வெந்துயர்க் கோடை

அம்மாவின் லைப்ரெரியை துழாவிக்கொண்டிருந்தேன். நாவலின் பெயர் நினைவில் இல்லை. அதன் முன்னுரையின் முதல் ஒரு பாராதான் எனக்கு வேண்டும் இப்போது. அம்மா வாசித்துத் தள்ளியிருக்கிறாள். எத்தனை புத்தகங்கள். ரஷ்ய இலக்கியம் லத்தீன் அமெரிக்க இலக்கியம் கம்பராமாயணம் புதுமைப்பித்தன் ஜெயகாந்தன்… எல்லாம் பகுக்கப்பட்டு லேபிள் ஒட்டி சரியாக அடுக்கப்பட்டுள்ளது. கவிதைக்கென்று ஒரு தனி ஸெக்ஷன். அந்த சிறு நூல் கண்ணில் பட்டதும் என் தேடலை நிறுத்தினேன். எதையோ தேடுகையில் வேறொன்று கைக்கு சிக்கும் போது அப்பாலிருந்து ஒன்று நம்மைப் பார்த்து நகைக்கிறது. தனிமையின் கீதம் அந்த கவிதை நூலின் தலைப்பு. 

'மலருக்குள் விழுவதுதான்
நமக்கு விதிக்கப்பட்டுள்ளது
அதன் வண்ணங்களின் வழி 
வழுக்கிச் சென்று
நான் விழுந்தது 
பாலையில்

வானிலிருந்து பார்த்தால்
ஒரு பனித்துளி ஒளிர்வது போல்
ஒளிரும் 
என் ஒரு துளிக் கனவு'

மாதவ்ராமின் வரிகள் இவை. கல்லூரி நாட்களில் கவிதைகளாக எழுதித்தள்ளுவான். அது கவிதையா இல்லையா என்பதில் எங்களுக்கு ஐயம் இருந்தாலும் கவிஞரே என்றுதான் அழைத்தோம் மாதவை.  அம்மாதான் படித்துவிட்டு நல்லா எழுதியிருக்கான்டா என்றாள். அவனுக்கு அவன் பிறந்தநாள் பரிசாக நண்பர்கள் நாங்கள் கொடுத்ததுதான் இந்தச் சிறுபுத்தகம். அவன் கவிதைகளை ஒரு சிறு புத்தகமாக்கிக் கொடுத்தோம். அதை வர்ட் ஃபைலாக தொகுத்த போது அந்த ஃபைலின் பெயராக அதன் முதல் வரிகள் அமைந்தது. அதையே தலைப்பாக இட்டோம். அந்தச் சிறு புத்தகத்தை படித்தது நானும் அம்மாவும்தான் – இந்த உலகிலேயே.  

மாதவ் எனக்கு அனுப்பிய ஒரு நீண்ட மெயிலுக்கு (அவன் வாட்ஸப் பயன்படுத்துவதில்லை) பதில் எழுதத்தான் ஒரு நாவலின் முன்னுரையின் முதல் பத்தியை தேடிக்கொண்டிருக்கிறேன். என்றோ படித்தது, இன்னும் நினைவில் உள்ளது. அம்மாவிடம் உள்ள மிகவும் பழைய புத்தகங்களில் ஒன்று அது . அட்டை இல்லாமல் தாள் பழுப்பேறிய புத்தகம். மாதவ்வின் கவிதை புத்தகத்தை கையில் வைத்தபடியே கண் ஓட்டிய போது சிக்கியது. மெல்ல எடுத்து மேஜையில் விரித்து வைத்து அதன் முதல் பத்தியை ஃபோனில் டைப் செய்தேன்.

‘காதல் என்பது மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்பக் காரணங்களே போதும். காதல் வயப்பட்டவர்ளிடையே கூட அந்தக் காதல் வளர்வதற்கும் மேன்மையுறுவதற்கும் அந்தக் காதலோடு சேர்ந்த வேறு குணநலன்களே காரணமாயிருக்கின்றன’

டியர் மாதவ்,

எனக்கு உன்னைப்போல் கடிதம் எழுத வராது. நேரடியாகச் சொல்கிறேன். நான் அறிந்த வரையில் வாழ்க்கை நடைமுறை சார்ந்தது. ஆனால் உன் வாழ்க்கை அப்படியானதாக இல்லை என்பது உறுதி. பணி வீடு உறக்கம் கே.எஃப்.ஸி நெட்ஃப்ளிக்ஸ் யூ ட்யூப் எப்பொழுதாவது ஒரு புத்தகம் அவ்வளவுதான் என் உலகம். அதோடு இசை. இதைவிட்டு ஏதும் எனக்குத் தேவையானதாக இல்லை. என்னால் உன் உலகை புரிந்துகொள்ள முடியவில்லை. காதல், பாடலுக்கும் கவிதைக்குமானது. எத்தனை பாடல் – எந்த மொழியை எடுத்தாலும் காதல் பாடல்கள்தான் அதிகமிருக்கும். மனிதனால் பாடப்பட்டுக்கொண்டே இருக்கிறது காதல். கவிதையாகிக்கொண்டே இருக்கிறது. கவிதையின் உக்கிரத்தை நம் வாழ்க்கை தாங்குமா என்ன? மனதைத் தாள முடியாத உடல்தான் முதுமை கொள்கிறது போலும். மனம் என்ற ஒன்று இல்லையெனில் மரணமேயில்லை போலும். ஆனால் மனம் என்ற ஒன்றில்லாமல் நாம் இல்லை அல்லவா?  ஏன் நீ இப்படி அந்த ஒரே பெண்ணுக்காக வாழ்க்கையையே அழித்துக்கொள்கிறாய் ? 

இவ்விடத்தில் வாழ்க்கை என்பது என்ன என்ற கேள்வி என்னுள் எழவும் அத்துடன் அந்த மெயிலை அனுப்பாமல் ட்ராஃப்டில் இட்டேன். வாழ்க்கை என்பது என்ன? அவளுக்காக அழிவது என்று எதாவது வரியை அவன் எழுதியிருக்கக் கூடும். அவனுடைய கவிதைப் புத்தகத்தை புரட்டினேன்.

‘காதலின் மாபெரும்

மாளிகையின் 

காத்திருப்புக் கூடத்தை

பிரம்மாண்டமாகக் கட்டியது யார்?

ஒரு வாழ்க்கை இங்கே கழிகிறது

என் காலம் இந்த அறையுள் சுழல்கிறது

நண்பன் சொல்கிறான் விரயம் விரயம் என்று

அவனுக்கு எங்கே தெரியப் போகிறது

காத்திருப்பின் சோக லயத்தை

தியானிப்பது பற்றி’

நான் எழுதி அனுப்பாத மெயிலுக்கு பதில் அனுப்பியது போலிருந்தது. ஏதோ ஒன்றின் சமிக்ஞைகளைக் கேட்டபடி அதன் பின் சென்று கொண்டே இருக்கிறான். எது அது அவனை அழைத்துச் செல்வது? அதன் பின் செல்வதுதான் லைஃப்ஸ் மோஸ்ட் எக்ஸைடிங்க் ஜர்னியாக இருக்குமோ? அவன் முகம் எத்தனை எத்தனையாக நினைவுக்கு வருகிறது? 

அம்மா ஒரு முறை சொன்னாள் ‘நறவம் மாந்திய மந்தியைப் போல்னு கம்பர் சொல்றார். அதுதான்டா நினைவுக்கு வருது மாதவ்வ பாத்தா’ என்று. ஆம் மாதவ்ராம் ஒரு காலத்தில் ப்யூர் எக்ஸ்டஸியில் இருந்தான். எப்பொழுதும் இன்பமான ஒன்றை யோசித்து இன்பத்தில் லயித்திருக்கும் முகம். காதலின் தொடக்க நாட்கள் அவை. அப்படி இப்படிச் பேசி ஒரு வழியாக தெர்மல் எஞ்சினியரிங்க் லாப் முடித்து வெளி வந்தபோது காதல் ஒரு வாறாக உறுதிப்பட்டு இரு தரப்பும் ‘ஐ லவ் யூ’ சொல்லும் சடங்கும் நடந்தேறிவிட்டிருந்தது. அன்று என் வீட்டுக்கு அவன் வந்த போது அவன் முகத்தைப் பார்த்து அம்மா சொன்னாள் காதலால் கசிந்துருகிடுவான் போலருக்கே என்று. அன்று அவனிடம் கேட்டேன் எங்க எப்டிடா காதல் துவங்குச்சுன்னு? அதற்கு பதிலாக ஒரு கவிதையை எழுதி அனுப்பினான். அக்கவிதை கூட இப்புத்தகத்தில் பதினெட்டாவது பக்கத்தில் உள்ளது,

மரங்களற்ற தெருவில்
விழுந்து கிடக்கும் மலர்களைக்
கண்டு வான் நோக்குகிறாய்

என் காதலை எரோஸ் மலர்களாகத் 
தூவியுள்ளான் 

உன் காதலின் மலர்களை 
நான் கண்டெடுத்த நாளை
பாடத்தான் இந்தப் பாடல்

காலையும் மாலையும் மதியமும்
இரவும் என காலம் இல்லாத
ஒரு பொழுதில்

மழையும் வெயிலும் பனியும் 
இல்லாத பருவத்தில்

உன் காதலின் மலரை நான்
கண்டெடுத்தேன்

நான் எரோஸிடம் கேட்டேன்

'அவளா உன்னிடம் என் வழி
மலர்களை தூவச் சொன்னாள் என்று?'

எரோஸ் சொன்னான்,
'ஆம் அவள் கனவுகள் சொன்னது' என்று

காதலின்  மலர்கள் 
கனவில் பிறக்கிறது இனியவளே

படிக்கையில் சிரிப்பும் ஏக்கமுமாக இருக்கிறது. இவ்வளவு உக்கிரமான காதல் எப்படி பிரிவில் முடிந்தது. அவ்வளவு கறாரானதா வாழ்க்கை? இது என்ன இப்படியெல்லாம் மனதை உழட்டிக்கொள்கிறேன். நான் பாட்டுக்கு நெட்ஃப்லிக்ஸில் எதாவது ஸாம்பி படம் பார்த்துக்கொண்டிருப்பேன். இவனால் வாழ்க்கையை பற்றியெல்லாம் யோசிக்கவேண்டியாகிவிட்டது. மாதவை நேரில் பார்த்து இரண்டு வருடம் இருக்கும். மைசூரில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். ஊர் பக்கம் வருவதே இல்லை. சென்னைக்காவது வா என்றாலும் வருவதில்லை. சிகரெட் ஆல்கஹால் தாடி என காதல் தோல்வி ஸ்டீரியோடைப்புக்குள் விழுந்திருப்பானோ?

அவன் புத்தகத்தின் கடைசி கவிதை ஒரு மொழிபெயர்ப்பு, ஜார்ஜ் ஜோன்ஸின் பாடல் அது,

உன்னை மரணம் வரை காதலிப்பேன் என்றான்

காலப்போக்கில் என்னை மறப்பாய் என்றாள்

காலம் சென்றது
 அவன் மனதை அவள் நிறைத்துக்கொண்டே இருந்தாள்

அவன் அறையில் அவள் படம் இருந்தது

அவ்வப்போது பைத்தியாமானான்

அவள் மீதான காதல் மட்டும் மாறவேயில்லை

அவளுக்காக எழுதிய கடிதங்களில்
காதல் எனும் சொல்லை சிவப்பில் எழுதி அடிக்கோடிட்டிருந்தான்

இன்று அவனை காணச் சென்றேன்

வழக்கமாக இருக்கும் கண்ணீர் இல்லை

 திருத்தமாக உடுத்தி கிளம்பக் காத்திருந்தான்
 
முதன் முதலாக அவன் சிரித்த முகத்தை பார்த்தேன் 

அவன் அன்றோடு அவளைக் காதலிப்பதை நிறுத்திக்கொண்டான்

அவன் சவப்பெட்டி மூடப்பட்டது

அவன் கடைசிப் பயணம் துவங்கியது

அவளும் கூட வந்திருந்தாள்

அவன் அன்றோடு அவளைக் காதலிப்பதை நிறுத்திக்கொண்டான்

இவ்வளவு தூரம் அவளை சுமந்துகொண்டுதான் இவனும் செல்லப்போகிறானா. மோஸ்ட் இம்ப்ராக்டிகல். அன்று வேண்டுமளவு யோசித்துவிட்டதாகத் தோன்றியது. அந்தப் புத்தகத்தை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு, நெட்ஃப்ளிக்ஸை உருட்டிக்கொண்டே மெத்தையில் விழுந்தேன். 

……..

காலை ஏழு மணிக்கு தார்வாடில் இறங்கினேன். வெய்ட்டிங் ரூமிலேயே குளித்து விட்டு தயாரானேன். கூகுள் மேப்பில் லொக்கேஷன் காண்பித்த போது மொழித் தேவையின்றி புரிந்துகொண்டார் ஆட்டோக்காரர். திடுதிப்பென்று வீட்டுக்குச் செல்வது என்பது கிட்டத்தட்ட அநாகரீகமாகிவிட்ட காலமிது. ஆனாலும் சென்று நின்றேன். கதவைத் திறந்தவள் ஒரு கணம் திகைத்தாள்.

‘டேய்.. நீ என்ன… வாடா.. நல்லா இருக்கியா?’

கணவனை அழைத்து என்னை அறிமுகப் படுத்தினாள். குழந்தைகள் இரண்டும் ‘ஹலோ அங்கிள் வெல்கம்’ என்றன.

‘கொஞ்சம் உட்காருடா.. எல்லாம் கிளம்பிட்டு இருக்காங்க..’

‘ஸாரி நான் சொல்லாம கொள்ளாம…’

‘அதெல்லாம் ஒன்னுமில்லடா எத்தன வருஷமாச்சு பாத்து… ரொம்ப சந்தோஷம் நீ வந்தது… ஃப்ரெஷ் ஆயிட்டியா?’

‘அதெல்லாம் ஆச்சு’

‘கொஞ்சம் உக்காரு… ரெண்டும் ஸ்கூல் கிளம்பிடட்டும்’

வீடு அவள் முகத்தைப் போலவே திருத்தமாக இருந்தது. காலை பரபரப்பு வீட்டுக்குள் தெரிந்தது. கணவர் ஒரு வங்கியில் பணி புரிகிறார். தமிழ் நாடு மாற்றலுக்கு அப்ளை செய்திருப்பதாச் சொன்னார். குழந்தைகள் ‘பை அங்கிள் என்றபடி கிளம்பின.

கீழே சென்று வழியனுப்பிவிட்டு வந்தவள்,

‘டேய்… சொல்லுடா… எப்டி இருக்க?’ குடும்பம் நீங்கிய பின் நட்புக்கான இணக்கம் கூடியிருந்தது.

‘நீ எப்டி இருக்க?’

‘ஐயோ ஃபார்மலாலாம் பேசிக்கிறோம்.. நெனக்கவே சிரிப்பா இருக்குடா’

பின் அம்மா அப்பா, நண்பர்கள், ஊர், காலேஜ் எல்லாம் பேசி ஆனது. எங்கள் நட்பு வட்டத்தின் காதல் பறவைகள் அவர்கள். அவள் கேட்க மாட்டாள். நான் தான் துவங்க வேண்டும்.

‘மாதவ் உன்ன கான்டாக்ட் பண்ண ட்ரை பண்ணானா?’

அவள் முகம் தீவிரம் கொண்டது. பின் சோகம்.

‘இல்லடா.. என்ன ஆச்சு?’

‘இல்ல அவன் மிஸ்ஸிங்க் ஒரு மாசமா.. எங்க இருக்கான்னே யாருக்கும் தெரியல… வர்க் ப்ளேஸ்ல ஒரு வெள்ளிக்கிழம ஐடிகார்டெல்லாம் டேபிள்ல வெச்சுட்டு போனவன்தான்.. என்ன ஆனான்னு ஒரு தகவல் இல்ல.. போலீஸ்ல கம்ப்ளெயின்ட்லாம் ஆயிடுச்சு… மெயில், போன், எஃப் பி, இன்ஸ்டா எதுலயும் கெடைக்கல…’

அவள் கண்கள் சிவந்திருந்தது.என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

‘அவன் இன்னும் மீண்டு வரல…’ 

‘ம்ச்’ என்றபடி கண்களை துடைத்துக்கொண்டாள். பின் பீறிட்டு அழுதாள். மெல்ல ஆசுவாசமானாள்.

‘அவன் எல்லாத்தையும் கடந்து போயிருப்பான்னு நெனச்சேன் கதிர்.. எனக்கும் கொஞ்ச நஞ்ச கஷ்டம் இல்ல.. மெல்ல மெல்லதான் நானும் கடந்தேன்.. ஆனா இன்னிக்கி ஹஸ்பன்ட் குழந்தைங்கன்னு வேற ஒருத்தி நான். அவனோட இருந்ததெல்லாம் பெயின்ஃபுல்லான அதே நேரம் இனிமையான நினைவாதான் இருக்கு. யார்கூடயும் டச்லயே இல்லடா…நம்ம ஃப்ரென்ட்ஸ் ஸர்க்கிலயே அவாய்ட் பண்ணினேன்.. அவன் சம்மந்தப்பட்ட எல்லாத்தையும் ஒதுக்கினேன்.. ஃபேஸ்புக் இன்ஸ்டா தவ்ஸண்ட்ஸ் ஆஃப் ஃபோட்டோஸ்… எல்லாத்தையும் டெலீட் பண்ணினேன்.. கொஞ்சம் கொஞ்சமா தாண்டிட்டேன்… அப்பப்ப அவன நினச்சுப்பேன் அவ்வளவுதான்.

பின் அமைதி உள்ளே வந்தது. திடீரென நான் அங்கு வந்திருப்பது அவளுக்கு உகக்கவில்லை எனத் தோன்றியது.

‘அவனுக்கு ஒரு புக் ப்ரெஸென்ட் பண்ணீங்களே நினைவிருக்கா.. அவனுக்கு கிஃப்ட் பண்ணின காப்பிய எங்கிட்ட குடுத்து வெச்சிருந்தான்… அத இன்னும் வெச்சிருக்கேன்… தனிமையின் கீதம்’ சோபையற்று சிரித்தாள்.

‘அவன் சம்மந்தப்பட்ட எங்கிட்ட இருக்கிற ஒரே பொருள் அதுதான்’

பின் நாங்கள் வேறு ஏதேதோ பேசி சகஜ நிலைக்கு திரும்ப முயன்று தோற்றோம். மதிய சாப்பாடு செய்கிறேன் என்றாள். நான் வேண்டவே வேண்டாம் என்று மறுத்து, மதியம் ஒரு மணிக்கு ட்ரெயின் இருப்பதாகச் சொன்னேன். காலை செய்த இட்லியில் மிள்காய்ப்பொடி தடவிக் கொடுத்தாள். ட்ராப் செய்வதாகச் சொல்லி ரெயில்வே ஸ்டேஷன் வரை வந்து ரயில் ஏற்றிவிட்டாள். அன்று ரயில் கிளம்பிய போது அவள் அழுதாள். நான் ஏன் அழுதேன் என எனக்குத் தெரியவில்லை. ஊற்றுமுகம் இவள்தான். எப்படிக் காதல் அற்பமானது என்று உறுதியாகச் சொல்வது?

பின்பொரு கடிதம் என்னை வந்தடைந்தது. எங்கள் ஊர் முகவரிக்கு சென்று, என் மாமா கைக்குக் சென்று, அவர் அதை எங்கேயோ வைத்து ஒரு வழியாக இரண்டு வருடம் கழித்து என் கைக்குக் கிடைத்தது. மாதவ்தான் எழுதியிருந்தான்.  தன் கூண்டிலிருந்து விடுவித்த கடைசி பறவை அந்தக் கடிதம்.

அன்புள்ள கதிர்,

நான் ஏன் இன்னும் அவளை நினைத்துக்கொண்டிருக்கிறேன் எனத் தெரியவில்லை. அவளைதான் நினைத்துக்கொண்டிருக்கிறேனா? ஐந்து வருடம் ஆகிவிட்டது அவளைப் பார்த்து. இருக்கிறாளா இல்லையா என்பது கூடத் தெரியாது. நான் அறிந்த ஒருவளில் இருந்து அவள் வெகு தூரம் சென்றுவிட்டிருப்பாள். இப்போது அவளை சந்தித்தால் என்ன ஆகும்? என்னால் சொல்ல முடியவில்லை. ஆனாலும் ஏன் இந்த சோகத்தை சுமந்து கொண்டிருக்கிறேன். நான் விடுபட வேண்டிய காலம் வந்துவிட்டதாய் ரொம்ப நாட்களாகத் தோன்றுகிறது. ஆனால் அந்த சோகத்தின் கதகதப்பிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். அந்த சோகமும் வலியும் எனக்கு தேவைப்படுகிறதா என்ன? புலன்களின் அலைக்கழிப்பு ஒழிய,  வெந்துயர்க் கோடை மறைய, முகம் ஒளி கொள்ள, பிறவிகளின் மீது அருவருப்புற்று, கருணையின் பெருமுரசம் ஒலிக்க, அருளால் கண்ணீர் மல்க, துன்பமே இன்பமென ஓங்கிற்று என ஒரு பாடல் உண்டு திருவாசகத்தில். என் துன்பம் இன்பமாக மாறுமா என்ன? 

அன்புடன்,

மாதவ்ராம்

தன்னைத்தானே வதைக்கு உட்படுத்திக்கொண்டு வதையின் ஆழத்திலிருந்து ஒளி மீட்கும் எனும் ஏக்கத்தால் தன் காலத்தை நிறைத்துக்கொண்டிருக்கிறான்.  கண்டிப்பாக அவன் எங்கோ இருக்கிறான், காதலால் கசிந்துருகி கண்ணீர் மல்க காதலித்துக்கொண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.