இரு மதிப்புரைகள்

பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ அதுதான் தெய்வம் – அஜ்வா

“உலகம் முழுவதும் இலக்கியம் தனது கனத்தைக் குறைத்துக் கொண்டு வருகிறது. இனியும் அது கூருணர்வு கொண்ட ஒரு பிரிவினருக்கான நுகர்வாக மட்டும் இருக்க முடியாது” என்று அப்பணசாமி முன்னுரையிலும் “நாடோடியான இந்தக் குடுகுடுப்பைக்காரன் உங்கள் கதைகளைத்தான் சொல்கிறான்” என்று என்னுரையிலும் சரவணன் சொல்கிறார்.

என் உறவினரின் பையன் ஒருவன் கார் சீட்டின் இடுக்குகளில் கையை விட்டு எலும்பை முறித்துக் கொண்டான். மல்டிபுள் பிராக்ச்சர். கையில் கட்டுப் போட்டப்படியே அவன் செய்த சேட்டைகள், பார்த்துக்கொண்டிருந்த என்னை ஒரு தவிப்பிலேயே வைத்திருந்தது. இந்தக் கதையின் நாயகனின் பயணம் என்னை அப்படியொரு உணர்விலேயே கழிக்க விட்டது. கரிச்சான் குஞ்சின் பசித்த மானிடம் , ஜெய மோகனின் ஏழாம் உலகம் போன்ற புதினங்களையும் இப்படியொருத் தவிப்பிலேயே வசித்திருக்கிறேன். சல்மாவின் மனாமியங்களை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பார்த்தேன் இதோடு.   கதையில் இருக்கும் இருண்மையைக் காட்டிலும்அ ஜ்வா சற்று உற்சாகமாகவே எழுதப்பட்டிருக்கிறது . நாவல் கட்டமைப்பு மாறி விட்டிருக்கிறது சமீபக் காலங்களில் .

போதை புற வஸ்துக்களினால் வருவதாக இருந்தாலும் பெரும்பாலும் அகவயப்பட்டது. தன்னிலை மறத்தல் என்பது என் வரையில் இயலாத காரியம். நான் எப்போழுதும் என் இருத்தல் குறித்தப் பிரக்ஞையிலேயே இருப்பவன். போதையைத் தேடும் நபர்கள் எதிலிருந்தோ தப்பிக்க படுகுழியில் விழுந்துவிடும் கிராதகர்கள் என்றுதான் என் மனதில் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். புத்தகப் படிப்பு அவர்களை வெறுக்க அனுமதிக்க வில்லை என்றாலும் அவர்களை என்னுடன் இணைத்துப் பார்க்க என்றுமே நினைத்ததில்லை. அவர்களை வாழ்க்கையில் கடக்கும் பொழுது ஒருவித ஒவ்வாமையுடன்தான் கடந்திருக்கிறேன். எவ்வளவுதான் வாழ்க்கையின் சூழ்ச்சியில் சிக்கியிருந்தாலும் போதை என்பது அதைத் தாண்டி வரும் வடிகாலாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனாலேயே அஜ்வா என்னை ஈர்த்தது. There was no inhibitions and false justifications attached . சமீபத்தில் வந்த “லென்ஸ்” படத்தில் ஒரு வசனம் வரும் “ கால் கேர்லாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே?” என்று. பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்கள்தானே? in fact அவர்களிடம் தான் மனிதம் மிச்சமிருக்கும். நிற்க. அஜ்வா….

பேரீச்சை. பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் தோற்றம் இல்லை.காயாக இருக்கும் பொழுது நல்ல மஞ்சளில் வளப்பமாக இருக்கும். ஆனால் சுவைக்கத் தகுதியில்லை. நன்றாக ஒட்டி காய்ந்தப் பின், நீண்டு சுவைமிக்கப பழமாக மாறிவிடும் அதிசயம். அது செடியிலும் சேர்த்தியில்லாமல், மரத்திலும் சேர்த்தியில்லாமல் சாலையின் மையத்திலும்  நடப்பட்டிருக்கும். நாளை தொடங்கும் ராமதானையும் , பேரிச்சையையும் பிரித்துப் பார்க்க முடியாது.  சரவணன் தலைப்பில் ஏதாவது குறியீடு வைத்திருக்கிறாரா என்றுத் தெரியவில்லை. ஆனால் பேரிட்சையின் நினைவு வரும் பொழுதெல்லாம், எனக்கு கரப்பான் பூச்சியும் நினைவுக்கு வரும். 

அன்பு அம்மா, அணைக்கும் அத்தை, பயந்த தந்தை, கொடிய மாமன் – இவர்களிடேயே பயத்தை பிரதானமாகக் கொண்டு வளரும் நாயகன் மாமனின் சொத்தாசையால் சொந்த ஊரை விட்டு , அம்மாவை விலகி, போதை உலகில் உழன்று, வேலைக்கும் போய், அங்கே பழக்கப்படுத்திகொண்ட நண்பர்களால் வாழ்ந்து , நண்பனுடன் பேரிச்சை வளர்த்து , இறுதியில் போதைக்கு அடிமையான தோழியால் நார்மல் வாழ்க்கைக்கு வருகிறான். இதற்குள் எத்தனை விஷயங்கள். கட்டுக் கட்டாக புற்களை அடுக்கி மொத்தமாக புற உலகை மறைக்கிறார். 

ஆனால் இவை எல்லாம் பயத்தில் தான் வந்ததா? அப்படியென்றால் பழனியில் ஓரு ராட்சதக் கை அவனைத் தள்ளுகிறதே அது போதை உலகின் மரணங்களினால் வந்த பயம்தானே? 

மலைதேசத்துப் பறவைகள் திசை அறியாது என்பதில் ஆரம்பித்து முதல் அத்தியாயத்திலேயே போதைக்குள் (நம்மையும் இழுத்துவிட்டு) நுழைந்து விடுகிறார். டெய்சியை தனியே ஒரு பங்களாவில் விட்டுவிட்டு அம்மாவையும் , சொத்துக்காக ஆசைப்படும் மாமாவையும், கணவன் போல மகன் இருக்கக் கூடாது என்று ஆசைப்படும் தாயாரையும், திடம் கொடுத்து வளர்த்த அத்தையையும், மூன்று முறை மன்னிக்க வேண்டியக் கட்டாயத்தில் இருக்கும் ஜார்ஜ் ஆண்டனியையும் நாம் காண்பது இந்த அத்தியாயத்தில்தான். ஒரு மாதிரி காருக்குள் கஞ்சாப் புகையாக நம் நாசியில் ஏறி கிறுகிறுக்க வைக்கிறது. விஜி அண்ணனுடன் பாவ புண்ணியம் பார்க்காமல் சுற்றியதும், ஒரு கொலைக்குப் பின் விலகிவிட்டு மீண்டும் போதை மீட்பு மையத்தில் கிட்னி கெட்டுப் போக  மற்றும்  போதை உலகை விட்டு போலீசான கனகு பின்னாட்களில் பழைய நண்பர்களை சந்திக்கையில் நடக்கும் புரிதல்கள் ஆகியவை மாறி மாறி இரவும் பகலுமாக கதை நகர்கிறது. மரணத்தையும் போதையையும் மிகவும் எளிதாக விளக்கிவிட்டு இதனால் வரும் மரணம் இயற்கையா, செயற்கையா என்கிறார் .போதைக்கு பலியான சங்கீதா, பாலசுப்ரமணியன் ராஜகுரு,சம்பத் , மன்மோகன் மற்றும் பலர் என்று டைட்டிலில் போடும் அளவுக்கு மனிதர்கள் வந்து போனாலும் , டெய்சியும் ஜார்ஜ் ஆன்டனியும்தான் கதையை வெகுவாக ஆக்கிரமிக்கிறார்கள். இறுதியில் சுபம் போடுகையில் இத்தனை நாட்களாக துளிர்க்காத பேரிச்சை நாற்று துளிர்ப்பதும் , டெய்சி தெய்வமாக நிற்பதும், சம்பத்தின்  “சம்பத்தை” பழனியில் சேர்ப்பதும் எல்லாம் ஒரு புள்ளியில் இணைந்து ஒரு பீல் குட் கதையாக பரிமளிக்கிறது. 

வெறும் இருபத்தியைந்து அத்தியாயத்தில் எல்லாவற்றையும் சுருக்கி ஒரு தேர்ந்த மிலிடரி ஆபிசரின் ஆணைப் போல் எழுதியிருக்கிறார். வாழ்வின் துயரங்களை அனுபவிப்பவன் அதற்கான காரணங்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதனால் குற்ற உணர்ச்சியே இல்லாமல் பரபரவென்று விரிகின்றக் கதை அதே வேகத்தில் முடிந்து விடுகிறது.  நாவல் என்று சொல்வதை விட ” நா ” என்று சுருக்கிக் கூப்பிடலாம். ஏதோ ஒரு பெரிய நாவலின் சினாப்சிஸ் மாதிரி எனக்குப் பட்டது. விரிவாக இன்னும் எழுதக்கூடிய சாத்தியங்களை அங்கங்கே அவரே தூவியபடி செல்கிறார், ஆனால் கவனிக்காமல். நிஜமாகவே ஒரு பெரிய நாவலாய் வந்திருக்கவேண்டிய ஒன்று. மேலும் தனிமையே சுகமென நம்பும் நாயகன் தன்னுடைய தர்க்கத்தில் அவ்வப்போது நம்மையும் இழுப்பது கதையின் ஓட்டத்தில் ஒரு இடரும் கல்லாய் தெரிகிறது. மற்றபடி தான் எப்படி உற்சாகமாய் எழுதியிருக்கிறாரோ அதை படிப்பவருக்கும் கடத்துவதில் வெற்றிப் பெற்றிருக்கிறார். வாழ்த்துகள்.


ஓரிதழ்ப்பூ- அய்யனார் விஸ்வநாத்

அய்யனாரை நான் முதலில் சந்தித்தது ஜெயமோகன் தங்கியிருந்த விடுதியில். அங்குதான் முதலில் கேட்டேன் இந்தத் தலைப்பை.

வெயில் கொளுத்தும் களம். மற்ற உணர்வுகளுக்கு இடம் இருக்குமா? இந்த உலகமும் மனிதனும் உருவான காலத்திலேர்ந்தே ஆணும் பெண்ணும் உறவாடிய சிக்கல்களும் தோன்றியிருக்க வேண்டும். மனதின் அடித்தளத்தில் உருவாகும் அர்த்தமற்ற அல்லது அர்த்தமுள்ள நிஜமான உணர்வுகளுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில் தத்தளிக்கும் மனிதர்களைப் பற்றிய கதை. அது ஒரு மலைகளால் சூழப்பட்ட வெயில் நகரம். தன்னுடைய எண்ண சூழல்களை வைத்து பிடித்தும் பிடிக்காமலும்  போகும் இடங்கள். சங்கமேஸ்வரன் மலர்விழியின் ஆசைக்கு அவளைக் காவுக் கொடுத்துவிட்டு மான் முகத்தோடு, சிறு வயது முதல் மானைப் பற்றிய கனவுகளோடு வளர்ந்து, நரி முகத்தோடு வரும் ரவியைக் கைப்பிடிக்கும் அங்கையை வசீகரிக்கிறான். எப்போதும் குடியோடும் அமுதாக்காவின் நினைவுகளோடும் அங்கையை அண்ட முடியாமல் இருக்கும் ரவி. பூவைத் தேடி அல்லது பூவின் அர்த்தத்தைத் தேடி , துர்காவில் முங்கி கண்டெடுத்த மாமுனி. துர்காவின் அரை புருஷன் சாமிநாதன். இவர்களிடயே நிகழும் பத்து பதினைந்து நாட்களின் சங்கமம்.

மலையை விட்டு மாமுனி  கடும் கோபத்தோடு இறங்குவதோடு தொடங்கி ரவி வீட்டைவிட்டு இலக்கில்லாமல்  வெளியேறும் வரை முன்னும் பின்னும் பயணிக்கும் அதே சமயத்தில் நகரத்தின் மொத்த சீதோஷ்ண நிலையையும் பதிவு செய்கிறார். மலையும், மலைச் சார்ந்த மழையும், கொளுத்தும் வெயிலும் , விஸ்கி மற்றும்  ஏமாற்றங்களும் கொண்ட கதம்பம். நுகர்ந்தால் நாசியில்  குருதி பெருகிடும் மலரை ஒத்து இந்தக் கதையில் போதை சலிப்பின்றி பயன்படுத்தப் பட்டிருகிறது. தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம், போதை அல்லது அதிகமான புத்துணர்ச்சி என்ற இரண்டு தீவிர நிலைமைகளைக் கொண்டு நகர்கிறது. நல்ல பசி வேலையில் உள்ளிறங்கும் உணவுப் போல சரசரவென்று சரியும் எழுத்து. குளத்தின் மீது எறியப்பட்ட கல் ஏற்படுத்தும் வெவ்வேறு தவளைப்பாய்ச்சல் போல எழுத்து – ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் வெவ்வேறு உணர்வுகளை உயிர்த்தெழச் செய்கிறது. பெண்களே ஆண்களின் உந்து சக்தியாக இருந்திருக்கிறார்கள். அகத்தியராக நினைத்துக் கொள்ளும் நபர் துர்காவில் கண்டதும், ரவி தேடிய அமுதா அக்காவிலும், சங்கமேஸ்வரன் மலர்விழியில் கண்டதும் இந்த சக்திதான். சம்பவங்கள் துரத்தத் துரத்த ஓடுபவன் ஒருவன், தன் வினையில் இலக்கில்லாமல் ஓடுகிறவன் இன்னொருத்தன் என்று வாழ்க்கை ஒரு சின்ன வட்டத்தில் சுழற்றி சுழற்றி அடிக்கும். நம்மில் பல பேர் அதை உணராமலே வெகு வாழ்க்கையைக் கடந்து விடுவோம். எழுத்தாளன் ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்து விட்டுச் செல்கிறான். அதனாலேயே ஓடிய வேகத்துக்கு ஒரு ஆசுவாசம் போல ஆற்றுப் படுத்தும் அவனுடைய எழுத்துக்கள். ஊரைப் பற்றிய விவரங்கள்  நாவலின் ஊடே விவரிப்பது காட்சியின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்கிறது. “திருவண்ணாமலை ஒரு வறட்சிப் பகுதி. வெயில் நகரம். இந்த உயரத்தில் பார்க்கும் பொழுது எவ்வளவு மரங்கள் தென்படுகின்றன. ஒரு நாள் கூட இவ்வளவு மரங்கள் சூழ வாழ்கிறோம் என்ற எண்ணமே தோன்றாமல் இருந்திருக்கிறோம்.” 

நாவலை உருவாக்குவதில் நாவலாசிரியரின் உழைப்பும் அக்கறையும் தெரிகிறது. சில இடங்களில் உரையாடல்கள் தேவைக்கு அதிகமாகவும் , சில அம்சமான விவரணைகளுக்குப் பிறகு வரும் வட்டார உரையாடலும் நெருடலாக இருக்கிறது. இந்த நாவலின் பிரதான பாத்திரம் ரவியின் தோல்விக்கான காரணம் அவனின் பொறுப்பற்றத் தன்மையும் (ஆனால் அவன் பாவமாகவே படைக்கப் பட்டிருப்பான்) காரணமோ என்றும் யோசிக்க வைக்கிறது. மாமுனியின் பாத்திரம் அட்டகாசம். கனவுப் பாதையில் கொஞ்ச நேரம் இவ்வுலகை மறக்க வைக்கிறார் . சரளமான நடைக்கு படிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.