மிளகு  அத்தியாயம்  ஐம்பது

1605  மதுரை

கோழிக்கோடு போய் வந்து ஒரு வாரம் மேலுக்கு முடியாமல் பலகீனமாகி படுக்கையில் விழுந்து விட்டார் இமானுவெல் பெத்ரோ சின்ஹோர். போகும் வழியில் எதையும் யார் கொடுக்கவும் வாங்கிச் சாப்பிடக் கூடாது, பல ஊருண்ணி, குளம், ஆறு, ஏரித் தண்ணீர் என்று தண்ணீர் மொண்டு வந்து கொடுப்பதைக் குடித்து தாகவிடாய் தீர்த்துக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் லிஸ்பனில் இருந்து இந்துஸ்தானம் புறப்படும்போதே படித்துப்படித்து பாடாந்திரத்தின் பகுதியாகச் சொல்லி அனுப்புவார்கள். 

பெத்ரோவும் இப்படித்தான் கட்டிக் கொடுத்த கட்டுச்சாதம் மாதிரி அறிவுறுத்தல்களோடு தென்னிந்தியா வந்திருக்கிறார். சாப்பாடும், தண்ணீரும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து ஆகாரம், பானம் பண்ண என்று கட்டுக்குள் வைப்பது முழுக்க முடியாத காரியமாகவே தோன்றுகிறது.

போர்த்துகல் மருத்துவரால் பெட்டி பெட்டியாக தயாரிக்கப்பட்டு லிஸ்பனில் இருந்து இந்துஸ்தானத்துக்குப் பயணம் வைக்கிறவர்களிடம் ஆளுக்கொரு அல்லது ரெண்டு பெட்டி மருந்துகள் அளிக்கப்படும். அவர்கள் அரசு ஊழியர்கள் என்றால் அதற்கான பணத்தை அரசாங்கமே கொடுத்து விடும். அல்லது பெட்டிக்கு நூறு க்ருசடோ பணமாகத் தர வேண்டி வரும். 

காய்ச்சல் மாத்திரை, தலைவலி மாத்திரை, வயிற்று வலிக்கு அவசரம், சுமார் அவசரம், மெதுவான குணம் என்று மூன்று வகை வலிநிவாரணிகள் அந்தப் பெட்டியில் உண்டு. சிரங்கு, மேலே படியும் பொறுக்கு அகற்ற தைலம் என்றும் பெட்டியில் மருந்துகள் உண்டு. 

அலுப்பு மருந்து என்று ஒரு மாத்திரை அது காய்ச்சல் வருவதுபோல் இருந்தாலோ, உடம்புக்கு என்ன சுகக்கேடு என்று சொல்லத் தெரியாமல், வலிக்கிறது போல் இருக்கிறதென்றால் எங்கே வலிக்கிறது என்று சொல்லத் தெரியாமல் படுக்கையை விட்டு எழுந்திருக்கச் சோம்பலாகப் புரண்டு கொண்டிருக்கும்போதோ,  வெந்நீரோடு சாப்பிட அலுப்பு மருந்து அது.

காலையும் மாலையும் கஸாண்ட்ரா அரிசியும் உளுந்தும் கலந்து ஆவியில் வேக வைத்து எடுத்த, உடம்புக்கு உபத்திரவம் செய்யாத உள்ளூர்ப் பலகாரமான இட்டலிகளை, பெத்ரோவை படுக்கையிலேயே உட்காரவைத்து அஸ்கா சர்க்கரை தொட்டு ஊட்டினாள். 

ரொட்டிக்கடையில் சொல்லி வைத்து சுக்காக உலர்ந்த சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட உலர் ரொட்டிகளை, காய்ச்சிய பாலில் தோய்த்து பகலில் ஊட்டி, பால் நிறையச் சேர்க்காத தேநீர் பருகக் கொடுத்தாள். 

ராத்திரிக்கு உள்ளூர் இந்துஸ்தான ரொட்டி நெய்யோ வெண்ணெயோ சேர்க்காமல் சுக்காவாக, என்றால் கோதுமையை மாவாகத் திரித்துத் தட்டி சூளை அடுப்பில் வாட்டி, சிறிது பழக்கூழோடு கொடுத்தாள். 

போர்த்துகல் மருத்துவரின் பெட்டி மாத்திரை மருந்து கை கொடுத்ததோ என்னமோ, கஸாண்ட்ராவின் உணவு வைத்தியம் கட்டாயம் பலனளிக்க, மூன்று நாளில் பூரண குணமடைந்தார் பெத்ரோ. 

அப்புறம் ஒரு இரண்டு நாள் படுக்கையில் சகல விதமாகவும் ஓய்வு எடுத்து சனிக்கிழமை சாயந்திரம் தெருவில் நடந்து விட்டு வந்தார். 

ஞாயிறன்று அல்போன்ஸ் புனிதர் மாதாகோவிலுக்குப் போய் வந்து மதுரைப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கினார் பெத்ரோ. மதுரை போய் வந்தால், தென்னிந்தியாவைக் கிட்டத்தட்ட முழுவதும் பயணம் போய்க் கண்டு வந்ததற்கு நிகர் என்று எல்லோரும் சொல்கிறார்கள். போய்விட்டுத்தான் வரலாமே என்று புறப்படச் சித்தமானார் பெத்ரோ.

ஹொன்னாவரில் இருந்து ஜெரஸோப்பா, உடுப்பி, மங்களூர், கண்ணூர், கோழிக்கோடு – ஒரே நாள் மனைவி குழந்தைகளோடு இருந்து விட்டு, நேரே திருச்சூர், கொச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி வழியாக மதுரை.   

 பதினைந்து நாளில் இருந்து இருபது நாளாகும் இப்படி மதுரை போய்ச்சேர. திரும்பி வர இன்னொரு இருபது நாள். ஒண்ணரை மாதத்தில் போய்த் திரும்ப முடிவது சாத்தியம் தான்.    இந்துஸ்தானம் முழுவதும் போக ஒரு வருடம் ஆகலாம். எவ்வளவு பரந்து விரிந்த, கலாச்சாரமும் கலையும் இலக்கியமும், விவசாயமும், தொழிலும் சிறந்த நிலப்பரப்பு இது.

ஆயுளுக்கும் இது போல் இன்னொரு பயணம் வைக்கப் போவதில்லை. எனவே பார்த்தது, கேட்டது, உணர்ந்தது என்று இந்தப் பயணம் தொடர்பான சகலமானதற்கும் குறிப்பு எழுதி வைக்கத் தீர்மானம் செய்து கொண்டார் அவர். 

பெத்ரோவின் தினசரிக் குறிப்புகளில் இருந்து சில  சிறு பகுதிகள் –

நாள் 1 

எட்டு மணி நேரம் பயணம் செய்து உடுப்பி வந்து சேர்ந்தோம். கர்கலா என்ற நகர்ப் பகுதியில் லிஸ்பனில் இருந்து வந்து   ரத்ன கம்பளங்களையும், லஸ்தர் விளக்குகளையும், போர்த்துகீஸ் மிட்டாய்களையும், துணிமணிகளையும் சிறு அளவில் வர்த்தகம் செய்து அந்த வருமானத்துக்கு ஏலக்காய் வாங்கி சிறிய அளவில் வர்த்தகம் செய்யும் வாஸ்கோ ட பிலிப்போ என்னும் வர்த்தகரும், அவர் மகன் ட ரிச்சார்டும் வரவேற்று ராத்தங்க வசதி செய்து கொடுத்தார்கள். 

பதினெட்டு சமண வசதிகள் உள்ள உடுப்பி கர்கலாவில் உடுப்பு இல்லாத கோமதீஸ்வரர் என்ற சமண மதப் புனிதரின் நாற்பது அடி உயரக் கற்சிலையைக் கண்டுவரலாம் என்று பிலிப்போ சொன்னாலும் காய்ச்சல் வந்து விலகிய களைப்பு சூழ சீக்கிரமே உறங்கிப் போனேன். 

கஸாண்ட்ரா சில இட்டலிகளை வாழை இலையில் பொதிந்து கொடுத்திருந்தது  ராச்சாப்பாடாக எந்த உபத்ரவமுமில்லாமல் ஆனது. 

 கஸாண்ட்ரா. தேவதை நீ.

நாள் 2 

காலையில் மங்களூருக்கு மூன்று மணி நேரப் பயணம் கிளம்பும் முன், ட பிலிப்போ வகையறாக்கள் இந்துஸ்தானத்துடன் வர்த்தகத்தை அபிவிருத்தி செய்ய போர்த்துகல் அரசரின் தலைமைப் பிரதிநிதியாக என்னிடம் பொருள் எதிர்பார்த்தார்த்தது புரிந்தது. 

களவாணிகள் இவர்கள். ஏழெட்டு வீடு, வண்டிகள், மணங்கு மணங்காக ஏலக்காய் அது இது என்று செல்வச் செழிப்போடு இருந்து கொண்டு ராஜாங்க சார்பில் நான் ஆயிரம் ரெண்டாயிரம் ரியல்கள் இனாமாகத் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பு. நான் திரும்பும்போது பார்க்கலாம் என்று தட்டிக் கழித்தேன். இந்தக் குப்பன்கள் இல்லாத வழியாகத் திரும்ப வேண்டும். இவன்களை கடை திறந்து காசை அள்ளிக் குவிக்க அனுப்பி விட்டு காலை எட்டு மணி சுமாருக்குப் புறப்பட்டு பதினோரு மணிக்கு மங்கலாபுரம் என்ற மங்களூர் வந்து சேர்ந்தானது.

குடிதண்ணீர் கொண்டு வந்த பாத்திரத்தை என் புத்திசாலி சேவகர்கள் கர்கலாவிலேயே விட்டு விட்டு வந்துவிட்டார்கள். எல்லோரும் திரும்பப் போய் அதை எடுத்துக்கொண்டு நாளைக்கு மங்களூர் வரலாம் என்று  சாப்பாடு, பெண் சிநேகிதம் வகையறா சிறப்பாகக் கிடைப்பதால் அங்கே போய் முடங்க ஆசை தெரிவித்தார்கள். 

இன்பச் சுற்றுலாவாக நாம் வரவில்லை, என் அரசாங்க காரியம் இது என்று எடுத்துச் சொல்லி, தண்ணீர் இல்லாமல் தாகத்தோடு மங்களாபுரம் வந்து சேர்ந்தபோது  மங்களூர் பிரமுகர் ஜூலியோ ரொனால்டோ   தேவையான குடிதண்ணீருக்கு ஏற்பாடு செய்தார்.  இனிமேல் தண்ணீர்ப் பாத்திரங்கள் என் பொறுப்பில் வந்தன. 

மங்களூர் போர்த்துகீஸியர்கள் முழுக்க முழுக்க கத்தோலிக்க கிறிஸ்துவத்துக்கு இந்தியர்களை மதம் மாற்றுவதில் தான் ஈடுபாடாக இருப்பதால் மிளகு, ஏலம், வகையறா வர்த்தகம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. கோவாவில் இருந்து வந்த பிராமண கத்தோலிக்கர்கள் இன்னும் வைதீக பழக்கங்களை மேற்கொள்வதை மாற்றினால் தம் வாழ்க்கையின் லட்சியம் கைகூடி விடும் என்று பிஷப்பும். பாதிரிகளும் திடமாக நம்புகிறார்கள். இவர்களிடம் நான் போர்த்துகீஸிய அரசரின் தலைமைப் பிரதிநிதி என்பதைச் சொல்லி ஒன்றும் ஆகவில்லை. வர்த்தகம் என்ற உன்னதமான, எல்லோருக்கும் சந்தோஷத்தையும், சகலருக்கும் வளத்தையும் வாரி வழங்கும் சமாசாரம் எங்கே, பூணூலை அறுத்து சிலுவையை மாட்டி விட்டு கணக்கில் ஒன்று ஏற்றி, கூக்குரல் இடுவதென்ன, இவர்களிடம் சொல்லிப் பயனில்லை.

நாள் 4 

மங்களூரில் இருந்து எட்டு மணி நேரம் பயணம் செய்து  கண்ணூர் போனோம். கண்ணூர் கோலத்திரி மகாராஜாவோடு வர்த்தகம் பேசியபோது அவருக்கு நான் பெரிய பரிசாக ஏதும் எடுத்து வராதது ஏமாற்றமளித்ததாகத் தெரிந்தது. 

இல்லாமலும், கோழிக்கோடு வர்த்தக ரீதியாக முதலில் இருக்கும் கடற்கரைப் பட்டணம் என்பதால் கண்ணூரும் கொச்சியும் வர்த்தகத்தில் அவ்வளவு பெரிய ஈடுபாடு காட்டவில்லை. மீன் பிடிக்கக் கடலோடுதல் இவர்களுக்குப் பிரதானமான தொழிலாக, வருமானம் ஈட்டித் தருகிறதாக அறிகிறேன்.

நாள் 6 

அதிகாலையிலேயே ஐந்து மணிக்கு கண்ணூரில் இருந்து கிளம்பி, ஒன்பது மணிக்கு கோழிக்கோடு போய்ச் சேர்ந்தேன். சுங்க அனுமதி எல்லாம் மரியாவின் தகப்பனார் எடுத்து வைத்திருந்தாலும் யாரும் அதைப் பரிசோதிக்கவில்லை. 

இந்தப் பயணத்தில் அரசாங்க காரியம் இல்லை என்பதால் முழுக்க வீட்டில் குடும்பத்தோடு கழிக்கத் தீர்மானித்தேன். 

மகனுக்குக் கையில் ஏதோ பூச்சி கடித்து வீக்கம். நல்ல வேளையாக மருந்துப் பெட்டியில் ‘’எல்லா ரோகத்துக்குமான மாத்திரை’ என்று இருந்ததில் ஒன்றை அவனுக்குப் பொடித்து தேனில் குழைத்து ஊட்ட, வீக்கம் கொஞ்சம் வடிந்தது. 

இதை விட வேகமாக ஆயுர்வேத வைத்தியர் குணப்படுத்துவார் என்றாள் மனைவி மரியா. இன்னும் ஒரு பொழுது பார்த்துவிட்டு வீக்கம் வற்றவில்லை என்றால் வைத்தியர் மருந்தைக் கொடுக்கச் சொன்னேன்.

நாள் 8 

கோழிக்கோட்டில் இருந்து 7 மணி நேரம் பயணம் செய்து குன்னங்குளம் வழியாக திருச்சூர் வந்தேன்

குதிரைகள் சுகவீனம். ஓர் அடி நடப்பதற்குள் வாயில் நுரைத்தது ஒரு குதிரை. ஓய்வு. இவை ஓய்வை எதிர்பார்க்கின்றன. கோழிக்கோட்டில் மாற்றுக் குதிரைகள் இரண்டு வாங்கி வந்திருந்தது நல்லதாகப் போயிற்று. மீதி நான்கு குதிரைகளுக்கும் முழு ஓய்வு கொடுத்தேன். 

நாள் 9 

திருச்சூரிலிருந்து ஐந்து மணி பயணமாக கொச்சி. ஆர்ச் பிஷப் ஜோஸ் பெர்ணாண்டஸ்  போர்த்துகல்லின் ராஜாங்க பிரதிநிதியாகவும், மதத் தலைவராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்றாலும் மத சம்பந்தமான வேலைகளுக்கே அவருடைய நேரம் போயிற்று. அவரைச் சந்தித்தபோது உற்சாகமாக அவருடைய சாதனைகளை எடுத்தோதினார். அவை என்னை எந்த விதத்திலும் ஈடுபாடு காட்டச் செயவில்லை. 

கத்தோலிக்கர்கள் படிக்கக் கூடாது, திங்கள்கிழமை கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது. ராத்திரியில் நாட்டியம், நாடகம் என்று எந்தப் பொழுதுபோக்குக்கும் நேரம் செலவழிக்கக் கூடாது. அது சாத்தானின் நேரம். பகலில் கத்தோலிக்க கிறிஸ்துவப் புனிதர்களின் வாழ்க்கை வரலாற்று நாடகம் பார்க்கலாம் என்று பிடிவாதமாக விதிமுறை கொண்டு வந்திருப்பதைப் பெருமையோடு சொன்னார் என்னிடம். மீறுகிறவர்கள் மரச் சிலுவையைச் சுமந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாதாகோவில் வழிபாட்டு நேரத்தில் சர்ச்சுக்கு வெளியே நிற்கவேண்டும்.  இப்படி விதிமுறை கொண்டு வந்து மீறுகிறவர்களைத் தண்டிப்பது, பிரசங்கம் என்றே அவர் நேரம் போவதால் வர்த்தகம் பற்றி அவருக்கும் பெரிய ஈடுபாடு ஏதுமில்லை. 

ராத்திரி பண்டகசாலைகள் வேலை பார்ப்பது மகா தவறு என்றார் அவர் என்னிடம் முகம் சுளித்து. ஞாயிற்றுக்கிழமை உலகத்தைப் படைத்துவிட்டு பரமபிதா ஓய்வு எடுத்துக்கொண்ட தினமாச்சுதே அப்படி இருக்க, ஏதோ தலை போகிற வேலை இருக்கு என்று அவனவன் வேலை ஏவி, வேலை பார்த்து சப்பாத் தினத்தில் பிதாவுக்கும் சுதனுக்கும் விரோதமாக நடந்தால் அதை கண்டித்து வேலை பார்த்த கையை உடைத்து காலை முறித்து வேலையில் பேசிய நாக்கை அறுத்துப் போடுவது என் கடமை என்றார் கொச்சி பிஷப். 

போன மாதம் விதிமுறை மீறிய எழுநூற்றிருபத்தாறு பேரை கத்தோலிக்க சபையிலிருந்து விலக்கி வைத்தேன், அதில் இருபது மீனவர்கள் உண்டு இந்த மாதம் எண்ணூற்றேழு பேர் விலக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பெருமையோடு புள்ளிவிவரம் தந்தார் என்னிடம். 

இதை எல்லாம் பொழுது போகாத நேரத்தில் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று வைத்துக்கொண்டு வியாபாரத்தைக் கவனிக்கலாம். 

வழித்து வாரிப் பூசிக்கொண்டு குளிக்காமல் உடம்பு வாடை மறைத்து நடமாட,  லிஸ்பனில் இருந்து வாசனை நீரையும், ஒதிகோலனையும், ஐரோப்பியர்கள் போல் படுக்கையில் களைப்பின்றிச் செயல்பட உதவி செய்கிற தைலங்களையும் இங்கே காசு கொட்டிக் கொடுத்து வாங்க சும்பாதி சும்பன்கள் தயாராக இருக்கிறார்கள்.  அந்த வர்த்தகத்தில் முழுமுனைப்பாக ஈடுபட்டு கணிசமான வருமானம் பார்க்கவேண்டும். அதை விட்டுவிட்டு, வேலை மெனக்கெட்டு அவர்களுடைய நாக்கை இழுத்து வைத்து அறுக்கக் கிளம்பினால் அது கடைந்தெடுத்த போர்ச்சுகீஸ் முட்டாள்தனமன்றோ. நாக்கு இல்லாதவன் தைலம் வாங்குவானா?

ஞாயிற்றுக்கிழமை வேலை பார்த்தால் கையை உடைப்பாராமே, அன்றைக்கு வேறென்ன செய்யணும்? தைலத்தைத் தடவிக் கொண்டு தனியாக படுக்கையில் உருள வேண்டுமா?

 கொச்சி நினைவுகள் வேடிக்கையாகவும் கோபம் வரவழைப்பதாகவும் இருக்க, கொங்குநாடு வரை அடுத்த கட்டப் பயணம் தொடங்கியது. 

நாள் 11 

இரண்டு நாளாக கொங்குநாடு நொய்யலாற்றுக் கரையோர நகரம் திருப்பூர் வழியாக கும்பகோணம். நடுநடுவே நீண்ட ஓய்வு. மதுரை எப்போது போய்ச் சேருவோம் என்று பயணம் களைப்பு உண்டாக்கத் தொடங்கிவிட்டது.

 கொங்குநாடு வந்ததுமே மதுரை நாயக்க மன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் அரசாளும் நாயக்க அரசின் எழுபத்திரெண்டு பாளையங்கள் தொடங்கியது தெரிந்தது. 

திருப்பூர் பகுதி பாளையக்காரர் ஊர் எல்லையில் எங்கள் சாரட்டுகள் நுழைந்ததுமே காத்திருந்து வரவேற்றார். காரமான, மசாலா பூசி, வெங்காயமும் வற்றல் மிளகாய்ப் பொடியும் பசு நெய்யும் எள் எண்ணெயும் கலந்து பாகம் பண்ணிய கோழியும் ஆடும் சோறுமாக விருந்து செய்வித்தார். 

ஜாக்கிரதையாகக் கொஞ்சம் கொஞ்சம் உண்டு நாக்கைக் கட்டிப் போட்டு அந்த அற்புதமான விருந்தின் பின்விளைவுகள் ஏதுமின்றி குடந்தை என்ற கும்பகோணம் புறப்பட்டேன். 

குதிரைகள், சிப்பந்திகள் உடல் நலத்துக்காக ஒரு முழு நாளான ஞாயிறு ஓய்வு கொடுத்தபோது கொச்சி ஆர்ச்பிஷப் நினைவுக்கு வந்தார்.

நாள் 13 

கும்பகோணம் வந்தபோது ஹொன்னாவரில் இருந்து முக்கியச் செய்தியோடு குதிரை வீரர்கள் பகுதி பகுதியாகப் பயணம் செய்து செய்திக் குழலைக் கைமாற்றி நான் இருக்குமிடம் வந்து சேர்ந்தார்கள். 

இரண்டு முக்கிய செய்திகள் எனக்கு இருந்தன. ஜெரஸோப்பாவின் மிளகு மகாராணிக்கு உள்நாட்டு எதிர்ப்பு வலுத்ததாம். அவருடைய வளர்ப்பு மகனான நேமிநாத இளவரசர் அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறாராம். எதிர்ப்பை வழிநடத்துவது அவர்தானாம். உள்ளல் மகாராணியும்,  மிளகு ராணியின் நெருங்கிய தோழியுமான அப்பக்கா ராணி, சென்னபைரதேவிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளாராம். நிலைமை சீராகிறது, பார்க்கலாம் என்றாராம் அவர்.

எதிர்ப்பாளர்களைப் பிடித்துச் சிறையில் போடப் போவதாகச் சொன்னாலும் மிளகு ராணி கண்டிப்பான அரசி இல்லை. குடிமக்கள் மேல் அன்பு காட்டுகிறவர்.  அவர் மேல் பரவலான நன்னம்பிக்கை தொடர, எதிர்ப்பு ஒருவாறு அடங்கியுள்ளதாம். 

மிளகு ராணியோடு தோழமை கொண்டு அவர் மூலம் மிளகு மற்ற ஏலம், துணி முதலிய வர்த்தகத்தை முன்னெடுத்துப் போகலாம் என்று நினைக்கும் எனக்கு இது ஒரு ஏமாற்றம்தான். இன்னும் பத்தாண்டாவது சென்னா மகாராணி அரசாண்டால் வர்த்தக நடவடிக்கைகள் மேலும் சீராகி விடும். 

அவர் அப்போது சுமார் எழுபத்தி ஐந்து வயதாகி உலகில் மூத்த அரசர், அரசியரின் சிறு பட்டியலில் இடம் பெற்றிருப்பார் என்பதை மறக்க முடியாது. 

இந்த உள்நாட்டு எதிர்ப்போடு போர்த்துகல் அரசுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதை ஊர்போய்த் தெளிவுபடுத்த வேண்டும். போனதும் முதலில் சென்னபைரதேவியைச் சந்திக்க வேண்டும்.

அடுத்த செய்தி போர்த்துகீஸ் அரசு எனக்கு விடுத்த ஒன்று. தஞ்சை அருகே நாகப்பட்டிணம் கடற்கரை பிரதேசம் போர்த்துகீஸ் ஆட்சியில் உள்ளது. ஒரு வருடமாக வரிப்பணம் வந்து சேரவில்லை. அங்கே போர்த்துகீஸ் ஆளுநர் சரியான முறையில் நிர்வாகம் செய்கிறாரா என்று கவனித்து, தேவைப்பட்டால் வேறு ஒரு போர்த்துகல் அதிகாரியை நியமிக்கவேண்டும்.

நாள் 17 

கும்பகோணம் நீங்கி தஞ்சாவூர் வழியாக நாகப்பட்டிணம் இரண்டு நாள் தங்கி இருந்து தற்காலிகமாக கொச்சியில் இருந்து ஒரு போர்த்துகல் அதிகாரியை வருவித்து நாகப்பட்டணம் அரசாங்க நிர்வாகியாக நியமித்தேன். ஏற்கனவே உள்ள மோசமான ஆளுநரைப் பதவி விலக்கினேன்.

பெரும்பாலும் மீனவர்கள் – பரதவர் இனத்தினர் – வசிக்கும் ஊர் இது. கடலில் போய் மீன்பிடிக்க உரிமம் பெறக் கட்ட வேண்டிய வரிதான் அவர்கள் கட்டத் தவறியது. எங்கள் ஊர், எங்கள் கடல், எங்கள் மீன். எதற்கு போர்த்துகல் நாட்டுக்கு வரி கட்ட வேண்டும் என்ற அவர்களின் கோபம் எனக்குப் புரிகிறது. 

ஆனால் எனக்கு வரி வாங்க வழி செய்வது அளிக்கப்பட்ட கடமை. அதை மிகுந்த துன்பம் தராமல் நிறைவேற்ற முனைந்தேன். எனக்கு விருப்பமில்லாததால், வரிப் பணத்துக்காக குடிமக்களை துன்பப்படுத்தாமல் கையில் பசையுள்ள செல்வர்களிடமிருந்து கொஞ்சம் பணம் வசூலானது. 

போர்த்துகல் என்ற மிகப் பெரிய நாடு இந்துஸ்தானம் என்ற இன்னொரு பிரம்மாண்டமான தேசத்தில் ஒரு மூலையில் இருக்கும் சின்னஞ்சிறு நாகைப்பட்டிணத்தில் வரி வசூலித்து லிஸ்பனுக்கு அனுப்பி வைப்பதைப் பெருமையானதாக விரும்புகிறது ஏன் என்று புரியவில்லை. 

உள்ளூர் மக்களிடமே ஆட்சியை ஒப்படைக்க அரசருக்கு சிபாரிசுக் கடிதம் எழுத வேண்டும். உலர்ந்த மீன் ஏற்றுமதியை அறிமுகப்படுத்தி இங்கிருந்து ருசியான உலர்ந்த மீன் கருவாட்டை லிஸ்பனுக்கு சலுகை விலையில் அனுப்பத் தொடங்க வேண்டும். அரசத் தலைமைப் பிரதிநிதி என்று எனக்குக் கொடுத்திருக்கும் பதவியை நியாயமும் நேர்மையும் சீர்பட்டு இருக்கப் பயன்படுத்த எனக்கு விருப்பமே.

 நாள் 21  

பிற்பகல் ஒரு மணிக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டு மாலை ஆறு மணியைப் போல் மதுரை வந்து சேர்ந்தேன். இந்துஸ்தானத்தில் நான் பார்த்த தில்லி, கொச்சி, கோழிக்கோடு போன்ற நகரங்களில், உயிர் இருக்கிற நகரம் மதுரை என்று தெரிகிறது. 

அழகான நகரம் மதுரை. இந்த அழகிய உடலின் இதயம் மதுரைக்கு உயிர் தரும் மீனாட்சி அம்மன் கோவில். நான்கு கம்பீரமான பெரிய கோபுரங்கள் அணி செய்யும் இந்தக் கோவிலில் அற்புதமான சிற்பங்கள் நிறைய உண்டென்று கேள்விப்பட்டேன். திரும்புவதற்குள் நாயக்கர் உதவியோடு இந்தக் கோவிலில் அனுமதியின் பேரில் போக முடிகிற தூரம் உள்ளே போய், சுவர்கள், சிற்பம், ஓவியங்கள், மண்டபங்கள், திருக்குளம் எல்லாம் கண்டு திரும்ப ஆசை. மதுரைக்கு வந்து மீனாட்சி திருக்கோவில் பார்க்காமல் போகலாமா என்று சொல்கிறார்கள். 

கோவிலைச் சுற்றி தாமரைப் பூ அடுக்குகள் போல் மதுரை விரிந்து பரந்திருக்கிறது. இந்தப் பெருநகரம் உறங்குவதே இல்லை. கடைத் தெருவில் காலை ஆறு மணி முதல் பின்மாலை ஆறு மணி வரை மும்முரமாக வியாபாரம் செய்த கடைகள் வியாபாரம் நிறுத்திக் கடை கட்ட, இரவில் மும்முரமாக இயங்கும் கடைகள் அங்கே திறக்கப்படுகின்றன. 

வேகமாக நகரும் சக்கரங்களும், உட்கார்ந்து ஓட்ட வண்டித் தட்டும், ஒற்றைக் குதிரை பூட்டியதுமாக வில்வண்டிகளை கடைத்தெருவில் வேகமாகச் செலுத்திப் போகிற காவலர்கள் சிவப்பு உடை அணிந்திருக்கிறார்கள். 

காலையில் சாலையோர மாளிகை நிழலில் பூ விற்றுக்கொண்டிருந்த பெண் சாயந்திரம் விற்றுத் தீர்ந்து வெறும் பூக்கூடைகளோடு குவளையில் இருந்த ஒற்றை ரோசாப்பூவை எடுத்துத் தெருவோடு வரும் பத்து வயதுச் சிறுமிக்குத் தலையில் வைத்து கன்னத்தைத் தட்டிச் சிரிக்கிறாள். 

பூக்காரி விட்டுப் போகும் இடத்தில் ராத்திரிக் கடையாகப் பண்ணியம், (என்றால்  இட்டலி, வடை, புட்டு, தோசை) என்று வீட்டில் சமைத்தெடுத்து வந்து விற்கும் மற்றொருத்தி கடை போட்டுக் குரல் எடுத்துக் கூப்பிட சிறு பசியும் பெரும் பசியுமாக உண்ண வந்த கூட்டம் கூடுகிறது. 

அழகான மாலைகளை மூங்கில் கழிகளில் மாட்டி வைத்துச் சுமந்து தெருவோடு நடந்தபடி வியாபாரம் செய்கிற இளம் பெண்கள் வாசனை எண்ணெய் கேட்டவர்களுக்கு இடுப்பில் தொங்க விட்ட துணிப்பையில் இருந்து சிறு மரக் குடுக்கைகளை எடுத்துக் கொடுத்துக் காசு பெற்று அதே பையிலிட்டு நடக்கின்றார்கள். 

தெருவோரம் துணி விரித்து பொம்மைகளை விற்கிற முதியவர்கள் வசீகரமாக பற்கள் குறைந்த புன்னகை பூத்து, தெருவில் குழந்தைகளோடு போகிறவர்களை விளிக்கிறார்கள். வீதியின் இரு பகுதியிலும் நிரந்தரக் கடை வைத்து தானியங்களும், விலை கூடிய துணிகளும், பழக்கூழ் மற்றும் பழச்சாறுகளும் விற்கும் பெருவணிக நிறுவனங்களில் சதா விளக்குகள் மாடங்களில் ஒளிவீசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

 பெரிய வர்த்தக நிறுவனங்கள் காலை எட்டு மணி தொடங்கி ராத்திரி ஒன்பது வரை சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றன. பிடவை விற்கும் கடைகளில் உயர்ந்த மேடை வைத்து அதில் ஏறி வண்ண வண்ணப் பிடவைகளை எல்லா திசையிலும் திரும்பி அசைத்து அசைத்து விலை மலிவென்று கூவி வாடிக்கையாளர்களை அழைக்கிறார்கள். 

ஒன்றுக்கு மேற்பட்ட துணிக் கடைகள் இருப்பதால், புடவைக்காரர்களின் கூச்சல் போர் முழுக்கம் போல் ஒலித்துக் கொண்டே இருக்க, எல்லோருக்கும் வியாபாரம் ஆகிறது என்பதைக் கவனித்தேன். 

சாப்பிடாமல் வாருங்கள் என்று இரண்டு தூதர்கள் மூலம் எனக்குச் சொல்லி அனுப்பியிருந்தார் மதுரை மாமன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர். சாயந்திரம் ஏழு மணிக்குச் சந்திக்கலாம் என்று செய்தி அனுப்பியிருந்தார் அவர்.

கோழிக்கோடு ஸாமுரின் போல் நல்ல உயரமும், கெச்சலான கருத்த உருவமும், மேலுடம்பு மறைக்கும் வெள்ளி, பொன் ஆபரணங்களுமாக நாயக்கரைக் கற்பனை செய்திருந்ததது தவறாகப் போனது. 

ஆகிருதி குள்ளமும் இல்லை உயரமும் இல்லை. இந்துஸ்தானத்தில் மேட்டுக்குடி இயற்கை உடலம்சமாகக் கருதும் சிவப்புத் தோல் என்ற கறுப்பு இல்லாத, ஐரோப்பியர் போல் வெண்மையுமில்லாத தோல் நிறம். 

தலையில் மணிமகுடமாக இல்லாமல் ஜரிகைத் தலைப்பாகை. தொந்தி போட்டு உப்பி, பட்டுக் குப்பாயத்துக்குக் கீழே பெரிய வயிறு.

 பட்டுக் கால்சராய் தொளதொளப்பாகக் கணுக்கால் வரை அணிந்த கனமான கால்கள், முன்னால் வளைந்த சீனத்துக் காலணிகள், கை விரல்களில் ஒன்றிரண்டு கனமான மோதிரங்கள். மதுரை அரசர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் இருந்த கோலம் அது.

இடி இடித்தது போல் கடகடவென்று சிரிப்பு. பக்கத்தில் இருந்து ரகசியம் பேசினாலே பத்து அடி தூரம் கேட்கும் சிநேகிதமும் பிரியமுமான குரல். 

என் கையைக் குலுக்கி ”சின்ஹோர் பெத்ரோ, சேஜா பெம் விண்டோ சேஜா பெம் விண்டோ” என்று வரவேற்ற நிமிடம் முதல் எனக்கு நல்ல சிநேகிதராகி விட்டார் அவர்.

”எதுவும் பேசுவதற்கு முன் எங்கள் எளிய உணவை பெத்ரோ அவர்களோடு பங்கிட்டுக் கொள்ள எங்களை அவர் அன்போடு அனுமதிக்க வேண்டும்” என்றார் நாயக்கர். நாடகீய பாணியில் இரு கை கூப்பி சற்றே வளைந்து நின்று வணங்கினேன். 

“மாமன்னர் விஸ்வநாத நாயக்கரின் பேரனும், குமார கிருஷ்ணப்ப நாயக்கரின் மகனுமான முத்து கிருஷ்ணப்ப நாயக்கனின் நன்றி” என்று அரண்மனை போஜன சாலைக்கு அழைத்துச் சென்றார் நாயக்க மன்னர்.

 அவருடைய குடும்பத்தினர் ஒரு பத்து பேர் இருந்தார்கள் அங்கே. இரண்டு நாயக்க மகாராணியரும் நான்கு புதல்வர்கள், இரண்டு புதல்வியர்   இருந்தார்கள். ஒரு மரஸ்டூலில் தமிழும் போர்த்துகீஸ் மொழியும் அறிந்த துவிபாஷி அமர்ந்திருந்தார். சாப்பிடும்போதே மொழிபெயர்ப்பு தொடங்கி விட்டது.

ராத்திரியில் சந்திப்பு மிக சுவாரசியமானது என்றேன் இட்டலியை கோழிக் குழம்போடு வாயில் போட்டுக் கொண்டு. விஜயநகர அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் எங்கும் மெலிந்த இட்டலிகள் உண்ணக் கிடைக்கும். அவற்றின் நான்கு சேர்ந்து ஒன்றாக மதுரை அரண்மனையில் உண்டேன். நல்ல வெள்ளை நிறம், உப்பு சற்றே தூக்கலாக இட்ட, நல்ல சூடான இட்டலிகள் அவை.

”ராத்திரி நீங்களும் நானும் வேறு எந்த முக்கியப் பணியும் இல்லாமல் சந்திப்பை வேண்டும் நேரம் வரைத் தொடரலாம். மதுரையில் இருபத்துநாலு மணி நேரமும் ஊர் விழித்திருப்பதும் ஜனங்கள் விழித்திருப்பதும் இயல்பு. சாயந்திரம் ஆறு மணிக்குக் கல்யாணம் நிச்சயம் செய்து, ராத்திரிஒன்பதுக்கு நகைக்கடையில் நகைகளும், ராத்திரி பத்து மணிக்கு கல்யாணப் புடவை, வேட்டி என எல்லாம் வாங்கி, நள்ளிரவுக்கு பழம், தேங்காய் என்று கல்யாணத்துக்கு வருகிறவர்களுக்கு அளிக்க வாங்கி, இனிப்பும், வேறு பலகாரங்களும் வாங்கி காலை ஆறு மணிக்குக் கோவில் பிரகாரத்தில் தாலி கட்டிக் கல்யாணம் வைக்க அனுமதி பெற்று, ஆறரை மணிக்கு மங்கள இசை ஏற்பாடு செய்து காலை ஏழு மணிக்குக் கல்யாணம் நடத்தி விடலாம். வேறு எந்த ஊரிலும் லிஸ்பனில் கூட இந்த வசதி இருக்காது” விவரமாகச் சொன்னார் நாயக்கர். வேகமாகப் பேசியபடி உண்ண முடிந்தது அவரால் என்பதைக் கவனித்தேன். இந்துஸ்தானத்தில் பலரும் அப்படித்தான்.

கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையின் எப்போதும் இயக்கத்தில் இருக்கும் தன்மையை விளக்கிய விதம் எனக்குப் பிடித்திருந்தது. அதை அவரிடம் சொன்னேன்.

”என்ன செய்ய, நாங்க கொஞ்சம் விஷமக்காரங்க.  எங்க தாத்தா விஸ்வநாத நாயக்கர் ராயசம் துணையாக, என்றால் எழுத, படிக்க அவைக்கு உதவி செய்ய ஒரு படிப்பாளியை நியமிக்க ரெண்டு முரட்டு நாயக்கர் பய்யன்களை வரச் சொன்னார் – 

”ரெண்டரைக்கு ஒருத்தன் வரட்டும். மூணுக்கு இன்னொருத்தன்”.

”பகல் ரெண்டரைக்கு வந்து ராஜாவை சந்திக்க முடியாமல் திரும்பிப் போய் விட்டார் முதல் ஆள். ராஜாவோட கிருத்துருமம் – விஷமம் தெரிஞ்ச ரெண்டாவது ஆள் மூணு மணிக்கு தானே வரச் சொன்னார், பகல்லே மூணு மணியாக இருக்காது. ராத்திரி மூணு மணிக்குப் போய்ப் பார்க்கலாம்னு ராத்திரி மூணு மணிக்கு அரண்மனை போனா, விஸ்வநாத நாயக்கர் வந்திருக்கார்! அந்தப் பையன் ராயசம் உப பிரதானியாக எங்க அப்பா காலத்திலே ஓய்வு பெற்றார்”.

நாயக்கர் ரொம்ப சுவாரசியமாகப் பேசியபடி கை அலம்பி அரண்மனை முக மண்டபத்துக்குள் வந்து சேர்ந்தோம்.

”தெற்கு கடற்கரையிலே எதுக்கு முத்துக் குளிக்கற இந்திய, தமிழ் பேசற பிரஜைகள் கிட்டே போர்த்துகல் வரி வாங்கணும்? நீங்க நாகப்பட்டணத்திலே பரதவர்கள் மீன் பிடிக்க வரி கட்டணும்னு வச்சது மாதிரி இது அபத்தமில்லையா?” என்று நிதானமான குரலில் கேட்டார் என்னிடம்.

அவர் மேல் கோபமே வரவில்லை. முத்து குளிக்கறவங்க வரி கட்டறதை பற்றி நாளைக்கு யோசித்து சொல்றேன் என்று சொல்லும்போது அருமையான உறக்கம் என்னைத் தேடி ஓடி வந்தது.

கண்ணை இறுக்கமாக மூடும் இமைகள் ‘போதும், மீதி பேச்செல்லாம் நாளைக்கு” என்று வற்புறுத்தி என்னை உறங்கப் போகச்சொல்ல, நானும் அப்படியே தீர்மானித்தேன். உடல்நலமில்லாமல் இருந்து மீண்டு வந்ததும், பிரயாணக் களைப்பும் உறக்கத்தை வரவேற்றிருக்க, நாளைக்கு சந்திக்கலாமா என்று நாயக்கரிடம் தயக்கத்தோடு விசாரித்தேன்.

”சின்ஹோர், ஒண்ணும் அவசரமில்லை, நாளைக்கு சந்திப்போம். பரதவர்கள் போர்த்துகீஸ் வரி கட்ட வேணாம்னு விதிச்சா முதல் சந்தோஷம் எனக்குத்தான்” என்றார் நான் எழுந்தபொழுது.  

”மணி ராத்திரி பத்து. நாளைக்கு காலை எட்டு மணிக்கு இங்கே பசியாறிட்டு சந்திக்கலாம்” என்று நாயக்கர் மகாராஜா   சொல்லி உள்ளே போனார். அரண்மனைக்கு வெளியே என் சாரட் உருண்டபோது எல்லா விளக்குகளும் எரிய மதுரை மாநகரம் உயிர்ப்போடு பிரகாசித்துக் கொண்டிருந்தது.

Series Navigation<< மிளகு அத்தியாயம்  நாற்பத்தொன்பது மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.