அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 1

This entry is part 1 of 4 in the series கணினி நிலாக்காலம்

என்னுடைய ஆரம்ப கணினி அனுபவம் சுவாரசியமானது. 1982 -ல், சென்னை ஐஐடி -யில் மின்னணுவியல் உயர்படிப்புக்குச் சென்ற எனக்கு, அங்கு ஒரு ராட்சச ஐ.பி.எம். கணினி இருப்பது தெரிய வந்தது. அந்தக் கணினிக்கு, இன்று இருப்பதைப் போல, சர்வ சாதாரணமாக நிரலை உள்ளேற்ற முடியாது! அதற்குகென்று, அட்டைகளில் ஓட்டை பண்ணும் எந்திரம் உண்டு, அத்துடன், உங்களது (பெரும்பாலும் ஃபோட்ரான் – Fortran) நிரலுடன், கட்டுப்பாடு அட்டைகளும் (control cards) இணைக்க வேண்டும். ஒரு சின்ன நிரல் எழுதுவதற்குள், போதுமடா சாமி என்றாகிவிடும்.

ஒரு வழியாக, இந்தத்

தடைக்கற்களைத் தாண்டி, அல்பமான ஒரு நிரலை எழுதி, கணினி அதை உள்வாங்கி, நாம் எதிர்பார்த்ததைச் செய்ததில் உள்ள இன்பம், இன்று பல்லாயிரம் நிரல்கள் எழுதியும் வரவில்லை ☺  ஏதோ எவரஸ்ட் சிகரத்தைத் தொட்டுவிட்ட நினைப்பு! இந்த கணினிக்கு திரை எல்லாம் கிடையாது. மிகவும் இரைச்சலான கணினி மையம் பலவித நிரல் கார்டுகளை பதிவு செய்யும் எந்திரங்களுடன், ஏதோ ஒரு தொழிலகம் போல இயங்கிய வண்ணம் இருக்கும். இந்த சூழலை விட அதிக இரைச்சல் என்பது, ஒரு செய்தித்தாள் அச்சடிப்பு மையம் அல்லது ஒரு பெரிய தொழிலகத்தில் மட்டுமே பார்க்க முடியும். என்னது, கணினிக்கும் இரைச்சலுக்கும் எப்படி சம்பந்தம் இருக்க முடியும், என்று நீங்கள் முகம் சுளிப்பது தெரிகிறது. ஆனால், ஆரம்ப காலக் கணினிகள் அப்படித்தான் வலம் வந்தன. புதிதாகக் கணினி துறைக்குள் நுழையும் எவருக்கும் சற்று பயம் காட்டும் சூழல் என்றே சொல்ல வேண்டும். சரி, எப்படியாவது இந்த எந்திரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கோதாவில் இறங்கினால், அது ஒரு தனி உலகம் என்று தெரிய வந்தது. அன்று முதல் இன்று வரை, கணினி புத்தகங்கள் புரியாத பல தொழிற் சொற்களை (computer jargon) பயன்படுத்திப் பயம்காட்டி வருகின்றன! அன்றைய PCM முதல், இன்றைய GPT வரை, வெற்றிகரமாக கணினித் தொழில் குழப்பி வருகிறது!

அந்த ராட்சச கணினியின் போராட்ட விதிகள் புரிந்த பின், உண்டான இன்னொரு அனுபவமும் அலாதியானது. பரீட்சைக்குப் படிக்கும் மாணவனான எனக்கு, நிறைய கணக்குகள் போட்டுப் பார்க்கக் காகிதம் வேண்டியிருக்கும். இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தோம். ஒரு பக்கத்தில், ஒரு எண்ணை மட்டுமே அச்சடிக்குமாறு ஒரு நிரலை எழுதினோம்.

அதைச் சமர்ப்பித்து, அடுத்த நாள்,  கணினி மையத்திற்குச் சென்ற பொழுது, 100 பக்கங்கள் இலவசம்! கணினி காகிதத்தில், பரீட்சைக்காக கணக்கு போடத் தோதாக அமைந்தது. ஆனால், இது எங்களுக்குப் போதவில்லை; எங்களுடைய பேராசையால், 200 எண்கள் அச்சடிக்கும் நிரலை எழுதினோம். கணினி மையக்காரர்கள் முழித்துக் கொண்டு விட்டனர். வெறும் 25 பக்கமே அச்சடித்து, என்னுடைய நிரலுடன், எச்சரிக்கையும் சேர்த்து வைத்திருந்தார்கள் ☺ இப்படித் தில்லாலங்கடி செய்தால், உன்களது கணக்கு முடக்கப்படும் என்றது எச்சரிக்கை. அது ஒரு கணினி நிலாக்காலம்! அந்த காலத்தில் முதலில் நிரல் எழுதும் இந்திய நிரலர்கள், எழுத்துக்களால் விநாயகர் உருவத்தை அச்சடித்து, தன்னுடைய மிகப் பெரும் சாதனையாக மார் தட்டிக் கொள்வது வழக்கம்!

அச்சடித்த கணினி (பச்சையாக வரி போட்ட அகலக் காகிதம்) காகிதத்தை எங்களிடம் கணினி மையக்காரர்கள் (computer center) தருவார்கள். அச்சடிப்பதை நாங்கள் பார்த்ததில்லை. நாள் முழுவதும் இரைச்சலுடன் இயங்கும் இந்த ராட்சச அச்சு எந்திரங்கள் அருகே போக எங்களுக்கு அனுமதி இல்லை. எழுதிய நிரல் கணினி எப்படி உள்வாங்குகிறது, எப்படி அச்சடிக்கிறது என்பதெல்லாம் கணினி ஆண்டவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்! நாங்கள் தூரத்தில், தீபாராதனைக்கு காத்திருக்கும் பக்தர்கள் – திரைக்குப் பின் நடக்கும் விஷயங்கள் அர்ச்சகருக்கே வெளிச்சம்!

கணினி விஞ்ஞானம் படிக்கும் மாணவர்களின் (பெரும்பாலும் முதுகலை பட்டப்படிப்பு) மீது எங்களுக்கு ஏராளமான பொறாமை. இவர்களுக்கு என்று புதிய ஒரு கணினி இருந்தது. அதில் என்ன புதுமை?  அந்தக் கணினியில் திரைகள் உண்டு. உடனே உங்களது மடிக்கணினிக்கு தாவாதீர்கள். பச்சை நிறத்தில் வெறும் சொற்கள் மட்டுமே காட்டும் டெர்மினல்கள் (green screen computer terminal). அன்று அந்த பிரத்யேக கணினிக்கு 8 டெர்மினல்கள் உண்டு. 24 மணி நேரமும் இந்த 8 டெர்மினல்களை கணினி விஞ்ஞான மாணவர்கள் ஆக்கிரமிப்பார்கள். என் போன்றவர்கள், இரைச்சலுடன் இயங்கும் கார்டு எந்திரமே கதி என்று சின்னச் சின்ன நிரல்களுடன் மக்ழ்ச்சி அடைய வேண்டி இருந்தது.

மின்னணுவியல் படித்ததால், கணினி வில்லைகளை (computer chip) இணைப்பது மற்றும் தேவையான அடிப்படை நிரல்களை எழுதுவது என்று சற்று புரிந்திருந்தாலும், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சற்றும் பிடிபடாத ஒரு காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்த 40 ஆண்டுகள் இந்தத் துறையில் வேலை செய்யப் போகிறோம் என்று சற்றும் தோன்றவில்லை. இன்று, (2023) கணினிகளை புதுமையாக நாம் பார்ப்பதில்லை. இன்று, உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடம் மடிக்கணினி உள்ளது, அன்றைய கணினிகளை விட சக்தி வாய்ந்த திறன்பேசிகள் உள்ளன. ஆனால், ஆரம்ப காலங்களில், (பெரும்பாலும் 1980 மற்றும் 1990 -களில்) கனிணிகளைப் பார்ப்பதே அரிது. அதில் வேலை செய்வது என்பது ஒரு சிலருக்கே வாய்த்த வாய்ப்பாக இருந்தது. அதிகம் புரிதல் இல்லாததால், பலவித குழப்பங்கள் சர்வ சாதாரணம். இன்று, செயற்கை நுண்ணறிவு என்ற துறையைச் சுற்றியுள்ள குழப்பங்களை போன்றது அந்நாளைய கணினி குழப்பங்கள். இது சம்பளப் பட்டுவாடா பயன்பாடுகளில் மிகவும் மன இறுக்கத்தை உருவாக்கும் விஷயம். சில தொழிலாளர்கள், தங்களது வாழ்வாதாரத்தைக் கெடுக்க வந்த வஸ்து என்று கணினி ஆசாமிகளை தாக்கிய சம்பவங்களும் உண்டு. இன்றைய சாட் ஜிபிடி சமாச்சாரம் அந்நாளைப் பார்க்கையில் மேல். 

இந்தத் தொடரில், கணினியின் ஆரம்ப நாட்களில் நடந்த மனித உறவுகள்,  ஆசைகள் ஏமாற்றங்கள், அரசியல், நகைச்சுவை என்று என் அனுபவத்தில் நேர்ந்த நிகழ்வுகளை பதிவு செய்ய உள்ளேன். சம்பவங்களைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு சின்ன டெக்னிகல் கொசுறுகள் இருந்தாலும், பெரிதாக கணினி பற்றிய புரிதல் எதுவும் தேவையில்லை. அத்துடன், சத்தியமாக டெக்னிகல் அறுவைக்கு இங்கு இடமில்லை! என்னுடன் வேலை செய்த சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பெயர்களை அவர்களது அந்தரங்கம் கருதி மாற்றியுள்ளேன்.

இன்று, பள்ளி செல்லும் மாணவர்கள் கணினியுடன் விளையாடுகிறார்கள். ஆனால், 1980/90 -களில்,  இதற்கு ஏராளமான கல்வி தேவைப்பட்டதாக எண்ணப்பட்டது. என் பார்வையில், இது ஒரு மிகப் பெரிய அபத்தம். அந்நாளைய கணினி ராஜாவாகிய ஐ.பி.எம். (IBM) இந்த பிம்பத்தை வெற்றிகரமாக அரங்கேற்றி வெற்றி பெற்றது. பெரும்பாலான ஐ.பி.எம். ஆசாமிகள், ஐ.ஐ.டி. -யில் படித்து விட்டு சம்பளப் பட்டுவாடா மற்றும் கணக்குகள் பார்க்கும், உப்பு சப்பில்லாத நிரல்களை எழுதி தேவதூதர்கள் போல உலா வந்தார்கள். இந்தப் பின்னனியில் உருவான கணினி தொழிலில் நான் காலடி எடுத்து வைக்கையில், பின்னணி சார்ந்த சிக்கல்கள் என்னையும் பாதித்தது உண்மை. கல்லூரியில் படிக்கும் பொழுது இந்தத் தொழிலைப் பற்றிய புரிதலும், வேலையில் பார்க்கும் விஷயங்களும் வெவ்வேறு.

என்னுடைய படிப்பின் பின்னணி வன்பொருள் (hardware) – இது, ஆரம்ப காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்நாட்களில், மென்பொருளுக்கு (software companies) என்று ஒரு நிறுவனம் கிடையாது. அதுவும் வளரும் நாடுகளில் மென்பொருள் என்பது, கணினியுடன் தரப்படும் இலவச இணைப்பாகவே கருதப்பட்டது. இது இன்றைய சமூகத்தினருக்கு சற்று நிரடலாகத் தோன்றலாம். ஆனால், என் முதல் 7 ஆண்டுகள் இந்தப் பின்னணி, ஒரு வகையில் பயன்பட்டாலும், மற்றொரு வகையில் உதைக்கவும் செய்தது. அன்று இருந்த அத்தனை நிறுவனங்களும் கணினி தயாரிக்கும் நிறுவனங்களாக இருந்ததால், எனக்கு வேலை வாய்ப்பு என்பதில் பிரச்சினை இல்லை. இவர்கள் பேசும் தொழிற்சொற்கள் எனக்கு பரிச்சயமாக இருந்தது. ஆனால், என்னுடைய வேலை மற்றும் திறமைக்கு சற்றும் ஒரு மதிப்பில்லாது இருந்தது. இரவு பகலாக உழைத்து உருவாக்கிய மென்பொருள் வெற்றி பெற்றால், அது ஒரு ‘கணினி’ யை விற்க பயன்படும் கருவியாக மட்டுமே பார்க்கப்பட்டது.  

கணினி நிறுவனங்களைக் குறை சொல்ல எதுவும் இங்கு இல்லை. இந்தத் தொழில் இல்லையேல், எங்களுக்கு வேலையில்லை. இன்றைய ப்ராஜக்ட் மேனஜர்களை திட்டும் பலரும் இந்த நாட்களைப் பற்றி அறிந்ததிருக்க நியாயமில்லை. ஒரு கணினியை விற்பவருக்கு, கணினி விற்று வரும் கமிஷன் மேல் கண். அதனால், 1 வருடம் உழைத்து உருவாக்கப்பட வேண்டிய மென்பொருளை 2 மாதங்களில் நிறுவுவதாகச் சொல்லி விற்று விடுவார்! வாங்கிய வாடிக்கையாளரை சமாளிப்பது என் போன்ற நிரலர்களின் வேலை! இத்தனைக்கும், அதற்காக ஒரு காண்ட்ராக்ட் கூட இருக்காது. இத்தனை சறுக்கல்களையும் சமாளிக்க கணினி நிறுவனங்கள் தங்களது கணினி விலையை ஏராளமாக உயர்த்தி விற்றன. இதனால், கணினிகளின் பயன் சேர வேண்டியவர்களை சேரவும் இல்லை.

அடுத்த பகுதியில், சில சுவாரசியமான 1980 கணினி சுவாரசியங்களைப் பார்ப்போம்.

Series Navigationஅது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 2 >>

One Reply to “அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 1”

  1. நகைச்சுவையும் நெருடலும் கலந்த கடந்தகால கணிணி அனுபவம் இரசித்துப் படித்தேன்! கணிணி ஆண்டவர், அர்ச்சகர், மென்பொருளப் பின்னுக்குத்தள்ளிய வியாபார கட்டாயம் அனைத்தும் வெகு சுவாரஸ்யம்! இரவி நடராஜன் அட்டகாசம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.