- அதிரியன் நினைவுகள்-1
- அதிரியன் நினைவுகள்-2
- அதிரியன் நினைவுகள் -3
- அதிரியன் நினைவுகள் – 4
- அதிரியன் நினைவுகள் – 5
- அதிரியன் நினைவுகள் – 6
- அதிரியன் நினைவுகள் – 7
- அதிரியன் நினைவுகள் – 8
- அதிரியன் நினைவுகள் – 9
- அதிரியன் நினைவுகள் – 10
- அதிரியன் நினைவுகள் – 11
- அதிரியன் நினைவுகள் – 12
- அதிரியன் நினைவுகள் – 13
- அதிரியன் நினைவுகள் -14
- அதிரியன் நினைவுகள் -15
- அதிரியன் நினைவுகள் – 16
- அதிரியன் நினைவுகள் -17
- அதிரியன் நினைவுகள் -18
- அதிரியன் நினைவுகள் -19
- அதிரியன் நினைவுகள் -20
- அதிரியன் நினைவுகள் -21
- அதிரியன் நினைவுகள் -22
தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

பயணங்களின்போது நான் தங்கும் வில்லாக்களை எனது கல்லறைகளென்றே சொல்லவேண்டும். இறுதியாக நான் கழித்த நாடோடிகளுக்குரிய குடில் சலவைக்கல்லால் ஆனது, ஆசிய ராஜகுமாரிகள் தங்கள் வழிப்பயணத்தின்போது தங்க நேரும் குடில்களையும் தனிவீடுகளையும் அது ஒத்திருந்தது. வடிவத்தைப் பொறுத்தவரை எனது ரசனைக்கு உகந்தவை அனைத்தையும் முயற்சித்தபின், வண்ண உலகிற்குள் பிரவேசித்தேன்: சிவப்பு, பச்சை, நீலம் மூவண்ணங்களும் கலந்த ஜாஸ்பர் (jasper); ஆழ்கடல் நீரையொத்த பச்சைவண்ணம் ; திரட்சியான தசையின் நிறத்தையொத்த போர்ஃபிரி(porphyry) ; பசால்ட், கரிய ஒப்சிடியன்(obsidien) என அனைத்தையும் பயன்படுத்தியுள்ளேன். அலங்காரச்சீலைகளில் சிக்கலான பின்னல்வேலைப்பாடுகள் சேர்க்கப்பட்டதோடு, சுவர்களுக்கும், நடைபாதைத் தளத்திற்கும் வழவழப்பான வண்ணக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. வெண்ணிறம், கரியநிறம் மற்றும் பொன்னிறத்தில் அமைந்த அதுபோன்ற கற்களை வேறெங்கும் கண்டிருக்க சாத்தியமில்லை. தவிர ஒவ்வொரு கல்லுமே விருப்பத்தின்பேரிலும், நினைவுகூறும்வகையிலும், ஒரு சில தருணங்களில் சவாலாகவும் எடுத்துக்கொண்டு தேர்வுசெய்யப்பட்டவை, அதன் கட்டமைப்பு ஒவ்வொன்றும் கனவொன்றின் ஆவணம்.
ப்ளோடினோபோலிஸ்(Plotinopolis), அட்ரியானோபில்(Andrinople), ஆன்டினோ(Antinoé), அதிரியனோதெரஸ்(Hadrianothères) இயன்றவரை இவை போன்ற மனித தேனீக் கூடுகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறேன். குழாய்ப் பொருத்துநர் மற்றும் கொத்தனார், பொறியாளர் மற்றும் கட்டிடக் கலைஞர் ஆகியோர் இந்நகரங்களின் பிறப்பை முன்னெடுத்துச் செல்கிறவர்கள்; நிலத்தடி நீர் இருப்பைக் கணித்துச் சொல்கிறவர்களின் சேவையும் தேவைப்படுவதுண்டு. காடுகளும், பாலைவனமும், தரிசு சமவெளியும் பாதிக்கு மேல் ஆதிக்கம் செலுத்தும் உலகில் கற்பாளமிட்ட ஒரு வீதி, ஏதாவதொரு கடவுளுக்குக் கோயில், பொதுக் குளியல் மற்றும் கழிப்பறைகள், உரோம் நகரச் செய்திகளை தமது வாடிக்கையாளர்களிடம் விவாதிதித்துகொண்டே முடிவெட்டும் தொழிலாளியின் ஒரு கடை, பணியாரக் கடையொன்று, காலணிகள் விற்பனையாளர் ஒருவர், ஒரு புத்தக விற்பனையாளர், மருத்துவர் ஒருவரின் தொழில் அடையாளப் பலகை, டெரன்ஸ் (Terence) எழுதிய நாடகங்களை அவ்வப்போது அரங்கேற்றும் மண்டபம் என்றிருக்குமானால், உண்மையில் அவை கண்களுக்கு மிகப்பெரிய விருந்து. நம்முடைய நகரங்களின் சீரான தன்மையைப் பற்றி இணக்கமற்ற மனிதர்கள் புலம்பிக்கொண்டிருப்பதுண்டு, உதாரணமாக எல்லா இடங்களிலும் பேரரசரின் ஒரே மாதிரியான சிலை, ஒன்றுபோலவே இருக்கும் நீர்க் குழாய்கள் அவர்கள் காணும் குறைபாடுகள். இப்பிரச்சனையில் தவறு அவர்களுடையது: பார்க்க ஒரே மாதிரியாக இருப்பினும் நீம் (Nîmes) நகரின் அழகும் ஆர்ல் (Arles) நகரின் அழகும் ஒன்றல்ல. சீரான தன்மையுடன் கூடிய இவ்வாறான வேறுபாடுகள் மூன்று கண்டங்களிலும் உள்ளன, ஒரு பயணிக்கு அவர் கடக்கிற மைல்கற்களில் அதுவுமொன்று; இருந்தபோதிலும், மிக மோசமானவை எனக்கருதக்கூடிய நகரங்கள்கூட தமக்கென்றுள்ள பெருமைகளைக்கொண்டு பயணிகளாக வருகிற நமக்கு விடுதி, முகாம், இடர்காப்பிடமென்கிற உத்தரவாதத்தை அவை தரும். நகரமென்பது ஓர் அமைப்பு, மனிதர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு வெளி. நம்மில் பலர் நினைப்பதுபோல சலிப்பூட்டுகிற கட்டுமானம் என்கிறபோதிலும் அதொரு தேன்அடை, உறவுக்கும் பரிமாற்றத்திற்குமான சாவடி, விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்கவும், அங்குள்ள தோரணவாயில் ஓவியங்களை பிரமிப்புடன் பார்க்கவும் களம் அமைத்துத் தருமிடம்.
எனது நகரங்கள் என்பவை நான் எதிர்கொண்ட பிரச்சனைகளின் குழந்தைகள். அவற்றை இருவகைப்படுத்தலாம்: சொந்தக்களத்தில் நான் சந்தித்தவை முதலாவது, மாமன்னர் ஒருவருக்குரிய திட்டங்களும் உபாயங்களுமாக எனது மனிதவாழ்க்கையில் குறுக்கிட்டவை இரண்டாவது. திரேசு (Thrace) தீபகற்ப பகுதியில் விவசாயப் பொருட்களை விற்பதற்குச் சந்தையாகவும், மன்னர் திராயான் மனைவியும் அரசியுமான புளோட்டினா நினைவாகவும் உருவானதே ப்ளோட்டினோபோலிஸ் நகரம். அதிரியானோதெரெஸ் நகரமோ, ஆசியாமைனர் வனவாசிகளின் பண்டகசாலையாக உருவானது, இருந்தும் காட்டுப்பறவைகள் இருக்க அட்டிஸ் (Attys) மலை அடிவாரத்தில் ஒழுங்கின்றி துண்டாடப்பட்ட மரங்களைக்கொண்டு உருவான குடியிருப்பு, ஒவ்வொருநாளும் காலையில் நீராட உதவும் நுரைகளைச் சூடிய நீரோடை என்றிருந்த இந்நகரம் எனக்கு முதலில் ஒரு கோடைக்கால குடியிருப்பு. டொடோனா ஆலயத்திற்கு ஒருமுறை சென்றிருந்தேன், அதன்பிறகு எபிரஸ் பிரதேச அட்ரியானோபில் ஒரு வறிய மாகாணத்திற்குள் திரும்பக் கட்டமைக்கப்பட்ட ஒரு நகர்ப்புற மையம். அட்ரியானோபில் நகரம் ஒரு விவசாய மற்றும் இராணுவ நகரம், நாகரீகமற்ற மனிதர்கள் வாழும் பிரதேசமொன்றை எல்லையாகக் கொண்டது, இந்நகரின் மக்கள் சர்மேதிய யுத்தத்தில் பங்கேற்ற முன்னாள் இராணுவவீரர்கள். தனிப்பட்டவகையில் இவர்கள் ஒவ்வொருவருடைய பலத்தையும் அறிவேன், பலவீனத்தையும் அறிவேன். அன்றியும் அவர்களின் பெயர்கள், பணியாற்றிய வருடங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் போரிலுற்ற காயங்க்ள் ஆகிய மொத்த விவரங்களையும் தனிப்பட்ட முறையில் தெரிந்துவைத்திருந்தேன். ஆன்டினோபோலிஸ், துரதிர்ஷ்ட தளத்தில் பிறந்த விலைமதிப்பற்ற ஒரு நகரம், நதி மற்றும் கொடும்பாறைகளுக்கிடையில் அமைந்த ஒரு குறுகிய வறண்டபூமி என்கிறபோதும், இந்தியாவுடன் வர்த்தகம், நதிப் போக்குவரத்து, கிரேக்கபெருநகர ஞானத்தின் கருணை ஆகியவற்றைக் கொண்டு அதை மேலும் வளப்படுத்த விரும்பினேன். நான் மீண்டும் பார்க்க விரும்பாத இடமென ஒன்று இப்பூமியில் இல்லை, அவற்றுள் எனது அக்கறையைக் கூடுதலாக பெற்றவையும் அதிகமில்லை. இந் நகரம் தூண்கள் நிறைந்த ஒரு நிலைபேறுடைய வளாகம். இங்குள்ள ஆலய நுழைவாயில், வளைவுகளில் உள்ள சிலைகள் ஆகியவற்றைக் குறித்து அதன் ஆளுநரான ஃபிடஸ் அக்விலாவுடன்(Fidus Aquila) நான் செய்திகளைப் பரிமாறிக்கொண்டதுண்டு. அதன் நகர்ப்புற உட்கோட்டங்கள் மற்றும் கோட்டங்களின் பெயர்களையும், வெளிப்படையான மற்றும் இரகசிய இலச்சினைகளையும் நான் தெரிவு செய்திருக்கிறேன், இவைகளெல்லாம் இன்னமும் எனது நினைவுகளில் வரிசையாக உள்ளன. கொரிந்து(Corinth) வகை தூண்களின் வரிசைகளையும் அதற்கிணையாக தகுந்த இடைவெளியில் நதிக்கரையோரம் பனைமரங்களின் ஒழுங்கு வரிசைக்கும் உரிய திட்டத்தை வரைந்துள்ளேன். கிரேக்க நாடக அரங்கிலிருந்து கல்லறைக்குச் செல்லும் போர்வெற்றியை நினைவுகூரும் பெருவழிச் சாலை ஒன்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இணையான வீதிகளும் குறுக்கிடும், முடிந்தவரை ஒழுங்குடன் போடப்பட்ட இந்த நாற்கரச் சாலையை சிந்தனையில் ஆழ்ந்தவாறு ஆயிரம்முறைகள் கடந்திருப்பேன்.
நம்முடைய இராச்சியமெங்கும் ஏராளமாகச் சிலைகள், போதாதற்கு இரம்மியமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்களும் மிதமிஞ்சி இருக்கின்றன. ஆனால் இந்த மிகுதியானது உண்மையில் ஒருவித மாயை. காரணம் இவற்றில்பல, பத்துபன்னிரண்டு உன்னதபடைப்புகளின் நகல்கள், புதியவற்றை படைப்பதற்குரிய ஆற்றலின்றி திரும்பத்திரும்ப ஓயாது மீளுருவாக்கம் செய்யப்பட்டவை. ஏன் நானும்கூட என்னுடைய ஹெர்மாஃப்ரோடைட் (Hermophrodite) மற்றும் சென்டார்(Centaur) வில்லாக்களில் நியோபைட்(Niobide) வீனஸ் சிலைகளை முன்மாதிரியாகக் கொண்டு அமைத்துள்ளேன். இதுபோன்ற வடிவ நாதங்களிடையேதான் முடிந்தவரை நானும் வாழ விரும்பினேன். இறந்தகால அனுபவங்களைத் திரும்பப்பெற என்னையும் பிறரையும் உற்சாகப்படுத்துவதில் எனக்கு எப்போதுமே ஆர்வம், அதாவது இழந்துள்ள கடந்த கால நுண்ணறிவையும் அதன் உட்கிடக்கைகளையும் ஒருங்கிணைத்த நம்முடைய தொல்லியல் ஞானத்தை மீண்டும் சொந்தமாக்கிக் கொள்வதில் எனக்கு விருப்பம். இவ்வகையில் நானும் சில மாற்றங்களை முயற்சித்தேன் உதாரணமாக வெள்ளைப் பளிங்குக்கல்லில் இதுநாள் வரை தோலுரித்ததுபோல செதுக்கப்படிருந்த மார்சியாஸ்(Marcias) சிலையை சிவப்பு பளிங்குக்கல்லில் நிறுவினேன், ஒருவகையில் இம்முயற்சி ஓவிய உலகிற்குள் பிரவேசித்தல், அதுபோல பாரோஸ் தீவு(Paros) வெளிறிய சலவைக்கல் உருவங்களில் எகிப்திய சிலைகளில் காணும் கரும்புள்ளிகளைச் சேர்த்து, வணங்கவேண்டிய வடிவங்களை மருட்சிக்குரிய வடிவங்களாக மாற்றுவதும் என்னால் நடந்துள்ளது. நம்முடைய கலைகள் முழுமை அடைந்தவை, குறைபாடற்றவை, செய்து முடிக்கப்பட்ட ஒருபணி, எனினும் அதன் பரிபூரணம் நிர்மலமான ஒரு குரலைப்போலவே மாற்றத்திற்கு உட்படக்கூடியது. இதற்குரிய தீர்வை அணுகுவதோ அல்லது விலகிச் செல்வதோ இரண்டிலும் ஒரு நிரந்தரத்தைக் கட்டிக்காப்பது; முடிவெடுத்தபின் அதன் எல்லைவரை பயணிப்பது அல்லது எல்லையை மீறுவது; நேர்த்திமிக்க இக்கலைக்கோளின் கீழ் எண்ணற்ற புதிய கட்டுமானங்களைக் கொண்டுவருவது அனைத்துமே சாதுர்யமான இவ்விளையாட்டைக் கையிலெடுக்கும் நம்மைப் பொறுத்தது.
ஒருபுறம் சிற்பம் மற்றும் கட்டிடக் கலைஞரான ஸ்கோபாசை (Scopas) எவ்வித நிர்ப்பந்தமுமின்றி புத்திசாலித்தனமாகப் பின்பற்றவும், மறுபுறம் சிற்பக் கலைஞரான பிராக்சிட்டெலஸுடன்(Praxiteles) விரும்பி முரண்படவும், நமக்குப் பின்புலத்தில் ஆயிரமாயிரம் ஒப்பீட்டுக் காரணிகள் உள்ளன. காட்டுமிராண்டித்தனமான கலைகளுடன் எனக்கேற்பட்ட பரிச்சயத்தினால் தெரியவந்த உண்மை, ஒவ்வொரு இனமும் ஒருசில விஷயங்களில் வரைமுறைக்கு உட்பட்டவை என்கிற செய்தி, அதுபோல சாத்தியமான வழிமுறைகளில் சிலவற்றிலும் இதே நிலமைதான்; தவிர சகாப்தங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு இனத்திற்குமுள்ள சாத்தியமான வழிமுறைகளுக்குள் சிலவற்றை மட்டுமே பிரித்த்தெடுத்துத் தேர்வுசெய்கிறது. எகிப்தில் பிரம்மாண்டமான வடிவில் கடவுள்கள் மற்றும் அரசர்கள் சிலைகளை கண்டிருக்கிறேன்; அதுபோல, சர்மேதியர் கைதிகள் காப்புகளில் காண நேர்ந்த பாய்ச்சலிடும் குதிரைகளும், ஒன்றையொன்று விழுங்குவதுபோல இருக்கும் பாம்புகளும் ஒன்றுபோலவே இருந்தன. ஆனால் நமது கலையிலோ (இங்கே நான் குறிப்பிடுவது கிரேக்கர்களுடையதை) மனிதர்களோடு பின்னிப் பிணைந்தது. அசைவற்ற உடலொன்றில் பொதிந்துள்ள வலிமையையும் இயங்கு திறனையும் நம்மால் மட்டுமே காட்ட முடிந்தது; நாம் மட்டுமே மென்மையானதொரு நெற்றியை ஒரு புத்திசாலித்தனமான சிந்தனைக்கு சமதையாக ஆக்கியுள்ளோம். மனதால் நமது சிற்பிகளை ஒத்தவன் என்பதால் மனித உயிர்கள் என்னைத் திருப்திப்படுத்துகின்றன; நித்யம் உடபட அனைத்தையும் இம்மனிதர்களிடம் காண்கிறேன. அவ்வாறே ஒட்டுமொத்தக் காடுகளையும் எனக்கு நினைவூட்டும் உருவம் குதிரைமனிதனான சென்டார்Centaur); கடற் தேவதையின் தாவணிபோன்ற மேலாடை, காற்றை உள்வாங்கி புடைப்பதைக் காண்கிறபோது, புயற்காற்று கூட அந்த அளவிற்கு சுவாசிப்பதில்லை எனத் தோன்றும். இயற்கைப் பொருள்கள் மற்றும் புனித சின்னங்களின் மதிப்பீடுகளை என்னைப் பொறுத்தவரை மனிதர்களிடமிருந்து பிரித்துப் பார்த்து நாம் உணர்வதில்லை, நம்மால் கலைவடிவில் கையாளப்பட்டு பிறப்பு மற்றும் இறப்பின் குறியீடாக உள்ள பைன் மரத்தின் கூம்புவடிவக் காய்; நீருற்றருகே சிறுதுயிலை நினைவூட்டும் வகையில் வடிக்கப்பட்ட புறாக்களுடன் கூடிய குடுவை ; தனக்குப் பிரியமானவர்களை விண்ணுலகிற்கு அழைத்துச் செல்லும் கிறிப்பன்(Griffon)1 ஆகியவற்றை என்னால் இதற்கு உதாரணம் காட்டமுடியும்.
மனிதரை வடிக்கிற சிற்பம் அல்லது சித்திரக் கலையில் பெரிதாய் எனக்கு நாட்டமில்லை. ரோமானியர்களாகிய நமது உருத்தோற்ற சிலைகளும் ஓவியங்களும், உள்ளது உள்ளபடி முகச்சுருக்கங்களையும், முகத்தில் பிரத்தியேகமாக இருக்கிற மருக்களையும் காட்டுகிற பிரதிகள் அல்லது வாழ்க்கையில் ஒட்டி உறவாடி இறந்த மறுகணம் மறந்துபோன நபர்களை முன்மாதிரியாகக்கொண்டு வரைந்த ஓவியப்படிகள், இவற்றுக்குள்ள மதிப்பீடென்பது என்றும் இவை நிரந்தம் என்பதன்றி வேறில்லை. மாறாக கிரேக்கர்கள், மனித முகங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் குறித்துக் கவலைப்படுவது குறைவு, அதற்குப் பதிலாக மனிதரின் பரிபூரணத் தன்மையை அவர்கள் விரும்பினார்கள். வடிக்கப்பட்டிருந்த என்னுடைய சொந்தமுகத்தை ஒருகணம் பார்க்க நேர்ந்தது, கருத்திருக்கும் அம்முகம் சலவைக் கல்லின் வெண்மையால் தனது இயல்புத்தன்மையை இழந்திருந்தது, விழிகளிரண்டும் அகலத் திறந்திருந்தன, மெல்லிய ஆனால் சதைப்பற்றுள்ள வாய் கோணியிருந்தது. ஆனால் நான் காணநேர்ந்த இன்னொரு முகத்தின் விஷயத்தில் அக்கறை கொண்டேன். அன்றிலிருந்து உருவத்தோற்றம் சார்ந்த எனது கலை வாழ்க்கையில் அதிக மாற்றம், எதை நான் ஆடம்பரமாக கருதினேனோ அதுவே எனது ஆதாரசக்தியாக மாறியது, அப்படைப்பை எனது வாரிசாகவும் அங்கீகரித்தேன். இத்தோற்றத்தையே உலகின் முன் நிறுத்தினேன்: இன்று எந்தவொரு புகழ்பெற்ற மனிதன் அல்லது ராணியைக் காட்டிலும் கூடுதலாக எங்கும் காணமுடியும். உருத் தோற்றத்தை வடிக்கும் கலையை நேசிக்கத் தொடங்கியபோது எனது ஆசை வடிவமாற்றத்தில் நிகழும் தொடர்ச்சியான அழகியல்களை பதிவு செய்தல்; அதேகலை பின்னர் இழந்த முகத்தைத் திரும்பத்தரும் ஒரு வகையான ஜாலவித்தை செயல்முறையாக மாறியது.
பிறருக்கு அளிக்கும் அன்பின் உண்மையான பரிமாணத்தை வெளிப்படுத்த பிரமாண்டமான உருத் தோற்றங்கள் ஒருவகை வழிமுறை; அளவிற்பெரிய இச்சிற்பங்கள் ஒரு முகத்தை மிக அருகில் சென்று பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும். நீள அகலத்தில் கூடுதலாகவும்; தனித்த தன்மையுடனும்; கொடுங்கனவில் வருகிற காட்சிகளாகவும், தோற்றங்களாகவும்; உறக்கம் கலைந்தபின்னும் நினைவில் நிற்கும். வடிக்கின்ற உருத் தோற்றங்களில் அப்பழுக்கற்ற பரிபூரணத்தை வேண்டினேன்; சுருங்கச் சொல்வதெனில், இருபது வயதில் அகால மரணமடைந்த ஒருவனை அவனுக்கு வேண்டியவர்கள் எந்த அளவில் நேசிப்பார்களோ அந்த அளவில் கடவுளுக்கு நிகரான பரிபூரணம். மூலத்திற்கு நிகராக வடிக்கப்படும் சிற்பமும் சரிநிகராக இருக்கவேண்டுமென்பதும் என் விருப்பம். ஒரு முகத்தில் நன்கறியப்பட்ட ஓழுங்கீனமும் முகத்தின் அழகிற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல, மதிப்ப்புக்குரியதே. அடர்த்தியான புருவத்தையும், உதட்டின் கூடுதல் திரட்சியையும் வடிக்கப்படும் தோற்றத்தில் கொண்டுவர எத்தனைமுறை விவாதித்திருப்போம்…. மரணித்த, அல்லது இனி அழியவிருக்கிற உடலைச் சுமக்கிற சலவைக்கல்லின் நித்யத்திலும், வெண்கல உலோகத்தின் விசுவாசத்திலும் என்னிடத்தில் விரக்தியுடன்கூடிய நம்பிக்கை. அதேவேளையில் வடிக்கப்படும் சிலை இளமைத்தோற்றத்துடனும், மினுமினுப்புடனும், நயத்துடனும் இருக்க சலவைக்கல்லை எண்ணெய் மற்றும் அமிலக் கலவைகொண்டு ஒவ்வொரு நாளும் தேய்ப்பதற்கு வற்புறுத்தினேன். இதொரு தனித்துவமான முகம், அதை நான் எல்லா இடங்களிலும் கண்டேன்: தெய்வ விக்கிரங்கள், ஆண், பெண் என்கிற பேதமின்றி அவற்றுக்குரிய நித்திய பண்புகளோடு, உதாரணத்திற்கு கானகத்தில் உறையும் நெஞ்சுரமிக்க டயானாவில் தொடங்கி மனச்சோர்வடைந்த பாக்குஸ் (Bacchus) வரை, பாலாயிஸ்த்ரா வில் இருக்கும் (Palaestra ) [2] பெண்களோடு நெருக்கமான பலசாலி எர்மெஸ்(Hermès) கடவுள் தொடங்கி, ஒழுங்கற்ற மலரொன்றில் புறங்கையில் தலைவத்து உறங்கும் இரு உடற்கொண்ட கடவுள்வரை அனைவரையும் இம்முகத்தில் ஒன்றிணைத்திருக்கிறேன். சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் இளைஞனொருவன் வீரியமிக்க அதீனாவை (Athéna ) [3] எவ்வளவு ஒத்திருக்கிறான் என்பதை நான் கவனித்திருந்தேன்.
என்னுடைய சிற்பிகள் தங்கள் பணிகளில் தோய்ந்திருக்கையில் ஒருசிலகணங்கள் கவனக்குறைவாக நடந்துகொள்வதுண்டு; அதிலும் கற்றுக்குட்டிகளெனில் வேலைப்பாட்டில் ஆங்காங்கு மெத்தனத்திலும் பகட்டிலும் அவர்கள் வீழ்ந்திருப்பார்கள் ; ஏறக்குறைய சிற்பிகள் மொத்தப் பேருமே பணியின்போது கனவில் மூழ்கியவர்கள். ஓவியங்களும், சிற்பங்களும் உயிரோடுள்ள இளைஞனுக்கும் இருக்கின்றன, குறிப்பாக அவை சாதுவான பதின்வயது சிறுவனின் தீவிரமான காலக்கட்டம், பதினைந்து வயதில் ஆரம்பித்து இருபது வயதுவரையிலான பிரம்மாண்டமான நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றத்தின் பிரதிபலிப்பு. இச்சிலை கோரிந்த் (Corinthe) நகரைச் சேர்ந்த சிற்பியுடையது, தெருமுனையொன்றில் இடுப்பில் கைவைத்துப் பின்புறம்சாய்ந்து பகடை விளையாட்டைப் பார்ப்பதுபோல தம்முடைய சிற்பத்தில் ஒர் இளம்சிறுவனின் ஆர்வக்கேட்டினை வெளிப்படுத்த அவர் அதில் தயங்கவில்லை. அஃப்ரோடிசியாஸ் (Aphrodisie)ஐச் சேர்ந்த பப்பியாஸ், நார்சிசஸ் (narcisse) செடியின் மென்மையும் புத்துணர்ச்சியுமிக்க நிராயுதபாணியாக நிர்வாணத்திற்கும் மேலாக ஓருடலை வரைந்திருந்தார். அரிஸ்ட்டேஸ் (Aristéas) எனது கட்டளையின் பேரில் சிவப்புநிறக் கல்லொன்றில் அதிகாரமும் ஆணவமும் கொண்ட சிறிய தலையைச் செதுக்கினார்…..மரணம் கடந்து சென்ற மூச்சடங்கிய சரீரத்திற்கும் உருவச்சிலைகளும் ஓவியங்களும் இருக்கின்றன. அவற்றில் உயிருக்குச் சொந்தமற்ற, அதனால் எனக்கு அன்னியமாகிப்போன, இரகசியத்தை உள்ளடக்கிய, கல்விகேள்விகளில் சிறந்த, உதடுகளைக் கொண்ட உன்னதமுகங்களும் கலந்திருப்பதுண்டு. பிறகொரு சிறிய சிற்பமொன்றில் கேரியன் அந்தோனியானோஸ் (Carien Antonianos) துன்பச்சாயலும் தெய்வீகமும் கலந்த சாயலுடன் முரட்டுப்பட்டாடை அணிந்த திராட்சைப் பறிப்பாளர் மற்றும் காலணி ஏதுமற்ற காலொன்றில் நட்புடன் தலையை அணைத்துக்கொண்டிருக்கும் நாயையையும் படைத்திருப்பார். ஒரே பாறையில் மோதும் இரண்டு அலைகளைப் போல இன்பமும் துன்பமும் மோதிக்கொள்கிற முகத்திற்கென வடிவமைத்த சகிக்கவொண்ணாத இந்த முகமூடி, ஸிரைனைச்(Cyrèn) சேர்ந்த சிற்பி ஒருவரின் கைவண்ணம்.பேரரசின் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட, சிறிய தம்படி அளவிலான அந்தk களிமண் சில்லுகள் டேல்லுஸ் ஸ்டெபிலிட்டா (Tellus Stabilita) என அழைக்கப்படுபவை, அவற்றில் அமைதியான பூவுலகின் மேதை, பழங்களையும் பூக்களையும் கரத்தில் ஏந்தியவாறு படுத்திருக்கும் இளைஞன் என்று பலத் தோற்றங்களுண்டு.
ட்ராஹிட் சுவா கும்க்வே வொலுப்டாஸ் (Trahit sua quemque voluptas- எண்ணம் போல வாழ்வு) : “என் வழி தனி வழி” என்கிற மனிதர் ஒவ்வொருவருக்கும் குறிக்கோளொன்று இருக்கக்கூடும், வேண்டுமெனில் அதனை அந்நபருடைய பேரவா என்றோ, கமுக்கமாக ஒளித்தோ அல்லது தெளிவாக பிறர் அறியட்டுமெனவோ அதைக் கையாள்வதில் நாட்டமோ அவருக்கு இருக்கலாம். எனது இலட்சியமென்பது ‘அழகு‘ என்ற சொல்லில்அடங்கியது. புலன்கள் மற்றும் கண்களின் அனைத்தும் பின்புலத்தில் சாட்சியங்களாக இருப்பினும், இதனை வரையறுப்பது மிகவும் கடினம். உலகின் அழகனைத்திற்கும், நானே பொறுப்பென்கிற என்கிற உணர்வு எனக்குள் இருந்தது. பள்ளிச் சிறுவர்கள் எவற்றைப் பாராயணம் செய்யவேண்டுமோ, நல்ல முறையில் தெளிவாகப் பாடங்களில் அவற்றை ஒப்புவிப்பாரகள்; இல்லத்தரசிகள் அமைதியுடனும், ஆற்றலுடனும் அதேவேளையில் தாய்மைக்குரிய கண்ணியத்துடனும் தங்கள் கடமைகளைச் செய்வார்கள்; கலை மற்றும் விளையாட்டை விரும்பும் இளைஞர்கள் உடற்பயிற்சித் திடலுக்குச் செல்வார்கள்; பழத்தோட்டங்களில் மிக நல்ல பழங்களும், வயல்களில் நல்ல மகசூலும் கிடைக்கும்.ரோமானிய அமைதியின் மகத்துவம் அனைவருக்கும் பரவவேண்டும் என்று நான் விரும்பினேன், கைவீசி நடக்கையில் தன்இருப்பை உணர்த்தி, மாறாக எவ்வுணர்ச்சிக்கும் நம்மை ஆட்படுத்தாத விண்ணுலக இசை போன்றது அந்த அமைதி; மிகவும் எளிய ஒரு மனிதர்கூட ஒரு நாட்டிலிருந்து இன்னொன்றிற்கு, ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு எரிச்சலூட்டும் சம்பிரதாயங்கள் இன்றி, ஆபத்துகள் இன்றி, எல்லா இடங்களிலும் குறைந்தபட்ச நியதிக்கும், நடைமுறை பண்பாட்டிற்கும் உட்பட்டுப் பயணிக்க முடியும்; நம்முடைய படைவீரர்கள் தொடர்ந்து போர்வாகைக்குரிய பிரிக்(Pyrrhic) நடனத்தை ஆடவும் வாய்ப்பிருக்கும், ஆக ஒவ்வொன்றும் வழக்கம்போல இயங்கும் : பணிமனையோ, கோவிலோ எதுவாயினும். நீரைக்கிழித்துக்கொண்டு வியப்பிலாழ்த்தும் நாவாய்களையும், சாலைகளை அடிக்கடி உபயோகிக்கும் சாரட் வண்டிகளையும் காணமுடியும்; நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட உலகில், தத்துவவாதிகளோ, நடனக் கலைஞர்களோ எவராயினும் அவரவர்க்குரிய இடமுண்டு. இந்த எளிய இலட்சிய உலகை மனிதர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் நெருங்கவியலும், அதற்காக அவர்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான், முட்டாள்தனமான, மூர்க்கமான காரியங்களில் வீணடிக்கும் தங்கள் சக்தியில் ஒரு சிறுபங்கை மேற்குறிப்பிட்ட உலகிற்கு அளிக்கவேண்டும். கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு கால்நூற்றாண்டு அத்தகையை நல்வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. இக்காலத்தின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான நிகோமீடியா (Nicomedia)வைச் சேர்ந்த அர்ரியன் (Arrian) என்னிடத்தில் நேர்த்தி மிகுந்த கவிதை வரிகளை நினைவூட்ட விரும்புவார், அதில் முதிய கவிஞர் தெர்பாந்த்ரெ (Terpandre), ஸ்பார்ட்டாவிய இலட்சியமென்று, விண்ணுலக கடவுளான ஜீயுஸ்மகன் லைக்கடெமோன்(Lacedaemon) அப்பழுக்கற்ற வாழ்க்கைமுறையென்று கனவுகாண்கிற, ஆனால் ஒருபோதும் அடைந்திராத இலட்சியத்தை, மூன்று வார்த்தைகளில் வரையறுத்திருப்பார், அவை வலிமை,நீதி, மற்றும் ம்யூஸ்கள்(Muses- இலக்கியம், அறிவியல் மற்றும் கலைகளுக்கான தேவதைகள்). வலிமை அனைத்திற்கும் அடித்தளம், கறாரான ஒழுங்குமுறை, ஒருவகையில் இந்த ஒழுங்குமுறை சார்ந்ததே அழகு, ஒழுங்கின்றி அழகு இல்லை, கோடாமை இல்லாமல் நீதி இல்லை. அனைத்து தரப்ப்பும் சரிசமமான விகிதாச்சாரத்தில் அணுகப்படவேண்டும், எந்தவொன்றுடனும் கூடுதல் சமரசம் கூடாது. வலிமையும் நீதியும் ம்யூஸ்களின் கைகளில் ஒத்திசைந்து ஒலித்த இசைக்கருவி. மனிதகுலத்தின் அழகான உடலுக்கு அவமானங்களெனக் கருதி துன்பங்கள், கொடூரங்கள் தடை செய்யப்பட்டன. எல்லா அக்கிரமங்களும் கோளங்களின் இணக்கத்தில் தவிர்க்கப்பட்ட இசைக் குறிப்புதான்.
ஜெர்மானியாவில் காப்பரண்கள் அல்லது பாசறைகள் புதுப்பிக்கப்படவும் அல்லது நிர்மாணிக்கவும், சாலைகளை ஆக்ரமித்துக்கொண்டிருந்த செடிகொடிகளை அகற்றவும், பழுதுபார்க்கவும் ஏறக்குறைய ஒரு வருடம் அங்கு நான் தங்க வேண்டியிருந்தது; புதிய காப்பரண்களை, எழுபது லீக்குகள் தூரம் ரைன் நதியோரம் கரைநெடுகிலும் அமைத்து நமது எல்லைகளுக்கு வலுவூட்டப்பட்டது. திராட்சைத் தோட்டங்களும், பொங்கிவழிந்தோடும் நதிகளும் பாயும் இந்நாட்டில் பலவும் எனக்கு நம் நாட்டை ஞாபகப்படுத்துபவை. திராயாயான் அரசராகப்போகிறார் என்ற செய்தியைக் கொண்டுவந்த இளம் இராணுவ திரிபூனஸுடைய தடம்; பைன் காடுகளிலிருந்து வெட்டப்பட்ட மரக்கட்டைகளால் உருவாக்கிய எங்கள் கடைசி கோட்டைக்கு அப்பால் எரிச்சலூட்டும் வகையில் தெரிகிற கருத்த அடிவானம்; அகஸ்ட்டஸின் லீஜியன் படைகள் நடத்திய திடீர் தாக்குதல்கள் காரணமாக எங்களுக்கு மூடப்பட்ட அந்த உலகம்; அலைகடலென மரங்கள்; வெள்ளையர் மற்றும் பிற இனப் போர்வீரர்கள் அடங்கிய படையைக் காணநேர்ந்த இடம் அனைத்துமே புதியவை அல்ல. மறுசீரமைப்பு பணி முடிந்தது, பெல்ஜியன் மற்றும் படேவியன் (ஜெர்மன்) சமவெளி நெடுகக்கடந்து ரைன் நதி முகத்துவாரத்தை அடைந்தேன். காற்றால் துவம்சம் செய்யப்பட்ட மணல்மேடுகள், சீழ்க்கையிடும் கோரைகள் என்றிருந்த வடபகுதிக்கேயுரித்தான பூமி; மரத்துண்டு முளைகளை பூமியில் ஊன்றி நிர்மாணித்திருந்த நோவியோமாகஸ்(Noviomagus) துறைமுகத்தில் அடை மண்ணில் கட்டப்பட்ட குடியிருப்புகள், அவற்றையொட்டி நிறுத்தப்பட்ட நாவாய்கள் என்றிருக்க, கூரைகளில் கடற்பறவைகள் உட்கார்ந்திருக்கும், இப்பகுதிகளை நான் விரும்பினேன், ஆனால் இந்த மேகமூட்டமான வானமும், சோபையற்று, ஒழுங்கின்றி கிடக்கும் இந்த நிலப்பகுதியூடாக சேறும் நீருமாக குழம்பிப் பாயும் ஆறுகளும், எந்த கடவுளும் வடிவமைக்க கையிலெடுக்காத இக்கரிசல் மண்ணும், எனது உதவி இராணுவ அதிகாரிகளுக்கு அருவருப்பான இடம்.
கிட்டத்தட்ட தட்டையான சிறியதொரு நாவாய் என்னை பிரிட்டானியா தீவுக்கு அழைத்துச் சென்றது. எந்தக்கடற்கரையிலிருந்து நாங்கள் புறப்பட்டிருந்தோமோ அங்கேயே, பலத்த காற்றின் காரணமாகத் திரும்பத் திரும்ப ஒதுங்க நேரிட்டது: பயணத் தொடக்கம் இப்படிச் சிரமமாக இருக்க நேரிட்டதால் வியப்பிற்குரிய வகையில் வெறுமையாக சிலமணி நேரங்களைக் கழிக்கவேண்டியிருந்தது. சீற்றம்கொண்ட கடலில் இருந்து புறப்படுவதுபோல தோற்றம்தந்த பிரம்மாண்டமான மேகங்கள் மணல்கலந்த காற்றுடன் சுழன்று கரையோரப் படுகையை ஓயாமல் கிளறின. டேசியர்களும், சர்மேத்தியர்களும் முன்பு பின்பற்றிய முறையில் பூமிக்கடவுளைக்குறித்து சமய நோக்கில் சிந்தித்தேன், அவ்வகையில் நான், முதன்முறையாக நம்முடைய நெப்டியூனுக்கும் கூடுதலானதொரு குழப்பத்தில், எல்லையற்ற ஆழிசூழ் உலகமாக நெப்டியூன் ஒன்றைக் கண்டேன். புளூட்டாக்(Plutarque) எழுதிய கடலோடிகளைப் பற்றிய புராணக்கதையில் இருண்ட கடலினை(la Mer Ténébreuse) ஒட்டி அமைந்துள்ள ஒரு தீவு குறித்து பேசுவார். அங்கு பல நூற்றாண்டுகளாக போரில் வென்ற ஒலிம்பியன்கள், தங்களிடம் தோற்ற டைட்டான்களை, தீவுக்குள் நுழையாமலிருக்க தொடர்ந்து சண்டையிட்டதாகத் தெரிவிப்பார். பாறை மற்றும் அலையின் பெரும் கைதிகளாகப் பிடிபட்டிருந்த டைட்டான்கள், உறக்கமற்ற கடலால் ஓயாது தாக்குற்றதோடு அல்லாமல், ஒலிம்பியன் படையினரோடு தொடர்ந்து வல்லடித் தாக்குதல், அது குறித்த வேதனை, நிரந்தரமாக சிலுவையில் அறையப்பட்ட தங்கள் ஆசை என்ற நிலையில் தூக்கமின்றி ஓயாமல் கனவுலகில் வாழ்ந்தவர்கள். ஒருவகையில் உலகின் விளிம்பில் கண்ட இத்தொன்மத்தில் திரும்பவும் எனது தத்துவ கோட்பாடுகளைக் கண்டேன்: ஒவ்வொரு மனிதனும் தனது குறுகிய வாழ்நாளில் சோர்வுறாத நம்பிக்கைக்கும், சாதுர்யமான நம்பிக்கையின்மைக்கும் இடையில்; ஒழுங்கின்மை மற்றும் ஸ்திரத்தன்மை இன்பங்களுக்கிடையில்; டைட்டன் மற்றும் ஒலிம்பியன் இடையில் ஏதாவதொன்றைத் தொடர்ந்து தெரிவுசெய்யவேண்டியக் கட்டாயம். அப்படியொன்றைத் தெரிவு செய்யவும், அத்தெரிவில் வெற்றிபெறவும் இன்றோ நாளையோ தன்னை அதனிடம் ஒப்படைக்கவேண்டும்.
தொடரும்….
————————————————————————————————————————————-
1 கிறிப்பன் (Griffon) கழுகின் தலையும் சிங்கத்தின் உடலையும் கொண்ட ஒரு கற்பனை உயிரினம்.
2. பாலாயிஸ்ட்ரா (Palestra) என்பது மல்யுத்தம் மற்றும் இதர விளையாட்டுகளுக்கான பயிற்சிக் கூடம். அங்கிருந்த. பெண்கள். கிரேக்கத் தொன்மத்தின்படி எர்மஸ்(Hermès) கடவுளோடு தொடர்புடையைவர்கள்.
3. அதீனா (Ahhéna) ஞானம் மற்றும் போர்த் தேவதை