அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!

காளிதாசனின் நாடகம் வித்தியாசமான கோணத்தில் தொடர்கிறது. அரசி ஔஷிநாரி தனது செய்கைக்கு (பொறாமைக்கு) வருந்தி தன் கணவனின் காதல் நிறைவேறத் தான் ஒரு விரதமிருக்கிறாள். பின் அரசன் புரூரவஸுக்குப் பிரசாதம் கொடுத்துச் செல்கிறாள். இது தொடர்பான உரையாடல்கள் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. உடனே அவன் மறைவில் நிற்கும் ஊர்வசியைக் கண்டு மகிழ்கிறான். பின் அவளுடனான உரையாடல்கள் ரசிக்கத்தக்கவை.

ஊர்வசி: அரசி உம்மை எனக்குக் கொடுத்துள்ளாள்.
புரூரவஸ்: எனது உடலை நீ அவளுடைய பரிசாகக் கொண்டால், யாருடைய 	அனுமதியுடன் நீ என் மனதை எடுத்துக் கொண்டாய்? 

என இவ்வாறு இனிய சொற்களை இருவரும் பரிமாறிக் கொள்கின்றனர்.

காளிதாச காவியத்தின் அடுத்த (4ம்) காண்டம் அப்சரஸ்கள் இருவரின் உரையாடலுடன் தொடர்கிறது. வசந்தகாலம் ஆரம்பித்து விட்டது. ஊர்வசியின் பிரிவால் அவள் தோழிகள் வருந்துகின்றனர். அவளுக்கு நேர்ந்ததனை இரு தோழியரின் உரையாடலினால் அறிந்து கொள்கிறோம். கைலாசமலையின் உச்சிக்குப் புரூரவஸை அவள் அழைத்துச் சென்றதையும், அவனும் நாட்டை மந்திரிகளிடம் ஒப்படைத்துச் சென்றதனையும், அங்கு யாரோ ஒரு அழகான இளம் பெண்ணை அவன் சிறிதுநேரம் வியப்புடன் பார்த்ததனால் ஊர்வசி அவனிடம் ஊடல்கொண்டு விரைந்து சென்று, என்ன செய்கிறோம் எனத்தெரியாமல் போர் அரசனின் ‘பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட’ பிரதேசத்தில் நுழைந்ததனையும், அதனால் அவள் ஒரு கொடியாக மாறிவிட்டதனையும் பற்றி அவர்கள் வருத்தத்துடன் பேசிக் கொள்கின்றனர்.

காளிதாசனின் விக்ரமோர்வசீயத்தின் நாலாம் காண்டம் முழுமையுமே ஊர்வசியைப் பிரிந்ததனால் பித்துப்பிடித்தவனாகிவிட்ட புரூரவஸ் அவளைத் தேடித் தேடிக் கானகமெங்கும் அலைந்து திரிந்து கொண்டிருப்பதனை விலாவாரியாக உரைக்கிறது! இறுதியில் ஒரு கொடியைக் கண்ட புரூரவஸ் அதனைத் தன் காதலியென்றெண்ணி அணைத்துக்கொள்ள அது ஊர்வசியாக மாறுகிறது.

மற்றவற்றைப் பின்பு பார்ப்போம். நாடகத்திற்காகப் பல சுவையான திருப்பங்களையும் செய்திகளையும் தரவேண்டி காளிதாசன் இவ்வண்ணம் கதையைக் கொண்டு சென்றுள்ளான் என உய்த்துணரலாம்.

ஸ்ரீ அரவிந்தரின் க(வி)தை வண்ணமயமான காவியமாக, காதலர்களின் வாழ்வைச் சிறப்பிக்கின்றது. புனையப்பட்ட நிகழ்வுகளுக்கு இதில் இடமில்லை. முதலில் கவிதையைக் காண்போம்.


காண்டம்-3 – க(வி)தை தொடர்கிறது…

ஆங்கில மூலம்: ஸ்ரீ அரவிந்தர்

தமிழாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்

இவ்வாறு ஒரு தெய்வப்பெண் இறக்கக்கூடிய மனிதனால்
வெற்றி கொள்ளப்பட்டாள்;
பன்னிரு மாதங்களுக்கு அவன் அவளை மலைச்சிகரத்தில்
வைத்திருந்தான்,
தனிமை நிரம்பிய பரந்த மலைகளிலும்
பனிபடர்ந்த பிரதேசங்களிலும். மங்கலான பள்ளத்தாக்குகளிலும்
கைவிடப்பட்ட பரந்த பிரதேசங்களை ஆடையாகக்கொண்ட
இருள்சூழ்ந்த கணவாய்களிலும் அகன்று பரந்த பனியிடையிலும்
தூரத்துக் கழுகுகள் அவற்றின் கீழ் வட்டமிட, அல்லது 700
பெருத்த சிகரங்கள் பார்க்கும்படி, அல்லது செங்குத்தான மலையடியில்
வீழும் அருவிகளின் சலசலப்பின் மேலும்
அப்புறம் இனிமையான மலையடிவாரங்களிலும்,
உலகமே கொண்டாடும் அவளழகில் அவன் களித்தான்:
உலகின் அத்தனை அமைதியான கம்பீரமான இடங்களும் அவனது
ரத்தத்தில் கலந்தோடி, எண்ணத்தின் ஒரு பகுதியாயின.
பன்னிரு மாதங்கள் அடர்ந்த பச்சைக் காடுகளிலும்,
சூரிய ஒளியிலும் மகிழ்ச்சி தரும் ஓடைகளிலும் வாழ்ந்து
அவன் பரவசம் அதிகரித்தது. அசைந்தாடும் பச்சைநிறச் சோலைகளும்
வெண்ணிறப் பறவைகளுடன் கூடிய தனிமையான நதிகளும், 710
நீர் பாய்ந்த பள்ளங்களின் பளபளப்பும், மயில்களால் அழகுபெறும்
அல்லது புறாக்களின் ஒளிமிகுந்த மார்புகளால் துலங்கும்
வெயில்படும் மரக்கிளைகளும் காடுகளின் தனிமையிலாழ்ந்த
நாட்களிலும்
பேரிரவுகளில் பல காட்டு விலங்குகளின் உறுமல்களிலும்,-
இவையனைத்தும் இந்த அழகான ஜோடியைச் சுற்றி சுவர்க்கமாயின.
இவர்களின் மலர்செறிந்த மூன்றாவது வசந்தகாலத்துக் காதலில்
பொன்னிற ஊர்வசியிடம் ஒரு குழந்தை பிறந்தது.
தாய்மையின் வேதனையினின்று அந்த தெய்வப்பெண்
குழந்தையின் இனிய முகத்தில் கண்விழித்தாள், ஒரு விநோதமான குழப்பம்
கலந்த சந்தோஷத்துடன், அதன் சிறு கரங்கள் 720
அவள் மார்பகங்களைத் தேடித் துழாவுவதையும் அறிந்து
உணர்ச்சிமிகக் கூவினாள்: “புரூரவஸ், எத்தனை காலம் நாம்
கானகத்திலேயே இருப்பது, மகிழ்ச்சியான நாட்களுடனான
களிப்பான மானிட வாழ்வை விட்டுவிட்டு?
இதயமற்ற கானகத்திலும் நீரலைகளிலும் என்ன மகிழ்ச்சி உள்ளது?
ஆகையால் நான் மனிதர்களின் வீடுகளுக்குச் செல்வேன்,
நகரங்களின் பெருஞ்சந்தடிகளைச் செவியுறுவேன், ஆவல் கொண்ட
முகங்கள் பெரிய கூடங்களையும் சந்தைகளையும் மேற்பார்வையிடுவதனைக்
காண்பேன், பளிச்சென்ற பூலோகத்துப் பெண்களுடன் உரையாடுவேன்,
இளம் சிறார்களின் கண்களை முத்தமிடுவேன், என் கால்களுக்கடியில்
வழுவழுப்பான கற்றரைகளை ஸ்பரிசிப்பேன், சுவர்களின் தடைகளை
உணர்வேன், 730
பூமியின் உணவை உண்பேன்; வனையப்பட்ட பாத்திரங்களிலிருந்து
பானைகளிலிருந்து பருகுவேன், பூமியின் குளிர்ந்த நீரை, அந்த
உல்லாசமான
சுறுசுறுப்பான உலகின் சந்தோஷங்களையும் உழைப்பையும்
அறிந்துகொள்வேன்,”
எனக்கூறினாள்; அவன் ஒரு சிறு சந்தோஷப் புன்னகையுடன் அதனை
அங்கீகரித்தான். ஆகவே அவர்கள் புனித கங்கைப் பகுதிக்கு
கன்னியூரான இளையின் நகருக்கு வந்தனர்.
அவர்கள் அந்த வலிமைபொருந்திய நகர மதில்களை அணுகியதும்,
அவனுடைய கன்னித்தாய் தனது தூய ஆலயத்தினின்றும் அவனைக்
காண்பதற்காக, பேரோசையுடன் சங்கொலி எங்கும் எழுந்தது.
கொண்டாட்டத்துடன் அவர்கள் சிங்கக் கதவுகளை நோக்கிச் சென்றனர், 740
புரூரவஸின் பிரஜைகள், இனம்பிரிக்க இயலாதபடி
மகிழ்ச்சியுடன், வணிகர்களும் மதகுருக்களும்,
பலதுறை வர்த்தகர்களும், நுட்பமான கைவினையாளரும்
அன்னாளைய வேலைகளை மறந்தனர்; சிற்பி தனது
கருவிகளை எறிந்துவிட்டும், சுத்தியல் இல்லாமலும்
அசுரக் கருமான் பெரிய தாடிக்குள்ளிருந்து நகைத்தபடியும்.
சிறு குழந்தைகள், மலர்களின் மீது ஓடினர்
காலைப்போது போலும் பெண்கள் கால் சதங்கைகளின்
இனிய ஒலிகளுடனும், முதிய பெண்டிரும், வயதான
புனித ஆடவரும்,
பரந்த நோக்குடன் பாதிக் கடவுள்தன்மையுடையவர்களும், 750
விரிந்த கண்களுடன் வேத விற்பன்னர்களும்;
அவர்கள் முன்பு அத்தனை பேர்களும் பிரிந்துநின்று
அவர்களை வாழ்த்தினர். ஒளிரும் கவசங்களுடன்,
பயங்கரமான விற்களையேந்தி, வாட்களின் ஒலியுடனும்,
தியாகம் செய்யத்தயாரான உயர்ந்த தலைவர்களும் முதிர்ந்த
அதிகாரிகளும்
போரில் களைத்தும் பெரும் சாகசவீரர்கள் அழுத்தமான நடையுடனும்.
அனைவரும் எக்காளங்களின் உச்ச ஒலிக்கு நடைபயின்று வந்தனர்.
அவர்கள் சுவர்க்கத்தை எட்டுமளவு பரந்த ஒலியுடன்
தம் அரசனை வரவேற்றனர், மென்மையாகப் பொழிந்த பூக்கள்
போரினின்று அவன் திரும்பும்போது வீழ்வதுபோல் அவன்மேல்
விழுந்தன. 760 அவனுடைய சுவர்க்கத்து மனைவியை அவர்கள் அதிசயத்துடன்
நோக்கி
பிரமிப்பில் வணங்கினர். வீரர்களின் மகள்களும் பெருமைபெற்ற
குடும்பங்களில் மணம்செய்துகொண்டவருமான இளம் பெண்கள்
இனிய முகம்கொள்ளா மகிழ்ச்சிச் சிரிப்புடன், வந்து
மகிழ்ச்சியோடணைத்து முத்தமிட்டு அவளது
புன்னகை தவழும் வாயினால் வசீகரிக்கப்பட்டு, உரக்க
அவளழகைப் புகழ்ந்தனர். பின் மலர்களால் அவளுடைய மென்மையான
அழிவற்ற கரங்களை அலங்கரித்தனர், கோட்டைக் கதவுகளினூடே,
பெரும் விற்களை வளைப்பதுபோலும், வெகுதூரம் மின்னும் 770
உலோகக் கத்திகளை ஓங்கியவண்ணமும் மணப்பெண்ணைக்
கைதிபோல
அவளை ஒரு வியூகமாக, பளபளக்கும் கத்திகளுடன்
பழம் வீரர்களின் முறையில் அழைத்துச் சென்றனர்.
அவர்கள் எக்காளங்களின் முழக்கத்துடனும் பேராரவாரத்துடனும்
மகிழ்ச்சியுடன் கடவுள்களின் குழந்தையான அவளை அவளுடைய
பூமியிலான வீட்டிற்கு அழைத்து வந்தனர்; உறுதியான கதவுகளின் வழியாக
அவளைத் தூக்கியும், பூமியின் தரைமீது தளரவும் பிடித்து,
அவளுடைய சுவர்க்க ஆடைகள் பளபளக்கும் அங்கங்களிலிருந்தும்
வழுக்கி விழும்படிக்கு; பின்பு அவர்கள் அவளுடைய எல்லையற்ற
இனிய மென்மையான உடலைக் கவ்வும்படி மனிதர்களின் ஆடைகளை
அணிவித்தனர். 780
தலைமயிரை மூடி மனைவியர் அணியும் முக்காடு போடப்பட்டது.
இவ்வாறு உலகத்தின் ஒருமித்த அன்பும் ஒரு மனிதனின் வீட்டில்
சிறையிடப்பட்டது. ஓ, மிக அதிர்ஷ்டசாலியான இறக்கக்கூடிய
மனிதனே, யார் இவ்வளவு மரியாதைக்குரிய சந்தோஷங்களுடன்
எங்களது சிறிய சந்தோஷமான மனித வலிகளையும் கலந்து
அனுபவிப்பவனோ
ஒரு அழகிய தெய்வப்பெண்ணை அவளுடைய ஆகாயத்தினின்றும்
வென்றெடுத்து
அன்பான சாதாரண விஷயங்களுக்கும், இனிய பணிகளுக்கும்
வீட்டுவேலைகளுக்கும் அழகுறப் பழக்கி, அற்பமான தினசரிச்
சொற்களுக்கும், கருணையுடனான முத்தங்களுக்கும்
அருமை மனையாள், இல்லம் என்பதன் பொருள் உணர்த்தி! 790
பூமியில் மனிதவடிவில் பொன்னிற ஊர்வசி வாழ்ந்தாள்,
புரூரவஸுக்காக புகழ்மிகும் குழவிகளாக ஒரு இனத்தைப்
பெற்றெடுத்தாள், ஒவ்வொருவனும் ஒரு ஒளிவீசும் கடவுளாக.
அந்தப் புகழ்வாய்ந்த, எளிய பழம் வாழ்க்கையை அவள் விரும்பினாள்,
அதன் பளிங்கு எல்லைக்கோடுகளுடன், அழுத்தமான சந்தோஷங்கள்,
ஆத்மாவைச் சுற்றிப் படரும்
தெளிந்த காற்று இவற்றை நேசித்தாள், ரோஜாநிற மாலைகளைத் தொடுத்தாள்.
புனிதமான நகரம் ஒரு அரிய வாழ்க்கையைத் தனக்குள்
உணர்ந்தது; புகழ்வாய்ந்த கவிஞர்கள் எரியும் புத்துணர்வை
சுவாசித்தனர்; கலைஞர்கள் பெரும் அளவற்ற கருத்துக்களைப்
போற்றி ஊக்குவித்தனர்; 800
எண்ணற்ற சாதனையாளர்கள் ஒருவரையொருவர் விஞ்சியபடி
வலிய வெற்றிகரமான போர்களிலிருந்து கரிய முரட்டுத்தனமான
எல்லைகளிலிருந்து திரும்பவரவும், வயல்களினூடே திடீரெனச்
செல்லவும்
பொலிவுள்ள, தவசிகள் தங்கள் ஆத்மாக்களில் இறைவனை உணர்ந்தனர்.
புரூரவஸின் நகரத்திலிருந்து
பெருத்த செல்வாக்குப் பரவியது; சிந்துநதியும் கங்கையும்
அவற்றிற்கிடைப்பட்ட பொன்விளையும் பிரதேசங்களும் அவர்களுடன்
வளர்ச்சியடைந்து ஒரு கச்சிதமான உத்வேகம் புலப்பட்டது.
ஏழாண்டுகள் பூமி ஊர்வசியைக் கொண்டாடியது.
அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தில் பெரிய கடவுள்கள் 810
கடினமான துரதிர்ஷ்டத்தில் வாழ்ந்தனர்,
அவர்களுடைய விவரிக்கவியலாத பரவசமும், உற்சாகமும்
பழம் அமைதியினடியே இருந்தது. அதனால், நீண்டகாலம்
பொறுக்கமுடியாமல்
அவர்கள் ப்ரம்மாண்டமான பளிங்கு ஆலோசனைக் கூடத்தில்கூடி கூறினர்,
மகிழ்ச்சி பொருந்திய அவள் மிகவும் நேசிக்கும் சகோதரியை
“மேனகா!” என்றழைத்து “எவ்வளவு காலம் ஒரு மனிதன்
சுவர்க்கத்தை அதன் பூரணமான பேரானந்தத்திலிருந்து பிரித்து
வைக்க முடியும்?
கீழேசென்று அவளைத் திரும்ப அழைத்து வா, நமது
ஒளிபொருந்தியவளைத் திரும்ப
நமது வெளிச்சமான கூடங்களை நாம் திரும்பவும் நேசிக்கலாம்.”
இதை கேட்ட அவள் தனது சூட்சுமமான ஆடையில் சென்றாள் 820
தனக்குள் முணுமுணுத்த வண்ணம், திவ்யமான கதவுகளை நோக்கி,
உலகத்தினுள் நோக்கினாள், அங்கு தூரத்தே கண்டாள்
பெரும் கல்போன்ற இளையின் பெருநகரை
சிறிதாகக் கண்ட தூரத்து பூமியில் சூரிய ஒளியில் மூழ்கியபடி.
சுவர்க்கத்தின் சிகரங்களினின்றும் அந்த சமுத்திரத்தின் மகள்
விரைந்து சென்றாள், மூச்சிரைக்க ஒரு மாலையில்
புரூரவஸின் நகருக்கு வந்தாள்,
அவள் கடந்துசென்று நிற்கும்வரை காற்று அவள்பின்பு வெகுதூரம்
வேகமாக வீசிட.
அவள் புரூரவஸில் அரண்மனைமீது
நிழலென நின்றாள். உள்ளே விளக்குகள் இன்னும் இருந்தன; 830
இளவரசர்கள் அசையாமல் அமர்ந்திருக்க இளம் கவிஞர்கள்
யாழிசைத்து ஊர்வசியின் பிரதாபங்களையும்
பலவானான புரூரவஸையும் பற்றிப் பாடிட, ஊர்வசி
மென்மையான அழகான ஆத்மா, பொன்னிறக் கைகால்கள்
கொண்டவள், கன்னியின் மகனான பலம்வாய்ந்த புரூரவஸ்.
“ஓ புரூரவஸுக்காக பூமி சுவர்க்கமாகியது!
ஓ சுவர்க்கம் இனிய ஊர்வசி இல்லாமல் பூமிக்கு இழந்தது!
“களிப்படைவாய், சொந்தம்கொண்டாடி, ஓ புரூரவஸ்!
சந்தோஷம் அடைவாய் சொந்தம் கொண்டாடப்பட்டு, ஓ ஊர்வசி!
“தியாகத்தின் பெற்றோர்களை நன்கு காண்பீர்! 840
அவர்கள் சந்தித்தபோது, இருவரும் இணைந்து விரைந்திட
அவர்கள் கரங்களில் அழகான நெருப்பு பிறந்தது.
“பூமியுடையவும் வானத்தினுடையவும் குழந்தைகளைக் காண்பீர்!
அவர்கள் சந்தித்தனர், காதல் கொண்டனர், ஓ பின் அவர்கள் இணைந்தனர்,
அந்த இணைப்பிலிருந்து அழகானதொரு இருப்பு வளர்ந்தது.
“ஒரு புனிதக் கன்னியின் மகனென உன்னை நாங்கள் அறிகிறோம்
தந்தையின்றிப் பிறந்தவனே, புரூரவஸ்,
அன்னையில்லாது உதித்த அழகான ஊர்வசியே.
“நீவிர் சுவர்க்கத்திலிருந்து தியாகத்தைக் கொண்டு வரவில்லையா,
தணிக்கவியலாத, தூண்டவியலாத நெருப்பு, புரூரவஸ்? 850
நீர் ஆனந்தமான ஊர்வசியைக் கொண்டு வரவில்லையா?
“தியாகத்தீயானது உயரவே எரியும்:
தாங்கள் தொலைத்த சுவர்க்கங்களை அவை இயற்கையாகவே விரும்பும்.
அவற்றின் உச்சியானது மனிதனின் ஒரு வழிபாட்டினால்
கனமாக்கப்பட்டுள்ளது.
“அக்காதலின் ஆத்மாவும் வானை நோக்கியே எழுகிறது;
பின்பு ஒரு பொறி வருகிறது ஆனால் அது திரும்புவது அபூர்வம்;
அதன் சிறகுகள் ஒரு தீவிரமான ஒரு நெருப்பினால்
அடக்கப்பட்டுள்ளது.
“ஓ அழகிய இணையே, இளஞ்சூடான பூமியில் கொண்டாடுங்கள்,
புரூரவஸைக் கொடுத்த பசிய வலிமைவாய்ந்த பூமியில் களித்திருங்கள்.
“உல்லாசமான பூமியில் மகிழுங்கள், ஓ அழகிய இணயே! 860
ஊர்வசியால் சிவந்திருக்கும் மகிழ்ச்சியான பூமி.
“மின்னல் இருதயத்தை ஒரு இனிய பயத்துடன் தாக்குவதுபோல,
வலிமை மிகுந்த புரூரவஸின் காதலும் அப்படிப்பட்டதே.
“கசக்கப்பட்ட மலரிலிருந்து எழும் இனிய வாசத்தைப் போல,
காயப்பட்ட இதயத்திலிருந்து எழும் அன்பே, ஊர்வசி.”
இவ்வாறெல்லாம் அவர்கள் பாடி உள்ளம் மகிழ்ந்தனர்.
பின் இளவரசர்கள்
எழுந்து நீண்ட வெண்மையான வீதி வழியே சென்றார்கள்,
அவரவர் வீடுகளுக்கு. விரைவில் எல்லா சப்தங்களும் ஓய்ந்தன;
சுவர்க்கமும் சில பிரகாசமான விண்மீன்களும் உலகை
வசப்படுத்திக்கொண்டன.
ஆனால் ஒரு சப்தமற்ற மங்கலான இடத்தில் மேற்கில் 870
இனிய உணர்ச்சிகள் ததும்பும் பூமியில் அந்தக் கடைசி இரவில்,
அந்தப் பெண் தெய்வம் தனது மனிதத் தலைவனுடன் கிடந்தாள்.
அவர்கள்மீது வெற்றிகரமான காதலில் பொழிந்தது
அவனுடைய கற்களைத் துளைக்கும் அம்புகள், மலரம்புகள் அன்று
நமது குறுகிய அவியும் நெருப்புப்போல,- நிர்வாணமாகவும் பெரிதாகவும்
சுவர்க்கத்தையும் நிரந்தரமான பழங்காதலையும் போன்று.
தந்திரமிக்க ஒளிபொருந்திய கந்தர்வர்கள் ஒருமுறை ஊர்வசிக்கு
அளித்த இரண்டு ஆடுகள் அருகிருக்க அவர்களுடைய சிறந்த
படுக்கையில் அவர்கள் கிடந்தனர்; அவை எப்போதும் அவளுடன்
வைத்துப் போற்றப்பட்டன; தன் குழந்தைகளின் பிஞ்சு முகங்களைக்கூட 880
அவள் இந்த சுவர்க்கத்துப் பிராணிகளைவிட நேசிக்கவில்லை:
இவை மட்டுமே
அவளுடைய மறந்துபோன ஆகாயத்தின் மிச்சமாக எஞ்சியிருந்தன.
காதலின் தீவிரமான அம்புகளின்கீழ் அவர்கள் கிடந்தனர்,
புரூரவஸின் வலுவான கரங்களால் அந்த ஆசைக்கரங்கள்
மீண்டும் ஒருமுறை தழுவப்பட்டன,
மீண்டும் ஒருமுறை, இல்லாவிடினும் இன்னும் ஒரு தடவை பூமியில்.
உறங்கும் முன்பு ஊர்வசியின் தலைவன்
அவளை இறுக அணைத்துக்கொண்டு அவளுடைய களைத்த
இதழ்களிலிருந்து பெற்றான்
ஒரு முத்தத்தை, அது காதலின் உச்சத்தில் விடைபெறுதலாக
உணரப்படவில்லை. 890
ஆனால் அந்தத் தெளிவற்ற ஊரில் இரவு இன்னும் இருண்டது,
மேகங்கள் படிப்படியாக மேலே வந்தன, அம்மேகங்களினூடே
இடியின்றிப் பெரும் மின்னல்களில் ரகசியமாக வந்தனர்
தந்திர உள்ளம் படைத்த கந்தர்வர்கள் தொலைதூர சுவர்க்கத்தின்
உச்சிகளிலிருந்து. இடி உருண்டு புரண்டது,
சுவர்களினூடே, ஒரு ஆங்காரமான வேகத்துடன் வந்த வெளிச்சத்தில்
அந்த சுவர்க்கத்தின் திருடர்கள் உள்ளே புகுந்து ஆடுகளைக் கவர்ந்தனர்,
அந்த மின்னல் ஒளியிலேயே வேகமாக ஓடினர். நடுநடுங்கியபடி
ஆகாயத்தினின்றும் நாடுகடத்தப்பட்டவள் கண்விழித்து உணர்ந்தாள்
தன் இழப்பை, பரிதாபகரமான அழுகையுடன் 900
தன் தலைவனை நோக்கித் திரும்பினாள். “எழுந்திரு! புரூரவஸ்!”
அழுதாள், “எனது பனி-வெண்மை மகிழ்ச்சியை அவர்கள்
எடுத்துச் செல்கிறார்கள்.”
தன் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டெழுந்த புரூரவஸ்,
அவ்வாறு விழிக்கும்போது நினைவு எங்கோ இருக்க,
இயற்கையில் மனிதனின் கேட்கப்படாத சட்டங்களில்,
அடக்கி வைப்பதைக் கேட்டு, இடத்தை மறந்து
விதியும் அவனது பலமற்ற காலக்கெடுவிலான
எல்லையற்ற ஆனந்தமும்,
அரசனுடைய உயரிய இயற்கைக் குணத்தைத் திரும்ப அடைந்தான். 908
~~~~~~~
இன்று காணும் பகுதி புரூரவஸ் – ஊர்வசியின் காதல் வாழ்வைப் போற்றுகிறது. அதன் விளைவாக ஒரு குழந்தை அவர்களுக்குப் பிறக்கிறது. தாய்மை உணர்வை ஊர்வசி போற்றினாளா எனக் கவிஞர் கூறவில்லை. ஆனால் தன் காதலைப் புரூரவஸுடன் கொண்டாடிய தனிமைப் பிரதேசங்களிலிருந்து நகருக்குத் திரும்ப ஆசைப்படுகிறாள்.

	“இதயமற்ற கானகத்திலும் நீரலைகளிலும் என்ன மகிழ்ச்சி உள்ளது?
	பளிச்சென்ற பூலோகத்துப் பெண்களுடன் உரையாடுவேன்,
	இளம் சிறார்களின் கண்களை முத்தமிடுவேன், என் கால்களுக்கடியில்
	வழுவழுப்பான கற்றரைகளை ஸ்பரிசிப்பேன், சுவர்களின் தடைகளை 
									உணர்வேன்,		
	பூமியின் உணவை உண்பேன்; வனையப்பட்ட பாத்திரங்களிலிருந்து 	
	பானைகளிலிருந்து பருகுவேன், பூமியின் குளிர்ந்த நீரை, அந்த 
									உல்லாசமான
	சுறுசுறுப்பான உலகின் சந்தோஷங்களையும் உழைப்பையும் 
								அறிந்துகொள்வேன்."

என்றெல்லாம் கூறுபவளை நமக்குக் காட்டுகிறார் அரவிந்தர். அவர்களை ஆசையுடனும் அன்புடனும் பேராவலுடனும் பெருமிதத்துடனும் வரவேற்கிறது புரூரவஸின் நகரம் / நாடு. நாடே எப்படி அவர்களைக் கவிதைபாடிக் கொண்டாடியது என மிக அழகாக விவரித்துள்ளார்.

இடையில் இங்கு ‘அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!’ எனும் முரண்தொடையான (oxymoronic) ஒரு பிரயோகத்தை அரவிந்தர் அறிமுகப்படுத்துகிறார். தெய்வங்களுக்குமே அழகின் உச்சமான ஒரு பொருள் – இங்கு ஊர்வசி – அவர்களது பேரதிர்ஷ்டமாகக் கொள்ளப்படுகிறது! அதனால் அவளுடைய பிரிவை, இனிமேலும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் சுவர்க்கத்தில் இல்லாத நாட்கள் துரதிர்ஷ்டம் வாய்ந்தவை என் உணர்கின்றனர் சுவர்க்கவாசிகள்!

வரப்போகும் அந்தக் காதலரைப் பிரிக்கும் நாளைப் பற்றிய கவலை எவருக்குமே இல்லை. கதையின் போக்கை அறிந்த கதாசிரியருக்கே / கவிஞருக்கே அதன் கொடுமையும் அவலமும் தெரிந்திருக்கும். 

நாமுமே திலோத்தமையின் வாயால் முன்பே உரைக்கப்படும் இந்த ஒரு நிபந்தனையை கதைப்போக்கில் மறந்திருக்கக்கூடும். சமயம் வரும்போது நினைவுபடுத்திக் கொள்வோமே! அச்சமயம் நெருங்கியும் விட்டது!

ஒரு சப்தமற்ற மங்கலான இடத்தில் மேற்கில்

இனிய உணர்ச்சிகள் ததும்பும் பூமியில் அந்தக் கடைசி இரவில்,

அந்தப் பெண் தெய்வம் தனது மனிதத் தலைவனுடன் கிடந்தாள்.’

அவலம் ஊடாடும் சொற்கள்.

           ‘சுவர்க்கத்தின் பூரணமான பேரானந்தம்’ என அறியப்படுபவள் ஊர்வசி. பெண்மையின் அழகும் நளினமும் மட்டுமே ஆண்கள் இருக்கும் உலகையும் அதீதமான பேரானந்தத்தில் ஆழ்த்துகிறது போலும்!

           அவளைத் திரும்ப அழைத்துவர மேனகை அனுப்பப்படுகிறாள். தந்திரத்துடன் அவளுக்கு இரண்டு குட்டி ஆடுகள் அவள் பூமிக்கு வரும்போதே அளிக்கப்பட்டுள்ளன. தனது கடந்தகாலத்தின், சுவர்க்கத்தின் நினைவாக அவளும் அவற்றை எப்போதும் தன்னருகிலேயே வைத்திருக்கிறாள். தன்னுடைய குழந்தைகளைவிட அவற்றை அவள் நேசித்தாள் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

           ‘தன் குழந்தைகளின் பிஞ்சு முகங்களைக்கூட

           அவள் இந்த சுவர்க்கத்துப் பிராணிகளைவிட நேசிக்கவில்லை: 

இவை மட்டுமே

           அவளுடைய மறந்துபோன ஆகாயத்தின் மிச்சமாக எஞ்சியிருந்தன.’

இடி மின்னல்களூடே ரகசியமாக வந்த கந்தர்வர்கள் அந்த ஆட்டுக்குட்டிகளைக் கவர்ந்தோடுகின்றனர். இதனை உறக்கத்திலிருந்த ஊர்வசி உணர்ந்து விழித்தெழுகிறாள். புரூரவஸை எழுப்பி அவற்றைத் திரும்பக் கொண்டுவரும்படி அழுகிறாள்.

காதலியின் கண்ணீரல்லவா? உடனே அவன் வீறுகொண்டெழுகிறான்.

இங்கு நாமும் இடைவெளி விடலாமா?

(தொடரும்)

Series Navigation<< இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்தனிமையின் பிடியில் புரூரவஸ் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.