இது துளசிவனம் என்ற நாவல்

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

லதா எழுதிய சமூக நாவல்கள் மேலும் ஐந்து உள்ளன. அவை 1970 ம் தசாப்தத்தோடு   தொடர்புடையவை. அவற்றில் “இது துளசிவனம்” 1971 ல் வந்த நாவல். கோபிசந்துடனான  உரையாடல் இந்த நாவலின் படைப்புக்கு உந்துதல் என்று கூறுகிறார் லதா. “மாத்ருமூர்த்தி நிபானபூடி விசாலாட்சிக்கும் ‘ஜீவன சஹசருடு’ அச்சுத ராமய்யாவின் மாத்ருமூர்த்தி தென்னேட்டி சீதாராமம்மாவுக்கும் பாத பத்மங்களை வணங்கி’ சமர்ப்பணம் செய்துள்ளார்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இளமையின் இயல்பான ஈர்ப்பு, வாஞ்சை, சமுதாய ஒழுக்க நீதிக்கு மாறாக ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக் கொள்ளும் ரகசியத் தொடர்புகள், அவ்வப்போது சமுதாய ஒழுக்கத்தை எதிர்க்கும் பகிரங்க நடவடிக்கைகள் போன்றவை லதாவின் நாவல்களில் சர்வ சாதாரணமாகத் தென்படும் அம்சங்கள். விந்தையாக ஒவ்வொரு நாவலிலும் சமுதாய பாலியல் ஒழுக்கத்திற்குத் தலைவணங்கி வாழும் பெண்களுக்கு அந்த பவித்ரத் தன்மையே அதிகாரமளிக்கும் சக்தியை ஏற்படுத்துகிறது என்ற குறிப்பும் இணையாக கூடவே வருகிறது.

ஆண் பெண் தொடர்புடைய அமைப்பில் மனித சுதந்திரத்திற்கு பட்டம் கட்டுவது போல் தென்பட்டு கொண்டே மறுபுறம் ஹிந்து பெண்ணின் தர்மம் என்பதை ஒரு எடுத்துக்காட்டான மதிப்பீடாக நிரூபிப்பது கூட லதாவின் நாவலுடைய சாரமாக உள்ளது. அதற்குச் சான்றே ‘இது துளசிவனம்’ என்ற நாவல். 

நாவலுக்கு ‘ஒக மாட்ட’ (ஒரு வார்த்தை) என்ற தலைப்பில் எழுதிய முன்னுரையில் லதா ‘இது துளசி தோட்டங்களின் திவ்ய பூமி’ என்று எடுத்துக்கூறி துளசி, மற்றும் ஜலந்தர் பற்றிய புராண கதையைக் கூறுகிறார். உலகத்திற்கு கேடு விளைவுக்கும் ஜலந்தரை  வதைப்பதற்கு அவனுடைய மனைவி துளசியின் பதிவிரதைத் தன்மை தடையாக இருந்தது என்பதால், மகாவிஷ்ணு அவளுடைய கணவன் உருவத்தில் வந்து அவளைத் தொட்டு அவளை அபவித்திரம் செய்து ஜலந்தரனின் மரணத்திற்கு வழியை எளிதாக்குகிறார். மீண்டும் அந்த பகவானே அவளை பவித்ரமான தேவதையாகச் செய்து எல்லாவீடுகளிலும் பூஜிக்கப்படும்படியாக அனுகிரகம் செய்கிறார் என்று இந்த கதையை மூன்று வார்த்தைகளில் கூறிவிட்டு, அதற்கு லதா செய்த வியாக்கியானம் கவனிக்கத்தக்கது. 

தவறு செய்வதால் கூட பாரதப் பெண்கள் வணக்கத்தை பெற முடியும் என்கிறார் லதா. கணவனாலோ, இன்னொருவராலோ அல்லது தனக்குத்தானாகவோ தப்பான அடி எடுத்து வைத்த பெண்ணின் கண்ணிலிருந்து பச்சாதாபத்தோடும் துயரத்தோடும் ஒரு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தால் அந்தக் கண்ணீரால் துளசிச் செடிகள் பெருகி வளரும் என்கிறார். 

இந்த கருத்தை உள் சூத்திரமாகக் கொண்டு நெய்த நாவல் ‘இது துளசி வனம்’. அகல்யாவும் விநாயகராவும் கணவன் மனைவியாக இருந்தாலும் இருவருக்கும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் தொடர்புகள் இருந்தன. அவர்களின் ஆர்வம்    பலர் மீது இருந்தது. ஒருவருக்கொருவர் ஆக்ஷேபித்துக் கொள்ளாமல் அவரவர் அனுபவம்  அவரவருக்கு என்று வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால் விநாயகராவு ஆசைப்பட்ட பெண்களை சினேகம் செய்து இஷ்டத்திற்கு வளைத்துக் கொண்டு வந்து அவனுடைய அனுபவத்திற்குத் தோதாக அழைத்து வரும்    அழுத்தம் அகல்யாவின் மீது இருந்தது. அந்த வகையில் அவள் இம்சைக்குக் கூட உள்ளாக வேண்டிவந்தது. 

விஜயவாடாவுக்கு வேலை மாற்றமாய் வந்த ராமகிருஷ்ணா வீட்டை அடுக்கி வைத்துக் கொள்வதற்கு மனைவியை முன்பாக அனுப்ப வேண்டி வந்தபோது நண்பனான விநாயகராவின் வீட்டில் இறங்கச் சொல்லி அனுப்புவதோடு இந்த நாவலின் கதை தொடங்குகிறது.

அவள் பெயர் ஹைமாவதி. தெலங்காணாவில் பிறந்து வளர்ந்த அவளுடைய அப்பாவித்தனமும் சரளமான இயல்பும் பற்றி ராமகிருஷ்ணாவிடம் கேட்டறிந்துள்ள விநாயகராவு அவளிடம் ஆசையை வளர்த்துக் கொள்கிறான். தங்கள் வீட்டில் அவள் தங்கிய காலத்தில் தம் நாகரிகத்தை அவளுக்குச் சொல்லிக் கொடுத்து அவனுக்கு    அனுகூலமாக இருக்கும்படி தயார் செய்யும் வேலையை மனைவியிடம் ஒப்படைக்கிறான். அவளுடைய அழகைப் புகழ்வது, அலங்காரம் செய்வது, அன்பைக் காட்டுவது, சினிமாவுக்கு அழைத்துச் செல்வது, விநாயகராவின் அருகில் உட்காரும்படி  உற்சாகப்படுத்துவது, விநாயகராவின் மீது கை போட்டு அவனிடம் உரிமையோடு நடந்து கொள்வது என்று இவை அனைத்திற்கும் இடையில் திண்டாடி, குழப்பத்திற்கு ஆளாகிறாள் ஹைமாவதி. விநாயகராவு அவளை அடைவதற்கு எதுவாக ஹைமாவதியின் காபியில் மயக்க மருந்து கலந்து கொடுக்கிறாள் அகல்யா. அந்த மயக்கத்தில் அவள் வீட்டை விட்டு ‘மன்னார்’ என்பவனின் புத்தகக் கடைக்குச் செல்கிறாள். அவன் அவளை வீட்டுக்கு அழைத்து வந்து மனைவி அருந்ததியிடம் ஒப்படைக்கிறான். விநாயகராவிடமிருந்து அவள் ஹைமாவதியை காப்பாற்றுகிறாள். இதுவே இந்த நாவலின் முடிவு. 

இந்த நாவலில் மன்னாரின் மனைவி அருந்ததியும் ஹைமாவதியும் துளசிச் செடிகள்.  அவர்கள் பிறந்து, வளர்ந்த குடும்பங்களின் பொருளாதார நிலைமை, அவை கற்றுக்கொடுத்த பண்பாடு ஆகியவை அவர்களை அவ்வாறு தயார் செய்தன. பெற்றோர் பார்த்துச் செய்த திருமணத்தில் அவர்கள் விருப்பத்தோடு அடங்கி போனார்கள். கணவனைக் காதலித்து அடக்கமாக சம்சாரம் செய்தது அவர்களுக்கு ஒரு பவித்திரத்தையும் சக்தியையும் அளித்தன. ஆனால் அவர்கள் இருவரின் இடையில் இருந்த வித்தியாசம் ஒன்றுதான். அருந்ததி நிலையாக நிச்சயமாக நிற்கக் கூடியவள்.    எதிரில் இருப்பவர் செய்தது தப்பு என்று தெரிந்தால் தைரியமாக நேர்மையோடு கேள்விகேட்கக் கூடியவள். அதையெல்லாம் அவள் தன் நிஜ ஸ்தானமான வீட்டில் இருந்து செய்ய முடிந்தது. ஹைமாவதி அவ்வாறு அல்ல. அவள் தனியாக புதிய இடத்திற்கு புதிய மனிதர்களின் நடுவில் புலன்களைத் தூண்டும் பழக்கத்தையும்   உரையாடல்களையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. அவள் அடைந்த மனவேதனையும்   தடுமாற்றங்களும் அதிகம். அவளுடைய விவேகம் அவர்களின் இடையில் அதிக நேரம் இருக்க வேண்டாம் என்று எச்சரித்தது. தான் வாடகைக்கு எடுத்துக் கொண்ட வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூட எண்ணுகிறாள். சங்கோஜமும் மென்மையான இயல்பும்  அவளுடைய செயலுக்குத் தடை விதித்தன. ஆனாலும் மயக்க மருந்து கலந்த காபியை குடித்த பின்பு கூட அவள் விநாயகராவின் வீட்டில் தனக்குப் பாதுகாப்பு கிடைக்காது  என்று மன்னார் என்பவன் சினிமா ஹாலில் தன்னிடம் காட்டிய சினேகத்தையும் இரக்கத்தையும் நினைவுபடுத்திக்கொண்டு அவனுடைய புத்தகக் கடைக்குச் செல்கிறாள்.

அனுகூலமான சூழலை ஏற்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டவள் அருந்ததி. எதிர்மறை சூழ்நிலைகளில் போராட வேண்டி வந்தவள் ஹைமாவதி. அவர்கள் இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். பவித்ர பாரதப் பெண்கள். இப்படிப்பட்ட பெண்களால்தான் துளசி வனங்கள் வளரும். இதுவே லதா கூற நினைத்தது. 

அகல்யா போன்ற பெண்கள் இந்த துளசிவனத்தில் முளைத்த கஞ்சா செடிகள். கஞ்சா மயக்கம் ஏற்படுத்தும் திரவியம். வியாபாரச் சரக்கு. அது எத்தனை கெடுதல் ஆனாலும் ஒழுக்கமற்றதானாலும் பண வருமானம் அதில் முக்கியமானது. அகல்யாவுக்கு, அருந்ததிக்கும் ஹைமாவதிக்கும் இருப்பது போல பாதுகாப்பான குடும்ப வாழ்க்கை இல்லை. வறுமை, படிக்கும் காலத்திலேயே தன்னைத்தானே போஷித்துக் கொள்ள  வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. அவளுடைய உடலே அதற்குக் கருவியானது.  அந்தப் பயணத்தில் அவள் விநாயகராவின் மனைவியானாள். பணம், அதிகாரம், சுதந்திரம் இந்த மூன்றும் கொடுத்த மயக்கத்தில் விநாயகராவு கொடுத்த ஹிம்சையைக் கூட   பொறுத்துக் கொள்ளும் நிலையை அடைகிறாள். அகல்யாக்கள் பிறக்க மாட்டார்கள்.  தயாராகிறார்கள் என்பது லதாவின் கருத்து. 

இந்த நாவலில் மூன்று பெண்கள் இருப்பது போலவே மூன்று ஆண்களும் இருக்கிறார்கள். அருந்ததியின் கணவன் மன்னார், மனைவியை மரியாதையாகவும் அன்போடும் நடத்துகிறான். ஆனால் அகல்யாவோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு அவை எதுவும் தடையாக இல்லை. அவனுக்கு அகல்யாவோடு தொடர்பு இருப்பது மனைவிக்குத்  தெரிந்த பின்பும் கூட அதனை நிறுத்துவதற்கு அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை. அவனே கூறியது போல, ‘அபவித்திரச் செயல்களில் மூழ்கினாலும் பவித்திரமானவற்றை வழிபடுபவர்களில்” அவனும் ஒருவன்.  

அதனால்தான் வினாயகராவால் வரக்கூடிய ஆபத்தை ஊகித்து  தேவையேற்பட்டால்  தன் கடைக்கு வரச் சொல்லி தக்க சமயத்தில் ஹைமாவதிக்குத் துணையாக நிற்கிறான். ஹைமாவதியின் கணவனாக ராமகிருஷ்ணாவின் பெயர் குறிப்பிடப்படுகிறதே தவிர   கதையின் ஓட்டத்தில் அவனுக்குத் தனி அறிமுகம் இல்லை. அகல்யா பேசிய சொற்களைக் கொண்டு அவளுக்கும் அவனோடு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. 

ராமகிருஷ்ணாவின் மனைவியைப் பற்றி அவனுடைய வாயிலாகக் கேட்ட சொற்களைக் கொண்டே அவள் மீது ஆசையை வளர்த்துக் கொண்ட விநாயகராவு அகல்யாவிடம் அவனோடு தொடர்பு கொள்ளும்படி உற்சாகப்படுத்துகிறான். அகல்யாவுடனான தொடபுக்குப் பிறகு ராமகிருஷ்ணா கொஞ்சம் கலாச்சாரத்தின் சிறப்புக்கு தாசனாகிவிட்டான். தெலங்காணாவின் பிற்போக்கான நிலை குறித்து அருவருப்படைகிறான். ஆனால் கணவனுக்கு அகல்யாவோடு உள்ள தொடர்பு குறித்து ஹைமாவதிக்கு எதுவும் தெரிந்ததாகத் தெரியவில்லை. விநாயகராவு மனைவிக்குத் தெரிந்தே பல பெண்களோடு தொடர்பு வைத்துக்கொண்ட மனிதன். அவனுக்குப் பிடித்த பெண்களை பெற்றுத் தரும் கருவியாக மனைவியை உபயோகப்படுத்தும் தந்திரம் அவனிடம் இருந்தது. மூன்று ஆண்களுக்கும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்புகள் இருந்தன. பெண்கள் மூவரில் இருவருக்கு அப்படிப்பட்ட தொடர்புகள் இல்லை. துளசி வனங்கள் வளர்வதற்கு பெண்களின் புனிதத் தன்மை ஒன்றே போதுமா? ஆண்கள் திருமண உறவுக்குக் கட்டுப்படாமல் போனாலும், வாழ்க்கையை ஒழுக்கத்தோடு நடத்தாமல் போனாலும் எதுவும் பாதிப்பில்லையா? சமுதாய பாலியல் ஒழுக்கத்திற்கு லதா கூட பெண்களை மட்டுமே பொறுப்பாளியாகக்  காட்டுவது அவர் சம்பிரதாய சட்டகத்தைத் தாண்டி வரமுடியாமல் போகிறார் என்பதையே காட்டுகிறது.

ஓ நீலிமா கதை என்ற நாவல்

ஓ நீலிமா கதை, மிஸஸ் கோகிலா என்ற பெயர்களே நாவலின் கதைக்கருவிற்கு  பெண்களே மையப்புள்ளி என்பதைக் காட்டுகின்றன. இவை 1978 ல் வெளிவந்தன. 

மிகவும் கடினமான வறுமையும் தந்தையின் துன்புறுத்தலும் தாளாமல் சுகத்தைத்  தேடி யாருடனோ ஓடிவிட்ட தாய்க்குப் பிறந்தவள் நீலிமா. தந்தை இறந்து பிறகு  அவனுடைய அத்தை காமம்மாவின் வளர்ப்பில் தேவைகளும் கடன்களும்   வேதனையுமான வாழ்க்கையிலிருந்து ஓடுவதற்கு எப்போதும் ஏதோ ஒரு முயற்சியைச் செய்கிறாள். 

எந்த வழியிலாவது பணத்துக்குக் குறைவில்லாத வாழ்க்கை கிடைக்குமா என்று ஏங்கியபடி இருக்கும் நீலிமா, சாஸ்திரியிடம் தனக்கு எத்தனை காதல் இருந்தாலும், சாஸ்திரியும் தன்னைக் காதலிக்கிறான் என்று தெரிந்தாலும், அவனைத் திருமணம் செய்து கொண்டால் மீண்டும் பணத்திற்குக் கஷ்டப்படும் வாழ்க்கையே கிடைக்கும் என்று கவலைப்படுகிறாள்.

செல்வந்தனான விட்டல்ராவின் காதலை ஏற்று திருமணம் செய்து கொண்டு சுகப்படலாம் என்று எண்ணினாலும் கூட, மனதால் ஆசைப்படுவதற்கும்   புத்தியால் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும் பொருத்தம் அமையாமல் நீலிமா அடைந்த வேதனை இந்த நாவலுக்குக் கருவானது. இறுதியில் சாஸ்திரியுடனான வாழ்க்கையில் தனக்குக் காதலும் ஆனந்தமும் பாதுகாப்பும் கிடைக்கும் என்று அவள் தெரிந்து கொள்வதோடு நாவல் முடிகிறது. 

சாஸ்திரியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்த கணத்தில் கூட பணத்திற்கு எங்கே போவது என்று அவள் கேட்காமல் இல்லை. ஆனால்   பணத்தாசை பிடித்தவள் என்று அவளை குறைவாக காட்டவில்லை ஆசிரியை. வாழ்க்கையில் பணம் தேவை. பணம் கொடுக்கும் பாதுகாப்பை யாருமே மறுக்க முடியாது. ஆனால் பணமே பிரதானம் என்ற பார்வை நல்லதல்ல. 

நீலிமாவின் விஷயத்தின் பணத்தின் மீதான ஆசை, அவளுடைய தேவையில் இருந்தும் பாதுகாப்பற்ற தன்மையிலிருந்தும் ஏற்பட்டது என்று சாஸ்திரி தெரிந்து கொண்டான். அதனால்தான் அவளை எப்போதும் எச்சரித்துக் கொண்டே இருந்தான். அவளுடைய அந்தரங்கத்தில் தன் மீதான காதல்தான் மேலாக இருந்தது என்பதை அவன் உணர்ந்தான். விட்டல்ராவைத் திருமணம் செய்து கொள்வேன் என்ற கூறினாலும் அவள் அந்த திருமணத்தை செய்து கொள்ளவில்லை என்று புரிந்து நம்பிக்கையோடு இருந்தான்.

விட்டல்ராவோடு திருமணம் என்ற முடிவு ஏற்படுத்திய பரபரப்பில் பழைய நண்பன் சேஷகிரியோடு ஹோட்டல்களுக்கும் பூங்காக்களுக்கும் அலைந்தாள். நீலிமாவின் பரபரப்பைப் புரிந்து கொண்டவன் ஆனதால் அந்த அவசரத்தில் அவள் எந்த ஒரு தவறான முடிவும் எடுக்காமல் இருக்க, சாஸ்திரி அவளுடன் துணையாக இருந்தான். அவ்விதமாக நீலிமாவின் கதை சுகமாக முடிந்தது.

மிஸஸ் கோகிலா என்ற நாவல்

மிஸஸ் கோகிலா என்ற நாவலில், கதையின் ஒரு பகுதியாக, பாரத தேசத்திற்கு சுதந்திரம் வந்து முப்பது ஆண்டுகள் ஆயின என்ற காலக் குறிப்பு காணப்படுகிறது.   அதாவது இந்த நாவலின் கதை 1977 காலத்தைச் சேர்ந்தது. 1970 -80 என்பது புரட்சி இயக்க தசாப்தம். 

நக்சல்பாரி இயக்கம், ஸ்ரீகாகுளம் வழியாக வட தெலங்காணாவுக்குப் பரவிய காலம். மாணவர்களில் புரட்சி இயக்க எண்ணங்கள் நுழைந்த காலம். பின்னர் புரட்சி இயக்கத்தின் தலைமை இந்த மாணவர்களிடமிருந்து வளர்சசி பெற்றது.  தெலங்காணாவில் அந்தக் காலத்தில் நேர்ந்த இந்த சமுதாய மாற்றங்களை ‘செரமண்டராஜு’ நாவல்கள் கண்ணாடி போல் காட்டுகின்றன. 

ஆனால் லதா, மிஸஸ் கோகிலா என்ற இந்த நாவலில் கல்வி நிலையங்களில்   புரட்சி இயக்கங்களுக்கு பிரதிநிதியாக இருக்கும் ஆசிரியர்களை அறிவற்றவர்களாகவும், கிளி போல் கூறியது கூறல் தவிர பயிற்சியோ புரிதலோ இல்லாதவர்களாகவும், கலப்புத் திருமணம் செய்து கொள்வதையும், ஆயுதப் போராட்ட சங்கங்களோடு சேருவதையும் ஆதரிசமாக போதித்து, மாணவர்களின் வாழ்க்கையைத் திசை திருப்பியவர்களாகவும் மொத்ததில்   பொறுப்பற்றவர்களாகவும் காட்டி, சமகால ஒளிமயமான சரித்திரத்தை வக்கிரமாக சித்திரித்துள்ளார்.  

இந்த பின்னணியிலேயே ஆதரிசம் என்ற பெயரில், ஹரிஜன இளைஞனை மணம் புரிந்த கோகிலாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த நாவலுக்கு கதைக் கருவாயின.

ஸ்காலர்ஷிப் பெற்று படிப்பின் மீது அக்கறை காட்டாதவர்களாகவும் அரசாங்கம் கொடுக்கும் உரிமத் தொகையால் தமக்கு உத்தியோகம் உயர் பதவிகள் வரும் என்பதையே லட்சியமாகக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களாகவும் ஹரிஜன மாணவர்களை சித்திரிக்கிறார் லதா. படித்துக் கொண்டிருந்தாலும் பேசும் மொழி மாறுவது இல்லை என்று ஏளனம் செய்கிறார். அவர்களுடைய அசைவ உணவுப் பழக்கம் குறித்த ஆசிரியையின் அருவருப்பு இந்த நாவலில் வெளிப்படுகிறது. கோகிலாவின் கோணத்தில் இருந்து கூறப்பட்டால், அது அந்த பாத்திரத்துக்கான  அறிவின் எல்லை என்று எண்ணலாம். ஆனால் அது ஆசிரியையின் கண்ணோட்டம். இல்லாவிட்டால், கோகிலாவின் நடத்தை மீதும் கோகிலாவின் புரிதல் மீதும் விமர்சனம் எங்கோ ஒரு இடத்தில் பதிவாகி இருக்கும். 

கோகிலாவைத் திருமணம் செய்து கொண்ட ஜீவரத்தினம் இறுதியில் வில்லனாக மாறுகிறான். எந்த விதமான அறிமுகம், நட்பு, ஒருவருக்கொருவர் சற்றாவது  தெரிந்துகொள்வது என்று எதுவுமே இல்லாமல் கலப்புத் திருமணங்கள்   நடத்துகிறார்கள் என்று முற்போக்கு வாதிகள் மீது சேரை பூசுவதற்கும் கையோடு கையாக, ஜீவரத்தினத்தின் நடத்தையைக் கொண்டு ஆண் இனத்தையே வெறுப்பதற்கும் தொடங்கிய கோகிலாவின் பெயரைச் சொல்லி, அப்போதுதான் ஆந்திர தேசத்தில் பரவத் தொடங்கியிருந்த பெண்ணீயக் கருத்துகளின் மீது வெறுப்பை விளம்பரப்படுத்துவதற்கு இந்த நாவலை லதா எழுதியிருக்கிறார் போலுள்ளது.

ராஜபவனம் என்ற நாவல்

ராஜபவனம் நாவல் கூட 1978ல் வந்ததே. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து அத்தையின் வளர்ப்பில் வாழ்ந்து வந்த இரண்டு வயது வித்தியாசத்தோடு உள்ள மூன்று அக்கா தங்கைகள் மாமாவின் தீய ஆசைக்கும் அடக்குமுறைக்கும் ஐந்து ஆண்டுகளாகத் தாக்குப்பிடித்து இனி தாங்க முடியாது என்று  குண்டூரிலிருந்து ஹைதராபாத்துக்கு ஓடிப் போய் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்குச்  செய்த முயற்சிகளும், சாதித்த வெற்றிகளும் இந்த நாவலின் கதையம்சம். மூன்று   அக்கா தங்கைகளில் பெரிய அக்கா  கங்காவுக்கு மைனாரிடி முடிந்து ஆஸ்திகளின் மீது வாரிசுரிமையை அமல் செய்து கொள்வதற்கு வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதும், மூன்று அக்கா தங்கைகளும் விரும்பியவர்களையே திருமணம் செய்து கொள்வதுமாக சுகமாக முடிந்த சாதாரண நாவல் இது.

ஏதி நித்தியம்? என்ற நாவல் 

ஏதி நித்தியம்? 1980ல் வந்த நாவல். எழுத்தாளரான ராதம்மாவுக்கும் அவளுடைய வீட்டில் பணிபுரியும் ராஜம்மாவுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு, உரையாடல் இவற்றின் சாரமே இந்த நாவல்.

வேலைக்காரர்கள் தாமதமாக வருவது, அடிக்கடி வேலைக்கு வராமல் போவது,  அவ்வாறு இருந்தால் வேலையை விட்டு நீங்கிவிடு என்று அடிக்கடி எஜமானியம்மா கூறினால் எரிச்சலடைவது, தேவைக்காக முன்பணம் கேட்டு வாங்கிக் கொள்வது, சம்பளத்தில் குறைத்தால் கடன் தீரும் முன்பே மீண்டும் ஏதோ ஒரு தேவைக்கு மீண்டும் பணம் கொடுக்கச் சொல்லி கெஞ்சுவது, எஜமானி இல்லை என்று கூறுவது, ஆனாலும் விடாமல் கஷ்டங்களை அடுக்கிச் செல்வது இவை ராதம்மா, ராஜம்மா இருவரின் இடையில் ஒவ்வொரு நாளும் நடக்கிறது.

ராஜம்மாள் தாமதமாக வருவதற்கும் வராமல் போவதற்கும் அடிக்கடி பணம் கேட்பதற்கும் காரணம் கூறும்படி கேட்கும் ராதம்மாவிடம், ராஜம்மா துண்டு துண்டாகக் கூறிய பதில்களை எல்லாம் சேர்த்துப் பார்த்த வாழ்க்கை அனுபவங்களே கதையாகிறது. இதுவே இந்த நாவலின் கதை.

ராஜம்மா ஒருவர் பின் ஒருவராக மூன்று ஆண்களோடு வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டு பிள்ளைகளை பெற்றாள். முதல் தொடர்பு விரும்பிச் செய்து கொண்ட திருமணம். அவன் மரணமடைந்தபின், குழந்தையைக் காப்பற்றுவதற்கோ, பெற்றோரின் அழுத்தத்தாலோ அல்லது உடல் தேவைகளுக்காகவோ மற்றொரு   திருமணம் செய்து கொண்டாள். அவன் மூலமும் பிள்ளைகளை பெற்றாள். அவன்   மரணமடைந்த பின் மற்றொரு தொடர்பை வைத்துக் கொண்டாள் ராஜம்மா. முதலில் திருமணம் செய்து கொண்டது ஹிந்து ஹரிஜன இளைஞனை.  இரண்டாவதாக பெற்றோரின் விருப்பப்படி மணம் செய்து கொண்டது ஒரு  கிறிஸ்தவனை. மூன்றாவது திருமணம் மனைவி குழந்தைகள் உள்ள ஒரு முஸ்லீமோடு. அது தவிர அவள் பணி செய்த வீடுகளில் ஆண்கள் அழைக்கும்போதெல்லாம் அவர்களுக்கு அடங்கிப் போவதும் அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்வதுமாக அது தனிக்கதை. 

இதையெல்லாம் பார்க்கும்போது ராஜம்மா கீழ்மையான குணமுள்ளவள் என்று தோன்றலாம். ஆனால் லதாவின் கண்ணோட்டத்தில் கவலைப்பட வேண்டியது  கீழ்மையாக வாழ்வது பற்றி அல்ல. அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த விந்தையான சூழ்நிலைகளைப் பற்றி. அது சபலமா என்றால், இருக்கலாம். தனியாக தன் வயிற்றையும் பிள்ளைகளின் வயிற்றையும் நிரப்ப வேண்டிய வழியைப் பார்த்துக் கொள்வதற்காக இருக்கலாம். எந்த மதமாக இருந்தாலும் எந்த   வர்க்கத்தைச் சேர்ந்தவர்களோடு செய்துகொண்ட திருமணமாக இருந்தாலும் பெண்களின் வாழ்க்கை அனைத்தும் துயரம் நிரம்பியதே என்பது லதாவின் புரிதல். 

ராஜம்மாளின் வாழ்க்கையில் எத்தனை குறை இருந்ததோ எத்தனை துன்புறுத்தல் இருந்ததோ எழுத்தாளரான ராதம்மாவின் வாழ்க்கையிலும், பணிபுரிந்த விக்டோரியாவின் வாழ்க்கையிலும் அதே அளவு குறை இருந்தது.  

ராதம்மாவின் கணவன் அவளை அடித்தான். வேலையின்றி ஊர் சுற்றுபவன்,   பொய் சொல்பவன், கடன் வாங்குபவன், பணிப்பெண் ராஜம்மாவோடு மட்டுமின்றி யாரோடு வேண்டுமானாலும் தொடர்பு வைத்துக் கொள்பவன், வீட்டில் சாமான்களைத் திருடிச் செல்பவன் என்று அவனைப் பற்றி அனைத்தும் தெரிந்தும் பொறுத்துக் கொள்கிறாள் ராதம்மா. விக்டோரியாவின் கணவன் சந்தேகப்பிராணி. மனைவியை அடித்துக்கொண்டே இருப்பான். அவனும் ராஜம்மாவோடு தொடர்பு வைத்துக் கொண்டவனே.

ஆசிரியை இந்த மூவரின் வாழ்க்கை மூலம் ஆண்கள் பாதுகாப்பு அளிப்பவர்கள் என்ற பிரமையில் பெண்கள் எத்தனை துயரத்தை வேண்டுமானாலும் எவ்வாறு பொறுத்துக் கொள்கிறார்கள் என்பதைச் சொல்ல முயற்சித்தது போல தெரிகிறது. 

பெண்களின் வெளிப்படாமை, பெண்களின் பசி தவிர இந்த பிரபஞ்சத்தில் நித்தியமானது எதுவும் இல்லை என்ற ராதம்மாவின் கூற்று இந்த நாவலை முடிக்கிறது. 

இனி லதா எழுதிய புராண நாவல்களைப் பார்ப்போம்.

Series Navigation<< மிகிலிந்தேமிடி? (என்ன மிச்சம்?) என்ற நாவல் மோகனவம்சி என்ற நாவல் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.