் போல் ஆகி , அவனைச் சுற்றி இருக்கும் பல உறவுகளும் நட்புகளும் ஒவ்வொன்றாக பல்வேறு காரணங்களால் விலகுதல் நேர்வதற்குக் கட்டியம் கூறினாற்போல் ஆகிறது. 

ஒருபுறம் பள்ளியில் புதிய நண்பர்களும் , மறுபுறம் ஊருக்குள் புதிய நண்பர்களும் கிடைக்க அவன் படிப்பிலும் முன்னேற்றம் அடைகிறான். அதன் பிறகு குடும்ப வாழ்வில் நிகழும் தொடர் துயரங்கள் அவனைத் துரத்த, அருகிலிருக்கும் மனிதர்களின் நட்பும் பள்ளிக்கூட சூழலும் கல்வியும் அவன் தடம் புரண்டுவிடாமல், தன்னிலை இழந்து விடாமல் இருக்கக் காரணமாகின்றன. குழந்தைகளின் வளர்ச்சியில் குடும்பம், சமூகம், பள்ளிக்கூடம் ஆகிய மூன்றுக்கும் சம பங்கு உண்டு என்கிறது சமூக அறிவியல். இந்நாவலில் பெரியவன் என்று அறியப்படும் சிறுவனின் குடும்பமும் சமூகமும் தொடர்ச்சியாக பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கும் போதும் , பள்ளிக்கூடம் என்ற அமைப்பும் கல்வி என்ற செயல்பாடும் அவனது வாழ்வுக்கு பற்றுக்கோடாக அமைந்தன. 

நாவலில் வரும் பெரியவர்களான சின்னத்தையும் அப்பத்தாவும் யாருக்கும் சொல்லாமல் போகிறார்கள் ; தனக்கும் சொல்லவில்லை. காதலித்து ஓடிப்போகும் மேகலாக்கவும் தன்னிடம்  சொல்லிக்கொள்ளாமல் சென்று விடுகிறாள். அவளை முதலில் காதலித்த மணியும் ஊரை விட்டுப் போகும் போது தன்னிடம் சொல்லவில்லை. மச்சான் தேர்தலில் ஆதரித்த கட்சி தோர்த்துவிட, மச்சானும் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டுச் சென்றுவிடுகிறான். இப்படி யாருமே தன்னிடம் சொல்லாமல் சென்று விடுகிறார்கள் என்ற வருத்தம் அவனை பற்றிக் கொள்கிறது. அதனாலோ என்னவோ,  அவன் பள்ளியில் ஒரு நிலையை ( ஆரம்பப்பள்ளி ) முடித்து வேறு பள்ளிக்கு அல்லது ஊருக்குச் செல்வான் என்று தெரிந்ததும் , தனது நண்பர்கள் , அண்டை வீட்டார் என அனைவரிடமும் சொல்லிவிட்டே விடைபெறுகிறான். 

அவன் உணவுப் பழக்கத்திலும் மாற்றம் அடைகிறான். அருக்காணி அன்புடன் சமைத்துத்தரும் பன்றிக்கறியை உண்கிறான். பெரியத்தை நல்லது என்று சொல்வதால் மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளை குடிக்கிறான். பெரியத்தையும் இறந்தபின், தோப்புக்கு உள்ளேயே வாழ நேர்கையில்,  நள்ளிரவில்  மாமன் அழைத்துவரும் நண்பர்கள் சமைக்கும் அணில்  கறியையும் உண்கிறான். எந்த உணவைப் பற்றியும் அருவறுப்பு கொள்வதில்லை ; குறை சொல்வதில்லை. 

”அம்மா   கலர் சேலை கட்டி இருக்காங்க, சின்னத்தை மட்டும்  ஏன் வெள்ளை சீலை கட்டி இருக்காங்க ?” என சின்னத்தையிடமே கேட்கும் கேள்வி, “பள்ளியில் இருக்கும் ஏசு சாமியை நான் ஏன் கும்பிடக்கூடாது?” என மாமாவிடம் கேட்கும் கேள்வி,  “லவ்ன்னா என்ன..?” என மூத்த நண்பன் மணியிடம் கேட்கும் கேள்வி, “பெரியவங்கதான் லவ் பண்ணுவாங்க ; நம்மள மாதிரி சின்னப்பசங்க கூட லவ் பண்ணுவாங்களா” என பள்ளித் தோழன் தண்டூவிடம் கேட்கும் கேள்வி என அவன் கேட்கும் கேள்விகள் பொருண்மை மிக்கவையாக இருக்கின்றன. 

பள்ளிகூடத்தில் நடக்கும் ”ஸ்நோ ஒயிட் அண்ட் செவன் ட்வார்ஃப்ஸ்” நாடகத்தில் அவன் ஏற்று நடித்த ஹண்ட்டர் பாத்திரத்தைப் போலவே, சுற்றிலும் இருக்கும் பெண்களின் மீது பரிவு கொண்டவனாக இருக்கிறான். அதே நேரத்தில் செவன் ட்வார்ஃப்ஸ் போலவோ பிரின்ஸ் போலவோ பெண்களை அவனால் காப்பாற்ற முடிவதில்லை. என்றாலும் அந்த ஹண்ட்டரைப் போலவே அவனும் பரிவும், கனிவும் கொண்டவனாக , தீங்கிழைக்க எண்ணாதவனாக இருக்கிறான். 

ஒருமுறை அப்பா சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்ல கொடுக்கும்போது , அதை வியப்புடன் அனுபவிக்கும் முன்னர், குறுக்கில் பாம்பு ஓடி அவனுக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது. வகுப்பில் இரண்டுக்குப் போய்விட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் என்ன நடக்குமோ என்று அஞ்சிக்கொண்டே சனி ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் போது , அங்கு யாருமே அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் அவனுடன் இயல்பாக நடந்துகொள்வது வியப்பைக் கொடுக்கிறது. வித்யாசமான விளையாட்டு என்று வியந்து பங்கேற்கும் கோணிப்பைக்குள் கால்களை விட்டுக்கொண்டு தாவிக்குதித்து ஓடும் பந்தயத்தில் பங்கேற்று , அதில் போய்த் தோர்ப்பது அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. விடுமுறையில் வயலிலும் விளையாடிக்கொண்டே பள்ளிக்கூட நாடகத்தில் பங்கேற்று சிறிய ஊரிலும் விளையாடிக்கொண்டே ஒவ்வொன்றாக வியந்து பார்த்து மகிழும்போது , கிணற்றுக்கு அருகில் சென்று எட்டிப் பார்க்க , கிணற்றுக்குள் இறந்து கிடக்கும் கால் ஊனமுற்றவரைக் காண அதிர்ந்து போகிறான். பாத்திரம் என்றாலும் தவறில்லாமல் நடித்தது கொடுக்கும் வியப்பையும் மகிழ்வையும், அவனுக்கு மட்டும் அப்பா அம்மா மட்டுமில்லாது உள்ளூரிலிருக்கும் மாமா கூட வராதது அதிர்ச்சியை துயரைக் கொடுக்கிறது. பெரிய பள்ளிக்கூடத்தில் படிப்பது வியப்பானதாக இருக்கும்போது , அந்தக் கல்விக்காக வாங்கிய கடனுக்காக அவர்களின் மாடும் கன்றும் பிடித்துச்செல்லப்படுவது அதிர்ச்சியைக் கொடுக்கிறது. வியப்பைக்கண்டு களிப்போடு சிரிக்கும் அவன், அதிர்ச்சியில் உறையவும் அழவும்  செய்கிறான். ஆனால் அந்த உணர்வுகளிலேயே உறைந்து போகவில்லை;  ஓடுவதை மட்டும் நிறுத்தவில்லை. நாவலை வாசிக்கும்போது அந்த ஓட்டம் நாமும் ஓடவேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுக்கிறது.

சொந்தக் கிராமத்தில் இருந்து பிரிந்து வந்தாலும், வந்த ஊரில் இருக்கும் மரங்கள், கோயில் , பள்ளிக்கூடத்தில் இருக்கும் வாதானி மரம், ஏசு சிலை, பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் வேப்பமரம், அதைச் சுற்றி கட்டப்பட்ட திண்ணையில் வரையப்பட்டு இருக்கும் பதினந்தாங்கரம், அங்கு விளையாடும் மனிதர்கள், வீட்டருகில் இருக்கும் ராட்டைக் கூடம், அங்கு நூற்கும் பணி செய்யவரும் அக்காக்கள் என புதிய ஊரில் இருக்கும் இயற்கை, மனிதர்கள், சிலைகள் என அனைத்துடனும் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறான். புதிய ஊருக்கு வந்தபின் ஜெயா அக்காவுடன் , அருக்காணியுடன் , கண்மணியுடன் ஏற்படும் நட்பால் இளந்தலைமுறை பெண்களின் வாழ்க்கைப்போக்கை அறிகிறான். மணி, மச்சான், கடை வைத்திருப்பவர், கள் விற்பவர் போன்றோருடன் ஏற்படும் பழக்கத்தால் ஆண்களின் உலகை அறிகிறான். சிறிய வயதிலேயே அம்மாவின் அரவணைப்பில் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டாலும் மனிதர்கள், மண் மற்றும் இயற்கையோடு எப்போதும் தொடரும் பிணைப்பால், தொப்புள் கொடி அறாத குழந்தையாக இருக்கிறான் அவன் .

சிறுவனின் பார்வையில் இருந்து பெரியவர்களைப் பற்றி, பெரியவர்களின் வாழ்வைப்பற்றி பெரிதும் பேசும் இக்கதையை வாசிக்கும் நாம் பெரியவர்களின் பார்வையில் சிறுவனாகவும், சிறுவனின் பார்வையில் பெரியவர்களாகவும் தோற்றம்கொள்ளும் மாற்றமும் மாயமும் நாவல் முழுவதும் நிகழ்துகொண்டே இருப்பது , வாசிப்புக்கு மட்டுமல்ல வாழ்வுக்கும் புதிய பரிமாணத்தைக் கொடுக்கிறது.

நாவலை வாசிக்கும்போது சொல்லப்பட்ட பெரியவனின் கதையோடு, அதனோடு ஒட்டிய அல்லது மாறுபட்ட நமது சிறுவயது நினைவுகள் சொல்லப்படாத கதையாக நினைவில் நிழலாடி வாசிப்பு அனுபவத்தை உயர்வாக்குகிறது. ஒரே முக்கியக்கதாப்பாத்திரத்தை பற்றிய கதையை அந்தப் பாத்திரத்தின் முன்னிலையில் நடந்தவற்றை , அந்தப் பாத்திரத்துக்கு நடந்தவற்றை மட்டும், அந்தப் பாத்திரத்தின் அறிதலுக்கும் புரிதலுக்குமான எல்லைக்குள் ( Limitations ) உட்பட்டு சொல்லி இருக்கும் தேர்ந்த உத்தி,  நாம் கதையோடு ஒன்றி வாசிக்கப் பெரிதும் காரணமாகிறது.

கல்வியின் கட்டாயத் தேவையை உணர்ந்த பெற்றோரும் குழந்தைகளும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டங்களையும், மனப் போராட்டங்களையும் விரிவாகப் பேசுகிறது “உலகில் ஒருவன்”. நாவலில் எங்கும் சாதீயமும் மதமும் பண்பாடும் ஏற்படுத்தும் எதிர்மறை அழுத்தங்களும் கேடுகளும் அவற்றுடன் மனிதர் நடத்தும் நெடுங்கடும்  போராட்டமும் வெளிப்படையாக சொல்லப்படாவிட்டாலும், உட்கிடக்கையாக ( subtle) சொல்லப்பட்டிருக்கின்றன. 

அவன் தனிமையிலும் பசியோடும் இருக்க நேரும் தோட்டத்து வீட்டைச் சூழும் இருளில் ஒளிரும் விளக்கைப்போல போல , நாவலில் துயரையும் கொடுமைகளையும் தாண்டி அன்பும் மானிடமும் மெலிதாக இனிதாக ஒளிர்கின்றன. 

”எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?!” என்பார் எழுத்தாளர் பிரபஞ்சன். அதைப்போல்,நாவலின் தொடக்கத்தில் வேரடி மண்கூட இல்லாமல் பிடுங்கி நடப்பட்ட செடி, நாவலின் போக்கில் துளிர்விட்டு, வேர் பிடித்து வளர்ந்து நாவலின் முடிவில் பூத்திருக்கிறது.

கற்றாழைப்பச்சை – கொடுங்கனவுகளின் அடர் நிறம்

கற்றாழைப்பச்சை சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள “எட்டாவது கன்னி” சிறுகதை, சூழலின் காரணமாக பிழைப்பு தேடி இடம்பெயரும் கருப்பன் என்ற சிகையலங்காரத் தொழிலாளியின் மனைவி புஷ்பா, அவ்வூரின் ” “பெரியவீட்டு” பண்ணையாரின் மகன் மணியின் காம வெறியால் பாதிக்கப்படுவதை, அதை அவள் எதிர்கொள்வதை மையமாகக் கொண்ட கதை . நேரடியாக சாதீய அடிமைத்தனத்தின் , பண்ணை அடிமைத்தனத்தின் பாதிப்புகளையும் கொடூரங்களையும் அதை புஷ்பா எப்படி எதிர்கொண்டாள் என்பதையும் பேசும் கதை. 

கருப்பனும் புஷ்பாவும் எவ்வளவு வலுவற்றவர்களாகவும் திக்கற்றவர்களாகவும் (Vulnerable) இருக்கின்றனர் என்பதையும் , பெரிய வீட்டு ஆட்கள் எவ்வளவு வன்மையும் திண்மையும் கொணடவர்களாகவும் இருக்கின்றனர் என்பதை துல்லியமாக நிரூவி இருப்பது, கதையின் பிற்பகுதியில் புஷ்பா செய்யப்போகும் தீரமான செயலை நோக்கித் தள்ளும் விசையை உணர்த்துவதாக இருக்கிறது. சூழலின் கட்டாயத்தில் சிக்கிக்கொண்ட பெண்ணான புஷ்பாவின் பலவீனமான புள்ளியான அவளது மகனை பணையப் பொருளாக வைத்து மணி செய்யும் கொடுஞ்செயல் புஷ்பாவை மனப்பிறழ்வின் , மன உறுதியின் , உக்கிரத்தின் உச்சிக்கு கொண்டு செல்கிறது. மணி விரும்பும் காமத்தையே அவனைக் கொல்லும் கருவியாகப் பயன்படுத்துகிறாள் புஷ்பா. அவளது கடவுள் தன்மை கொண்ட உக்கிரத்தின் பின்னணியை உளவியல் ரீதியாகவும், அவள் ஆற்றும் எதிர்வினையின் பலத்தை அறிவியல் பூர்வமாகவும் கருத்தில் கொண்டு அதே நேரத்தில் காப்பியத் தான்மையோடு எழுதப்பட்டு இருப்பது  வாசிப்பவரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  தனித்தன்மை மிக்க, சிறந்த தமிழ்ச் சிறுகதைகளில் கட்டாயம் இடம்பெரும் ஒன்று , “எட்டாவது கன்னி”. இந்தச் சிறுகதைக்குள் இருக்கும் காப்பியத் தன்மை கொண்ட கதையை தற்காலத்துக்கு பொருந்திப் போதல் என்ற புது முயற்சியின் முழுமை,  வியத்தலுக்கும் போற்றுதலுக்கும் உரியது.

”கற்றாழைப்பச்சை” சிறுகதை அறிவியலும் மருத்துவமும் எட்டாத ஊரில் ஆட்டிசம் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட மகளை வளர்க்கும் குடும்பத்தின்   வலியையும் வேதனையையும் சீரழிவையும் பேசுகிறது. மகளைப் பற்றிய கவலை பீடித்து அம்மாவும் அப்பாவும் போராடித் தளர்ந்து இறந்துவிட  , அந்த மகளும் இறந்து விடுகிறாள். அவளது அண்ணன் லிங்கு என்றோ எவரோ சொன்ன சாபம் என்ற சொல்லின் தொடர்ச்சியால், கிராம மக்களின் மூடத்தனத்தால் காதலையும் கனவு வாழ்க்கையையும் இழந்து, மனம் சிதைந்து ஜுர வேகத்தில் இறப்பைத் தேடிக்கொள்ளும் அவலத்தைப் பேசுகிறது கற்றாழைப் பச்சை.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை பெண்களின் வேறுபட்ட வாழ்க்கை, மதிப்பீடுகள், சிதைவுகள் ஆகியவற்றைப் பேசுகிறது திரிவேணி. சமூக மதிப்பீடுகளும் கட்டுப்பாடுகளும் பெண்களின் வாழ்வை எவ்வளவு கொடூரமாக சிதைத்து வைத்திருக்கின்றன ; பெண்களையே பெண்களுக்கு எதிராகத் திருப்பி , பெண்களை எப்படி இறப்பைத் தேடி ஓடவைக்கின்றன என்ற துயரமிகு வாழ்வின் அவலத்தைப் பேசுகிறது இந்தச் சிறுகதை.

மாநகர வாழ்வோடு ஒட்டியும் ஒட்டாமல் வாழும் இளைஞனின் பிடிப்பற்ற வாழ்வின் மினுமினுக்கும் தனிமையின் துயரைப் பேசுகிறது, கார்ப்பரேட். 

”கற்றாழைப் பச்சை” தொகுப்பில் உள்ள கதைகள் , கொங்கு மண்டல விவசாயம் சார்ந்த பண்ணையார் – பண்ணை அடிமை முறை,   பேரமைப்பின் சிதைவையும், அந்தச் சிதைவுக்குப் பிறகும் அழிந்துவிடாமல்   தொடரும் பண்ணைய அடிமை மனோபாவம் மற்றும் சாதீய கொடுமைகளை  பின்பற்றும் வாழ்க்கை எனும் நிலையையும் பேசுகின்றன  . கொங்கு மண்டலத்தின் வாழ்வியலை,   நற்கனாவும் கொடுங்கனாவும் கலந்த அழுத்தமான இருண்மையோடும், துயரோடும் எழுத்தாக்கி இருக்கிறார் குணா கந்தசாமி.

எழுத்தாளர் குணா கந்தசாமி, “உலகில் ஒருவன்” என்ற நாவலையும், ”கற்றாழைப்பச்சை” என்ற சிறுகதைத் தொகுப்பையும், ”சுவரெங்கும் அசையும் கண்கள்”, “கடல் நினைவு” “மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்” ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், “புலியின் கோடுகள்” என்ற கட்டுரைத் தொகுப்பையும் எழுதி இருக்கிறார். இவர் தூரன் குணா என்ற பெயரிலும் எழுதினார். குணா கந்தசாமி தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.