தமிழாக்கம் : நந்தாகுமாரன்

27.
ஷிகி இறந்து விட்டார்
பதினேழாம் நாள் நிலா
பிரகாசமாக ஒளிர்கிறது
28.
குளிர் இன்னும் மீதம் இருக்கிறது
காமகுரா*
வியப்பிற்குள்ளாகிறது
காமகுரா (Kamakura) – ஒரு ஜப்பானிய நகரம்
29.
பாம்பு ஓடிவிட்டது
அது விட்டுச் சென்ற முறைத்த பார்வை
இன்னும் இந்தப் புல்வெளியில் கிடக்கிறது
30.
சப்தத்துடன் அவள் தன் ‘ஓபி’-யை*
அவிழ்த்தபடியே சொன்னாள்
‘இதன் மீது ஒரு ஹைக்கூ எழுதிக் கொடு’, என
ஓபி – Obi – ‘கெய்ஷா’ (Geisha) என்றழைக்கப்படும் ஜப்பானியப் பாரப்பரிய ஆடல் பாடல் இசை நிகழ்த்தும் பொழுதுபோக்கு மங்கையர் அணியும் ஒரு உடையான ‘கிமோனோ’ (Kimono) என்னும் ஜப்பானியப் பாரம்பரிய அங்கியைக் கட்டப் பயன்படும் அரைக்கச்சு
31.
ஜப்பானிய முள்ளங்கியின் ஒரு இலை
இந்த ஓடையில் ஓடிச் செல்கிறது
எவ்வளவு வேகம்!*
டோக்கியோவில் உள்ள செடகயா-கு, ஒகுசாவாவின் ஜோஷிஞ்சி கோவிலான குஹோன்புட்சுவுக்கு (Kuhonbutsu, Joshinji Temple of Okusawa, Setagaya-ku, Tokyo,) கியோஷி விஜயம் செய்தபோது, அதன் வளாகத்திற்குப் பின்னால் ஒரு அமைதியான நீரோடை ஓடியதைக் கண்டார்.
யமமோட்டோ (Yamamoto – ) கூறுகிறார், “இது ஒரு அசல் காட்சியில் இருந்து வரையப்பட்ட ஹைக்கூ வடிவில் உள்ள ஒரு வகையான சித்திரம். கவிஞர் அந்தக் காட்சியின் மேல் உன்னிப்பாகக் கவனம் செலுத்திக் கண்காணித்திருக்கும் அந்தப் புள்ளி தன் இதற்கு அணி சேர்க்கிறது. ஆனால், ஆழ்ந்த சிந்தனையின் பற்றாக்குறை இக்கவிதையில் உள்ளதையும் நாம் காணலாம்.”
எனினும், நோபுஹிரோ கவாசாகி (Nobuhiro Kawasaki – ) இதற்கு முன்வைக்கும் பின் வரும் விவாதமும் அழகானதே — “யமமோட்டோவின் கருத்து, நவீன மேற்கத்திய சிந்தனையின் அடிப்படையில் உருவானது; உண்மையில், இந்த ஹைக்கூ சிந்தனையின் வெறுமையை ஒரு வித வீம்புடன் ஆராய்கிறது.”
32.
குருவிகளும் பயப்படவில்லை
மனிதர்களைக் கண்டால்
வசந்தகால கிராமம்
33.
வானவில்லின் ஒரு வளைவு
அசேமா* மலை மீது தெரிந்தது
அது உங்களுக்குத் தெரியுமா என யோசிக்கிறேன்
அசேமா* – Mount Asama – ஜப்பானின் முக்கிய தீவான மத்திய ‘ஹொன்ஷோ’-வில் (Honshū) உயிர்ப்புடன் உள்ள ஒரு மாபெரும் எரிமலை.
34.
ஒரு வானவில் தோன்றியபோது
நீ இங்கே இருப்பது போலத்
தோன்றியது
35.
ஒரு வானவில் மறைந்தபோது
நீ இங்கே இல்லாதது போலத்
தோன்றியது
36.
கியோஷி* தனிமையில்
பால்வெளியுடன் ஒன்றாகக் கலந்து
மேற்குப் பக்கம் நகர்கிறது
கியோஷி – ஒரு ஹைக்கூ கவிதைத் தொடராக ‘பால்வெளியை’ முன்வைத்துப் பதினோரு கவிதைகள் எழுதினார். அதில் ஒன்று இது.
75 வயதில், கியோஷி, காலை நக்ஷத்திரத்தை வானத்தில் கண்ட போது, தான் மேற்கு நோக்கி நகர்வதைப் போல உணர்ந்தார் (மேற்கத்தையத் தத்துவச் சிந்தனைகள்) போல, இது சைஹோ-ஜோதோ (Saihoh-johdo – பௌத்தம் நோக்கிய மேற்குலகச் சொர்க்கப் பார்வை என்பதைக் குறிக்கலாம்). காலத்தின் நித்திய ஓட்டத்துடன் நகரும் பிரபஞ்சத்தில் தனது இறுதி யாத்திரை நிலையில் தன்னைப் பற்றிய ஒரு படத்தை அவர் இக்கவிதையின் வார்ப்பினூடே தரிசித்திருக்கலாம்.
37.
“‘எனக்கு எதுவும் தெரியாது,
என்பதே, என் பதில்.’”
என் வசந்தகால வயோதிகம். *
கியோஷி, தன் 78-ஆவது வயதில், தன் வாழ்வின் அந்திமப் பொழுதை நெருங்கும் போது இதை எழுதினார். இதன் தத்துவ தரிசனப் பிரகடனத்தை நாம் தவறவிடலாகாது.
38.
ஒரு தனித்த குளிர்காலக் காட்சியில்
நான் அசையாமல் நிற்கிறேன்
மக்கள் செல்கின்றனர்
39.
நல்ல கரி
நன்கு சாம்பாலாகிறது
என்பது ஒரு துயரம் தானே?
40.
கடலைகளைக் கொறித்தபடியே
நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்
குற்றமும் தண்டனையும்*
தீவிர இலக்கியம் எனக் கருதப்படும், ‘பியோதர் தஸ்தயெவ்ஸ்கி’-யின் (Fyodor Dostoevsky) புகழ் பெற்ற நாவலான ‘குற்றமும் தண்டனையும்’ கதையை அவர் எப்படி நிதானமாக வாசிக்கிறார் என்பதை இந்த ஹைக்கூ சொல்கிறது என்று இதை வாசிக்கும் ஒருவர் நினைக்கலாம். அது ஒரு மேலோட்டமான பார்வை.
நாவலுக்கும் வாசகனுக்கும் இடையே ஒரு குளிர்ந்த இடைவெளி பராமரிக்கப்படுகிறது, என்பதை இது முதலில் சொல்கிறது. கியோஷி, இரக்கமுள்ளவராக ஆனால் நாவல் தருவிப்பதாக் கட்டமைக்கப்பட்ட எந்த உணர்வினையும் அவர் மீது கட்டாயப்படுத்த முடியாதவராக, இருக்கிறார் என்பதையும் ஒரு பார்வையாக நாம் கற்பனை செய்து பார்க்கலாம். கியோஷியைப் பொறுத்தவரை, மனித இருப்பின் அர்த்தத்தை ஆராயும் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல், தான் தேநீருடன் உண்ணும் வேர்க்கடலையைப் போலவே எவ்வகையில் தகுதியானது என்னில் வேர்க்கடலையைப் போலவே அந்த நாவல் அவரது பசியைத் தூண்டலாம், அடக்கலாம் அல்லது வெறும் கொறிப்புக்குப் பயன்படலாம் – இவையாவும் ஒரு வாசகரின் கவனித்தில் சிரமமின்றி செரிக்கப்பட வேண்டும் – அதுவே வாசக மென்மை. நாவல் மற்றும் வேர்க்கடலை இரண்டும் அவரது மதிப்புமிக்க ஓய்வு நேரத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரப்புகின்றன. எனவே, இலக்கியம் ஒரு பொழுது போக்கு எனவும் இந்த நாவலை அவர் வாசித்து மகிழ்ந்தார் என்பதை நாம் அங்கீகரிக்கலாம்.
முந்தைய பதிவு: