உபநதிகள் – பன்னிரெண்டு

This entry is part 12 of 15 in the series உபநதிகள்

பொதுவாக இந்தியக் கதாபாத்திரங்களை சின்ன மற்றும் பெரிய திரைகளில் பார்த்து மறைந்துபோன கலாசாரத்திற்கு சரவணப்ரியா வருந்தி இருக்கிறாள். கலாவதி அப்படிப்பட்ட ஏமாற்றத்தைத் தரவில்லை. அதை மானசாவுடன்  பகிர்ந்துகொள்ள, 

“சஹாதேவன்னு உங்க ரெண்டு பேரைத் தவிர இன்னொரு பெண் இருக்கா. பெயர் மந்தாகினி.” 

“அவளை எப்படித் தெரிஞ்சிது?”  

“‘கலாவதி’ஸ் டிலெமா’ன்னு ஒரு தொலைக்காட்சித் தொடர். முதல் பருவத்தில் ஆறு அத்தியாயங்கள். கதாநாயகி இலங்கைத்தமிழர் வழியில் வந்த பதின்பருவப் பெண். செப்டெம்பர்ல வெளியிடறதா இருக்காங்க. விமர்சனத்துக்காக என் பார்வைக்கு வந்தது. திரைக்கதை, உரையாடல் மானஸா மந்தாகினி சஹாதேவன்.”  

“ம்ம்.. சின்னஞ்சிறு உலகம். சீரியல் எப்படி?” 

“எனக்குப் பிடிச்சிருக்கு. பொது மக்களுக்கு எப்படியோ தெரியாது.”  

“பிடிச்சதுக்குக் காரணங்கள்…”  

“இயற்கையான நிகழ்வுகள். அதிர்ச்சி தர்றபடி எதுவும் இல்ல. முக்கியமா அதில நடிச்ச மந்தாகினி. அவ என்ன அழகு! என்ன முக பாவங்கள்!”  

“எனக்கு அனுப்ப முடியுமா?”  

“உன்னோட அது முடிஞ்சிடணும்.”  

“சத்தியமா.. அம்மா கிட்டகூட காட்டமாட்டேன்.”  

“கலாவதியைப் பார்த்திட்டேன், அத்தை!” 

“எப்படி இருக்கா?”  

“நீங்க சொன்ன காரணங்கள் தான். மந்தாகினியைவிட மானஸாவை அதிகம் கவனிச்சேன். நேர்ல பார்த்துப் பழகாவிட்டாலும் அவ எனக்குத் தெரிஞ்ச கேரக்டர். அவளுடைய பாதுகாப்பான வட்டத்தின் விளிம்பு வரைக்கும் வந்திருக்கற மாதிரி தெரியறது.”  

“ஏன் அப்படி சொல்றே?”  

“நாலு மாசத்துக்கு முந்தின்னு நினைக்கிறேன். அது தான் நாங்க கடைசியாப் பேசினது. முன்னேற்றக் கொள்கைன்னு பேச்சிலும் எழுத்திலும் பிரமாதப்படுத்தினாலும், அவள் யு.எஸ்.ல இருக்கற என்னோட ஒன்றுவிட்ட கசின்கள் மாதிரி தான். மெரிட் படி காலேஜ்ல சேர்ந்து மேல் மட்ட வேலையைக் கைப்பற்றணும், அப்படி ஏற்கனவே செய்தவங்களை ஆராதிக்கணும். இதை நான் சுட்டிக்காட்டினது அவளுக்குப் பிடிக்கல. கலாவதியை சமுதாய உணர்வு உள்ள பெண்ணா சித்தரிச்சு இருக்கா. அதுக்கு அவளிடமே கொஞ்சம் மாற்றம் நிகழ்ந்திருக்கணும்னு நினைக்கிறேன்.”  

மானஸாவுக்கு மட்டுமல்ல குடும்பத்தில் அனைவருக்கும் ஒரு புதிய வித்தியாசமான அனுபவம். 

பெற்றோர்களின் நிழலில் அவர்கள் பாதுகாப்பில் அவளும் அலெக்கும் அதுவரை வாழ்ந்தார்கள். இப்போது அவர்களின் உதவியும் பாதுகாப்பும் பெற்றோர்களுக்கு அவசியம். அவர்களைத் தாண்டித்தான் கோவிட் வைரஸ் பெற்றோர்களைத் தீண்ட முடியும். 

வார நாட்களில் தினம் காலை நான்கு மணி நேரம் கணினித்திரையின் முன் பாடங்கள். சிறு வயதில் இருந்தே மானஸா பல மணிநேரம் சாவிப்பலகையில் விரல்களை ஓட்டி எழுத்துவேலையில் மனதை ஒருமுகப்படுத்தி இருக்கிறாள். அவளுக்கு வகுப்புச் சூழல் இல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து திரையைப் பார்ப்பது சிரமமாக இல்லை. அலெக்குக்கு ஒரு நாளின் கால்பங்கு நேரம் டென்னிஸ் களத்திலும் நீச்சல் குளத்திலும் ஓடி அலைந்து பழக்கம். பள்ளிக்கூடமும் மாவட்ட விளையாட்டு மையமும் மூடப்பட்டதால் திடீரென்று நாளின் ஒரு பங்கில் வெற்றிடம். அவனுடைய அறையில் அடைந்து கிடப்பதிலும் கணினித்திரையின் முன் கவனம் சிதறாமல் கண்களை வைப்பதிலும் அவனுக்குப் பொறுமை இல்லை. தினமும், ‘நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்?’ என்கிற முனகல்.  

கங்காவின் அலுவலக வேலை பெரும்பாலும் கணினியில். அதை வீட்டில் இருந்தே செய்தாள். நூலக அறையின் டெஸ்க் அவள் ராஜ்ஜியம். அதில் நுழைந்தால் மதிய சாப்பாட்டின் போது மட்டுமே அவளை அந்த அறைக்கு வெளியே பார்க்கலாம். மூன்று ‘ஆந்திரா அட்ராக்ஷன்’களிலும் திறந்தவெளியில் உட்கார்ந்து சாப்பிடும் வசதி இருந்ததால் அங்கே உணவு பரிமாறப்பட்டது. அத்துடன் வீடுகளுக்கு வினியோகம். 

சஹாதேவன் தொழில்முறையில் மனிதர்களை நேரடியாக சந்திக்க இயலாததால் கேஸ்கள் வெகுவாகக் குறைந்தன.  

சனி ஞாயிறு மானஸாவுக்கும் அலெக்குக்கும் கடைகளில் இருந்து சாமான்கள் வாங்கிவரும் வேலை. வாங்கி வந்தால் மட்டும் போதாது. அவற்றைக் காரில் இருந்து இறக்கி கீழ்த்தளத்திலேயே வைரஸைப் போக்க வேண்டும். அட்டைப் பெட்டிகளையும் கெட்டுப்போகாத பொருட்களையும் ஒன்றிரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்குள் எடுத்துவந்தால் போதும். காய் பழங்கள் பால் புட்டிகள் நீர்த்த சலவைக் கரைசலில் தோய்த்த துணியால் துடைக்கப்பட்ட பிறகே அவை கங்கா, சஹாதேவனின் கைகளை எட்டும். ‘ஆந்திரா அட்ராக்ஷன்’ மற்றும் ‘பெர்ஃபெக்ட் பீட்ஸா’ சாப்பாட்டுப் பெட்டிகளை த் தெருவில் நின்று வாங்கி வீட்டிற்குள் எடுத்துவருவதும் அவர்கள் தான். 

முதல் இரண்டு வாரங்களில் நிலைமை வேகமாக முன்னேறி கல்விக்கூடங்களும் விளையாட்டு அரங்குகளும் திறக்கப்படலாம் என்ற நம்பிக்கை எல்லாருக்கும். அது சிதைந்து வைரஸின் ஆட்சி இன்னும் பல மாதங்களுக்குத் தொடரும் என்று தெரிந்ததும் நிலைமையின் சலிப்பைக் குறைப்பது பற்றி யோசித்தார்கள். 

அலெக் அவன் நண்பன் ஆஷர் – இருவர் மட்டும் காலையில் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்கள். இருவரும் ஒட்டிக்கொள்ளாதால் வைரஸ் அவர்களை ஒட்டாது என்கிற தைரியம். 

“ஏப்ரல் வந்தா முன்னெல்லாம் மாலைவேளைகளில் நடப்போமே” என்றாள் மானஸா. 

கங்காவுக்கும் அதைப் புதுப்பிக்க விருப்பம். ஆனால், 

“மேட்டில் ஏறினால் என் முழங்காலுக்குப் பிடிக்கல. பெர்னியைக் கூப்பிட்டுப்பார்!” 

நாள் முழுக்க திரையைப் பார்த்த அலுப்பு தீர வெளியில் நடக்க அவனுக்கும் விருப்பம். 

நிழல்கள் நடைபாதையில் விழுந்து, அலைபேசியில் இருவரும் தயார் என்ற தகவல் பரிமாறிக்கொண்டதும், பெர்னி அவளுக்காகத் தெருமுனையில் காத்திருந்தான். 

பேச்சுக்குரல் காதில் விழும் தொலைவில் நடந்தார்கள். யாராவது எதிர்ப்பட்டால் ஒதுங்கிநின்று அவர்கள் கடந்து சென்றதும் நடையைத் தொடர்ந்தார்கள்.  

“உன் நாள் எப்படி? மனா!” 

“நேற்று மாதிரி, பெர்ன்!”  

“நேற்று.”

“அதற்கு முந்தைய நாள் போல. வேடிக்கைக்காகச் சொன்னேன். பயாலஜியில் ஒரு க்விஸ். யோசிக்கவைத்த கேள்விகள். உனக்கு?”

“கோவிட்டினால் பலருக்கு வேலை இல்லையே. அதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி வகுப்பில் ஒரு விவாதம்.” 

“உதவித்தொகை கொடுக்கப்போவதாக ஒரு பேச்சு இருக்கிறதே.” 

“அது எவ்வளவு, யாருக்கு என்பதில் கருத்துவேற்றுமை.” 

“என் அம்மா ஆந்திரா அட்ராக்ஷன் இந்திய உணவு விடுதிகள் நடத்துகிறாள். மூன்றில் ஒன்று கூல் ஸ்ப்ரிங்கில் இருக்கிறது.”  

“ஓ! அப்படியா?” என்று ஆச்சரியத்தைத் தொடர்ந்து, “அடுத்த முறை அங்கிருந்து சாப்பாடு தருவிக்கிறோம்.” 

“வியாபாரம் கொஞ்சம் படுத்தாலும் யாருக்கும் சம்பளத்தைக் குறைக்கவில்லை. எல்லா வர்த்தக அதிபர்களும் அதைச் செய்தால் நன்றாக இருக்கும்.”  

நீண்ட சாலையைக் குறுக்கே தாண்டி அதன் நெடுக நடக்க ஆரம்பித்தார்கள். 

“கோவிட் அனுபவத்தை வைத்து நீ ஒரு கதை எழுதலாமே.” 

“செமிஸ்டர் முடியட்டும்.”  

“எழுத்தை முழுநேரமாகச் செய்வதில்…”  

“அதில் நிலையான வருமானம் இராது என்று என் தந்தைக்கு விருப்பம் இல்லை.”  

“உனக்கு?”  

“வாழ்க்கையின் அனுபவங்களையும் நேரில் சந்திக்கும் அபூர்வமான மனிதர்களையும் வைத்துத்தான் தனித்துநிற்கும் புனைவுகள் எழுத முடியும் என்பது என் எண்ணம். அதனால், அதிக நேரம் தேவைப்படாத நிலையான வருமானத்துடன் ஒரு பதவி என் குறிக்கோள்.” 

“டாக்டர் ராபின் குக், லாயர் ஜான் க்ரிஷம் போல, யாலஜிஸ்ட் மானஸா.”  

“என் கதைகளில் வேகம் இருக்கும் ஆனால் விறுவிறுப்பு இருக்காது. உன் எதிர்காலம்?” 

“‘எகானமி ஆஃப் ஸ்கேல்’ கேள்விப்பட்டு இருப்பாய்.” 

“பல சிறு நிறுவனங்களைவிட ஒரு பெரிய நிறுவனம் பொருள்களை மலிவாக உற்பத்தி செய்யும்.”

“மனித உழைப்புக்குப் பதிலாக இயந்திர சக்தியைப் பயன்படுத்துவது முக்கிய காரணம். அது கூட ஒரு எல்லை வரையில் தான். அதன் எதிர்மறை சிறுசிறு வெஞ்ச்சர்.” 

“அதன் பிரகாரம்…”   

“நம் குடியிருப்பையே எடுத்துக்கொள்வோம். குப்பைகளை வாரி தெருவை சுத்தம் செய்ய ஒரு ‘மாம்-அன்(ட்)-பாப்’ குழுவே போதும், பெரிய கார்பொரேஷன் அவசியம் இல்லை. கலாவதிக்காக நீ கற்பனை செய்த மென்டல்சன் ஃபார்ம்ஸ் போல பத்து ஏக்கர் சிறு பண்ணைகள் பலரகப் பயிர்களைப் பயிரிட்டு பெரிய தொழிற்சாலை பண்ணைகளைவிட அதிகம் விளைவிக்க முடியும். நோய் தடுப்பு, வெட்டுக்காயங்களுக்குக் கட்டுகள் போன்ற, பல அவசியமான சேவைகளைச் சிறிய அளவில் செய்தால் மருத்துவ செலவைக் குறைக்கலாம்.” 

“இது பரவலாக இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரானது, இல்லையா?” 

“பட்டம் வாங்கிய பிறகுதான் சின்னதே அழகு. அதுவரை மில்ட்டன் ஃப்ரீட்மன்னின் வார்த்தை வேதவாக்கு.”  

டென்னிஸ் கோர்ட் பக்கத்தில் ஒரு பள்ளம். சமனான பாதைகளில் சைக்கிள் ஓட்டி அலுத்துப்போன பையன்கள் வேகமாக வந்து அந்த பள்ளத்தைத் தாண்டிக் குதிக்க ஆரம்பித்து இருந்தார்கள். அதற்கு ஒரு நீண்ட வரிசை. அதில் பையன்களுடன் ஒரு சில பெண்களும். 

“இந்த பிரதான சாலையில் பல மாற்றங்களைப் பார்த்து வருகிறேன். சைக்கிளுக்கான தனி வழி புதிது. இதன் கோடியில் இருக்கும் பள்ளிக்கூடங்களும் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் தான் வந்தன.” 

அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். அதனால் மானஸா, 

“நான் பிறந்ததில் இருந்தே இந்த ஊர். சொல்லப்போனால் இப்போது இருக்கும் வீட்டுக்குத்தான் பிறந்த மூன்றாம் நாள் வந்தேன். என் கேரக்டரை உருவாக்குவதில் அதற்கும் ஒரு பங்கு இருக்கும்.” 

“எனக்கு நாடோடி வாழ்க்கை. அட்லான்ட்டாவில் இருந்த நான்கு ஆண்டுகள் மட்டுமே நான் ஒரே இடத்தில் அதிக காலம் இருந்தது. அதற்குமுன் ஒன்றிரண்டு ஆண்டுகளில் ஊர் மாறினோம். அப்போது என் தந்தைக்கு ஆட்டோ டிப்போவில் வேலை. புதிதாக ஒரு ஊரில் கடைகள் திறந்தால் அவற்றின் கணக்குகளை கவனிக்க அங்கே அனுப்புவார்கள்.”  

“எந்தெந்த ஊர்கள்?” 

“ஓமஹா, ஹார்ட்ஃபோர்ட். இப்படி நாட்டின் எல்லா பகுதிகளிலும்.” 

“எது உனக்குப் பிடித்த இடம்?” 

“ஒரு இடம் பிடிப்பதற்குமுன் அதிலிருந்து வேறொன்று.” 

“ஐ’ம் சாரி. நண்பர்களை விட்டுப் பிரிவது வருத்தமாக இருந்திருக்கும்.”  

“உண்மைதான். என் அக்கா வித்தியாசம். இடம் மாறுவதற்கு அவள் எப்போதும் தயார். அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் புது இடத்துக்குப் பழக அவளுக்கு அதிக காலம் ஆகாது.”   

“இப்போதெல்லாம் உலகத்திலேயே அதிக வேறுபாடுகள் இல்லை. என் அம்மா இருபத்தியோரு வயது வரை சென்னையில். என் அப்பா கொலம்போவில். அங்கே வந்து இந்நாட்டின் சூழலுக்கு உடனே ஒத்துப்போய் விட்டார்கள். காரணம் சென்னைக்கும் அட்லான்ட்டாவுக்கும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த வித்தியாசங்கள் இப்போது இல்லை. இப்படி இருப்பதிலும் ஒரு பிரச்சினை.”  

“எனக்கு அறிவியல் கொஞ்சம் தெரியும். க்ரோமோஸோமில் அதிக வேறுபாடுகள் இல்லை என்றால் சூழல் மாறும்போது அதை எதிர்கொள்ள வேண்டிய பல்வகைமை இல்லாமல் போகலாம். அது போல ஒரேவிதமான பொருளாதாரம் எதிர்பாராத மாற்றங்களுக்குத் தன்னை மாற்றிக்கொள்ள முடியாமல் அழிந்துவிடலாம்.”  

ஆரம்பப்பள்ளிக்கூடம் கண்ணில்பட்டதும் நின்றார்கள். 

“கிட்டத்தட்ட ஒன்றரை மைல் நடந்திருக்கிறோம்.” 

தெருமுனை வீட்டின் கொல்லையில் சிறுவர்கள் பேஸ்பால் விளையாடியதைப் பார்த்து சிறு நேரம் சென்றது. 

திரும்பி நடந்தார்கள். 

“உன்னையும் என்னையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.”  

“எந்த விதத்தில்?” 

“நான் ஏழெட்டு ஊர்களில் திரிந்தேன், நீ ஒரே ஊரில்.”  

“ட்யூக் போவதற்கு முன்னால் வரை.”  

“சரி, சென்ற ஆகஸ்ட் வரையில், கடந்த சில வாரங்களாக, நிலையான ஓர் இடத்தில்.”  

“நிலைமையைப் பார்த்தால் அது நீடிக்கும் போல் தெரிகிறது.”  

அவள் சொன்னதைக் காதில் போடாமல்,

“ஃப்ரெஞ்ச் ஃபிலாசஃபர் சிமோன் வீல் எழுதிய ‘த நீட் ஃபார் ரூட்ஸ்’ ஞாபகம் வருகிறது.”    

“அவள் பெயரைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். எழுதியதைப் படித்தது இல்லை.”  

“நாம் ஓர் இடத்தில், ஒரு சமுதாயத்தில் ஒரு பண்பாட்டில் வேர்விட வேண்டியது அவசியம் என்பது அவள் கருத்து. பாவம்! அதை எழுதியபோது, உலகப்போரின் காரணமாக அவள் சொந்த நாட்டில் இருந்து தப்பி இங்கிலாந்தில் வசித்தாள். நான் என்று இல்லை, கல்வி, பொருத்தமான வேலை என்று எல்லாருமே நகர்ந்துகொண்டே இருக்கிறோம். என் அக்காவைப்போல பழகிய விஷயங்களைத் தினம் தூக்கியெறிந்துவிட்டு புதிய அனுபவங்களை எதிர்பார்க்கிறோம்.”  

“அதனால் தான் ஓர் இடத்தில் வேர் ஊன்ற முடிவதில்லை.”  

“அது கலாவதி’ஸ் டிலெமாவில் வெளிப்படுகிறது” என்றான் பெர்னி. 

“அவ்வளவு ஊன்றி அத்தொடரைப் பார்த்திருக்கிறாயே” என்று மானஸாவுக்கு பிரமிப்பு, சந்தோஷம்.  

“உன்னை அதில் பார்க்கிறேன்.” 

அதை எப்படி எடுத்துக்கொள்வது? பேச்சை மாற்ற, 

“என் முதல் முயற்சி. அதில் முழுவெற்றி என்று சொல்வதற்கு இல்லை” என்றாள்.  

“அடுத்த சீஸன் இருக்கிறதே.”  

“செமிஸ்டர் முடிந்ததும் அந்த ஒரு வேலை.”  

“எப்போதுமே ஹாலிவுட் எழுத்தாளர்களை வைத்து ஸ்க்ரிப்ட் எழுதச் சொல்வார்கள். உனக்கு அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?”  

“கலாவதியாக நடித்த மந்தாகினியின் தேர்வு.”

பிரிவதற்கு முன், 

“இன்றைக்கே இத்தனை விஷயங்கள் பேசிவிட்டோமே. நாளை மாலையில் நடக்கும்போது என்ன பேசுவது?” என்று பெர்னிக்கு வருத்தம்.  

மானஸா பதில் சொல்லாமல் புன்னகை செய்தாள். பிறகு, 

“என் திறமையெல்லாம் பயன்படுத்தி ஒரு கதையோ கட்டுரையோ எழுதி முடித்ததும், ‘ஒஓ! மிச்சம் வைக்கவில்லையே. அடுத்த முறை என்ன செய்வது?’ என்ற கவலை. விரைவிலேயே அதற்கு அவசியம் இல்லாமல் கிகிடுவென்று எழுத ஆரம்பிப்பேன். நமக்கும் பேச எதாவது விஷயம் கிடைக்கும். கவலைப்படாதே!”  

(தொடரும்)

Series Navigation<< உபநதிகள் – 11உபநதிகள் – பதின்மூன்று >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.