அயல் மகரந்தம்

ஒன்பது கதைகளை கொண்ட இந்த சிறுகதை தொகுப்பு ரா.கிரிதரனின் முதல் தொகுப்பு. 

கிரிதரன் வெளி நாட்டில் நீண்ட காலமாக வசிக்கும் இந்தியர். தமிழ் நிலத்தில் இருந்து தொலைவில் வசிப்பவர்களுக்கு தமிழ் இருபத்தி நான்கு மணி நேரமும் காதில் விழும் சூழல் அமைவதில்லை. எழுதும் மொழியில் பேசாமல், காதில் கூட கேட்காமல் இருக்கும் சூழலில் வசிப்பது எழுதுவதற்கு பெரும் சவால் என்பது பொதுவாக ஒத்துக்கொள்ளபட்ட உண்மை.  அதை விட பெரும் சவால் தற்கால தமிழ் சமூக நீரோட்டத்தில் இருந்து விலகி வசிப்பது. புனைவெழுத்தாளர்களுக்கு சமூகத்தின் வளர்சிதை மாற்றங்களும், மனித மனங்களில் அந்த மாற்றங்கள் ஏற்படுத்தும் நுட்பமான பாதிப்புகளும் எப்போதும் கதைகளுக்கு ஒரு பெரும் கச்சாபொருள். 

அரசியலும், சினிமாவும் தேசங்களை கடந்து இணையம் வழி வந்து சேரும். ஆனால் சுய அவதானிப்புகளும் நுட்பமான பார்வையும் தேவைப்படும் இது போன்ற விஷயங்கள் விலகி வசிக்கும் போது கிடைப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு. 

இது தற்கால தமிழ் சூழலை புலம் பெயர் எழுத்தாளர்களின் கதைகளத்தில் இருந்து விலக்கி வைக்கிறது. முயன்று எழுதுபவர்களின் முயற்சிகள் முயற்சி அளவிலேயே நின்று விடுகின்றன. நல்ல புனைவாக ஆவதில்லை.

பழைய நிகழ்வுகளை , நினைவுகளைஅசை போடும் புனைவுகளே பெரும்பாலும் புலம் பெயர் எழுத்தாளர்களால் தமிழில் எழுதப்படுகிறது. இந்த தொகுப்பு அவற்றில் இருந்து விலகி நிற்கிறது. கிரி இந்த இரண்டு பெரும் சவால்களையும் மிகச்சிறப்பாக இந்த தொகுப்பில் எதிர் கொண்டிருக்கிறார். 

யாருடைய சாயலும் இன்றி தனக்கென ஒரு மொழிநடையை கிரி இந்த தொகுப்பின் வழியாக உருவாக்கி இருக்கிறார். ஆரம்ப வாசிப்பிற்கு சற்று சுற்றி சுற்றி மலையேறும் மொழி சிரமமாக தெரிந்தாலும் தொகுப்பை முடிக்கும் போது அவருடைய புதிய நடை நமக்கு பழகிவிடுகிறது. 

அடுத்த கதைக்களன் சார்ந்த பெரும் சவாலை சில கதைகள் தவிர மற்ற அனைத்தையும் தமிழ்நாட்டிற்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் வெளியே அமைத்து அந்த சவாலை கடந்து சென்றிருக்கிறார். 

விக்கிபீடியாவும், குகூளும் உள்ள உலகில் மெஸ்ஸையன் யார், டிரஸ்டன் எங்கிருக்கிறது, ஷீமேன் என்ன அவ்வளவு பெரிய மேதையா போன்ற கேள்விகளுக்கெல்லாம் மிக எளிதாக பதில் கிடைப்பதால் இந்த கதைகளங்களுடன் வாசகனாக நம்மால் பொருந்தி போக முடிகிறது. உலகமயமாக்கபட்ட உலகில் நாம் வாழ்கிறோம். கிரியின் கதைகள் அதை பிரதிபலிக்கிறது. இரண்டாயிரத்திற்கு முன் இருள் முனகும் பாதை போன்ற கதை களங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க கிடைக்கும். அதை தமிழிலும் மிக அழகாக சொல்ல முடியும் என கிரி இந்த தொகுப்பில் நிரூபித்திருக்கிறார். 

உலகம் சுருங்கி தகவல் பெருகிவிட்ட இன்றைய சூழலில் தமிழிலும் உலகளாவிய கதைகளை சொல்ல தேவை இருக்கிறது. அப்படிப்பட்ட கதைகளை சொல்வதற்கான அற்புதமான சூழல் புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களுக்கு வாய்த்திருக்கிறது.

அப்படிபட்ட கதைகளங்களை எழுத கிரியின் இந்த தொகுப்பு புலம் பெயர் எழுத்தாளர்களுக்கு ஒரு வழிகாட்டி என கொள்ளலாம். 

மொழி நடையிலும் கதை களத்திலும் என இரண்டு தளங்களிலும் புதுமையின் பொலிவோடு அமைந்திருக்கும் கதைகள் இவை.

தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகளை பற்றியும் என்னுடைய வாசிப்பனுபவம் கீழே: 

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

தொகுப்பிற்கு தலைப்பை தந்த கதை. ஆலிவர் மெஸ்ஸையன் என்ற பிரெஞ்ச் இசை மேதை இரண்டாம் உலக போர் சமயத்தில் ஜெர்மன் சிறையில்இருந்த போது ஒரு இசை கோர்வையை உருவாக்கினார். அதுவே கதையின் மையம்.“இசை, அண்டம், பூமி, நம் மனம் என அனைத்தையும் ஒன்றாக இணைப்பது உயிர்ப்பிடிப்பு என்ற வஸ்து மட்டுமே” என்கிறார் மெஸ்ஸையன் கதை முடிவில். 

கதையின் சாராம்சமும் அதுதான். 

வாதைகளை தொடர்ந்து வாதைகளனெ கொடுங்காலம் நீண்டு கொண்டே போகும் சிறை வாசத்திலும் தப்பிக்ககூட முயற்சிக்காமல் உயிரை பிடித்து வைத்து கொண்டிருக்கும் கைதிகளுக்கு முன்னால் இசைக்கப்பட்ட இந்த இசை கோர்வைக்கு மெஸ்ஸையன் வைத்த பெயர் காலத்தின் முடிவுக்காக நால்வர் (Quartet for end of time). இந்த இசைக் கோர்வையில் மெஸ்ஸையன் அது வரை இருந்த இசைக் கோர்வைகளின் ஒத்திசைவிற்கும், லயத்திற்கும் முற்றிலும் மாறுபட்ட இசையை உருவாக்கியிருந்தார். 

ஒரு துளி மண் கிடைத்தாலும் அதில் வேர் பிடித்து வளர துடிக்கும் லாவண்டர் செடி போல மனிதர்கள் எந்த நிலையிலும் வாழ்வின் வேர்களை வெட்டி வீசி விடுவதில்லை. அந்த சூழலுக்குள் வாழ பழகி அதற்குள் ஒரு வாழ்வை அவர்களால் உருவாக்கி கொள்ள முடிகிறது. 

மெஸ்ஸையனின் இசை போல அது முன்னில்லாத ஒன்றாக இருக்கலாம். அந்த வாழ்வு போற்றபட்டாலும் படாவிட்டாலும் வாழப்பட்டது என்பதே அதற்கு போதும். 

கதை நல்ல வாசிப்பனுபவத்தை தருவதோடல்லாமல் கதை வாசித்த பின்னும் நீண்ட நேரம் என் மனதில் மானுடத்தின் எதிலிருந்தும் மீண்டு எழும் தன்மை ஓடிக்கொண்டே இருந்தது. இதுவே இந்த கதையின் வெற்றி. 

இருள் முனகும் பாதை

சிறுகதை என சொல்வதை விட இதனை குறுநாவல் என்றே சொல்லிவிடலாம். அதற்குரிய கதைகளம்,  அதற்கேற்ற நீளம். ஷுமேன் என்னும் பெரும் இசை மேதை இறந்த பின் அவருடைய  மனைவி பென்னட் என்னும் இசை நடத்துநரை அழைத்து அவருடைய கடைசிகால கோர்வைகளை மேடையேற்ற  கோருகிறார். அவர்களுக்குள் நிகழும் விஷயங்கள் ஷூமேனின் வாழ்க்கையோடு கலந்து சொல்லபடுகிறது. ஒரு கலைஞனின் பித்து இந்த கதையில் கிட்டதட்ட பூதக்கண்ணாடி வைத்து ஆராயப்படுகிறது. மனவோட்டங்களை மிக சிறப்பாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். கிரியின் பிரத்யேக நடை அதற்கு பெரிதும் துணை புரிகிறது. 

“என்னை மீண்டும் உமிழ்ந்த எல்ப் நதி” 

“பாதரச நீர்க்கோட்டின் பாவனையில் தொட்டு விலகி 

முன்னகரும்” 

போன்று ஞாபகத்தில் தங்கும் நிறைய சொற்றொடர்களை பயன்படுத்தியிருக்கிறார். இது அவருடைய மற்ற கதைகளில் அவ்வளவாக காண கிடைப்பதில்லை. 

ஒரு நாவலுக்கு கொடுக்கும் நேரத்தையும் நிதான வாசிப்பையும் கோரும் கதை இது. அதை கொடுத்து வாசிப்பவர்களுக்கு

அடுக்கடுக்காக இதழ் விரியும் மலர் போல அவர்கள் மனதில் விரிந்து மலரும் தன்மை கொண்ட கதை இது. 

திறப்பு

ஜெயந்தி என்ற இருபது வயது இளம் பெண், நன்றாக பாடுகிறார். பாடி காஸெட் கூட வெளி வந்திருக்கிறது. அவர் சென்னையில் நல்ல சபாக்களில் கச்சேரி செய்ய வேண்டும் என அவர் தந்தை பிரயத்தனப்படுகிறார். சிபாரிசில்லாமல் அவளுக்கு பாடும் வாய்ப்பு கிடைப்பது தட்டி போகிறது. தோழி சரீனாதான் அவளுக்கு முதல் ரசிகை. கிணற்றடியில் அவளுக்கு மட்டுமே நிகழ்த்தப்படும் கச்சேரியை உருகி கேட்டு ரசிக்கிறாள். ஜெயந்திக்கு ஒன்றி இசையில் லயித்து தன் ஆத்ம திருப்திக்கு பாடுவதா அல்லது பிறரை மகிழ்விக்க பாடுவதா என்னும் குழுப்பம் இருக்கிறது. மற்றவர்களை மகிழ்விக்க பாடுவதில் கிடைக்கும் பாராட்டுகள் பிடித்திருந்தாலும் அப்படி பாடும் போது அவளுக்கு இசையின் கணக்குகளிலும் பிசிறில்லாமல் பாடும் யத்தனங்களிலும் மனம் சென்று விடுகிறது மனம் ஒன்றி பாட முடிவதில்லை. சரீனாவிற்காக பாடும் கிணற்றடி கச்சேரிகளில் அவள் பாடுவது தனக்காகவும்தான். அங்கு தன்னை மறந்து பாடுகிறாள். அவள் தம்பியுடன் கோயிலுக்கு செல்லும் போது அங்கு  ஒரு புதுபாடகரின் கச்சேரியை கேட்கிறாள். 

அந்த கச்சேரி அவள் குழப்பதிற்கு ஒரு விடையாய் , ஒரு திறப்பாய் அமைகிறது. 

கிரி தன் வழக்கமான சுழண்டு செல்லும் மலையேற்ற நடையில் இல்லாமல் இலகுவான ஆற்றொழுக்கு நடையில் இந்த கதையை எழுதியிருக்கிறார். கதையின் தன்மைக்கு அந்த நடை கச்சிதமாக பொருந்துகிறது. 

உணவு மேசையின் அருகில் சாற்றி வைத்த வீணை, முறுக்கு போட காத்திருக்கும் ஸ்டார் டஸ்ட் பேப்பர் துண்டு என சிறு சிறு விவரணைகளிலேயே அந்த வீட்டின் தன்மையை நமக்கு கடத்திவிடுகிறார். வரலாறும் , பெரும்செயல்களும் , பேராளுமைகளும் பேசப்படும் இந்த கதைத் தொகுப்பில் ஒரு சின்னஞ்சிறு வாழ்வின் சித்தரிப்பு இந்த கதை. பேரோசையுடன் கொட்டும் அருவிகளும், கர்ஜிக்கும் மிருகங்களும் உள்ள காட்டில் மெலிதாக இனிமையாக பாடும் குயிலின் நாதம் இக்கதை. 

நந்தாதேவி

ஏறுவதற்கு மிக கடினமான மலை என இன்று வரை மதிப்பிடப்படும் நந்தாதேவியின் சிகரத்தை தொட்டுவிட , சுதந்திரத்திற்கு முன் நடந்த சாகச முயற்சி பற்றிய கதை நந்தாதேவி. 

வீரத்திற்கும் மடத்தனத்திற்கும் இருக்கும் மயிரிழை வித்தியாசத்தை மிக அழகாக கதையில் கொண்டு வந்திருக்கிறார். தமிழில் அதிகம் எழுதப்படாத மலையேற்றம் பற்றிய கதை என்பதால் சம்பவங்களின் புதுமை நிகழ்வுகளில் ஒன்ற வைக்கிறது. 

இந்திய நேபால் இமயமலை தொடர் மலையேற்றத்தில் இன்றும் ஷெர்பாக்களின் பங்கு மிக முக்கியமானது. இந்த கதையில் அவர்களின் பங்கு சற்று குறைத்து கூறப்பட்டுள்ளதாக எனக்கு தோன்றியது. 

சாகசங்கள் மனிதனின் உடல் எல்லைகளை மட்டுமல்ல அவர்களின் மன எல்லைகளையும் தெளிவாக காட்டும் கண்ணாடிகள். சாகசங்கள் முயற்சிக்கபடுவதும் அதை பற்றி மீண்டும் மீண்டும் எழுதப்படுவதும் அதனால்தான் என படுகிறது. அந்த வகையில் இந்த கதை தமிழில் மிக முக்கியமான முயற்சி.

பல்கலனும் யாம் அணிவோம்

அரூ இணைய இதழ் அறிவியல் புனைக்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை இது.

தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மன நிலையும் உடல் நிலையும் பாதிக்கப்பட்ட தன் தம்பியை தனக்குள் பொதிந்து கொள்ளும் அக்காவின் கதை இது. கதையின் சிறப்பு வெறும் தொழில் நுட்ப சாத்தியத்தை மையமாக கொள்ளாமல் அந்த தொழில் நுட்ப சாத்தியங்களை பயன்படுத்தும் மனித மனம் அடையும் சிக்கல்களையும் , குழப்பங்களையும் மையமாக கொள்வதுதான்.

மிகச் செறிவான நடையில் நிதானமாக சொல்லப்பட்ட கதை. 

மரணத்தை கடத்தல் ஆமோ

ஒரு ஜோஸியர் காந்தியின் அகால மரணத்தை கணித்து அதை அவரிடம் சொல்கிறார்.

அந்த கணிப்பை காந்தி எப்படி அணுகுகிறார் என்பதே கதை. கதை காந்தியின் எண்ண ஓட்டங்களை தத்துவ விசார மொழியில் விவரிக்கிறது. கதையில் நேரடியாக சொல்லப்படவில்லை என்றாலும் இந்த எண்ண ஓட்டங்கள் எல்லாம் அவர் நோய் வாய்ப்பட்டு படுத்திருக்கும் போது விழிப்பும் உறக்கமும் கலந்த நிலையில் கனவு போல் வந்து வந்து செல்கிறது என எடுத்து கொள்ள இடமிருக்கிறது. மிக கவனமான நிதானமான வாசிப்பை கோரும் கதை இது. கிரியின் பிற்காலக் கதைகளில் ஒன்று இது. அவருக்கே உரிய நடை அதன் முழுவடிவத்தை அடைந்திருப்பதை காண முடிகிறது. 

மனவோட்டத்தையும் தத்துவங்களையும் இந்த மொழி நடையில் மிகச்சிறப்பாக அவரால் சொல்லிவிடமுடிகிறது. 

காந்தியின் நனவுக்கும் கனவுக்குமான போக்குவரத்தை கதையில் வாசகருக்கு தெளிவாக கடத்திவிடுகிறார். 

தமிழ் போன்ற, பெரும் படைப்புகளும், செழிப்பான இலக்கிய வெளியும் கொண்ட மொழியில் புதிதாக ஒன்றை சொல்வது மிக கடினம். பல நூற்றாண்டு பின்னோக்கி செல்லும் இந்த மொழியில் அனைத்தும் எங்காவது முயற்சிக்கப்பட்டிருக்கும். 

அந்த வகையில் இந்த கதையின் நடையும் அதன் வடிவமும் பிறிதொன்றில்லாமல் தமிழுக்கு மிகப் புதிதாக இருக்கிறது. ஜெயமோகன் போன்ற பெரும் கலைஞர் கிரியை “தமிழுக்கு மேலும் ஒரு சிறந்த எழுத்தாளனின் வருகையை முரசு கொட்டி அறிவிக்கும் தொகுப்பு இது” என வாழ்த்தியதில் இந்த கதைக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நீர் பிம்பத்துடன் ஓர் உரையாடல்

இந்த கதை முழுதும் ஒரு ஓவியத்தால் சொல்லப்படுகிறது. அந்த ஓவியத்தின் வழியே அது செல்லும் இடங்களின்(சந்திரா நாகூர், புதுச்சேரி, மொரீஷியஸ்) வரலாற்றை சொல்லி செல்கிறார் எழுத்தாளர். வெற்றியின் , மகிழ்ச்சியின் அடையாளமாக பார்க்கப்படும் அதே ஓவியம் கால ஓட்டத்தில் சபிக்கபட்ட , யாராலும் சீண்டபடாத வஸ்துவாக மாறி ஒரு பெரும் சூறாவளியில் நீரில் மூழ்கி அழிகிறது.

சாம்ராஜ்யங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் , மனித வாழ்வின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஒழுகிச் செல்லும் வரலாற்றின் வழி கதையில் சொல்லபடுகிறது. கிரிக்கு ப்ரியமான வரலாற்றின் நிகழ்வுகளின் மேல் புனைவை கட்டி நிறுத்தும் கதைகளில் இதுவும் ஒன்று.

பிரெஞ்சு காலனிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தை அருமையாக இந்த கதையில் வாசகனுக்கு கொடுத்துவிடுகிறார். 

வரலாற்று புனைவு எழுத்தாளனின் பெரும் உழைப்பை கோரும் ஒரு வடிவம். இந்த தொகுப்பின் பெரும்பாலான கதைகள் வரலாற்று புனைவுகள். கிரியின் தன் புனைவுகளுக்கான அயராத உழைப்பு பெரும் மலைப்பை தருகிறது. கடந்த காலத்தின் சிறகுகளும் , எடைக்கற்களும் சேர்ந்து உருவாக்கிய நிகழ்காலத்தின் கேள்விகளுக்கு எப்போதும் கடந்தவையில் பதில்கள் இருக்கும் என சொல்லும் இக்கதை இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று.

அகதி

1973 இல் இந்திய வம்சாவளியினர் இடி அமீனால் உகாண்டாவை விட்டு வெளியேற்றப்பட்ட வரலாற்று நிகழ்வை பின்புலமாக கொண்ட கதை. 

கதையின் நாயகன் உகாண்டாவில் இருந்து லண்டனுக்கு அகதியாய் வந்தவன். அவனை போலவே அகதியாய் வந்த நண்பனின் உதவியால் அந்த புது உலகில் உயிரை தக்கவைத்து கொண்டிருக்கிறான். அகதிகளின் கையறு நிலையும் அவர்களின் பாடுகளும் எழுத்தில் இருந்து எழுந்து வந்து வேதனையை தருகின்றன. கிரியின் அரிதான இலகு நடை கதைகளில் ஒன்று இது. புலம் பெயர் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஓர் கலக்கத்தை இந்த கதை கொடுக்கக்கூடும். படித்து முடித்தவுடன் என்னையறியாமல் இங்கிலாந்து சமூகத்தில் என் குழந்தைகளின் இடமென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதுவே இந்த கதையின் வெற்றி.

நிர்வாணம்

கதை சொல்லி தன் பள்ளி நண்பனான புத்தனை நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கிறான். அவனை பற்றிய பள்ளி நினைவுகளும் அவனுடைய தற்காலமும் கதையில் பேசப்படுகிறது. ஓர் சங்கடமான சூழலில் தன் தந்தையிடம் நண்பர்கள் முன்னிலையில் மாட்டி அடி வாங்குகிறான். அந்த சம்பவம் அவனிடம் மட்டுமல்ல அவன் தந்தையிடமும் கொண்டு வரும் மாற்றங்கள்தான் கதையின் அடி நாதம். 

கதையாக நன்றாகவே இருந்தாலும் இந்த தொகுப்பில் உள்ள கதைகளில் இதுதான் பலவீனமான கதை. அத்தனை விஷயங்களிலும் தத்துவார்த்தமாக உள் நுழைந்து ஆராயும் கிரி கதையின் களம் காமம் என்பதால் மேலோட்டமாக தொட்டு தொட்டு சென்றுவிட்டதாக எனக்குபட்டது. 

முடிவாக

ரா.கிரிதரன் சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் வருங்காலத்தில் இடம் பெறுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் இந்த கதைகள் நமக்கு பறைசாற்றுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.